புதன், 25 அக்டோபர், 2023

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

  

புதுடில்லி,  ஆக.22 கோயில்களில் ஆகமம் மற்றும் பூஜை முறைகளில் தேர்ச்சி பெற்றவர்களில்  எந்த ஜாதியைச் சேர்ந்தவரை வேண்டுமானாலும் அர்ச்சகராக நியமனம் செய்யலாம் என்று  சென்னை உயர்நீதிமன்றம் 26.06.2023 அன்று  உத்தரவிட்டது.  

இந்த உத்தரவிற்குத் தடைகோரி சேலம் சுகவனேஸ்வரர் கோவில் சுப்பிரமணிய குருக்கள்  தொடர்ந்த வழக்கை இன்று   (22.8.2023) தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு தொடரும்  என்றும்,  ஆகமங்களைப் பயின்ற யார் வேண்டுமா னாலும்  அர்ச்சகர் ஆகலாம்  என்றும்  அதிரடியாக உத்தரவிட்டுள்ளது .

சென்னை உயர்நீதிமன்ற (மதுரை கிளை) தீர்ப்பை ரத்து செய்து உச்சநீதிமன்றம் அதிரடி - சுயமரியாதைத் திருமணங்களுக்குப் பொது அறிவிப்பு தேவையில்லை!

 

 4

புதுடில்லி, ஆக. 30 - "இந்துத் திருமணச் சட்டம் 1955-இன் படி, வழக்குரைஞர்களின் அலுவலகத் தில் செய்யப்படும் திருமணங்கள் செல்லாது" என்ற சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் 28.8.2023 அன்று ரத்து செய்தது.

வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் நபரின் அடிப்படை உரிமையை நிலைநிறுத்தும் வகையில், இந்த தீர்ப்பை வழங்கியிருக்கும் நீதிபதிகள் எஸ்.ரவீந்திர பட், ரவிந்த் குமார் அடங் கிய உச்ச நீதிமன்ற அமர்வு, “சுயமரியாதைத் திருமணத்திற்கு பொது அறிவிப்பு தேவை என்ற அனுமானத்தின் அடிப்படையிலான சென்னை உயர்நீதிமன்றத்தின் பார்வை குறுகியது” என்றும் குறிப்பிட்டுள்ளது.

இந்துத் திருமணச் சட்டத்தில், தமிழ்நாடு அரசு கொண்டுவந்த சட்டத்திருத்தம் மூலம் உட்பொதிக்கப்பட்ட பிரிவு 7A-, சுயமரியாதைத் திருமண முறையை அடிப்படையாகக் கொண் டது. இந்த பிரிவின்படி, இரண்டு இந்துக்கள் சடங்குகளைப் பின்பற்றாமல் அல்லது ஒரு மதத் தலைவரால் நிச்சயிக்கப்படாமல், தங்கள் நண்பர் கள் அல்லது உறவினர்கள் அல்லது பிற நபர்கள் முன்னிலையில் திருமணத்தை அறிவித்து, திருமணம் செய்து கொள்ளலாம். இது அய்ம்ப தாண்டுகளுக்கும் மேலாக நடைமுறையிலும் உள்ளது.

ஆனால், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அண்மையில் வழங்கிய ஒரு தீர்ப்பு, இந்த நடைமுறைக்கு எதிராக அமைந்தது.

"வழக்குரைஞர்கள் செய்துவைக்கும் திரு மணங்கள் செல்லாது; என்றும் சுயமரியாதைத் திருமணம் (சுயமரியாதைத் திருமணம்) இரகசி யமாக நடத்தப்பட முடியாது" என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அமர்வு, கடந்த 2014-ஆம் ஆண்டு தீர்ப்பு ஒன்றை வழங்கியிருந்தது. இந்தத் தீர்ப்பைப் பின்பற்றியே, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை யும் கடந்த 2023 மே 5 அன்று தீர்ப்பு வழங்கியது.

இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் இளவரசன். இவர் 2023 ஏப்ரலில் திருப்பூரில், வழக்குரைஞர்கள் முன்னிலையில் தனது தோழியை சுயமரியாதை திருமணம் செய்து கொண்டார். ஆனால், மணப்பெண்ணின் பெற் றோர் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, “வழக்கு ரைஞர்கள் முன், அவர்களின் அலுவலகத்தில் நடந்த திருமணம் செல்லாது" என்று தீர்ப்பு வழங்கியது.

