வெள்ளி, 27 நவம்பர், 2015

பெண்கள் தங்கள் சொத்துக்களை யாருக்கு வேண்டுமானாலும் விட்டுச் செல்ல முடியும்! உச்சநீதிமன்றம்



புதுடில்லி, நவ.25_- ஒரு பெண் தன் னுடைய பராமரிப்பில் உள்ள சொத்துக்களை விருப்பப்படி யாருக்கு வேண்டுமானாலும் விட்டுச் செல்ல முடியும் என்றும் அவள் இறந்த பிறகு அவளுடைய சொத்துக்கு யாரும் உரிமை கோர முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சொத்து இல்லையென்றாலும்கூட தன்னுடைய மனைவியை பராமரிக்க வேண்டியது ஒரு கணவனின் கடமை என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.ஒய்.இக்பால் மற்றும் சி.நாகப்பன் ஆகியோர் கொண்ட அமர்வு கூறி யுள்ளது. பெண்ணுக்கு சீதனமாக வரும் எந்த சொத்தும் அது அவளின் தனிப்பட்ட சொத்தாகவே பார்க்கப் படும். சீதனமாக நகைகளோ, பாத் திரங்களோ, நிலமோ, வீடோ என அசையும் மற்றும் அசையா சொத்து எதுவாக இருந்தாலும் அது அவளின் தனிப்பட்ட சொத்தாகவே கருதப்படும். சீதனமாக கொண்டு வந்த சொத்து அந்த பெண் கூட்டுக்குடும்பத்தில் இருந்தால்கூட அது அவளது தனிப் பட்ட சொத்துதான். அந்த சொத்தை யாருக்கு வேண்டுமானாலும் கொடுக் கும் உரிமை அந்த பெண்ணுக்கு உண்டு.
இருப்பினும் இந்து மதச்சட்டப்படி பெண்கள் இறந்த பிறகு அவளது சொத்துக்கு உரிமை கோருவதை தடுக்கவில்லை. இந்நிலையில், உச்ச நீதிமன்றம் ஒரு பெண் தன்னுடைய பராமரிப்பில் உள்ள சொத்துக்களை விருப்பப்படி யாருக்கு வேண்டுமானா லும் விட்டுச் செல்ல முடியும் என்று தெரிவித்துள்ளது.
மேலும், மனைவியையோ, விதவை பெண்ணையோ கவனித்து கொள்வது வெறும் பெயருக்கு என்று அல்லாமல், ஒரு சலுகையாக செய்ய வேண்டும். இருப்பினும் இந்துமதச் சட்டப்படி அவளது உரிமைகள் மறுக்க முடியாது. என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
-விடுதலை,25.11.15

சீதனங்களை திரும்பக் கேட்கும் உரிமை உண்டு: உச்சநீதிமன்றம்


மணவிலக்குப் பெறாமல் கணவனைப் பிரிந்து வாழும் பெண்களும் சீதனங்களை திரும்பக் கேட்கும் உரிமை  உண்டு: உச்சநீதிமன்றம்

புதுடில்லி, நவ.23_ விவாகரத்து பெற வில்லை என்றாலும், கணவரைப் பிரிந்து வாழும் பெண்களுக்கு சீதனங்களைத் திரும்பக் கேட்கும் உரிமை உண்டு என்று உச்சநீதிமன்றம் தீர்ப்புக் கூறியுள்ளது. கணவரைப் பிரிந்து வாழும் திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தான் சீதனமாகக் கொண்டு வந்த தங்க நகைகள், பிற சொத்துகளைத் தனது கணவர் திருப்பித்தர மறுப்பதாக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந் தார்.
அதில், கணவரைப் பிரிந்து வாழும் பெண், சீதனத்தை திரும்பத் தருமாறு வலியுறுத்த முடியாது என்று, திரிபுரா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை யடுத்து, அந்தப் பெண் உச்சநீதிமன்றத் தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதீபதிகள் தீபக் மிஸ்ரா, பிரஃபுல்ல சி.பந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப் போது நீதிபதிகள் கூறியதாவது: விவாகரத்து பெறவில்லை என்றா லும்கூட கணவரது வீட்டை விட்டு வெளியேறிவிட்ட பெண்களுக்கு சீத னங்களைத் திரும்பக் கேட்கும் உரிமை உண்டு. திருமணத்தின்போது அளித்த சீதனங்கள் என்று மட்டுமல்ல பண்டி கைகள் போன்ற நிகழ்வுகளின்போது பரிசாக அளிக்கப்பட்ட அனைத்துப் பொருள்களையும் அப்பெண் திரும்பப் பெறலாம். இது சீதனமாக அளிக்கப்பட்ட அசையும், அசையா சொத்துகளுக்கும் பொருந்தும்.
கணவருக்கோ அல்லது அவரது குடும்பத்தினருக்கோ அந்த சீதனங்களில் உரிமை கிடையாது. சீதனங்களுக்கு பராமரிப்பாளராக வேண்டுமானால் அவரது கணவர் இருக்கலாம்; அதன் மீது முழு உரிமை கொண்டாட முடியாது என்று நீதி பதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித் துள்ளனர்.
-விடுதலை,23.11.15

திங்கள், 16 நவம்பர், 2015

வன்புணர்ச்சிக்கு தண்டனையா? சமரசமா? எது சரி?


