சொத்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சொத்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 28 அக்டோபர், 2024

உயில் எழுதாத சொத்துக்களைப் பங்கிடுவது எப்படி?

 


செப்டம்பர் 16-30

ஒரு இந்துவின் (ஆண்) சொத்துக்கள், உயில் எழுதி வைக்காத நிலையில், அவர் இறந்துபோனால், இந்து வாரிசுரிமைச் சட்டம் 1956இன் பிரிவுகள் (8)&(9) இன்படி, அவருடைய வாரிசுகளுக்குப் பங்கிட்டுக் கொடுக்கப்படுகிறது.

பிரிவு 10 இன் விளக்கங்கள் பின்வருமாறு:

உயில் எழுதாமல் இறந்தவரின் சொத்துக்கள் பட்டியலுடைய Class-I இல் இருக்கும் வாரிசுகளிடையே கீழ்க்கண்ட விதிகளின்படி பங்கிடப்படும்.

விதி 1: இறந்தவரின் விதவை மனைவி அல்லது விதவை மனைவிகள் ஒரு பங்கை எடுத்துக்கொள்ளலாம்.

விதி 2: உயிரோடிருக்கும் மகன்களும், மகள்களும் இறந்துபோனவரின் தாயாரும் ஒரு பங்கை எடுத்துக் கொள்ளலாம்.

விதி 3: ஒவ்வொரு இறந்துபோன மகன் அல்லது ஒவ்வொரு இறந்துபோன மகள் – இவர்களின் கிளையில் உள்ள வாரிசுகள் ஒரு பங்கை எடுத்துக் கொள்ளலாம்.

விதி 4: விதி 3 இல் குறிப்பிடப்பட்டுள்ள பங்கினை விநியோகம் செய்தல்.

1. இறந்துபோன மகன் கிளை வழியில் உள்ள வாரிசுகளிடையில் அவருடைய விதவை மனைவி அல்லது மனைவிகள் தவிர, உயிரோடிருக்கும் மகன்கள், மகள்கள் அனைவரும் சமமான பங்கினைப் பெறுவார்கள். அவருடைய இறந்துபோன மகன்களின் கிளை வழியில் உள்ளவர்கள், அதே பங்கைப் பெறுவார்கள்.

2. இறந்துபோன மகளின் கிளை வழியில் உள்ள வாரிசுகளிடையே, உயிரோடிருக்கும் மகன்கள், மகள்கள் சமமான பங்கினைப் பெறுவார்கள்.

விதி 1: உயில் எழுதாமல் இறந்தவரின் விதவை மனைவி அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட விதவை மனைவிகள் இருந்தால், சகல விதவை மனைவிகளும் சேர்த்து ஒரு பங்கை எடுத்துக்கொள்ளலாம்.

எடுத்துக்காட்டாக, A என்பவர், (இந்து) உயில் எழுதாமல் இறந்துபோனால், அவர் இறந்துபோன சமயம், இரண்டு விதவை மனைவிகளும், ஒரு மகனும் இருப்பதாக வைத்துக் கொள்வோம். A என்பவருக்கு ஒரு வீடு என்ற சொத்து இருக்கிறது. சட்டப்படி, Class-I இல் வரும் அவருடைய வாரிசுகள், ஒரே சமயத்தில் பிறரை தவிர்த்து அந்த வீட்டை தமதாக்கிக் கொள்ளலாம். மேற்குறிப்பிட்ட வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவருமே Class-I வாரிசுகள். ஆனால், அதில் 2 பேர் கி என்பவரின் விதவை மனைவிகள். எனவே, பிரிவு (10)இன் விதி (1)இன்படி, A இன் இரண்டு விதவை மனைவிகளும், வீட்டில் பாதிப் பங்கினை எடுத்துக்கொள்ளலாம். எஞ்சியுள்ள பாதி, அவரின் மகனுக்குப் போய்ச் சேரும்.

இதைப்போலவே, மேலே குறிப்பிட்ட எடுத்துக்காட்டில், A என்பவருக்கு 3 விதவை மனைவிகளும், 3 மகன்களும் இருப்பதாக வைத்துக்கொள்வோம். A யின் வீடு, அவர் மரணத்திற்குப் பிறகு 4 பாகங்களாகப் பங்கு வைக்கப்படும். ஒரு பாகம் 3 விதவை மனைவிகளுக்கும், மீதியுள்ள மூன்று பாகங்களும் 3 மகன்களுக்கும் பங்கு வைக்கப்படும். ஆனால், A இறக்கும்போது, அவருக்கு 2 விதவை மனைவிகள் மாத்திரமே உள்ளனர் என்றால், மகன் இல்லாத நிலையில், அந்த வீடு இரண்டு விதவை மனைவிகளுக்கும் சமமாகப் பங்கிடப்படும்.

