ஞாயிறு, 28 ஜூன், 2026

மதம் மாறியவருக்கு ‘பிசி-முஸ்லிம்’ என ஜாதிச் சான்றிதழ் வழங்கும் அரசாணை ரத்து! நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு தீர்ப்பு!




மதுரை, ஜூன் 28- வேறு மதத்தில் இருந்து முஸ்லிம் மதத்துக்கு மாறியவருக்கு பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் என ஜாதிச் சான்றிதழ் வழங்கும் அரசாணையை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி தெற்கு இலந்தை குளத்தைச் சேர்ந்த பரமசிவம் என்பவர் கடந்த 2015இல் முஸ்லிம் மதத்துக்கு மாறி, பெயரை சமீர் அகமது என மாற்றிக் கொண்டார். அதன்பின்னர், பிற்படுத்தப்பட்டோர் முஸ்லிம் பிரிவில் ‘முஸ்லிம் லெப்பை’ என சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தார். அவரது மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், முஸ்லிம் லெப்பை என சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்து நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.பி.பாலாஜி அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவு:

தமிழ்நாடு அரசு 2024 மார்ச் 9ஆம் தேதி பிறப்பித்த அரசாணை அடிப்படையில், மனுதாரர் தனக்கு பிற்படுத்தப்பட்டோர் முஸ்லிம் சான்றிதழ் கோரி மனு அளித்துள்ளார்.

அரசாணையில், ‘பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர் அல்லது பட்டியல் ஜாதிப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த 7 பிரிவுகளில் ஏதேனும் ஒன்றுக்கு மாறும்போது அவர்களுக்கு ‘பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம்கள்’ என சான்றிதழ் வழங்கலாம்’ என்று கூறப்பட்டுள்ளது.

மதம், இனம், ஜாதி, பிரிவு, பிறந்த இடம் அடிப்படையில் பாகுபாடு காட்டுவதை இந்திய அரசியலமைப்புச் சட்டம் தடை செய்கிறது. அதேநேரம், சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கிய குடிமக்கள் அல்லது பட்டியல் ஜாதியினர் அல்லது பட்டியல் பழங்குடியினரின் முன்னேற்றத்துக்காக சிறப்பு சலுகைகள் வழங்க அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த இடஒதுக்கீடு விசயத்தில் தமிழ்நாடு அரசு கவனமாக செயல் பட்டுள்ளது. முஸ்லிம் மதத்தைப் பின்பற்றும் அனைவரையும் பிற்படுத்தப் பட்ட வகுப்பினர் பிரிவில் சேர்க்காமல், குறிப்பிட்ட சில பிரிவுகளை மட்டுமே பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவில் சேர்த்துள்ளது.

அரசாணையில், ‘பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர் அல்லது பட்டியல் ஜாதியினர் பிரிவில் இருந்து முஸ்லிம் மதத்துக்கு மாறிய ஒருவர் இடஒதுக்கீட்டுச் சலுகையைப் பெற ‘பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்)’ எனக் கருதலாம். மதம் மாறிய பிறகு லெப்பை உள்ளிட்ட 7 பிரிவுகளில் ஒன்றைச் சேர்ந்தவர் என்பதற்கான ஜாதிச் சான்றிதழ் வழங்கலாம்’ என்றும் கூறப்பட்டுள்ளது. இது சட்டப்படி செல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

‘இந்து மதம்போல அல்லாமல் தங்களது மதங்கள் சமூக சமத்துவத்தை அளிப்பதாக கிறிஸ்தவ மிஷனரிகளும், முஸ்லிம் பிரச்சாரகர்களும் கூறி வருகின்றனர்.

மதமாற்றத்தை ஊக்குவிக்கும் இத்தகைய நிலைப்பாடு இருக்கும்போது, முஸ்லிம் மதத்திலும் படிநிலை அமைப்பு உள்ளது என்பது நேர்மையற்றது. முஸ்லிம் மதத்தில் சில பிரிவுகளை ‘பிற்படுத்தப்பட்டவை’ என்றும், மற்றவற்றை ‘முன்னேறியவை’ என்றும் வகைப்படுத்துவது குர்ஆனின் கட்டளை களுக்கு முரணானது. இஸ்லாம் ஒரு சமத்துவ சமுதாயத்தை உருவாக்கவே விழைகிறது. இறைவனின் பார்வையில் அனைவரும் சமம். அங்கு சமூகப் படிநிலைகள் ஏதும் இல்லை.

இருப்பினும், வரலாற்று ரீதியான காரணங்களால், முஸ்லிம் சமூகமும் பல்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட் டுள்ளன. இது இந்து மதத்தில் உள்ள ஜாதி அமைப்புக்கு இணையானவை என்றுகூட துணிந்து கூறலாம். ஜாதி எவ்வாறு பிறப்பால் தீர்மானிக்கப்படுகிறதோ, அதேபோல ஒருவர் பிறப்பாலேயே லெப்பை, ராவுத்தர், மரைக்காயர் அல்லது தக்காணி முஸ்லிமாக அறியப்படுகிறார்.

சென்னை உயர் நீதிமன்றம் 75 ஆண்டுகளுக்கு முன்பு பிறப்பித்த உத்தரவில், ‘முஸ்லிம் மதத்துக்கு மாறியவுடன் ஒருவர் முஸ்லிம் ஆகிறார்’ என்று கூறப்பட்டுள்ளது. அவரை ஒரு குறிப்பிட்ட பிரிவுக்குள் அடக்க முடியாது. இந்த உத்தரவு அமலில் இருக்கும்போது, வெறும் அரசாணையால் நீதிமன்ற உத்தரவை மாற்றியமைக்க முடியாது.

சட்டம் நிறைவேற்ற சட்டப் பேரவைக்கு அதிகாரம், தகுதி இருந்தாலும் அரசு நிர்வாகத்துக்கு அத்தகைய உரிமை இல்லை. அரசு நிர்வாகம் ஒரு போதும் நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கு எதிராக செயல்பட முடியாது. அரசுக்கு எதிரான முடிவாக இருப்பதாக கூறி அதை மீறுவதற்கு நினைத்தால், அது சட்ட ஆட்சியின் முடிவுக்கு வழிவகுக்கும்.

முஸ்லிம் மதத்துக்கு மாறியவர்கள் ஏதேனும் ஒரு வகையான இடஒதுக்கீட்டுப் பலனை தொடர்ந்து பெறுவதை உறுதி செய்ய மட்டுமே மாநில அரசு இத்தகைய அணுகுமுறையை மேற்கொண்டுள்ளது. எனவே, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை கடந்த 2024 மார்ச் 9ஆம் தேதி பிறப்பித்த அரசாணை அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணானது.

அந்த அரசாணை ரத்து செய்யப் படுகிறது. இதனால், முஸ்லிமாக மதம் மாறிய ஒருவர் ‘பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த முஸ்லிம்’ என்ற அந்தஸ்தை கோர முடியாது. அவர் ஒரு முஸ்லிம் மட்டுமே. அதைத் தவிர வேறு எதுவும் இல்லை. இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

சனி, 7 பிப்ரவரி, 2026

சாலைகள், தெருக்களை ஆக்கிரமித்து மத வழிபாட்டுக் கட்டடங்கள் அமைப்பதை நியாயப்படுத்த முடியாது: உயர்நீதிமன்றம்

 சென்னை, ஜன.28  சாலைகள், தெருக்களை ஆக்கிரமித்து மத வழிபாட்டுக் கட்டடங்கள் அமைப்பதை நியாயப்படுத்த முடியாது என்று உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

சென்னை திரு.வி.க. நகர் பகுதியைச் சேர்ந்த சரத் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் தனது வீட்டுக்கு முன் தெருவை ஆக்கிரமித்து அன்னை வேளாங்கண்ணி சிலை அமைக்கப்பட்டுள்ளதாகவும் அதனை அகற்ற உத்தரவிடக் கோரியும் மனுதாரர் கோரிக்கை வைத்திருந்தார். இந்த மனு நேற்று (27.1.2026) விசாரணைக்கு வந்தது.

அப்போது சென்னை மாநகராட்சி தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், வேளாங்கண்ணி சிலை அமைத்துள்ள இடம் அரசு நிலமாகும்; பொது சாலை என வகைப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இதனை கேட்ட நீதிபதிகள், ‘‘சாலைகள், தெருக்களை ஆக்கிரமித்து மத வழிபாட்டுக் கட்டடங்கள் அமைப்பதை நியாயப்படுத்த முடியாது. பொதுப் பாதையில் மத கட்டமைப்புகள் கட்டுவதற்கு எந்த நபருக்கும் உரிமை இல்லை. மத உணர்வுகளை காரணமாகக் கூறி ஆக்கிரமிப்புகளை நியாயப்படுத்த முடியாது.

திரு.வி.க. நகரில் தெருவை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள அன்னை வேளாங்கண்ணி சிலையை அகற்றுவதற்கு உரிய உத்தரவு பிறப்பிக்க சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிடுகிறோம்’’ என்று நீதிபதிகள் தெரி வித்தனர்.

- விடுதலை நாளேடு,28.01.2026

செவ்வாய், 16 டிசம்பர், 2025

50 ஆண்டுகள் வசித்தாலும்… வாடகைக்கு இருப்போர் அந்த வீட்டை சொந்தம் கொண்டாட முடியாது உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

 


புதுடில்லி, நவ.13- வாடகைக்கு இருப்போர் அந்த வீட்டை சொந்தம் கொண்டாடுவதைத் தடுக்கும் வகையில் உச்ச நீதிமன்றம் ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. அதாவது ஒருவர் வாடகை வீட்டில் அய்ந்து ஆண்டுகள் வசித்தாலும் சரி, அய்ம்பது ஆண்டுகள் வசித்தாலும் சரி, அதை ஒருபோதும் சொந்த வீடாக உரிமைகோர முடியாது என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

வாடகை வீடு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் மிக முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. அதாவது ஒருவர் எத்தனை ஆண்டுகள் ஒரு வீட்டில் வாடகை கொடுத்து இருந்தாலும் அதை உரிமை கோர முடியாது எனத் தெளிவுபடுத்தியுள்ளது. இது பல காலமாக இருந்த குழப்பங்களுக்கும், சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைப்பதாக இருக்கிறது..

உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில், “ஒரு நபர், உரிமையாளரின் அனுமதி யுடன் மட்டுமே அந்தச் சொத்தில் (வீட்டில்) வசிக்கிறார்; எனவே, ‘அட்வெர்ஸ் பொசசன்’ (adverse possession) விதி இங்குப் பொருந்தாது” என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

ஜோதி ஷர்மா என்ற வீட்டு உரிமையாளர், தனது வீட்டில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்த விஷ்ணு கோயல் என்பவருக்கு எதிராக இந்த வழக்கைத் தொடர்ந்திருந்தார். 30 ஆண்டுகளாக வாடகைக்கு இருக்கும் கோயல் இப்போது வீட்டைச் சொந்தம் கொண்டாடுவதாகவும் இதனால் அவரை வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என வழக்குத் தொடர்ந்தார்.

பின்னணி

கோயல் தனது வாதத்தில், 1980கள் முதல் அவர் தொடர்ந்து அங்கு வசித்து வருவதாகவும், வாடகை செலுத்துவதை நிறுத்திய பிறகும் வீட்டு உரிமையாளர் தன் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காததால், அட்வெர்ஸ் பொசசன் விதியின் கீழ் தான் அந்தச் சொத்து தனக்கே சொந்தம் என வாதத்தை முன்வைத்தார்.

லிமிட்டேஷன் சட்டம், 1963இன் கீழ், ஒருவர் 12 ஆண்டுகள் தொடர்ந்து மற்றும் வெளிப்படையாக உரிமையாளரின் அனுமதியின்றி ஒரு இடத்தில் வசித்து அல்லது ஆக்கிரமித்திருந்தால், அந்த நபரே அந்தச் சொத்தின் உரிமையைக் கோர முடியும். இந்த சட்டத்தை மேற்கோள் காட்டியே கோயல் வீடு தனக்கே சொந்தம் என்ற வாதத்தை முன்வைத்தார்.

