விழிப்புணர்வு –
மகளிருக்கு எதிரான அனைத்து பாகுபா டுகளையும் ஒழிப்பதற்கான உடன்படிக்கை
அய்.நா. பொதுச்சபையால் 18.2.1979 அன்று ஏற்கப்பட்டு 3.9.1981 அன்று நடைமுறைக்கு வந்த இவ்வுடன்படிக்கையின் சில பகுதிகள் கீழே தரப்படுகின்றன.
இவ்வுடன்படிக்கையில் சேரும் அரசுகள்,-அய்.நா. அமைப்புத் திட்டம், அடிப்படை மனித உரிமைகளிலும், மனிதப் பிறவியின் மதிப்பிலும், மாண்பிலும், ஆணும் பெண்ணும் சமவுரிமை கொண்டவர்கள் என்பதிலும் நம்பிக்கையை உறுதி செய்வதைக் கவனத்தில் கொண்டும்.
-அய்.நா. சர்வதேசிய மனித உரிமைப் பிரகடனம் “பாகுபாடு காட்டுதல் அனுமதிக்கப் படக்கூடியதல்ல’’ என்ற தத்துவத்தை அழுத்திக் கூறுவதையும், மானிடர் யாவரும் சுதந்திரமாய்ப் பிறந்தவர்; உரிமைகளிலும் மதிப்பிலும் சமமானவர்கள் என்றும், பால் வேறுபாடு உள்பட எவ்விதப் பாகுபாடுமின்றி அப்பிரகடனத்தில் குறிக்கப்பெறும் உரிமைகளுக்கும் சுதந்தி ரங்களுக்கும் ஒவ்வொரு மனிதரும் பாத்தியப் பட்டவர் என்றும் முழங்குவதைக் கவனத்தில் கொண்டும், _பன்னாட்டு மனித உரிமைகள் உடன்படிக்கையில் இணைந்த நாடுகளுக்கு, எல்லா ஆடவரும் மகளிரும் பொருளாதார, சமூக, கலாச்சார, குடிமை பற்றிய, அரசியல் உரிமைகளையும் சமமாக அனுபவிக்க உரிமை கொண்டிருப்பதை உறுதி செய்யும் கடமை இருப்பதைக் கவனத்தில் கொண்டும்,
-அய்.நா.வின் கீழாகவும் சிறப்புத்துவம் பெற்ற அமைப்புகளின் கீழும் ஆண்-பெண் சமவுரிமையைப் பேணும் பன்னாட்டு உடன்படிக் கைகளையெல்லாம் கருத்தில் இருத்தியும்,அவை நிறைவேற்றியுள்ள தீர்மானங்கள், பிரகடனங்கள் பரிந்துரைகள் ஆகியவற்றைக் கவனத்தில் கொண்டும்,
-பெண்ணுக்கெதிரான பாகுபாடு என்பது உரிமைகள் சமத்துவம், மனித மாண்புக்குரிய மரியாதை ஆகிய தத்துவங்களை மீறுகிறது. தத்தம் நாட்டில் ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக அரசியல் பொருளாதார சமூக கலாச்சார வாழ்வில் பங்களிப்பதற்கு அது ஒரு தடை அது குடும்பம் சமூகம் இரண்டின் வளமும் பெருகுவதைத் தடுக்கிறது_ தனது நாட்டுக்கும், உலகுக்கும் சேவை செய்யும் வகையில் மகளிரின் சக்திகள் முழு வளர்ச்சி பெறுவதை மேலும் சிரமமாக்குகிறது என்பதையெல்லாம் நினைவுகூர்ந்தும்,
-வறுமைச் சூழலில் மகளிருக்கு உணவு, சுகாதாரம், கல்வி, பயிற்சி, பணிவாய்ப்பு மற்றும் பலதுறைத் தேவைகளும் ஆகக் குறைவாகவே கிடைப்பதில் கவலை கொண்டும்,
-நீதியும் நேர்மையும் அடிப்படையாய் அமைந்த புதிதான சர்வதேசப் பொருளாதார அமைப்பை நிறுவுவது ஆண்_ பெண் சமத்துவத்தைப் பேணி வளர்ப்பதில் கணிசமான பங்களிப்பு செய்யும் என்று தெளிந்தும்,
-நிறப் பாகுபாடு, அனைத்துவகை இனப் பாகுபாடுகள், குடியேற்ற ஆதிக்கம், புதிய குடியேற்ற முறை ஆதிக்கம், படையெடுப்பு அந்நியர் வந்து புகல் ஆதிக்கம் செலுத்துதல், உள்நாட்டு விவகாரங்களில் பிறர் தலையீடு ஆகியவற்றை ஒழிப்பது ஆடவரும் மகளிரும் நமது உரிமைகளை முழுதாக அனுபவிக்க அவசியத் தேவை என்பதை அடிக்கோடிட்டும்,
-சர்வதேச சமாதானமும் பாதுகாப்பும் வலுப்படுத்தப்படுதல், நாடுகளிடையிலான இறுக்கம் தளர்த்தப்படுதல், தம்முள் உள்ள பொருளாதார சமூக அமைப்பு வேறுபாடுகளைத் தாண்டி எல்லா நாடுகளிடையும் கூட்டுறவு, பொதுவான முழு ஆயுதக் குறைப்பு_ அதிலும் கடுமையான, சக்தி வாய்ந்த சர்வதேசக் கட்டுப்பாட்டின் கீழான அணுஆயுதக் கட்டுப்பாடு, நாடுகளுக்கிடையிலான உறவில் நியாயம், சமத்துவம், பரஸ்பர உதவி என்ற கோட்பாடுகள் பிரமாணமாகக் கொள்ளப்படுதல், அந்நியர் புகுந்த நாடுகள், காலனியாதிக்க அந்நியராதிக்க நாடுகள் ஆகியவற்றின் மக்களுக்கு சுயநிர்ணய உரிமையும் விடுபடும் உரிமையும் கைவசமாதல், தேசிய இறையாண்மையும் எல்லை ஒருமைப் பாடும் மதிக்கப்படுதல் ஆகியவை சமூக முன்னேற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் வகை செய்ய, அதன் விளைவாக ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானமாதல் நிறைவேறவும் உதவும் என்பதை உறுதி செய்தும்,
-ஒருநாட்டின் முழுமையும் நிறைவுமான வளர்ச்சிக்கும், உலக நன்மைக்கும், சமாதானத் துக்கும், ஆணுக்கு முற்றிலும் இணையாகப் பெண்ணும், அனைத்துத் தளங்களிலும் பங்களிப்பது தேவை என்று தெளிந்தும்,
-குடும்ப நன்மைக்கும் சமூக வளர்ச்சிக்கும் பெண் தந்திருக்கும் உன்னதப் பங்களிப்பு இன்னமும் முழுதாய் அங்கீகரிக்கப்படாததும் தாய்மையின் சமூக முக்கியத்துவம் குடும்பத்திலும் குழந்தை வளர்ப்பிலும் பெற்றோர் இருவரின் பங்கு ஆகியவற்றை நெஞ்சில் இருத்தியும்,
-குழந்தை பெறுவதில் பெண்ணின் பங்கு பணி பாகுபாட்டுக்கு அடித்தளம் வகுக்கக்கூடாது, மாறாக குழந்தையை வளர்க்கும் பொறுப்பில் ஆண், பெண் மொத்த சமூகமுமே ஒரு பங்கெடுத்துக்கொள்ள வேண்டியது தேவை என்று புரிந்துகொண்டும்,
-மகளிருக்கெதிரான பாகுபாடுகளை ஒழிப்பது பற்றிய பிரகடனத்தில் பொதிந்துள்ள தத்துவங் களை நடைமுறைப்படுத்தவும், அதற்காக, எல்லா வகையான, எந்த உருவிலுமான அத்தகைய பாகுபாடுகளையும் ஒழிக்கத் தேவைப்படுகின்ற நடவடிக்கைகளை எடுக்கவும் உறுதி பூண்டும்,
கீழ்க்கண்டவற்றில் ஒன்றுபட ஒப்புக்கொள்கின்றன.
