2024 அறிவியல் மே16-31,2024

ஆஸ்திரியாவிலுள்ள வியன்னாவில் 1993 ஜூன் 14 முதல் 25 வரை மனித உரிமைகள் பற்றிய உலக மாநாடு நடைபெற்றது. இந்த வகையில் இதுவரை இராத பெரிய அளவில் நடைபெற்ற அம்மாநாட்டில் 171 அரசுகளின் பிரதிநிதிகளும், ஏராளமான தேசிய, சர்வதேசிய அமைப்புகளையும், அரசுசாரா நிறுவனங்களையும் சார்ந்தவர்களாக ஏறத்தாழ ஏழாயிரம்பேர் கலந்து கொண்டனர். மாநாட்டின் நோக்கங்களில் ‘அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம் ஏற்கப்பட்ட 1948இலிருந்து மனித உரிமைகள் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்த ஆய்வும் மதிப்பீடும், வளர்ச்சிக்கும் பொருளாதார, சமூக, பண்பாட்டு, அரசியல் உரிமைகள் குடிமக்கள் உரிமைகள் ஆகியவற்றை அனுபவிப்பதற்கும் உள்ள தொடர்பு பற்றிய ஆய்வு, தடைகளைக் கண்டறிதல், தடைகளைக் களையும் வழிகளை ஆராய்தல் ஆகியவை சிலவாகும்.

இந்த மாநாட்டுக்கு முன்பாக டுனிசியாவில் டுனீஸ், கோஸ்டாரிக்காவில் சான்ஜோஸ், தாய்லாந்தில் பாங்காக் ஆகிய நகரங்களில் வட்டார மாநாடுகள் நடைபெற்றிருந்தன. வியன்னா மாநாடு 25 ஜூன் 1993 அன்று வியன்னா பிரகடனமும் நடவடிக்கைத் திட்டமும் என்ற ஆவணத்தை ஏற்று நிறைவேற்றியது. பிறகு அய்.நா. பொதுச்சபை இதனை அங்கீகரித்து ஏற்றுக் கொண்டது. ஒரு பக்கம் மக்களாட்சி, மனித உரிமைகள், மேம்பாடு ஆகியவையும் ஒருபக்கம் மனித உரிமைகளின் உலகளாவிய தன்மை, பகுக்கப் படாமை, தம்முள் அவ்வுரிமைகள் ஒன்றையொன்று சார்ந்திருத்தல் ஆகிய இருவித அம்சங்களும் ஒன்றை ஒன்று சார்ந்திருப்பதைக் கண்டுகொண்டதும் ஏற்றுக் கொண்டதும் வியன்னா பிரகடனத்தின் குறிப்பிடத்தக்க முக்கியத்துவமாகும். இப்பிரகடனம் ‘மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்ததை அய்.நா. பேரவை 1993 டிசம்பரில் ஏற்றுக் கொண்டது. எல்லா மனித உரிமைகளையும் பேணவும் காக்கவும் வேண்டி இப்பரிந்துரை கூறப்பட்டிருந்தது. இந்தப் பிரகடனத்தின் சில பகுதிகள் கீழே தரப்படுகின்றன.

பகுதி 1

1. அய்.நா. அமைப்புத்திட்டம் மனித உரிமைகள் பற்றிய பிற ஆவணங்கள், சர்வதேசச் சட்டம் ஆகியவற்றுக்கிணங்க அனைவருக்கும் எல்லா மனித உரிமைகளும் அடிப்படை சுதந்திரங்களும் உண்டென்பதைக் கடைப்பிடிக்கவும், காப்பாற்றவும் அவற்றுக்கு உலகளாவிய மரியாதையைப் பேணவும் தமது கடமையை நிறைவேற்றுவதில் அரசுகளுக்குள்ள புனிதக் கடப்பாட்டினை இந்த மனித உரிமைகள் பற்றிய உலக மாநாடு மீண்டும் உறுதி செய்கிறது. இவ்வுரிமைகளும் சுதந்திரங்களும் உலகளாவியவை என்பதில் எவ்வித அய்யமுமில்லை.
இந்தக் கட்டுமானத்தில், அய்.நாவின் நோக்கங்களை முழுமையாக நிறைவேற்றுவதில் மனித உரிமைகள் துறையில் பன்னாட்டுக் கூட்டுறவை வளர்ப்பது இன்றியமையாத தேவையாகும்.

2. மனித உரிமைகளும் அடிப்படை சுதந்திரங்களும் மனிதப் பிறவியின் பிறப்புரிமையாகும். அவற்றைப் பேணுவதும் காப்பதும் அரசாங்கங்களின் முதற்பொறுப்பாகும். மக்கட்குழுக்கள் அனைத்துக்கும் சுயநிர்ணய உரிமை உண்டு. அவ்வுரிமையின் வாயிலாக தமது அரசியல் நிலையை சுயசார்பாக நிர்ணயித்துக் கொள்கின்றனர்; பொருளாதார, சமூக, கலாச்சார மேம்பாட்டிற்கு முயற்சிக்கிறார்கள்.
குடியேற்ற நாடுகள் மீதான (காலனி) ஆதிக்கம் அல்லது வேறுவித அயலார் ஆதிக்கம் அல்லது அயலார் கைப்பற்றலின் கீழான ஆதிக்கத்தில் துன்புறும் மக்களின் நிலையை மனதில்கொண்டு அய்.நா. அமைப்புத்திட்டத்துக்கேற்ப தமது பிரிக்க முடியாத சுயநிர்ணய உரிமைக்காகச் சட்டபூர்வமான நடவடிக்கையும் எடுக்க மக்களுக்குள்ள உரிமையை இம்மாநாடு ஒப்புக்கொள்கிறது. சுயநிர்ணய உரிமையை மறுப்பதை மனித உரிமை மீறல் என்று கருதுகின்ற இந்த மாநாடு சுயநிர்ணய உரிமை பயனுள்ள முறையில் அனுபவிக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை அடிக் கோடிட்டுக் காட்டுகிறது.

5. மனித உரிமைகள் அனைத்தும் உலகளாவியவை, பகுக்க முடியாதவை, ஒன்றுக்கொன்று தொடர்பானவை, ஒன்றையொன்று சார்ந்தவை. அவற்றை உலக (நாடுகளின்) சமுதாயம் உலக முழுவதற்கும் ஒரே தளத்தில், ஒரே முறையில் ஒரே தரத்தில், நியாயமான முறையில், ஒரே அழுத்தத்தோடு நோக்க வேண்டும். தேசிய வட்டார தனித்தன்மைகள், பல்வேறு வரலாற்று-பண்பாட்டு சமயப் பின்னணிகளின் முக்கியத்துவம் ஆகியவை மனதில் கொள்ளப்படவேண்டியவைகளாய் இருப்பினும், அரசுகள் தாம் எவ்வித அரசியல்-பொருளாதார- கலாச்சார அமைப்புகளின் பாற்பட்டவைகளாயிருப்பினும், எல்லா மனித உரிமைகளையும் அடிப்படை சுதந்திரங்களையும் பேணுவதும் காப்பதும் அவற்றின் கடமையாகும்.

8. மக்களாட்சி, மேம்பாடு, மனித உரிமைகளுக்கும் அடிப்படைச் சுதந்திரங்களுக்குமான மரியாதை ஆகிய மூன்றும் ஒன்றையொன்று சார்ந்தவையும் ஒன்றையொன்று வலுப்படுத்துபவையுமாகும். தமது அரசியல், சமூக, பொருளாதார, கலாச்சார அமைப்புகளை நிர்ணயிப்பது குறித்து மக்கள் தமது சுதந்திரமான கருத்தை வெளியிடுவதன் அடிப்படையிலும், தம் வாழ்வில் அவற்றில் முழுப் பங்கெடுப்பதன் அடிப்படையிலும் அமைகிறது. அந்தப் பின்னணியில் பார்த்தால், மனித உரிமைகளும் அடிப்படை சுதந்திரங்களும் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் பேணப்படுவதும், காக்கப்படுவதும் எங்கும் நிகழ வேண்டும். எந்த நிபந்தனையுமின்றி நடைபெற வேண்டும். உலகு முழுதும் மக்களாட்சி, மேம்பாடு, மனித உரிமைகளுக்கும் அடிப்படை சுதந்திரங்களுக்கும் மதிப்பு அளித்தல் ஆகியவை பேணப்படவும் வலுப்படுத்தப்படவும் உலக (நாடுகள்) சமுதாயம் ஆதரவளிக்கவேண்டும்.

9. மக்களாட்சிமுறை அமல்படுத்தலுக்கும் பொருளாதார சீர்திருத்தங்களுக்குமான முயற்சிகளில் தம்மை ஒப்புக் கொடுத்துள்ள அனைவரிலும் குறைந்த மேம்பாடமைந்துள்ள நாடுகள் பெரும்பாலானவை ஆப்ரிக்காவில் உள்ளன. அவை மக்களாட்சியும் பொருளாதார முன்னேற்றமும் நாடும் மாற்றத்தில் வெற்றிபெற உலக சமுதாயம் ஆதரவு தரும் என்று இம்மாநாடு மீண்டும் உறுதி செய்கிறது.

10. மேம்பாட்டு உரிமை பற்றிய பிரகடனத்தில் நிறுவப்பட்டுள்ள மேம்பாட்டுரிமை ஓர் உலகளாவிய பிரிக்கப்படமுடியாத உரிமை என்றும் அடிப்படை மனித உரிமைகளின் ஒருங்கிணைந்த ஒரு பகுதி என்றும் மனித உரிமைகள் பற்றிய உலக மாநாடு மீண்டும் உறுதி செய்கிறது.
அப்பிரகடனம் கூறுவதுபோல், மேம்பாட்டின் மய்யமே மானிடப் பிறவிதான்.

மேம்பாடு எல்லா மனித உரிமைகளையும் அனுபவிக்க வகை செய்கிறது. அதற்காக மேம்பாடு அடையாமையைக் காரணமாகக் காட்டி உலகமே ஏற்றுக்கொண்ட மனித உரிமைகளை ஒடுக்குவதை நியாயப்படுத்த முடியாது.
மேம்பாடு அடையவும், அதனெதிர்வரும் தடைகளை உடைக்கவும் அரசுகள் ஒன்றுக்கொன்று உதவ வேண்டும். மேம்பாட்டுரிமை அனைவருக்கும் கிட்டவும், அதனெதிர்வரும் தடைகள் உடைபடவும் உலக சமுதாயம் உலக நாடுகளிடையே ஒரு பயனுள்ள கூட்டுறவைப் பேணி வளர்க்க வேண்டும். மேம்பாட்டுரிமையை நடைமுறைப்படுத்துவதில் நிலைத்த முன்னேற்றம் காண்பதற்குத் தேசிய அளவில் பயனுள்ள மேம்பாட்டுக் கொள்கைகளும் சர்வதேச அளவில் நியாயமான பொருளாதார உறவுகள், வசதியான பொருளாதாரச் சூழல் ஆகியவையும் தேவைப்படுகின்றன.

11. இன்றைய தலைமுறைக்கும் நாளைய தலைமுறைக்கும் வேண்டியிருக்கிற மேம்பாட்டுத் தேவைகளும், சுற்றுச்சூழல் தேவைகளும் சீராகக் கிட்டுவதற்கு உரிய வண்ணம் மேம்பாட்டுரிமை நிறைவேற்றிக் கொள்ளப்படவேண்டும். சட்டவிரோதமாகப் போதை மருந்துகளையும், அபாயமான பொருட்களையும் கழிவுகளையும் குவிப்பது ஒவ்வொருவரது உயிருக்கும் சுகாதாரத்துக்குமான மனித உரிமைக்கு மோசமான ஒரு சவாலை ஆபத்தான முறையில் உருவாக்குகிறது என்பதை இம்மாநாடு ஒப்புக்கொள்கிறது.

அறிவியல் முன்னேற்றத்தையும் அதன் பயன்பாடுகளையும் அனுபவிக்கும் உரிமை அனைவருக்கும் உண்டு. சில போக்குகள்-குறிப்பாக உயிரியல் மருத்துவத்திலும் உயிர் விஞ்ஞானத்திலும் தகவல் தொழில்நுட்பத்திலும் நடைபெறுபவை – தனிமனிதனின் மானிட மாண்பு, மனித உரிமைகள், முழுமை ஆகியவற்றுக்கெதிரான தீங்கான கூறுகளைக் கொண்டவையாக இருப்பதை இம்மாநாடு காண்கிறது.
உலக முழுவதன் அக்கறைக்கும் உரித்தாக வேண்டிய இந்தத் தளத்தில் மனித மாண்பும் மனித உரிமைகளும் முழு மரியாதை பெறுவதை உறுதி செய்து கொள்ள பன்னாட்டுக் கூட்டுறவு வேண்டுமென்றும் இம்மாநாடு வேண்டுகோள் விடுக்கிறது.

12. தமது நாட்டு மக்கள் பொருளாதார சமூக பண்பாட்டு உரிமைகளை முற்றிலுமாகத் துய்ப்பதற்கு வளரும் நாடுகள் செய்யும் முயற்சிகளுக்கு உறுதுணையாக அந்நாடுகளின் வெளிக் கடன் சுமைகளை ஒழிப்பதில் உதவ எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு இம்மாநாடு உலக சமுதாயத்தை வேண்டிக் கொள்கிறது.

14. பரவலான கொடிய வறுமை நிலவுவது, மனித உரிமைகள் பயனுள்ள முறையில் ஒழுங்காகத் துய்க்கப்படுவதைப் பாதிக்கிறது. அதனை உடனடியாகக் குறைப்பதும் ஒருநாள் முற்றிலும் ஒழிப்பதும் உலக சமுதாயத்தின் கவனப் பணிகளில் முன்னுரிமை பெறவேண்டும்.

15. மனித உரிமைகளும் அடிப்படை சுதந்திரங்களும் எவ்விதப் பாகுபாடுமின்றி மதிக்கப்படவேண்டும் என்பது சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தில் ஓர் அடிப்படை விதியாகும். அனைத்துவித இனவாதங்களும், இனப் பாகுபாடுகளும் அந்நியர் வெறுப்பும் அதுபோன்ற சகிப்பின்மைகளும் விரைவாகவும் முற்றிலுமாகவும் அழித்தொழிக்கப்பட வேண்டியது உலக சமுதாயத்தின் முன்கவனப் பணிகளில் ஒன்றாயிருக்க வேண்டும். அவற்றைத் தடுக்கவும் எதிர்க்கவும் அரசாங்கங்கள் பலனுள்ள நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

16. இம்மாநாடு நிறவெறிக் கொள்கையை உடைத்தெறிவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை வரவேற்கிறது. உலக சமுதாயமும் அய்.நா. அமைப்பும் இத்துறையில் உதவிட வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறது.

17. பயங்கரவாதம்-அதன் எல்லா உருவிலும் வகைகளிலும் அதன் நடவடிக்கைகள், செயல்முறைகள், பழக்கங்கள், சில நாடுகளில் அதற்கும் போதை மருந்துக் கடத்தலுக்கும் உள்ள இணைப்புக்கள் ஆகியவை மனித உரிமைகள், அடிப்படை சுதந்திரங்கள், மக்களாட்சி, எல்லைகள் பற்றிய மேலாண்மை அரசுகளின் பாதுகாப்பு, சட்டப்பூர்வமாக அமைந்த அரசாங்கங்களின் நிலைப்பு ஆகியவற்றை அழிக்கும் நோக்கில் அமையும் நடவடிக்கைகள் ஆகும். உலக சமுதாயம் பயங்கரவாதத்தைத் தடுக்கவும் எதிர்க்கவும் கூட்டுறவை வளர்க்கவும் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

18. ஒட்டுமொத்த மனித உரிமைகளில் மாதர், சிறுமிகள், மனித உரிமை பிரிக்க முடியாத, மாற்ற முடியாத, ஒருங்கிணைந்த பகுதியாகும். அரசியல், பொருளாதார சமூக, கலாச்சார குடியியல் வாழ்வில் பெண்களுக்கு சமமான முழுமையான பங்கு தேசிய அளவிலும் சர்வதேசிய அளவிலும் கிடைப்பதும், பால் அடிப்படையிலான எல்லா பாகுபாடுகளையும் ஒழிப்பதும் உலக சமுதாயத்தின் முன்னுரிமை லட்சியங்களாக வேண்டும்.

பால் வன்முறை, பாலியல் மேலாதிக்கம், சுரண்டல், கலாச்சார விருப்பு வெறுப்புகளின் பாற்பட்ட அத்தகைய குற்றங்கள், சர்வதேசக் கடத்தல்கள் ஆகியவை மானிடப் பிறவியின் கண்ணியம் மதிப்பு ஆகியவற்றுடன் ஒவ்வாதவை. அவை அழித்து விலக்கப்படவேண்டும்.
தொடரும்….