செவ்வாய், 10 டிசம்பர், 2019

திருமணம் ஆகாத ஆணும், பெண்ணும் ஒரே அறையில் தங்குவது குற்றம் அல்ல - உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை, டிச.8 கோவை அவினாசி சாலையில், ஒரு கட்டிடத்தை குத்தகைக்கு எடுத்து அரியானா மாநிலத்தை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் தங்கும் விடுதி ஒன்றை நடத்தியது. இந்த விடுதியில் சட்டவிரோத செயல்கள் நடப்பதாக சமூக வலை தளங்களில் செய்திகள் பரவியது.

இதையடுத்து கடந்த ஜூன் 25-ஆம் தேதி கோவை (தெற்கு) வட்டாட்சியர், பீளமேடு காவல்துறை ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு சென்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது இந்த விடுதியில் தங்கியிருப்பவர் களின் முகவரி, பெயர் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்யும் பதிவேடு இல்லை. ஒரு அறையில் திருமணம் ஆகாத ஆணும், பெண்ணும் சட்டவிரோதமாக ஒன்றாக தங்கியிருந்தனர். அங்கு மதுபாட்டில்களும் இருந்தன. இவற்றை எல்லாம் பதிவு செய்த அதிகாரிகள், அந்த விடுதிக்கு உடனடியாக 'சீல்' வைத்து இழுத்து மூடினர்.

இதையடுத்து, சீலை அகற்ற அதிகாரி களுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அந்த விடுதியை நடத்தும் தனியார் நிறுவனம் வழக்கு தொடர்ந் தது. இந்த வழக்கை நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் விசாரித்தார். பின்னர் நீதிபதி பிறப்பித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-

சமூக வலைதளங்களில் பரவிய செய்தி களின் அடிப்படையில் மட்டுமே விடுதியில் சோதனை நடத்தி அதிகாரிகள் சீல் வைத்துள் ளனர். சீல் வைப்பதற்கு முன்பு விளக்க தாக்கீது கூட கொடுக்கவில்லை. அதிகாரிகளின் இந்த செயல் இயற்கை நியதிக்கு எதிரானது என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. அதே நேரம், மனுதாரர் திருமணம் ஆகாத இணை களை விடுதி அறையில் தங்க வைப்பது ஒழுக்கக் கேடனாது என்று சமூக வலைதளங் களில் தகவல் பரவியதால், அதிகாரிகள் இந்த அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

ஒரு அறையில் திருமணம் ஆகாத ஆணும், பெண்ணும் ஒன்றாக தங்க அனுமதித்தால் அது சட்டவிரோதமா? என்று இந்த உயர்நீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞரிடம் பதில் இல்லை. ஒரே அறையில் திருமணம் ஆகாத ஆணும், பெண்ணும் தங்கக்கூடாது என்று சட்டமோ, விதிகளோ இல்லை. அதுமட்டு மல்ல, திருமணம் செய்யாமலேயே ஒரு ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ்ந்து, குடும்பம் நடத்துவது சட்டப்படி குற்றம் இல்லை என்கிற போது, ஒரு அறையில் ஒன்றாக தங்கினார்கள் என்பது எப்படி குற்றமாகும்?. எனவே, ஒரு அறையில் ஆணும், பெண்ணும் தங்கினார்கள் என்பதற்காக ஒரு விடுதிக்கு சீல் வைப்பது என்பது சட்ட விரோதமாகும். மொத்தத்தில், மனுதாரர் விடுதி மீது அதிகாரிகள் எடுத்த ஒட்டுமொத்த நடவடிக்கையும் சட்டவிரோத மானது. சீல் வைப்பதற்கு முன்பு விடுதி நிர்வாகத்துக்கு சட்டப்படி விளக்கம் கேட்டு தாக்கீது வழங்கவில்லை. மேலும் விடுதி நடத் துவதற் கான படிவம் டி உரிமம் அந்த கட்ட டத்துக்கு இல்லை என்று அரசு தரப்பில் 3ஆ-வது குற்றச்சாட்டை கூறினாலும், அதுவெல் லாம் தீவிர குற்றச்சாட்டு இல்லை. அதுகுறித்து விளக்கம் கேட்டு, சரி செய்துகொள்ளக்கூடிய பிரச்சினைதான். எனவே, விடுதியில் திரு மணம் ஆகாத ஆணும், பெண்ணும் ஒன்றாக ஒரு அறையில் தங்கினார்கள் என்பதும், மது பாட்டில்கள் வைத்திருந்தனர் என்பதும் குற்றம் அல்ல. எனவே, விடுதி நிர்வாகம் மீது எடுக்கப் பட்ட நடவடிக்கைகளை ரத்து செய்கிறேன். இந்த உத்தரவு நகல் கிடைத்து 2 நாட்களுக்குள், விடுதிக்கு வைக்கப்பட்ட சீலை மாவட்ட ஆட்சியர் அகற்ற வேண்டும். இவ்வாறு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் தீர்ப்பில் கூறியுள்ளார்.

- விடுதலை நாளேடு 8 12 19

வியாழன், 21 நவம்பர், 2019

பழைய தீர்ப்புக்குத் தடையில்லை சபரிமலைக்குப் பெண்கள் செல்லலாம்!

*7 பேர் கொண்ட அமர்வுக்கு மாற்றம்

* உச்சநீதிமன்றம் தீர்ப்பு

புதுடில்லி, நவ.14 சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவிக்கும் வழக்குகள் 7 பேர் கொண்ட அமர்வுக்கோ அல்லது அதைவிட பெரிய அமர்வுக்கோ மாற்ற உச்சநீதிமன்றம் பரிந் துரைத்துள்ளதோடு, பெண்களை அனுமதிக்க லாம் என்கிற உத்தரவே தொடரும் என்றும் அறிவித்துள்ளது.

