வியாழன், 31 ஜனவரி, 2019

பெற்றோர் வசதியாக இருந்தாலும் கணவரிடம் ‘வாழ்வூதியம்’ பெற பெண்ணுக்கு உரிமை உண்டு

உயர்நீதிமன்றம் உத்தரவு


மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் தொழில் அதிபரான கணவரை பிரிந்து வாழ்கிறார். இந்த நிலையில், பிரிந்த கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் கேட்டு மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனு மீதான விசாரணையின் போது கணவரின் தரப்பில், பெண் பிரெஞ்சு ஆசிரியராக பணியாற்றி மாதம் ரூ.30 ஆயிரம் சம்பாதிப்பதாகவும், மேலும் பெண்ணின் பெற்றோர் பணக்காரர்கள். சொந்த வீடு உள்ளது. அதிகளவு நகைகள் உள்ளது. எனவே பெண்ணிற்கு ஜீவனாம்சம் வழங்க முடியாது என வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மகேஷ் சோனக், பெண்ணிற்கு மாதம் ரூ.75 ஆயிரம் ஜீவனாம்சமாக வழங்குமாறு அவரது பிரிந்த கணவருக்கு உத்தரவிட்டார். மேலும் இந்த உத்தரவு குறித்து நீதிபதி கூறியதாவது:- பெண்ணின் பெற்றோர் பணக்காரர்களாக உள்ளனர் என்பதற்காக கணவர் அவருக்கு ஜீவனாம்சம் கொடுக்க முடியாது என கூறமுடியாது. பெற்றோர் வசதியாக இருந்தாலும் பிரிந்து சென்ற கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் பெற பெண்ணுக்கு உரிமை உண்டு. இவ்வாறு அவர் கூறினார்.

- சட்டக்கதிர், ஜனவரி 2019

-  விடுதலை ஞாயிறு மலர், 26.1.19

தவறுகளை சுட்டிக்காட்டும் பத்திரிகை மீது காழ்ப்புணர்ச்சி கூடாது



உயர்நீதிமன்றம் ஆணை


பொது வாழ்க்கைக்கு வந்த பிறகு தவறுகளை சுட்டிக்காட்டும் பத்திரி கையின் மீது காழ்ப் புணர்ச்சி கொள் ளக் கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

தமிழக அமைச்சரவையில் இருந்து செங்கோட்டையன் கடந்த 2012ஆம் ஆண்டு நீக்கப்பட்டார்.

இதுகுறித்து இந்தியா டுடே பத்திரிகை 2012ஆம் ஆண்டு ஆகஸ்டு 8ஆம் தேதி செய்தி வெளியிட்டது. அதில், சசிகலாவின் தூண்டுதலின் பேரில் செங்கோட் டையனை அமைச்சர் பதவியில் இருந்து ஜெயலலிதா நீக்கியதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த செய்தியால் சமுதாயத்தில் உள்ள தன் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுவிட்டதாக கூறி அந்த பத்திரிகை ஆசிரியர் உள்ளிட்டோர் மீது ஜெயலலிதா அவதூறு வழக்கை சென்னை மாவட்ட முதன்மை கீழமை நீதிமன்றத்தில் தொடர்ந்தார். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அந்த பத்திரிகை சார்பில் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை நீதிபதி பி.என்.பிரகாஷ் விசாரித்தார். பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:- பத்திரிகையில் வெளியான செய்தியினால் தன்னுடைய நற்பெயருக்கு எந்த வகையில் களங்கம் ஏற்பட்டது என்பது தெளிவாக இல்லை. எனவே, பத்திரிகை மீது ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்கிறேன். இந்திய ஜனநாயகத்தின் 4 தூண்களில் ஒன்றான பத்திரிகையின் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால், நாட்டின் ஜனநாயகம் மோசமான நிலைக்கு தள்ளப்படும். பத்திரிகையின் குரல் நெரிக்கப்பட்டால், இந்தியா சர்வாதிகார நாடாக மாறிவிடும். நாட்டின் விடுதலைக்காக போராடியவர்கள், அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் ஆகியோரது உழைப்பு வீணாகிவிடும். சில நேரங்களில் பத்திரிகைகளில் தவறுகள் நேரலாம். அதேநேரம் ஜனநாயகத்தில் பத்திரிகையின் பங்கை மறுக்க முடியாது. ஒருவர் பொதுவாழ்க்கைக்கு வந்தபிறகு தவறுகளை பத்திரிகைகள் சுட்டிக்காட்டும்போது அதன் மீது காழ்ப்புணர்ச்சி கொள்ளக்கூடாது.  இது போன்ற கருத்துகளுக்காக அவதூறு வழக்குகள் தொடரப் படுவதை தடுக்காவிட்டால், இந்த நீதி மன்றம் அரசமைப்பின் நோக்கத்தை நிறைவேற்ற தவறிவிட்டதாகி விடும். பத்திரிகைகளுக்கு சமூகத்தில் நடைபெறும் அரசியல் நிகழ்வுகள், பொதுமக்களுக்கான பயன்பாடுகள் ஆகியவற்றை வெளிக்கொண்டு வரவேண்டிய கடமைகள் உள்ளது. இந்த மனு ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

தகவல்: ச.நல்லசிவன், திருநெல்வேலி

- ‘சட்டக்கதிர்’, ஜனவரி 2019
-  விடுதலை ஞாயிறு மலர், 26.1.19

சட்டப்படி தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்குரிய விகிதாச்சாரப்படி கல்வி, வேலை வாய்ப்புகளில் எண்ணிக்கை குறையாமல் அளிக்கப்படவேண்டும்

அரசு அலுவலகங்கள்- நடைபாதைகள் - பொது இடங்களில் மத வழிபாட்டுச் சின்னங்கள் உடனே அகற்றப்படவேண்டும்


தமிழ்நாடு - புதுச்சேரி பார் சங்கங்களின் உறுப்பினர்கள் எண்ணிக்கை நூறாக அதிகரிக்கவேண்டும் திருச்சியில் கூடிய திராவிடர் கழக வழக்குரைஞரணி கூட்டத்தின் தீர்மானங்கள்




திருச்சி, ஜன.28 தாழ்த்தப்பட்டோருக்கும், பிற்படுத்தப் பட்டோருக்கும் சட்டப்படி உள்ள இட ஒதுக்கீடு விகிதாசார எண்ணிக்கையில் குறைவு இல்லாமல் அத்தனை இடங்களிலும், கல்வி, வேலை வாய்ப்புகளில் நிரப்பப்படவேண்டும் என்ற தீர்மானம் உள்பட 11 தீர்மானங்கள் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழக வழக்குரைஞர் அணியின் கலந்துரையாடல் கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

திராவிடர் கழக வழக்குரைஞரணி மாநில கலந்துரை யாடல் கூட்டம் 26.1.2019 சனிக்கிழமை காலை 11 மணியளவில் திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்


26.1.2019 திராவிடர் கழக வழக்குரைஞரணி மாநில கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர் மானங் கள் வருமாறு:

1) அரசியலமைப்பு சட்ட அடிப்படை கோட்பாடுகளுக்கு எதிராக மத்திய அரசு பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய சமூகத்தின் ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடு செய்துள்ளதை திராவிடர் கழக வழக்குரைஞரணி வன்மையாகக் கண்டிக்கிறது.

2) மண்டல் கமிசன் பரிந்துரைப்படி பிற்படுத்தப்பட்ட வர்கள் மத்திய அரசின் கல்வி வேலை வாய்ப்பில் 27% இடஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்த இக்கூட்டம் வலியுறுத்துகிறது. தாழ்த்தப்பட்டவர்களுக்குரிய விகி தாசாரப்படி அவர்களுக்குரிய எண்ணிக்கையில் மத்திய கல்வி, வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

3) உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்ற நீதிபதிகள் நியமனங்களில் உயர்ஜாதி மத உணர்வு கொண்ட நீதிபதிகளை நியமிப்பதைத் தடுத்து சமூகநீதி, ஜாதி பிரதிநித்துவ அடிப்படையிலும், பெண்களுக்கும் (குறிப்பாக ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த) நியமனங்கள் வழங்க இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

4) இந்த நாடு (இந்தியா) சுதந்திரம் அடைந்த போதே இந்து நாடாக அறிவித்து இருக்க வேண்டும் என்று கூறிய மேகாலய மாநில நீதிபதி எஸ்.ஆர்.சென் அவர்களை அரசியல் அமைப்பு சட்டத்திற்கும், பதவிப் பிரமாண உறுதி மொழிக்கு எதிராகவும், இந்து மதவெறி பாசிச கருத்து கூறிய நிலையில் அவரை நீதிபதி பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்பதோடு, நாடாளுமன்ற இரு அவைகளிலும் கண்டனத் தீர்மானம் கொண்டு வருமாறு இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

5) அரசு பொது இடத்தில் கடவுளே ஆக்கிரமிப்பு செய்தாலும் அதை உடனே சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுத்து மத வழிபாட்டு மய்யங்கள் அகற்றப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் எஸ்.எம்.சுப்ரமணியம் அவர்களை இந்த கூட்டம் பாராட்டுகிறது.

6) அரசு அலுவலகங்களிலும், பொது இடங்களிலும் நீதிமன்ற வளாகங்களிலும் அமைந்துள்ள மத வழிபாட்டு மய்யங்கள் உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையில் உடனடியாக அகற்றப்பட வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்துவதோடு அப்பகுதிகளில் மதவழி பாட்டு நடைமுறைகளையும், பூஜை, யாகம் போன்ற நிகழ்வுகள் நடை பெறா வண்ணமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறது.

7) சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் கடைப்பிடிக்கும், பூணூல் அணிவிக்கும் நிகழ்ச்சியான ஆவணி அவிட்டம் போன்ற நிகழ்வுகளுக்கு நீதிமன்றங்களே மதிப்பளித்து அந்த குறிப்பிட்ட நாளில் நீதிமன்றங்களை ஒரு மணி நேரம் தாமதமாகத் தொடங்குவதை இந்த வழக்குரைஞரணி கண்டிப்பதோடு ஜாதி, மத வெறிக்கு நீதிமன்றங்களே துணை போவதாக இது அமைவதால் இனி வரும் காலங்களில் ஆவணி அவிட்டம் போன்ற மத நிகழ்வுகளுக்கு ஒரு மணி நேரம் நீதிமன்றங்கள் தாமதமாகத் தொடங்குவதை தடுத்து வழக்கமான நேரத்தில் நீதிமன்றங்களைத் தொடங்க நடவடிக்கை எடுக்குமாறு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதியரசரை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

8) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரைஞர் குழுமத்தில் (Tamilnadu and Pondicherry Bar Council) தற்போது உள்ள உறுப்பினர் எண்ணிக்கை 25ஆக உள்ளது. அதை 100-உறுப்பினர்கள் எண்ணிக்கை யாக மாற்றி பெண் வழக்குரைஞர்களுக்கு 20% இடஒதுக்கீடு வழங்குவ தற்கு ஏதுவாக 1961-வழக்குரைஞர் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டு மாய் இவ்வழக்குரைஞர் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

9) நீதிமன்ற வளாக உணவகங்களில் இதுநாள் வரை உயர்ஜாதி பார்ப்பனர் தன்மையோடு காய்கறி உணவே வழங்க அனுமதிக்கப்பட்டு வருகிறது. வழக்குரைஞர்கள் மற்றும் பொது மக்கள் பல்வேறு உணவு பழக்க வழக்கங்கள் கொண்டவர்களாக இருப்பதால் அவர்கள் விரும்பும் வண்ணம் நீதிமன்றவளாக உணவகங்களில் இறைச்சி மற்றும் மீன் உணவு இடம்பெறச் செய்ய வேண்டுமாய் இவ்வழக்குரைஞரணி கேட்டுக் கொள்கிறது.

10) அரசு அலுவலகம் மற்றும் நீதிமன்றங்களில் அனைத்து மதக்கடவுளரின் படங்கள் இடம் பெறக் கூடாது என்று அண்ணா அவர்களின் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அரசு ஆணையை பின்பற்றச் செய்யுமாறு தமிழக அரசு மற்றும் உயர்நீதிமன்ற தலைமை நீதியரசரையும் இவ்வழக்குரைஞரணி கேட்டுக் கொள்கிறது.

11) விடுதலை' சந்தாவை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து வழக்குரைஞர்கள் சங்கங்களுக்கும் (பெண் வழக்குரைஞர்கள் சங்கம், சிவில் மற்றும் கிரிமினல் சங்கங்கள் உட்பட) கொண்டுச் சேர்ப்பது.

DRAVIDAR KAZHAGAM LAWYERS FOURM FUND


தமிழர் தலைவர் ஆசிரியர் ரூ. 10,000, த.வீரசேகரன் ரூ. 10,000, சா.பாஸ்கர் (வரவு) ரூ. 10,000, சி.அமர்சிங் ரூ. 15,000, ஜெ.துரைசாமி ரூ. 10,000, சித்தார்த்தன் ரூ. 10,000, கணேசன் ரூ. 10,000, ஆனந்தமுனியராசன் ரூ. 5,000, ஆ.பாண்டியன் (வரவு) ரூ. 5,000, வீரமர்த்தினி ரூ. 5,000, சாக்ரடீஸ் ரூ. 5,000, மு.சென்னியப்பன் ரூ. 5,000, மாரிமுத்து (உரத்தநாடு) ரூ. 5,000, திருவையாறு ஸ்டாலின் ரூ. 2,000, கும்பகோணம் நிம்மதி ரூ. 5,000, கும்பகோணம் ரமேஷ் ரூ. 5,000, சென்னை விவேகானந்தன் ரூ. 2,000, தஞ்சை சரவணக்குமார் ரூ. 2,000, இ.டி.ராஜேந்திரன் (மதுரை - வரவு)  ரூ. 2,200, பூவை புலிகேசி (வரவு) ரூ. 2,000, க.வீரமணி ரூ. 10,000, ஜெயங் கொண்டம் மு.இராசா ரூ. 2,000, திருவையாறு ரமேஷ் ரூ. 2,000, திருச்சி முத்துசாமி ரூ. 2,000, ஆர்.ருத்திரகுமார் (தாம்பரம்) ரூ. 2,500.

கலந்துரையாடல் கூட்டத்திற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமை வகித்தார். வழக்குஞைர் நா.கணேசன் வரவேற்புரை யாற்றினார். வழக்குரைஞரணி தலைவர் த.வீரசேகரன்,  செயலாளர் மு.சித்தார்த்தன், அமர்சிங், ஆ.வீரமர்த்தினி, பூவை.புலிகேசி, அறிவுச் செல்வி, மணியம்மை, மாரிமுத்து மற்றும் சில வழக்குரைஞர்கள் கருத்துரை வழங்கினர். குறிப்பாக முன்னாள் பார் கவுன்சில் உறுப்பினர், மதுரை மூத்த வழக்குரைஞர் மானமிகு இ.டி.ராஜேந்திரன் கலந்துகொண்டு கருத்து தெரிவித்து விடுதலை' சந்தா மற்றும் வழக்குரைஞர் நிதியாக 5,000 ரூபாய் அளித்தார். தீர்மானங்களை செயலாளர் மு.சித்தார்த்தன் வாசித்தார்.

தலைமை வகித்து உரையாற்றிய தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தன்னுரையில், 51-ஏ, இந்திய அரசியல் சட்டத்தில் உள்ள ஷரத்தை எப்படி பயன்படுத்தவேண்டும் என்றும், வழக்குரைஞர்கள் மனுதர்ம சாஸ்திர எரிப்புப் போராட்டத்தின்போது தோழர்களைக் காப்பதற்கு எவ்வாறு செயல்படவேண்டும் என்றும், திராவிடர் கழக வழக்குரைஞரணித் தோழர்கள் நீதிமன்றங்களில் செயல்படவேண்டிய விதம் குறித்தும், குறிப்பாக  மத்திய அரசு கொண்டு வந்துள்ள உயர்ஜாதி யினருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீடு குறித்து விளக்கம் அளித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கியும் உரையாற்றினார். வழக்குரைஞர் சென்னியப்பன் நன்றியுரையாற்றினார்.

-  விடுதலை நாளேடு, 28.1.19

திராவிடர் கழக வழக்குரைஞரணி கலந்துரையாடல் கூட்டம் (திருச்சி - 26.1.2019)



திராவிடர் கழக வழக்குரைஞரணி கலந்துரையாடல் கூட்டம் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் தலைமையில் நடைபெற்றது. மாநில வழக்குரைஞரணி தலைவர் த. வீரசேகரன், செயலாளர் மு. சித்தார்த்தன், அமைப்பாளர் வீரமர்த்தினி, துணைத் தலைவர் இராஜசேகரன், துணைச் செயலாளர்கள் ஆ. பாண்டியன், நா. கணேசன், வழக்குரைஞர் இன்பலாதன் மற்றும் ஏராளமான வழக்குரைஞர்கள் பங்கேற்றனர்.

- விடுதலை நாளேடு, 27.1.19

வெள்ளி, 18 ஜனவரி, 2019

பொது இடங்களை ஆக்கிரமிக்கும் அனைத்து மதக் கோயில்களையும் அகற்றுக! - சென்னை உயர்நீதிமன்றம்

நடைபாதைக் கோயில் பிரார்த்தனை கடவுளை சேருமா!   - உச்சநீதிமன்றம்


சென்னை, ஜன.6 பொது இடங்களை ஆக்கிரமித் துள்ள அனைத்து மதக் கோயில்களையும் அகற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. நடைபாதைக் கோயிலுக்குச் செய் யப்படும் பிரார்த்தனை கடவுளைப் போய் சேருமா என்று உச்சநீதிமன்றமும் கேள்வி எழுப்பியுள்ளது.  சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்ட மனுவில், தமிழகத்தில் உள்ள அரசு அலுவலக வளாகத்தில் வழிபாட்டு தலங்கள் இருக்கக்கூடாது என்று 1968ஆம் ஆண்டு தமிழக பொதுத்துறை (சட்டம் மற்றும் ஒழுங்கு) அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை வலியுறுத்தி 1994ஆம் ஆண்டு ஒரு சுற்றறிக்கையையும் வெளியிட்டது.

ஆனால், இந்த அரசாணை மற்றும் சுற்றறிக்கைக்கு எதிராக, கோவை வருவாய் கோட்டாட்சியரின் அலு வலகத்தில் சட்டவிரோதமாக பிள்ளையார் கோயில் கட்டப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது. அந்த கோயிலை அகற்றும்படி கோவை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது.

இம்மனுவின்மீதான விசாரணை நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் முன்பு கடந்த 4.1.2019 அன்று வந்தது. இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

பொதுச்சாலை, நீர்நிலைகள், அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து ஏராளமான கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. சில பேராசைக்காரர்கள், மாபியா கும்பல்கள் அரசு நிலங்களை அபகரிக்கவும், பணம் சம்பாதிக்கவும் பொது இடங்களில் கோயில்கள் கட்டுகின்றனர். அதனால், வாகன போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. எந்த ஒரு அனுமதியையும் பெறாமல் சிலர் சாலையோரம் கோயில்களைக் கட்டுகின்றனர்.

இதுபோன்ற செயலை இந்து சமய அறநிலையத் துறை ஒருபோதும் ஊக்குவிக்கக்கூடாது. அது மத உணர்வுகளை தவறாக பயன்படுத்துவதாகி விடும்.

தெய்வத்தின்மீதும் நடவடிக்கை தேவை

பொதுஇடங்களை ஆக்கிரமிக்கும் செயலை ஒருபோதும் அனுமதிக்கவோ, ஆதரிக்கவோ கூடாது. தெய்வமாக இருந்தாலும், பொது இடங்களை ஆக்கிர மிக்க அனுமதிக்க முடியாது. அவ்வாறு ஆக்கிரமித்தால், அந்த தெய்வத்தின் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக சட்டத்தை நீர்த்துப்போக செய்யக்கூடாது.

எனவே, பொதுசாலை, புறம்போக்கு நிலம், நீர்நிலைகள் உள்ளிட்ட இடங்களை ஆக்கிரமித்தும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக வும் உள்ள சட்டவிரோத கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும்.

நில அபகரிப்பாளர்கள், மாபியாக்கள் மூலமாக பொதுஇடங்களை ஆக்கிரமிக்க தெய்வமே வந்தாலும் கூட அனுமதிக்கக் கூடாது. இந்த வழக்கில் தமிழக உள்துறை செயலாளர், நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர், மாநில நெடுஞ்சாலைத்துறை முதன்மை செயலாளர், இந்து சமய அறநிலையத்துறை செயலா ளர், ஆணையர் ஆகியோரை எதிர்மனுதாரர்களாக சேர்க்கிறேன்.

இந்த அதிகாரிகள், தமிழகம் முழுவதும் பொது இடங்களையும், நீர்நிலைகளையும், பொது சாலை களையும் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் குறித்த புள்ளிவிவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யவேண்டும். இந்த வழக்கை 21ஆம் தேதிக்கு தள்ளிவைக்கிறேன். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

உச்சநீதிமன்றம்

டில்லியில் கரோல் பாக் பகுதியில் உள்ள பல ஆக்கிரமிப்புக்களை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது. அதில் பிரம்மாண்டமான அனுமன் சிலை உள்ள கோயிலும் ஒன்றாகும். இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து டில்லி உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. அவைகளை நீதிபதிகள் கீதாமிட்டல் மற்றும் ஹரிசங்கரின் அமர்வு விசாரித்து வருகிறது.

விசாரணையின் போது இந்த அமர்வு, "சட்ட விரோதமாக நடைபாதைகளில் கட்டப்பட்டுள்ள கோயில்களில் செய்யப்படும் பிரார்த்தனைகள் கட வுளைப் போய் சேருமா? அந்தக் கோயில்கள் புனிதத் தன்மை உள்ளதா?" என கேள்வி எழுப்பியது. மேலும் அதே பகுதியில் வாகனம் நிறுத்த சட்ட விரோதமாக அனுமதி அளித்த வடக்கு டில்லி மாநகராட்சிக்கும் தனது கண்டனத்தைத் தெரிவித்தது.

அது மட்டுமின்றி சட்டபூர்வமாக கட்டப்படாத எந்தக் கட்டடத்தையும் அது மத பிரார்த்தனை செய் யும் இடமாக இருந்தாலும் அனுமதி அளித்தது மாநகராட்சியின் தவறு எனவும் குறிப்பிட்டுள்ளது.

- விடுதலை நாளேடு, 6.1.19