பாலியல் கொடுமைக்குள்ளான பெண்ணை சமரச மையத்திற்கு அனுப்பியது தவறு என்று உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
பாலியல் வன்கொடுமைக்குள்ளான பெண்ணை, சமரச மையத்திற்கு அனுப்ப உத்தரவிட்டது தவறு என்று கூறியுள்ள உச்ச நீதிமன்றம், இது பெண்ணின் கண்ணியத்திற்கு எதிரானது என கண்டித்துள்ளது.
கடலூர் மாவட்டம், விருதாச்சலத்தைச் சேர்ந்த மோகன் என்பவர், கடந்த 2009ஆம் ஆண்டில் 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக, கடலூர் மகளிர் நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறைதண்டனை, 5000 ரூபாய் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து மோகன் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அந்தப் பெண்ணுக்கு குழந்தை பிறந்து டி.என்.ஏ. பரிசோதனையில் மோகன்தான் தந்தை என்று நிரூபணமானது.
இந்நிலையில், அந்தப் பெண்ணின் சம்மதத்துடன்தான் உறவுகொண்டேன் என மோகன் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி தேவதாஸ், பிறந்த குழந்தையின் எதிர்காலம் கருதி, பாதிக்கப்பட்ட பெண்ணுடன் மோகன் சமரச பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்றபடி சமரச மையத்துக்கு பரிந்துரைத்திருப்பதோடு, அவருக்கு நிபந்தனை ஜாமீனும் வழங்கி தீர்ப்பளித்தார். உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கை  விசாரித்த உச்ச நீதிமன்றம், பாலியல் வன்கொடுமைக்குள்ளான பெண்ணை, சமரச மையத்திற்கு அனுப்ப உத்தரவிட்டது தவறு என்றும், இது பெண்ணின் கண்ணியத்திற்கு எதிரானது என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், குற்றவாளியுடன் சமரசம் என்பது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த மென்மையான போக்கு என்றும் உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. ஒரு பெண்ணின் உடல் அவளது கோயிலாகும். எனவே பாலியல் பலாத்கார வழக்குகளில் சமரசம் என்பதே கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியுள்ளது.
இத்தீர்ப்புக்கு எதிராகக் கருத்து கூறியுள்ள பணி நிறைவு பெற்ற நீதியரசர் பொ.நடராசன் அவர்கள், பாலியல் வழக்கில் சமரசம் கூடாது என்று உச்ச நீதிமன்றம் கண்டிப்புடன் கூறியிருப்பது வரவேற்கக் கூடியது அல்ல. குற்றவியல் விசாரணை நடைமுறைச் சட்டம் பிரிவு 320-ல் 56 குற்றங்களுக்குச் சமரசம் செய்துகொள்ளலாம் என்று கூறப்பட்டிருக்கிறது. அதில் 43 குற்றங்கள் நீதிமன்ற அனுமதி இல்லாமலேயே சமரசம் செய்துகொள்ளலாம் என்றும்
13 குற்றங்கள் நீதிமன்ற அனுமதியுடன் சமரசம் செய்துகொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், ஆந்திர மாநிலத்தில் மேலும் இரண்டு குற்றங்களும், மத்தியப் பிரதேசத்தில் மேலும் நான்கு குற்றங்களும் சமரசம் செய்துகொள்ளலாம் என்று அந்த மாநில அரசுகள் சட்டத் திருத்தம் கொண்டுவந்துள்ளன. இவற்றில் நீதிமன்ற அனுமதி இல்லாமலேயே சமரசம் செய்துகொள்ளலாம் என்ற குற்றங்கள் பட்டியலில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 497(பிறன்மனை புணர்தல்), 498 (திருமணமான பெண்ணைக் கடத்திச் செல்லுதல்) ஆகிய குற்றங்கள் அடங்கியுள்ளன என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், பிரிவு 497 குற்றத்துக்குப் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவன் குற்றவாளியுடன் சமரசத்துக்குத் தகுதியானவன் என்று கூறப்பட்டிருக்கிறது.
பிரிவு 498 குற்றத்துக்கு அந்தப் பெண்ணின் கணவனும் அந்தப் பெண்ணும் குற்றவாளியுடன் சமரசம் செய்துகொள்ளலாம். இந்த விஷயங்களில் எல்லாம் பெண்ணின் கண்ணியத்துக்கு எதிரானது எனக் கண்டுகொள்ளாத உச்ச நீதிமன்றம், இந்த விஷயத்தில் கண்டிப்புடன் இருப்பது வியப்பாக உள்ளது. உச்ச நீதிமன்றங்கள் தத்துவார்த்த சிந்தனைகளிலிருந்து விடுபட்டு, யதார்த்த நடைமுறைபற்றிச் சிந்தித்தால் நல்லது. மேலும், சமரசம் கட்டாயப்படுத்தப் படவில்லை என்பதையும் பாதிக்கப்பட்ட பெண்ணின் விருப்பத்தைப் பொறுத்ததே என்பதையும் மறந்துவிடக் கூடாது! என்கிறார்.