சட்டம் பொருந்தாது

இருப்பினும், இதைத் திட்ட வட்டமாக மறுத்த ஷர்மா, தொடக்கம் முதலே கோயல் வாடகை கொடுத்தே வசித்து வந்தார் என்றார். மேலும், தனது அனுமதி உடனேயே வசித்து வந்ததால் இந்த இடத்தில் ‘அட்வெர்ஸ் பொசசன்’ சட்டத்தின் கீழ் உரிமையாளராக மாற முடியாது என்று வாதிட்டார். இந்த வழக்கு கீழமை நீதிமன்றத்தில் ஆரம்பித்து இப்போது உச்சநீதிமன்றம் வரை சென்றுவிட்டது. ஒவ்வொரு நீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பை அளித்த நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி மற்றும் கே. வினோத் சந்திரன் இதில் மிகத் தெளிவான தீர்ப்பை வழங்கினர்.

உச்ச நீதிமன்றம்

வீட்டின் உரிமையாளரான ஷர்மாவுக்கு ஆதரவான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் அளித்தது. அதில் வாடகை என்பது சட்ட உறவு என்றும் உரிமையாளரின் சம்மதத்துடனேயே ஒருவர் வசிப்பதால், இது ‘அட்வெர்ஸ் பொசசன்’ கீழ் வராது என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், நீண்ட காலம் ஒரு வீட்டில் வாடகைக்கு இருக்கிறார் என்பதாலேயே… அவர் அந்த வீட்டின் உரிமையாளராக மாற்ற முடியாது என்பதை நீதிபதிகள் தெளிவாகத் தெரிவித்தனர்.

பல்வந்த் சிங் Vs பஞ்சாப் மாநிலம் (1986) மற்றும் ரவீந்தர் கவுர் கிரேவால் Vs மன்ஜித் கவுர் (2019) போன்ற வழக்குகளிலும் ‘அட்வர்ஸ் பொசசன்’ கீழ் வர வேண்டும் என்றால் ஒருவர் உரிமையாளர் அனுமதி இல்லாமல் குறிப்பிட்ட சொத்தில் இருந்திருக்க வேண்டும் என்பதையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

இது வாடகை வீடு தொடர்பான விவகாரங்களில் மிக முக்கியமான ஒரு தீர்ப்பாகக் கருதப்படுகிறது. எதிர்காலத்தில் இதுபோன்ற தவறான உரிமை கோரல் வழக்குகளைத் தடுக்க உச்ச நீதிமன்றம் மிகத் தெளிவாகவே இந்த வழக்கில் தீர்ப்பை வழங்கியுள்ளதாகச் சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

-விடுதலை நாளேடு,13.11.25

சனி, 1 நவம்பர், 2025

குறிப்பிட்ட ஜாதியினருக்கே அர்ச்சகர் பணி என்பது கட்டாய மத நடைமுறை அல்ல! -கேரள உயர்நீதி மன்ற தீர்ப்பு

 

கேரள உயர்நீதி மன்றத்தின் வரவேற்கத்தக்க தீர்ப்பு!


குறிப்பிட்ட ஜாதியினருக்கே அர்ச்சகர் பணி என்பது

கட்டாய மத நடைமுறை அல்ல!

திருவனந்தபுரம், அக். 25- “அர்ச்சகர்கள் குறிப்பிட்ட ஜாதி அல்லது பரம்பரையைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்ற கட்டாய மத நடைமுறை எதுவும் இல்லை” என்று கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

“தகுதியின் அடிப்படையில் நியமனங்கள் செய்வது அரசியலமைப்பு கூறும் சமத்து வத்தை உறுதி செய்யும். ஜாதிக்கும் பாரம்பரி யத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது” என்றும் கூறியிருக்கும் நீதிபதிகள், இதுதொடர் பான விவகாரத்தில், அகில கேரள தந்திரி சமாஜம் (AKTS) தாக்கல் செய்த ரிட் மனு வையும் அதிரடியாக தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

2023-2024ஆம் ஆண்டில் 75 பகுதி நேர சாந்திகள் (அர்ச்சகர்கள்) நியமன நட வடிக்கைகளை கேரள தேவசம் ஆட்சேர்ப்பு வாரியம் (KDRB) மேற்கொண்டது. அப்போது பகுதிநேர சாந்திகளாக நியமிக்கப்படு வதற்கு, எஸ்எஸ்எல்சி கல்வித் தகுதியுடன், திருவாங் கூர் தேவசம் வாரியம் (TDB) மற்றும் கேரள தேவசம் ஆட் சேர்ப்பு வாரியத்தால் அங்கீ கரிக்கப்பட்ட தந்திர வித்யா பீடங்கள் வழங்கும் அனுபவச் சான்றிதழ்கள் போதுமானது என்று அறிவித்திருந்தது.

பாரம்பரிய வேதப் பள்ளிகளைச் சேர்ந்த மாண வர்கள் விடுபடுவார்கள் என்று தந்திரி சமாஜம் கவலை தெரிவித்தபோது, அந்த மாணவர்களும் விண்ணப்பிக்க அரசு அனுமதித்தது. எழுத்துத் தேர்வுக்கு கூடுதலாக, சடங்கு சம்பிரதாயங்கள் பற்றிய அறிவை மதிப்பீடு செய்து குறுகிய பட்டியல் தயாரிக்கப்பட்டது.

கடந்த 22.10.2025 அன்று விசாரணைக்கு வந்தது

இதனிடையே, அர்ச்சகர் பணிக்கு ‘தந்திர வித்யாலயாக்கள்’ வழங்கும் அனுபவச் சான்றி தழை அங்கீகரிக்கும் திருவாங்கூர் தேவசம் வாரியம் (TDB), கேரள தேவசம் ஆட்சேர்ப்பு வாரியம் ஆகியவற்றின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அகில கேரள தந்திரி சமாஜம் கேரள உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. இந்த மனு, நீதிபதிகள் வி. ராஜா விஜயராகவன், நீதிபதி கே.வி.ஜெயக்குமார் ஆகியோர் அடங்கிய இரண்டு நீதிபதிகள் அமர்வில் கடந்த 22.10.2025 அன்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர்கள் தரப்பில் வழக்குரைஞர் கே.ஆர். ராஜ்குமார் உள்ளிட்டோர் ஆஜராகினர். “கேரளத்தில் உள்ள சுமார் 300 பாரம்பரிய தந்திரி குடும்பங்களை உள்ளடக்கிய பதிவு செய்யப்பட்ட சங்கமான அகில கேரள தந்திரி சமாஜ மான தாங்கள் தான், தலைமுறை தலை முறையாக அர்ச்சகர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறோம். ஆனால் பாரம்பரிய தந்திரி சமூகம் உள்ளிட் டோரை ஆலோசிக்காமல் தந்திர வித்தியா பீடம் அங்கீகரிக்கப்பட்டு உள்ளது. தாந்ரீகக் கல்வியை வழங்கும் நிறுவன ங்களை மதிப்பிடுவதற்கோ அல்லது அங்கீகரிப்பதற்கோ கேரள தேவசம் ஆட்சேர்ப்பு வாரியத்திற்கு நிபுணத்துவம் இல்லை” என்று அவர்கள் வாதங்களை வைத்தனர்.

திருவிதாங்கூர் தேவசம் வாரியத்தின் சார்பில் வழக்குரைஞர்  ஜி. பிஜு, கேரள தேவ சம் ஆட்சேர்ப்பு வாரியத்தின் சார்பில் வி.வி.நந்தகோபால் உள்ளிட்டோர் ஆஜராகினர். அவர்கள், “அர்ச்சகர் பணியில், ஒதுக்கப்பட்ட சமூகங்களிலிருந்து போதிய பிரதிநிதித்துவம் இல்லை என்பதையும், அவர்களை அர்ச்சகர் பணிக்கு தயார்ப்படுத்துவதற்கான பாடத்திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த அமைப்பு இல்லாததை கவனத்தில் கொண்டே தந்திரி கல்வியை வழங்கும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் பட்டியலை விரிவுபடுத்த முடிவு செய்தது.

ஓர் ஆண்டு பாடத் திட்டம்!