விதி 2: உயிரோடிருக்கும் மகன்களும், மகள்களும் இறந்தவரின் தாயாரும், ஒவ்வொருவரும் ஒரு பங்கு பெறுவர்.

A என்ற ஒரு இந்து ஆண், உயில் எழுதாமல் இறந்து விடுகிறார் என்று வைத்துக்-கொள்வோம். அவருக்குப் பிறகு அவருடைய தாயார், 2 விதவை மனைவிகள், 2 மகன்கள், 2 மகள்கள் ஆகியோர் சொத்தின் பங்குகளுக்காகக் காத்திருக்கிறார்கள்.

விதி 1 & விதி 2 என்ற இரண்டையும் சேர்த்து வாசிக்கும்போது A யின் சொத்தை 6 பங்குகளாகப் பிரிக்கவேண்டும் என்பது தெளிவாகிறது. A யின் ஒவ்வொரு மகளும் ஒரு பங்கைப் பெறுவர். அதைப்போலவே மகன்களும் ஆளுக்கொரு பாகத்தைப் பெறுவர். சொத்தில் 4 பங்குகள், 2 மகன்களுக்கும், 2 மகள்களுக்கும் போய்ச் சேர்ந்துவிடும். எஞ்சியுள்ள 2 பாகங்களில், கி யின் தாயாருக்கு ஒரு பங்கும், விதி 1 இன்படி, இரண்டு விதவை மனைவிகளும் சேர்த்து ஒரு பங்கையும் பெறுவார்கள்.

விதி 3: ஒவ்வொரு இறந்துபோன மகன் அல்லது ஒவ்வொரு இறந்துபோன மகள் இவர்களின் கிளையில் உள்ள வாரிசுகள் ஒரு பங்கை எடுத்துக்கொள்ளலாம்.

கி என்பவர் ஒரு இந்து ஆண், உயில் எழுதாமல் இறந்துபோகிறார். அவருக்கு ஒரு விதவை மனைவி, ஒரு மகன், ஒரு மகள், இரண்டு பேரக் குழந்தைகள் (இறந்துபோன மகன் வழியில்) அதாவது, A இறப்பதற்குமுன்பே, உயிர் துறந்த கி யின் மகன். தற்போது A யின் விதவை மனைவி, சொத்தில் ஒரு பங்கைப் பெறலாம். கி யின் ஒரு மகனும், ஒரு மகளும் ஆளுக்கொரு பங்கைப் பெற உரிமை உடையவர்கள். கி யின் பேரப் பிள்ளைகளைப் பொறுத்தவரையில், விதி 3 இன்படி, அவர்கள் அனைவரும் சேர்ந்து மொத்தமாக ஒரு பங்கைப் பெறலாம். எனவே, A யின் சொத்து, அவர் மரணத்திற்குப் பிறகு, 4 பங்குகளாகப் பிரிக்கப்படலாம். A யின் இறந்துபோன மகனின் வழிவந்த இரண்டு பேரக் குழந்தைகளுக்குப் பிரித்துக் கொடுக்கப்பட்ட விதி 4(வீ): விதி 3 இல் குறிப்பிடப்பட்ட சொத்து விநியோகம்:

இறந்துபோன மகன் கிளைவழியில் உள்ள வாரிசுகளிடையில் அவருடைய விதவை மனைவி (அல்லது சகல விதவை மனைவிகளுக்கும் சேர்த்து) தவிர, உயிரோடிருக்கும் மகன்கள், மகள்கள் அனைவரும் சமமான பங்கினைப் பெறுவார்கள். அவருடைய இறந்துபோன, மகன்களின் கிளை வழியில் உள்ளவர்கள் அதே பங்கைப் பெறுவார்கள்.

A என்பவர் இறந்ததும், இறந்துபோனவரின், ஏற்கெனவே இறந்துபோன மகனின் கிளை வழியில் உள்ளவர்கள் பெறுவதற்கு உரிமை பெற்ற பங்கினை விநியோகத்துடன் விதி 4(1) தொடர்புடையது. மேலே குறிப்பிட்டதுபோல, உயில் எழுதி வைக்காமல் இறந்துபோன ஒரு இந்து ஆணின் ஏற்கெனவே இறந்துபோன மகனின் கிளை வழியில் உள்ளவர்கள், இறந்துபோனவரின் சொத்தில் ஒரு பங்கைப் பெறுவார்கள். ஏற்கெனவே, இறந்துபோன மகனின் வாரிசுகளிடையே, இந்தச் சட்டத்தின்படி, அந்த ஒரு பங்கு விநியோகிக்கப்படுகிறது.

