சனி, 26 டிசம்பர், 2015

பிறப்பு சான்றிதழ்களில் தந்தை பெயர் கட்டாயமில்லை உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி, ஜூலை 8_ பிறப்பு சான்றிதழ்களில் தந்தையின் பெயரை சேர்ப்பதை கட்டாயமாக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு  பிறப்பித்துள்ளது. இது தொடர்பான ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் மாநில அரசுகளுக்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவில்  கூறப்பட்டு உள்ளதாவது: திருமண உறவைத் தாண்டியும் சிலர் குழந்தை பெற்றெடுக்கின்றனர். அல்லது சில பெண்கள் தாங்கள் மட்டுமே குழந்தையை வளர்க்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர். ஒரு தாய் இல்லாமல் குழந்தை பிறக்க முடியாது.
அதனால் தாயின் அடையாளம் கண்டிப்பாக தெரியும்.  சில நேரங்களில் தந்தையின் அடையாளம் தெரியாமல் போகலாம். அல்லது அவருடைய பெயரை சேர்க்க தாய் விரும்பாமல் இருக்கலாம். இதுபோன்ற  காரணங்களால் ஒரு குழந்தையின் பிறப்பு சான்றிதழில் தந்தையின் பெயர் குறிப்பிடப்பட வேண்டும் என்பதை கட்டாயமாக்கக் கூடாது. சட்டங்கள் மிகவும் வலுவானவை, அடிப்படையானவை. அதே நேரத்தில் மாறிவரும் காலசூழலுக்கு ஏற்ப சட்டங்களிலும் மாற்றம் தேவை. நாட்டில்  பிறக்கும் ஒவ்வொருவரின் பிறப்பும் பதிவு செய்யப்பட வேண்டும். எந்தக் காரணம் கொண்டும் பிறப்பை பதிவு செய்யாமல் இருக்கக் கூடாது.
இதை  அனைத்து மாநிலங்களும் உறுதி செய்ய வேண்டும். குழந்தையின் பிறப்பு சான்றிதழில் தந்தையின் பெயரை குறிப்பிட வேண்டும் என்று  கட்டாயப்படுத்தக் கூடாது. அது அக்குழந்தையின் தாயின் விருப்பமாகவே இருக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.



குழந்தையின் பாதுகாவலர் விவகாரம் - தந்தையின் ஒப்புதல் தேவையில்லை
புதுடில்லி, ஜூலை 6 திருமணமாகாத தாய்க்குப் பிறந்த குழந்தையின் பாதுகாவலர் விஷயத்தில், தந்தையின் அனுமதியைப் பெற வேண்டிய அவசியமில்லை என்று உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. திருமணமாகாத அரசு பெண் ஊழியர் ஒருவர், தனது குழந்தையின் பாதுகாவலராக இருப்பது குறித்து தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்ற நீதிபதி விக்ரம்ஜித் சென் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.
குழந்தையின் பாதுகாவலராக, தாய் இருப்பதற்கு, தந்தையின் அனுமதி பெற வேண்டும் என்ற நடை முறையை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதனை விசாரித்த நீதிபதி, திருமணமாகாத பெண்ணுக்குப் பிறகும் குழந்தையின் பாதுகாவலர் விஷயத்தில், தந்தையின் அனுமதியைப் பெற வேண்டிய அவசியம் இல்லை. இதற்கு  மாறாக, கீழ்நீதிமன்றமோ, உயர் நீதிமன்றங்களோ, இதுபோன்ற தீர்ப்பை குழந்தையின் நலனைக் கருத்தில் கொள்ளாமல் அறிவித்திருந்தால், அவற்றை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
உண்மை,1-15.10.15

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோருக்கு ஊதியத்துடன் 3 மாத விடுப்பு


பாலியல் புகார்களை விசாரிக்க உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஒவ்வொரு துறைக்கும் ஒழுங்கு நடவடிக்கைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் தலைவராக ஒரு பெண் இருப்பார். அந்நிறுவனத்தில் பெண் அதிகாரி இல்லையென்றால், வேறு நிறுவனத்தின் பெண் அதிகாரி குழுவின் தலைவராக அமர்த்தப்படுவார். குழுவின் பெரும்பாலான உறுப்பினர்களும் பெண்ணாக இருப்பர்.
பாதிக்கப்பட்ட பெண்களை வேறு இடத்திற்கு மாற்றப் பரிந்துரைக்கவும் இக்குழுவிற்கு அதிகாரம் உண்டு.
பாலியல் பாதிப்புக்காளான 3 மாதத்திற்குள் புகார் அளிக்க வேண்டும். குற்றவாளியின் ஊதியத்தை நிறுத்தி வைக்கப் பரிந்துரைக்கவும் இக்குழுவிற்கு அதிகாரம் உண்டு. குற்றவாளி சாட்சிகளை மிரட்டியும், ஆதாரங்களை அழித்தும் செயல்பட்டால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
வன்புணர்ச்சிக்கு ஆளாகிப் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ஊதியத்துடன் மூன்று மாத விடுப்பு வழங்கப்படும் என்று மத்தய அரசு அறிவித்துள்ளது.
