செவ்வாய், 13 மார்ச், 2018

இந்துக் கோவில்களின் பணத்தை எடுத்து அரசால் செலவு செய்யப்படுகின்றதா?

ஊன்றிப் படித்து உண்மையை உணருங்கள்! - 2

இந்துக் கோவில்களின் பணத்தை எடுத்து

அரசால் செலவு செய்யப்படுகின்றதா?



இந்து சமய அறநிலையைக் குறித்து எழுப்பப்படும் ஒரு முக்கியமான குற்றச்சாட்டு, அந்தத் துறையின் பணத்தை எடுத்து பிற துறைகளுக்கு செலவழிக்கிறார்கள் என்பது. இது இந்துத்துவவாதிகளால் தொடர்ந்து சொல்லப் படும் பொய். கட்டுக்கதை.

இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. ஆகவே, எந்த ஒரு மதத்திற்காகவும் தன் நிதியைச் செலவுசெய்ய முடியாது. இது ஒரு அடிப்படையான விஷயம். ஆகவே, இந்து சமய அறநிலையத் துறையின் நிதியை அரசு பயன்படுத்துவதும் இல்லை. மாநில அரசின் நிதியை கோவில்களுக்கென செலவழிப்பதும் இல்லை. இதைப் புரிந்துகொள்ள கோவில் கள் எப்படி நிர்வகிக்கப்படுகின்றன என்பதைத் தெரிந்து கொள்வது முக்கியம்.

இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் தற்போது 38,635 கோவில்கள் உள்ளன. இவற்றில் திருக் கோவில்கள் 36,595. திருமடங்கள் 56. திருமடத்துடன் இணைந்த திருக்கோவில்கள் 57.  Specified அறக்கட்ட ளைகள் 1,721. அறக்கட்டளைகள் 189. அரசியல்சாஸனத்தைப் பொறுத்தவரை, சமணர்களும் இந்துக்கள் என்பதால், சமணக் கோவில்களையும் இந்து சமய அறநிலையத் துறையே நிர்வகிக்கிறது. அப்படி 17 சமணக் கோவில்கள் இந்தத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. மொத்தமாக 38,635.

இந்தக் கோவில்கள் பிறகு Non-Listed Temples (பட்டியலைச் சாராத கோவில்கள்), Listed Temples 
- (பட்டியல் கோவில்கள்)  என்று பிரிக்கப்படுகின்றன. இதற்கு அந்தக் கோவில்களின் வருமானமே அடிப்படையாக அமைகிறது. கோவில்களுக்கு உண்டியல், வாடகை என ஆண்டு வருமானம் பத்தாயிரம் ரூபாய்க்கு கீழே உள்ள கோவில்கள்  Non-Listed  கோவில்கள். அந்த வகையில் 34,082 கோவில்கள் இருக்கின்றன.

ஆண்டு வருமானம் பத்தாயிரம் ரூபாய்க்கு மேலே உள்ள கோவில்கள் மூன்றாகப் பிரிக்கப்படுகின்றன. முதல் பிரிவு, ஆண்டு வருமானம் 10,000 முதல் இரண்டு லட்ச ரூபாய் வரை உள்ள கோவில்கள். இவற்றின் எண்ணிக்கை 3,550. இரண்டாவது பிரிவு, ஆண்டு வருமானம் இரண்டு லட்சம் முதல் பத்து லட்சம் வரை உள்ளவை. இவற்றின் எண்ணிக்கை 672. மூன்றாவதாக ஆண்டு வருவாய் 1,00,000 ரூபாய்க்கு மேற்பட்டவை. இவற்றின் எண்ணிக்கை 331.ஆக, கிட்டத்தட்ட 85 சதவீதக் கோவில்கள் ஆண்டு வருவாய் பத்தாயிரம் ரூபாய்க்கு கீழே உள்ளவைதான்.

இத்தனை ஆயிரம் கோவில்களையும் நிர்வகிக்க மிகப் பெரிய கட்டமைப்பை தமிழக அரசு உருவாக்கி வைத்திருக் கிறது. இந்த கட்டமைப்பின் ஒட்டுமொத்த தலைவர் ஆணையர். அவருக்குக் கீழே, கூடுதல் ஆணையர்கள், இணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், தனி அலுவலர்கள், கண்காணிப்புப் பொறியாளர்கள், செயற் பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள்,  முதுநிலை வரை நிலை அலுவலர்கள், கணக்கு அலுவலர்கள், தணிக்கை அலுவலர், துணை இயக்குனர் என இந்தக் கட்டமைப்பு செயல்படுகிறது. இவை தவிர, கோவிலை நிர்வகிக்கும் அந்தந்த கோவில்களின் ஊழியர்கள் தனி.

சரி, இவர்களுக்கான சம்பளத்தை யார் வழங்குவது, அரசா, கோவில்களா? கோவில் ஊழியர்களைத் தவிர்த்த அனைவருக்கும் தமிழக அரசுதான் சம்பளத்தைத் தரு கிறது. ஆணையரில் துவங்கி, தணிக்கை அலுவலர், துணை இயக்குனர் வரை அனைவரும் அரசு ஊழியர்கள். சரி, ஒரு மதச்சார்பற்ற அரசு எப்படி இந்துக் கோவில்களின் நிர்வாகத்திற்காக தன் பணத்தை செலவிட முடியும் என கேள்வியெழுப்பலாம்.

அதற்கும் ஒரு ஏற்பாடு இருக்கிறது. Assessible income   என்று சொல்லக்கூடிய வரி செலுத்தக்கூடிய வருவாயில் 14 சதவீதம் அரசுக்குச் செல்லும். இந்த 14 சத வீதத்தை கோவில்களில் இருந்து பெற்று, இந்தக் கட்ட மைப்பை நிர்வகிக்கிறது தமிழக அரசு. கோவிலின் நேரடி ஊழியர்கள், அந்தக் கோவிலின் நிதி நிலைக்கு ஏற்ப ஊதியம் பெறுவார்கள்.

இந்த 14 சதவீதத்தைத் தவிர, இந்துக் கோவில்களின் வருவாய் எதையும் அரசு எடுப்பதில்லை.

இதற்கு மற்றொரு ஏற்பாட்டை அரசு செய்திருக்கிறது. அதாவது Commissioner Common Good Fund 
என்று இதற்குப் பெயர். அதிக வருவாய் உள்ள கோவில்கள் இந்த நிதிக்கென ஒரு குறிப்பிட்ட அளவு வருவாயைச் செலுத்த வேண்டும். இந்த நிதியிலிருந்துதான் வருவாய் கிடைக்காத கோவில்களின் திருப்பணிகளும் பிற செலவுகளும் சமாளிக்கப்படுகின்றன.

உண்மையில், ஒரு கோவிலில் கிடைக்கும் வருவாயை வங்கியில் போட்டுவைக்கவே பல விதிமுறைகளை அரசு வகுத்திருக்கிறது. முதலாவதாக, தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ஒரு குறிப்பிட்ட அளவை டெபாசிட் செய்ய வேண்டும். இரண்டாவதாக கூட்டுறவு வங்கிகளில் ஒரு குறிப்பிட்ட அளவை டெபாசிட் செய்ய வேண்டும். மூன்றா வதாக, அதிக வட்டி கிடைக்கும் வங்கியில் குறிப்பிட்ட அளவை டெபாசிட் செய்ய வேண்டும். அரசு குறிப்பிட்ட அளவு மாறினால்,  தணிக்கையின்போது அது கவனிக்கப் பட்டு, கோவிலின் நிர்வாக அதிகாரிக்கு நோட்டீஸ் அனுப் பப்படும்.

கோவிலின் நிதி என்பது இவ்வளவு கட்டுப்பாட்டுடன் நிர்வகிக்கப்படுகிறது. ஆனால், ஏதோ இந்துக் கோவில் களின் பணத்தை எடுத்து இலவசத் திட்டங்களுக்கு அரசு செலவுசெய்வதைப்போல ஒரு பொய்ப் பிரச்சாரம் தீவிர மாகச் செய்யப்படுகிறது.