2006 ஆம் ஆண்டு சபரிமலைக்கு அனைத்து வயதுடைய பெண்களும் செல்ல அனுமதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை, கடந்த 2017 ஆம் ஆண்டு 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு உச்சநீதிமன்றம் மாற்றி யது. இதனைத் தொடர்ந்து, 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, 10 முதல் 50 வயதிற்குட்பட்ட பெண் கள் சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குள், நுழைவதற்கான தடையை நீக்கியது. அத் தோடு, பக்தியை பாலின பாகு பாட்டிற்கு உட்படுத்த முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. பக்தியில் சமத்துவத்தை ஒடுக்கும் ஆணாதிக்க கருத்தை அனுமதிக்க முடியாது என்றும் நீதிமன்றம் கூறியது.

அய்ந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வில் இடம்பெற்றிருந்த ஒரே பெண் நீதிபதியான இந்து மல்கோத்ரா மட்டும், சபரிமலை பாரம்பரியம் காக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தார். நீதிபதிகள் நாரிமன், சந்திர சூட், கன்வில்கர் மற்றும் அப்போதைய தலைமை நீதிபதியான தீபக் மிஸ்ரா ஆகியோர் இந்து மல்கோத்ராவின் கருத்துக்கு நேர் மாறாக தீர்ப்புகளை அளித்தனர். உச்சநீதி மன்ற நீதிபதிகள் அளித்த இந்த தீர்ப்பின்மூலம் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் சபரிமலைக்குச் செல்லக் கூடாது என்று பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்ட நடைமுறை கேள்விக்குறியானது.

இதனைத் தொடர்ந்து அய்யப்ப பக்தர்கள் மத்தியில் இவ்விவகாரம் மிகப்பெரிய அளவில் வெடிக்கவே, தேவசம்போர்டு தரப்பில் தலைமை நம்பூதி கண்டரரு ராஜீவரரு சார் பில் மறுபரிசீலனை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அம்மனுவோடு மேலும் 64 மனுக்கள் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டன. இம்மனுக்கள் மீது விசா ரணை நடத்திய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத் திருந்தது.

இந்நிலையில் சபரிமலைக்கு அனைத்து வயதுடைய பெண்களும் செல்ல அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட வழக்கு தொடர்பான சீராய்வு மனுக்கள் மீது இன்று (14.11.2019) தீர்ப்பு  வழங்கப்பட்டது. அப்போது நீதிபதிகள் ரோஹின்டன் பாலி நாரிமன் மற்றும் டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் பெண் களை அனுமதிக்கலாம் என்று தீர்ப்பு வழங்க, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர் மற்றும் நீதிபதி இந்து மல்கோத்ரா ஆகியோர் பெண்கள் செல்ல தடை விதிப்பதாகவும் தீர்ப்புகளை வழங்கினர். தீர்ப்பில் ஒருமித்த கருத்து எட்டப்படாத காரணத்தால், 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு அல்லது அதைவிட பெரிய அமர்வுக்கு மாற்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், இந்து மல் கோத்ரா மற்றும் கன்வில்கர் ஆகியோர் பரிந்துரைத்துள்ளனர்.

மேலும், மறுபரிசீலனை மனுக்கள் நிலுவையில் இருப்பதால், பழைய நிலைப்படி பெண்களை அனுமதிக்கும் தீர்ப்பு தொடர்ந்து அமலில் இருக்கும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

- விடுதலை நாளேடு 14 11 19

புதன், 2 அக்டோபர், 2019

வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்குகளில் புகார் செய்தாலே கைது செய்யலாம் : உச்சநீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி, அக்.2 எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கு களில் புகார் செய்தாலே, புகாருக்கு ஆளானவரை எந்தவித விசாரணையும் இன்றி கைது செய்யலாம் என்ற நிலை இருந்து வந்தது. ஆனால் இந்த சட்ட பிரிவு தவறாக பயன்படுத்தப்படுவதாக கூறி, அதற்கு எதிராக உச்சநீதி மன்றத் தில் ஒரு வழக்கு தொடரப் பட்டது.