-உண்மை,1-15.10.15

ஞாயிறு, 13 டிசம்பர், 2015

முக்கிய ஆவணங்கள் தொலைந்தால் திரும்பப் பெறுவது எப்படி?


வாசக நேயர்களுக்காகவும், பொது மக்கள் அறிந்துகொள்ளவும் கீழ்க்கண்ட தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. இன்ஷூரன்ஸ் பாலிசி!
யாரை அணுகுவது: பாலிசியை விநியோகம் செய்த கிளையை.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்: முகவரிச் சான்று, புகைப்பட அடையாளச் சான்றின் நகல்களில் நோட்டரி பப்ளிக் சான்றொப்பம் இடப் பட்டவை மற்றும் பிரீமியம் செலுத்தியதற்கான ஏதாவது ஒரு ரசீது நகல்.
எவ்வளவு கட்டணம்: ஆவணங்கள் தயாரிப்புக் கட்டணமாக ரூ.75 கட்ட வேண்டும். இது தவிர, காப் பீட்டுத்  தொகையில் 1,000 ரூபாய்க்கு 20 காசு வீதம் காப் பீட்டுத் தொகைக்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டும்.
கால வரையறை: விண்ணப்பம் அளித்த 15 நாள் களுக்குள் நகல் ஆவணம் கிடைக்கக்கூடும்.
நடைமுறை: நகல் பாலிசி கோரும் விண்ணப்பக் கடிதம் அளித்தால் அதற்குரிய இரண்டு ஆவணங்கள் தருவார்கள். அதில் ஒரு ஆவணத்தை 80 ரூபாய் பத் திரத்தில் தட்டச்சு செய்துகொள்ள வேண்டும். இன் னொரு ஆவணத்தில் பாலிசி தொலைந்து போன விவ ரங்கள் கேள்வி- பதில் வடிவில் கேட்கப்பட்டிருக்கும்; அதை நிரப்பி நோட்டரி பப்ளிக் ஒப்புதலோடு, ஆவணங்களை இணைத்து தரவேண்டும்.
2.மதிப்பெண் பட்டியல்! (பள்ளி மற்றும் கல்லூரி)
யாரை அணுகுவது: பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்: மதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ், கட்டணம் செலுத்திய ரசீது.
எவ்வளவு கட்டணம்:  உயர்நிலைப் பொதுத் தேர்வு (10 ஆம் வகுப்பு) ரூ.105. மேல்நிலை பொதுத் தேர்வு (+2) பட்டியல் ரூ.505.
கால வரையறை:  விண்ணப்பம் செய்ததிலிருந்து 60 நாள்கள்.
நடைமுறை: காவல் துறையில் புகார் அளித்து கண்டுபிடிக்க முடியவில்லை என சான்றிதழ் வாங்கிய பிறகு, முன்பு படித்த பள்ளி/நிறுவனத்தின் மூலம் விண்ணப்பம் வாங்கி அதை நிரப்பி  வட்டாட்சியரிடம் கையொப்பம் வாங்க வேண்டும். அந்த விண்ணப்பத் தோடு ஒரு கடிதம் மற்றும் இணைப்புகள் சேர்த்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிக்கு அனுப்பவேண் டும். இந்த விவரங்களை அரசிதழில் வெளியிட்டு அதன் அடிப்படையில் அவர் பள்ளித் தேர்வுத்துறை இயக்குநருக்கு அனுப்புவார். தனித் தேர்வர்கள் நேரடியாக தேர்வுத் துறை இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்பவேண்டும். பட்டம் மற்றும் அதற்கு மேற் பட்ட உயர் கல்விக்கு சம்பந்தப்பட்ட பல்கலைக் கழகங்களை அணுக வேண்டும்.
3.குடும்ப அட்டை!
யாரை அணுகுவது: கிராமப்புறங்களில் வட்டார உணவுப் பொருள் வழங்கு அலுவலர்; நகர்ப்பகுதிகளில் உணவுப் பொருள் வழங்கு துறை மண்டல உதவி ஆணையர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்: காணாமல் போன குடும்ப அட்டையின் நகல் அல்லது ஏதாவது ஒரு அடையாள அட்டை.
எவ்வளவு கட்டணம்: புதிய குடும்ப அட்டை வாங்கும்போது ரூ.10 கட்டணம் செலுத்தவேண்டும்.
கால வரையறை:  விண்ணப்பம் அளித்த 45 நாள்களுக்குள் கிடைத்துவிடும்.
