புதன், 6 ஜனவரி, 2021

வாரிசு அடிப்படையில் பணி மகனுக்கு மட்டுமா?

உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

சண்டிகர்,டிச.20 திருமணமான மகளுக்கும் கருணை அடிப்படை யில் அரசு வேலை பெற உரிமை உண்டு என்று பஞ்சாப்-_அரியானா மாநில உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

பஞ்சாப் மாநில காவல்துறை யில் தலைமைக்காவலராக பணி புரிந் தவர் கஷ்மீர் சிங். இவர் கடந்த 2018ஆம் ஆண்டு பணியில் இருக் கும்போதே, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந் தார்.  அவருக்கு  அமர்ஜித் என்ற பெயரில் ஒரே ஒரு மகள் மட்டுமே இருந்தார். அவ ருக்கும் திருமணம் முடிந்து விட் டது. இருந்தாலும், அந்த பெண், தனது தந்தையின் வேலையை கருணை அடிப் படையில் தனக்கு ஒதுக்குமாறு மாநில அரசுக்கு வேண்டுகோள் வைத்தார். ஆனால், அதை மாநில அரசும், காவல்துறை நிர்வாகமும்  திருமணமானவர் என்பதால் கருணை அடிப்படையில் அவருக்கு வேலை வழங்க சட்டத் தில் இடம் இல்லை என்று கூறி மறுத்து விட்டன.

இதையடுத்து, அமர்ஜித், பஞ்சாப்-அரியானா உயர் நீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவில், “கஷ்மீர் சிங்கின் ஒரே மகள் நான். எனக்கு திருமணம் ஆனாலும் எனது கணவர், குழந் தைகளுடன் தாய்வழி வீட்டில் தான் இருக்கிறேன். எனக்கு வேறு எந்த வருமானமும் இல்லை. எனவே எனக்கு  கருணை அடிப் படையில் வேலை வழங்க உத்தர விட வேண் டும்” என அவர் கோரியிருந்தார்.

இந்த வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மசிஹ் விசாரித்தார். பல்வேறு கட்ட விசாரணைக்கு பிறகு பரபரப்பு தீர்ப்பை வழங்கி உள்ளார். தீர்ப்பில்,

பணியில் இருப்பவர் உயிரிழந் தால் அவரை நம்பி இருக்கும் குடும்பத்தினருக்கு உதவுவதற் காகத் தான் கருணை அடிப் படையில் வேலை வழங்க சட்டம் வகை செய்கிறது. மகனுக்கு திருமணம் ஆகியிருந்தாலும்கூட அவருக்கு பணி வழங்கப்படுகிறது. ஆனால், மகளுக்கு திருமணம் ஆனால் மட்டும் பணி மறுக்கப் படுவது என்பது,  அரசியல் சாச னம் வழங்கியுள்ள பாலின சமத் துவத்துக்கு எதிரானது.

திருமணமான மகளுக்கும் கருணை அடிப்படையில் அரசு வேலை பெற உரிமை உண்டு. எனவே, ஒரு மாதத்துக்குள் அமர் ஜித்துக்கு காவல் துறையில் வேலை வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

திருமணத்தில் மதப் பார்வையா?

முதன் முதலாக லவ் ஜிகாத் சட்டத்தின் கீழ் கைதான பெண்ணுக்குக் கட்டாய கருச்சிதைவு செய்யப்பட் டுள்ளதாகத் தகவல்கள் வெளி வந்துள்ளன.

இந்துப் பெண்ணும் இஸ்லாமிய ஆணும் திருமணம் செய்து கொள்வதை லவ் ஜிகாத் என அழைத்து அதற்கு எதிராக உத்தரப்பிரதேச பாஜக அரசு சட்டம் இயற்றி உள்ளது.   இந்தச் சட்டத்தின் கீழ் முதன் முதலாக ஒரு பெண் உத்தரப்பிரதேச மாநிலத்தில் கைது செய்யப் பட்டுள்ளார்.  சுமார் 22 வயதாகும் அந்தப் பெண்ணின் பெயர் முஸ்கன் ஜகான் என்பதாகும்.  அவர் மூன்று மாத கர்ப்பமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

அவருடன் கைது செய்யப்பட்ட 27 வயதான அவர் கணவர்  ரஷீத் எங்கு என அறிவிக்கப்படாமல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.    பிங்கி என்ற இந்துப் பெண்ணை வற்புறுத்தி இஸ்லாம் மதத்துக்கு வலுக்கட்டாயமாக மாற்றி திருமணம் செய்து கொண்டதாகக் குற்றம் சாட்டப் பட்டுள்ளது.  முஸ்கன் ஜகான் ஒரு அரசு இல்லத்தில் அடைத்து வைக்கப் பட்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் மொரதாபாத் நகரில் உள்ள அரசு இல்லத்தில் இருந்து தனது மாமியாரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட முஸ்கன் ஜகான் தனக்கு திடீரென ரத்தப் போக்கு ஏற்பட்டு கருச்சிதைவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.,  அவருக்கு அரசு இல்லத்து ஊழியர் ஒருவர் ஊசி போட்டு கட்டாய கருச்சிதைவு செய்யப்பட்டுள்ளதாக மாமியார் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

தனது மருமகள் இஸ்லாம் மதத்துக்கு மாறி ஒரு இஸ்லாமியரைத் திருமணம் செய்து கொண்டதால் இந்த கொடுமை இழைக்கப்பட்டுள்ளதாக மாமியார் தெரிவித் துள்ளார்.   இந்த மதச்சார்பான உலகு தனது பேரக் குழந்தை பிறக்கும் முன்பே அதற்குப் பிரியாவிடை கொடுத்து அனுப்பி விட்டதாகவும் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

நாடு எங்கே போய்க் கொண்டு இருக்கிறது? பா.ஜ.க. ஆட்சி பாசிச ஆட்சியே என்பதற்கு ஒவ்வொரு நாளும் நடக்கும் மதவாதப் போக்குடைய நிகழ்வுகள் பாசிசத்தின் பச்சையான பரிபாலனம் நாட்டில் நடந்து கொண்டு இருக்கிறது என்பதற்கான சாட்சியங்களும், அடையாளங்களுமாகும்.

18 வயதுக்கு மேற்பட்ட பெண்ணும் 21 வயது நிறைந்த ஓர் ஆணும் திருமணம் செய்துகொள்ள சட்டப்படியான உரிமை உண்டு. அதற்கு மாறாக மதவாதக் கண்ணோட்டத்தில் இந்தப் பிரச்சினையை அணுகுவது அசல் காட்டுமிராண்டித்தனமும், அத்துமீறலுமாகும். தக்க வயது வந்த ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொள்வது என்பது அவர்களின் தனிப்பட்ட உரிமை. இதில் மூன்றாவது மனிதன் குறுக்கிடுவது அநாகரிகம் என்பார் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்.

இங்கு ஓர் அரசாங்கமே குறுக்கிடுவது மிகவும் கீழ் இறக்கமாகும். இந்து மதம் எங்கே போய்க் கொண்டு இருக்கிறது? முதலில் இந்து மதத்தில் ஆண்டாண்டு காலமாக ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் வளர்ச்சிக்கும், உரிமைகளுக்குமான சட்டங்களை திட்டங்களை வகுக்கட்டும் பா.ஜ.க. ஆட்சி.

மக்கள் தொகையில் சரி பகுதியினரான இந்துப் பெண்களுக்கு 33 விழுக்காடு இடங்களை சட்ட மன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் கொண்டு வரட்டும்.

இதுதான், இந்துக்கள் என்று மார்தட்டுவோரின் கடமையாக இருக்க வேண்டுமே தவிர, தனிப்பட்ட உரிமை உடைய திருமண விடயத்தில் எல்லாம் தலையிடுவது பிற்போக்குத்தனமும், திசை திருப்பலுமே யாகும்.