அதன்படி, தந்திரிகளைக் கொண்ட ஒரு நிபுணர் குழுவின் மூலம், ஓர் ஆண்டு பாடத்திட்டத்தை வகுத்து பயிற்சி அளிக்கும் ‘தந்திர வித்யா பீடங்கள்’ போன்ற நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது. கேரள தந்திரி சமாஜத்தால் பயிற்சி அளிக்கப்பட்டவர்களும், அர்ச்சகர் பணிக்கு விண்ணப்பிக்கவும் தேர்வு எழுதவும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாரம்பரிய நடைமுறைகளை ஒழிக்காமல், அதேநேரத்தில் தகுதியின் அடிப்படையில் நியமனங்கள் செய்யப்படுகின்றன. ஆனால், இதனை எதிர்த்து மனுத்தாக்கல் செய்துள்ள அகில கேரள தந்திரி சமாஜம் என்பது முழுக்க முழுக்க பார்ப்பனர்களை மட்டுமே உறுப்பினர்களாகக் கொண்டிருக்கும் அமைப்பாகும்.

கேரள அரசுத் தரப்பில்…

அர்ச்சகர்கள் நியமனத்தை தங்களின் பரம்பரை பாத்தியதையாக கருதும் இந்த அமைப்பு, குறிப்பிட்ட பிரிவினரை அர்ச்ச கர்களாக நிலை நிறுத்தும் நோக்கத்தின் அடிப்ப டையிலேயே மனுத்தாக்கல் செய்துள்ளது. தகுதியைக் கருத்தில் கொள்ளாமல், ஏழு தலைமுறைகளாக தாந்ரீக பூஜை செய்து வரும் தந்திரி குடும்பங்களுக்கே அர்ச்சகர்களை நியமிக்கும் அதிகாரம் உள்ளதாக அவர்கள் கருதுகின்றனர்” என்று கேரள அரசுத் தரப்பில் வாதங்களை வைத்தனர்.

இந்த வாதங்கள் அனைத்தையும் கேட்ட நீதிபதிகள், “அர்ச்சகர்கள் நியமனத்திற்குத் தகுதி பெற ஒரு நபர் ஒரு குறிப்பிட்ட ஜாதி அல்லது பரம்பரையைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்று வலியுறுத்து வதை, ஓர் அத்தியாவசிய மத நடைமுறை, சடங்கு அல்லது வழிபாட்டு முறையை வலியுறுத்துவதாகக் கருத முடியாது.

அரசியலமைப்பிற்கு முந்தைய காலத்தி லிருந்தே எந்தவொரு வழக்கமோ அல்லது பழக்கவழக்கமோ இருந்தாலும், அது மனித உரிமைகள், கண்ணியம் அல்லது சமூக சமத்து வத்தின் அரசியலமைப்புக் கொள்கைகளை மீறுவதாகக் கண்டறியப்பட்டால், அதனை அங்கீகரிக்க முடியாது.

அரசியலமைப்புச் சட்டத்தின்
அங்கீகாரத்தைப் பெற முடியாது

அடக்குமுறையான, தீங்கு விளைவிக்கும், பொதுக் கொள்கைக்கு முரணான அல்லது நாட்டின் சட்டத்தை இழிவுபடுத்தும் எந்தவொரு வழக்கமோ அல்லது நடைமுறையோ, அரசிய லமைப்புச் சட்டத்தின் அங்கீகாரத்தைப் பெற முடியாது.

எங்களைப் பொறுத்தவரை, கோயிலில் அர்ச்சகர்களாக நியமனம் செய்ய தகுதியானவர்கள் என சான்ற ளிக்கும் தந்திர வித்யாலயா முறை ஒரு முழுமையான செயல்முறையாகவே தோன்றுகிறது. பாடத்திட்டத்தை வெற்றிகரமாக முடிக்கும் மாணவர்கள், கோயில் கடமைகளை மேற்கொள்வதற்கான அவர்களின் தயார்நிலை யைக் குறிக்கும் வகையில், தீட்சை விழாக்க ளுக்கும் உட்படுத்தப்படுகிறார்கள்.

மேலும், அத்தகைய தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கூட, இறுதித் தேர்வு மற்றும் முறையாக அமைக்கப்பட்ட குழு வால் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படு கின்றனர்.

இதில் கற்றறிந்த அறிஞர்களைத் தவிர, ஒரு புகழ்பெற்ற தந்திரி குழுவும் அடங்கும். இந்தப் பின்னணியில், பாரம்பரிய அர்ச்சர்களின் கீழ் பயிற்சி பெற்ற நபர்களை மட்டுமே சாந்திகளாக நியமிக்க வேண்டும் என்ற மனுதாரர்களின் வாதத்தை நீதிமன்றம் நிராகரிக்கிறது’’ என்று தீர்ப்பளித்தனர்.

- விடுதலை நாளேடு,25.10.25

திங்கள், 21 ஏப்ரல், 2025

அரசு ஆணைகள், சுற்றறிக்கைகள் இனிமேல் தமிழில் மட்டுமே! தமிழ்நாடு அரசு திட்டவட்டம்


விடுதலை நாளேடு Published April 17, 2025
தமிழ்நாடு

சென்னை, ஏப்.17- அரசாணைகள், சுற்றறிக் கைகள் தமிழில் மட்டுமே இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தர விட்டு உள்ளது.

அரசாணை

இதுதொடர்பாக தமிழ் வளர்ச்சி துறை அரசு செயலாளர் ராஜா ராமன், அனைத்து அரசு துறை செயலாளர்க ளுக் கும், மாவட்ட ஆட்சி யர்களுக்கும் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்ப தாவது:-

தமிழ் ஆட்சி மொழி சட்டத்தை முழு மையாக நடைமுறைப்படுத்தவும், அரசு அலுவலகங்களில் அனைத்து நடவடிக்கை களிலும் தமிழ் மொழியை பயன்படுத்தவும் பின்வரும் அறிவுறுத்தல்களை தவ றாமல் பின்பற்ற வேண்டும்.

அந்த வகையில், அரசாணைகள் தமிழில் மட்டுமே வெளியிடப்பட வேண் டும். சுற்றறிக்கை குறிப்புகள் தமிழிலேயே இருக்க வேண்டும். துணை, தலைமை அலு வலகங்களில் இருந்து அரசு மற்றும் பிற அலு வலகங்களுக்கு அனுப்பப் படும் கருத்துரைகள், தமிழிலேயே இருக்க வேண்டும்.

தமிழில் கையெழுத்து

வெளியிடப்படும் கடிதங்கள், அலுவலக ஆணைகள் மற்றும் இதர கடிதபோக் குவரத்துகள் ஆகியவை விலக்களிக்கப் பட்ட இனங்கள் தவிர எல்லா இனங்களிலும், தமிழில்தான் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பொது மக்களிடம் இருந்து தமிழில் வருகின்ற கடிதங்களுக்கு தமிழிலேயே பதில் எழுதுவதுமில்லாது அது குறித்த குறிப் புகள் தமிழிலேயே இருக்க வேண்டும்.

அரசு பணியாளர்கள் அனைத்து ஆவணங்களி லும் தமிழில் மட்டுமே கையொப்பமிட வேண் டும். ஆங்கிலத்தில் வெளி யிடப்படும் அரசா ணைகளை, தமிழில் வெளியிடுவதற்கு ஏதுவாக தமிழ் வளர்ச்சி மற்றும் செய் தித்துறையின் மொழி பெயர்ப்பு பிரிவு மூலம் தமிழாக்கம் செய்வதற்கு அனுப்பி வைக்கவும் அல்லது அந்தந்ததுறைகளா லேயே தமிழில் மொழி பெயர்க்கப்படும் அரசா ணைகளை தேவை இருப்பின் கூர்ந்தாய்வு செய்யும் பொருட்டு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறையின் மொழி பெயர்ப்பு பிரிவுக்கு அனுப்பி வைக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

புதன், 19 மார்ச், 2025

தமிழ்நாட்டில் அரசுப் பணியில் சேர தமிழ் பேச, எழுத தெரிந்திருக்க வேண்டும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து


விடுதலை நாளேடு

 மதுரை, மார்ச் 11 தமிழ் நாட்டில் அரசு பணிகளில் சேர தமிழில் பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரி வித்துள்ளனர்.

பணி நீக்கம்

தேனியை சேர்ந்த ஜெய்குமார், உயர் நீதி மன்ற மதுரை அமர்வில் ஒரு மனு தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவில் “நான் தேனி மின்வாரிய அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியில் சேர்ந்தேன். பணியில் சேர்ந்த 2 ஆண்டுகளில் தமிழ் மொழித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அவ்வாறு தேர்ச்சி பெறாததால் என்னை பணியிலிருந்து விடுவித்து உத்தரவிட்டனர். தற்போது டிஎன்பிஎஸ்சி நடத்திய மொழித் தேர்வில் வெற்றி பெற்றுள்ளேன். என்னை மீண்டும் பணியில் சேர்க்க உத்தரவிட வேண்டும்,” என்று கூறியிருந்தார்.

மேல் முறையீடு

மனுவை விசாரித்த தனி நீதிபதி, ஜெய்குமாரை மீண்டும் பணியில் சேர்க்க உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து மின்வாரியம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல் முறையீட்டு மனு நீதிபதிகள் ஜெயசந்திரன், பூர்ணிமா அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், “மனுதாரரின் தந்தை கப்பற் படையில் பணிபுரிந்தவர். இடமாறுதல் காரண மாக சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் படித்ததால் தமிழ் கற்கவில்லை. தற்போது தமிழ் மொழித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள் ளார். எனவே பணியில் சேர்க்க வேண்டும்” என வாதிடப்பட்டது.

தமிழ் கட்டாயம்

பின்னர் நீதிபதிகள், “தமிழ்நாட்டில் அரசுப் பணியில் சேர, தமிழ் மொழி பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். தமிழ்நாட்டில் அரசுப் பணியாளர்களுக்கு தமிழ் தெரியாது என்றால் என்ன செய்வது? அவரால் எப்படி அன்றாட பணிகளை மேற்கொள்ள முடியும்? தமிழ்நாட்டில் மட்டும் அல்ல, எந்த மாநிலத்திலும் அரசுப் பணியில் இருப்பவர்கள் அந்த மாநில மொழி தெரிந்து இருக்க வேண்டும். தெரியாவிட்டால் குறிப் பிட்ட கால அளவுக்குள் மாநில அரசு சார்பில் நடத் தப்படும் மொழித் தேர்வில் வெற்றி பெற வேண்டும். ஒரு மாநி லத்தின் அலுவல் மொழி தெரியாமல் அரசுப் பணிக்கு ஆசைப்படுவது ஏன்?” எனக் கூறி இறுதி விசாரணையை ஒத்தி வைத்தனர்.

வெள்ளி, 14 மார்ச், 2025

அனைத்துப் பள்ளிகளிலும் தெலுங்கு மொழி கட்டாயம்: தெலங்கானா அரசு உத்தரவு

மொழிப் பிரச்சினை தலைதூக்குகிறது

 அனைத்துப் பள்ளிகளிலும் தெலுங்கு மொழி கட்டாயம்: தெலங்கானா அரசு உத்தரவு

தெலங்கானாவில் அனைத்துப் பள்ளிகளிலும் தெலுங்கு மொழிப் படிப்பை கட்டாயமாக்கி கடந்த 2018இல் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டம் முறையாக அமல் படுத்தப்படவில்லை. தேசிய கல்விக் கொள்கையில் உள்ள மும்மொழிப் பிரச்சினையால், தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு நிதி தர மறுத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து தாய் மொழியை காக்க அனைத்து மாநில அரசுகளும் நடவடிக்கை எடுக்கத் துவங்கிவிட்டன. இந்த நிலையில், தெலங்கானா பள்ளிகளில் தெலுங்கு மொழிப் பாடத்தைக் கட்டாயமாக்கி மாநில கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. வருகின்ற 2025-2026 கல்வியாண்டு முதல் தெலங்கானா மாநிலத்தில் இயங்கும் சிபிஎஸ்இ, ஏய்சிஎஸ்இ உள்ளிட்ட அனைத்து வகையான பள்ளிகளிலும் 1 முதல் 10ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் தெலுங்கு மொழி கட்டாயப் பாடமாக இருக்க வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.