நடைமுறை:  சம்பந்தப்பட்ட அலுவலரிடத்தில் காணாமல் போன விவரத்தைக் குறிப்பிட்டு கடிதம் தந்து, அவர்கள் வழங்கும் விண்ணப்பத்தைப் நிரப்பித் தர வேண்டும். அவர்களின் விசாரணைக்குப் பிறகு புது குடும்ப அட்டை அனுப்பி வைக்கப்படும்.
4. ஓட்டுநர் உரிமம்!
யாரை அணுகுவது: மாவட்டப் போக்குவரத்துத் துறை அதிகாரி.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்: பழைய உரிமம் நகல் அல்லது எண்.
எவ்வளவு கட்டணம்: கட்டணம் ரூ.315 (இலகுரக மற்றும் கனரக வாகனம்).
கால வரையறை: விண்ணப்பம் செய்த பிறகு அதிகபட்சமாக ஒரு வாரம்.
நடைமுறை: காவல் துறையில் புகார் தெரிவித்து, அவர்களிடம் சான்றிதழ் வாங்கிய பிறகு மாவட்டப் போக்குவரத்துத் துறை அதிகாரிக்கு விண்ணப்ப  மனு கொடுக்க வேண்டும்.
5. பான் கார்டு
யாரை அணுகுவது: பான் கார்டு பெற்றுத் தரும் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் அல்லது வருமான வரித்துறை.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்: பாஸ்போர்ட்  அளவு புகைப்படம் இரண்டு, அடை யாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று நகல்கள். எவ்வளவு கட்டணம்: அரசுக்குச் செலுத்த வேண்டிய ரூ.96 ரூபாய்.
கால வரையறை: விண்ணப்பித்தப் பிறகு 45 நாள்கள்.
நடைமுறை: பான் கார்டு கரெக்சன் விண்ணப்பம் வாங்கி அதில் தேவையான விவரங்களைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.
6.பங்குச் சந்தை ஆவணம்
யாரை அணுகுவது: சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பதிவாளர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்: காவல் துறை சான்றிதழ், பங்கு ஆவணத்தின் நகல் அல்லது ஃபோலியோ எண். எவ்வளவு கட்டணம்: தனியாகக் கட்டணம் கட்டத் தேவையில்லை; ஆனால்,பங்குகளின் சந்தை மதிப்பிற்கு ஏற்ப முத்திரைத்தாள் கட்டணம் செலுத்தவேண்டும்.
கால வரையறை: விண்ணப்பித்த 45 நாள்களிலிருந்து 90 நாள்
நடைமுறை: முதலில் சம்பந்தப்பட்ட நிறுவனத் திற்கு கடிதம் எழுதவும். இதன் அடிப்படையில் காவல் துறையில் புகார் அளித்து, சான்றிதழ் வாங்கவேண்டும். பங்குகள் மதிப்பிற்கு ஏற்ப நிறுவனம் குறிப்பிடும் தொகைக்கு முத்திரைத்தாளில் ஒப்புதல் கடிதம் தர வேண்டும். சில நிறுவனங்கள் செய்தித்தாள்களில் விளம்பரம் வெளியிட வலியுறுத்தும்.
.
7. கிரயப் பத்திரம்! யாரை அணுகுவது: பத்திரப்பதிவு துறை துணைப் பதிவாளர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்: காவல் துறை கடிதம், பத்திரிகையில் வெளியிடப்பட்ட விளம் பரம், யாரிடமும் இருந்து ஆட்சேபனை வரவில்லை என்பதற்கான நோட்டரி பப்ளிக் ஒருவரின் உறுதிமொழி, சர்வே எண் விவரங்கள். எவ்வளவு கட்டணம்: ஆவணக் கட்டணம் 100 ரூபாய்.
இதுதவிர, கூடுதலாக ஒவ்வொரு பக்கத்திற்கும் 20 ரூபாய்.
கால வரையறை: ஒரு சில நாள்களில் கிடைக்கக் கூடும்.
நடைமுறை: கிரயப் பத்திரம் தொலைந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து அவர்களிட மிருந்து சான்றிதழ் வாங்க வேண்டும். தொலைந்த விவரம் குறிப்பிட்டு பத்திரிகையில் விளம்பரம் செய்ய வேண்டும். இதற்குப் பிறகு சார்பு பதிவாளர் அலுவலம் செல்லவேண்டும்.
8. டெபிட் கார்டு
யாரை அணுகுவது: சம்பந்தப்பட்ட வங்கியின் கிளை மேலாளர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்: கணக்குத் தொடர்பான விவரங்கள்.
எவ்வளவு கட்டணம்: ரூ.100
கால வரையறை: வங்கியைப் பொறுத்து ஓரிரு நாள்கள் அல்லது அதிகபட்சம் 15 நாள்கள்.
நடைமுறை: டெபிட் கார்டு தொலைந்தவுடன் அந்த வங்கி வாடிக்கையாளர் சேவை மய்யத்திற்கு தகவல் தெரிவித்து, அதன்மூலம் மோசடியான பரிவர்த்தனைகள் நடக்காதவாறு தடுக்கவேண்டும். அதற்குப் பிறகு சம்பந்தப்பட்ட கிளைக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தி புது டெபிட் கார்டு வழங்குமாறு கோர வேண்டும்.
9 மனைப் பட்டா யாரை அணுகுவது: வட்டாட்சியர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்: நகல் பட்டா கோரும் விண்ணப்பம்.
எவ்வளவு கட்டணம்: ரூ.20
கால வரையறை: ஒரு சில நாள்களில் கிடைக்கக் கூடும்.
நடைமுறை: முதலில் வட்டாட்சியரிடம் மனு தர வேண்டும். அவர் பரிந்துரையின் பேரில் கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.), வருவாய் ஆய்வாளரிடம் ஒப்புதல் பெற வேண்டும். இதன் அடிப்படையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்தால் நகல் பட்டா கிடைத்துவிடும்.
9. பாஸ்போர்ட்
யாரை அணுகுவது: மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்: காவல் துறை சான்றிதழ், பழைய பாஸ்போர்ட் நகல், 20 ரூபாய் முத்திரைத்தாளில் விண்ணப்பம்.
எவ்வளவு கட்டணம்: ரூ.4,000.
கால வரையறை: இந்தியாவில் தொலைத் திருந்தால் 35-லிருந்து 40 நாள்கள்; வெளிநாட்டில் தொலைத்திருந்தால் அதிக காலம் எடுக்கும்.
நடைமுறை: பாஸ்போர்ட் தொலைத்த பகுதியில் உள்ள காவல் துறையில் புகார் அளித்து கண்டுபிடிக்கப் படவில்லை என்கிற சான்றிதழ் வாங்க வேண்டும். 20 ரூபாய் முத்திரைத்தாளில் தொலைந்த விவரங்களைப் பதிவு செய்துகொள்ள வேண்டும். இவற்றில் நோட்டரி பப்ளிக் ஒருவரின் கையொப்பம் பெற்று மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்கவேண் டும். அதன் அடிப்படையில் அவர்கள் விசாரணை மேற்கொண்ட பிறகு நகல் பாஸ்போர்ட் அனுப்பி வைத்துவிடுவார்கள்.
10. கிரெடிட் கார்டு
கிரெடிட் கார்டு தொலைந்ததும் உடனடியாக வாடிக்கையாளர் சேவை மய்யத்துக்கு தகவல் அளித்து பரிமாற்றங்களை நிறுத்த வேண்டும்.
யாரை அணுகுவது: நிறுவனத்தின் வாடிக்கை யாளர் சேவை மய்யம்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்: தொலைந்துபோன கிரெடிட் கார்டு தொடர்பான விவரங்கள்.
எவ்வளவு கட்டணம்: ரூ.100 (நிறுவனத்துக் கேற்ப வேறுபடும்).
கால வரையறை: 15 வேலை நாள்கள்.
நடைமுறை: தொலைந்த கார்டுக்கு மாற்றாக வேறு அட்டை அளிக்கக் கோரினால் பதினைந்து வேலை நாள்களுக்குள் உங்களுக்கு அனுப்பி வைத்துவிடுவார்கள். அடையாளச் சான்று காண்பித்து வாங்க வேண்டும்.
-விடுதலை,12.6.14

வெள்ளி, 11 டிசம்பர், 2015

பிற மதத்தில் இருந்து இந்து மதம் மாறியவர்களை தாழ்த்தப்பட்டவர்கள் பட்டியலில் சேர்க்கவேண்டும்!


புதுடில்லி பிப் 27 பிற மதங்களிலிருந்து இந்து மதத்தை ஏற்றுக்கொள்ப வர்களை தாழ்த்தப்பட்ட வர்கள் பட்டியலில் தான் சேர்க்கவேண்டும் என உச்சநீதிமன்றம் பரபரப் பான தீர்ப்பை வெளியிட் டுள்ளது. கேரளாவைச் சேர்ந்த கெபி மனு என்ப வரின் பாட்டனார் கிறிஸ் தவராக மதம் மாறினார். அதன் பிறகு அவர்கள் மூன்று தலைமுறைகளாக கிறிஸ்தவர்களாக இருந் தனர்.
இந்த நிலையில் மனு இந்துமதத்திற்கு மாறி தனது ஜாதிச்சான்றிதழில் தாழ்த்தப்பட்ட இந்து என்று சேர்ந்து அதன் மூலம் வேலைவாய்ப்பை பெற்று இருந்தார்.    இதை கேரள நீதி மன்றம் ஏற்க மறுத்து வேற்று மதத்தில் இருந்து இந்துமதத்திற்கு வருப வர்கள் எப்படி தாழ்த்தப் பட்டவராக சேர்க்க முடியும் என்று கூறி அவரது பணி நியமனத்தை சட்டவிரோதம் என்று கூறி அவரிடம் இருந்து 15 லட்சம் ரூபாயை வசூல் செய்யவும் அவரை உடன டியாக பணி நீக்கம் செய் யவும் உத்தரவிட்டிருந்தது.