அந்த வழக்கை நீதிபதிகள் ஆதர்ஷ் கோயல், யு.யு. லலித் ஆகியோர் விசாரித்தனர். முடிவில், வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்குகளில் விசாரணை நடத்தி, உரிய அதிகாரியின் அனு மதியைப் பெற்றுத்தான் கைது நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அவர்கள் தீர்ப்பு அளித்தனர்.
ஆனால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 20-ஆம் தேதி வழங் கப்பட்ட இந்த தீர்ப்பானது, வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சி என கூறி, அதற்கு எதிராக பரவலாக போராட்டங்கள் நடைபெற்றன.
இதையடுத்து வன்கொடுமை தடுப்பு சட்டத்தை கடுமையாக்கி மத்திய அரசு சட்ட திருத்தம் கொண்டு வந்தது. இதன்படி, இந்த வழக்குகளில் புகாருக்கு ஆளான வர்கள், முன் பிணை பெற முடியாத நிலை உருவா னது. அத்துடன், 2 நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பை மறு ஆய்வு செய் யுமாறு மத்திய அரசு உச்சநீதிமன் றத்தில் மனு தாக்கல் செய்தது.
இந்த மறு ஆய்வு மனுவை நீதிபதிகள் அருண் மிஷ்ரா, எம்.ஆர். ஷா, பி.ஆர். கவாய் ஆகியோர் அமர்வு விசாரித்தது. இந்த அமர்வின் முன், மறு ஆய்வு மனு கடந்த 18-ஆம் தேதி விசா ரணைக்கு வந்தது. அப்போது 2 நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்பு குறித்து 3 நீதிபதிகள் அமர்வு கடு மையாக விமர்சித்தது.
இது தொடர்பாக நீதிபதிகள் குறிப்பிடுகையில், “இந்த தீர்ப்பு அரசியல் சாசனத்தின் நோக்கத் துக்கு எதிரானது. சட்டம் தவறாக பயன் படுத்தப்படுகிறது என்பதா லேயே அரசியல் சாசனத்துக்கு எதிராக ஒரு உத்தரவை பிறப்பிக்க முடியுமா?” என கேள்வி எழுப்பினர்.
அத்துடன் மத்திய அரசின் சார்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் கே.கே. வேணுகோ பாலிடம் நீதி பதிகள், “நாடு விடு தலை அடைந்து 70 ஆண்டுகளுக்கு மேலாகியும்கூட, எஸ்.சி., எஸ்.டி., மக்களை அரசால் பாதுகாக்க முடியவில்லை. அவர்கள் பாகுபாடு மற்றும் தீண்டாமைக்கு ஆளாக்கப் படுகிறார்கள்” என வேதனை வெளிப்படுத்தினர்.
கே.கே.வேணுகோபால்,2018_இ-ல் வழங்கிய தீர்ப்பு அரசியல் சாசனத்துக்கு உகந்ததாக இல்லை என்று கூறி வாதிட்டார். தொடர்ந்து அனைத்து தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.
இந்த நிலையில், 2018-இம் ஆண்டு மார்ச் மாதம் 20-ஆம் தேதியன்று 2 நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து, 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு நேற்று அதிரடியாக தீர்ப்பு அளித்தது.
உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு, வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்குகளில் இனி புகார் செய்தாலே, புகாருக்கு ஆளான வரை விசாரணையின்றி கைது செய்யலாம் என்ற நிலையை கொண்டு வந்துள்ளது.

-விடுதலை நாளேடு, 2.10.19

செவ்வாய், 24 செப்டம்பர், 2019

ஜாதி மறுப்பு, மத மறுப்பு திருமணங்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும்: உச்சநீதிமன்றம் கருத்து

புதுடில்லி, செப்.13 இந்து மதத் தைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட முசுலீம் இளைஞர் ஒரு நம் பிக்கையான கணவனாக, சிறந்த அன்பு செலுத்துவோ ராக இருந்திட வேண்டும். பெண்ணின் எதிர்காலத்தை மட்டுமே நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம். மத மறுப்பு அல்லது ஜாதி மறுப்பு திருமணங்களுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல என்று  வழக்கின் விசாரணையில் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள் ளது.

இப்ராகிம் சித்திக்கி என் பவர் பிறப்பால் இசுலாமிய மதத்தைச் சேர்ந்தவர். அவர் ஆரிய சமாஜ முறையைப் பின்பற்றுவோரின் குடும்பத்திலிருந்து ஒரு பெண்ணை விரும்பிய காரணத்தால், பெண்ணின் குடும்பத்தினர் கேட்டுக் கொண்டதற்கிணங்க இந்து மதத்துக்கு மாறினார். இருப்பினும் பெண்ணின் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் மதமாற்றத்தை ஒரு சர்ச் சையாகவே ஆக்கி வந்தனர்.  சத்தீஸ்கர் உயர்நீதிமன் றத்தில் பெண்ணின் குடும்பத் தின் சார்பில்  கடந்த ஆண் டில் தங்கள் மகளைக் காண வில்லை என்று வழக்கு தொடர்ந்தனர். அப்போது நீதிமன்றத்தில் அப்பெண் பெற்றோரிடமே செல்வதா கக் கூறினார். அதன்பின்னர் குடும்பத்தினருடன் அப் பெண் அனுப்பிவைக்கப்பட் டாள்.

பெண்ணை திருமணம் செய்துகொண்ட இளைஞர் உச்சநீதிமன்றத்தை அணுகி னார். உச்சநீதிமன்ற அமர் வின் தலைவர்,  தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பெண் அவள் பெற்றோருடனே இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

கடந்த ஆண்டில் பெண் பெற்றோரிடம் சென்றாலும், இப்ராகிம் மீண்டும் அப் பெண் தன்னுடன் சேர்ந்து வாழவேண்டும் என்று தன் னுடைய சட்டப் போராட் டத்தைத் தொடர்ந்தார்.

தான் விரும்பும் பெண் தன்னுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று இப்ராகிம் மீண்டும் இந்த ஆண்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணையின் போது, அப்பெண்ணும் தன் கணவனுடன் சேர்ந்து வாழப் போவதாக நீதிமன்றத்தில் கூறினாள். அதனைத் தொடர்ந்து அப்பெண்ணை இப்ராகிமுடன் செல்ல உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள் ளது.

அதன்பிறகும், பெண் ணின் தந்தை உச்சநீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தன்னுடைய மனுவில், மதம் மாறிய இப்ராகிம் மீண்டும் இசுலாம் மதத்துக்கே மாறிவிட்ட காரணத்தால், தன் மகளை திரும்பவும் தங்களுடன் அனுப்பி வைக்க வேண்டும் என்று குறிப்பிட் டிருந்தார்.

11.9.2019  அன்று நடை பெற்ற வழக்கு விசாரணையில், இப்ராகிம் மதமாற்றம் செய்துகொண்டார் என் றால், பெயர் மாற்றம் உள் ளிட்ட நடைமுறை ஆவணங் கள் குறித்து உறுதிமொழி ஆவணத்தை நீதிமன்றத்தில் அளிக்க வேண்டும் என்று   நீதிபதி அருண் மிஸ்ரா  தலைமையிலான உச்சநீதி மன்ற அமர்வு உத்தரவிட்டது.