மேலும், "மனுதாரருக்கு சுயமரியாதை திரு மணம் நடந்ததாக சான்றளித்த வழக்குரைஞர்க ளிடம் பார் கவுன்சில் மூலமாக விளக்கம் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும்; "இது போன்ற திருமணம் ஏதாவது நடந்ததாக சான் றிதழ் வழங்கியிருந்தால் அவர்களுக்கும் நோட் டீஸ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் தீர்ப்பை எதிர்த்து, இளவரசன் உச்ச நீதிமன்றத்தில், மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் எஸ். ரவீந்திர பட் மற்றும் அரவிந்த் குமார் அடங்கிய அமர்வு விசாரித்து திங்களன்று தீர்ப்பு வழங்கியது.

அதில், இந்துத் திருமணச் சட்டத்தின் பிரிவு 7கி-இன் (தமிழ்நாட்டில் பொருந்தும்) படி, சுயமரி யாதை மற்றும் சீர்திருத்த திருமணங்களுக்கு சிறப்பு வழிவகை செய்யப்பட்டு உள்ளது. நாக லிங்கம் எதிர் சிவகாமி வழக்கிலும் (2001) "7 ஷிசிசி 487' மூலம் பிரிவு 7கி' உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது; எனவே, இதன் அடிப்படை யிலான சுயமரியாதைத் திருமணத்திற்கு பொது அறிவிப்பு தேவையில்லை, என்று முக்கியமான உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது. "ஒவ்வொரு திருமணத்திற்கும் பொது நிச்சய தார்த்தம் அல்லது பொது அறிவிப்பு தேவை என்ற சென்னை உயர் நீதிமன்றம் பார்வை, அனுமானத்தின் அடிப்படையில் அமைந்ததாக வும்; திருமணம் செய்து கொள்ள விரும்பும் தம்பதிகள், குடும்ப எதிர்ப்பு அல்லது தங்களின் பாதுகாப்பு குறித்த பயம் போன்ற பல்வேறு காரணங்களால் பொது அறிவிப்பை வெளியிடுவதைத் தவிர்க்கலாம்; அதையும் மீறி, இது போன்ற சந்தர்ப்பங்களில், பொது அறிவிப்பைச் செயல் படுத்துவது உயிர்களை ஆபத்தில் ஆழ்த்தலாம்.

வயது வந்த இருவர்- சுயமாக விருப்பப்பட்டு முடிவெடுக்கும்போது, அவர்களுக்கு குடும்பத்தி லிருந்து கொடுக்கப்படும் பிற அழுத்தங்களைக் கற்பனை செய்வது கடினம் அல்ல. அதனை நீதிமன்றங்கள் பார்க்காமல் விடுவது, அரசியல மைப்பின் 21-ஆவது பிரிவு வழங்கும்-வாழ்க் கைத் துணையை தேர்ந்தெடுக்கும் அடிப்படை உரிமையை மீறுவதாகிவிடும்" என்றும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், "வழக்குரைஞர்கள் பல திறன்களைக் கொண்டுள்ளனர். அவர்கள் நீதிமன்றத்தின் அதி காரிகளாக, ஆலோசகராக, வழக்குரைஞராகச் செயல்படும்போது, திருமணங்களை முன்வந்து நடத்திவைக்கக் கூடாது. அதேநேரம் அவர்கள் தனிப்பட்ட முறையில் நண்பர்கள், உறவினர்கள், சாட்சிகள் என்ற அடிப்படையில் திருமணங்களில் பங்கு வகிக்க உரிமை உண்டு" என்றும் உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவையும் ரத்து செய்துள்ளது.

வழக்குரைஞர்களும் சுயமரியாதைத் திருமணத்தை நடத்தி வைக்கலாம்'' -உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது!

 

 

நூறு ஆண்டுகளுக்கு முன்னர் பெரியார் சொன்னார் - உச்சநீதிமன்றம் இன்று வரவேற்றுத் தீர்ப்பளிக்கிறது!

பெரியார் கொள்கை ஒரு ''விஞ்ஞானம்'' - இறுதியில் அதுதான் வெல்லும்!

1

சுயமரியாதைத் திருமணங்களை வழக்குரை ஞர்கள் நடத்தி வைக்கலாம் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பினை வரவேற்கிறோம்.  தந்தை பெரியார் நூறு ஆண்டுகளுக்கு முன் சுயமரியாதைத் திரு மணத்தை அறிமுகப்படுத்தினார் -  இடையில் கூடத் தடை ஏற்பட்டாலும், நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் உச்சநீதிமன்றம் அதனை அங்கீகரிக்கிறது; காரணம், பெரியார் ஒரு விஞ்ஞானம் - அதுவே இறுதியில் வெல்லும் என்று  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

‘‘நாட்டில் நடைபெறும் சுயமரியாதைத் திருமணங் களுக்குப் பொது அறிவிப்புத் தேவையில்லை.''

