சென்னை உயர் நீதிமன்றம்
நீதிபதி குளுவாடி ஜி.ரமேஷ் & நீதிபதி எம்.வி.முரளிதரன்
நீ.மே. எண் 670/2016 & உப.ம. எண் 8785/2016/10.6.2016
ஆணையர், பல்லாவரம் நகராட்சி, குரோம்பேட்டை, சென்னை-600044.
மேல் முறையீட்டாளர்
எதிர்
1. எஸ்.கே.சையது ரபியுல்லா.2 மாவட்ட ஆட்சியர், ஆட்சியரகம், காஞ்சிபுரம் மாவட்டம்.
எதிர் வழக்கீட்டாளர்கள்
பிறப்பு இறப்புச் சட்டம், 1969 (1969இல் 18), பிரிவு 15- பிறப்புச் சான்றிதழில் பெயர் மாற்றம் - பெயர் மாற்ற அனுமதிக்கான அதிகாரப் பத்திரம்- பிறப்புச் சான்றிதழ் வெளியான பின் மனுதாரரது பெயர் மாற்றப்பட்டு அரசிதழில் மாற்றப்பட்ட பெயர் வெளியிடப்பட்டது. பிறப்புச் சான்றிதழில் தேவையான திருத்தம் ஏற்படுத்த நகராட்சி மறுத்தது. ஒரு முறை பிறப்பு சான்றிதழ் வழங்கிய பின்னர் எந்த திருத்தமும் செய்ய முடியாது என்பது நகராட்சியின் வாதம்- பிறப்புச் சான்றிதழில் பெயர் மாற்றல் சான்றிதழில் உள்ள பதிவுகளைத் திருத்துவதாக கருதப்பட முடியாது. சான்றிதழில் பெயர் மாற்றுதலைச் சட்டம் தடை செய்யவில்லை - தனி நீதிபதியின் கட்டளை உறுதியானது. நீதிப்பேராணை மேல்முறையீடு தள்ளுபடியானது.
பி.சிறீனிவாஸ், மேல்முறையீட்டாளரது வழக்குரைஞர்
வி.பிரீதா,1ஆவது எதிர்மேல்முறையீட்டாளரது வழக்குரைஞர்
சிறீ ஜெயந்தி, சிறப்பு அரசு வழக்குரைஞர், 2 ஆவது எதிர்மேல்முறையீட்டாளருக்காக
நீ.மே.தள்ளுபடியானது-உப.ம. தள்ளுபடியானது-செலவுத் தொகையில்லை
கோரிக்கை: இந்த நீதின்றம் நீ.ம. எண் 30766/2015இல் வழங்கிய 7.1.2016 தேதிய ஆணையை ஆட்சேபித்து உரிமைப் பட்டய சட்டக்கூறு 15இன் கீழான நீதிப்பேராணை மேல் முறையீடு.
நீதிபதி குளுவாடி ஜி.ரமேஷ்
1. மே.மு. பல்லாவரம் நகராட்சி ஆணையரது வழக்குரைஞர், 1ஆவது எ.மே.மற்றும் 2ஆவது எ.மே. வழக்குரைஞர்கள் முன்வைத்த வாதங்களைக் கேட்டறிந்தோம்.
2. நீதிப் பேராணை மனுவை அனுமதித்தும், மே.மு.இன் ஆணையை நீக்கறவாக்கி , 1.11.2012 அன்று பிறந்த இங்குள்ள 1ஆவது எ.மே.இன் மகன் பெயரை ஆர். அமானுல்லா என 9.10.2013 தேதிய அரசிதழில் பிரசுரமானவாறு திருத்தி நான்கு வார காலவரையறைக்குள் பிறப்புச் சான்றிதழ் வழங்க குறையுறு ஆணையிட்ட தனி நீதிபதியின் கட்டளை பிறப்பு மற்றும் இறப்புப் பதிவுச் சட்டம், 1969 பிரிவு 15இன் கீழ் அத்தகைய திருத்தம் ஏற்படுத்த முடியாது மற்றும் பிற அடிப்படையில் ஆட்சேபிக்கப்படுகிறது.
3. மேல்சொன்ன சட்டப் பிரிவு 15இன் கீழ், பதிவாளரிடம் இருக்கும் பதிவேட்டில் பிறப்பு அல்லது இறப்பு பற்றிய குறிப்பு வடிவத்தில் அல்லது விஷயத்தில் தவறாக அல்லது மோசடியாக அல்லது முறையற்று செய்யப்பட்டிருந்ததாகப் பதிவாளர் ஏற்கும்படி நிரூபிக்கப்பட்டால், அத்தகைய பதிவுகளைத் திருத்துதல் அல்லது ரத்தாக்குதல் ஆகியவற்றிற்கு வேண்டிய சூழல்களையும், நிபந்தனைகளையும் மாநில அரசு நிறைவேற்றும் விதிகளுக்குட்பட்டு, பொருத்தமான திருத்தத்தை அல்லது நீக்கலை மூலப்பதிவில் மாற்றமில்லாது ஓரத்தில் ஏற்படுத்திப் பதிவில் திருத்தம் அல்லது நீக்கல் தேதியுடன் கையெழுத்திட வேண்டும் என்பதே எதிர்பார்க்கப்படுகிறது.
அத்தகைய விண்ணப்பம் மீது பதிவாளர் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை மேற்சொன்ன பிரிவு வகைப் படுத்துகிறது.
பொருத்தமானத் திருத்தத்தை அல்லது நீக்கலை மூலப் பதிவில் மாற்றமில்லாது ஓரத்தில் ஏற்படுத்தி பதிவில் திருத்தம் அல்லது நீக்கம் செய்த தேதியுடன் கையெழுத்திடும் அதிகாரம் அவருக்கிருக்கிறது. மாற்றம் இல்லாது பதிவைச் செய்ய முடியாது என்ற பொருளை இது தராது. பதிவாளர் மனநிறைவடையும் போது அவர் குறிப்புக்குப் பதிலாக ஒரு ஓரத்துக் குறிப்பை மட்டுமே ஏற்படுத்தலாம், மூலப் பதிவை அல்ல என்பதே கருத்தாகிறது.
4. ஆனாலும், பிறப்பு அல்லது இறப்பு தேதி மாற்றம் அல்லது திருத்தம் பற்றிய கேள்வியாக இந்த வழக்கு இல்லை; இது அரசிதழில் வெளியான இளவர் குழந்தையின் பெயர் மாற்றம் குறித்ததாகும். ஆகையால், பெயரைத் திருத்தி புதிதாகப் பிறப்புச் சான்றிதழ் வழங்கும் பொறுப்பு சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு உரியது. இவ்வாறு செய்தல் மேற்சொன்ன சட்டப் பிரிவு 15 அய் மீறுவதாகாது. எனவே, பல்லாவரம் நகராட்சி ஆணையரது மேல் முறையீட்டில் எந்தத் தகுதிப்பாடும் இல்லாததால் அதனை நாங்கள் தள்ளுபடி செய்கிறோம்.
5. அதற்கேற்ப, நீதிப் பேராணை மேல்முறையீடு தள்ளுபடியாகிறது. தனி நீதிபதி பணித்தவாறு இன்றிலிருந்து பதினைந்து நாட்களுக்குள் பெயரைத் திருத்தி அதே பிறந்த நாளைத் தக்க வைத்துக் கொண்டு புதிதாகப் பிறப்புச் சான்றிதழை வழங்க ஆவன செய்யுமாறு மே.மு. பல்லாவரம் நகராட்சி ஆணையருக்கு ஆணையிடப்படுகிறது. செலவுத் தொகையில்லை. தொடர்பான பல்வகை மனுவும் முடித்து வைக்கப்படுகிறது.
மொழியாக்கம்: பி. ஞானசேகரன்
- நன்றி: “சட்டக் கதிர்”, டிசம்பர் - 2016
-விடுதலை ஞா.ம.,17.12.16