மேலும், மத மறுப்பு திரு மணம், ஜாதி மறுப்பு திரு மணங்களுக்கு உச்சநீதிமன் றம் எதிரானதல்ல என்றும் குறிப்பிட்டுள்ளது.

திருமணத்தை எதிர்க்க வில்லை. அதே நேரத்தில் பெண்ணின் எதிர்காலம் பாதுகாக்கப்பட வேண்டும். சில நேரங்களில் இதுபோன்ற திருமணங்கள் தவறான நோக்கத்துடன் நடைபெறு கின்றன. அதனால் பெண் கள்தான் பாதிக்கப்படுகிறார் கள் என்று நீதிபதி அரண் மிஸ்ரா கூறினார். இவ்வழக்கின் விசாரணை 24.9.2019 அன்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

- விடுதலை நாளேடு, 13. 9 .19

சனி, 14 செப்டம்பர், 2019

மதம், ஜாதி அடையாளங்களை வாகனங்களில் வைத்திருந்தால் அபராதம்!



ஜெய்ப்பூர், செப். 7 ராஜஸ்தானில் வாகனங்களில் ஜாதி, மத அடை யாளங்களைக் குறிக்கும் வகையில் எழுதப்பட்டோ, அல்லது படமாக  ஒட்டியிருந்தால் அபராதம் வசூ லிக்க போக்குவரத்து காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

புதிய மோட்டார் வாகன சட்டப்படி, பல்வேறு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதிக அளவில் விபத்துகள் ஏற்படுவதால் அதனை கட்டுப்படுத்தவும், உயிரிழப் புகளை தடுக்கவும், பழைய சட்டத் தில் சில முக்கிய திருத்தத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கான திருத்த மசோதா, அண் மையில் நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது இரு அவை களிலும் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி, 2019 மோட்டார் வாகனச் சட்டத் திருத்தத்தில் ஓட் டுநர் உரிமம் புதுப்பித்தல் 3 ஆண்டு களில் இருந்து 5 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே போல், ஓட்டுநர் உரிமம் காலாவதி யாகிவிட்டால் ஒரு மாதத்திற்குள் புதுப்பிக்க வேண்டும் என்ற நடை முறை ஒரு ஆண்டாக உயர்த்தப்பட் டுள்ளது.

இதுமட்டுமல்லாமல், போக்கு வரத்து விதிகளை மீறும் நபருக்கு அபராதக் கட்டணம் முன்பு இருந் ததைவிட பன்மடங்கு அபராதம் விதிப்பது போன்றவை புதிய மோட் டார் வாகனச் சட்டத்திருத்தத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநில போக்குவரத்துத் துறையினர் வாகனங்களில் மத, சாதிய குறியீடுகள் பெயர்கள், படங்கள் இருந்தால் அந்த வாகனத்திற்கும் அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

அதன்படி, ராஜஸ்தான் மாநிலத் தில் வாகனங்களில் ஜாதி, மதம், அரசியல் சார்ந்த அடையாளங்களை ஸ்டிக்கர்களாக ஒட்டிக்கொள்ளும் நடைமுறை மக்கள் மத்தியில் உள் ளது. சிலர் அந்த அடையாளங்களைப் பயன்படுத்தி விதிமீறலில் ஈடு படுவதால் அவற்றை தடுக்க இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. இதைப்போன்ற அடை யாளங்கள் கொண்ட நம்பர் ப்ளேட் உள்ளிட்ட சில குறிப்பிட்ட இடங்களில் இருந்தால் வாகனங் களுக்கு 5 ஆயிரம் ரூபாய் வரையில் அபராதம் விதிக்கப்படும் என எச்ச ரித்துள்ளனர். மேலும் வன்முறை களை ஏற்படுத்தும் விதமாக வாசகம் எழுதியிருந்தால் வாகனம் பறிமுதல் செய்யப்படுவதாகவும் தெரிவிக் கப்பட்டுள்ளது. வாகனத்தில் பெயர், பதவி, படிப்பு போன்ற ஸ்டிக்கர் அல்லது எழுத்துகளுக்கு அபராதம் ஏதும் விதிக்கப்படாது என்றும் காவல்துறை விளக்கியுள்ளது. படங்கள் ஒட்டும் கலாச்சாரத்தை ஒழிப்பதற்கான முக்கியக் காரணமே அவை வாகன ஓட்டியின் பாது காப்பைக் கேள்விக்குறி ஆக்குவது தான் என்றும் கூறப்படுகிறது.

- விடுதலை நாளேடு, 7.8. 19

திங்கள், 9 செப்டம்பர், 2019

மரங்களில் விளம்பர பேனர் வைத்தால் சிறைத் தண்டனை



சென்னை, செப்.9  சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்கும் வகையில் மரங்களில் விளம்பர பேனர் வைத்தால் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்  எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக  அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

பெருநகர சென்னை மாநக ராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பசுமை பரப்பளவை அதிகரிக்கும் வகையில் பிரதான சாலைகள் மற்றும் உட்புறத் தெருக்களில் பல்வேறு மரங்கள் நடப்பட்டு  மாநகராட்சியால் பராமரிக் கப்பட்டு வருகிறது. இம்மரங்கள் அனைத்தும் நல்ல முறையில் வளர வளமான மண், தண்ணீர், சூரிய ஒளி ஆகியவை முக்கிய காரணி ஆகும். எனினும், இயற் கைக்கு மாறாக மரங்களில் எவ்வித சேதாரமின்றி  பாதுகாக் கப்பட வேண்டியது பொது மக்களின் கடமை ஆகும்.

