தலையங்கம் : 

2022 அக்டோபர் 01-15 2022 தலையங்கம்

சென்னை உயர்நீதிமன்றத்தில் 23.9.2022 அன்று மாண்பமை நீதிபதிகள் ஜஸ்டிஸ் எஸ்.வைத்தியநாதன், ஜஸ்டிஸ் டி.வி.தமிழ்ச்செல்வி ஆகியோர் அடங்கிய அமர்வு ஓர் அருமையான தீர்ப்பினை வழங்கியிருக்கிறது!
சென்னை பெருநகர மாநகராட்சிக்குட்பட்ட நொச்சிக்குப்பம் பகுதியில், பொதுவழித் தடத்தை மறித்து ஆக்கிரமிப்பாகக் கட்டப்பட்டிருக்கும் கோயில் ஒன்றை இடித்துத் தள்ளிட மேலும் இரண்டு மாத அவகாசத்தைக் கொடுத்துள்ளனர்!

ஏற்கெனவே இந்த வழக்கினை விசாரித்து ஓர் அமர்வு _ அதில் ஜஸ்டிஸ் தமிழ்ச்செல்வி அவர்களும் இடம் பெற்ற அமர்வு _ அஞ்சலை அம்மாள் என்பவர் தனது வழித்தடத்தை மறைத்து, கட்டப்பட்டுள்ளதாகக் கூறும் கோயிலை வேறு இடத்திற்கு மாற்றிட _ ஆணை பிறப்பித்தும் அவ்வாணைகள் செயல்படுத்தப்படாமல் அப்படியே ‘கிணற்றில் போட்ட கல்லாக’ கிடந்த நிலையில் சென்னை மாநகராட்சி, காவல்துறை, ஆணையர்கள் மீது அவதூறு வழக்கும் தொடுக்கப்பட்ட இந்த ரிட் மனுவின் மீது தீர்ப்புக் கூறப்பட்டது.
மிக அருமையான கருத்தினை நீதிபதிகள் தமது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
“எந்தக் கடவுளும் யார் வீட்டுக் கதவையும் தட்டி, பொதுச் சொத்தினை ஆக்கிரமித்து எங்களுக்குக் கோயில் கட்டித் தாருங்கள்’’ என்று கோயிலையோ, சர்ச்சையோ, மசூதியையோ கட்டித் தர வேண்டுகோள் விடுக்கவில்லை!
முன்பு கடவுளைக் கும்பிடச் சொல்வோருக்கு மன அமைதி விரும்பிச் சென்ற இடங்களாக இருந்த கோயில்கள் இப்போது _ அண்மைக் காலத்தில் _ பேதங்களை நிலைநாட்டும் இடங்களாகவும், தங்களது அதிகாரங்களைக் காட்டும் மய்யங்களாகவுமே
(கோயில்கள்) பயன்படும் நிலை உள்ளது!

அதைவிட, தற்போது வழிபாட்டு இடங்கள், பிரச்சாரத்திற்கு உரியவைகளாகவும், சட்டம், ஒழுங்கு பிரச்சினைகளுக்கு ஊற்றுக் கண்ணாகவும் அமைக்க, வன்முறை, பயங்கரவாதம் இவைகளை ஏற்படுத்தி விலைமதிப்பற்ற மனித உயிர்களைப் பலி கொள்வதாகவும் சொத்துகளை நாசப்படுத்தவுமான சூழ்நிலையே பெரிதும் நிலவுகிறது.
வழிபாட்டு இடங்கள், சிலரின் சொந்த விருப்பு வெறுப்புகளைத் தீர்த்துக்கொள்ளும் இடங்களாகவும் சட்ட விரோதச் செயல்களின் கூடாரமாகவும் இருக்கும் நிலையே காணப்-படுகிறது.
பல இடங்களில் பொது இட ஆக்கிரமிப்புகளை மறைப்பதற்கு (கோயில்கள் போன்ற) வழிபாட்டு இடங்கள் பெரிதும் பயன்படுத்தப்பட்டன. அதனை மூடி மறைக்கும் உபாயமாகவும் பயன்படுத்ப்படுகின்றன _ ஆக்கிரமிப்பாளர்களால். இதனால்தான் முன்பு இதே நீதிமன்றம் ஒரு வாரத்திற்குள் அந்த ஆக்கிரமிப்புக் கோயிலை இடிக்கச் சொல்லி ஆணை பிறப்பித்தும் அதனை அதிகாரிகள் செயல்படுத்தத் தவறினர்.
இப்போது நாங்கள் இரண்டு மாதத் தவணை தருகிறோம்; அதற்குள் இடித்து அப்புறப்-படுத்த வேண்டும் என்று திட்டவட்டமான ஆணையை தீர்ப்பின் மூலம் வழங்கியுள்ளதை மிகவும் பாராட்டி வரவேற்கிறோம்.

ஏற்கெனவே உச்சநீதிமன்றம் தமிழ்-நாட்டில்தான் அதிகமான ஆக்கிரமித்த நடைபாதைக் கோயில்கள் 36,000க்கும் மேல் உள்ளன என்று கூறி அகற்றிட தலைமைச் செயலாளருக்கு ஆணை பிறப்பித்தும், முந்தைய ஆட்சியில் அதை அகற்றும் பணி நடைபெறவே இல்லை என்பது சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.
ஆகம விதிகள் பற்றி ஆலாய்ப் பறக்கும் சனாதன வக்காலத்து வீரர்கள், கோயில் பாதுகாப்புக் குழு என்கிற போர்வையில் திடீர் அவதாரம் எடுத்த பெரிய மனிதர்கள் கூறட்டும் இதுபோன்ற கோயில்களும் அவற்றில் நடைபெறும் பூஜைகளும் ஆகம விதிகளின்படிதான் நடைபெறுகின்றனவா?

ஆகம விதிகள்படியா இவை கட்டப்-பட்டன? (அப்படிக் கட்டப்பட்டதாக வாதத்திற்காகச் சொல்லப்பட்டாலும் சட்டம் ஏற்கக் கூடியதா?) அல்ல என்னும்போது அவர்கள் அல்லவா முதலில் இத்தகைய நடைபாதை ஆக்கிரமிப்புப் கோயில்கள் மற்றும் வழிபாட்டு நிலையங்கள் பற்றிக் குரல் எழுப்பி ‘இயக்கம்’ நடத்த முன்வரவேண்டும்?
எப்படி இருந்தாலும் அருமையான கருத்துகளை சட்டபூர்வமாக எடுத்து வைத்து நீதிபதிகள் தீர்ப்பு _ ஆணைக்காக பாராட்டக் கடமைப்பட்டுள்ளோம்.
மற்ற தனிநபர் ஆக்கிரமிப்புகளைப் பற்றி அதிகம் பேசுவோர், ஓங்கிக் குரல் எழுப்ப இதில் ஏன் மவுனசாமியார்களாக உள்ளனர் என்பதே நமது நியாயமான கேள்வியாகும்.

– கி.வீரமணி
ஆசிரியர்