திங்கள், 28 செப்டம்பர், 2026

இரண்டாம் திருமணம் செய்வது குற்றம் - சட்ட விளக்கம்

IPC section 494 & 495

ஒரு கணவன் அல்லது மனைவி அவர்களின் திருமண வாழ்க்கைக்கு பிறகு இன்னொரு திருமணம் செய்துக்கொண்டால் அது செல்லாது. கணவன் அல்லது மனைவி இருதுனை புரிந்த குற்றத்திற்க்கு ஆழாகிவிடுவார்கள்.

ஒரு நபர் தன் வாழ்வில் நடந்த முதல் திருமணத்தை மறைத்துஇரண்டாவது திருமணம் செய்ய ஒப்புக்கொண்டால் அது சட்டபடி குற்றம்..

தண்டனை...

இதற்க்கான தண்டனை 7 ஆண்டுகள் சிறைப்படுத்துதல் மற்றும்அபராதமும் ஆகும். இதர காரணங்கள் என்றால் 7 ஆண்டு சிறைவைப்பு மற்றும் அபராதமூம் ஆகும்..

விளக்கம்...

எந்த ஒரு நபருக்கு கணவன் அல்லது மனைவி உயிருடன் இருந்து மறுமணம் புரிந்தால் அது செல்லுபடி ஆகாது . ஏனெனில் அது கணவன் அல்லது மனைவியின் வாழ்நாள் காலத்தில் நடைபெறுவதால் அது இருதுணை மணம் குற்றமாகும். ( பிரிவு 494 )

இருதுணை மணகுற்றத்திற்க்கு அத்தியவசியமாணவை.!

1. குற்றவாளி வேறொருவர்க்கு திருமணம் செய்யப்பட்டிருக்க வேண்டும். உண்மையாக நடந்த திருமணத்திற்க்கான நிரூபனம் அவசியமாகிறது.

இங்கு முதல் திருமணம் செல்லத்தக்கதாக இருக்க வேண்டும். ஒரு வேலை தரப்பினர்களை ஆளுமை செய்யும் சட்டப்படி முதல் திருமணம் செல்லத்தக்கதல்ல என்றால் இரண்டாவது திருமணம் செய்வதன் மூலம் எந்த குற்றமும் செய்யப்படவில்லை.

மேலும் தரப்பினர்களின் வழக்காறு சட்டங்குகளின்படி இரண்டாவது திருமணம் முறைபடி செய்யப்பட்டிருக்க வேண்டும். அத்தகைய திருமணத்தின் செல்லுபடி தன்மை தரப்பினர்களின் மதங்கள் , அவர்களின் உறைவிடம் மற்றும் சில இன்றியமையாத மதம் தொடர்பான திருமணச்சடங்குகளை நிறைவேற்றபடுவதை சார்ந்துள்ளது.

உதாரணம்.

தரப்பினர்கள் இந்து பழங்குடியினர்கள் இரண்டாவது மற்றும் அடுதடுத்த திருமணங்கள் அவர்களது பழங்குடியின வழக்கங்கள் வழக்காறுகளால் ஆளூமை செய்யபடுகிறது என்றால் அத்தகைய இரண்டாவது திருமணங்கள் செல்லத்தக்கது. மற்றும் அந்த நபர் தண்டிக்கத்தக்கவரல்ல என்று உச்சநீதிமன்றம் கூறியது...

2. இரண்டாவது திருமணம் புரியும் நாளில் யார்ருடன் முதல் திருமணம் செய்துக் கொண்டாரோ அவர் உயிருடன் இருக்க வேண்டும்.

3..இரண்டாவது திருமணம் முதல் திருமணம் போல் கொண்டாட படவேண்டும் மற்றும் அது செல்லத்தக்கதாக இருக்க வேண்டும்.

அது போல் காமக்கிழத்தி அல்லது வைப்பாட்டி வைத்துக் கொள்ளுதல் திருமணம் ஆகாது .அதே போல் விவகரத்து தீர்ப்பானை செல்லத்தக்க திருமணத்தை கலைக்கிறது. திருமணம் கலைக்கப்பட்ட பிறகு மீண்டும் திருமணம் செய்து கொள்ள முடியும்.

இரண்டாவது திருமணத்தை நடத்தி வைக்கும் பூசாரி குற்ற உடந்தையாளர் என்ற வகையில் பிரிவு 494 மற்றும் 109 ன் கீழ் தண்டிக்கப்படுவார் . இருப்பினும் இரண்டாவது திருமணத்திற்க்கு வருவதற்க்கு இசைவு தெரிவித்த நபர்கள் அல்லது அந்த திருமணத்திற்க்கு வீட்டில் இடம் அளித்தவர்கள் அந்த திருமணத்திற்க்கு குற்ற உடந்தையாளர் ஆவதில்லை..

எப்பொழுது இரண்டாவது திருமணம் செய்யலாம்.!

1. முதல் திருமணம் செல்லுபடி ஆகாது என தகுதி வாய்ந்த நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டால் அந்த நபர் இரண்டாவது திருமணம் செய்துகொள்வது குற்றமல்ல

2. முந்தய கணவன் அல்லது மனைவி பற்றி தொடர்ந்து 7 ஆண்டுகளுக்கு உயிருடன் இருக்கும் தகவல் ஏதுமில்லை என்றால் மற்ற நபர் மீண்டும் திருமணம் செய்துக்கொள்ள முடியும். இங்கு இரண்டாவது திருமணத்தின் வாழ்க்கைத் துனையிடம் முதல் திருமணம் பற்றி கூறியிருக்க வேண்டும்.

3 . தகுதி வய்ந்த நீதிமன்றத்தின் விவாகரத்து தீர்ப்பாணையின் மூலம் திருமணம் கலைக்கப்பட்டுவிட்டால் இரண்டாவது திருமணம் செய்யலாம்.

சட்ட விளக்கம்:-
P.M.சுந்தரமூர்த்தி M.A.,M.L.,
மத்திய - மாநில அரசு வழக்கறிஞர்
சென்னை உயர் நீதிமன்றம் 2010-2025

ஞாயிறு, 6 செப்டம்பர், 2026

கடைகளுக்கு தமிழில் பெயர் பலகை நவம்பர் 1ஆம் தேதி வரை கெடு! மீறினால் கடும் நடவடிக்கை உயர்நீதிமன்றம் உத்தரவு

 சென்னை, செப்.6  தமிழ்நாட்டில் உள்ள கடைகளுக்கு தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்ற உத்தரவின் அடிப்படையில், நவம்பர் 1 ஆம் தேதிக்குள் பெயர் பலகைகளை மாற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி உட்பட தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள கடைகளுக்கும் தமிழில் பெயர் பலகைகள் வைக்க வேண்டும் என 2025-ஆம் ஆண்டு ஜூன் மாதம் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது.

அந்த உத்தரவில், பெயர் பலகைகளில், தமிழ் பெயருக்கு கீழ் ஆங்கிலத்தில் பெயர் வைத்துக் கொள்ள லாம் என்றும், தவறினால் 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்த உத்தரவை அமல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, மும்பையில் உள்ள இந்தியச் சில்லறை வர்த்தகர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அந்த மனுவில், உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட வணிகச் சின்னங்களின் அடிப்படையில் பெயர் பலகைகள் அமைக்கப்பட வேண்டும் என்றும் அவற்றை மாற்றும் பட்சத்தில் அது வாடிக்கையாளர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அரசு உத்தரவை அமல்படுத்த தயாராக உள்ளபோதும், நிதி உள்ளிட்ட காரணங்களால் உடனடியாக அவற்றை மாற்ற இயலாது என்பதால் பெயர்ப் பலகைகளை மாற்ற கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரி சென்னை மாநகராட்சிக்கும் தமிழ்நாடு அரசுக்கும் மனு அனுப்பப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி கே.சுரேந்தர் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் உத்தரவை அமல்படுத்த தயாராக இருப்பதாகவும், அதற்கு மூன்று மாத கால அவகாசம் வேண்டும் எனவும் மனுதாரர் சங்கம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் கோரிக்கை விடுத்தார்.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, கடைசி வாய்ப் பாக நவம்பர் 1-ஆம் தேதிக்குள், கடைகளின் பெயர் பலகைகளை தமிழில் மாற்ற வேண்டும் எனவும், தவறினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கலாம் எனவும் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.