எனவே, இதே முறையில், A யின் இறந்துபோன மகனுக்கு 2 விதவை மனைவிகளும், 2 மகள்களும் இருந்தால், கி இறந்துபோன சமயத்தில், A யின் சொத்தில் ஒரு பங்கை அவர்கள் அனைவரும் சேர்த்து அடைந்திருப்பார்கள். அவர்களுக்கிடையில், இந்த விதியின் அடிப்படையில், அந்த ஒரு பங்கை விநியோகம் செய்யலாம். எனவே, அவர்கள் பெற்ற ஒரு பாகம், மூன்று சம பங்குகளாகப் பிரிக்கப்படும் A யின் இறந்துபோன மகளின் இரண்டு மகன்களுக்கு 2 பாகங்களும் (ஒருவருக்கு ஒரு பங்கு) கி யின் இறந்துபோன மகனின் 2 விதவை மனைவிகளுக்கு ஒரு பங்கும் என்ற முறையில் பங்கு வைக்க முடியும்.

விதி 4(டட) : விதி 3 இல் குறிப்பிடப்பட்ட பங்கின் விநியோகம்

இறந்துபோன மகளின் கிளை வழியில் உள்ள வாரிசுகளிடையே, உயிரோடிருக்கும் மகன்கள், மகள்கள் சமமானப் பங்கினைப் பெறுவார்கள்.

உயில் எழுதி வைக்காமல் இறந்துபோன ஒரு இந்து ஆணின் சொத்துப் பங்கினை விநியோகம் செய்யும் நெறிமுறைகளுடன் இந்த விதி தொடர்புடையது. இது விதி 3 இன் கீழ், அவருடைய இறந்துபோன மகளின் கிளை வழிகளின்மேல் ஆளுமை செலுத்துகிறது. இப்போது விதி 4(ii) இன்படி இறந்துபோன மகளின் உயிரோடிருக்கும் மகன்களும், மகள்களும் சமமான பங்குகளைப் பெறும் முறையில், சொத்து மேற்கொள்ள முடியும். எனவே, பாகப் பிரிவினையை A என்ற இந்து ஆண் உயில் எழுதி வைக்காமல் இறந்துபோனால், அவருக்கு ஒரு விதவை மனைவியும், இறந்துபோன மகள் வழியில் ஒரு பேரனும், ஒரு பேத்தியும் இருக்கும் நிலையில்,

A யின் சொத்துக்கள், அவர் மரணத்திற்குப் பிறகு, இரண்டு பாகங்களாக பங்கு வைக்கப்படும். ஒரு பங்கு அவருடைய விதவை மனைவிக்கும், இன்னொரு பங்கு இறந்துபோன மகளின் கிளை வழிக்கும் பிரித்துக் கொடுக்கப்படும். மகளின் கிளை வழி பெற்ற பாகம் அவரின் மகனுக்கும், மகளுக்கும் சமமாகப் பங்கிடப்படும்.

வியாழன், 6 ஜூன், 2024

பத்திரப்பதிவு செய்தால் மட்டும் சொத்து உங்களுடையது ஆகாது



Published June 5, 2024, விடுதலை நாளேடு

இந்தியாவில் நிலங்களை பதிவு செய்வது கட்டாயம். இந்தியப் பதிவுச் சட்டத்தில் 100 ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள சொத்தை எந்த விதத்தில் மாற்றினாலும், அது எழுத்துப் பூர்வமாகவும், சம்பந்தப்பட்ட துணைப் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றும் விதி உள்ளது.

அதனால் தான் வீடு, கடை, ப்ளாட் அல்லது பண்ணை என எது வாங்கினாலும் அது கட்டாயம் பதிவு செய்யப்படுகிறது. ஆனால், நிலத்தை பதிவு செய்தாலும், நீங்கள் அதன் உரிமையாளராகிவிட முடியாது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

பதிவு செய்வதன் மூலம் நீங்கள் உரிமை யாளராகிவிடுவீர்கள் என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் தவறான புரிதலில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். ஒரு நபர் ஒரு சொத்தை இரண்டு முறை விற்றதாக நாள்தோறும் இதுபோன்ற செய்திகள் வருவதற்கு இதுவே காரணம். அல்லது வாங்குபவரின் பெயரில் விற்கப்பட்ட சொத்தின் மேல் விற்பனையாளர் நிலத்தில் கடன் வாங்கியிருக்கலாம். நிலத்தை வாங்குபவர் பதிவை மட்டுமே செய்திருப்பதால் இது நிகழ்கிறது, அவர் தனது பெயரில் சொத்தை மாற்றி எழுதவில்லை. (இது சொத்து மாற்றம் என்று அழைக்கப்படுகிறது).