பகுதி 1
விதி 1
இந்த உடன்படிக்கையைப் பொறுத்தமட்டில் ‘பெண்ணுக்கெதிரான பாகுபாடு’ என்பது அரசியல், பொருளாதார, சமூக, கலாச்சார, குடியியலிலான அல்லது வேறெந்த விதமான அடிப்படை சுதந்திரங்களையும், மனித உரிமைகளையும் திருமணமாகியிருந்தாலும் இல்லாவிட்டாலும் ஆண் – பெண் சமத்துவ அடிப்படையில் பெண் அனுபவிப்பதையோ, பயன்படுத்துவதையோ அங்கீகரிப்பதையோ, தடுக்கும் அல்லது மறுக்கும் நோக்கத்துடனோ அல்லது தடையையோ மறுதலிப்பையோ ஏற்படுத்தக்கூடியதாகவோ பால் அடிப்படையில் செய்யப்படும் வேறுபடுத்தல், புறமாக்குதல், கட்டுப்படுத்தல், அனைத்தினையும் குறிக்கும்.
விதி 2
இவ்வுடன்படிக்கையில் இணையும் அரசுகள் பெண்ணுக்கெதிரான பாகுபாட்டை ஒழிக்க ஒரு கொள்கையை தக்க வகைகளனைத்திலும் தாமதிக்காமல் பின்பற்ற ஒப்புக்கொண்டு, அந்தக் குறிக்கோளுக்காக,
அ. இதுவரை சேர்க்கப்படாதிருந்தால், தமது நாட்டு அரசியலமைப்புச் சட்டத்திலோ அல்லது தகுந்த பிறிதோர் சட்டத்திலோ, ஆண்_ பெண் சமத்துவ தத்துவத்தை பொறிக்கவும், சட்டத்தின்மூலமும் உரிய பிறவழிகளிலும் அதனை நடைமுறையில் கைவரப்பெறச் செய்யவும்.
ஆ. பெண்ணுக்கெதிரான பாகுபாடு அனைத்தையும் தடைசெய்து தக்க சட்ட நடவடிக்கைகளும் பிறநடவடிக்கைகளும், தேவைப்படும் இடங்களில் பாகுபாடு செய்வோர்க் கெதிரான தடைகளும் மேற்கொள்ளவும்.
இ. பால் சமத்துவ அடிப்படையில் பெண் களின் உரிமைகளுக்கு சட்டப் பாதுகாப்பை நிறுவவும் தகுதி பெற்ற தேசிய தீர்வாணையங்கள் மூலமும் பிற பொது அமைப்புகள் மூலமும் எவ்விதப் பாகுபாட்டுச் செயலிலிருந்தும் பயனுள்ள பாதுகாப்பை உறுதி செய்யவும்.
ஈ. மகளிர்க்கெதிரான பாகுபாடு காட்டும் எந்தச் செயல் எந்தப் பழக்கத்திலிருந்தும் விலகவும், பொது நிறுவனங்களும், ஆளும் அமைப்புகளும் இக்கடப்பாட்டுக்கேற்ப பணியாற்றுமென உறுதி செய்யவும்,
உ. எந்தத் தனியாரும், நிறுவனமும் அமைப்பும் மகளிர்க்கெதிராகப் பாகுபாடு செய்வதை ஒழிக்க பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்கவும்.
ஊ. இத்தகைய பாகுபாட்டுக்கு வகை செய்யும் பழக்கவழக்கங்கள், விதிகள், சட்டங்கள் ஆகியவற்றை மாற்றும்வண்ணம் சட்டத்திருத்தம் உட்பட பொருத்தமான நடவடிக்கைகள் அனைத்தையும் எடுக்கவும்.
எ. இத்தகைய பாகுபாட்டுக்கு வகை செய்யும் தண்டனை விதிகளை தேசிய சட்டங்களிலிருந்து அகற்றவும், உறுதியளிக்கின்றன.
விதி 3
இவ்வரசுகள் எல்லா தளங்களிலும், குறிப்பாக அரசியல், பொருளாதார, சமூக, கலாச்சாரத் துறைகளிலும் சட்டமியற்றல் உள்பட சகல தேவையான நடவடிக்கைகளும் எடுத்து ஆண்களோடு பெண்களும் சரிநிகர்சமானமாக மனித உரிமைகளையும் அடிப்படை சுதந்திரங்களையும் பயன்படுத்தவும் அனுபவிக்கவும் அவர்களுக்கு உறுதி கிடைக்கும் வகையில் அந்த நடவடிக்கைகள் அமையவும் உறுதி செய்யும்.