- விடுதலை நாளேடு, 6.9.26

வியாழன், 30 ஜூலை, 2026

தமிழ்நாடு அரசியல் கட்சிகளின் ரோடு ஷோக்கள் – பொதுக் கூட்டங்களுக்கான வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் நீதிமன்றத்தில் தாக்கல்




பங்கேற்கும் மக்களின் பாதுகாப்புக்கு கட்சிகளே பொறுப்பு என தகவல்

சென்னை, நவ.22 அரசியல் கட்சிகளின் ரோடு ஷோக்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக வகுக்கப்பட்டுள்ள வரைவு வழிகாட்டு விதிமுறைகளை சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்தது.

அரசியல் கட்சிப் பொதுக்கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோக்களில் பங்கேற்கும் மக்களின் பாதுகாப்புக்கு சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியினரே பொறுப்பு என தமிழ்நாடு அரசு வரைவு வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிட்டுள்ளது. அரசியல் கட்சிகள் பொதுக் கூட் டங்கள் மற்றும் ரோடு ஷோக்களுக்கு வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ் நாடு அரசு நேற்று (21.11.2025) சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

வழிகாட்டு நெறிமுறைகள்

அதில் பொதுக்கூட்டங்களை நடத்துவதற்கு, திட்டமிடுவதற்கு, முறைப்படுத்தவும், கண்காணிக்கவும் இந்த வழிகாட்டு நெறிமுறைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அரசு குறிப்பிட்டுள்ளது. 5 ஆயிரம் பேருக்கு மேல் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கக் கூடிய பொதுக்கூட்டங்கள், ஊர் வலங்கள், ரோடு ஷோக்கள், ஆர்ப் பாட்டம், போராட்டம், கலாச்சார மற்றும் மத நிகழ்வுகளுக்கு இந்த விதிகள் பொருந்தும். வழிபாட்டு தளங்களில் நடைபெறும் மத ரீதியான கூட்டங்களுக்கு இந்த வழிக்காட்டு நெறிமுறைகள் பொருந்தாது.

நடத்தை விதிகள் அமலில் இருக்கும் தேர்தல் நேரங்களில் தேர்தல் ஆணையம் வெளியிடும் விதிகள் மட்டுமே அமலில் இருக்கும். இருப்பினும், கூட்டக் கட்டுப்பாடு, குடிநீர், கழிவறை உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகளை வழங்க செய்யும் இந்த விதிகளை அமல்படுத்துவது ஏற்பாட்டாளர்களின் பொறுப்பு ஆகும். 5 ஆயிரத்திற்கும் குறைவாக மக்கள் திரளும் கூட்டங் களுக்கு இது பொருந்தாது. ஆனால் தற்போதைய நடைமுறைகளை பின்பற்றி அனுமதி பெற வேண்டும் என்ற விதிகள் தொடரும்.

மாவட்ட ஆட்சியர் முடிவெடுப்பார்

பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், ரோடு ஷோக்கள், ஆர்ப்பாட்டம், போராட்டம் ஆகியவை நடைபெற உள்ள இடங்களை காவல் துறை அதிகாரிகள், தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் கலந்தாலோசித்து மாவட்ட ஆட்சியர் முடிவெடுத்து அறிவிப்பார்.

பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், ரோடு ஷோக்கள், ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தப்படும் முன் என்ன தேதி, நேரம், எதற்காக நடத்தப்படுகிறது, எவ்வளவு மக்கள் பங்கேற்பார்கள், எத்தனை வாகனங்கள் வரும், பங்கேற்கும் முக்கிய தலைவர்களின் விவரங்களை குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.ரோடு ஷோக்களை பொருத்தவரை பங்கேற்கும் முக்கிய தலைவர்கள் பிரச்சாரத்தை துவங்கும் இடம் மற்றும் முடிக்கும் இடங்களையும், பொதுக்கூட்டங்கள் நடைபெறும் இடங்களையும் குறிப்பிட்டு தெரிவிக்க வேண்டும். தலைமை விருந்தினர்கள் வருகை தரும் நேரம் மற்றும் புறப்படும் நேரத்தையும் விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும்.