இது ஓர் ஆய்வுக்குரிய சிக்கல். உச்சநீதிமன்றம் சட்டப்படியான தனது பார்வையின்படி முடிவை, இச்சிக்கலில் வழங்கியுள்ளது. எனவே, அதுதான் ஏற்கப்பட வேண்டியது. என்றாலும், அதை மறுத்து ஒரு நீதியரசர் தன் கருத்தை வைத்துள்ளது, இச்சிக்கலில் இன்னும் ஆழமாக ஆய்வு செய்து தீர்வு காண வேண்டியது கட்டாயத்தை வெளிப்படுத்துகிறது.
சமரச முயற்சிக்கு தொண்டு அமைப்புகளும் பெண்ணுரிமைப் போராளிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதையும் பெரிதும் கவனத்தில் கொண்டு, சேர்ந்து வாழ விரும்புவோர் வழக்கில் மனிதநேயத்தோடும், பெண்ணுரிமை காக்கப்படும் வகையிலும் தீர்வு காணப்பட வேண்டியது கட்டாயம்!
உண்மை இதழ்,16-31.7.15

விவாகரத்து வேண்டுகின்ற கிறிஸ்தவர்களுக்கு இரண்டு வருட கட்டாய இடைவெளி அறிவுக்குகந்ததாக இல்லை - உச்சநீதிமன்றம்

உச்சநீதிமன்றம் மத்திய அரசிடம், 1869-இல் இயற்றப்பட்ட விவாகரத்துச் சட்டத்தின்  பிரிவு 10A(1)இன் ஆளுமைப்பற்றி (Validity) விளக்கம் கேட்டுள்ளது. இந்தச் சட்டப்படி, ஒரு கிறிஸ்துவத் தம்பதியர் அவர்களாகவே விவாகரத்திற்கு முயற்சி செய்யும்போது அவர்களுக்கிடையே இரண்டு வருட இடைவெளியிருக்க வேண்டும் என்ற ஷரத்தின் தேவையைப்பற்றி அரசு விளக்கம் கேட்டுள்ளது. பிற மதங்களில் இந்த இடைவெளி ஒரு வருடமாகயிருந்தால் போதும்.
திரு. ஆல்பர்ட் ஆந்தோணி தாக்கல் செய்த  மனுவின் மீது விசாரணை மேற்கொண்ட நீதிபதிகள் விக்ரம்ஜித்சென், A.M. ஸாப்ரே அடங்கிய நீதிபதிகள் குழு, கிறிஸ்தவ தம்பதியர் பிரச்சினையில், மனமொத்த விவாகரத்திற்கான கட்டாய இடைவெளி இரண்டு வருடங்களாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனை ஆறாவது அறிவிற்கு எட்டியதாக இல்லை என்றும், இதனால் 146 வருடங்களாக பின்பற்றி வரக்கூடிய இந்த விதிமுறையின் ஆளுமையை, பொருத்தத்தை, நீதித்தன்மையைப்பற்றி அரசு தீவிரமாக ஆலோசனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.
வழக்குரைஞர் ராஜிவ் ஷர்மா, ஆல்பர்ட் ஆண்டனியின் வழக்குரைஞர்-_கேரள உயர்நீதிமன்றம் இடைவெளிக் காலத்தை ஒருவருடமாகக் குறைத்துள்ளது எனக் குறிப்பிட்டார். ஆனால், கர்நாடகா உயர்நீதிமன்றம் வித்தியாசமானக் கருத்தை வெளியிட்டுள்ளது. புகார் மனு தம்பதியின் விருப்பப்படி, விவாகரத்து செய்வதற்கான ஷரத்துக்கள், இதர சட்டங்களில் _ Section 28 of the Special Marriage Act, 1954, Section 13-B of the Hindu Marriage Act, 1955, and Section 32 B of the Parsi Marriage and Divorce Act, 1936-  இந்தச் சட்டங்களெல்லாம் ஒரு வருட கட்டாய இடைவெளியைத்தான் குறிப்பிட்டுள்ளன. கிறிஸ்தவ சமுதாய மக்களை விவாகரத்து வேண்டுபவர்களை இரண்டு வருட கட்டாய இடைவெளி பாரபட்சமான நிலைக்குத் தள்ளுகிறது _ என்று கூறுகிறது.
மேலும், இவ்வித புகார் மனுவில், மதத்தின் அடிப்படையில் மட்டும்தான், இத்தகைய பாரபட்சம் வேறுபாடு நிலவுகிறது. கிறிஸ்தவர்கள் விவாகரத்துச் சட்டத்தின் ஷரத்துக்கள் 10(A)(1) என்பதால் கட்டுப்படுத்தப்படுகிறார்கள் _ மனமொத்த விவாகரத்து வேண்டும் என்று விரும்பினால், கட்டாய இரண்டு வருட இடைவெளிக்குத் தயாராயிருக்க வேண்டும். ஆனால், பிற மதத்தினருக்கு ஒரு வருட கட்டாய இடைவெளியிருந்தால் போதுமானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெவ்வேறு மதத்தினருக்கு, பற்பல பிரிவுக் காலங்கள் ஒரே நாட்டில், ஒரே காரணத்திற்காக அனுமதிக்கப்படுவது முற்றிலும் பாரபட்சமானது, நியாயத்திற்குப் புறம்பானது, ஏற்றுக்கொள்ள முடியாதது. விவாகரத்து விரும்புபவர்களைப் பொறுத்தவரையில், இந்தச் சட்டம், மக்களின் அடிப்படை ஜீவாதார உரிமைகளின் வெளிப்படையான பகிரங்க அத்துமீறல் _ என்று இந்த புகார் மனுவில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் குழு, உயர்நீதிமன்றங்களின் வித்தியாசமான கோணங்களின் அடிப்படையில், தெளிவான தீர்வுகள் இன்னும் ஏன் வழங்கப்படவில்லை என்று மத்திய அரசைக் கேட்டுள்ளது.
உண்மை இதழ்,16-31.7.15

மைனர் சிறுமியை மணம் செய்த குற்றத்தில் புதிய தீர்ப்பு


17 வயது பெண்ணைத் திருமணம் செய்த குற்றத்தில், குற்றம் சாட்டப்பட்டவர் விடுதலை செய்யப்பட்டார். அந்தப் பெண், பருவம் அடையும் நிலையிலிருந்ததாலும், அவளாகவே அந்த இளைஞனுடன் தொடர்பு கொண்டு பிறர் பார்வையிலிருந்து மறைந்திருந்ததாலும், அந்த இளைஞன், அவன் மீது சுமத்தப்பட்ட குற்றங்களிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளான். Prohibition of Child Marriage Act, Protection of Children from Sexual Offences (POCSO) Act, and the Indian Penal Code(IPC)  என்ற குற்றப்பிரிவுகளிலிருந்து, அந்த இளைஞனை நீதிபதி கவுதம் மேனன் விடுவித்திருக்கிறார்.
அந்தப் பெண் விருப்பத்துடனே இந்தத் தொடர்பு நிகழ்ந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

அந்த இளைஞன் திருமணத்திற்குமுன் எந்தத் தொடர்பும் வைக்கவில்லை என்று அந்தப் பெண் கூறியுள்ளார். எனவே, வன்புணர்ச்சி அல்லது பாலியல் பலாத்காரம் நடந்துள்ளதாகக் கருத வாய்ப்பில்லை. மேலும், அந்தப் பெண் அவளுடைய விருப்பத்தினால்தான் அவரைத் திருமணம் செய்துள்ளாள். எனவே, குழந்தை திருமணத் தடுப்புச் சட்டத்தின்கீழ் குற்றம் நடந்துள்ளது என்பதை நிரூபிக்க முடியாது. அனைத்து சம்பவங்களும் அவள் விருப்பத்துடனே நடந்துள்ளன என்று நீதிபதி கூறினார்.
எனவே, குழந்தை திருமணத் தடுப்புச் சட்டம் 2006, IPCJயின் கீழ் கடத்தல், கற்பழிப்பு, POCSO சட்டத்தின்கீழ் வன்புணர்ச்சி என்ற குற்றங்கள் நடந்துள்ளதாக முடிவு செய்ய முடியாது.
அரசுத் தரப்புப்படி, பெண்ணின் தந்தை, 2013, மே மாதம் 15ஆம் தேதியன்று, தன் மகள் குற்றவாளியால் கடத்தப்பட்டதாகப் புகார் மனு அளித்துள்ளார். குற்றவாளியின் தாயார் அந்தப் பெண்ணை அழைத்துக்கொண்டு, இரண்டு மாதங்களுக்குப் பிறகு காவல்நிலையத்திற்கு சென்றிருக்கிறார். அதன் பிறகு, அந்த இளைஞன் கைது செய்யப்பட்டிருக்கிறான். மேலும், அந்தப் பெண், அந்த இளைஞனுடன் காதல் தொடர்பிலிருந்ததாகவும், அவன் அவளை மயக்கி ஏமாற்றவில்லை எனவும், தற்போது அவர்கள் இருவரும் மகிழ்ச்சியுடன் கணவன் மனைவியாக வாழ்ந்து வருவதாகவும், நீதிமன்றத்தில் அந்தப் பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நீதிபதி அந்த இளைஞனை விடுதலை செய்துள்ளார்.
****உண்மை இதழ்,16-31.7.15

ஒரு பெண்ணைக் கைது செய்வதற்கு முன்பு கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்!








இந்திய அரசியல் சாசனம் நாட்டுக் குடிமக்களுக்கு பல அடிப்படை உரிமைகளை அளித்துள்ளது. நாட்டுப் குடிமக்களுக்கு, அவர்கள் விருப்பப்படி, நாட்டு நலனுக்கு ஏற்ற முறையில், மக்களின் நன்மைகளை வலியுறுத்தும் வகையில் பல சுதந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த உரிமை, குடிமக்களோ அல்லது அயல்நாட்டுவாசிகளோ, குற்றம் செய்தால், அவர்களுக்கு மறுக்கப்படுகிறது.
சட்டம், ஒழுங்கை நிர்வகிக்கும் காவல்துறை, அவர்கள் கைது செய்ய உரிமை பெற்றுள்ளது. காவல்நிலையக் கட்டுப்பாட்டில் இருக்கும்போது, வன்முறை, சித்திரவதை நடக்க வாய்ப்பிருக்கிறது. அடிப்படை உரிமைகளின் அத்துமீறலுக்கு வழிவகுக்கிறது.
ஒரு குடிமகனைக் கைதுசெய்யும்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளைப் பற்றிய முதல் திருப்புமுனை தீர்வு D.K.Basu Vs. State Case என்ற வழக்கில் உச்சநீதிமன்றத்திலிருந்து வந்தது. இந்த வழக்கில், குற்றம் சுமத்தப்பட்டவரை கைது செய்து, காவலில் எடுத்து விசாரணை செய்ய, காவல்துறை மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளைக் குறித்து உச்சநீதிமன்றம் சில குறிப்பிட்ட வழிகாட்டுதல்களைஅறிவித்துள்ளது.
இதனால், போலீஸ் காவலில் குற்றம் சாட்டப்பட்டவர் இருக்கும்போது, சித்திரவதைக்கு ஆளாகாமல் தடுக்க முடியும். ஆனால், இந்தியாவில் பெண்கள் குற்றங்களுக்காகக் கைது செய்யப்படும்பொழுது பல சூழ்நிலைகளில் அவர்கள் காவல் நிலையத்தில் பல துன்பங்களுக்கு ஆளாக நேரிடுகிறது. பெண்கள் பல காவல் நிலையங்களில் பாலியல் கொடுமைகளைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், உச்சநீதிமன்றமும், அரசியல்வாதிகளும் சேர்ந்து பெண்களின் பாதுகாப்பிற்காக பல வழிகாட்டுதல்களை ஏற்படுத்தியுள்ளார்கள்.


பெண்களைக் கைது செய்யும்போது காவல்துறை மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்:-
1.    கைது செய்யப்பட்ட பெண்களை, ஆண் குற்றவாளிகளிடமிருந்து பிரிக்கப்பட்டு, தனி லாக்-_அப்பில் அடைக்கப்பட வேண்டும். தனியாக லாக்_அப் இல்லாவிட்டால், பெண்களை தனி அறைகளில் அடைக்க வேண்டும். மேலும், பெண்கள் கைது செய்யப்படும்போது, பெண் அதிகாரிகளின் மேற்பார்வையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2.    பெண்களை, சூரிய அஸ்தமனம் -_ சூரிய உதயம் இடையே அதாவது இருட்டியபிறகு, கைது செய்யக்கூடாது. ஆண் காவலர்களால் பெண்கள், பாலியல் தொல்லைகளுக்கு காவல் நிலையத்திலேயே ஆளாக்கப்பட்டதால், இந்த விதி உருவாக்கப்பட்டது.
3.    மூன்றாவதாக, பெண்களை, சிறுமிகளை காவல் நிலையத்திற்கோ, வேறு இடங்களுக்கோ விசாரணை செய்ய அழைக்கக்கூடாது. அவர்கள் வசித்துவரும் வீட்டில்தான் விசாரணை மேற்கொள்ள வேண்டும். விசாரணை செய்ய வேண்டிய நேரமும், முறையும் பெண்களுக்கு கூச்சத்தை, அவமானத்தை ஏற்படுத்தாத வகையில் இருக்க வேண்டும்.
4.    பெண் கைதிகளுக்கு, அல்லது வேறு பெண்களுக்கு மருத்துவ சோதனை செய்ய பெண் மருத்துவர்களையே அனுமதிக்க வேண்டும். பெண் அதிகாரிகள் மேற்பார்வையில் இந்த மருத்துவ பரிசோதனை கையாளப்பட வேண்டும். பெண் கைதிகள் குழந்தை பெற்றால், Prenatal and Postnatal Care  பராமரிப்பு அளிக்க வேண்டும்.
5.    பெண்கள் பேறுகாலத்தில் இருந்தால், அவர்களை கைது செய்வதைத் தவிர்க்க வேண்டும். கர்ப்பிணிப் பெண்கள் மட்டுமல்ல, கருவில் இருக்கும் சிசுவும் சேதமுற வாய்ப்புகள் இருப்பதால், இந்த முடிவை முடிந்த அளவிற்குத் தவிர்க்க வேண்டும். மேலும், கருத்தரித்த பெண்களை கட்டுப்படுத்தக் கூடாது.
ஓரளவு சுதந்திரம் அளிக்க வேண்டும். பெண்களையும், சிறுமிகளையும் பெண் காவலர்கள் அல்லது பெண் அதிகாரிகள் பாதுகாக்க வேண்டும். பெண் காவல் அதிகாரிகள் முன்னிலையிலேயே அவர்களிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
 -உண்மை இதழ்,1-15.6.15

ஞாயிறு, 15 நவம்பர், 2015

சுயமரியாதைத் திருமணத்தை எதிர்த்து வழக்கா?


உலகத்தில் எங்கும் கேள்விப்பட்டு இருக்க முடியாத அதிசயமான தகவல் இது. 1968 ஜனவரி 17 ஆம் தேதி குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று சுயமரியாதைத் திருமணம் சட்டப்படி செல்லுபடியாக்கப்பட்டது.
இதுவரை நடைபெற்ற சுயமரியாதைத் திருமணங்களும் சரி, இனி நடக்கப்போகும் திருமணங்களும் சரி (With retrospective Effect) செல்லுபடியாகும் என்று சட்டம் கூறியது.
இதற்கிடையே சுயமரியாதைத் திருமணம் தொடர்பான வழக்கு ஒன்றில் தந்தை பெரியாரே சாட்சியம் அளித்தார்.  அந்தச் சுயமரியாதைத் திருமணம் செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதுண்டு.
ஆடையூர் ரெங்கம்மாள் - சிதம்பரம் திருமணம் (கழகத் தலைவரின் மாமனார் - மாமியார் திருமணம்) 1934 இல் தந்தை பெரியார் தலைமையில் திருச்சியில் நடைபெற்றது- சுயமரியாதை முறையில், அதனை எதிர்த்து வழக்குத் தொடுக்கப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்றம், அந்தத் திருமணம் அக்னியை வலம் வராமல், சப்தபதி எடுத்து வைக்காமல் நடைபெற்றதால் செல்லாது என்று தீர்ப்பு வழங்கியது.
‘‘இவர்கள் இருவருக்கும் பிறந்த பிள்ளைகள் சட்டப்படி யான பிள்ளைகளாகக் கருத முடியாது; இந்து மதத்தில் வைப்பாட்டிகளாக இருப்பதற்கும், அவர்களுக்குப் பிள்ளைகள் பிறப்பதற்கும் அப்பிள்ளைகளுக்குத் தகப்பன் சொத்தில் பங்கு பெற உரிமை உண்டு என்பதால் இவர்களது பிள்ளைகளுக்குச் சொத்தில் பங்குண்டு; ஆனால், இவர்கள் சட்ட விரோத வைப்பாட்டிகளின் பிள்ளைகளாகவே கருதப்படுவார்கள்’’ என்று ஜஸ்டீஸ் ராஜகோபாலன் அய்.சி.எஸ்., ஜஸ்டிஸ் சத்தியநாராயண ராவ் என்ற இரு பார்ப்பன நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினார்கள்.
இவ்வளவு நடந்ததற்குப் பிறகும்கூட சுயமரியாதைத் திருமணங்கள் நடந்து கொண்டுதானிருந்தன. அண்ணா அவர்கள் சுயமரியாதைத் திருமணத்திற்கான சட்ட சம்மதத்தை அளித்தார்கள்.
இந்தத் திருமணம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல; மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில்கூட சட்ட சம்மதம் பெற்று விட்டது. இந்த நிலையில், சுயமரியாதைத் திருமணத்தை எதிர்த்து வழக்குரைஞர் ஒருவர் பொது நல வழக்கொன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறார் என்றால், இதைவிடப் பைத்தியக்காரத்தனம் வேறு ஒன்று இருக்க முடியாது.
சுயமரியாதைத் திருமண முறையில் சடங்குகள் கிடையாது. மோதிரத்தை மாற்றிக் கொள்கிறார்கள் - இந்து மதத்தில் இந்த முறை கிடையாது. ஒரு மத நடவடிக்கையை மற்றொரு மதத்தின்மீது திணிப்பது விதி மீறல் ஆகும். இந்துத் திருமணச் சட்டத்தில் இதைப் புகுத்தி இந்துத் திருமண திருத்த சட்டம் என்று கூறுவது சட்ட விரோதம் என்று மனுதாரர் புகாரில் கூறப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல் (தலைமை நீதிபதி), நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் முன்பு இந்த வழக்கு நடைபெற்றது.
சீர்திருத்த  சுயமரியாதைத் திருமணம் செய்யவேண்டும் என்று யாரும் கட்டாயப்படுத்தவில்லை. விரும்பியவர்கள் விரும்பிய முறையில் திருமணம் செய்து கொள்ளலாம். எனவே, இந்த வழக்குத் தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.
இதைத் தவிர வேறு வகையில் தீர்ப்பு வழங்கப்பட வாய்ப்பு இல்லை என்பது வேறு விடயம்.
ஆனாலும் பார்ப்பனப் பழைமையைக் கட்டிக் காப்பதிலும், இந்து மதச் சடங்குகளைக் காப்பாற்றுவதிலும் இன்னும் பார்ப்பனர்கள் குறியாக இருக்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும்.
2013 ஆம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திரு.சி.எஸ்.கர்ணன் அவர்கள் முன்னிலையில் ஒரு வழக்கு வந்தது. இரு குழந்தைகள் பிறந்ததற்குப் பிறகு - கணவன் மனைவிக்கிடையே பிரச்சினை ஏற்பட்டு குடும்ப நல நீதிமன்றத்திற்கு வழக்கு சென்றது.
திருமணம் ஆனதற்குச் சாட்சியமும், சடங்கு முறை களும் இல்லாததால் வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண் சென்னை உயர்நீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்தார்.
கணவன் - மனைவிக்கிடையே பாலுறவு நடந்திருக் கிறது என்பது  உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இரு வரும் திருமணம் செய்துகொள்வதற்கான வயதினையும் எட்டியுள்ளனர்.
திருமணத்திற்குச் சடங்குகள் முக்கியமல்ல; பாலியல் உறவு இருந்தாலே அது திருமணம்தான் என்று தீர்ப்பு வழங்கினார்.
தமிழ்நாட்டில் தந்தை பெரியார் அவர்கள் கண்ட இயக்கத்தின் தாக்கம் எத்தகைய வீறுதன்மை கொண்டது - இந்த நிலை தமிழ்நாட்டைத் தவிர வேறு மாநிலங்களிலும் நினைத்தே பார்க்க முடியாது.
ஆனால், அண்மைக் காலங்களில் சினிமாக்களில் புரோகித கல்யாணங்களுக்கு இடம் அளித்து வருவது வருந்தத்தக்கது; கண்டிக்கத்தக்கதும்கூட! சினிமாத் துறை பார்ப்பனீயத்துக்குக் குற்றேவல் செய்கிறதா?
திராவிட இயக்கப் பின்னணியில் நடத்தப்பட்டு வரும் ஒரு தொலைக்காட்சியில் கோவில் திருமணம்பற்றி சிலாகித்து, ஒரு சிறப்பு செய்தித் தொகுப்பு அளிக்கப்பட்டது - வெட்கப்படத்தக்கது, கண்டிக்கத்தக்கதுமாகும்.
-விடுதலை வலைப் பூ
1968-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சுயமரியாதை திருமண சட்டத்தை எதிர்த்த வழக்கு தள்ளுபடி: ஐகோர்ட்டு உத்தரவு



1968-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சுயமரியாதை திருமண சட்டத்தை எதிர்த்த வழக்கு தள்ளுபடி: ஐகோர்ட்டு உத்தரவு
Logo
சென்னை, நவ.12-

தந்தை பெரியாரின் திராவிடர் கழகத்தின் ஒரு கொள்கையாக சுயமரியாதை திருமணம் உள்ளது. அந்த வழியில் வந்த அண்ணா, 1967-ம் ஆண்டு தமிழகத்தின் முதல்-அமைச்சராக ஆனதும், சுயமரியாதைத் திருமணத்தை சட்டமாக்கினார். இதற்காக இந்து திருமண சட்டத்தில் 7-ஏ என்ற பிரிவை புகுத்தி, 1968-ம் ஆண்டு சட்டத் திருத்தம் செய்யப்பட்டு அமலுக்கு கொண்டு வரப்பட்டது.