இந்நிலையில், சில தனியார்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அவர்களின் நிறுவனத்தின் விளம் பரங்களை அட்டை மற்றும் பலகைகள் போன்ற தேவையற்ற பொருட்களின் மூலம் மரங்களில் ஆணி அடித்து அல்லது கயிற்றால் கட்டி விளம்பரம்  செய்து வருகிறார்கள்.

மேலும் மரங்களில் பெயின்ட் அடித்தல், மின்சார அலங்கார விளக்குகள் அமைத்தல், கம்பிகள், கேபிள் ஒயர்கள், மற்றும் இதர பொருட்கள் மரங்களில் அமைக் கப்பட்டுள்ளன. இதுபோன்ற தேவையற்ற இயற்கைக்கு மாறான  நடவடிக்கைகளினால் மரங்கள் பட்டுப்போவதுடன் அதனுடைய வாழ்நாள் குறைந்து போகும்.

எனவே, மரங்களில் அமைக் கப்பட்டுள்ள தேவையற்ற விளம் பர பலகைகள், மின்சார அலங் கார விளக்குகள், கேபிள் ஒயர்கள் மற்றும் இதர பொருட்களை 10 தினங்களுக்குள் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள்  அவர்களாகவே அகற்ற வேண்டும். தவறும்பட்சத் தில், சம்பந்தப்பட்டவர்கள் மீது சென்னை மாநகராட்சி முனிசி பில் சட்டம் 1919ஆம் ஆண்டு 326 விதியின்படி, ரூ.25 ஆயிரம் வரை அதிகபட்ச அபராதம் மற்றும் மூன்று ஆண்டுகள் வரை சிறை  தண்டனை விதிக்கப்படும் என தெரிவித்து கொள்ளப்படுகிறது. இது குறித்த புகார்களை பொதுமக்கள் 1913 என்ற இலவச தொலைபேசி எண் வாயிலாக தெரிவிக்குமாறு கேட்டுக் கொள் ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

- விடுதலை நாளேடு, 9 .9 .19

வெள்ளி, 6 செப்டம்பர், 2019

மதச்சார்பின்மை கோட்பாட்டை எந்த அரசு வந்தாலும் நீக்க முடியாது! உச்சநீதிமன்ற நீதிபதி கருத்து

புதுடில்லி, செப்.2  மதச்சார்பின்மை என்ற அம்சம்,இந்திய அரசியல் சாசனத் தின் அடிப்படைக் கட்டமைப்பாக இருப்பதால், அதில் அரசாங்கத்தால் திருத்தம் செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் தெரிவித்துள்ளார்.அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், இதுதொடர்பாக அவர் மேலும் பேசியிருப்பதாவது:

இந்திய அரசியல் சாசனத்தில், மதச்சார்பின்மை என்ற வார்த்தை முன்னுரையில் இடம்பெற்றுள்ளது. இதுதான், இந்திய அரசியல் அமைப் பின் அடிப்படைக் கட்டுமானம். அதை ஒரு பெரும்பான்மை அரசாங்கத்தால் மாற்றிவிட முடி யாது.

இதனை உச்ச நீதிமன்றத்தின் 13 நீதிபதிகள் அடங்கிய அமர்வும் உறுதி செய்துள்ளது. நெருக்கடி நிலைக்குப் பிறகு, இந்தச் சட்டத் திருத்தம் அமலுக்கு வந்தது.

எனவே, இந்த வார்த்தையை அரசியல் சட்டத்தின் முன்னுரை தவிர வேறு எந்த இடத்திலும் காணமுடியாது. சட்டப் பிரிவு 370-அய் நீக்கியதுபோல, இதை நீக்கிவிட முடியாது.அப்படியே செய்ய வேண் டுமானாலும், அரசியல் சாசனத்தில் திருத்தம்செய்ய 15 நீதிபதிகள் அடங் கிய அமர்வு வேண்டும்.

இந்தியாவின் கட்டுமானம், இறை யாண்மையுள்ள, சமதர்ம, மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசு என்பதில்தான் அடங்கியிருக்கிறது. அதனால்தான் இவற்றை நாட்டின் அடிப்படைக் கட்டுமானங்கள் என்று உச்ச நீதிமன்றம் அறிவித் துள்ளது.

ஆகவே, ஒரு பெரும்பான்மை பலம்பெற்ற அரசாலும் இதில் திருத்தம் செய்ய முடியாது. இவற்றையெல்லாம் கருதித்தான், குறிப்பிட்ட அம்சங்களை நாடாளு மன்றத்தால் திருத்த முடியும்; குறிப்பிட்ட அம்சங்களை நாடாளு மன் றத்தால் கூட திருத்த முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

நல்வாய்ப்பாக, மதச் சார்பின்மை என்பது அடிப்படை அம்சமாக இடம்பெற்றிருப்பதால், அதை ஒன்றும் செய்ய முடியாது.

இவ்வாறு குரியன் ஜோசப் பேசியுள்ளார்.

- விடுதலை நாளேடு, 2. 9 .19

திங்கள், 1 ஜூலை, 2019

சுயமரியாதை திருமணம் சட்டப்படியானதுதான் ஜாதி மறுப்புத் திருமணம் செய்தவர்களுக்கு ஊக்கத்தொகை

உயர்நீதிமன்றம் உத்தரவு


மதுரை, ஜூன் 22, -ஜாதி மறுப்புத் திருமணம்  செய்து கொண்ட மூன்று தம்பதிக ளுக்கு சாதி மறுப்புத் திருமண ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.  இதுதொடர்பாக சட்ட மன்ற முன்னாள் உறுப் பினரும் வழக்குரைஞருமான ஆர்.கிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்த தாவது:  திருநெல்வேலி மாவட்டம் கம்மங்குளத்தைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் நிவேதா வையும், சாத்தூரைச் சேர்ந்த செல்வின் தியாகராசன் என்பவர் சரண்யா கனிமொழி யையும், நாகர்கோவிலைச் சேர்ந்த நடேஷ் -மணி கண்டீஸ் வரியையும் ஜாதி மறுப்புத் திருமணம் செய்துள்ளனர். மத்திய அரசின் சமுகநீதித் துறையின் சார்பில் உள்ள டாக்டர் அம்பேத்கர் நிறு வனம் ஜாதி மறுப்புத் திருமணம் செய்பவர்களில் ஒருவர் தாழ்த்தப்பட்ட சமுகத் தைச் சேர்ந்தவர் என்றால் அந்தத் இணையருக்கு ரூ.2.5 லட்சம் ஊக்கத் தொகை வழங்குகிறது.

மேலே குறிப்பிட்டுள்ள மூன்று இணையர்களும் முறை யாக சான்றுகள் பெற்று ஊக்கத்தொகை பெறுவதற்கு மனு செய்திருந்தனர். ஆனால் அந்தத் திரும ணங்கள் சாத்திர, சம்பிரதாயங் களுடன் உள்ள இந்து முறை திருமணம் அல்ல என்று டாக்டர் அம்பேத்கர் நிறுவ னத்தால் அவர்களது கோ ரிக்கை மனுக்கள் தள்ளுபடி செய்யப் பட்டுவிட்டன.

எனவே, இவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க உத்தரவிட வேண்டுமென கோரியிருந்தார்.  இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அளித்துள்ள தீர்ப்பில் கூறியுள்ளதாவது: தமிழ்நாடு அரசு, இந்து திருமணம் சாத்திர, சம் பிரதாயங்களுடன்தான் இருக்க வேண்டும் என்பது  அவசியமில்லையென சட்டத் திருத்தம் செய்துள்ளது. மாலை மாற்றிக் கொள்வது, மோதிரம் அணிந்து கொள் வது, தாலி கட்டுவது போன்ற முறைகளில் சீர்திருத்த திரு மணம், சுயமரியாதை திரு மணமும் இந்து சட்டப் படியான திருமணம்தான் என்பதை சுட்டிக்காட்டி சம் பந்தப்பட்ட மூன்று இணை யர்களுக்கும் ஊக்கத் தொகை யை எட்டு  வார காலத்திற்குள் வழங்க வேண்டும் இவ்வாறு கடந்த ஜூன் 4- ஆம் தேதி தீர்ப்பில் கூறியுள்ளார்.

- விடுதலை நாளேடு 22. 6 .19

புதன், 29 மே, 2019

ஆதிதிராவிடர் கல்வி உதவித்தொகை அரசாணையை ரத்து செய்தது நீதிமன்றம்

சென்னை, மே 27 ஆதிதிரா விடர் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகைக் கட் டணம் தொடர்பாக கடந்த 2017-ஆம் ஆண்டு அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதி மன் றத்தில் சேலம் மாவட்டம் தலைவாசல் தேவியாகுறிச்சி யில் இயங்கும் பாரதி யார் பெண்கள் தனியார் பொறியியல் கல்லூரி மாண விகள் ஜோதிகா, அன்புச் செல்வி, அபர்ணா உள் ளிட்ட 114 பேர் தாக்கல் செய்த மனுவில், "ஆதிதிரா விட வகுப்பைச் சேர்ந்த எங் களுக்கு தமிழக ஆதிதிரா விடர் நலத்துறை சார்பில் வழங்கப்படும் கல்வி உதவித் தொகை மறுக்கப்பட் டுள்ளது.

மேலும், தமிழக அரசு கடந்த 2017-ஆம் ஆண்டு பிறப்பித்த அரசாணையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் படிக்கும் ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த மாண வர்களுக்கு மட்டுமே கல்வி உதவித்தொகை வழங்கப் படும் எனவும், அரசு கல்லூரி களில் படிக்கும் ஆதிதிராவிட மாணவர்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள கட்ட ணமே உதவித் தொகை யாக வழங்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளது.

உதவித்தொகை வழங்கும் திட்டமே ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த மாண வர்களின் நலன் கருதியே கொண்டு வரப்பட்டது.

இந்த நிலையில், தனியார் பொறியியல் கல்லூரிகளில் நிர்வாகப் பிரிவு ஒதுக்கீட்டில் படிக்கும் மாணவர்களுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை உதவித்தொகை வழங்க மறுப்பது சட்டவிரோத மாகும். எனவே கல்வி உதவித்தொகையை வழங்க உத்தரவிட வேண்டும்.

மேலும், கல்விக் கட்டணம் தொடர்பாக அரசு நிர்ணயம் செய்து கடந்த 2017-ஆம் ஆண்டு பிறப்பித்துள்ள அர சாணையை ரத்து செய்ய வேண்டும்' எனக் கோரியிருந்தனர்.

இந்த மனு நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் முன் அண்மையில் விசா ரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி, மனுதாரர்களான மாணவிகள் அனைவருக்கும் ஆதிதிராவிடர் நலத்துறை உதவித்தொகை வழங்க மறுக்கக்கூடாது என கருத்து தெரிவித்ததோடு, கல்வி உதவித் தொகை தொடர்பாக அரசு கடந்த 2017-ஆம் ஆண்டு பிறப்பித்த அரசா ணையை ரத்து செய்து உத்தரவிட்டார்.

- விடுதலை நாளேடு 27. 5 .2019

செவ்வாய், 21 மே, 2019

ஒருவருக்கு நாத்திகன் - மதச்சாராதவன் என சான்றளிக்கக் கூடாதது ஏன்? என குஜராத் உயர்நீதிமன்றம் கேள்வி?