விதி 4
1. இவ்வரசுகள் தற்காலிகமாக ஆண்_ பெண் சமத்துவ நிலைமை நடைமுறையில் அமைவதை விரைவுபடுத்துவதற்காக எடுக்கும் சிறப்பு நடவடிக்கை எதுவும் இவ்வுடன்படிக்கையைப் பொறுத்தவரை ‘பாகுபாடு’ என்று வகைப்படுத்தப் படாது; ஆனால் அந்த நடவடிக்கைகள் எவ்விதத்திலும் சமத்துவமற்ற வெவ்வேறான தரநிர்ணங்களுக்கு வழிசெய்து சமவாய்ப்புகளும் சமமாக நடத்தப்படுதலும் என்ற நோக்கம் நிறைவேற்றப்பட்டபின் அந்த தற்காலிக நடவடிக்கைகள் நிறுத்தப்படும்.
2. இந்த உடன்படிக்கையில் காணும் நடவடிக்கைகள் உட்பட இவ்வரசுகள் தாய்மைப் பாதுகாப்புக்காக எடுக்கக்கூடிய சிறப்பு நடவடிக்கைகள் எதுவும் பாகுபாடு என்று கருதப்படாது.
விதி 5
ஆ. ஆண் தாழ்வென்றோ, பெண் தாழ் வென்றோ நம்புவதை அடிப்படையாகக் கொண்ட அல்லது ஆண் என்றால் இப்படித் தான் பெண் என்றால் அப்படித்தான் என்ற வரையறுப்புகளை நிலைப்படுத்துகிற விருப்பு வெறுப்புகள், மரபுகள், வழக்கங்கள் ஆகியவற்றை ஒழித்துக்கட்டுவதை நோக்கமாகக் கொண்டு சமூக கலாச்சார அமைப்புகளை மாற்றவும்;
ஆ. எல்லா வகையிலும் குழந்தைகள் நலன் தலையாய அம்சங்களில் ஒன்றென உணர்த்தும் வகையில், தாய்மை ஒரு சமூகக் கடமை என்பதை புரியவைப்பதாக, குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவது ஆண்_ பெண் இருபாலருக்கும் கடமை என்று உரைப்பதாகக் குடும்பக் கல்வி அமைவதை உறுதிப்படுத்தவும்; இவ்வரசுகள் உரிய நடவடிக்கைகள் அனைத்தையும் எடுக்கும்.
விதி 6
மகளிரை ஒடுக்கி நலம்பெறல், கூடாலொ ழுக்கத்தில் ஈடுபடுதல், விலைமாதர் ஆக்குதல் ஆகியவை எவ்வுருவில் அமைந்தாலும் அவற்றை ஒழிக்க சட்டமியற்றுதல் உட்பட சகலவித நடவடிக்கைகளையும் இவ்வரசுகள் எடுக்கும்.
பகுதி 2
விதி 7
அரசியலிலும் பொதுவாழ்விலும் பெண்களுக் கெதிரான பாகுபாடுகளை நீக்க பொருத்தமான அனைத்து நடவடிக்கைகளையும் அதிலும் குறிப்பாக பின்வரும் உரிமைகளை உறுதி செய்யக்கூடிய நடவடிக்கைகளையும் இவ்வரசுகளனைத்தும் மேற்கொள்ளும்:
அ. எல்லாக் கருத்துக் கணிப்புகளிலும், தேர்தல்களிலும் வாக்குரிமை, பொதுத்தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் அனைத்து பொறுப்பு களுக்கும் தேர்ந்தெடுக்கப்படும் தகுதி.
ஆ. அரசாங்கக் கொள்கைகளை நிர்ணயிப் பதிலும், நிறைவேற்றுவதிலும் பங்குபெறும் உரிமை; அரசாங்கத்தில் எல்லா நிலையிலும் பதவிகள் எதிலும் பொறுப்பேற்று அனைத்து வகை பொதுப்பணிகளும் ஆற்றவும் உரிமை.
இ. நாட்டின் அரசியலிலும் பொதுவாழ்விலும் பங்குபெறும் அரசாங்க சார்பில்லாத அமைப்பு களிலும் சங்கங்களிலும் பங்கெடுத்துக் கொள்ளும் உரிமை.
விதி 8
தத்தம் அரசாங்கத்தை பன்னாட்டு அமைப்புகளில் பிரதிநிதிப்படுத்தவும், பன்னாட்டு அமைப்புகளின் பணிகளில் பங்குபெறவும் ஆணுக்கிணையாக பாகுபாடேதுமின்றிப் பெண்கள் பணியாற்றுவதற்கு உறுதியளிக்கும் பொருத்தமான நடவடிக்கைகள் அனைத்தையும் இவ்வரசுகள் எடுக்கும்.
விதி 9
ஆண்களைப்போலவே பெண்களுக்கும் தேசியக் குடியுரிமை பெறவோ, மாற்றவோ, தக்கவைத்துக் கொள்ளவோ உரிமையளிக்கும். அந்நிய நாட்டவரை மணந்துகொள்வதோ, கணவர் தன் தேசியத்தை மாற்றிக்கொள்வதோ மனைவியின் தேசியத்தை மாற்றாது; மகளிருக்கு எதிரான பாகுபாடுகளை ஒழித்தல்…
மனைவியை நாடற்றவராக்காது; கணவரின் தேசியம் அவர்மீது திணிக்கப்படாது; என்ப வற்றை இவ்வரசுகள் உறுதிசெய்யும்.
பகுதி 3
விதி 10
கல்வித்துறையில் ஆணுக்குச் சமமாக உரிமைகளைப் பெறுவதை உறுதி செய்யும் வகையில் பாகுபாடுகளை ஒழிக்கும் எல்லாவித நடவடிக்கைகளையும் இவ்வரசுகள் மேற்கொள்ளும். அதிலும் குறிப்பாக…
அ. படிப்பு பற்றியும், கிராமங்களிலும் இருக்கக்கூடிய அனைத்துவகைக் கல்வி நிறுவனங்களிலும் பட்டம், பட்டயக் கல்வி பெறுதல் குறித்தும் வழிகாட்டும் உதவிகள் பெறுவதற்கும், பணிகள் பற்றிய வழிகாட்டுதலிலும் சமநிலை.
ஆ. அதே பாடத் திட்டம், அதே தேர்வுகள், ஒரே தகுதி பெற்ற ஆசிரியர்கள், பள்ளிகள், கருவிகள் ஆகியவற்றிலும் பாகுபாடின்மை;
இ. கல்வியில், எல்லா நிலைகளிலும் எல்லா வகைகளிலும் ஆண் என்றால் இப்படித்தான்-_ பெண் என்றால் அப்படித்தான் எனும் வகையான இறுகிப் போய்விட்ட கருதுகோள்களை விலக்கு வதற்காக ஆண்_ பெண் சேர்ந்து படிக்கும் பள்ளிகளை அதிகப்படுத்துதல், இன்னும் அது போன்ற இந்நோக்கத்துக்கேற்ற முறைகளைச் செயல்படுத்துதல் குறிப்பாக இதற்காக பாட நூல்களையும் பள்ளி நிகழ்ச்சிகளையும் மறுபரிசீலனை புரிதல், தக்க பயிற்றுமுறைகளை ஏற்படுத்தல்.
ஈ. பள்ளிச் சம்பள உதவி, மற்ற வகை கல்வி நிதியுதவிகளில் சமவாய்ப்பு,
உ. முதியோர் கல்வி உட்பட்ட பலவகை தொடர்கல்வி ஏற்பாடுகளில் சமவாய்ப்பு, குறிப்பாக ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் கல்வியில் உள்ள இடைவெளியை கூடிய அளவு விரைவாகத் தவிர்க்கக் கூடிய திட்டங்களில் வாய்ப்புகள்;
ஊ. மாணவியர் பாதியில் பள்ளியிலிருந்து நின்றுவிடுவதைக் குறைத்தல்; அத்தகைய மகளிர்க்கான நிகழ்ச்சித் திட்டங்களை உருவாக்குதல்.
எ. விளையாட்டு, உடல்நலக் கல்வி ஆகியவற்றில் சமவாய்ப்பு;
ஏ. குடும்பக் கட்டுப்பாடு பற்றிய செய்திகள் அது சார்ந்த கல்வி உட்பட குடும்பத்தின் நலம், நல்வாழ்வு ஆகியவை பற்றி அறிவுறுத்துகின்ற சிறப்பு வகைக் கல்வியைச் சார்ந்த விஷயங்கள் அவர்களை அடையச் செய்தல். அறிவுறுத்துகின்ற சிறப்புவகைக் கல்வியைச் சார்ந்த விஷயங்கள் அவர்களை அடையச் செய்தல்.
விதி 11
1. ஆணும்பெண்ணும் சமமே என்ற அடிப்படையில சமமான உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையில், இந்த அரசுகள் வேலைவாய்ப்புத் துறையில் பெண்களுக்கெதிரான பாகுபாட்டினை ஒழிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும். இந்த ‘சமமான உரிமைகள்’ என்பது குறிப்பாக_
அ. வேலைக்கான உரிமை அனைத்து மாந் தர்க்கும் மறுக்கவியலாத உரிமை என்பதையும்,
ஆ. வேலைவாய்ப்புகளில் சமத்துவம்; வேலைகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவதற்கான தகுதிகளும் ஒன்றேயாக அமைக்கப்பெறுதல் என்பதையும்,
இ. தனக்கான வேலையையோ தொழிலையோ தானே தெரிவு செய்துகொள்ள உரிமை, பதவி உயர்வு உரிமை, பணிப் பாதுகாப்பு, வேலையின் லாபங்கள், பணிமுறை நிபந்தனைகள், தொழில்முறைப் பயிற்சிகள், பெறுவதற்கான உரிமை, மறுபயிற்சி, தொழிலில் பணி செயல் பயிற்சி, உயர்நிலை பணிப் பயிற்சி, குறிப்பிட்ட கால இடைவெளியில் மீண்டும் மீண்டும் பயிற்சி பெறல் என்பனவற்றையும்,
ஈ. சமஊதியம், சமமான பிற சலுகைகள், சமமான ஊழியமெனில் கவுரமும் சமம் என்ற நிலை, வேலைத்தர நிர்ணயிப்பில் சமத்துவம் என்பவைகளையும்
உ. குறிப்பாக பணி ஓய்வுக் காலம், வேலை யில்லாக் காலம், உடல் ஊறு, நலமின்மை முதுமையாலோ முடியாமையாலோ பணி செய்ய இயலா உடல்நிலை எய்தியமை, சம்பள விடுப்பு ஆகியவை உள்ளிட்ட சமூகப் பாது காப்பு உரிமைகள் என்பனவற்றையும்,
ஊ. உடல்நலத்துக்கான பாதுகாப்பு உரிமை, பணிக்கள சூழலில் பாதுகாப்பு ஆகியவற்றையும் உள்ளடக்கியதாகும்.
2. திருமணம் காரணமாகவோ, மகப்பேறு காரணமாகவோ பாகுபாடு காட்டுவதைத் தடுக்கும் வகையிலும், மகளிரின் வேலைக்கான உரிமை பயனுள்ள முறையில் உறுதி செய்யப் படவும் இவ்வரசுகள் கீழ்க்கண்ட களங்களில் தகுந்த நடவடிக்கை எடுக்கும்.
அ. தாய்மைக் காலத்தை அல்லது தாய்மை விடுப்பைக் காரணமாக்கி வேலைநீக்கம் செய் வதைத் தடைசெய்தல், மணமான பெண்ணா மணமாகாதவரா என்ற பாகுபாடு பார்த்து பதவி நீக்கம் பற்றி தீர்மானித்தலைத் தடைசெய்வது.
ஆ. சம்பளத்துடன் அல்லது ஈடான சமூகச் சலுகைகளுடன் மகப்பேறு விடுமுறை அதிலும் பழைய பணி, அனுபவம் காரணமான முன்னிருப்பு, சமூகப் படிகளில் குறைவில்லாமல் கிடைக்கச் செய்தல்.
இ. குழந்தைகள் நல வசதிகளை ஒருங் கிணைந்த வகையில் முதன்மை தந்து நிறுவு வதும் உட்பட குடும்பப் பொறுப்பையும் கடமைப் பணிகளையும் இணைத்துச் செயல் படவும் பொதுவாழ்வில் பங்குபெறவும் தம்பதி கட்கு உதவும் படியான சமூகநல அமைப்புகளை ஏற்படுத்துதல்.
ஈ. கருவுற்றிருக்கும் காலத்தில் அவர்களுக்கு ஊறு செய்யக்கூடியதாக பணியின் இயல்பு இருந்தால் சிறப்புப் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்தல்.
3. அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி பற்றிய அறிதல்மூலம் அதற்கேற்ப இந்த விதியில் கூறப்பட்டவை தொடர்பாக முற்காப்பு சட்டங்களியற்றல், தேவைப்படின் அவற்றை மாற்றுதல், விலக்குதல், விரிவு செய்தல்.
விதி 12
1. ஆண் – பெண் சமத்துவ அடிப்படையில் குடும்பக் கட்டுப்பாடு உட்பட சுகாதார வசதிகள் எளிதில் அணுகும்படியானவையாக அமைவதை உறுதி செய்யும் வண்ணம், சுகாதார வசதிகளை பெண்களுக்கு எதிரான பாகுபாடு இல்லாதவையாக ஆக்குவதற்கான தக்க நடவடிக்கைகள் அனைத்தையும் இவ்வரசுகள் மேற்கொள்ளும்.
2. மேலே உள்ள முதல் பகுதியில் பாகு பாட்டுக்கெதிராகக் கூறப்பட்டிருப்பதும் தாய்மை, மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறல், குழந்தை பிறந்த பின்பும் வைத்தியம், பிற வசதிகளையும் இலவசமாக எங்கெங்கு தேவையோ அங்கு ஏற்படுத்தவும், கருவுற்ற காலத்தும், குழந்தை பிறந்த பின்பும் சத்துணவுக்கும் இவ்வரசுகள் உறுதி செய்யும்.
விதி 14
1. நாட்டுப்புற மகளிர்க்கென்றே குறிப் பாக உள்ள சிக்கல்கள், அவர்களுடைய குடும்பத்தின் பொருளாதார நிலையில் அவர்களது குறிப்பிடத்தக்க பங்களிப்பு ஆகியவற்றையும், அதிலும் பணத்தால் மதிப்பிட முடியாத துறைகளிலும் சேர்த்து, கணக்கில் எடுத்துக்கொண்டு இவ்வரசுகள் இவ்வுடன் படிக்கையின் விதிகளை நடை முறைப்படுத்துவதில் அவர்களும் பயனுறும் வகையில் தக்க நடவடிக்கைகளை எடுக்கும்.
2. ஆண்-பெண் சமத்துவ அடிப்படையில் கிராமிய மாதரும் கிராம வளர்ச்சியில் பங்குபெறவும் பலனடையவும் வகை செய்யும் வண்ணம் நாட்டுப்புறங்களிலும் பாபாட்டை அகற்ற இவ்வரசுகள் தக்க நடவடிக்கைகளை எடுக்கும். அவர்களுக்கு,
கீழ்க்கண்ட உரிமைகள் கிடைப்பதையும் உறுதி செய்யும்:
அ. எல்லா மட்டங்களிலும் வளர்ச்சிக்கான திட்டங்களைத் தீட்டுவதிலும் நடைமுறைப் படுத்துவதிலும் பங்கு.
ஆ. குடும்பக் கட்டுப்பாடு பற்றிய தகவல், அறிவுரை, உதவிகள், உள்பட போதுமான சுகாதார வசதிகள் எளிதாய்க் கிடைத்தல்.
இ. சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகளில் நேரடிப் பலன் பெறல்.
ஈ. தம் தொழில்நுட்ப அறிவைப் பெருக்கிக் கொள்வது உட்பட சமுதாய சேவை, விரிவாக் கப்பணிகள், அனைத்தின் நலன்களும் பெறுதல்; முறையான கல்வி, முறைசாராக் கல்வி இருவிதத்தாலும் சகலவித பயிற்சிகளும் கல்வியும்.
உ. வேலை, சுயவேலை ஆகியவை மூலம் பொருளாதார நிலையை தாமே தமக்குதவும் திட்டங்கள், கூட்டுறவு அமைப்புகள் ஆகியவற்றை (அரசுகளே) நிறுவுதல்.
ஊ. சமுதாய நடவடிக்கைகளில் பங்கேற்றல்.
எ. விவசாயக் கடன், நிதியுதவி, விற்பதற்கான ஏற்பாடுகள், உரிய தொழில்நுட்பம் நிலசீர்த்திருத்தம்_ விவசாய சீர்திருத்தம் ஆகியவற்றிலும் நில மறுபங்கீடு திட்டங்களிலும் (ஆணுக்கு) இணையாக நடத்தப்படல்.
ஏ. போதுமான வாழ்க்கைத்தர வசதிகளை அனுபவித்தல்_ குறிப்பாக உறைவிடம், சுகாதாரம், மின்சாரம், குடிநீர், போக்குவரத்து, தகவல் தொடர்பு ஆகிய களங்களில்
பகுதி 4
விதி 15
1. இவ்வரசுகள் சட்டத்தின்முன் பெண்ணுக்கு சம இடம் அளிக்கும்.
விதி 16
1. திருமணம் – குடும்ப உறவுகள் ஆகிய துறைகளில் சகல வகைகளிலும் பெண்ணுக்கெதிரான பாகுபாட்டை ஒழிக்கும் வகையில் இவ்வரசுகள் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கும். குறிப்பாக, ஆண்_ பெண் சமத்துவ அடிப்படையில் கீழ்க்கண்ட உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிக்கும்.
அ. திருமணம் செய்துகொள்வதில் ஆணுக்குள்ள உரிமை.
ஆ. தகுந்த துணையைத் தேர்ந்தெடுப்பதில் ஆணுக்குள்ள உரிமையும் சுயேச்சையான விருப்பமும், சம்மதமும் இருந்தால் மட்டுமே திருமணம் ஏற்கும் உரிமை.
இ. திருமணத்திலும், மணவிலக்கிலும் சம உரிமை_ சம பொறுப்பு.
ஈ. மணமாகி இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, மணவிலக்குப் பெற்றிருந்தாலும் சரி பெற்றோர் என்ற முறையிலும் தம் குழந்தைகள் தொடர்பாக பொறுப்பு சமத்துவமும், சமவுரிமையும் எது எப்படியாயினும் எப்போதும் குழந்தைகள் நலமே அனைத்திலும் மேலான குறிக்கோளாய் அமையும்.
உ. பொறுப்புடனும் சுதந்திரமாகவும் தனக்கு எத்தனை குழந்தைச் செல்வங்கள் வேண்டும்_ அவற்றிடையே வயது இடைவெளி எவ்வளவு என்பதையெல்லாம் தீர்மானிப்பதிலும் ஆணுக்குச் சமமான உரிமையும் இவ்வுரிமைகளைப் பயன்படுத்த வகைசெய்யும் முறையில் தகவல் கல்வி வழிமுறைகள் அவர்களுக்கு எளிதில் கிடைத்தல்.
ஊ. குழந்தைகளின் காப்பாளராதல், குழந்தைகளின் உடன்வைப்பு, அறங்காவல் நிலை, தத்தெடுத்தல் அல்லது தேசிய சட்டத்தில் இதுபோன்ற பிற ஏற்பாடுகள் இருந்தால் அவை, முதலியவற்றில் (ஆணுக்கு) இணையான அதே உரிமைகள் சம பொறுப்பும், எந்நிலையிலும் குழந்தைகளின் நலனே அனைத்திலும் உயர்ந்த முக்கியத்துவம் பெறும்.
எ. குடும்பப் பெயர் சூடுதல், தொழிலோ பணியோ தேர்ந்துகொள்ளுதல் உள்பட கணவருக்குள்ள அதே தனிநபர் உரிமைகள்.
ஏ. இலவசமாகவோ, செலவு செய்தோ சொத்துகளை அனுபவித்தல், விற்றல்-வாங்கல், உரிமையாளராய் இருத்தல், சொத்து சேர்த்தல், மேலாண்மை, நிருவாகம் அனைத்திலும் கணவன்- மனைவி இருவருக்கும் ஒரேவித உரிமை.
2. குழந்தை மணம், அதற்கான நிச்யதார்த்தம் ஆகியவற்றுக்கு சட்ட ஏற்பு கிடையாது. குறைந்த அளவு திருமண வயதைத் தீர்மானித்தும், திருமணங்கள் யாவும் அதற்கான பதிவகங்களில் பதிவு செய்யப்படுவதை கட்டாயமாக அறிவித்தும் இவ்வரசுகள் தேவையான தகுந்த சட்டங்களை இயற்றும்; பிற நடவடிக்கைகளும் எடுக்கும். ♦
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக