செவ்வாய், 31 ஜனவரி, 2017

கணவர் இறந்தபின் மனைவி மறுமணம் செய்தாலும் இழப்பீடு பெற உரிமை உண்டு நீதிமன்றம் தீர்ப்பு

செப். 12_- விபத்தில் கணவர் மரண மடைந்த பிறகு விதவையான மனைவி மறுமணம் செய்தாலும் அவருக்கு தனது கணவருக்கான நஷ்டஈடு பெற உரிமை உள்ளது என்று கூறிய சிறு வழக்குகள் நீதிமன்றம் அந்த பெண்ணுக்கு ரூ. 7.37 லட்சம் நஷ்டஈடு வழங்குமாறு காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தர விட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்தவர் பாலாஜி (28). இவரது மனைவி பிரியா (26). பாலாஜி செல்போன் கடை நடத்தி வந்துள்ளார். கடந்த 2011 ஜூன் 1ஆம் தேதி பாலாஜி தனது நண்பர்களுடன் திருச்சியிலிருந்து காரில் வந்துள்ளார். உளுந்தூர்பேட்டையை அடுத்த பஞ்ச வல்லி குப்பம் அருகே வந்தபோது எதிரே வந்த லாரி கார் மீது மோதியது.

இதில், பாலாஜியும் அவருடன் காரில் வந்த வசந்த ராஜா, ரவிச்சந்திரன், ஓட்டுநர் செந்தில் ஆகியோரும் படுகாயமடைந்தனர். சிகிச்சைக்காக அவர்கள் அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு பாலாஜி சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.

இதையடுத்து, பாலாஜியின் இறப்புக்கு நஷ்டஈடாக ரூ. 20 லட்சத்தை தனியார் காப்பீட்டு நிறுவனமான இப்கோ டோக்கியோ பொதுக்காப்பீட்டு நிறுவனம் வழங்க உத்தரவிடக்கோரி பிரியா, பாலாஜியின் தந்தை ராஜேந்திரன், தாய் கஸ்தூரி ஆகியோர் சென்னை சிறு வழக்குகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் தனர். இதற்கிடையே பிரியா மறுமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், இந்த வழக்கு சிறு வழக்குகள் நீதிமன்ற தலைமை நீதிபதி கோகுல்தாஸ் முன்னி லையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, காப்பீட்டு நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் பிரியா மறுமணம் செய்து உள்ளார். எனவே, அவர் நஷ்டஈடு கோர முடியாது என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அளித்த தீர்ப்பு வருமாறு: விதவைகள் மறுமணத்தை நாம் எப்போதும் ஊக்கப்படுத்த வேண்டும். ஏற்கெனவே, உயர் நீதிமன்றத்தில் இது போன்ற 3 வழக்குகளில் தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. விதவைகள் மறுமணம் என்பது சமூகத்தில் அவர்கள் மீது ஏற்படும் களங்கத்தை போக்கும். அவர்களுக்கு சமூக பாதுகாப்பையும் ஏற்படுத்தும்.

பாலாஜி இறந்தபோது பிரியா அவரது மனைவியாக இருந்துள்ளார். பாலாஜி இறந்தாலும், அவர் மறுமணம் செய்து கொண்டா லும் அவர் மீதுள்ள பற்று அவருக்கு குறையவில்லை என்பதை அவர் இந்த வழக்கை தொடர்ந்ததிலிருந்து தெரியவந்துள்ளது. எனவே, அவருக்கு நஷ்டஈடு வழங்கப்படவில்லை என்றால் அவருக்கு அநீதி விளைவித்ததாக அர்த்தமாகிவிடும். இதை உயர்நீதிமன்ற தீர்ப்புகள் தெளிவாக குறிப்பிட்டுள்ளன.

எனவே, கணவர் இறந்தபின் மறுமணம் செய்தாலும் மனைவிக்கு கணவனின் மரணத்துக்கான இழப்பீடு பெற உரிமை உள்ளது. இந்த வழக்கில் பிரியா மற்றும் பாலாஜியின் பெற்றோருக்கு இப்கோ டோக்கியோ பொது காப்பீட்டு நிறுவனம் மொத்தம் ரூ. 7 லட்சத்து 37 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும். இந்த தொகை பிரியா உள்ளிட்ட 3 பேருக்கும் சரிசமமாக பிரித்து தரப் பட வேண்டும்.

-இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை,12.9.!4

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ்


தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தகவல் கோருபவர்கள்  காரணத்தைத் தெரிவிக்க வேண்டாம்

உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு


சென்னை, செப்.24_ தகவலறியும் உரிமைச் சட்டத்தின்கீழ், எந்த நோக் கத்துக்காகத் தகவல் கோரப்படுகிறது என்பதைத் தெரிவிக்கவேண்டும் என்ற உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து மாற்றியமைத்து உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரியைச் சேர்ந்த பாரதி என்பவர் தகவலறியும் உரிமைச் சட் டத்தின்கீழ் பல்வேறு தகவல்களைக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அவர் கேட்கும் தகவல்களை வழங்கவேண்டும் என மத்திய தகவல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றப் பதிவாளருக்கு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றப் பதிவாளர், நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதில், எதிர் மனுதாரர் கோரிய அனைத்துக் கேள்விகளுக்கும் ஏற் கெனவே பதில் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், தகவலறியும் உரிமைச் சட்ட விதிகளைத் தவறாகப் பயன் படுத்தும் வகையிலும், நிர்வாகத்தைச் சீர்குலைக்கும் வகையிலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் 53 மனுக்களை பாரதி தாக்கல் செய்துள்ளார்.

அவருக்குத் தேவையான தகவல் கள் ஏற்கெனவே வழங்கப்பட்டு விட்ட தால், மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்யவேண்டும் என மனுவில் கோரப்பட்டது.

இந்த மனு நீதிபதி என். பால் வசந்தகுமார், நீதிபதி கே.ரவிச்சந் திரபாபு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், தகவலறியும் சட்டத்தின்கீழ் தகவலைக் கோரும் நபர் அந்தத் தகவல் தன் னுடைய சொந்த நலனுக்காகவா அல்லது பொது நலனுக்காகவா என்பதைத் தெரிவிக்க வேண்டும்.

இந்த இரண்டு காரணங்களுக் காகவும் தகவல் கோரும் ஒருவர், அந் தக் காரணம் தொடர்பான குறைந்த பட்ச விவரங்களையாவது அளிக்க வேண்டும்.

எந்த நோக்கத்துக்காகத் தகவல் கோரப்படுகிறது என்பதைத் தெரி விக்காமல் தகவல் கோருவதை ஒரு வழக்கமான நடைமுறையாக மாற்ற முடியாது.

எனவே, மத்திய தகவல் ஆணை யத்தின் தவறான இந்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என கடந்த 17-ஆம் தேதி உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யத் திட்டமிட்டு, நீதி பதிகள் தாமாக முன்வந்து மீண்டும் பரிசீலனை செய்வதற்காகப் பட்டி யலிட உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்து நீதிபதிகள் மீண்டும் பிறப்பித்த உத்தரவு வருமாறு: தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் தகவல் கோருபவர்கள் எதற்காகத் தகவல் கோரப்படுகிறது என்ற காரணத்தைத் தெரிவிக்கத் தேவையில்லை என்று தகவல் பெறும் உரிமைச் சட்டப் பிரிவு 6(2)-இல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சட்டப் பிரிவை கவனத்தில் கொள்ளாமல், தகவல் கோருபவர்கள் எதற்காக அந்தத் தகவல் கோரப் படுகிறது என்ற குறைந்தபட்ச காரணத்தைத் தெரிவிக்க வேண்டும் என கடந்த 17-ஆம் தேதி இந்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிடப்பட்டது.

அந்தக் கருத்து தகவல் பெறும் உரிமைச் சட்டத்துக்கு எதிராக உள்ளது. எனவே, இந்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் தகவல் பெறுபவர்கள், எதற்காகத் தகவல் கோரப்படுகிறது என்ற காரணத்தைத் தெரிவிக்க வேண்டும் என்ற வரிகளை நீக்கி உத்தரவிடுகிறோம்.

எனவே, இந்த வரிகள் நீக்கப்பட்ட புதிய உத்தரவு நகலை வெளியிடுமாறு உயர்நீதிமன்றப் பதிவுத் துறைக்கு உத்தரவிடுகிறோம் என உத்தரவில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
-விடுதலை,24.9.14

புதன், 11 ஜனவரி, 2017

மணமான மகள்- அவள் பெற்றோர் குடும்பத்தின் அங்கத்தினரே ஆவார் மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு




மும்பை, ஆக.21_ மும்பை உயர்நீதிமன்றத்தில் ரஞ்சனா அனிராவ் என்பவரின் வழக்கில் நீதிபதிகள் அபய் ஒகா, ஏ.எஸ்.சந்துர்கர் தீர்ப்பில் கூறும்போது, திருமண மானாலும் பெண்களை பெற்றோர் வீட்டின் அங் கத்தினர்களாகவே பார்க்க வேண்டும் என்று  கூறி யுள்ளனர்.

பெற்றோரின் குடும் பத்தின் அங்கத்தினர் களாக திருமணமான மகள்கள் இருக்கக்கூடாது என்று பாலியல்ரீதியில் பாகுபாடுடன் பார்ப்பது அரசமைப்புக்கும், அரச மைப்பு வரையறுத்துக் கொடுத்துள்ள அடிப் படை உரிமைகளுக்கும் எதிரானது என்று நீதி பதிகள் தம் தீர்ப்பில் சுட்டிக்காட்டி உள்ளனர்.

ரஞ்சனா அனிராவ் என்பவர் தம்முடைய தாயார் பெயரில் இயங்கி வந்த மண்எண்ணெய் சில்லறை விற்பனை உரிமையை, அவர் மறைந்த காரணத்தால், தம்முடைய பெயரில் மாற்றித் தருமாறு மாநில அரசிடம் கோரி உள்ளார். ரஞ்சனா அனிராவுக்கு திருமணமாகிவிட்டதால், அவர் தாயார் பெயரில் வழங்கப்பட்டிருந்த மண் எண்ணெய் சில்லறை விற்பனை உரிமையை அவர் பெயரில் மாற்றித் தர முடியாது என்று மறுத்துவிட்டது.

2007 ஆம் ஆண்டு

மகாராட்டிர மாநிலத் தின் உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கும் துறை அமைச்சர் கூறும் போது, திருமணமான பெண் அவர் தாயாரின் குடும்பத்தில் ஓர் அங்கத் தினராக எடுத்துக் கொள்ள முடியாது என்று கூறினார்.

ரஞ்சனா அனிராவ் மாநில அரசை எதிர்த்து கடந்த 2007ஆம் ஆண் டில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். மும்பை உயர்நீதிமன்றத்தில் ரஞ் சனா அனிராவ் முறையீட் டின்பேரில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் நீதிபதிகள் அபய் ஒகா, ஏ.எஸ்.சந்துர்கர் தீர்ப்பு வழங்கினார்கள்.

நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில்கூறும்போது, மகாராட்டிர மாநில அரசின்சார்பில் 2004ஆம் ஆண்டு நிறைவேற்றப் பட்ட தீர்மானத்தின்படி திருமணமான  காரணத் தால் ஒரு பெண்ணை அவர் பெற்றோர் குடும் பத்தின் அங்கத்தினராக எடுத்துக்கொள்ள முடி யாது என்று கூறுவது, பாலியல் ரீதியில் பாகு பாடுடன் பார்ப்பதாகவும், அரசமைப்பை மீறுவதாக வும் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர்.

மாநில அரசு விதியின் படி, குடும்பம் என்பது கணவன், மனைவி, வயது வந்த மகன், வயது வந்த திருமணம் ஆகாத மகள், மருமகள், சார்புநிலையில் பெற்றோர், சட்ட வாரிசு மற்றும் தத்தெடுக்கப் பட்ட மகன் ஆகியோ ரைக் குறிப்பிடுவதாகும்.

மாநில அரசின் வழக் குரைஞர்கள் அந்த சட்டத்தின்படியே செயல்படுகிறார்கள். அவர் கள் தரப்பில் கூறும்போது, மகள் திருமணமாகி விட்டால், அந்த குடும் பத்தைவிட்டே வெளி யேறிவிடுகிறாள். ஆகவே, அவள் பெற்றோரின் குடும்பத்துக்குள் கொண்டு வரப்பட மாட்டாள் என்று கூறுகிறார்கள்.

உயர்நீதிமன்றம் மாநில அரசின் விதிமுறைகளைச் சுட்டிக்காட்டிக் கூறும் போது,

வயதுவந்த பெண் திருமணத்துக்குமுன்பாக குடும்பத்தின் உறுப்பின ராக இருப்பதற்கு தகுதி உள்ளவராக இருக்கிறார். அவள் பெற்றோரின் அனுமதியுடன் சில்லறை விற்பனை உரிமையையும் பெற முடிகிறது. அதே போல், மணவிலக்கு பெற்ற பெண்ணுக்கும் அந்த உரிமை உள்ளது. ஆனால், மணமான பெண் வயது முதிர்ந்த பெற் றோரைப் பேணுபவளாக இருந்தாலும்கூட, அவர்கள் மறைவுக்குப் பிறகு சில்லறை விற்பனை உரிமையை வழங்க முடி யாது என்று கூறுகிறது.

அப்படி திருமணமான பெண்ணை நீக்குவது என்பது எந்த அடிப் படையிலும் நியாயமில் லாததாக, பிறவகையிலும் விவாதிக்க முடியததாகவே உள்ளது. திருமணமான மகள் சில்லறை விற்பனை உரிமையில் சட்டரீதியி லான பிரதிநிதியாக இருப் பதைத் தடுப்பது, மறைந்த சில்லறை விற்பனை உரிமையாளரின் பெயரில் உள்ள  உரிமையை அவர் பெயருக்கு மாற்றித்தரக் கோருவதைப் பாதிக்கச் செய்துவிடும் என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப் பில் குறிப்பிட்டனர்.

பாகுபாடுடன் கூடிய விதிகளைத் தகர்க்கும் விதமாகத் தீர்ப்பு அளித் துள்ள மும்பை உயர்நீதி மன்றம் மாநில அரசை ரஞ்சனா அனிராவ் விண் ணப்பித்தவாறு, அவர் பெயருக்கு மண்எண் ணெய் சில்லறை விற் பனை உரிமையை மாற்றித் தருமாறு கூறியுள்ளது. அரசுப் பணிகளிலிருக்கும் போது மறைந்தவர்களின் வாரிசுகளுக்கு   கருணை அடிப்படையிலான வேலை வாய்ப்பு வழங்கப் படுவதுபோன்று இதை யும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் தீர்ப் பில் கூறப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவால், இதுபோன்று பாகுபாடுகளுடன் உள்ள திருமணமான பெண்கள், அவர்கள் பெறக்கூடிய உரிமைகள், நன்மைகள் என்று அவள் பெற்றோர் வீட்டினரிடமிருந்து பயன்களைப் பெற்றுத் தரக் கூடியவகையில் பிற வழக்குகளிலும் அதன் தாக்கம் இருக்கும்.
-விடுதலை,21.8.14

திங்கள், 9 ஜனவரி, 2017

அவசரச் சட்டம் : உச்சநீதிமன்றம் தீர்ப்பு

புதுடில்லி,ஜன.3 அவசர சட்டத்தை மீண்டும் மீண்டும் பிறப்பிப்பது அரசியலமைப்பு சட்டத்தை வஞ்சிக்கும் செயல் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

தலைமை நீதிபதி டி.எஸ்.தாகூர் தலைமையிலான 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த தீர்ப்பை அளித்துள்ளது. குறிப்பிட்ட காலத்திற்குள் அவசர சட்டங்களை நாடாளுமன்றம், சட்டப் பேரவைகளின் பரிசீலனைக்கு வைப்பது கட்டாயம் என்பதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அப்படி வைக்க தவறுவது அரசமைப்புச் சட்டத்தை மீறுவதாகும் என்றும் தெரிவித்துள்ளனர்.  அவசர சட்டத்தை மீண்டும் பிறப்பிப்பது அரசியல் சட்டத்தை வஞ்சிக்கும் செயல் என்றும் கூறியுள்ளனர். அவ்வாறு மீண்டும் அவசர சட்டத்தை பிறப்பிப்பதற்கு குடியரசு தலைவரோ, அல்லது மாநில ஆளுநரோ அளிக்கும் ஒப்புதல் நீதிமன்ற ஆய்வுக்கு உட்பட்டது தான் என்று நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.
-விடுதலை,3.1.17

ஜாதி மதத்தின் பெயரில் தேர்தல்களில் வாக்கு சேகரிப்பது

இந்து ராஜ்ஜியம் அமைப்போம் எனும் பி.ஜே.பி.,க்கு நெருக்கடி

ஜாதி மதத்தின் பெயரில் தேர்தல்களில் வாக்கு சேகரிப்பது

சட்ட விரோதமானது: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

புதுடில்லி, ஜன.3 தேர்தலில் மதத்தை முன்னிறுத்தி வாக்கு சேகரிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்புக் கூறியது. இது பி.ஜே.பி.,க்குக் கடும் நெருக்கடியைக் கொடுத்துள்ளது.

தேர்தல்களில் ஜாதி, மதம், இனம், சமூகம், மொழி ஆகியவற்றின் அடிப்படையில் வாக்குகளைக் கோருவது சட்டவிரோதம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது ஊழல் நடவடிக்கை என்றும் உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம், சாந்தாகுருஸ் சட்டப் பேரவைத் தொகுதியில் பாஜக சார்பில் கடந்த 1990-ஆம் ஆண்டு போட்டியிட்டு வெற்றி பெற்றவர் அபிராம்சிங். அவர் மதத்தின் பெயரால், வாக்குச் சேகரித்ததாகவும், எனவே அவரது வெற்றி செல்லாது என்றும் அந்த மாநில உயர்நீதிமன்றம் அறிவித்தது. இதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் அபிராம் சிங் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 123(3)ஆவது பிரிவு தொடர்பாக அபிராம்சிங் மனுவில் கேள்வி எழுப் பப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி, அதை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு பரிந்துரைத்தது.

இதேபோன்று, மதத்தின் பெயரால் வாக்கு சேகரித்த தாக பாஜக நிர்வாகி சுந்தர்லால் பட்வாவுக்கு எதிராக நாராயண் சிங் என்பவர் தொடுத்திருந்த மனுவும் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வால் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த 5 நீதிபதிகள் அமர்வு முன்னிலையில், அபிராம் சிங்கின் மனுவும் கடந்த 2014-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது, இதேபோன்ற பிற மனுக்களோடு சேர்த்து, அபிராம் சிங்கின் மனுவும் விசாரிக்கப்படும் என்று நீதிபதிகள் அறிவித்தனர். மேலும் அனைத்து மனுக்களையும், 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றியும் அவர்கள் உத்தரவிட்டனர்.

இந்த மனுக்கள் மீதான விசாரணை, உச்ச நீதிமன் றத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 27- ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து, மதம், இனம், ஜாதி, சமூகம், மொழி ஆகியவற்றின் அடிப்படையில் வாக்குகளை கேட்பது அல்லது அதன் அடிப்படையில் வாக்களிக்கக் கூடாது என்று வாக்காளர்களிடம் வேண்டுகோள் விடுப்பது, ஊழல் நடவடிக்கை என்று மக்கள் பிரதிநிதித்துவ சட் டத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கும் ஷரத்து மீதான தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைத்திருந்தனர்.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ். தாக்குர், எம்.பி. லோக்குர், எஸ்.ஏ. பாப்தே, எல்.என். ராவ், யு.யு. லலித், ஏ.கே. கோயல், டி.ஒய். சந்திரசூட் ஆகிய 7 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு தனது தீர்ப்பை திங்கள்கிழமை அளித்தது. அந்த 7 நீதிபதிகளில் டி.எஸ். தாக்குர், எம்.பி. லோக்குர், எஸ்.ஏ. பாப்தே, எல்.என். ராவ் ஆகிய 4 நீதிபதிகள் ஒரு கருத்தையும், நீதிபதிகள் யு.யு. லலித், ஏ.கே. கோயல், டி.ஒய். சந்திரசூட் ஆகியோர் மற்றோர் கருத்தையும் வெளியிட்டனர்.

அதாவதுடி.எஸ்.தாக்குர்உள்ளிட்ட4நீதிபதி கள் கூறியபோது, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத் தின் 123(3) ஆவது பிரிவில் “அவரது மதம்‘ என்ற தெரிவிக்கப்பட்டிருப்பது, வாக்காளர்கள், வேட்பாளர்கள், தேர்தல் முகவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பொருந்தும் என்று தெரிவித்தனர். அதாவது, ஹிந்துத்துவா தொடர்பாக கடந்த 1995-ஆம் ஆண்டில் அளிக்கப்பட்ட தீர்ப்பில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 123(3)ஆவது பிரிவில் “அவரது’ என்று தெரிவிக்கப்பட்டிருப்பது, வேட் பாளரின் ஜாதி, மதம், மொழி, இனத்தையே குறிக் கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற் போது, வேட்பாளர்கள் மட்டுமல்ல, முகவர்கள், வாக்காளர்களுக்கும் இவை பொருந்தும் என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெரிவித்தனர். இதுகுறித்து மேலும் அவர்கள் கூறியதாவது:

தேர்தல் என்பது மதச்சார்பற்ற நடவடிக்கை, அதில் மதம், ஜாதி, இனம், சமூகம், மொழி அடிப்படையில் வாக்குகளைக் கோர முடியாது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 123(3)ஆவது பிரிவில், அது ஊழல் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மனிதர்கள் மற்றும் இறைவனுக்கு இடையேயான உறவு என்பது, தனி நபர்களின் விருப்பு வெறுப்பு தொடர்புடையது. மதத்தை நாட்டோடு தொடர்புபடுத்தக் கூடாது. அதற்கு அரசமைப்புச் சட்டத்தில் இடமளிக்கப்படவில்லை.

யார்வேண்டுமானாலும்எந்தமதத்தையும் பின் பற்றவும், அதுதொடர்பான பிரச்சாரத்தில் ஈடு படவும் சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், தேர்தலில் அதைப் பயன்படுத்த முடியாது. அவ்வாறு பயன்படுத்துவது சட்டவிரோதம் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

3 நீதிபதிகள் கருத்து

யு.யு. லலித், ஏ.கே. கோயல், டி.ஒய். சந்திரசூட் ஆகிய 3 நீதிபதிகளும், 123(3) ஆவது பிரிவில் “அவரது மதம்‘ என்று குறிப்பிடப்பட்டிருப்பது வேட்பாளர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று தெரிவித்தனர்.

இதையடுத்து, 7 நீதிபதிகள்  கொண்ட அமர்வில் 4 நீதிபதிகளின் கருத்து பெரும்பான்மையானதாக இருந்ததால், அது தீர்ப்பாக எடுத்துக் கொள்ளப்பட்டது.

உத்தரப்பிரதேசம்,பஞ்சாப்உள்ளிட்ட5 மாநில சட்டப்பேரவைகளுக்கு விரைவில் தேர்தல் நடைபெற வுள்ளது. இதில் உத்தரப் பிரதேச தேர்தலின்போது ராமர்கோயில் விவகாரம் உள்ளிட்டவை எழுப்பப் படுவது வழக்கம். இதேபோன்று பஞ்சாப் தேர்தலிலும் மதம் தொடர்பான விவகாரங்கள் பிரச்சாரத்தில் முன் வைக்கப்படும்.

இந்நிலையில், மதம், ஜாதி, இனம், மொழி ஆகிய வற்றை தேர்தலில் பயன்படுத்தக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்தத் தீர்ப்பையடுத்து அரசியல் கட்சியாக உரு வெடுத்துள்ள இந்து மக்கள் கட்சி உள்பட பல்வேறு காவிக் கட்சிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்.a
-விடுதலை,3.1.17