விழிப்புணர்வு –
இவ்வுடன்படிக்கை யுனெஸ்கோ பொதுமாநாட்டில் 1960 டிசம்பர் 14 அன்று நிறைவேற்றப்பட்டதாகும்.
பாரிஸ் நகரில் 1960 நவம்பர் 14 முதல் டிசம்பர் 15 வரை நடந்த தனது பதினோராவது அமர்வில் அய்.நா. கல்வி – அறிவியல் கலாச்சாரக் கழகத்தின் (யுனெஸ்கோவின்) பொது மாநாடு.
மனித உரிமைகள் பற்றிய சர்வதேசியப் பிரகடனம் பாகுபடுத்தாமைக் கோட்பாட்டை உறுதி செய்வதையும் ஒவ்வொருவருக்கும் கற்கும் உரிமை உண்டென முழங்குவதையும் நினைவு கூர்ந்தும்,கல்வியில் பாகுபாடு காட்டுவது என்பது அப்பிரகடனத்தில் விளக்கப்படும் மனித உரிமைகளை மீறுவதாகும் என்பதைக் கருதியும்,யுனெஸ்கோ தனது அமைப்புச்சட்ட விதிகளின்படி, மனித உரிமைகள் மீது உலகோர் அனைவரும் மரியாதை காட்ட வைக்கவும், கல்வி வாய்ப்பில் சமத்துவம் வளர்க்கவும் உலக நாடுகளிடையே ஒத்துழைப்பு ஏற்படுத்துவது தனது நோக்கம் என்பதை எண்ணிப் பார்த்தும்,
அதன் விளைவாக, யுனெஸ்கோ, நாட்டுக்கு நாடு தேசியக் கல்வியமைப்பில் இருக்கும் வேறுபாடுகளை மதிக்கிறது.
அதே நேரத்தில், கல்வியில் எந்தவிதப் பாகுபாட்டினையும் தடைசெய்வது மட்டுமின்றி எல்லாருக்கும் கல்வித்துறையில் சம வாய்ப்புகளும் சமமாக நடத்தப்படுதலும் உருவாவதை வளர்ப்பதும் தனது கடமை என்பதை ஏற்றுக்கொண்டும்,இந்த அமர்வுக்கான நிகழ்ச்சி நிரலில் எண் 17.1.4இன் கீழ் விவாதப் பொருளாக கல்வித்துறைப் பாகுபாடுகளின் பல்வேறு அம்சங்கள் பற்றிய முன்மொழிவுகள் என்பது இடம் பெறுவதாலும்,கடந்த (அதாவது 10ஆவது) அமர்வில் இந்தப் பொருள் பற்றி ஒரு பன்னாட்டுடன்படிக்கை உருவாக்கப்பட வேண்டும் என்றும், உறுப்பு நாடுகளுக்குப் பரிந்துரை செய்யப்பட வேண்டும் என்றும் தீர்மானித்திருந்ததாலும்,
1960 டிசம்பர் 14ஆம் நாள் இவ்வுடன்படிக்கையை உருவாக்கி ஏற்கிறது.
விதி 1
1. இவ்வுடன்படிக்கையைப் பொறுத்தமட்டும், “பாகுபாடு’’ என்பது இனம், நிறம், பால், மொழி, மதம், அரசியல் அல்லது வேறு வகை சுயகருத்து, தேசிய வம்சாவழி, சமூகவழி, பொருளாதார நிலை, பிறப்பு ஆகிய எதை அடிப்படையாகக் கொண்டும் ஏற்படுத்தப்பட்டு, கல்வித்துறையில் சமமாக நடத்தப்படுவதை அழிக்கும் அல்லது பாதிக்கும் நோக்கத்திலோ, அவ்விளைவுகளை ஏற்படுத்தக்கூடியனவாகவோ உள்ள எல்லாவித பாகுபாடுகள், ஒதுக்கிவைப்புகள், குறுக்குதல்கள், முன்னுரிமைகள் ஆகியவற்றை உட்கொண்டதாகும். அதிலும் குறிப்பாக
அ. எந்த நிலையிலாயினும், எவ்வகைக் கல்வியிலும் எந்த ஒருவருக்கும் அல்லது ஒரு குழுவுக்கும் கல்வி கிடைக்காமல் செய்தல்;
ஆ. எந்தவொரு தனிமனிதருக்கோ/ குழுவுக்கோ, கல்வியைப் பொறுத்த வரையில் இந்தக் கல்வித்தரம் போதும் என்று வரையறை செய்தல்;
இ. விதி 2,ன் வாசங்கள் அனுமதிக்கிற வகையில் அல்லாது சிலருக்காகவேலீ ஒரு குழுவுக்காகவோ, குழுக்களுக்காகவோ, தனியாக
கல்வியமைப்புகளோ, கல்வி நிறுவனங்களோ உருவாக்குதல், பராமரித்தல்;
ஈ. மானிட மாண்புகளுக்கு ஒவ்வாத நிபந்தனைகளை எவர் மீதும் எக்குழுவின் மீதும் திணித்தல் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
2. இவ்வுடன்படிக்கையைப் பொறுத்த மட்டில் “கல்வி’’ எனுஞ்சொல் கல்வியின் அனைத்து வகைகளையும், அனைத்து நிலைகளையும் குறிக்கிறது. கல்வி வாய்ப்பு, கல்வியின் தரம், எத்தகைய சூழ்நிலையில் அது தரப்படுகிறது என்பதையெல்லாமும் உள்ளடக்கியதாகும்.
விதி 2
கீழ்க்கண்ட நிலைமைகள், ஓர் அரசு அனுமதிக்கும் பட்சத்தில், இவ்வுடன் படிக்கையின் விதி 1இல் குறிப்பிடப்படும் பொருளில் “பாகுபாட்டை’’ உருவாக்குவதாகக் கொள்ளப்படமாட்டாது.
அ. ஆணுக்கும் பெண்ணுக்கும் தனித்தனிக் கல்வி முறையையோ, தனித்தனிப் பள்ளி-களையோ உருவாக்குதல், பராமரித்து வருதல் ‘பாகுபாடு’ அல்ல; ஆனால், இவை ஆணுக்கும் பெண்ணுக்கும் கல்வியை அணுக சம வாயப்பு அளிக்க வேண்டும்; ஒரே தரமும் தகுதியுமுள்ள ஆசிரியர்களே இருபாலாருக்கும் அமைய வேண்டும்; பள்ளித்தலங்களும், உபகரணங்களும் ஒரே தரத்தனவாயிருக்க வேண்டும்; எடுத்துக்கொள்ளப்படும் பாடங்களும் ஒன்றாக அல்லது இணையானவையாக இருக்க வேண்டும்.
ஆ. மதம் அல்லது மொழி காரணமாகத் தனியான கல்வி முறையோ, கல்விக்-கூடங்களோ, நிறுவுதல் _ நடத்துதல் “பாகுபாடு’’ அல்ல; ஆனால், அவை மாணவர்களுடைய பெற்றோர் அல்லது காப்பாளரின் விருப்பத்துக்கேற்ற ஒரு கல்வியை அளிப்பனவாயும், அத்தகைய முறையோ _ கல்விக்கூடமோ கட்டாய
மானதாக இருக்கக்கூடாது. அதில் சேரவோ சேராதிருக்கவோ உரிமை இருக்க வேண்டும். அங்கு அளிக்கப்படும் கல்வியும், குறிப்பாக அந்தந்த மட்டத்தில், உரிய அதிகார அமைப்புகளால் நிறுவப்பட்ட அல்லது அனுமதிக்கப்பட்ட தராதரங்களை நிறைவேற்றுவதாக இருக்கவேண்டும்.
