வெள்ளி, 28 ஏப்ரல், 2017

பிடிஆணை இல்லாமல் கைது செய்யலாமா?



பிடி ஆணை (Warrant) இல்லாமல் ஒருவரை கைது செய்ய முடியும். ரிமாண்ட் என்பதற்கு இரண்டு அர்த்தங்கள் உள்ளன. ஒன்று காவலில் வைப்பது, சிறைப்படுத்துவது. மற்றொன்று ஒரு வழக்கை உயர்நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம் அல்லது அதற்கு கீழுள்ள நீதிமன்றத்துக்குத் திருப்பி அனுப்பி, மறு விசாரணைக்கு உத்தரவிடுவது. வாரண்ட் என்றால் பிடி ஆணை. ஒருவரை கைது செய்ய நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுதான் வாரண்ட்.

குற்றமிழைத்தவர்களை விசாரித்துத் தண்டிக்க வேண்டிய அதிகாரம் நீதிமன்றத்துக்கு உண்டு. குற்றத்தைப் புலனாய்வு செய்யும் அதிகாரம் காவல்துறைக்கு வழங்கப்பட்டிருக்கிறது. காவல்துறை தன் புலனாய்வின் போது குற்றம் சாட்டப்பட்டவரை காவலில் வைத்து விசாரிக்க அவசியம் ஏற்படும் தருவாயில் அவரைக் கைது செய்யலாம். குற்றம் சாட்டப்பட்டவர் சாட்சியங்களைக் கலைத்துவிடக் கூடாது என்ற காரணத்தாலும் கைது செய்யப்படுவதுண்டு.

குற்றம் சாட்டப்பட்டவர் விசாரணை முடிந்து தண்டிக்கப்படும்வரை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். அவர் தப்பித்து ஓடிவிடக் கூடாது. அதற்காகவும் குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்படுவதுண்டு. எந்தக் குற்றமும் செய்யவில்லை என்றாலும், முன் எச்சரிக்கை காரணமாக ஒருவர் கைது செய்யப்படலாம். இருப்பினும் சுதந்திர நாட்டில் யாரை வேண்டுமானாலும், எதற்கு வேண்டுமானாலும் கைது செய்துவிட முடியாது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி இந்தியக் குடிமகன், இந்திய ஆளுமைக்கு உட்பட்ட பகுதிகளில் எங்கு வேண்டுமானாலும் சுற்றித் திரியலாம். இது அந்த குடிமகனின் அடிப்படை உரிமை. ஒருவரைக் கைது செய்தல் அவரது அடிப்படை உரிமைக்கு எதிரான செயலாகும். தகுந்த காரணம் இல்லாமல் ஒருவர் கைது செய்யப்படக் கூடாது.

காவல்துறையினரேகூட எல்லாவிதமான வழக்குகளிலும் வாரண்ட் இல்லாமல் கைது செய்ய முடியாது. Cognizable Offence அதாவது பிடி ஆணை தேவையில்லாக் குற்றம் நடைபெற்றால் ஒழிய காவல்துறையால் சம்பந்தப்பட்ட குற்றவாளியை வாரண்ட் இல்லாமல் கைது செய்ய முடியாது. இதுவே Non-Cognizable Offence அதாவது, காவல்துறை, அதிகார வரம்பு கொண்ட மாஜிஸ்ட்ரேட்டிடம் (Judicial Magistrate) சென்று வாரண்ட் பெற்ற பிறகே ஒருவரைக் கைது செய்ய முடியும்.

எவையெல்லாம் பிடி ஆணை தேவையில்லாக் குற்றம் அல்லது, பிடி ஆணை தேவைப்படுகின்ற குற்றம் என்று குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் (Criminal Procedure Code) முதல் அட்டவணையில் வரையறை செய்யப் பட்டிருக்கிறது. அந்த அட்டவணையில் இந்திய தண்டனைச் சட்டத்தின்படி என்ன குற்றங்களுக்கு, என்ன தண்டனை என்பதும் விதிக்கப் பட்டிருக்கிறது. பிடி ஆணை குற்றம் எது, பிடி ஆணை இல்லாக் குற்றம் எது, ஜாமீனில் விடக்கூடியக் குற்றம் எது, அல்லது ஜாமீனில் விடமுடியாதக் குற்றம் எது என்பதும் விவரிக்கப்பட்டிருக்கும்.

இந்திய தண்டனைச் சட்டம் மட்டுமல்லாமல் ஏனைய சட்டங்களிலும் பெரிய குற்றங்கள் அதாவது மூன்று ஆண்டுகளுக்கு அல்லது அதற்கும் மேலாக சிறைத் தண்டனை வழங்கப்படக்கூடிய குற்றங்கள் எல்லாம் Cognizable Offence  என்று  வரையறை செய்யப்பட்டிருக்கிறது. மூன்று ஆண்டுகளுக்குக் கீழ் தண்டனை கொண்ட குற்றங்கள் Non-Cognizable Offence என்று அழைக்கப்படுகிறது.

எடுத்துக்காட்டாக பொது அமைதிக்கு ஊறு விளைவிக்கும் குற்றத்திற்கு மூன்றாண்டுகளுக்கு குறைவாகத்தான் சிறைத் தண்டனை விதிக்கப்-பட்டிருக்கிறது. இருப்பினும் அந்தக் குற்றம் Cognizable குற்றமாகக் கருதப்படுகிறது. இதற்கு நேர்மாறாக இருதாரம் செய்து கொண்டவர்கள் (Adultery) போன்ற குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு அய்ந்தாண்டு களுக்கு மேலான சிறைத் தண்டனை வழங்கப்படும். ஆனால், இதுபோன்ற குற்றங்களை Non-Cognizable  குற்றம் என்று சட்டம் வரையறை செய்திருக்கிறது.

முக்கியமாக காவல் துறையினர்தான் குற்றவாளியைக் கைது செய்ய வேண்டும் என்பதில்லை. பொதுமக்களில் யாரேனும் ஒருவரோ அல்லது பலரோ சேர்ந்தும்கூட, குற்றம் நடந்த சமயத்தில் அல்லது குற்றம் நடக்கவிருக்கின்ற சமயத்தில் (காவலர்கள் யாரும் இல்லாத நிலையில்) குற்றவாளியைக் கைது செய்து அருகிலுள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்கலாம். எனவே, கைது என்பது ஒரு குற்றவாளியைச் சுதந்திர மாக நகர விடாமல் கட்டுப்படுத்தி வைத்திருப்பதேயாகும்.

குற்றவாளியைக் கைது செய்கிறேன் என்ற பேரில், குற்றவாளியின் உயிரை மாய்த்துவிடக் கூடாது. இவை பொது மக்களுக்கு மட்டும் அல்ல, காவல் துறைக்கும் உள்ள வரைமுறை. ஒரு குற்றவாளியைக் கைது செய்வதற்கு எவ்வளவு பலம் தேவைப்படுகிறதோ அவ்வளவு பலத்தைத்தான் பிரயோகிக்க வேண்டும். யாரேனும் ஒருவரைத் தகுந்த காரணமில்லாமல் பொது மக்கள் கைது செய்து வைத்திருந்தால், முறையின்றி சிறை வைத்ததற்காக அவர்களுக்குத் தண்டனை வழங்கப்படும்.

காவல்துறையினர் வாரண்ட்டை நிறை வேற்றும்போது, குற்றம் சாட்டப் பட்டவரோ அல்லது பொதுமக்களோ காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வாரண்டை நிறைவேற்றவிடாமல் காவல் துறையினருக்கு இடையூறு செய்தால் அதுவும் குற்றமாகக் கருதப்படும்.

 -உண்மை,1-15.1.17


வயது, ஆண், பெண் பேதமின்றி குடும்ப வன்முறைச் சட்டத்தின்கீழ் யார் மீதும் வழக்குப் பதிவு செய்யலாம் உச்சநீதிமன்றம் ஆணையிட்டது

பெண்களைக் குடும்ப வன்முறைகளில் இருந்து பாதுகாப்பதற்காக குடும்ப வன்முறைச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் மராட்டிய மாநிலத்தில் குடும்ப வன்முறைச் சட்டத்தின்கீழ் தொடுக்கப்பட்ட ஒரு வழக்கில் இருந்து 2 சிறுமிகள், ஒரு பெண், ஒரு சிறுவன் என 4 பேரை மும்பை உயர்நீதிமன்றம் விடுவித்து தீர்ப்பு அளித்தது. அந்தத் தீர்ப்பில், அவர்கள் குடும்ப வன்முறைச் சட்டத்தின்கீழ் வருகிற (அடல்ட் மேல்) வயது வந்த ஆண் என்ற வரையறைக்குள் வரவில்லை என்பதால் விடுவிக்கப்படுவதாகக் கூறப்பட்டிருந்தது. இந்தத் தீர்ப்பினால் பாதிக்கப்பட்ட பெண், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் குரியன் ஜோசப், ஆர்.எப்.நாரிமன் ஆகியோரைக் கொண்ட அமர்வு விசாரித்தது. விசாரணை முடிவில் குடும்ப வன்முறையில் இருந்து பெண்களைக் காக்கும் சட்டத்தின் பிரிவு 2 (கியூ)வில் இருந்து, (அடல்ட் மேல்) வயது வந்த ஆண் என்ற வார்த்தைகளை நீக்கி உத்தரவிட்டனர். இதன் காரணமாக இனி ஆண், பெண் என்ற பாலின பேதங்களோ, வயது வந்தவர், வயதுக்கு வராதவர் என்ற வயது பேதங்களோ இன்றி யார் மீதும் குடும்ப வன்முறைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வழி பிறந்துள்ளது.

இது தொடர்பாக நீதிபதிகள் வழங்கியுள்ள தீர்ப்பின் முக்கிய சாராம்சம் வருமாறு: குறிப்பிட்ட சட்டப்பிரிவில் (அடல்ட் மேல் பெர்சன்) வயது வந்த ஆண் என்ற வார்த்தை இடம் பெற்றிருப்பது, எந்த விதமான குடும்ப வன்முறையில் இருந்தும் பெண்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படை நோக்கத்துக்கு முரணாக அமைந்துள்ளது. எனவே, அடல்ட் மேல் பெர்சன் என்றிருப்பதில் அடல்ட் மேல் என்ற 2 வார்த்தைகளை நீக்குகிறோம். இந்த வார்த்தைகள் பாரபட்சம் காட்டுவதாக அமைந்துள்ளன. இதனால் எந்த நோக்கத்துக்காக இந்தச் சட்டம் இயற்றப் பட்டதோ அதுவே பாதிப்புக்குள்ளாகிறது. எனவே, இந்த வழக்கில் மும்பை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை ரத்து செய்கிறோம். அடல்ட் மேல் என்ற வார்த்தைகள் இந்திய அரசியல் சாசனத்தின் பிரிவு 14உடன் ஒத்துப் போகவில்லை என்பதால் குடும்ப வன்முறை சட்டத்தின் பிரிவு 2(கியூ)வில் இருந்து நீக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி உள்ளனர்.

- பத்திரிகைச் செய்தி

 -உண்மை,1-15.1.17


திங்கள், 24 ஏப்ரல், 2017

ஜாதி அடிப்படையில் தீர்ப்பளிப்பதா? கீழமை நீதிமன்றத்துக்கு உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்

காஞ்சிபுரம், ஏப்.23  ஜாதி அடிப்படையில் தீர்ப்பு வழங்கிய விசாரணை நீதி மன்றத்துக்கு உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதோடு கோயில் கொள்ளை மற்றும் கொலை வழக்கில் அய்ந்து பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையையும் ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், திருமங்கலம் கண்டிகை கிராமத்தில் உள்ள பொன் னியம்மன் கோயிலில், கடந்த 2010 ஜன வரி 2-ஆம் தேதி இரவு கொள்ளை நடந் தது. கொள்ளையர்கள் 5 பேர் கோயில் உண்டியலை உடைத்து கொள்ளையடித்து விட்டு அங்கு காவல் பணியில் இருந்த சுப்பிரமணியை கொலை செய்துவிட்டு தப்பிவிட்டனர்.

இது தொடர்பாக குமார், மாரி, ராஜா, செல்வம் மற்றும் பழனி ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். இந்த 5 பேர் மீதும் சுங்குவார்சத்திரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த காஞ்சிபுரம் மாவட்ட இரண்டாவது அமர்வு நீதி மன்றம், அய்ந்து பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூலை யில் தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து, குமார் தவிர மற்ற நான்கு பேரும் சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, என்.சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு வருமாறு:

இந்த வழக்கில், 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. திருட்டைத் தொழிலாக கொண்ட சமூ கத்தை சேர்ந்தவர்கள் என்பதற்காக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து விசாரணை நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது கேலிக்கூத் தானது மட்டுமல்லாமல் அரசியல் சாசனத்துக்கும் விரோதமானது.

ஆகை யால், இந்த வழக்கில் குற்றம் சாட்டப் பட்ட 5 பேருக்கும் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை ரத்து செய்யப்படுகிறது.

மேலும், ஆதாரங்களை அடிப்படை யாக வைத்து தீர்ப்பு வழங்க வேண்டுமே தவிர சமூகத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கக் கூடாது.

இது போல ஜாதி அடிப்படையில் வழங்கப்படும் தீர்ப்பு இதுவே கடைசியானதாக இருக்கட்டும் என கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், இனி வரும் காலங்களில், ஜாதி அடிப் படையில் எந்த தீர்ப்பும் வரக்கூடாது என்பதற்காக, இந்த உத்தரவை அனைத்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன் றங்களுக்கும் அனுப்பி வைக்க வேண்டும் என, உயர்நீதிமன்ற பதிவுத்துறைக்கு உத்தரவிட்டனர்.

-விடுதலை,23.4.17

ஞாயிறு, 16 ஏப்ரல், 2017

தொழிலாளர்கள் சட்டத்தின் கீழ் பெண்களுக்கு பாதுகாப்பு - ஒரு சட்டபூர்வ ஆராய்ச்சி

சமுதாயத்தில் பாதி ஜனத்தொகை பெண்கள் ஆகும். சிறந்த படைப்புத் திறன் உடையவர்கள் பெண்கள் என கருதப்படுகிறது. அவர்களுடைய வயதுகளின்படி ஒவ்வொரு சமுதாயத்திலும் பெண்கள் கொடுமைப்-படுத்தப்படுகிறார்கள் என்பது ஒரு கடும் உண்மையாகும். இதில் இந்தியா விதிவிலக்கு இல்லை. பெண்களுக்கான பொருளாதார சதந்திரம் மறுக்கப்படுகிறது.

அவர்களுடைய வாழ்க்கைக்கு அவர்கள் ஆண்களைச் சார்ந்தே இருக்கிறார்கள். தொட்டில் முதல் சுடுகாடு வரை பெண்கள் பலவிதமான கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள். அதாவது, குடும்பத்துக்குள்ளும், பணிபுரியும் இடங்களிலும், சமுதாயத்திலும் வேறுபாடுகள், இடைஞ்சல்கள், வன்முறை முதலிய கொடுமைகளை அனுபவிக்கிறார்கள். இந்தியாவில் (தொழிற்சாலை அல்லது பணிபுரியும் இடத்தில்) பெண்களின் நிலைமையை மேம்படுத்த நாடாளுமன்றம் பெருமளவிலான சட்டதிட்டங்களையும், பெண்களுக்கான விசேஷ ஷரத்துக்களையும் கொண்டுவந்துள்ளது.

அவற்றுள்: தொழிலாளர் நஷ்ட ஈடு சட்டம், 1923; கூலி அளித்தல் சட்டம், 1936; தொழிற்சாலைகள் சட்டம், 1948; பிரசவ ஆதாய சட்டம், 1961; குறைந்தபட்ச கூலி சட்டம், 1948; தொழிலாளர்கள் மாநில ஆயுள் காப்பீடு சட்டம், 1948; மற்றும் ஓய்வூதியங்கள் சட்டம், 1987; முதலியன அடங்கும்.

தொழிலாளர் சட்டம் மூலம் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் ஷரத்து.

தொழில்துறை சட்டங்களின்படி பெண்கள் உடலால், மனதால், இயற்கையால் தனிப்பட்ட தன்மைகள் உடையவர்கள் என்பதால் தொழில்முறை சட்டங்களின்படி அவர்களுக்கு  விசேஷ நிலை வழங்கப்படும். பணி சம்பந்தப்பட்ட சில சட்டங்கள் பிரிட்டிஷ் காலத்தில் அமலானது. சில சுதந்திரத்துக்குப் பின்னானது. இந்தச் சட்டங்கள் அமலாக்கத்திற்-கான முக்கிய இலக்குகள் பெண்களின் திறமையை அதிகரித்தல், அவர்கள் உபயோக-மான சேவைகளில் ஈடுபடுதலை அதிகரித்தல், அவர்களுடைய குழந்தைகளின் நலனை உறுதி செய்தல், சம வேலைக்கு சம சம்பளம் போன்றவைகளாகும். பெண்கள் சம்பந்தப்பட்ட முக்கிய தொழிலாளர் சட்டங்கள் கீழ்க்-கண்டவாறு:

1. தொழிற்சாலைகள் சட்டம், 1948

தொழிற்சாலைகள் சட்டம் என்பது தொழிலாளர் நலமும் ஒரு பகுதியாக சேர்ந்தது. அதன்படி ஆரோக்கியம், பாதுகாப்பு, நலன், வேலை நேரங்கள், விடுப்பு, இளைஞர்களையும் பெண்களையும் வேலையில் சேர்த்தல் குறித்து கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவர்களுடைய மிருதுவான, இளகிய தோற்றங்கள் காரணமாக பெண்களுக்காக விசேஷ ஷரத்துகள் இந்த சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு/ஆரோக்கிய திட்டங்கள்

1948இன் தொழிற்சாலைகள் சட்டம் பிரிவு 22(2)இல் பிரைம் மூவர் அல்லது டிரான்ஸ்மிஷன் மெஷினரி வேலை செய்துகொண்டிருக்கும்பொழுது அதை சுத்தம் செய்யவோ, அதன் பகுதிகளுக்கு எண்ணெய் ஊற்றுதலோ, ஏதாவது பகுதியைப் பொருத்தவோ பெண்களை அனுமதிக்கக் கூடாது. ஏனென்றால், அவ்வாறு சுத்தம் செய்யும்-பொழுதும், எண்ணெய் விடும்பொழுதும், பகுதியைப் பொருத்தும் பொழுதும் வேலை செய்து கொண்டிருக்கும் மெஷின் அல்லது அதனை அடுத்துள்ள மெஷின் மூலம் பெண்களுக்கு அடிபடுவதற்கான ஆபத்து உள்ளது. 1948இன் தொழிற்சாலைகள் சட்டம் பிரிவு 27, காட்டன் ஓபனர் பணியில் உள்ளபொழுது தொழிற்சாலையின் எந்தப் பகுதியிலாவது காட்டனை அமிழ்த்தும் பணியில் பெண்களை ஈடுபடுத்துவதைத் தடுக்கிறது.

இரவுநேரப் பணிக்குத் தடை

1948இன் தொழிற்சாலைகள் சட்டம் பிரிவு 66(1)இன்படி காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை அல்லாது தொழிற்சாலையின் எந்தப் பகுதியிலும் பெண்களின் தேவையோ அவர்களை பணிபுரிய அனுமதிப்பதோ கூடாது.

¨    பீடி மற்றும் சிகார் தொழிலாளர்கள் (வேலை நிபந்தனைகள்) சட்டம், 1966 காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை அல்லாது தொழிற்சாலையின் வளாகங்களின் எந்தப் பகுதியிலும் பெண்களின் தேவையோ அவர்-களை பணிபுரிய அனுமதிப்பதோ கூடாது எனக் கூறுகிறது.

¨    1952இன் சுரங்கங்கள் சட்டம் பிரிவு(1)(தீ)  எந்த பெண்களும் சுரங்கத்தின் மேல்பகுதியில் காலை 6 மணி முதல் 7 மணி வரை அல்லாது பெண்கள் பணிபுரிவதைத் தடுக்கிறது.
பெண்களின் பொது நலனுக்கான நிபந்தனைகள்

¨    இரவு நேரங்களில் பெண்களைப் பணியில் அமர்த்துவதைத் தவிர்த்தல்.
¨    ஆபத்து விளையும் இடங்களில் பெண்களைப் பணியில் அமர்த்துவதைத் தவிர்த்தல்.
¨    காட்டன் ஓபனர் பணியில் உள்ள-பொழுது காட்டனை அமிழ்த்தும் பணியில் பெண்களை ஈடுபடுத்துவதைத் தவிர்த்தல்.
¨    தினசரி வேலை நேரத்தை நிர்ணயித்தல்.
¨    பராமரிப்பு அமைப்புகள் அமைத்தல்.

சாதாரணமாக 30 பெண்களுக்கு மேல் பணிபுரியும் தொழிற்சாலை ஒவ்வொன்றிலும் அப்பெண்களின் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் உபயோகத்திற்காக ஒரு உகந்த அறை இருக்க வேண்டும். கழுவுதல். குளித்தல் வசதிகள் இருக்க வேண்டும். பெண்களுக்கு துவைக்கவும், குளிக்கவும் தனி மறைவிடம் இருக்க சட்டம் வற்புறுத்துகிறது. தொழிற்-சாலைகள் சட்டம் ஒரு தொழிற்சாலை முதலாளியை போதுமான எண்ணிக்கையில் கீழ்க்கண்டவைகளைப் பராமரிக்கக் கட்டாயப்-படுத்துகிறது.

¨    பெண்களுக்கு தனி கழிப்பறைகள் மற்றும் சிறுநீர் கழிப்பிடம்.
¨    ஓய்வெடுக்கும் அறைகள், சிற்றுண்டி விடுதிகள்.
¨    அவசியமான ஆதாயங்கள்.

தோட்டத் தொழிலாளர்கள் சட்டம் 1951, சுரங்கங்கள் சட்டம் 1952, பீடி மற்றும் சிகார் தொழிலாளர்கள் (வேலை நிபந்தனைகள்) சட்டம், 1966, ஒப்பந்தத் தொழிலாளர் (விதிமுறை மற்றும் நீக்குதல்) சட்டம் 1970, மாநிலங்கள் இடையில் குடியேறும் தொழிலாளர்கள் (பணி விதிமுறை மற்றும் பணிகளின் நிபந்தனைகள்) 1979இல் மேற்கூறிய எல்லா ஷரத்துக்களும் கூறப்பட்டுள்ளன.

2. தொழிலாளர்கள் மாநில காப்பீட்டு சட்டம், 1948

இந்தியாவின் ஒரு மிக முக்கியமான சமூக சட்டபூர்வ அமைப்பான தொழிலாளர்கள் மாநில காப்பீட்டு சட்டம் வெவ்வேறு நிகழ்வுகளுக்கான பல்வேறு ஆதாயங்கள் அளிப்பதற்காக அமலாக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் கீழ் காப்பீடு செய்த பெண் தொழிலாளர்களுக்கு கிடைக்கும் பிணி ஆதாயம், செயலிழப்பு ஆதாயம், மருத்துவ ஆதாயம், இறுதிச் சடங்கு செலவுகள் ஆதாயம் என்பவை காப்பீடு செய்த ஆண் தொழிலாளர்-களுக்கும் கிடைக்கும். இருந்தபோதிலும், இந்த ஆதாயங்கள் அல்லாது, காப்பீடு செய்த பெண் தொழிலாளர்களுக்கு, பிரசவ ஆதாயம், பிரசவ சமயத்தில் ஏற்படும் அவசர சிகிச்சைகள், கருவுறுதல், கருச்சிதைவு, கருவுறுதலின் மூலம் ஏற்படும் வியாதிகளான குறைப்பிரசவம், கருச்சிதைவு அல்லது இறப்பு முதலியவற்றுக்-கான உதவிகள் கிடைக்கும். காப்பீடு செய்த பெண்களுக்கு பேறு காலத்தில் பிரசவ ஆதாயம் 12 வாரங்கள். அதில் எதிர்பார்க்கும் பிரசவ தேதியிலிருந்து 6 வாரங்கள் முன்பு முதல் கிடைக்கும். காப்பீடு செய்த பெண்கள் அந்த நாள்களில் சம்பளத்திற்காக பணிபுரியாமல் இருந்தால் பிரசவ ஆதாயம் கொடுக்கப்படும். ஒரு காப்பீடு செய்த பெண் இறந்துவிட்டால், பிரசவ ஆதாயம் அவரால் நியமிக்கப்-பட்டவருக்கோ சட்டபூர்வ பிரதிநிதிக்கோ குழந்தை உயிருடன் இருந்தால் முழுக்காலத்-திற்கும், குழந்தை இறந்துவிட்டால், அது வாழ்ந்த வரைக்குமான காலத்துக்கும் கொடுக்கப்படும்.
தொழிலாளர்கள் மாநில காப்பீட்டு சட்டம், 1948இல் கொடுக்கப்பட்டுள்ள திட்டப்படி பணிபுரிபவர்களின் இடங்களில் உள்ள மருந்தகங்கள் மருத்துவமனைகளை நடத்தும் காப்பீட்டுக் கழகத்திற்கு மாதாந்தர சம்பளத்தின் குறிப்பிட்ட சதவீதம் முதலாளியும் தொழிலாளியும் பங்களிப்பு செலுத்த வேண்டும். இதன் மூலம் புறநோயாளி, உள்நோயாளி கவனிப்பு, இலவச மருந்துகள், மருத்துவமனை தேவைகள், செலவுகள் செய்ய இயலும். உடல்நிலை காரணங்களுக்காக முதலாளிகளுக்கு அனுப்பப்படும் விடுப்பு சான்றிதழ்களை அவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். வேலை பார்க்கும் இடத்தில் ஏற்படும் காயங்கள், பணி சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு, காயத்தின் தன்மை மற்றும் சம்பாதிக்கும் திறனில் ஏற்பட்ட நஷ்டத்திற்கு பட்டியலிடப்பட்ட விகிதத்தின் அடிப்படையில் நஷ்டஈடு வழங்கப்படும். தொழிலாளர்கள் நஷ்டஈடு சட்டம்போல் அல்லாது பணம் மாதாமாதம் கொடுக்கப்படும். இந்தத் திட்டம் செயல்படுவதை மேற்பார்வை செய்ய மும்முனை அங்கங்களின் அமைப்பு இருந்தபோதிலும், மொத்த செயல்திட்டத்திற்கு இலஞ்சம், திறமைக்குறைவு காரணமாக அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. மருத்துவ விடுப்புக்காக தாராளமாக இதனை உபயோகிக்கும் தொழிலாளிகள், நியாயமான மருத்துவ சிகிச்சைக்காக இந்த வசதியை அணுகுவதில்லை. ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் தொழிலாளர்கள் ஒட்டு-மொத்த பேரம் மூலம் இதைவிட அதிக வசதிகள் பெற இந்த திட்டத்தில் இருந்து விதிவிலக்கு பெற நீதிமன்றத்தை நாடுகிறார்கள்.

- நன்றி: லாயர்ஸ் லைன், மார்ச் 2016
-உண்மை இதழ்,1-15.7.16