தலையங்கம் : பெரியாரின் முன்னோக்கும் உச்சநீதிமன்றத் தீர்ப்பும்!

2022 அக்டோபர் 16-30 2022 தலையங்கம்

மகளிர் உரிமைப் பாதுகாப்புக் கண்ணோட்டத்தில் கடந்த 29.9.2022 அன்று உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகளைக் கொண்ட அமர்வு கொடுத்த ஒரு தீர்ப்பு, சிறந்த அமைதிப் புரட்சிக்கு அடிகோலும் ஓர் அரிய தீர்ப்பாகும்.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் டாக்டர் ஜஸ்டிஸ் D.Y. சந்திரசூட், ஜஸ்டிஸ் A.S.போப்பண்ணா, நி.ஙி.பர்தீவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு அது!
திருமணம் ஆகாத பெண்கள் கருவுற்றாலும்கூட அந்தக் கருவை குறிப்பிட்ட கால அளவு -_ கரு வளர்ச்சி அடைந்தாலும், சட்டப்படி பெண்கள் தங்கள் குழந்தை பிறப்பை விரும்பாது கருவைக் கலைக்க விரும்பினால் அப்படிச் செய்துகொள்ள அவர்களுக்கு முழு உரிமை சட்டப்படி உண்டு என்ற புரட்சிகரமான தீர்ப்பை வழங்கியுள்ளனர்! இது பாராட்டுக்குரியதாகும்.

ஏற்கெனவே, திருமணம் என்ற ஒன்றைச் செய்து-கொள்ள விரும்பாமல், இருவரும் இணைந்து வாழும் _ ‘இணைந்து வாழ்தல்’ (Living together) என்பதற்கு உரிமை உண்டு என்ற முந்தைய உச்சநீதிமன்றத் தீர்ப்பும் பெண்ணுரிமையைக் காக்கும் புரட்சிகரமான தீர்ப்பாகும்!
அப்படிக் கூடிவாழும் இணையருக்கு குழந்தை கருத்தரித்த நிலையில், அது தேவையில்லை என்று அந்தத் தாய் கருதுவாரேயானால், அப்படிச் செய்ய அவருக்கு உரிமை தராவிட்டால் அது, திருமணம் செய்துகொண்டு வாழும் இணையருக்கு கருத்தரித்த நிலையில், அக்குழந்தை தேவையில்லை என்று முடிவு செய்து கருக் கலைப்பு செய்து கொள்ள சட்டப்படி உரிமை இருக்கும்போது, திருமணம் என்ற ஒரு சடங்கு இருப்பவர்களுக்கு மட்டும்தான் பொருந்தும் என்பது ஒரு வகையில் பாரபட்சம் _ வேற்றுமைப்படுத்தல் (Discrimination) சட்டப்படி என்று நீதிபதிகள் மிகவும் தெளிவாக இந்தப் புதிய தீர்ப்பில் பொருத்தமாக _ எவரும் மறுக்க முடியாத _ பேதமில்லாது சீர்மையுடன் சட்டம் இருக்க வேண்டும் என்பதால் திருமணமாகாமல் இணைந்து வாழும் இவர்களில் மகளிர் விரும்பும்போது ஏன் மறுக்க வேண்டும்? என்ற நெற்றியடிக் கேள்வியை நீதிபதிகளின் தீர்ப்பு எழுப்புகிறது!
மதங்களின் மூடநம்பிக்கை _ ஆண்டவன் கொடுக்கிறான்; மனிதன் அந்தக் கருவைக் கலைக்கலாமா என்று பத்தாம் பசலித்தன நம்பிக்கை அடிப்படையிலான கேள்வி, கருக்கலைப்புச் சட்டம் முன்பு நம் நாட்டில் வந்தபோது கேட்கப்பட்டது.

இன்றும் வளர்ந்த நாடுகள் என்று தங்களைப் பீற்றிக் கொள்ளும் அமெரிக்கா, ஸ்காட்லாந்து போன்ற நாடுகளில் கிறித்துவம் மற்ற மதவாதிகள் _ குறிப்பாக கத்தோலிக்க நர்சுகள்கூட கருக்கலைப்பு செய்ய மறுத்து ஸ்காட்லாந்தில் ஒரு பரபரப்பான வழக்காக பல ஆண்டுகளுக்கு முன்பே வந்தது!
மக்கள் தொகைப் பெருக்கக் கட்டுப்பாடு _ குடும்பக் கட்டுப்பாடு _ கர்ப்ப ஆட்சி என்பதைத் தந்தை பெரியார்தான் சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பே எழுதியும் பேசியும் நம் நாட்டு மக்களுக்குப் புரியச் செய்ததை ஏற்று, மக்கள் தொகைக் கட்டுப்பாட்டிலும் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது!
ஆண்டவன் கொடுத்த பிள்ளை, கடவுள் தந்த சொத்தல்லவா என்றெல்லாம் கூறியது பகுத்தறிவுக்கு விரோதமானது.

டெஸ்ட் டியூப் பேபி _ சோதனைக் குழாய் மூலம் குழந்தை பெறுதல், ‘வாடகைத்தாய்’ இப்படி நடைமுறை மாற்றங்கள் என்று மாறுதல் வெகுவேகமாக வந்துவிட்ட பிறகு, ஏன் இனியும் பழமைக் குட்டையில் ஊறவேண்டும், சனாதனத்தில் விழுந்து புரள வேண்டும்? என்ற கேள்விக்குச் சரியான விடைதான் உச்சநீதிமன்றத்தின் முற்போக்குத் தீர்ப்பாகும்!
தந்தை பெரியாரின் சேலம் மாநாட்டுத் தீர்மானங்களின் பல்வேறு செயலாக்க வடிவமும், அதனை சட்டப்படி ஏற்கும் உச்சநீதிமன்றத் தீர்ப்பும், காலத்தை வென்றவர் பகுத்தறிவுப் பகலவன் என்பதற்கு சிறப்பான எடுத்துக்காட்டு அல்லவா?
பெரியார் ஒரு சமூக விஞ்ஞானி! அந்த விஞ்ஞானியின் விவேகத்தை எவராலும் புறந்தள்ளிவிட முடியாது. வெல்வது பெரியாரே! என்பது இப்போது புரிகிறதல்லவா?

– கி.வீரமணி
ஆசிரியர்