குஜராத் மாநில உயர்நீதி மன்றத்தில் ராஜீவ் உபாத்யா (வயது 35) ஆட்டோ ரித்சா ஓட்டுநர், ஓர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு தொடர்பாக குஜராத் மாநில அரசை, குஜராத் உயர்நீதிமன்றம், ஓர் இந்திய பிரஜைக்கு ‘நாத்திகன் - மதம் சாராதவன்’ என சான்றிதழ் வழங்கக் கூடாதது, ஏன்? என மாநில அரசை, உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மனுதாரர் உபாத்யாயா, இரண்டு வருடங்களுக்கு மேலாக, மாவட்ட ஆட்சியருக்கு, தன்னை இந்து மதத்திலிருந்து, மதமாற்ற சட்டத்தின்படி தன்னை ஓர் நாத்திகன் - மதம் சாராதவன் என சான்று அளிக்கும்படி விண்ணப்பித்திருந்தார். ஆனால், மாவட்ட ஆட்சியர், உள்நோக்கத்துடன் 16.05.2017 அன்று அவருக்கு அனுமதி மறுத்ததுடன், நாட்டின் பிரஜைகள் தனது மதத்திலிருந்து வேறொரு மதத்திற்கு தன்னை மாற்றிக் கொள்ளலாம். ஆனால், தனது மதத்திலிருந்து ‘நாத்திகன் - மதச்சார்பு இல்லாதவன்’ என சான்றளிக்க ‘முகாந்திரம் இல்லை’ என்று மனுவை நிராகரித்துவிட்டார். இது தொடர்பாக குஜராத் உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள்

A.S. தவே, மற்றும் பாரேன் வைஸ்னவ் அடங்கிய அமர்வு நீதிமன்றம், மனு தொடர்பாக மாநில அரசுக்கும் மாவட்ட ஆட்சியருக்கும் விளக்கம் கேட்டுள்ளது.

மனுதாரர், தான் ஓர் கரோடா இந்து பிராமண சமூகத்தை என்றும், இந்த இனம் பட்டியல் இன பிரிவைச் சார்ந்தது என்றும், இதன் காரணமாக தன் வாழ்நாளில் சாதி துவேசத்தால் மிகவும் பாதிப்பிற்கு ஆளாகி துன்பப்பட்தாகவும் இதன் விளைவாகவே மதம் மாற்று சான்றிதழ் பெற விளைந்ததாகவும் தெரிவிக்கிறார். எனவே, மனுதாரர் மத சுதந்திர சட்டத்தின்படி மதம் மாறிக் கொள்ள அனுமதித்து இருந்தும் ஓர் ஆணோ/ பெண்ணோ தன்னை மாற்றிக் கொள்ள முழு சுதந்திரம் உண்டு. எனவே, உயர்நீதிமன்றம் மாநில அரசை மனு தொடர்பாக தேவையான திருத்தம் செய்து தர ஆணையிட வேண்டும் என்கிறார். 

                             (Times of India 19.04.2019)

-  உண்மை இதழ், 1-15.5.19

ஞாயிறு, 5 மே, 2019

மனைவியை விபச்சாரி என்று அழைத்த கணவரை கொன்றது கொலைக் குற்றம் ஆகாது - உச்சநீதிமன்றம்

மனைவியை விபச்சாரி என்று அழைத்த கணவரை கொன்றது கொலைக் குற்றம் ஆகாது என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம் மனைவியின் தண்டனையை 10 ஆண்டு களாக குறைத்து உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சில ஆண்டுகளுக்கு முன்பு பரபரப்பான கொலை சம்பவம் ஒன்று நடந்தது. கணவரை அவரது மனைவியும், கள்ளக்காத லனும் சேர்ந்து கொலை செய்தனர். பின்னர் அவரது உடலை காரில் எடுத்து சென்று காட் டுக்குள் வைத்து எரித்தனர். 40 நாட்களுக்கு பிறகு அந்த கொலை கண்டு பிடிக்கப்பட்டது. மனைவியும், கள்ளக்காதலனும் கைது செய் யப்பட்டனர். அதுதொடர்பாக மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. அதில் அவர்கள் இருவருக்கும் தண்டனை வழங்கப்பட்டது. அந்த தண்டனையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். அங்கும் தண்டனை உறுதி செய் யப்பட்டது.
இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். அந்த வழக்கு நீதிபதி கள் சந்தானகவுடர், தினேஷ் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அவர்கள் கீழமை நீதி மன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்து தண்டனையையும் குறைத்தார்கள். நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் இதை கொலைக்குற்றமாக கருத முடியாது. மரணத்தை ஏற்படுத்திய (ஹாமிசைடு) குற்றமாக கருதி தான் தண்டனை வழங்க வேண்டும் என்று கூறினார்கள். கொலை செய்யப்பட்ட நபர் தனது மனைவி யையும், மகளையும் விபச்சாரி என்று அழைத் திருக்கிறார். அப்போது அந்த பெண்ணுக்கு உதவியாக அவருடைய பக்கத்து வீட்டை சேர்ந்த கள்ளக்காதலன் வந்துள்ளார். அவர் கள் இருவரும் அவரை தாக்கி உள்ளனர். பின்னர் கழுத்தை நெரித்து கொலை செய் திருக்கிறார்கள். கணவர் தன்னையும், தனது மகளையும் விபச்சாரி என்று அழைத்ததால் கடும் ஆத்திரம் ஏற்பட்டு கணவரை தாக்கி இருக்கிறார்.
நமது சமுதாயத்தில் தன்னை விபச்சாரி என்று அழைப்பதை எந்த பெண்ணும் ஏற்றுக்கொள்ள மாட்டார். அந்த நிலை யில் கணவரே தன்னை விபச்சாரி என்று அழைத்ததோடு, தனது மகளையும் விபச்சாரி என்று கூறியதால் கடுமையான ஆத்திரம் அவருக்கு ஏற்பட்டு இருக்கி றது. திடீர் ஆவேசத்தால் அவர் கணவரை கொலை செய்து விட்டார். தன்னை விபச்சாரி என்று அழைத்த கணவரை ஆத்திரத்தில் அவர் கொலை செய்திருப் பதால் இதை கொலைக்குற்றமாக கருத முடியாது. அதே நேரத்தில் இதை மர ணத்தை ஏற்படுத்திய குற்றமாக கருதி அதன் அடிப்படையில் தண்டனை வழங்க வேண்டும். அந்த வகையில் கீழமை நீதி மன்றம் அளித்த தண்டனையை குறைத்து அவர்களுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கப்படுகிறது. இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது
- சட்டக்கதிர், ஏப்ரல் 2019
-விடுதலை ஞாயிறு மலர்,20.4.19