இந்து திருமண சட்டத்தில் இடம் பெற்றுள்ள முறையான, பிராமணர் புரோகிதர் முன்னிலையில் தாலி கட்டி, தீயை 7 முறை சுற்றி வலம் வருவது போன்ற நடைமுறையை, சுயமரியாதை திருமண சட்டம் வலியுறுத்தவில்லை. மாறாக, நண்பர், உறவினர் முன்னிலையில் மாப்பிள்ளையும் பெண்ணும் மாலையோ, மோதிரமோ மாற்றிக் கொண்டாலே அது திருமணமாக கருதப்படும் என்று சுயமரியாதை திருமணச் சட்டம் கூறியுள்ளது.

இந்த திருத்த சட்டத்தை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் ஏ.அசுவத்தாமன் பொதுநலன் வழக்கு தாக்கல் செய்தார். அதில், மாப்பிள்ளையும் பெண்ணும் அக்னியை வலம் வருவது முக்கியமான நிகழ்ச்சியாகும். ஒரு அரசியல் கட்சியின் கொள்கையை திணிக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

பாரம்பரிய வழக்கத்தை சுயமரியாதை திருமணம் உறுதி செய்யவில்லை. எனவே அந்த சட்ட திருத்தத்தை அரசியல் சாசனத்துக்கு முரணானது என்று உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் விசாரித்தனர். அவர்கள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

இந்து மதம் என்பது பன்முகத் தன்மை கொண்டது. அதன்படி, வெவ்வேறு பாரம்பரியங்களைக் கொண்ட மக்கள், அந்தந்த பகுதிக்கு ஏற்றபடி திருமண சடங்குகளை வைத்துக்கொண்டு திருமணங்களை நடத்துகின்றனர்.

அந்த வகையில் இந்துக்களிடையே மேலும் ஒரு திருமண முறையாக சுயமரியாதை திருமணம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது கடந்த 50 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்த விஷயத்தில் பிரிவினை நோக்கம் இருக்க கூடாது. அந்த சட்ட திருத்தத்தின் நோக்கம் என்னவென்றால், திருமணம் என்பது புரோகிதர் முன்னிலையில் நடந்தால்தான் அது செல்லும் என்ற நிலையை மாற்றுவதுதான். அவர்கள் இல்லாமலேயே, மற்றவர்கள் முன்னிலையில் நடப்பதும் செல்லக்கூடிய திருமணம்தான் என்பதுதான் அந்த சட்ட திருத்தத்தின் நோக்கமாகும்.

உறவினர், நண்பர்கள் முன்னிலையில் மாலை அல்லது மோதிரம் மாற்றிக் கொள்வது அல்லது தாலி கட்டிக் கொள்வது ஆகிய நிகழ்வோடு திருமணம் முழுமையாக நடந்துவிடுகிறது. இது சட்டப்படி செல்லக்கூடிய திருமணமாகும்.

சுயமரியாதை திருமணங்கள் செல்லக்கூடியவை அல்ல என்பதற்கான தகுந்த ஆதாரங்களை மனுதாரர் தாக்கல் செய்யவில்லை. எனவே மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. சட்ட திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு இடமில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
.
    

திங்கள், 9 நவம்பர், 2015

பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை : உச்சநீதிமன்றம் தீர்ப்பு






ஆந்திராவைச் சேர்ந்தவர் கந்தூரி கோடிஸ்வரம்மா இவர் தனது குடும்ப சொத்தில் சம உரிமை ஆண் வாரிசுகளுக்கு இணையாக பங்கு கேட்டு ஆந்திர உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அவர் மேல் முறையீடு செய்தார். இதை விசாரித்த நீதிபதிகள் லோதா, ஜெகதீஸ் சிங்கேகர் ஆகியோர் தீர்ப்பில் 2005ஆம் ஆண்டில் இந்து வாரிசு சட்டத் திருத்தத்தின் 6ஆவது பிரிவின்படி குடும்ப சொத்தில் ஆண் வாரிசுகளுக்கு இணையாகப் பெண்களுக்கும் சம உரிமை உள்ளது. இந்தப் புதிய சட்டம் பெண் வாரிசுதாரர்களுக்கு உண்மையான நிரந்தரமான உரிமையைப் பெற்றுத் தந்துள்ளது. ஆனால் 2004ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதிக்கு முன் சொத்துக்கள் பிரிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டு இருந்தால் சொத்தில் பெண்கள் சம உரிமை கேட்க முடியாது எனக் கூறினர்.
25.3.1989 அன்று திமுக ஆட்சியில் கலைஞர் கருணாநிதி அவர்கள் சென்னையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் பெண்களுக்குச் சொத்துரிமைச் சட்டம் கொண்டு வந்தார். இது தமிழ்நாட்டில் பெண்களுக்கு இந்தியாவிலேயே முதல் உரிமையாகும்.
அ. இனியன் பத்மநாதன், ஈரோடு

முதல் திருமணத்தை மறைத்து 2ஆவது திருமணம்

2ஆவது மனைவி ஜீவனாம்சம் பெறத் தகுதியானவரே உச்சநீதிமன்றம் தீர்ப்பு
முதல் திருமணத்தை மறைத்து செய்து கொண்ட இரண்டாவது திருமணம் சட்ட விரோதமானது என்றா லும், கணவரிடமிருந்து ஜீவனாம்சம் பெறுவதற்காக இந்து திருமணச் சட்டப்படி இரண்டாவது மனைவி யையும் சட்டபூர்வமானவராகவே கருத வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இரண்டாவது மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் அளித்திருந்த முந்தைய தீர்ப்பானது, முதல் திருமணம் குறித்த தகவலை மறைத்து செய்து கொண்ட இரண்டாவது திருமணத்திற்கு பொருந்தாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சனா பிரகாஷ் தேசாய், ஏ.கே. சிக்ரி ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
"இந்த விளக்கம் ஏற்றுக் கொள்ளப்படா விட்டால் அது மனைவியை ஏமாற்றும் கணவனுக்கு அளிக்கப்படும் சலுகையாக ஆகிவிடும்.
எனவே, ஜீவனாம்சம் பெறுவதற்காகவாவது குற்றவியல் நடைமுறைச் சட்டம் 125-இன்படி (ஜீவனாம்சம்) பாதிக்கப்பட்ட பெண் சட்ட பூர்வமான மனைவியாகவே கருதப்பட வேண்டும்'' என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
ஆதவ்-சபிதா பென் வழக்கில், உச்சநீதிமன்றம் ஏற்கெனவே அளித்த தீர்ப்புக்கு மாறானதாக மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது என்று கூறி ஒருவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், சமூக நீதியை நிலைநாட்டுவதற்காக குற்றவியல் நடைமுறைச் சட்டம் 125-அய் உறுதியான நோக்கத்திற்காக செயல்படுத்தும் வகையில் இப்படி விளக்கம் அளிக்க வேண்டியது அவசியம் என்றும் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.
ஆதவ் ஏற்கெனவே திருமணமானவர் என்பதை முழுமையாகத் தெரிந்து கொண்டு சபிதா பென் அவரை இரண்டாவது திருமணம் செய்து கொண் டுள்ளார். ஆதலால், இந்து திருமணச் சட்டப்படி அந்த திருமணம் செல் லாது என தீர்ப்பு வழங்கப்பட்டதாக நீதிபதிகள் விளக்கம் கூறினர்.
- சட்டக்கதிர் - 2013 - டிசம்பர்  பக்கம், 59
-விடுதலை,14.12.13

வெள்ளி, 6 நவம்பர், 2015

விவாகரத்துக்கு பின்பு மறுமணம் செய்யாத பெண்ணுக்கு ஜீவனாம்சம்

விவாகரத்துக்கு பின்பு மறுமணம் செய்யாத பெண்ணுக்கு ஜீவனாம்சம்
சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு


விவாகாரத்துக்கு பின்பு மறுமணம் செய்யாத பெண்ணுக்கு கண்டிப்பாக ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. மதுரையைச் சேர்ந்தவர் மதியழகன். இவருடைய மனைவி சந்திரிகா. இவர்களுக்கு 1991ல் திருமணம் நடைபெற்றது.
பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். மனைவியிடம் விவாகரத்து கேட்டு மதியழகன் மதுரை குடும்பநல கோர்ட்டில் 2007ஆம் ஆண்டு மனு தாக்கல் செய்தார். கணவரிடம் ஜீவனாம்சம் கேட்டு சந்திரிகா தனியாக மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம், மதியழகனுக்கு விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது. மேலும், அவர் சந்திரிகாவுக்கு மாதம் 750 ரூபாய் ஜீவனாம்சமாக வழங்க வேண்டும் என்றும் 2010ஆம் ஆண்டு உத்தரவிட்டது.
பின்னர், சந்திரிகாவின் கோரிக்கையை ஏற்று ஜீவனாம்சத் தொகையை 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி 2013ஆம் ஆண்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி மதியழகன், மதுரை ஐகோர்ட்டு கிளையில் அப்பீல் செய்தார். அதில், சந்திரிகா என்னுடன் சேர்ந்து வாழ மறுத்ததால் விவாகரத்து வழங்கப்பட்டது.
என்னுடன் சேர்ந்து வாழாதவருக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டியதில்லை என்று கூறப்பட்டு இருந்தது. இந்த மனுவை நீதிபதி எஸ். நாகமுத்து விசாரித்தார். முடிவில், நீதிபதி அளித்த தீர்ப்பு வருமாறு: கணவருடன் சேர்ந்து வாழ விரும்பாதவருக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டியதில்லை என்று குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
அதே சட்டத்தில் விவாகரத்து பெற்று மறுமணம் செய்யாமல் தனியாக வாழும் மனைவிக்கு, கணவர் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சந்திரிகா, மனுதாரரிடம் இருந்து விவகாரத்து பெற்ற பின்பு மறுமணம் செய்யாமல் தனியாக வசித்து வருகிறார்.
இதனால், அவருக்கு மனுதாரர் கண்டிப்பாக ஜீவனாம்சம் தர வேண்டும். மனுதாரர் ஜோதிடராக இருப்பதாகவும், அவரது மாத வருமானம் 10 ஆயிரம் ரூபாய் என்றும் கணக்கீட்டு 2 ஆயிரம் ரூபாய் ஜீவனாம்சமாக வழங்க கீழ்கோர்ட்டு உத்தர விட்டது சரியல்ல. மனுதாரர் மாதம் ஆயிரம் ரூபாய் ஜீவனாம்சமாக வழங்க உத்தரவிடப்பட்டது. இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
-விடுதலை,24.10.15