இ. தனியார் கல்விக்கூடங்கள் நிறுவுதலும் நடத்துதலும் “பாகுபாடு’’ அல்ல; ஆனால், அந்தக் கூடங்களின் நோக்கம் எந்தக் குழுவையும் புறக்கணிப்பதாக இல்லாமல் பொதுத்துறை வழங்கும் கல்வி வசதிகளை அதிகப்படுத்துவதாக அமைய வேண்டும்; அந்தந்த மட்டத்தில் உரிய அதிகார அமைப்புகளால் நிறுவப்பட்டுள்ள அல்லது அனுமதிக்கப்பட்டுள்ள தராதரங்களுக்கு இணங்கிய கல்வியை அமைப்பதாயும் அப்படி நிறுவப்பட்டுள்ள/அனுமதிக்கப்பட்டுள்ள நோக்கங்களுக்கு இசைவாக இயங்கு-வனவாயும் இருக்க வேண்டும்.
விதி 3
இவ்வுடன்படிக்கையில் சேரும் அரசுகள் இந்த உடன்படிக்கையில் கூறப்படுகிற பாகுபாடு-களைத் தடுக்கவும், ஒழிக்கவுமான நோக்கத்தில்,
அ. கல்வியில் பாகுபாடு காட்டும் சட்டப்பகுதிகளை நிருவாக அறிக்கைகளையும் விலக்கவும், நிருவாக வழக்கங்களை நிறுத்தவும்,
ஆ. கல்விக்கூடங்களில் மாணவர்களைச் சேர்ப்பதில் பாகுபாடு இல்லை என்பதை தேவைப்பட்டால் சட்டங்களும் இயற்றி, உறுதி செய்யவும்,
இ. பள்ளிச் சம்பளம், கல்வித்தொகை, பிறவகை உதவிகள், வெளிநாடுகளில் பயிலத் தேவையான அனுமதிகளும் வசதிகளும் வழங்குதல் ஆகியவற்றில் தகுதி, தேவை இவற்றின் அடிப்படையில்லாமல் சார்ந்த தேசிய இனம் காரணமாக பொது அதிகாரிகளால் மாணவர்கள் நடத்தப்படுவதில் எந்த வித்தியாசத்தையும் அனுமதியாதிருக்கவும்,
ஈ. மாணவர்கள் ஒரு குறிப்பிட்ட குழுவினர் என்பதால் மட்டுமே பொது அதிகாரிகள் கல்விக்கூடங்களுக்கு வழங்கும் எவ்வித உதவியிலும், கட்டுப்பாடுகளோ, முன்னுரிமைகளோ காட்டப்படுவதை அனுமதியாதிருக்கவும்,
உ. தமது சொந்த நாட்டினருக்குத் தரப்படும்
அதே கல்வி வாய்ப்புகளை தமது மண்ணில் வாழும் அந்நிய நாட்டினருக்கும் அளிக்கவும் உறுதியெடுத்துக் கொள்கின்றன.
விதி 4
மேலும், இவ்வுடன்படிக்கையில் இணையும் நாடுகள் தமக்கென்று கீழ்க்கண்டவாறு ஒரே தேசியக் கொள்கையை உருவாக்கவும் வளர்க்கவும், நடைமுறைப்படுத்தவும் உறுதியெடுத்துக் கொள்கின்றன. அந்தக் கொள்கை, சூழ்நிலை-களுக்கும் தேசிய மரபுக்கும் இசைந்த வழிகளில்
கல்வித்துறையில் சமவாய்ப்புகள் தரப்படுவதையும் மாணவர்கள் சமமாக நடத்தப்படுவதையும் வளர்ப்பதாயிருக்கும். குறிப்பாக
அ. ஆரம்பக் கல்வியைக் கட்டாயமாக்கி, கட்டணமின்றி அளித்தல், எல்லாவிதமான இடைநிலைக் கல்வியும் பொதுவாக
அனைவருக்கும் கிடைக்கவும் கிட்டவும்செய்தல், அவரவர் தகுதிக்கேற்ப உயர்கல்வியும் அதேபோல் அனைவருக்கும் கிட்டச் செய்தல், சட்டம் விதிகளின்படி பள்ளிசெல்வதை ஒரு கடமையாக அனைவரும் செய்வதை உறுதிப்படுத்தல்.
