சனி, 18 மே, 2024

மருத்துவக் காப்பீட்டுக்கான உச்ச வயது வரம்பு நீக்கம்



விடுதலை நாளேடு
Published April 30, 2024

புதுடில்லி,ஏப்.30- மருத்துவக் காப்பீடு (பாலிசி) எடுப்பதற்கான உச்ச வயது வரம்பு 65-அய் இந்திய காப்பீட்டு ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம் (அய்ஆர்டிஏஅய்) ரத்து செய்துள்ளது.
முந்தைய வழிகாட்டுதலின்படி, ஒருவர் 65 வயது வரை மட்டுமே புதிய மருத்துவ காப்பீட்டை (பாலிசி) எடுக்க முடியும். ஆனால், புதிய நடைமுறைபடி, வயது வித்தியாசமின்றி யார் வேண்டு மானாலும் புதிய மருத்துவக் காப் பீட்டை எடுத்துப் பலன் அடையலாம்.
மருத்துவக் காப்பீட்டுக்கான உச்ச வயது வரம்பு நீக்க நடைமுறை கடந்த ஏப்.1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது என்று அய்ஆர்டிஏஅய் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரிலையன்ஸ் பொது காப்பீட்டு நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரி ராகேஷ் கெயில் கூறிய தாவது:
“குறிப்பிட்ட வயதை தாண்டிய மூத்த குடிமக்கள் மருத்துவக் காப்பீடு பெறுவதில் இருந்த தடைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை மூலம், அதி களவில் பாதிப்புக்குள்ளாகும் முதிய வர்கள் வயது அடிப்படையிலான தடைகளின்றி முக்கிய சுகாதார சேவையை அணுகவும், நிதிப் பாதுகாப்பு அளிக்கவும் உதவும். இந்த மாற்றத்தால் காப்பீட்டு சந்தைகளில் நுகர்வோருக்கு மேம்பட்ட சலுகைகள் மற்றும் புதிய சேவைகள் கொண்டுவரப்படும்.” எனத் தெரிவித்துள்ளார்.
மணிப்பால் சிக்னா மருத்துவக் காப்பீட்டின் தலைமை நிர்வாக அதிகாரி பிரசுன் சிக்தர் கூறுகையில், “வயது வரம்பு ரத்து செய்யப்பட்டது மூத்த குடிமக்களுக்கு முழுமையான மன அமைதியை அளிக்கும். சமீபத்தில் நாங்கள் கொண்டு வந்த ‘ப்ரைம் சீனியர்’ திட்டம் மூலம் 91ஆவது நாள் முதல் ஏற்கெனவே இருக்கும் நோய்களுக்கு கவரேஜ் வழங்கி வருகிறோம்.
அதிகரிக்கும் முதியவர்களுக்கான தேவைகள் மற்றும் மருத்துவ பண வீக்கத்தை புரிந்து கொண்டு வரப்பட்ட முக்கிய மாற்றத்தின் மூலம் வயதான வர்களின் உடல்நலம் மற்றும் நல வாழ்வை பாதுகாப்பதில் எங்களின் ஆதரவை வழங்குவதற்கான வாய்ப்பாக கருதுகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

பாலிசி பஜார் மருத்துவக் காப்பீட்டு நிறுவனத்தின் வணிக தலைவர் சித் தார்த் சிங்கால் கூறுகையில், “வயது வரம்பு நீக்கப்பட்டாலும் காத்திருப்பு காலம் போன்ற கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகள் இருக்கும். புதிய பாலிசி பெறும் நபர்கள் அறை வாடகை, சிகிச்சை மீதான கட்டுப்பாடுகள், பிற கட்டண கவரேஜுகளை துல்லியமாக புரிந்து கொள்ள வேண்டும்.
வயதானவர்களின் தேவைகளுக்கு ஏற்ப புதுமைகளை காப்பீடு நிறுவனங் கள் மேம்படுத்தும் என்று அவர் தெரிவித்தார்.

காப்பீட்டு திட்டத்தை
எவ்வாறு தேர்வு செய்வது?
ஒரு திட்டத்தை தேர்வு செய்வதற்கு முன்பு காப்பீட்டு கட்டணத் தொகை, கவரேஜ் தொகை, காத்திருப்பு காலம், திட்டத்தில் பயன்பெறக் கூடிய நோய் கள் உள்ளிட்டவை தெளிவாக கவனிக்க வேண்டும்.
குறுகிய காத்திருப்பு காலங்கள் கொண்ட திட்டங்களை தேர்வு செய் வது மிக அவசியமான ஒன்று. அதிக கட்டணம் செலுத்துவதன் மூலம் காத் திருப்பு காலங்கள் குறைவாக இருக்கும் திட்டங்களும் நிறுவனங்களால் வடி வமைக்கப்பட்டிருக்கும். அதையும் கருத் தில் கொள்ள வேண்டும்.

நோ-கிளைம் போனஸ் போன்ற பல் வேறு அம்சங்கள் கொண்ட திட்டத்தை தேர்வு செய்ய வேண்டும். இறுதி செய் வதற்கு முன்னதாக இணையத்தில் பிற நிறுவனங்களின் திட்டத்துடன் ஒப் பிட்டு பார்க்க வேண்டும்.
கூடுதல் கவரேஜ் தேவைப்படும் போது டாப்-அப் செய்து கொள்ளும் வகையிலான திட்டங்களை கருத்தில் கொள்ள வேண்டும். முதியவர்கள் ஒரு ஆண்டுக்கான தொகையை முழுமை யாக செலுத்துவதில் சிரமம் இருப்பின், காலாண்டு அல்லது மாதாந்திர திட் டங்களை எடுத்துக் கொள்ளலாம்.
முதியவர்களுக்கான திட்டங்களில் நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தத்துக் கான சிகிச்சைகள், வீட்டுக்கே வந்து சிகிச்சை அளிக்கும் அம்சங்கள் மற்றும் நர்சிங் சேவைகள் போன்றவற்றை கருத் தில் கொள்ள வேண்டும்.

மதச்சார்பற்ற நடவடிக்கையை நோக்கி…‘மதமற்றவர்’ என தனக்கு சான்றளிக்க உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த பெண்



விடுதலை நாளேடு
Published April 30, 2024

அண்மையில் உச்சநீதிமன்றத்தில் தன்னை மதமற்றவர் என தெரிவிக்கக் கோரியும், அதன் அடிப்படையில் தனது பெற்றோரின் சொத்தில் தனக்குள்ள வாரிசு உரிமை வேண்டியும் நீதி வழங்கிடக் கோரி கேரளாவிலிருந்து ஒரு பெண் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அரசமைப்புச் சட்டம் தனக்கு வழங்கி யுள்ள அடிப்படை உரிமைகளுள் ஒன் றான மதத்தில் நம்பிக்கை கொள்வதற்கும், (அ) மதத்தின் மீது நம்பிக்கையற்று இருப்ப தற்குமான உரிமை மறுக்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு மூலம் வழக்கு தொடர்ந்துள்ளார்.

கேரள மாநிலம் ஆலப்புழை மாவட் டத்தில் வசித்து வரும் பி.எம்.ஷபியா, தான் ஒரு முஸ்லிம் குடும்பத்தில் பிறந் திருந்தாலும் அந்த மதத்தைப் பற்றிய நம்பிக்கை எதுவும் தனக்கு இல்லை என்பதால் மதச்சார்பற்ற சட்டங்கள்தான் (ஷரியத் சட்டம் அல்ல) தனக்குப் பொருந்த வேண்டும் என உரிமையினை வழக்கு தொடுத்து கோரியுள்ளார்.
மனுதாரர் சார்பாக வழக்காடிய வழக்குரைஞர் குறிப்பிட்டுள்ளதாவது: மதச்சார்பற்ற அடிப்படைக் கோட்பாடுகள் அனைத்து மதங்களையும் சமமான அளவில்தான் கருதுகின்றன. அதன்படி எந்த ஒரு தனி நபரும் மதத்தின் மீது நம்பிக்கை வைப்ப தற்கும் நம்பிக்கையற்று இருப்பதற்கும் முழு சுதந்திரம் உண்டு என ஏற்கெனவே உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்றம் தெரிவித்த கருத்தின் படி, மத நம்பிக்கையற்று இருப்பதால், ஒரு நபர் தனக்குள்ள வம்சாவளி சார்ந்த அல்லது இதர குடிமைச் சட்டங்களின் மூலம் கிடைக்கக்கூடிய வாரிசு உரிமை களில் தகுதியிழப்பு எழக்கூடாது என தெரிவித்துள்ளார்.

ஒரு மதத்தின் மீது நம்பிக்கையற்று இருப்பவர்களுக்கு நாட்டின் மதச்சார் பின்மை சட்ட வடிவங்களுள் ஒன்றான இந்திய வாரிசுரிமைச் சட்டம் 1925  (The Indian Succession Act) பொருந்தும்; உயில் மூலம் பெறப்படும் சொத்துரி மைக்கும், உயில் இல்லாமல் வாரிசு களுக்கான சொத்துரிமைக்கும் இந்த சட்டம் பொருந்தும் எனவும் மனுதாரரின் வழக்குரைஞர் வாதிட்டார்.
மனுதாரர் தனது வேண்டுதலில், இஸ்லாம் நமபிக்கையிலிருந்து தான் விலகி இருப்பதால் தனது சமுதாயத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் தனது பெற்றோர் வழி சொத் துக்கு தான் உரிமை கோர முடியாத நிலையில் உள்ளதாகத் தெரிவித்து உள்ளார்.

தான் முஸ்லிம் தனி நபர் சட்டத் தின்படி நடக்க வேண்டியவர் அல்லர் என்றும், தனது உறுதியேற்பின்படி, தனக்கு சான்றிதழ் அளிக்க வேண்டி உள்ளார். அப்படிப்பட்ட சான்றிதழ் வழங்கிட சட்டத்தில் இடமில்லை என்ப தால் சட்டத்தில் உள்ள இடைவெளியினை உச்சநீதிமன்றம்தான் தங்கள் அறிவார்ந்த சட்ட விளக்கங்களால் பூர்த்தி செய்து நீதி வழங்கிட வேண்டும்.
சட்டத்தில் உள்ள வெற்றிடத்தால் மனுதாரர் தனது பெற்றோர் வழி சொத்துக்களைப் பெற்றிட “மதமற்றவர்”, “ஜாதியற்றவர்” என சான்றிதழினை உரிய அதிகாரியிடம் பெற்றிட தடை எதுவும் இருக்கக் கூடாது.

நிறைவாக மனுதாரரின் வழக்குரை ஞர் தனது வாதுரையில், “இப்படிப்பட்ட நிலையிலுள்ள எனது மனுதாரருக்கு அரசமைப்புச் சட்டத்தின் கூறு 25 வழங் கியுள்ள மத நம்பிக்கை கொள்வதற்கும், மத நம்பிக்கையற்று இருப்பதற்கும் உள்ள அடிப்படை உரிமை நேரடியாக மறுக்கப்பட்டிருக்கிறது. எனவே நீதி வழங்கப்பட வேண்டும்” என தெரிவித்தார்.
வாதுரையை கேட்ட உச்சநீதிமன்றம், ஒன்றிய மற்றும் கேரள அரசுகளுக்கு தாக்கீது அனுப்பிட உத்தரவு பிறப்பித்து உள்ளது. வழக்கின் அடுத்த நடவடிக்கை யாக ஜூலை மாதத்திற்கு விரிவான விவா தத் திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தொகுப்பு: வீ.குமரேசன்