ஜெய்ப்பூர், மார்ச் 3 ராஜஸ்தான் மாநிலத்தில், 'கணவன், தன் மனைவிக்கு பரிசாக அளிக்கும், அசையா சொத்து மீதான பதிவுக்கு முத்திரை கட்டணம் வசூலிப்பதில்லை' என, அம் மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து ராஜஸ்தான் மாநில அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஒருவர் பெயரில் இருந்து, அவரது தந்தை, தாய், மகன், சகோதரி, மருமகள், பேரன் மற்றும் பேத்தி பெயருக்கு மாற்றப்படும் அசையா சொத்து பதிவுக்கு, 2.5 சதவீதம் முத்திரைக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
அதேபோல், மனைவி அல்லது மகளுக்கு, அசையா சொத்து களை பரிசாக வழங்கும்போது, அதன் பதிவுக்கு, சொத்தின் சந்தை மதிப்பில், ஒரு சதவீதம் அல்லது அதிகபட்சமாக, ஒரு லட்சம் ரூபாய்வரை, முத்திரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், கணவன், தன் மனைவிக்கு பரிசாக அளிக்கும் அசையா சொத்தின் மீதான பதிவுக்கு, முத்திரைக் கட்டணம் வசூலிப்பதில்லை என, முடிவு எடுக்கப் பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- விடுதலை நாளேடு, 3.3.19