இது மாதிரியான நிகழ்வுகளில் மக்கள் எவ்வளவு பேர் பங்கேற்க முடியும் என்பதை பொதுப்பணித்துறை பொறியாளர் சம்பந்தப்பட்ட பகு தியை ஆய்வு செய்து சான்றிதழ் அளிக்க வேண்டும். அதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பொதுப் பணித் துறையிடம் விண்ணப்பிக்க வேண்டும். தேசிய மற்றும் மாநில நெடுஞ் சாலைகளில் பொதுக் கூட்டம் மற்றும் ரோடு ஷோக்கள் நடத்த சம்பந்தப்பட்ட துறைகளின் அனுமதியை பெற வேண் டும். நிகழ்ச்சிகளுக்கு 10 நாட்களுக்கு முன் அனுமதி கேட்டு விண்ணப்பிக்க வேண்டும். 50 ஆயிரம் பேருக்கு மேல் திரள்வார்கள் என எதிர்பார்க்க கூடிய கட்சி மாநாடுகள் போன்ற நிகழ்வுகளுக்கு 30 நாட்களுக்கு முன் அனுமதி கேட்டு விண்ணப்பிக்க வேண்டும். திடீரென ஏற்பாடு செய்யப்பட கூடிய ஆர்ப்பாட்டம், போராட்டங்களை பொருத்தவரை மாவட்டங்களுக்கு மாவட்ட ஆட்சியரும், சென்னைக்கு மாநகர காவல் ஆணையரும் முடிவெடுக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களில் முதலுதவி, ஆம்புலன்ஸ் வசதி, உள்ளிட்ட மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்த விவரங்களை தெரிவிக்க வேண்டும்.நிகழ்ச்சிக்கு அனுமதிக்கப்பட்ட நேரத்தை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். கூட்டத்தினரின் பாதுகாப்புக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே முழு பொறுப்பு என்றும் நிகழ்ச்சியின் போது, பொது மற்றும் தனியார் சொத்துக்கள் சேதமடைந்தால் அதற்கான இழப்பீட்டை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே ஏற்க வேண்டும். நிகழ்ச்சி முடிந்த பின் அந்த இடத்தை முழுமையாக தூய்மை செய்து வழங்க வேண்டும்.

  ஏற்பாட்டாளர்தான் பொறுப்பு!

கர்ப்பிணிப் பெண்கள், மூத்த குடிமக்கள், குழந்தைகள், மாற்று திறனாளிகளை நீண்ட நேரத்திற்கு நிற்க வைக்காமல், அவர்களுக்குப் பாதுகாப்பாக நிகழ்ச்சியில் பங்கேற்க தேவையான அனைத்து வசதிகளையும் நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் தான் செய்ய வேண்டும். நிகழ்ச்சி துவங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பே நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் கூடுவதை தவிர்க்க வேண்டும்.

ஒவ்வொரு விதியையும், ஒவ்வொரு கட்சிகளும் எதிர்க்கும் என்பதால், வரைவு விதிமுறைகளின் நகல்களை தவெக உள்ளிட்ட மனுதாரர் கட்சியினருக்கு வழங்க தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

வரைவு வழிகாட்டு விதிகள் நகல்களை தங்கள் தரப்புக்கு வழங்க வேண்டும் என தவெக உள்ளிட்ட மனுதாரர் கட்சிகள் கோரிக்கை வைத்தது. மனுதாரர்களாக உள்ள அதிமுக, தவெக, தேசிய மக்கள் சக்தி கட்சிகளுக்கு வரைவு வழிகாட்டு விதிகள் நகல்களை வழங்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கு விசாரணையை நவம்பர் 27ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.

 - விடுதலை நாளேடு,22.11.2025

ஞாயிறு, 28 ஜூன், 2026

மதம் மாறியவருக்கு ‘பிசி-முஸ்லிம்’ என ஜாதிச் சான்றிதழ் வழங்கும் அரசாணை ரத்து! நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு தீர்ப்பு!




மதுரை, ஜூன் 28- வேறு மதத்தில் இருந்து முஸ்லிம் மதத்துக்கு மாறியவருக்கு பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் என ஜாதிச் சான்றிதழ் வழங்கும் அரசாணையை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி தெற்கு இலந்தை குளத்தைச் சேர்ந்த பரமசிவம் என்பவர் கடந்த 2015இல் முஸ்லிம் மதத்துக்கு மாறி, பெயரை சமீர் அகமது என மாற்றிக் கொண்டார். அதன்பின்னர், பிற்படுத்தப்பட்டோர் முஸ்லிம் பிரிவில் ‘முஸ்லிம் லெப்பை’ என சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தார். அவரது மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், முஸ்லிம் லெப்பை என சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்து நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.பி.பாலாஜி அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவு:

தமிழ்நாடு அரசு 2024 மார்ச் 9ஆம் தேதி பிறப்பித்த அரசாணை அடிப்படையில், மனுதாரர் தனக்கு பிற்படுத்தப்பட்டோர் முஸ்லிம் சான்றிதழ் கோரி மனு அளித்துள்ளார்.

அரசாணையில், ‘பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர் அல்லது பட்டியல் ஜாதிப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த 7 பிரிவுகளில் ஏதேனும் ஒன்றுக்கு மாறும்போது அவர்களுக்கு ‘பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம்கள்’ என சான்றிதழ் வழங்கலாம்’ என்று கூறப்பட்டுள்ளது.

மதம், இனம், ஜாதி, பிரிவு, பிறந்த இடம் அடிப்படையில் பாகுபாடு காட்டுவதை இந்திய அரசியலமைப்புச் சட்டம் தடை செய்கிறது. அதேநேரம், சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கிய குடிமக்கள் அல்லது பட்டியல் ஜாதியினர் அல்லது பட்டியல் பழங்குடியினரின் முன்னேற்றத்துக்காக சிறப்பு சலுகைகள் வழங்க அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த இடஒதுக்கீடு விசயத்தில் தமிழ்நாடு அரசு கவனமாக செயல் பட்டுள்ளது. முஸ்லிம் மதத்தைப் பின்பற்றும் அனைவரையும் பிற்படுத்தப் பட்ட வகுப்பினர் பிரிவில் சேர்க்காமல், குறிப்பிட்ட சில பிரிவுகளை மட்டுமே பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவில் சேர்த்துள்ளது.

அரசாணையில், ‘பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர் அல்லது பட்டியல் ஜாதியினர் பிரிவில் இருந்து முஸ்லிம் மதத்துக்கு மாறிய ஒருவர் இடஒதுக்கீட்டுச் சலுகையைப் பெற ‘பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்)’ எனக் கருதலாம். மதம் மாறிய பிறகு லெப்பை உள்ளிட்ட 7 பிரிவுகளில் ஒன்றைச் சேர்ந்தவர் என்பதற்கான ஜாதிச் சான்றிதழ் வழங்கலாம்’ என்றும் கூறப்பட்டுள்ளது. இது சட்டப்படி செல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

‘இந்து மதம்போல அல்லாமல் தங்களது மதங்கள் சமூக சமத்துவத்தை அளிப்பதாக கிறிஸ்தவ மிஷனரிகளும், முஸ்லிம் பிரச்சாரகர்களும் கூறி வருகின்றனர்.

மதமாற்றத்தை ஊக்குவிக்கும் இத்தகைய நிலைப்பாடு இருக்கும்போது, முஸ்லிம் மதத்திலும் படிநிலை அமைப்பு உள்ளது என்பது நேர்மையற்றது. முஸ்லிம் மதத்தில் சில பிரிவுகளை ‘பிற்படுத்தப்பட்டவை’ என்றும், மற்றவற்றை ‘முன்னேறியவை’ என்றும் வகைப்படுத்துவது குர்ஆனின் கட்டளை களுக்கு முரணானது. இஸ்லாம் ஒரு சமத்துவ சமுதாயத்தை உருவாக்கவே விழைகிறது. இறைவனின் பார்வையில் அனைவரும் சமம். அங்கு சமூகப் படிநிலைகள் ஏதும் இல்லை.

இருப்பினும், வரலாற்று ரீதியான காரணங்களால், முஸ்லிம் சமூகமும் பல்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட் டுள்ளன. இது இந்து மதத்தில் உள்ள ஜாதி அமைப்புக்கு இணையானவை என்றுகூட துணிந்து கூறலாம். ஜாதி எவ்வாறு பிறப்பால் தீர்மானிக்கப்படுகிறதோ, அதேபோல ஒருவர் பிறப்பாலேயே லெப்பை, ராவுத்தர், மரைக்காயர் அல்லது தக்காணி முஸ்லிமாக அறியப்படுகிறார்.

சென்னை உயர் நீதிமன்றம் 75 ஆண்டுகளுக்கு முன்பு பிறப்பித்த உத்தரவில், ‘முஸ்லிம் மதத்துக்கு மாறியவுடன் ஒருவர் முஸ்லிம் ஆகிறார்’ என்று கூறப்பட்டுள்ளது. அவரை ஒரு குறிப்பிட்ட பிரிவுக்குள் அடக்க முடியாது. இந்த உத்தரவு அமலில் இருக்கும்போது, வெறும் அரசாணையால் நீதிமன்ற உத்தரவை மாற்றியமைக்க முடியாது.

சட்டம் நிறைவேற்ற சட்டப் பேரவைக்கு அதிகாரம், தகுதி இருந்தாலும் அரசு நிர்வாகத்துக்கு அத்தகைய உரிமை இல்லை. அரசு நிர்வாகம் ஒரு போதும் நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கு எதிராக செயல்பட முடியாது. அரசுக்கு எதிரான முடிவாக இருப்பதாக கூறி அதை மீறுவதற்கு நினைத்தால், அது சட்ட ஆட்சியின் முடிவுக்கு வழிவகுக்கும்.

முஸ்லிம் மதத்துக்கு மாறியவர்கள் ஏதேனும் ஒரு வகையான இடஒதுக்கீட்டுப் பலனை தொடர்ந்து பெறுவதை உறுதி செய்ய மட்டுமே மாநில அரசு இத்தகைய அணுகுமுறையை மேற்கொண்டுள்ளது. எனவே, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை கடந்த 2024 மார்ச் 9ஆம் தேதி பிறப்பித்த அரசாணை அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணானது.

அந்த அரசாணை ரத்து செய்யப் படுகிறது. இதனால், முஸ்லிமாக மதம் மாறிய ஒருவர் ‘பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த முஸ்லிம்’ என்ற அந்தஸ்தை கோர முடியாது. அவர் ஒரு முஸ்லிம் மட்டுமே. அதைத் தவிர வேறு எதுவும் இல்லை. இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

சனி, 7 பிப்ரவரி, 2026

சாலைகள், தெருக்களை ஆக்கிரமித்து மத வழிபாட்டுக் கட்டடங்கள் அமைப்பதை நியாயப்படுத்த முடியாது: உயர்நீதிமன்றம்

 சென்னை, ஜன.28  சாலைகள், தெருக்களை ஆக்கிரமித்து மத வழிபாட்டுக் கட்டடங்கள் அமைப்பதை நியாயப்படுத்த முடியாது என்று உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

சென்னை திரு.வி.க. நகர் பகுதியைச் சேர்ந்த சரத் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் தனது வீட்டுக்கு முன் தெருவை ஆக்கிரமித்து அன்னை வேளாங்கண்ணி சிலை அமைக்கப்பட்டுள்ளதாகவும் அதனை அகற்ற உத்தரவிடக் கோரியும் மனுதாரர் கோரிக்கை வைத்திருந்தார். இந்த மனு நேற்று (27.1.2026) விசாரணைக்கு வந்தது.

அப்போது சென்னை மாநகராட்சி தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், வேளாங்கண்ணி சிலை அமைத்துள்ள இடம் அரசு நிலமாகும்; பொது சாலை என வகைப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இதனை கேட்ட நீதிபதிகள், ‘‘சாலைகள், தெருக்களை ஆக்கிரமித்து மத வழிபாட்டுக் கட்டடங்கள் அமைப்பதை நியாயப்படுத்த முடியாது. பொதுப் பாதையில் மத கட்டமைப்புகள் கட்டுவதற்கு எந்த நபருக்கும் உரிமை இல்லை. மத உணர்வுகளை காரணமாகக் கூறி ஆக்கிரமிப்புகளை நியாயப்படுத்த முடியாது.

திரு.வி.க. நகரில் தெருவை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள அன்னை வேளாங்கண்ணி சிலையை அகற்றுவதற்கு உரிய உத்தரவு பிறப்பிக்க சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிடுகிறோம்’’ என்று நீதிபதிகள் தெரி வித்தனர்.

- விடுதலை நாளேடு,28.01.2026