‘‘இந்து திருமணச் சட்டம் 1955-இன்படி, வழக்குரைஞர் களின் அலுவலகத்தில் செய்யப்படும் திருமணங்கள் செல்லாது  (சில மாதங்களுக்குமுன் வந்த சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு). தற்போது வழக்குரைஞர்கள் அலுவலகத்திலும் சுயமரியாதைத் திருமணத்தை நடத்திக் கொள்ளலாம்'' என்று மிக அருமையான, முற் போக்கான, மனித சமத்துவம், மனிதநேயத்துடன் கூடிய தீர்ப்பினை உச்சநீதிமன்றம் வழங்கியிருப்பது மிகவும் பாராட்டி வரவேற்கத்தக்கதாகும்.

தந்தை பெரியாரால் உருவாக்கப்பட்ட சுயமரியாதைத் திருமணம்!

தந்தை பெரியார் என்ற பகுத்தறிவுப் பகலவன் உருவாக்கிய வாழ்க்கை இணையேற்பு விழா - எளிய முறையில் இரண்டு சாட்சியங்களோடு நடத்திக் கொள்ள லாம். ஆண் - பெண் சமத்துவம், சம உரிமை, சமவாய்ப்பு, நட்பாளர்களாக வாழ்விணையர்கள், ஜாதி, மதச், சடங்குகளுக்கு இடமில்லாத ஒருவித அன்பும், புரிதலும் மிக்க எளிய மணமுறைதான் அமைதிப் புரட்சி பூத்துக் குலுங்கிக் காய்த்துக் கனிந்த சுயமரியாதைத் திருமண முறை.

இந்தத் திருமண முறை செல்லாது என்று 1953 இல் சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் (உயர்ஜாதிப் பார்ப்பனர்கள்) தந்தை பெரியாரே சாட்சியம் கூறிய வாழ்க்கை ஒப்பந்த நிகழ்ச்சியை - பல ஆண்டுகளுக்குப் பிறகு செல்லாது என்று தீர்ப்பு வழங்கினர். (தெய்வானை ஆச்சி க்ஷிs சிதம்பரம் வழக்கு).

அத்தீர்ப்பை சற்றும் பொருட்படுத்தாமலேயே பல்லாயிரக்கணக்கானத் திருமணங்கள் - சுயமரியாதைத் திருமணங்களாகத் தொடர்ந்து நடந்தே வந்தன!

1967 இல் சுயமரியாதைத் திருமணத்துக்கு 

சட்ட வடிவம் கொடுத்தார் அறிஞர் அண்ணா

1967 இல் பதவியேற்ற அறிஞர் அண்ணா தலைமை யிலான அமைச்சரவை சுயமரியாதைத் திருமணம் சட்டப்படி செல்லும் (இந்துத் திருமணச் சட்டத் திருத்தம் 7Aஎன்ற புதிய பிரிவு இணைப்புமூலம்) என ஒருமனதாக சட்டமன்றத்தில் புதிய சட்டம் நிறைவேற்றி, அதற்குப் பின்னோக்கிய கால அதிகாரத்தையும் (with retrospective effect) அளித்து தந்தை பெரியார் மகிழ, அவருக்கே காணிக்கையாக்கி, அறிஞர் அண்ணாவின் தி.மு.க. அரசு செய்து புதிய வரலாறு படைத்தது!

அதன்பின்னர், சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருவர் அத்திருத்தம் செல்லாது என்று மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்குப் போட்டார்; அதனையும் இரு நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்து, சுயமரியாதைத் திருமணம் செல்லுபடியாகும் என்ற சட்டத் திருத்தத்தை ஏற்றே அருமையான தீர்ப்பினை வழங்கினர்!

இந்தியாவிலேயே எங்கும் இல்லாத புதுமை, புரட்சி, பொதுக்கூட்ட மேடைகளில்கூட எளிய முறையில் இத்திருமணம் நடைபெற்றது - சிக்கனமும், எளிமையும் கலந்த முறையில். இப்போது 70 ஆண்டுகளில் என்னே வெற்றியின் விரிவு - வெளிச்சம்!

வழக்குரைஞர்களும் சுயமரியாதைத் திருமணத்தை நடத்தலாம் என்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது!

2

திருப்பூரில் 2023 இல் வழக்குரைஞர்கள் முன்னிலை யில் நடைபெற்ற சுயமரியாதைத் திருமணம் செல்லாது என்று தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை -உச்சநீதிமன்ற மேல்முறையீட்டில், ‘‘வழக்குரைஞர்கள் அலுவலகத்தில் நடைபெற்ற திருமணம் செல்லும்; சுயமரியாதைத் திருமணத்தை எங்கும், எவர் முன் னிலையிலும் நடத்திக் கொள்ளலாம்'' என்ற மிக முற் போக்கான தீர்ப்பை மாண்பமை நீதிபதிகள் ரவீந்திர பட், அரவிந்த் குமார் ஆகியோர் மிக அருமையாக அர சமைப்புச் சட்ட 21 ஆவது பிரிவின்படி சிறப்பான தீர்ப்புத் தந்துள்ளனர்.

‘‘வயது வந்த இருவர், சுயமாக விருப்பப்பட்டு முடிவெடுக்கும்போது, அவர்களுக்குக் குடும்பத்தி லிருந்து கொடுக்கப்படும் பிற அழுத்தங்களைக் கற்பனை செய்வது, கடினம் அல்ல; அதனை நீதிமன்றங்கள் பரிசீலிக்காமல் விடுவது, அரசமைப்புச் சட்டத்தின் 21 ஆவது பிரிவு வழங்கும் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் அடிப்படை உரிமையை மீறுவதாகும்'' என்று இந்த நீதிபதிகள் பழைமையின் - சனாதனத்தின் மண்டையில் ஓங்கி நீதியைத் தட்டி தட்டித் தந்துள்ளனர்!

பெரியார் அன்று சொன்னார் - 

உச்சநீதிமன்றம் இன்று சொல்லுகிறது!

இதை சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பே தந்தை பெரியார், அவருக்கே உரிய பாணியில், ‘‘வயது வந்த ஒரு ஆணும் - பெண்ணும் ஒருவரை ஒருவர் விரும்பி முடிவு செய்யும்போது, அதில் மூன்றாவது நபர் குறுக்கிடுவது அதிகப்பிரசங்கித்தனம் - ஆணவம் கலந்த அகம்பாவ எஜமானத்தனம்'' என்று கூறி, சுயமரியாதைச் சூடு போட்டார்!

இன்று உச்சநீதிமன்றம் சட்டப்பூர்வமாக இதனைக் கூறும் அளவுக்கு பெரியார் கொள்கை வெற்றி பெற்று தகத்தகாய ஒளிவீச்சுடன் உலா வருகிறது!

‘‘எனது கொள்கை ஒருபோதும் தோல்வி அடையாது; வேண்டுமானால், வெற்றிகள் காலதாமதம் ஆகலாம்'' என்றார் தந்தை பெரியார்.

அது எவ்வளவு சரியான முன்னோட்ட முத்தான பிரகடனம் பார்த்தீர்களா? அதுபோலவே,

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் - நிறைவேற்றம்!

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் பிரச்சினை 55 ஆண்டுகளான நிலையில், உச்சநீதிமன்றத்தின் அண்மைக்கால இரண்டு தீர்ப்புகள் - கடந்த வாரத்தில் தொடர்ந்து, ‘‘ஜாதி அடிப்படையில் அர்ச்சகர் நியமனம் செல்லாது'', ‘‘அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்கள் - தகுதியுடன் நியமனம் செய்யப்படுவது தொடருவதற்கு எத்தடையும் இல்லை'' என்று கூறி, சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர் களது ‘திராவிட மாடல்' ஆட்சியில், அரை நூற்றாண்டாக சட்டப் போராட்டத்திலிருந்த ஜாதி - தீண்டாமை ஒழிப் புக்கான இந்த  அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்கள் நியமன வெற்றி!

பெரியார் கொள்கை ஒரு விஞ்ஞானம் - 

அதுவே இறுதியில் வெல்லும்!

தந்தை பெரியாரின் வெற்றி!

திராவிட இயக்கத்தின் வெற்றி!

நூற்றாண்டு விழா நாயகர் கலைஞரின்

முழு வெற்றியாக இப்போது ஜொலிக்கிறதே!

‘காரிருளால் சூரியன்தான் மறைவதுண்டோ?

பேரெதிர்ப்பால் பெருங்கொள்கை (திராவிடம்) தோற்பதுண்டோ?'

சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு! - புரிகிறதா?

இதனை ஊர் அறிகிறது!

உலகம் அறிந்து மகிழ்கிறது, வரவேற்கிறது!

எனவேதான், சனாதனம் அலறுகிறது;

ஆரியம் பதறுகிறது!

பெரியார் - திராவிடர் கொள்கை என்றும் வெல்லும்!

காரணம், இது ஒரு ‘‘விஞ்ஞானம் - மெய்ஞானம்!''

உண்மை அறிவு - அனுபவம் கலந்த வெற்றி!

அறிவியல் - உண்மை அறிவும் சொத்து!

புரிந்துகொள்வீர்! பகிர்ந்து கொள்வீர்!!


கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
30.8.2023