விருப்பத்துடனான உறவு பலாத்காரம் ஆகாது: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

ஆணும், பெண்ணும்  மனம்  விரும்பி பாலியல் உறவு கொண்டால், அது பலாத்காரம் ஆகாது என உச்ச நீதிமன்றம்  தீர்ப்பு அளித்துள்ளது. மகாராட்டிராவை சேர்ந்த நர்ஸ் ஒருவர், மருத்துவர் ஒருவர் தன்னை பலாத்காரம்  செய்து விட்டதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். திருமணம்  செய்து கொள்ளாமல் அவருடன் இணைந்து வாழ்ந்தபோது, இந்த பலாத்கார  சம்பவம்  நடந்ததாக மனுவில் அவர் குறிப்பிட்டு இருந்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், வயதுக்கு வந்த ஆணும், பெண்ணும்  உடன்பட்டு உறவு வைத்துக் கொண்டால் அது பலாத்காரமாகவும், பாலியல் வன்கொடுமையாகவும்  கருதப்படாது. சில காலமாக இருவருக்கும்  உறவு நீடித்து வந்தாலும், அது பலாத்காரம்  இல்லை. பாலியல் பலாத்காரத்துக்கும், சம்மதத்துடன் கூடிய பாலியல் உறவுக்கும் இடையே அதிக வேறுபாடு இருக்கிறது. ஆணும்  பெண்ணும்  சேர்ந்து வாழும் போது திருமணம் செய்து கொள்வதாக வாக்கு தருபவர், அதை செய்யத் தவறும் போது அதை பாலியல் பலாத்காரமாக எப்படி கருத முடியும்? என கேள்வி எழுப்பினர். மேலும், நர்ஸ் மனுவை தள்ளுபடி செய்தனர்.


- நன்றி: சட்டக்கதிர் (மார்ச் -2019)
- விடுதலை ஞாயிறு மலர்,30.3.19

புதன், 1 மே, 2019

ஜாதி மறுப்பு திருமணத்தில் பிறந்த குழந்தைக்கு தாயின் ஜாதியை பயன்படுத்தலாம் மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

மும்பை, ஏப்.23 ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதிக்கு பிறந்த குழந்தைக்கு, தாயாரின் ஜாதியை பயன்படுத்தலாம் என்ற பரபரப்பான தீர்ப்பை மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் பிரிவு வழங்கி இருக்கிறது.
மகாராட்டிராவை சேர்ந்த அஞ்சால் பட்வாய்க் (19) என்ற எம்பிபிஎஸ் மாணவி, தனது தந்தையின் ஜாதிக்கு பதிலாக தாயாரின் ஜாதி பெயரை பயன்படுத்த அனுமதிக் கோரி மாவட்ட ஜாதி சரிபார்ப்பு கமிட்டியிடம் விண்ணப்பித்து இருந் தார். ஆனால், தந்தையின் ஜாதியை வைத்தே மாணவியின் ஜாதியை முடிவு செய்ய முடியும் என்று கமிட்டி கூறியது. இதை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் அஞ்சால் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு நீதிபதிகள் சுனில் சுக்ரே, புஷ்பா கனேடிவாலா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதை விசா ரித்து நீதிபதிகள் நேற்றுமுன்தினம் அளித்த, வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பில், இந்தியாவில் ஆணாதிக்க சமுக அமைப்பு முறை உள்ளது. இப்போது நிலைமை மாறி வருகிறது. நமது அரசமைப்புச் சட்டம் கூட சமத்துவம், நீதி மற்றும் சகோதரத்துவம் அடிப்படையில்தான் உள்ளது. ஆண் மற்றும் பெண்ணை நாம் சமமாகவே பாவிக்கிறோம். எனவே, ஜாதி மறுப்பு திருமண தம்பதிக்கு பிறந்த குழந் தைகள், தனது தாயாரின் ஜாதியை பயன்படுத்தலாம் என்று தெரிவித்தனர்.
மாணவி அஞ்சாலும், அவருடைய தாயார் பாரதியும் நாக்பூரில் உள்ள காஞ்சிபேத் பகுதியில் வசித்து வரு கிறார்கள். பாரதி இதர பிற்படுத்தப் பட்டோர் பிரிவை சேர்ந்தவர். அவர் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஒரு வரை திருமணம் செய்தார். ஆனால், அஞ்சால் ஒரு வயது குழந்தையாக இருக்கும்போது தந்தை அந்த குடும் பத்தை அனாதையாக விட்டுச் சென் றார். இந்த நாள் வரையில் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. பாரதி பல்வேறு வேலைகளை செய்து கஷ் டப்பட்டு தனது மகளை வளர்த்து ஆளாக்கினார். அஞ்சாலுக்கு மெரிட் அடிப்படையில் எம்பிபிஎஸ் சீட் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 - விடுதலை நாளேடு, 23.4.19