கேரள உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து கெபி மனு உச்சநீதி மன்றத்திற்கு சென்றார். இவரது மனு  நீதிபதி தீபக் மிஷ்ரா மற்றும் கோபால் கோடா அடங்கிய அமர் வின் முன்பு  விசார ணைக்கு வந்தது. இது குறித்து நீதிபதிகள் கூறியதாவது: பிற மதங் களில் இருந்து இந்து மதத்திற்கு வருபவர்கள் அவர்களின் மூதாதை யர்கள் எந்த ஜாதியில் இருந்தார்கள் என்பதை சாட்சிபூர்வமாக உறுதிப் படுத்தவேண்டும். மேலும் அவர்கள் வேறு ஜாதி களை ஏற்றுக்கொள்பவ ராக இருந்தால் அந்த ஜாதி இந்துக்கள் அவர் களை தங்கள் ஜாதிக் காரர்களாக மனப்பூர்வ மாக ஏற்றுக் கொள்ள வேண்டும், ஒருவர் கிருத் தவ மதத்தில் இருந்தோ அல்லது இஸ்லாம் மதத் தில் இருந்தோ இந்து மதத்திற்கு மாறுவதனால் இந்து சமூகம் அவர்களை ஏற்றுக் கொள்ள வேண் டும்.  அப்படி ஏற்றுக் கொள்ளாத பட்சத்தில் அவர்கள் தாழ்த்தப்பட்ட வர்களாகக் கருதப்படு வார்கள்.
இன்று இஸ்லாம் மற்றும் கிருத்தவ மதத்தைச் சார்ந்தவர்களின் முன் னோர்கள் பெரும்பாலும் தாழ்த்தப் பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த முன் னோர்கள் தான் வேற்று மதத்திற்கு சென்றார்கள் எனவே அவர்கள் இந்து மதத்திற்குத் திரும்பும் பொழுது அவர்கள் தாழ்த்தப்பட்ட பிரிவின் கீழ் சேர்க்கப்பட வேண்டும் என்று கூறிய நீதிபதிகள் இந்து மதம் திரும்பு பவர்கள் தங்களது ஜாதி நிருபிக்கப்படாத நிலையில், அவர்கள் தாழ்த்தப்பட்ட வர்கள் என்றும், தாழ்த்தப்பட்டவர் களுக்குரிய அனைத்து இடஒதுக்கீடு சலுகைகளும் அவர்களுக்கு உண்டு என்று தீர்ப்பு கூறினார்கள்.
-விடுதலை,27.2.15

செவ்வாய், 1 டிசம்பர், 2015

பொதுநல வழக்கு

பொதுநலவழக்கு, நாட்டுக் குடிமக்கள் ஒரு நீதிமன்றத்தில் தாக்கல் செய்கின்ற வழக்கைக் குறிப்பிடுகிறது. பொதுமக்களின் அமைதியான மகிழ்வான வாழ்க்கைக்கு இடையூறு விளைவிக்கும் மாசு (Air Polution. Water Contamination, Noise Polution) பயங்கரவாதம் (Terrorism) சாலை பாதுகாப்பு. கட்டிட அமைப்பினால் ஏற்படும். அபாயங்கள் என்ற பல பிரச்னைகளுக்குத் தீர்வு காண ஒருவரால் / பலரால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் வழக்குதான் பொதுநல வழக்கு.
பொதுநல வழக்கு தொடர்பான விளக்கம் சட்ட விதிகளிலோ அல்லது ஷரத்துக்களிலோ பதிவு செய்யப்படவில்லை. நாட்டுப் பிரஜைகளின் எண்ணங்களின் பிரதிபலிப்பாக இது உருவகப்படுத்தப் பட்டிருக்கிறது. நீதிமான்கள், நாட்டுக் குடிமக்களின் வாழ்க்கை வசதிகளுக்காக எடுத்தாளுகிற கருத்தாக்கங்கள்தான் பொதுநல வழக்குகளின் அஸ்திவாரங்கள், பொதுமக்களின் நலமான, வளமான வாழ்க்கையை உறுதி செய்யும் அறிவு ஜீவிகளுடைய சிந்தனைகளின் ஆளுமையே பொதுநல வழக்கின் ஆணி வேர். மனித வாழ்க்கையை மேம்படுத்தும் பகுதிகள் பல இருந்தாலும், அவை சில குறிப்பிட்ட பின்னணிகளில் தாக்கல் செய்யப்படுகின்றன. ஏழைகளுடைய அடிப்படை மனித உரிமைகளில் அத்துமீறல்.
அரசு முன்வைக்கும் திட்ட கொள்கைகளின் உள்நோக்கம் அல்லது நடைமுறை. நகர்மன்ற அதிகாரிகள் அவர்களுடைய பணிகளை உரிய முறையில் செய்வதற்கான செயல்திட்டம்.
மத உரிமைகளின் மேல் தொடுக்கப்படும் ஏவுகணைகள் ஜீவாதார உரிமைகளின் மீது ஏவப்படும் வன்முறைகள் - என்ற பல பொதுவானப் பிரச்சினைகளே பொதுநல வழக்குகளின் அடிப்படை அம்சங்கள். பொதுநல வழக்குகளை எப்பொழுது தாக்கல் செய்வது? பெரும்பான்மையான பொதுமக்கள் பாதிப்பிற்கு உள்ளாகும்போது, பொதுநல வழக்கு தொடரலாம். ஒரு தனிமனிதர், அரசின் நடவடிக்கையால் பாதிக்கப்பட்டால், அதன் அடிப்படையில் பொதுநல வழக்கு தொடர முடியாது. கீழ்க்கண்ட பிரச்னைகளில் பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யலாம்.
1) ஒரு தொழிற்சாலையின் நடவடிக்கைகள், காற்றை மாசுபடுத்தினால், அது பொதுமக்களின் உயிரையே பறித்து விடும். இதைத் தடுக்க.
2) ஒரு தெருவில் மின்விளக்குகள் இல்லாமல் அதனால் பாதசாரிகளும், வாகன ஒட்டிகளும் இடையூறுகளை சந்திக்க வாய்ப்பிருக்கிறது, இதைச் சீர் செய்ய.
3) ஒரு விடுதியில் இரவு கேளிக்கையின் போது உச்ச ஸ்தாயியில் இசையை ஒலிபரப்பி மக்களுக்கு தொல்லை கொடுப்பதைத் தடுக்க.
4) கட்டிட நிறுவனம் அதன் வர்த்தக நிழல் தரும் மரங்களை வெட்டிச் சாய்த்தால் அங்கு சுற்றுப்புறச்சூழல் பாதிப்பைத் தடுக்க.
5) மாநில அரசின் அதீத வரிக்கொள்கையால் ஏழை மக்களின் பொருளாதாரச் சமன்பாடு சீர்குலைவதைத் தடுக்க,
இவற்றைத் தவிர,
காவல்துறை சிறைத்துறை அதிகாரிகள், கைதிகள் தொடர்பான தீர்வுகளை எடுக்கும்போது மனித உரிமைகளை மீறல், குழந்தைத் தொழில், கொத்தடிமைத்தனம் _- என்ற சமூகச் சாபக்கேடுகளை ஒழிப்பதற்கு.
உழைக்கும் மகளிர் அவர்களுடைய பணியிடங்களில் மேலதிகாரிகளின் பாலியல் தொல்லைகளுக்கு ஆட்படுவதைத் தடுக்க.அரசியலில் அதிகாரத்தில் உயர் பதவியில் இருப்பவர்கள் தங்கள் பதவிகளைத் தவறான முறைகளில் பயன்படுத்தி, ஊழலில் ஈடுபடுவது வேறு சில சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் பங்கு கொள்வது _- இவற்றைத் தடுத்து நிறுத்த.சாலைகள், சாக்கடைகளை ஒழுங்கான வழிகளில் பராமரித்து, பொதுமக்களின் உடல்நலம் பாதிக்கப் படாதவாறு, நிர்வாகப் பொறுப்புகளை அதிகாரிகள் நிறைவேற்றிட பொதுநல வழக்கு தொடரலாம்.
பொதுநல வழக்கை யார் தாக்கல் செய்யவேண்டும்: ஆரம்ப காலத்தில், ஒருவருடைய வாழ்க்கை பிறருடன் சேர்ந்து பாதிக்கப்பட்டிருந்தால், அவருடைய அடிப்படை ஜீவாதார உரிமைகள் மறுக்கப்பட்டிருந்தால், அவர் பொதுநல வழக்கைத் தொடர வாய்ப்பிருந்தது. ஆனால், இப்பொழுது, நிலமை மாறியிருக்கிறது. இன்று, சமூக அமைதிகளில் நாட்டம் கொண்ட, சமுதாய நன்மைகளில் அக்கறை உள்ள எந்தவொரு பிரஜையும் பொதுநல வழக்குகளைத் தாக்கல் செய்யலாம். பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே பொதுநல வழக்குத் தாக்கல் செய்யவேண்டும் என்ற வழிமுறை தற்போது கடைப்பிடிக்கப் படுவதில்லை. நேரடியாகப் பாதிக்கப்படாத பாமர மக்களும், இந்த வழக்கைத் தாக்கல் செய்யமுடியும். எடுத்துக்காட்டாக, ஒரு மாநிலத்தில் வசிக்கும் ஒருவர், மற்றொரு மாநிலத்தில் உழைக்கும் தொழிலாளர்கள் கொத்தடிமைத் தனத்தில் சிக்கி வேதனைப்படுவதைத் தடுப்பதற்காக PIL தாக்கல் செய்யலாம். தமிழ்நாட்டில் சிவகாசியில் பட்டாசுத் தொழிற்சாலைகளில் குழந்தைத் தொழிலாளர்கள் துன்புறுத்துவதைத் தடுக்க ஒருவர் உச்சநீதிமன்றத்தில் PIL தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வேறு ஒரு வழக்குரைஞர் தண்டனை காலத்தைவிட கூடுதலாக சிறையில் வாடிக் கொண்டிருந்தவர்கள் 80 பேரை (இவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்படாமல் வழக்கு விசாரணை முடிவின்றி நீண்டு கொண்டிருந்தது, இவர்களுக்கு வழங்கப்படக் கூடிய தண்டனைக் காலத்தைவிடக் கூடுதலான காலம் இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்கள்) விடுதலை செய்வதற்காக பொதுநல வழக்கு தொடர்ந்தார். பொதுநலவழக்குகள் யார் வேண்டு-மானாலும், தாக்கல் செய்யலாம் என்றிருந்தாலும், நீதிமன்றம் சகல வழக்குகளையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் என்று கருதமுடியாது. ஒவ்வொரு வழக்கின் தனித் தன்மைகளையும் ஆய்வு செய்து இந்த வழக்கு சமூக நலன்களைப் பாதிக்குமா என்பதை உறுதிசெய்து, அதன் பிறகுதான் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
யாரை எதிர்த்து பொதுநல வழக்குத் தொடரலாம்?
பொதுநல வழக்குகள், மத்திய மாநில அரசிற்கு எதிராகவும், நகர்மன்ற நிர்வாகத்திற்கு எதிராகவும் மட்டுமே தொடரமுடியும். தனிப்பட்டநாட்டுக் குடிமகனுக்கு எதிராக பொதுநல வழக்கு தாக்கல் செய்ய முடியாது. ஆனால் Private Party ஒரு பிரதிவாதியாக (Respondent) வழக்கில் ஈடுபடமுடியும். எடுத்துக்காட்டாக டில்லியின் அருகிலுள்ள ஒரு தனியார் தொழிற்சாலையிலிருந்து தினமும் வெளியேறும் ரசாயனக் கலவை கலந்த காற்று அருகிலுள்ள பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று கருதும் சூழ்நிலையில், அந்த நிறுவனம் இந்த வழக்கில் ஒரு பிரதிவாதியாக மாறுகிறது. இந்த வழக்கில் முதல் பிரதிவாதி புதுடில்லி அரசு மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம். தனியார் நிறுவனம் இரண்டாம் பிரதிவாதியாகிறது. ஆனால், அந்த நிறுவனத்தின் மேல் நேரடியாக வழக்குத் தொடுக்க முடியாது.
நீதிமன்றத்தில் ஒரு Writ Petition தாக்கல் செய்யப்படும் முறையிலேயே பொதுநல வழக்கும் தாக்கல் செய்யப்படும்.
உயர்நீதிமன்றத்தில்: உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யும் போது அந்த புகாரின் இரண்டு நகல்கள் தாக்கல் செய்யப்படவேண்டும். புகாரின் இன்னொரு நகல் சம்பந்தப்பட்ட அத்தாட்சி, புகார் மனு மீதுபதிவு செய்யப்படவேண்டும்.
உச்சநீதிமன்றத்தில்: உச்சநீதிமன்றத்தில் றிமிலி தாக்கல் செய்யப்படும்பொழுது புகாரின் ஐந்து நகல்கள் வழங்கப் படவேண்டும். நோட்டீஸ் வழங்கப்படும் பொழுதுதான். பிரதிவாதிக்கு நகல் அனுப்பப்பட வேண்டும்.
(தொடரும்)-உண்மை,16-31.10.15
நீதிமன்றக் கட்டணங்கள்: ஒவ்வொரு பிரதிவாதிக் காகவும், ரூ.50 நீதிமன்றக் கட்டணம் செலுத்த வேண்டும்.
வழிமுறை: பொதுநலவழக்குகளில் மேற்கொள்ளப்படும் வழக்கு விசாரணை, இதர வழக்குகளைப் போலவே நடைபெறும். ஆனால், வழக்கு விசாரணை நடுவே நீதிபதி, குற்றச்சாட்டுக்களை ஊர்ஜிதப்படுத்த (காற்று மாசு, குடிநீர் கெடுதல், மரங்களை வெட்டுதல், சாக்கடைப் பிரச்னை, கொசுத் தொல்லை, ஆற்றுநீரில் ரசாயனக் கலவை) என்ற பல புகார்களை நிருபிக்க ஒரு ஆய்வு அதிகாரியை நியமிக்க விரும்பினால் அவருக்கு அதற்கான அதிகாரம் உண்டு.
எதிர்மனுதாரரின் பதில்களைத் தாக்கல் செய்தபிறகு அதற்கான பதில்களை வாதி எடுத்துவைத்த பிறகு, இறுதி விசாரணை தொடங்குகிறது. நீதிபதி தன் இறுதித் தீர்ப்பை வழங்குகிறார்.
தலைமை நீதிபதிக்கு சில உண்மைகளைத் தெரிவித்து எழுதப்பட்ட கடிதத்தை பொது நலவழக்காகக் கருத முடியுமா? 1990களின் ஆரம்பத்தில், நீதிபதிகள் உண்மைகள் குறிக்கப்பட்ட தபால்அட்டைத் தகவல்களை பொதுநல வழக்குகளாகக் கையாண்டிருக்கின்றனர்.
இவற்றில் மாதிரிக்கு ஒரு சில:
ஹிமாசலப்பிரதேசத்தில் இமயமலை அடிவாரத்தில் உள்ள முசூரி என்ற நகரின் அருகில் சட்டவிரோதமாக இயங்கிய ஒரு சுண்ணாம்புக்கல் எடுக்கும் தொழிலால், அந்தப் பகுதியின் சுற்றுச்சார்பு பாதிக்கப்படுவதாக நீதிபதிக்கு அனுப்பப்பட்ட ஒரு கடிதம் பொதுநலவழக்காக எடுத்துக் கொள்ளப்-பட்டது. உள்நோக்கத்துடன் வழக்குத் தொடரக்கூடாது:
கடந்த காலங்களில் ஒரு சிலர் பொதுநலவழக்கு என்ற அறிவாயுதத்தை தவறான உள்நோக்கத்துடன் துஷ்பிரயோகம் செய்தனர். இதனால், உச்சநீதிமன்றம் பிரச்சினைகளைப் பற்றிய சரியான தகவல்களையும், உண்மையான செய்திகளையும் தருமாறு பொதுநலவழக்கு ஆர்வலர்களிடம் கேட்கிறது. இதன் அடிப்படையில், சட்ட அம்சங்-களை நன்கு ஆய்ந்து, எதிர்தரப்பு பிரதிவாதிகளை விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு அழைக்கிறது. பொதுநல-வழக்குத் தொடர்வதற்கான விதிமுறைகள், சட்டதிட்டங்கள் எதுவும் இல்லாத நிலையிலும், நீதிமன்றம் ஒரு கடிதத்தை பொதுநலவழக்காக விசாரணைக்கு எடுக்க-முடியும். அனைத்து உண்மையான தகவல்-களையும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடவேண்டும். அவற்றின் இயல்புகளை அலசி ஆராய்ந்து மிகவும் அவசரமான நிலை என்று நீதிமன்றம் தீர்மானித்தால், அந்தப் பொதுநல வழக்கு தீர்விற்காக எடுத்துக்கொள்ளப்படும்.
இடைக்கால நிவாரணங்கள்
இறுதி முடிவு தீர்மானம் செய்யப்படுவது வரையிலும், பொதுமக்களின் நலன் கருதி, நீதிமன்றம் இடைக்கால நிவாரணம் வழங்க முடியும்,
ஒரு குழுவை நியமனம் செய்வது நீதிமன்றம், இந்தப் பிரச்சினைப் பற்றி ஆய்வு நடத்தி, அதன் அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு ஒரு கமிட்டியை அல்லது ஆணையரை  நியமனம் செய்யலாம்.
ஒரு ரிட் மனுவை பொதுநலவழக்காக கையாள முடியுமா?
ஆம், பாதிக்கப்பட்டவரால் தாக்கல் செய்யப்படுகின்ற ரிட் மனுவை ஒரு குழுவின் சார்பாகவோ அல்லது ஒரு குழுவோடு சேர்ந்தோ தாக்கல் செய்யப்படுகின்ற ரிட் மனுவை, பொதுநல வழக்காகக் கையாள முடியும்.  ஒரு பிரச்சினை பொதுஜனங்களை பாதிக்கும் பட்சத்தில் (ஒரு தனிமனிதனை அல்ல) ரிட் மனுவை பொதுநலக் வழக்காகக் கையாள முடியும்
உயர்நீதிமன்றத்திலும் உச்சநீதிமன்றத்திலும் பொதுநலவழக்கு: உயர்நீதிமன்றம், உச்சநீதி-மன்றம் _- இரண்டிற்கும் பொதுநலவழக்கை கையாளும் அதிகாரம் உண்டு.
-உண்மை,1-15.11.15