விழிப்புணர்வு –
மஞ்சை வசந்தன்
அய்.நா. பொதுச் சபை 10.12.1948 அன்று மனித உரிமைகள் பற்றிய சர்வ தேசியப் பிரகடனத்தை நிறைவேற்றி வெளியிட்டது. அதில் விவரிக்கப்பட்டுள்ள மனித உரிமைகள் பட்டியல் ‘எல்லா நாடுகளுக்கும், எல்லா மாந்தருக்கும் சாதிக்கப்பட வேண்டிய பொதுத் தரத்தை விளக்குகிறது. இதன் உலகளாவிய சரித்திரப் புகழ் காரணமாக டிசம்பர் 10ஆம் நாள் உலக மனித உரிமைகள் நாளாக ஆண்டுதோறும் அனுசரிக்கப்பட்டுவருகிறது. முழு வடிவில் பிரகடனம் இங்கு தரப்பட்டுள்ளது.
முகப்புரை
உலகில் சுதந்திரம், நியாயம் சமாதானம் ஆகியவற்றுக்கு அடிப்படை மனிதக் குடும்பத்தின் உறுப்பினர் அனைவருக்கும் சுயம்புவான மதிப்பு, அவர்களின் சமமான மாற்றவொண்ணாத உரிமைகள் ஆகியவற்றுக்கு உள்ள அங்கீகாரமேயாகும் என்பதாலும், மனித உரிமைகளுக்கான அவமதிப்பும் அவமரியாதையும் காட்டுமிராண்டி நடவடிக்கைகளில் கொண்டுபோய் விட்டுள்ளன: அத்தகு நடவடிக்கைகள் மனிதகுலத்தின் மனசாட்சியைச் சிதைத்துள்ளன; பொதுவான மக்களின் உச்சமான ஆசை என்று “இவ்வையத்து மாந்தருக்கெல்லாம் பேச்சுரிமையும், நம்பிக்கை உரிமையும் , அச்சம் தேவை இரண்டிலிருந்தும் விடுதலையும் கிடைக்கக்கூடிய புதியதோர் உலகம் உருவாக்க வேண்டும் என்று பிரகடனம் செய்யப்பட்டுள்ளது என்பதாலும்,
அடக்குமுறையையும் சர்வாதிகாரத்தையும் எதிர்க்க புரட்சிக்கு கடைசி வழியாகக்கூட. மனிதன் போகக்கூடாதென்றால் சட்டத்தின்மூலம் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதாகும்.
நாடுகளுக்கிடையே நட்புறவைப் பேணிக் காப்பது அத்தியாவசியம் என்பதாலும் அய்க்கிய நாடுகளைச் சேர்ந்த மக்கள் தமது பிரகடனத்தில் அடிப்படை மனித உரிமைகளிலும் மனிதப் பிறவியின் மதிப்பு_ மரியாதை ஆகியவற்றிலும் ஆண், பெண் அனைவரது சமவுரிமையிலும் தமது நம்பிக்கையை மறு அங்கீகாரம் செய்து, பரவலான சுதந்திரத்தில் சமூக முன்னேற்றத்தையும் இன்னும் மேலான வாழ்க்கைத்தர நிர்ணயிப்பையும் வளர்த்தெடுக்க உறுதி பூண்டுள்ளனர் என்பதாலும்,
உறுப்பு நாடுகள் அய்.நா. உதவியுடன் மனித உரிமைகள், அடிப்படை சுதந்திரங்கள் ஆகியவற்றுக்கு உலக மரியாதையையும், ஏற்பினையும் பேணிக் காப்பதைச் சாதிக்க தம்மை அர்ப்பணித்துக் கொண்டுள்ளன என்பதாலும்,
அந்த அர்ப்பணிப்பில் முழுதாக வெற்றிபெற இந்த உரிமைகளையும், சுதந்திரங்களையும் ஒரேவிதமாகப் புரிந்துகொள்வது அனைத்திலும் அத்தியாவசியம் என்பதாலும், இப்போது
அய்.நா. பொதுச் சபை