இந்த ஆண்டில் இந்தியாவிலேயே மிகச் சுத்தமாக நிர் வகிக்கப்படும் கோவிலுக்கான விருதை மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பெற்றது. அதற்குத் தகுதியான கோவில் தான் அது என்பதை அங்கு சொல்பவர்கள் உடனடியாக உணர முடியும்.

ஒவ்வொரு கோவிலையையும் அறநிலையத் துறை கையகப்படுத்தும்போது, அந்தக் கோவிலுக்கென உள்ள நகைகள் அனைத்தும் பட்டியலிடப்பட்டு பதிவு செய்யப் படுகின்றன. ஒரு நகை இந்தப் பட்டியலுக்குள் இடம் பெற்று விட்டால், அந்த நகை காலாகாலத்திற்கும் பாதுகாக்கப்படும். வருடந்தோறும் இந்த நகைகள் எடுத்து, பரிசோதிக்கப்பட்டு, தணிக்கை செய்யப்படும். அறநிலையத் துறையின் கட்டுப் பாட்டில் உள்ள ஒவ்வொரு கோவிலிலும் இந்த நடைமுறை வழக்கத்தில் உள்ளது.

இதையெல்லாம் மீறி ஒரு சிலை திருட்டுப்போனால், அந்தக் கோவிலின் நிர்வாக அதிகாரி, அறங்காவலர்கள், பாதுகாவலர்கள், ஊழியர்கள் என பல தரப்பினரும் விசார ணைக்கு உள்ளாக்கப்படுவதோடு, வழக்கையும் எதிர் கொள்வார்கள். அப்படியானால், சிலை திருட்டுகள் நடப்ப தில்லையா என்றால், நடக்கிறது என்பதுதான் உண்மை. ஆனால், அவை விதிவிலக்குகள். இம்மாதிரி திருட்டில் ஈடுபடுபவர்கள் கடும் தண்டனைக்கு உரியவர்கள் என் பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

அதை விடுத்துவிட்டு, அறநிலையத் துறை என்ற அமைப்பையே கலைத்துவிட வேண்டும் என்று கோருவது முட்டாள்தனமானது. இவ்வளவு பெரிய அமைப்பைக் கலைத்துவிட்டு, சட்டங்களை நீக்கிவிட்டு, இந்த நிர் வாகத்தை யாரிடம் கொடுப்பது? பச்சை பொய் ராஜாக் களிடமா?

ஏற்கனவே ஆதீனங்கள்தான் மதுரைக் கோவிலைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள்; அரசு அநியாயமாக அந்தச் சொத்தைப் பிடுங்கிக்கொண்டுவிட்டது. மீண்டும் சமயப் பெரியார்களிடம் அதை ஒப்படைப்பதே முறை என்கிறது இந்தக் கும்பல். ஆனால், உண்மை என்ன? மீனாட்சி அம்மன் கோவில் ஆதீனத்தின் சொத்தா? அவர்கள் எப்போதாவது நிர்வாகம் செய்திருக்கிறார்களா? இதோ விளக்கம்!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் துவக்கம் குலசேகர பாண்டியனது காலத்தில் ஆரம்பிக்கிறது.அந்த மன்னன், கோவில் வழிபாடுகளை நடத்த சில கவுட பிராமணர்களை நியமித்தார். ஆனால், கோவில் நிர்வாகம் நேரடியாக மன்னனின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. இந்த நிலை 14ஆம் நூற்றாண்டில் மதுரையை ஆட்சி செய்த பராக்கிரம பாண்டியன் காலம் வரை நீடித்தது. 1310ல் மாலிக் காஃபூர் மதுரை மீது படையெடுத்துவந்து, கோவி லைச் சூறையாடினான். பாண்டியர்கள் மதுரையை நீங் கினர். பிறகு குமார கம்பன்னர்கள் 1378ல் மதுரையை மீட்டு, கோவிலில் வழிபாடுகளைத் தொடரச் செய்தனர். அப் போது துவங்கி நாயக்கர் ஆட்சி முடிவுக்கு வரும்வரை மீண்டும் மன்னர்கள் கட்டுப்பாட்டிலேயே மதுரைக் கோவில் இருந்தது. குறிப்பாக திருமலை நாயக்கர் ஆட்சிக் காலத்தில் மதுரையும் மீனாட்சி அம்மன் கோவிலும் பெரும் வளர்ச்சியை அடைந்தன. கடைசி அரசி மீனாட்சி சாந்தாசாகிபால் கொல்லப்பட்ட பிறகு உற்சவ மூர்த்திகள் மானாமதுரைக்கு கொண்டுசெல்லப்பட்டன. கோவிலில் அரச ஆதரவின்மையால் வழிபாடுகள் குன்றின. பிறகு கிழக்கிந்திய கம்பெனி மதுரையின் நிர்வாகத்தைக் கைப் பற்றியது.

1801ல் மதுரை ஆட்சியராக உர்திஸ் பதவியேற்றார். அப்போது முதல் 1841 வரை மாவட்ட ஆட்சியர் வசமே கோவில் நிர்வாகம் இருந்தது. ஆனால், இந்துக் கோவில் களை ஏன் கிறிஸ்தவர்கள் நிர்வகிக்க வேண்டும் என பாதிரிமார்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். கவனிக்கவும், இந்துக்கள் கிளர்ச்சி செய்யவில்லை. கிறிஸ்தவர்களே கிளர்ச்சி செய்தனர். இதனால் கோவில் நிர்வாகம் முத்து செல்லத் தேவர் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் மீது ஊழல் புகார்கள் எழவே, தனசிங் என்பவரிடம் ஒப் படைக்கப்பட்டது. அவர் மீதும் புகார்கள் எழுந்தன.

அப்போதுதான் முதன்முதலாக கோவில் நிர்வாகம் 1859ல் மதுரை ஆதீனம் எனப்படும் திருஞானசம்பந்தர் மடத்தின் தலைவரிடம் கொடுக்கப்பட்டது. ஆனால், நிர் வாகம் சரியில்லையென புகார்கள் எழுந்தன. இதையடுத்து 1864ல் ஆதினகர்த்தர் தலைமையில் அய்வர் குழு அமைக் கப்பட்டது. இருந்தபோதும் தினசரி நிர்வாகத்தை தாசில்தார் கவனித்துவந்தார்.

ஆனால், இதிலும் நிலைமை சரியில்லாத நிலையில் மீண்டும் கோவில் நிர்வாகம் பிரிட்டிஷ் அரசின் வசம் சென்றது. அவர்கள் முத்து கரு.வெ. அழகப்பச் செட்டி யாரை ரிசீவராக வைத்து கோவிலை நிர்வகித்தனர். அதற் குப் பிறகு தொடர்ச்சியாக பிரிட்டிஷ் அரசுதான் கோவில் நிர்வாகத்தைக் கவனித்துவந்தது.

1937இல் கோவிலின் நிர்வாக அதிகாரியாக இருந்த ஆர்.எஸ். நாயுடுதான் தமிழகத்திலேயே முதன் முறையாக தாழ்த்தப்பட்டவர்களை கோவிலுக்குள் அழைத்துச் சென்றார். தனிநபர்களின் வசம் கோவில் இருந்திருந்தால், குறிப்பாக மதுரை ஆதீனம் வசம் கோவில் இருந்திருந்தால் நித்யானந்தாவிற்கு வரவேற்பு கிடைத்திருக்குமே தவிர, எளிய மக்கள் உள்ளேயே நுழைந்திருக்க முடியாது.

ஆக, ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் நீளும் வரலாற் றில் ஆதீனம் கோவிலை நிர்வாகம் செய்தது வெறும் 5 ஆண்டுகள்தான். அதிலும் ஆயிரம் புகார்கள்.

உண்மையில் திருமலை நாயக்கர் காலத்திற்குப் பிறகு, மதுரைக் கோவில் தன் மகோன்னத நிலையை எட்டியிருப் பது இப்போதுதான். ஒரு தீ விபத்தால் எல்லாம் மாறிவிடாது.

நமது திருக்கோவில்கள் வெறும் வழிபாட்டுத் தலங்கள் மட்டுமல்ல. அவை பொதுமக்களின் வாழ்வின் அங்கம். அவற்றை ஒருபோதும் தனிநபர்களால் நிர்வகிக்க முடியாது.

தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுவரும் சமூக நீதி செயல்பாடுகளால் தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடி யினர், பிற்படுத்தப்பட்டவர்கள் எனப் பலரும் அறநிலையத் துறையில் பணியாற்றிவருகின்றனர். அறங்காவலர் குழு வில் நிச்சயமாக ஒரு தாழ்த்தப்பட்டவர் இடம்பெற வேண் டுமென்கிறது சட்டம். இதைப் பலரால் சகிக்க முடியவில்லை. ஆகவேதான் மீண்டும் தங்களது தனியுரிமை கோலோச்ச வேண்டும் என்கிறார்கள்.

தமிழ்நாட்டுக் கோவில்களுக்குச் சொந்தமான நிலங்கள் கொள்ளை போகின்றன என்பது நீண்டகாலமாக சொல்லப் பட்டுவரும் ஒரு குற்றச்சாட்டு.

தமிழ்நாட்டில் கோவில்கள் என்பவை வெறும் வழி பாட்டுத் தலங்கள் மட்டும் அல்ல. கோவிலைச் சுற்றி வழிபாடு தவிர்த்து மிகப் பெரிய வாழ்க்கை இருந்தது. இலக்கியம், இசை, நடனம், பழக்க வழக்கங்கள், சடங்குகள் எல்லாமே அந்தந்த ஊரின் கோவில்களைச் சார்ந்தவை. இப்போதும் மதுரை மக்களின் ஆழ்மனதில் மீனாட்சி அம்மன் கோவில் என்பது எப்போதும் நிலை கொண்டி ருக்கும், அவர் எந்த மதத்தவராயினும் சரி. மீனாட்சி கோவி லின் திருவிழாக்களை ஒட்டியே, மக்கள் தங்கள் திட்டங் களை, நல்லது - கெட்டதுகளை வகுத்துக்கொள்வார்கள்.

ஆகவே, இம்மாதிரி கோவில்கள் நல்ல முறையில் செயல்பட, அவை தோன்றிய காலம்தொட்டே மன்னர் களும் ஆட்சியாளர்களும் அந்தக் கோவில்களுக்கு நிலங் களையும் செல்வங்களையும் பெரும் அளவில் அளித்தனர். அப்படி அளிக்கப்பட்ட நிலங்களுக்கு வரி கிடையாது. ஆகவே அவை ‘இறையிலி நிலங்கள்’ என்று அழைக்கப் பட்டன.

இப்படி வழங்கப்பட்ட நிலங்கள் இரண்டு வகைப்படும். ஒன்று, கோவில் பெயரிலேயே முற்றிலுமாக இறைவனுக்கு எழுதிவைக்கப்பட்ட இறையிலி நிலங்கள். இரண்டாவது, ‘குடி நீங்கா தேவதான’ நிலங்கள். முதல் வகை நிலத்தைப் பொறுத்தவரை, அது முற்றிலுமாக கோவிலுக்குச் சொந்த மான நிலம். அதன் பயன்பாடு கோவிலைச் சார்ந்தது.

இரண்டாவது வகை நிலத்தைப் பொறுத்தவரை, அந்த நிலம் குடியானவருக்குச் சொந்தமாக இருக்கும். ஆனால், அந்த நிலத்தில் விளையும் விளைச்சலில் ஆறில் ஒரு பங்கை கோவிலுக்குச் செலுத்த வேண்டும்.  இந்த நிலங் களை குடியானவர்கள் விற்கலாம், குத்தகைக்கு விடலாம், வாடகைக்கு விடலாம். ஆனால், இறைவனுக்கு விதிக்கப் பட்டதை தந்துவிட வேண்டும்.  மதுரையில் சிறிய கோவில் களுக்குக்கூட இப்படி ‘குடி நீங்கா தேவதான’ நிலங்கள், வீடுகள் இப்போதும் உண்டு.

தமிழகத்தில் ஆங்கில ஆட்சி வந்த பிறகு, மாநிலத்தின் பல பகுதிகளில் உள்ள நிலங்களுக்கு வரி வருவதில்லை என்று கண்டுபிடித்தனர். அப்படி எந்தெந்த நிலங்கள் வரி விதிக்கப்படாமல் இருக்கின்றன என்பதைக் கண்டறிய ஒரு ஆணையம் ஒன்றை அமைத்தனர். அந்த ஆணையத்தின் பெயர்  . இந்த ஆணையத்தின் அலுவலர்கள் ஒவ்வொரு கிராமமாகச் சென்று, நிலங்களை அளந்து, இனாம் நிலங் களைக் கண்டறிந்து அவற்றை உறுதிப்படுத்தினர். அந்த நிலங்களை யாரெல்லாம் பயன்படுத்திவந்தார்களோ அவர் களுக்கு   என்ற உரிமைப் பத்திரம் வழங்கப்பட்டது. பிறகு இந்த விவரம் இனாம் சுத்த நகல் பதிவேட்டில் -   - பதிவுசெய்யப்பட்டது. இந்தப் பதிவேடு இரு பிரதிகளாக உருவாக்கப்பட்டது. ஒரு பிரதி மாவட்ட தலைமையகத்தில் வைக்கப்பட்டது. இரண்டாவது பிரதி சென்னை ஆவணக் காப்பகத்தில் வைக்கப்பட்டது. தமிழக ஆலயங்களுக்கு கிறிஸ்தவர்களான ஆங்கிலேயர்கள் செய்த மிகப் பெரிய சேவை இது.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, இனாம் நிலங்கள், ஜமீன்தாரி நிலங்களை ஒழித்து அவற்றை வரி விதிக்கும் முறைக்குள் - ரயத்வாரி - கொண்டுவருவதற்கான நடை முறைகள் உருவாக்கப்பட்டன. அப்போதுதான் தமிழக கோவில் நிலங்களுக்கு மிகப் பெரிய அநீதி நிகழ்ந்தது.

அதாவது, 1960ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதியன்று யாரெல்லாம் ஜமீன் நிலங்கள், கோவில் நிலங்கள், புறம் போக்கு நிலங்களை 12 ஆண்டுகளாக பயன்படுத்தி வந் திருக்கிறார்களோ, அவர்களுக்கு நிலங்கள் பட்டா போட் டுத் தரப்பட்டன. 12 ஆண்டுக்குக் குறைவான காலத்திற்கு நிலத்தைப் பயன்படுத்தியவர்கள் குறிப்பிட்ட தொகையை கொடுத்த பிறகு, நிலத்தை வைத்துக்கொள்ளலாம் என்று சட்டம் கூறியது.

கோவில்களுக்கு சொந்தமான நிலம் இவ்வாறு தனிநபர் களுக்கு வழங்கப்பட்டால், அதற்கான இழப்பீட்டை தமிழக அரசு அந்தக் கோவில்களுக்கு தரும் என்று கூறப்பட்டது. அப்போதுவரை இப்போதுவரை இந்த இழப்பீடு வந்து சேரவில்லை.

இந்தச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு, 1963.

திராவிடக் கட்சிகள் மீது

குற்றம் சாட்டுவது தப்பு!

இப்படி நிலங்களை அப்போது அனுபவித்துவந்தவர்கள், பா.ஜ.ககாரர்கள் சொல்வதைப் போல தி.மு.கவினர் அல்ல. கோவில் அர்ச்சகர்கள், ஊழியர்கள், ஆளும் கட்சியின் செல்வாக்கைப் பெற்றவர்கள்தான். பல லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள், சர்வ மானிய கிராமங்கள் இந்தச் சட்டத் தினால் தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டன. இந்தக் காரி யத்தைச் செய்தது எம். பக்தவத்சலம் தலைமையிலான காங்கிரஸ் அரசு. இப்படி பறிபோனது போக எஞ்சியிருப் பதே தற்போதுள்ள கோவில் நிலங்கள்.

பொதுவாக கோவிலுக்கு நிலங்களை எழுதி வைப்ப வர்கள், கோவில் பெயரில் எழுதிவைக்க மாட்டார்கள். அந்தக் கோவிலில் உறையும் இறைவனின் பெயருக்கே எழுதிவைப்பார்கள். இறைவனின் பெயரிலேயே கோவில் நிலங்கள் இருக்கும். ஆகவே, பதிவாளர்கள், உள்ளூர் வட்டாட்சியர்களைக் கைக்குள் போட்டுக் கொண்டு, இறைவனின் பெயரைக் கொண்டிருந்தவர்கள், தங்கள் பெயரில்தான் அந்த நிலங்கள் இருக்கின்றன என்று பட்டா போட்டுக்கொண்டார்கள்.

கோவில்களின் நிர்வாகத்தை அரசிடமிருந்து மீட்க வேண்டும் என்று சொல்லும் இந்து அமைப்புகள், திராவிட கட்சிகள்தான் கோவில் நிலங்களை, சொத்துக்களைக் கொள்ளையடித்ததாகக் குறைகூறுவார்கள். ஆனால், இந்த நில விவகாரம் தொடர்பாக தி.மு.க. அரசில் இரு முக்கிய மான விஷயங்கள் நடைபெற்றன.

அதாவது, ஒரு நிலத்தை மீட்பதற்கான வழக்குத் தொடுக்கும்போது, எந்த நிலத்தை மீட்க வழக்குத் தொடுக் கிறோமோ அதன் மதிப்பில் 7.5 சதவீதத்தை நீதிமன்றத்திற் குக் கட்ட வேண்டும்.  ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் என்றால், ஏழரை லட்ச ரூபாய் கட்ட வேண்டும். இவ்வளவு தொகையை புரட்டுவது அறநிலையத் துறைக்கு சிரமமான காரியம். ஆகவே, தி.மு.க ஆட்சிக் காலத்தில் ஒரு அர சாணை வெளியிடப்பட்டது. அதன்படி, அறநிலையத் துறை சொத்து தொடர்பான வழக்குகளுக்கு 15 ரூபாய் நீதிமன்றக் கட்டணமாக செலுத்தினால் போதும்.

தவிர, சென்னையில் அமலில் இருந்த வாடகைக் கட்டுப்பாட்டுச் சட்டம், கோவிலுக்குச் சொந்தமான வீடு களில் இருந்து, வாடகை செலுத்தாத நபர்களை வெளி யேற்றுவதில் சிக்கலை ஏற்படுத்தியது. ஆகவே, தமிழக அரசு மற்றொரு அரசாணையின் மூலமாக, கோவில் கட்ட டங்களுக்கு இந்தச் சட்டத்திலிருந்து விலக்கு அளித்தது.

இந்த இரு அரசாணைகளும் பல ஏக்கர் விஸ்தீரண முள்ள கோவில் நிலங்களையும் பல ஆயிரம் சதுர அடி பரப்புள்ள கட்டங்களையும் மீட்க உதவியது. இந்த இரு அரசாணைகளும் தி.மு.க. தலைவர் மு. கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் வெளியிடப்பட்டவை.

 - விடுதலை நாளேடு, 6.3.18

வெள்ளி, 2 மார்ச், 2018

18 வயதுக்குட்பட்ட பெண் மனைவியானாலும் உடலுறவு பலாத்காரமே!

இந்திய தண்டனைச் சட்டம் 375இன்படி பெண்களை பலாத்காரம் செய்வது குற்றம். ஆனால், இதில் பிரிவு 2இல் 15 வயது முதல் 18 வயது வரை உள்ள மனைவியுடன் உடலுறவு வைத்துக் கொள்வது குற்றமாகாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

‘இண்டிபென்டன்ட் தாட்ஸ்’ எனும் தொண்டு நிறுவனம் தாக்கல் செய்த வழக்கில் அரசு வழக்குரைஞர் கலாச்சார நடைமுறைகளை அறிந்தே சுய தெளிவுடன் இந்த விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக வாதாடினார். ஆனால், இது பெண் குழந்தைகளின் உரிமைக்கு எதிரானது என்றும், இது குழந்தைத் திருமணங்களை ஊக்குவிக்கும் என்றும் எனவே, 18 வயதுக்குள் உள்ள திருமணமான பெண்ணுடன் உறவு கொள்வது குற்றமே என்றும், பாலியல் பலாத்கார சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

- உண்மை இதழ்,1-15.11.17