பதிவு செய்வதன் மூலம் நீங்கள் நிலத்தின் முழு உரிமை யாளராக மாட்டீர்கள் என்பதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். அந்த சொத்தின் முழு உரிமையும் உங்களுக்குக் கிடைக்காது. பதிவு என்பது உரிமையை மாற்றுவதற்கான ஒரு ஆவணம் மட்டுமே. பத்திரப்பதிவை முடித்த பிறகு, அந்த பதிவின் அடிப்படையில் நீங்கள் சொத்தை மாற்றினால் அது சொத்து மாற்றம் என்று அழைக்கப்படுகிறது.

புதன், 10 ஜனவரி, 2024

திருமணமான மகன் இறந்துவிட்டால் சொத்தில் தாய்க்கு பங்கு இல்லை


இந்திய வாரிசுரிமை சட்டத்தின்படி, திருமணமான மகன் இறந்துவிட்டால், அவரது சொத்தில் தாய் பங்கு கேட்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பவுலின் இருதய மேரி. இவருக்கு மோசஸ் என்ற மகன் இருந்தார். இவருக்கு கடந்த 2004-ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த அக்னஸ் என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்தத் தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது.
இந்த நிலையில், மோசஸ் கடந்த 2012-ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் இறந்துவிட்டார்.
இதில் அவர் இறப்பதற்கு முன் அவருடைய சொத்தில் உயில் எதுவும் எழுதி வைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், அக்னஸ்க்கும் – பவுலின் இருதய மேரிக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், தன்னுடைய மகனின் சொத்தில் தனக்கும் பங்கு வேண்டும் என்று பவுலின் இருதய மேரி நாகப்பட்டினம் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அப்போது, அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மோசஸின் சொத்தில் அவரது தாய்க்கும் பங்கு உண்டு என்று உத்தரவிட்டு தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து மோசஸின் மனைவி அக்னஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவியாக நியமிக்கப்பட்ட வழக்குரைஞர் பி.எஸ்.மித்ரா நேஷா, ‘கணவர் இறந்தால், அவருடைய மனைவி மற்றும் குழந்தைகளுக்கே சொத்தில் பங்கு உள்ளது. ஒருவேளை மனைவியோ அல்லது குழந்தைகளோ இல்லை என்றால் அவருடைய தந்தை தான் சொத்தின் வாரிசுதாரர் ஆவார். இதில் இறந்துபோன நபரின் தந்தையும் இல்லை என்றால்தான் தாய் மற்றும் சகோதர, சகோதரிகள் வாரிசுகள் ஆவார்கள். எனவே, மோசஸுக்கு மனைவி, குழந்தை உள்ள நிலையில் அவருடைய சொத்தில் யாரும் பங்கு கேட்க முடியாது’ எனத் தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள், திருமணமான மகன் இறந்த நிலையில் அவருடைய சொத்தில் தாய் பங்கு கேட்பதற்கான வழியே இல்லை. இந்திய வாரிசுரிமை சட்டத்தின்படி, சொத்தில் தாய் பங்கு கேட்க முடியாது என்பதை இந்த நீதிமன்றம் தெளிவுபடுத்த விரும்புகிறது.
எனவே, சொத்தில் தாய்க்கும் பங்கு உண்டு என்ற நாகப்பட்டினம் மாவட்ட நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்கிறோம்”என்று தீர்ப்பளித்தனர்.
நன்றி: ‘தினமணி’ – 19.11.2023

செவ்வாய், 5 மார்ச், 2019

மனைவிக்கு சொத்து பரிசளித்தால் இனி முத்திரை கட்டணம் இல்லை

ஜெய்ப்பூர், மார்ச் 3 ராஜஸ்தான் மாநிலத்தில், 'கணவன், தன் மனைவிக்கு பரிசாக அளிக்கும், அசையா சொத்து மீதான பதிவுக்கு முத்திரை கட்டணம் வசூலிப்பதில்லை' என, அம் மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து ராஜஸ்தான் மாநில அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஒருவர் பெயரில் இருந்து, அவரது தந்தை, தாய், மகன், சகோதரி, மருமகள், பேரன் மற்றும் பேத்தி பெயருக்கு மாற்றப்படும் அசையா சொத்து பதிவுக்கு, 2.5 சதவீதம் முத்திரைக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

அதேபோல், மனைவி அல்லது மகளுக்கு, அசையா சொத்து களை பரிசாக வழங்கும்போது, அதன் பதிவுக்கு, சொத்தின் சந்தை மதிப்பில், ஒரு சதவீதம் அல்லது அதிகபட்சமாக, ஒரு லட்சம் ரூபாய்வரை, முத்திரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இந்நிலையில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், கணவன், தன் மனைவிக்கு பரிசாக அளிக்கும் அசையா சொத்தின் மீதான பதிவுக்கு, முத்திரைக் கட்டணம் வசூலிப்பதில்லை என, முடிவு எடுக்கப் பட்டுள்ளது. இவ்வாறு  அதில் கூறப்பட்டுள்ளது.

- விடுதலை நாளேடு, 3.3.19