எல்லா நாடுகளும், இவ்வையத்து மாந்தருக்-கெல்லாம் சாதிக்க வேண்டிய பொதுவான தரமாக இந்த ‘சர்வதேசிய மனித உரிமைப் பிரகடனத்தை’ பிரகடனப்படுத்துகிறது. ஒவ்வொரு மனிதனும், சமூகத்தின் ஒவ்வொரு அங்கமும், எப்போதும் இதனையே மனதிலிருத்தி கல்விமூலமும் பயிற்றுவித்தல் மூலமும் முற்போக்கு நடவடிக்கைகளால் இந்த உரிமைகளையும் சுதந்திரங்களையும் மதிக்கக் கற்பிக்க வேண்டும். இப்பணி தேசிய அளவிலும், உலகளாவியும் நடக்க வேண்டும்; இந்த உரிமைகளும் சுதந்திரங்களும் பயனுள்ள முறையில் உலகம் முழுவதும் ஏற்கப்படவும், அனுசரிக்கப்படவும் வேண்டும், இது உறுப்பு நாடுகளிலும் அவர்களது கட்டுப்பாட்டில் உள்ள பகுதி மக்களிடையேயும் நடந்தாக வேண்டும் என்பதே இப்படிப் பிரகடனப்படுத்துவதன் குறிக்கோளாகும்.
விதி 1 :
அனைத்து மனிதரும் சுதந்திரமாயும் சம உரிமை, சமமதிப்போடும் பிறக்கின்றனர். அவர்கள் மனசாட்சியும் பகுத்தறிவும் கொண்டு விளங்குகிறார்கள். ஒருவரோடொருவர் சகோதர உணர்வுடன் பழக வேண்டும்.
விதி 2:
இனம், நிறம், பால், மொழி, மதம், அரசியல் அல்லது வேறு ஏதாவது கருத்துகள், தேசியம், சமூகம், சொத்து, பிறப்பு கவுரவம் என்ற எவ்வித வேறுபாடு இன்றி உலக மாந்தர் அனைவரும் இந்தப் பிரகடனத்தில் கூறப்பட்டுள்ள உரிமைகளுக்கும் சுதந்திரத்திற்கும் பாத்தியப்-பட்டவர்கள். மேலும், ஒருவர் சார்ந்துள்ள நாடு அல்லது பிரதேசத்தின் அரசியல், அதிகார எல்லை, உலக நாடுகளிடையே அதன் மதிப்பு போன்றவை கருதிகூட _ அது சுதந்திர நாடோ, பாதுகாக்கப்படும் பகுதியோ, சுயாட்சியற்றதோ, எவ்விதத்திலேனும் முழு இறையாண்மையற்றதோ எப்படியாயினும் அவருக்கு எவ்வித பேதமும் காட்டப்படலாகாது.
விதி 3 :
ஒவ்வொருவருக்கும் வாழும் உரிமை. சுதந்திரம், தனக்கான பாதுகாப்பு ஆகிய உரிமைகள் உண்டு.
விதி 4 :
அடிமையென்றோ, கூலிக்காரன் என்றோ எவருமில்லை; சகலவித அடிமை முறைகளும், அடிமை வணிகமும் தடுக்கப்படுகின்றன.
விதி 5 :
யாரையும் சித்திரவதைக்கோ, கொடுமையான மனித நேயமற்ற தாழ்மை செய்யும் நடத்து
முறைகளுக்கோ தண்டனைக்கோ ஆட்படுத்தக்கூடாது.
விதி 6 :
சட்டத்தின்முன் ஒரு மனிதனாக நடத்தப்படும் உரிமை எங்கும் எவருக்கும் உண்டு.
விதி 7 :
சட்டத்தின்முன் அனைவரும் சமம்; எந்தப் பாகுபாடுமின்றி சட்டத்தின் பாதுகாப்பும் எல்லாருக்கும் சமமாக உரியது. இந்த ஆவணத்தின் எப்பகுதியை மீறியாவது இழைக்கப்படும் பாகுபாடுகளுக்கும், அத்தகைய பாகுபாடுகளைத் தூண்டிவிடும் எச்செயலுக்கும் எதிராக சமமான பாதுகாப்பும் எல்லா மனிதருக்கும் உரியதாகும்.
விதி 8 :
அரசியல் சட்டத்திலோ பிற சட்டத்திலோ தரப்பட்டிருக்கும் அடிப்படை உரிமைகளின் மீறலாக அமையும் எச்செயலுக்கும் எதிராக, தக்க அதிகாரம் படைத்த அந்த(ந்த) தேச நீதியமைப்புகளில் சரியான பரிகாரம் பெறும் உரிமை அனைவருக்கும் உண்டு.
விதி 9 :
சட்டவிரோதமாக யாரும் அடைத்து வைக்கப்படவோ, கைது செய்யப்படவோ, நாடு கடத்தப்படவோ முடியாது.
விதி 10 :
தம் கடமைகள் உரிமைகள் குறித்தோ, சாட்டப்பட்ட குற்றச்சாட்டு பற்றியோ, நடுநிலையான சுயேச்சையான நீதிமன்றங்களில் நேரிய, வெளிப்படையான விசாரணை பெற எல்லாருக்கும் முழுமையான சம உரிமை உண்டு.
விதி 11 :
1. குற்றம் சாட்டப்பட்ட எவருக்கும், விசாரணைப்படி குற்றம் நிரூபிக்கப்படாதவரை நிரபராதி என்றுதான் கொள்ளப்பட வேண்டும் என்ற உரிமை உண்டு. அதுவும், விசாரணை சட்டபூர்வமானதாகவும், வெளிப்படையாகவும் அமையவேண்டும். அதிலும் அவருக்கு, தனது நிலையை எடுத்துக் கூறி தற்காத்துக் கொள்ளத் தேவையான அனைத்து உறுதிகளும் செய்து தரப்பட்டிருந்திருக்கவும் வேண்டும்.
2. ஒரு செயலைச் செய்தபோதோ அல்லது செய்யவேண்டியதைச் செய்யாமல் விட்டபோதோ அந்தக் காலகட்டத்து சட்டப்படியோ சர்வதேச சட்டப்படியோ அது குற்றமல்லவெனில், ஒருவர் அதற்காகக் குற்றவாளி என்று தீர்மானிக்கப்படக்கூடாது. அதேபோல் தவறு செய்திருந்தாலும் தவறு செய்யப்பட்ட காலகட்டத்தில் அதற்கு விதிக்கப்பட்டிருந்த தண்டனையைவிட பெரிய தண்டனை அவருக்கு வழங்கப்படக்கூடாது.
விதி 12 :
ஒருவரது குடும்பம், தனி வாழ்வு, வீடு, கடிதம் எதிலும் சட்டம் அனுமதிக்காத அத்துமீறல் கூடாது. அவரது புகழ், மரியாதை முதலியவற்றுக்கும் ஊறுவிளைவிக்கக் கூடாது. அத்தகைய அத்துமீறல்கள், தாக்குதல்கள் ஆகியவற்றுக்கு எதிராக சட்டத்தின் பாதுகாப்
பைப் பெறும் உரிமை அனைவருக்கும் உண்டு.
விதி 13 :
1. தமது நாட்டில் எங்கு வேண்டுமாயினும் சுதந்திரமாக நடமாடும் உரிமையும், வசிக்கும் உரிமையும் எவருக்கும் உண்டு.
2. எவரும் எந்த நாட்டையும் விட்டு தாயகம் விட்டுக்கூட போகலாம்; தாயகம் திரும்பலாம்.
விதி 14 :
1. வேட்டையாடப்படுவதிலிருந்து தப்ப எந்த வெளிநாட்டிலும் புகல்தேடி சரணடையும் உரிமையும் அனைவருக்கும் உண்டு.
2. ஆனால், அரசியல் சாராத குற்றமிழைத்த-வர்களுக்கும், அய்.நா.வின் நோக்கங்களுக்கோ தத்துவங்களுக்கோ முரணாகச் செயல்பட்ட-வர்களுக்கும் இவ்வுரிமை கிடையாது.
விதி 15 :
1. அனைவருக்கும் ஒரு தேசியம் கோரும் உரிமை உண்டு.
2. சட்டவிரோதமாக எவரது தேசியமும் பறிமுதல் செய்ய முடியாது. ஒருவர் தம் தேசியத்தை மாற்றிக்கொள்ளும் உரிமையும் தடை செய்யப்பட முடியாதது.
விதி 16 :
1. வயது வந்த ஆண் பெண் அனைவருக்கும், இனம், மதம், தேசம் என்ற பேதமின்றி மணம் புரியவும் குடும்பம் நடத்தவும் உரிமை உண்டு. திருமண உரிமையும், மணவிலக்கு உரிமையும் எல்லாருக்கும் பொதுவே.
2. திருமணம் என்பது சம்பந்தப்பட்டவரின் சுதந்திரமான முழு ஒப்புதல் கொண்டே நடக்க இயலும்.
3. குடும்பம் என்பது சமூகத்தின் இயற்கையான, அடிப்படையான குழு அடிப்படை அதற்கு சமூகப் பாதுகாப்பும் சட்டப் பாதுகாப்பும் உறுதியளிக்கப்படும்.
விதி 17 :
1. ஒவ்வொருவருக்கும் தனியாகவோ யாருடன் கூட்டாகவோ சொத்துக்கள் வைத்துக் கொள்ள உரிமை உண்டு.
2. யாருடைய சொத்தும் சட்டப்படியாக அன்றி பறிமுதல் செய்யப்பட முடியாது.
விதி 18 :
எல்லாருக்கும் கருத்துச் சுதந்திர உரிமையும், மத உரிமையும், மனச்சான்று உரிமையும் உண்டு. இதில் தன் மதத்தையோ, நம்பிக்கையோ மாற்றிக்கொள்ளுதல், தனியாகவோ பிறருடன் இணைந்தோ தனியிடத்திலோ பொதுவிலோ, தனது நம்பிக்கையையோ, மதத்தையோ கடைப்பிடித்தல், கற்பித்தல், அதற்கேற்ப தொழுகைபுரிதல், வாழ்தல் என்ற உரிமைகளும் வரும்.
விதி 19 :
அனைவருக்கும் கருத்துரிமையும் அதை வெளியிடும் உரிமையும் உண்டு. குறுக்கீடு இன்றி தன் கருத்துகளைக் கொண்டிருப்பதற்கும் செய்திகளைத் தேடிச் செல்லவும், பெறவும், பரப்பவும், எல்லை பற்றிய தடைகளின்றி எந்த ஊடகம் வழியே செய்திகளைப் பெறவும், கொடுக்கவும் உள்ள உரிமையும் இதிலடங்கும்.
விதி 20 :
1. அமைதியாகக் கூடவும், மன்றங்கள் அமைத்துக்கொள்ளவும் யாவருக்கும் உரிமை உண்டு.
2. ஒரு குறிப்பிட்ட சங்கத்தில் சேருமாறு யாரையும் கட்டாயப்படுத்த முடியாது.
விதி 21 :
1. தன் நாட்டில் ஆட்சியில் நேரடியாகவோ முகவர்கள் வழியாகவோ பங்குபெறும் உரிமை யாவருக்கும் பொது.
2. தன் நாட்டின் அரசு சேவைகளைப் பெறுவதில் எல்லாருக்கும் சம உரிமை உண்டு.
3. மக்களின் விருப்பமே அரசு அதிகாரத்தின் அடிப்படை ஆகும். அந்த விருப்பம் குறித்த காலத்திற்கு ஒருமுறை நடைபெறும் மெய்யான தேர்தல்மூலம் தெரிவிக்கப்படும். தேர்தல்களில் அனைவருக்கும் வாக்குரிமை உண்டு. ஆளுக்கு ஒரு வாக்குதான். அதுவும் ரகசிய வாக்குமூலம் அல்லது அதற்கிணையான சுதந்திர தேர்வுமுறை மூலம் நடைபெறும்.