ஆ. அரசுப் பள்ளிகள் அனைத்திலும், அந்தந்த நிலையில், கல்வித் தரங்கள் ஒரே மாதிரி இருத்தலையும், அளிக்கப்படும் கல்வியின் தரம் தொடர்பான நிலைமைகள் சமமாக இருத்தலையும் உறுதி செய்தல்.
இ. ஆரம்பக்கல்வி பெற்றிராதவர்களின் கல்வியையும் ஆரம்பக் கல்வியை முழுதாக முடிக்காதவர்களின் கல்வியையும் ஊக்குவித்தல், தக்க முறைகளில் தீவிரப்
படுத்தல், அவரவர் சக்திக்கேற்ப அவர்களின்
கல்வி தொடர்வதற்கு வழி செய்தல்;
ஈ. ‘ஆசிரியர் பயிற்சி’யில் பாகுபாடின்றி பார்த்துக்கொள்ளல்
விதி 5
1. பங்குபெறும் நாடுகள் கீழ்க்கண்டவற்றை ஒப்புக்கொள்கின்றன.
அ. மானிட ஆளுமையின் முழுமையான வளர்ச்சிக்கும், மனித உரிமைகள், அடிப்படை சுதந்திரங்கள் ஆகியவற்றுக்கான மரியாதையை வலுப்படுத்தவுமான திசையில் கல்வி அமைய வேண்டும். எல்லா நாடுகள், மதங்கள், இனங்கள் சார் மக்களிடையிலும் புரிதல், சகிப்புணர்வு, நட்புறவை கல்வி பேணவேண்டும், அமைதி நிலவுவதற்கான அய்.நா. நடவடிக்கைகளை அது வளர்க்க வேண்டும்.
ஆ. உரிய அதிகாரிகளால் நிறுவப்பட்ட / அனுமதிக்கப்பட்டுள்ள குறைந்தபட்சக் கல்வித்தர நிர்ணயிப்பை உடையனவாக இருக்கும் பட்சத்தில் பொது அதிகாரிகள்
நடத்தும் பள்ளிகள் அல்லது பிற பள்ளிகளையும் தமது குழந்தைகளுக்காக தேர்ந்தெடுக்கவும், அடுத்து தனது சட்டங்களை நடைமுறை செய்ய அரசு நடைமுறைகளுக்கு இணக்கமானதோர் வழியில் தத்தம் ஈடுபாடு சார்ந்த மத-தார்மீக கல்வி பெறுவதை உறுதி செய்துகொள்ளவும், பெற்றோருக்கோ உரிய இடங்களில் சட்டபூர்வமான காப்பாளருக்கோ உள்ள உரிமையை மதிப்பது அவசியம். எந்த ஒரு குழந்தையோ, குழுவோ தமது நம்பிக்கைகளுக்கு இசைவற்ற மதக்கல்வி பெறுமாறு கட்டாயப்படுத்தக்கூடாது.
இ. தங்களுக்கென்று பள்ளிகள் நடத்துவதற்கும், ஒவ்வொரு அரசும் கொண்டுள்ள கல்விக் கொள்கைக்குத்தக்கபடி தமது மொழியைப் பயன்படுத்துவதும் கற்பதும் உள்பட தத்தம் கல்விப் பணிகளை மேற்கொள்ள தேசிய சிறுபான்மையினருக்கு உள்ள உரிமை ஏற்கப்பட வேண்டியது அவசியம்; ஆனால்,
i. தேசிய இறையாண்மையை பாதிக்கக்கூடிய வகையிலோ, இத்தகைய இனத்தோர், முழுச்சமுதாயத்தின் நடவடிக்கைகளில் பங்குகொள்வதையோ, தேசிய சமுதாயம் முழுவதற்குமான மொழியையோ பண்பாட்டையோ புரிந்துகொள்ள முடியாமல் அவர்களைத் தடுக்கும் வகையிலோ இவ்வுரிமை நடைமுறைப்படுத்தப்படக் கூடாது.
ii.உரிய அதிகாரிகள் விதித்திருக்கிற அல்லது அனுமதித்துள்ள பொதுத் தராதரத்திலிருந்து இங்கு அளிக்கப்படும் கல்வி தாழ்ந்ததாயிருக்கக்கூடாது.
iii. அத்தகைய பள்ளிகளில் படிப்பது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது.
2. முந்தைய பத்தியில் கூறப்படும் கோட்பாடுகள் கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்ய தமக்குள்ள கடமையை செயல்படுத்த ஆவன செய்வதாக இவ்வுடன்படிக்கையில் சேர்ந்துள்ள நாடுகள் உறுதி கூறுகின்றன.
விதி 6
இவ்வுடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதில், கல்வியில் காட்டப்படும் பல்வேறு பாகுபாடுகளுக்கு எதிராகவும், கல்வியில் யுனெஸ்கோ பொது மாநாடு எதிர்காலத்தில், சமவாய்ப்பையும் சமமாக நடத்தப்படுவதையும் உறுதி செய்யும் பொருட்டும் செய்யும் பரிந்துரைகளுக்கு உயர்ந்த பட்ச கவனம் கொடுக்கும் என்றும் இதில் பங்கேற்கும் நாடுகள் உறுதியளிக்கின்றன.
விதி 7
யுனெஸ்கோ பொதுமாநாடு, இவ்வுடன்படிக்கையில் பங்குபெறும் அரசுகள் எந்த வடிவில் எந்தத் தேதியில் பருவாந்திர அறிக்கைகள் தரவேண்டும் என்று நிர்ணயிக்கிறதோ, அதன்படி அந்த அரசுகள் அதற்கு பருவாந்திர அறிக்கைகள் தரவேண்டும். அதில், இவ்வுடன்படிக்கையை நடைமுறைப்படுத்தும் வகையிலே அந்த அரசு சட்டமியற்றுவது, நிருவாக நடவடிக்கை உள்பட எடுத்த பல்வேறு வகை நடவடிக்கைகள் பற்றியும் விவரங்கள் தரப்படவேண்டும். நான்காம் விதியில் கூறப்படும் தேசியக் கொள்கையை நிர்ணயித்தது., வளர்ப்பது, அக்கொள்கையைச் செயல்படுத்துவதில் கண்ட வெற்றிகள் எதிர்கொண்ட தடைகள் ஆகியன பற்றியும் கூறிட வேண்டும்.
விதி 8
இவ்வுடன்படிக்கையில் சேருகிற நாடுகளில் இரண்டுக்குள்ளோ, இரண்டுக்கு மேலானநாடுகளுக்கிடையிலோ இந்த உடன்படிக்கையைச் செயலாற்றுவதிலோ அல்லது பொருள் கொள்வதிலோ தகராறு ஏற்பட்டால், பேசி தீர்த்துக் கொள்ளாதபோது, வேறு வகைகளில் தீர்த்துக் கொள்வதும் இயலாவிடில் அவர்களே வேண்டிக் கொண்டால் சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அனுப்பப்பட வேண்டும்.
விதி 9
இவ்வுடன்படிக்கையை ஏற்பதற்குநிபந்தனைகள், தயக்கங்கள் அனுமதிக்கப்படமாட்டா.
விதி 10
இரண்டு அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட நாடுகளிடையே உருவாகும் ஒப்பந்தங்களின் அடிப்படையில் தனிமனிதர்களோ குழுக்களோ அனுபவித்துவரும் உரிமைகள் இவ்வுடன்படிக்கைக்கு எழுத்திலும், உட்பொருளிலும் முரண்படாத வரையில் அவ்வுரிமைகளை இவ்வுடன்படிக்கை குறைக்காது.♦
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக