சனி, 19 ஆகஸ்ட், 2017

வாகன விபத்தில் நஷ்டஈடு பெறுவது எப்படி?நம் நாட்டில் தினமும் சுமார் 400 நபர்கள் வாகன விபத்துகளினால் இறக்கின்றனர். 2015ஆம் ஆண்டு சுமார், 1,46133 நபர்கள் வாகன விபத்துகளினால் இறந்துவிட்டனர். இந்தப் புள்ளிவிபரம் நம் மத்திய போக்குவரத்து அமைச்சர் நாடாளுமன்றத்தில் கூறிய அறிக்கையில் உள்ளது.

மோட்டார் வாகன சட்டம் 1939 939 Motor Vehicles Act பல்வேறு மாற்றங்களுடன் 1988ஆம் ஆண்டு நமது நாடாளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. அது ஜூலை 1989 முதல் அமலுக்கு வந்தது. இது 9 பாகங்களாக பிரிக்கப்பட்டு மொத்தம் 269 சட்டப் பிரிவுகளைக் கொண்டுள்ளது.

மோட்டார் வாகனச் சட்டம் ஓட்டுநர், நடத்துநர் உரிமம் வழங்குதல் வாகனங்கள் பதிவு செய்தல், தகுதிச் சான்று வழங்குதல், இன்ஸூரன்ஸ், வாகன விபத்திற்கு அபராதம் மற்றும் தண்டனை வழங்குதல் போன்ற எல்லா அம்சங்களையும் தன்னிடத்தே கொண்டுள்ளது.

வாகன விபத்துகளினால் ஏற்படும் பாதிப்புகளுக்கு தகுந்த நிவாரணம் வழங்கிட 1959ஆம் ஆண்டு மோட்டார் வாகன விபத்துத் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது. வாகன விபத்துகளினால் பாதிக்கப்பட்ட பெரும்பான்மையோர் சரியான விழிப்புணர்வு இல்லாமல் காவல்துறை, விசாரணை, நீதிமன்றம் என்று அலைய வேண்டி வரும் என்று தவறாக எண்ணி, முறையாக நடவடிக்கை எடுக்கத் தயங்குகின்றனர். ஆனால், உண்மையில் வாகன விபத்துகளினால் பாதிக்கப்பட்ட மக்கள் தகுந்த நிவாரணம் பெற்றிட சட்டம் எல்லா வழிகளிலும் நமக்குத் துணை புரிகிறது.

இதுபற்றிய முழு விபரங்கள் அறிந்துகொள்ள டெல்லியில் நடந்த ஒரு வாகன விபத்தின் வழக்கு பற்றிய விபரங்களைப் பார்ப்போம்.

காஜல் சர்மா என்பவர் தனது கணவருக்குச் சொந்தமான வாகனத்தை புதுடெல்லி பெருநகர ரெயில்வே நிலையம் அருகே அஜாக்கிரதையாகவும் வேகமாகவும் ஓட்டி வந்து வாதிகள் அம்ரஜித் / நஹித் மாலிக் மற்றும் அப்ரஷ் அகமது ஆகியவர்கள் வந்த ஆம்னி வாகனத்தின்மேல் மோதி காயமடையச் செய்தார். இது பற்றிய வழக்கு மோட்டார் வாகன விபத்துத் தீர்ப்பாயத்திற்கு வந்தது.

பொதுவாக இதுபோன்ற வாகன விபத்து சம்பந்தப்பட்ட வழக்குகளில் நாம் கவனிக்க வேண்டிய முக்கிய சட்டவிதிகள்: வாகனத்தை ஓட்டி வந்த நபர் அலட்சியமாக அஜாக்கிரதையாக ஓட்டி வந்து மோதியது பற்றி பாதிக்கப்பட்ட நபர் எந்த வகையிலும் நிரூபிக்க வேண்டியத் தேவையில்லை. ஒரு வேளை வாகனத்தை ஓட்டிவந்தவரும் நீதிமன்றத்தில் தான் அஜாக்கிரதையாக வாகனத்தை ஓட்டிடவில்லை என்று வாதாட முடியாது.

காவல்துறை முறையாக விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்த பின்னர் விபத்தில் பாதிக்கப்பட்ட நபர் நீதிமன்றத்தில் பிரதிவாதியின் குற்றத்தை நிரூபிக்க வேண்டியத் தேவையில்லை. மோட்டார் வாகன விபத்துத் தீர்ப்பாயத்தில் நீதிமன்ற வழக்குகளைப் போல் குற்றம் நடந்ததா என்பதை முழுமையாக விசாரணை நடத்த வேண்டியத் தேவையும் இல்லை. இதுபற்றிய முழு விளக்கத்தை இன்ஸுரன்ஸ் நிறுவனம் (எதிர்) புஷ்பா ராணி என்ற வழக்கில் தெளிவான தீப்பினை வழங்கி உள்ளது.

அதாவது வாகன விபத்துகளின் வழக்கைப் பொறுத்தவரை காவல்துறை முழுமையாக விசாரணை செய்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துவிட்ட பிறகு வாகனத்தை ஓட்டி விபத்து ஏற்படுத்திய நபரின் குற்றத்தை பாதிக்கப்-பட்டவர் நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டிய தேவையில்லை.

நமது மாண்புமிகு உச்சநீதிமன்றம் R.D. HATTAGADI Vs. PEST CONTROL (INDIA) PVT LTD. AR 1995/SC/755 என்ற வழக்கின் தீர்ப்பின் மூலம் விபத்தினால் பாதிக்கப்பட்ட நபருக்கு எந்த முறையில் நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டும் என்பதை தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.

வாகன விபத்தின் பாதிப்புகளை 2 வகையாகப் பிரிக்கலாம்:

பொருளாதார ரீதியான பாதிப்பு: (Pecuniary Damage): பாதிக்கப்பட்டவரின் மருத்துவச் செலவுகள் மீண்டும் பணிக்கு திரும்பும் வரை மாத வருமானத்தில் ஏற்படும் இழப்பு ஆகியவைகள் Pecuniary Damage என்று அழைக்கப்படும். Non Pecuniary Damage (மனரீதியான பாதிப்பு): மனரீதியான பாதிப்புகள், உடல் ஊனமடைவதால் ஏற்படும் பாதிப்புகள், அதாவது நடக்கமுடியாமை, கைகள் செயல்பட முடியாமை போன்ற பாதிப்புகள் Non Pecuniary Damage என்று அழைக்கப்படும்.

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து அம்சங்களையும் நன்கு ஆராய்ந்த பிறகு பாதிக்கப்பட்டவருக்கு முறையான நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் உறுதிபட அறிவுறுத்தி உள்ளது.

கட்டுரையில் ஆரம்பத்தில் குறிப்பிட்ட வழக்கில் மோட்டார் வாகன விபத்தில் தீர்ப்பாயம் கீழ்க்கண்டவாறு தீர்ப்பளித்தது.

அதாவது விபத்தினால் பாதிக்கப்பட்ட வாதி அமர்ஜித் பண்டிட் 4 முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு 120 நாட்கள் புதுடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்ற பிறகு ஓரளவிற்கு குணமடைந்து உள்ளார்.

மருத்துவமனையில் செலுத்திய தொகை ரூ.5242/_க்கு முறையாக ஆதாரத்தை சமர்ப்பித்துள்ளார்.

தன்னுடைய ஓட்டுநர் பணி செய்திடாமல் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததால் தன்னுடைய மாத வருமானம் 20,000 ரூபாய் நஷ்டமடைந்துள்ளது என்று கூறியுள்ளார். அதற்குச் சரியான ஆதாரத்தை அவர் சமர்ப்பிக்கவில்லை.

எனவே, அவரது மாத வருமானத்தை 12,000 ரூபாயாகக் கணக்கிட்டு வாகன உரிமையாளர் பிரதிவாதி ரவி சர்மா விபத்தினால் பாதிக்கப்பட்ட வாதி அமர்ஜித் பண்டிட் என்பவருக்கு 1,98,000/_ ரூபாய் நஷ்ட ஈடு வழங்கிட மோட்டார் வாகன விபத்துத் தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது. வழக்குப் பதிவு செய்த நாளில் இருந்து மேற்கூறிய தொகையை 9 சதவீத வட்டியுடன் அளித்திட உத்தரவிட்டது.

நஷ்ட ஈட்டுத் தொகையை முறைப்படி கட்டத் தவறினால் 12 சதவிகித வட்டியும் சேர்த்து செலுத்திட வேண்டும் என உத்தரவிட்டது.

SOUTH DISTRICT,
SAKET COURTS - NEW DELHI,
Suit No. 107/15

சில சமயங்களில் விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்றுவிடும் வாகனங்கள் உண்டு அல்லவா!

அதுபோன்ற சமயங்களில் விபத்து பற்றி முழு விபரத்தையும் மாவட்ட ஆட்சியரிடம் மனுவாகக் கொடுத்து நிச்சயமாக 25,000/_ நஷ்டஈடு பெற்றிடலாம். அந்தத் தொகை போதுமானதாக இல்லை என்று தோன்றினால் உயர் நீதிமன்றத்தில் அதுபற்றி மறுஆய்வு மனுதாக்கல் செய்திடலாம்.
நன்றி: ‘லாயர்ஸ் லயன்’, ஜூலை 2017

 -உண்மை,16-31.7.17