விதி 22 :
சமூகத்தின் உறுப்பு என்ற முறையில் ஒவ்வொருவருக்கும் சமூகப் பாதுகாப்புரிமை உண்டு. தேசிய முயற்சியும் பன்னாட்டுக் கூட்டுறவும் கொண்டு அந்தந்த அரசின் வசதிக்கும் அமைப்புக்கும் ஏற்ப ஒவ்வொருவரும் தனது மரியாதைக்கு அத்தியாவசியமானதும் தன் ஆளுமையை சுதந்திரமாக வளர்த்துக்கொள்ள இன்றியமையாததுமான பொருளாதார, சமூக, கலாச்சார உரிமைகளை அனுபவிக்கவும் உரிமை உண்டு.
விதி 23 :
1. ஒவ்வொருவருக்கும் வேலைவாய்ப்பு உரிமை, வேலையைத் தேர்ந்துகொள்ளும் உரிமையும் நியாயமான ஆரோக்கியமான வேலைச் சூழலுக்கான உரிமையும் வேலையின்மையிலிருந்து பாதுகாப்புக்கான உரிமையும் உண்டு.
2. ஒத்த வேலைக்கு ஒத்த ஊதியம் பெற எவ்வித பேதமுமின்றி எல்லாருக்கும் உரிமை.
3. வேலை செய்யும் ஒவ்வொருவருக்கும் நியாயமான நல்லூதிய உரிமை உண்டு. அது அவர் தனக்கும் குடும்பத்துக்கும் மனித மரியாதைக்கு ஏற்ற நலவாழ்வுக்கு வழிவகுப்பதாய் இருக்க வேண்டும். தேவைப்பட்டால் பிறவகை சமூகப் பாதுகாப்பு முறைகளால் அது ஈடு செய்யப்படவேண்டும்.
4. தம் நலன்களைப் பாதுகாத்துக்கொள்ள தொழிற்சங்கம் அமைக்கவோ இருக்கும் அமைப்பில் சேரவோ ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு.
விதி 24 :
ஒவ்வொருவருக்கும் ஓய்வுக்கும் பொழுதுபோக்குக்கும் உரிமை உண்டு. இதில் வேலைநேரம் பற்றிய நியாயமான வரம்புகளும் சம்பளவிடுப்பு பற்றி உரிமையும் சேரும்.
விதி 25 :
1. உணவு, உடை, உறையுள், மருத்துவ வசதி, சமூக வசதிகள் முதலான நலமும் நல்வாழ்வும், தனக்கும் குடும்பத்தினருக்கும் பெறும் வகையிலான வாழ்க்கைத்தரம் என்பதும் அனைவருக்கும் உரிய உரிமை ஆகும். இதில் வேலையின்மை நோய் இயலாமை, முதுமை, கைம்மை முதலான தன் சக்திக்கு அப்பாற்பட்ட காரணங்களால் ஜீவனமே சிரமமாகும் நேரங்களுக்கான பாதுகாப்பும் அடங்கும்.
2. தாய்மையும் குழந்தைமையும் சிறப்புக் கவனிப்புக்கும் உதவிக்கும் உரியவை. மணவாழ்வில் பிறந்தாலும், திருமணம் இல்லாத பெற்றோருக்குப் பிறந்திருந்தாலும் எல்லா குழந்தைகளுக்கும் ஒரே சமூகப் பாதுகாப்பு உண்டு.
விதி 26 :
1. எல்லாருக்கும் கல்வியுரிமை உண்டு. குறைந்தது ஆரம்பக் கல்வி, அடிப்படைக் கல்வி, இலவசமாக இருக்கவேண்டும். ஆரம்பக் கல்வி கட்டாயமாக இருக்கவேண்டும். பொதுவாக தொழிற்கல்விக்கும், தொழில்நுட்பக் கல்விக்கும் ஏற்பாடுகள் வேண்டும். உயர்கல்வி தகுதி அடிப்படையில் எல்லாருக்கும் கிடைக்க வகை செய்ய வேண்டும்.
2. மனித ஆளுமையின் முழு வளர்ச்சிக்கானதாகவும் மனித உரிமைகள் அடிப்படை சுதந்திரங்கள் ஆகியவற்றின் மதிப்பை வலுப்படுத்துவதாயும் கல்வியின் நோக்கம் அமைய வேண்டும். நாடுகளிடையிலும், இனங்களிடையிலும், மதங்களிடையிலும் புரிந்துகொள்ளுதல், சகிப்பு, நட்புறவு ஆகியவற்றை அந்தக் கல்வி பேணி வளர்க்க வேண்டும். அமைதிக்கான அய்.நா. நடவடிக்கைகளுக்கு அது உதவியாக அமையவேண்டும்.
3. தங்கள் குழந்தைகள் எத்தகைய கல்வி பெற வேண்டும் என்று தீர்மானிப்பதில் பெற்றோருக்கு முன்னுரிமை உண்டு.
விதி 27 :
1. சமூகத்தின் கலாச்சார வாழ்வில் சுமுகமாகப் பங்கேற்கவும், கலைகளை அனுபவிக்கவும், அறிவியல் மேன்மைகளில் பங்கு பெற்றுப் பயனடையவும் அனைவருக்கும் உரிமை உண்டு.
2. ஒவ்வொருவருக்கும் தன் முயற்சியால் விளைந்த அறிவியல்/கலைத்துறை, இலக்கிய சாதனைக்கான பொருளாதார நலன்கள் தார்மிக நலன்களுக்கான பாதுகாப்புரிமையும் உண்டு.
விதி 28 :
இப்பிரகடனத்தில் இடம்பெறும் உரிமைகளையும் சுதந்திரங்களையும் அனுபவிக்க வகை செய்யும் வண்ணம் சமூகத்திலும் சர்வதேச அளவிலும் ஓர் அமைப்பு ரீதியான உரிமை அனைவருக்கும் உண்டு.
விதி 29 :
1. ஒவ்வொருவருக்கும் சமுதாயக் கடமைகள் உண்டு. அவற்றின் மூலம்தான் ஒரு மனிதரின் ஆளுமை யதேச்சையான முழு வளர்ச்சி பெறமுடியும்.
2. தன் உரிமைகளையும் சுதந்திரங்களையும் அனுபவிப்பதில் ஒருவருக்கு ஏற்படுத்தப்-படக்கூடிய கட்டுப்பாடுகளுக்கும் சில விதிகள் உண்டு. மற்றவர்களும் தமக்குரிய அத்தகைய உரிமைகளை அனுபவிப்பதற்கு வகை செய்யும் முறையிலேயே, அவற்றுக்கான மரியாதையும் அங்கீகாரமும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்கு மட்டுமே_ அதுவும் அறநெறிகள் பொது அமைதி, ஜனநாயக சமூகத்தின் பொது நன்மை ஆகியவற்றுக்காகவும் மட்டுமே கட்டுப்பாடுகள் அனுமதிக்கப்படும்.
3. அய்.நா.வின் நோக்கங்களுக¢கும் தத்துவங்-களுக்கும் முரண்படும் வகையில் இவ்வுரிமைகளும் சுதந்திரங்களும் பயன்படுத்தப்படமாட்டா.
விதி 30
இப்பிரகடனத்தில் கூறப்படும் எதுவும் இங்கு கூறப்பெற்ற எந்த உரிமையையும் எந்த சுதந்திரத்தையும் அழிக்கக்கூடியதான எந்த நடவடிக்கையில் ஈடுபடவும். எதைச் செய்யவும் எந்த அரசுக்கும் எந்த மக்கள் குழுவுக்கும் எவ்வித உரிமையும் அளிப்பதாக எவ்வகையிலும் பொருள்கொள்ளப்படக்கூடாது.
தரவு : ‘‘மனித உரிமைகள்’’ நூல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக