திங்கள், 7 நவம்பர், 2016

14) பெண்ணுரிமைச் சட்டங்கள்

நேற்றையத் தொடர்ச்சி

திரு. எம். ஆர். ஜெயகர் அவர்கள் தலைமையில் 10.05.1930 ஆம் தேதி ஈரோட்டில் நடைபெற்ற இரண்டாவது சுயமரியாதை மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானங்களில்,

தீர்மானம் 2

ஆண்களைப் போன்று பெண்களுக்கும், சொத்துரிமை வாரிசு பாத்தியம் ஆகியவைகளில் சம உரிமை இருக்க வேண்டுமென்றும், எந்தத் தொழிலிலும் ஈடுபடவும், அதைக் கையாளவும் சம உரிமை இருக்க வேண்டுமென்றும் குறிப்பாக ஆரம்பக்கல்வி உபாத்தியாயர் விஷயத்தில் அவர்களை அதிகமாக நியமிக்க வேண்டுமென்றும் இம்மாநாடு அபிப்பிராயப்படுகிறது.

தோழர் ஆர்.கே. சண்முகம் தலைமையில் 1931 ஆகஸ்டில் நடைபெற்ற விருதுநகர் சுயமரியாதை மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானங்களில்,

தீர்மானம் 10

பெண்கள் முன்னேற்றத்திற்கு பெண்களுக்குச் சொத்துரிமை, கலியாண உரிமை, கலியாண ரத்து, விதவை மணம் முதலியவைகளை அமலுக்கு கொண்டு வர வேண்டியது அவசியமென்றால், அதற்கேற்ற சட்ட சம்பந்தமான காரியமும் செய்யப்பட வேண்டும் என்றும் இம்மாநாடு தீர்மானிக்கிறது.

இத்தீர்மானங்கள் தொடர்பாக இந்து வாரிசு உரிமைச் சட்டம் 1956 இல் இயற்றப் பட்டது. இச்சட்டத்தின் படி ஆண் வாரிசுகளுக்கும், பெண்வாரிசுகளுக்கும் சொத்தில் சம பங்கு உரிமை உண்டு. இச்சட்டத்திற்கு முன்பு சீதனச் சொத்தைத் தவிர, பிற சொத்துக்களில் பெண்களுக்கு வரையறுக்கப்பட்ட உரிமை மட்டுமே இருந்தது.

இச்சட்டம் அதை நீக்கி, பெண்களை சொத்துக்கு முழு உரிமையாளர்களாக்கியது. இந்து வாரிசுச் சட்டம் பிரிவு 6 இதற்கு வகை செய்கிறது. இப்பிரிவில் 2005 இல் இந்து வாரிசு திருத்தச் சட்டம் 2005 இன்படி 09.09.2005-லிருந்து நடைமுறைக்கு வந்தது.

1956-இல் இந்து வாரிசுரிமைச் சட்டம் இயற்றப்பட்ட பிறகு மகளிர் நிலை

1956- இல் இந்து வாரிசுரிமைச் சட்டம் இயற்றப்பட்ட பிறகு, மகளிர் நிலையில் பெரும் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அவை வருமாறு,

1) பழைய சட்டத்தின்படி இறந்தவருக்கு மகனோ அல்லது விதவையோ இருப்பின், மகளுக்கு இறங்குரிமையின் அடிப்படையில் சொத்து கிடைக்காது. ஆனால் 1956 இன் இந்து வாரிசுரிமைச் சட்டத்தின்படி மேற்படி நிலை ஒழிக்கப்பட்டது. இச்சட்டத்தின்படி, மகளுக்கும் இறந்தவரின் சொத்தில் சம உரிமை அளிக்கப்பட்டது. அவள், இறந்தவரின் மகன், விதவை மற்றும் தாயுடன் சொத்தில் சம பங்கினைப் பெற தற்பொழுது உரிமையுடையவள் (பிரிவு 8)

2) முன்னதாக இறந்து போய்விட்ட மகளின் (Predeceased daughter) குழந்தை கள், இறந்தவரின் சொத்தில் மகள் என்ன பாகத்தைப் பெறுவாளோ அந்த பாகத்தை அவர்கள் தங்களுக்குள் சமமாகப் பிரித்துக் கொள்ளலாம். பழைய சட்டத்தின்படி இதற்கு உரிமை கிடையாது.

3) பழைய சட்டத்தின்படி மகள் பெறும் சொத்து வரையறைக்குட்பட்டதாகும். (Limited Interest) மகளின் மரணத்திற்குப் பிறகு, அது அவளுடைய தந்தையின் பிற வாரிசுகளுக்கு சென்றடைந்துவிடும். ஆனால், மேற்படி 1956 ஆம் ஆண்டின் சட்டப்படி, மகளுக்கு இறங்குரிமையில் வரும் சொத்தில், அவளுக்கு முழு உரிமை யுண்டு. அது அவளுடைய மரணத்திற்குப் பிறகு, அவளுடைய வாரிசுகளுக்குத்தான் செல்லும். பிரிவுகள் 15 மற்றும் 16). மாறாக மேற்கண்ட பழைய சட்டத்தின்படி செல்லாது.,

4) மேற்படி 1956 ஆம் ஆண்டின் இந்து வாரிசுரிமைச் சட்டம் வருவதற்கு முன்பு அம்மகள் வரையறுக்கப்பட்ட சொத்துக்கள் ஏதேனும் பெற்றிருந்து, மேற்படி சட்டம் வரும்பொழுது அச்சொத்து அவளது உடைமையில் இருந்தால் (in her possession), வரையறைக்குட்பட்ட சொத்துரிமை மறைந்து, அச்சொத்திற்கு அவளே முழு உரிமையாளராகி விடுவாள் (absolute ownership) பிரிவு 14

5) 1956-இல் இந்து வாரிசுரிமைச் சட்டம் இயற்றப்படுவதற்கு முன்னர் கூட்டு குடும்பச் சொத்தின் பங்குரிமையர் ஒருவர் இறந்துவிட்டால், அவருக்குரிய இப்பங்குரி மையாளர்கள், இறந்தவரின் சகோதரர்களாகவோ அல்லது சிற்றப்பா, பெரியப்பாமார் களாகவோ இருப்பார்கள். இவர்கள் இறந்தவரின் மகளை சொத்துரிமை பெறுவதிலி ருந்து தள்ளிவிடுகிறார்கள்.

(exclude) அதாவது இறந்தவரின் சொத்துக்களை பங்குரிமையர்கள், எஞ்சுநர் (Survivorship) அடிப்படையில் அடைகின்றனர். ஆனால், 1956- இல் இந்து வாரிசுரிமைச் சட்டம் இயற்றப்பட்ட பிறகு, பங்குரிமைச் சொத்தில் மகளுக்கும் உரிமை வந்துவிட்டது. இதன்படி, இறந்துபோன தந்தையாரின் சொத்துக்களை மகளும், ஒரு பங்குரிமையரைப் போலவே அடையலாம். இது பிரிவு 6-இல் விளக்கப்பட்டுள்ளது. இது ஒரு புரட்சிகரமான முன்னேற்றம் ஆகும்.,

தமிழக அரசின் சட்டத் திருத்தம் (Amendment Act)

தமிழக அரசு தனது 1990-ஆவது ஆண்டின் 1-ஆவது சட்டத்தின் மூலம் (Act-1 of 1990) 25.03.1989 ஆம் தேதியில் மேற்படி 1956 ஆம் ஆண்டின் இந்து வாரிசுரிமைச் சட்டத்தின் பிரிவு 29-இல் திருத்தம் செய்ததன் விளைவாக பின்வரும் 29-A, 29-B, 29-C ஆகிய மூன்று பிரிவுகளைச் சேர்த்தது.

பிரிவு 29 A(i): இப்பிரிவு பங்குரிமைச் சொத்தில் மகளுக்கும் சமபங்கு கொடுக்க வேண்டும் எனக் கூறுகிறது. (Equal rights to Daughter in Coparcenary property). அதாவது, இந்து கூட்டுக் குடும்பத்தில் மிதாக்ஷா முறையில் மகன் எவ்வாறு பிறந்தவுடனேயே பங்குரிமையர் ஆவானோ, அவ்வாறே மகளும் பிறந்தவுடன் பங்குரிமையர் ஆகிவிடுகின்றாள். மகனுக்கு உள்ள அனைத்து பொறுப்புகளும், தகுதியின்மைகளும் (liabilities and disabilities) மகளுக்கும் உண்டு.

(ii) மகனுக்குச் சொத்தில் எவ்வளவு பங்கு கிடைக்கிறதோ அதே அளவு பங்கு மகளுக்கும் கிடைக்கும். மகள் இறந்து விட்டால், அவளது வாரிசுகளுக்கு அவள் பங்கு சென்றடையும்.

(iii) மகளுக்குக் கிடைத்த பங்கினை அவள் தன்னுடைய விருப்பம் போல் யாருக்கு வேண்டுமானாலும் உயில் மூலமோ அல்லது மற்ற ஆவணங்களின் மூலமோ கொடுக்கலாம்.

(iv) 25.03.1989-ஆம் தேதிக்கு முன் திருமணமான மகளுக்கு இந்தச் சட்டத் திருத்தத்தால் எப்பலனும் கிடைக்காது.

(v) 25.03.1989 ஆம் தேதிக்கு முன் நடைபெற்ற எப்பாகப்பிரிவினைக்கும் இச்சட்டத்திருத்தம் பொருந்தாது.

பிரிவு 29-B: 25.03.1989 ஆம் தேதிக்குப்பின் ஒரு பெண் இறந்துவிட்டால், அவ ளுடைய சொத்து உயிருடன் உள்ள மற்றைய எஞ்சுநர்களுக்குப் (Survivors) போய்ச் சேரும். ஆனால் அவள் இறக்கும் பொழுது அவளுடைய குழந்தையோ அல்லது குழந்தையின் குழந்தையோ இருந்தால் 1956-ஆம் ஆண்டின் இந்து வாரிசுரிமைச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளதுபோல் அவளின் சொத்து சென்றடையுமே தவிர, எஞ்சுநர் முறைப்படி (Survivorship) சொத்து சென்றடையாது.

பிரிவு 29-சி: சில நேர்வுகளில் சொத்தை அடைவதற்கான முதல் நிலை உரிமை யானது (Preerential right to acquire property is certain cases), மேலே கூறிய பிரிவுகள் 29-A மற்றும் 29-B-யின் படி 25.03.1989ஆம் தேதிக்குப்பின், ஒன்றுக்கு மேற்பட்ட பெண் வாரிசுகளோ அல்லது பெண் வாரிசுகளின் வாரிசுகளோ இருந்தால்,

அவர்களுக்கு அசையும் சொத்தோ அல்லது செய்யும் தொழிலில் பங்கோ மொத்தமாகவோ (solely) அல்லது கூட்டாகவோ (jointly) கிடைக்கும் பொழுது அவர்களில் யாராவது ஒருவர் தங்களுடைய பங்கினை விற்க விரும்பினால் மற்றவர்கள் (Co-shares) அவரின் சொத்தினை வாங்கும் முன்னுரிமை பெற்றவர்கள் ஆவர். (இது அண்டைச் சொத்தில் முற்படுவிலை கொள் உரிமையைப் (Right of Pre-emption) போன்றதாகும்).

பிரிவு 29-C (2): அவ்வாறு அச்சொத்தை வாங்க விரும்புபவர்கள் அதற்கு உண்டான தொகையைக் கொடுக்க வேண்டும். இதில் ஏதேனும் சிக்கல் எழுந்தால் நீதிமன்றத் தீர்ப்பே முடிவானதாகும்.

பிரிவு 29-C (3) ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட உடன் பங்குரிமையர்கள் (Co-shares) இருக்கும்பொழுது அதில் ஒருவர் தனது பங்கை விற்க விரும்பினால் மீதியுள்ள பங்குரிமையர்களில் யார் அதிகத் தொகை கொடுக்க உடன்படுகிறார்களோ, அவர்களுக்குத்தான் அப்பங்கை விற்க வேண்டும்.

எனவே, 1956-ஆம் ஆண்டின் இந்து வாரிசுரிமைச் சட்டம் இயற்றப்பட்ட பிறகு, மகளின் சொத்துரிமை நிலையில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

தொடர்புக்கு: 9443472914

(தொடரும்)

-விடுதலை,2.7.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக