18வயதிற்கு உட்பட்ட அனைவரையும் குழந்தைகள் என்று அய்க்கிய நாடு சபை வரையறை செய்திருக்கிறது. குழந்தைப் பருவம் என்பது மகிழ்ந்து, விளையாடும் பருவம்.எதையும் கேள்விகளால் கேட்டுக் கேட்டு விளக்கம் பெற விரும்பும் பருவம். நட்புக் குழந்தைகளோடு பேசிப் பேசி மகிழ விரும்பும் பருவம். ஆனால் உலகத்தில் இருக்கும் எல்லாக் குழந்தைகளுக்கும் ஒன்று போல வாய்ப்புகள் இல்லை. வசதிகள் இல்லை.வறுமையிலும் பிணியிலும் வாடும் பல கோடி
குழந்தைகளைக் கொண்ட உலகமாக நாம் வாழும் இந்த உலகம் இப்போது இருக்கிறது.
குழந்தைகளைக் காப்பாற்றுவதற்கான பல்வேறு சட்டங்கள் உலகில் உள்ளன. 18 வயதிற்கு முன் திருமணம் செய்வது குழந்தைத் திருமணம் என்ற வகையில் உலகின் பெரும்பாலான நாடுகளில் தடை செய்யப்பட்டிருக்கிறது. மீறி குழந்தைத் திருமணம் செய்பவர்கள் மீதும், நடத்தி வைப்பவர்கள் மீதும் சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன..
இந்தியாவில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவதை தொழிற்சாலை சட்டம், 1948 மூலம் ஒன்றிய அரசாங்கம் நடைமுறைப்படுத்தியது. குழந்தைகளை வேலைக்கு அமர்த்தக்கூடாது என்பதை நடைமுறைப்படுத்தவும் கண்காணிக்கவும் (குழந்தைத் தொழிலாளர் தடுப்பு மற்றும் முறைப்படுத்துதல்) திருத்தப்பட்ட சட்டம் 2016 அமல்படுத்தப்பட்டுள்ளது.அதன்படி 14 வயது நிரம்பாத குழந்தைகளை முழு அல்லது பகுதி நேர வேலையில் அமர்த்துவதை அந்தச் சட்டம் தடை செய்கிறது. 15-18 வயது இருக்கக் கூடிய வளரிளம் பருவத்தினர் அபாயகரமான தொழிலில் அமர்த்தப்படுவதைத் தடை செய்கிறது. மேலும் மற்ற பணியிடங்களில் வேலைக்கு அமர்த்தப்படும் போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளையும் இந்தச் சட்டம் வலியுறுத்துகிறது.
1952-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சுரங்க சட்டத்தின்படி, 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே சுரங்கத்திற்குள் வேலை செய்வதற்கு அனுமதிக்கப்படுகின்றனர்..
1966-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பீடி மற்றும் சுருட்டு தொழிலாளர் சட்டம், 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளைப் பீடி மற்றும் சுருட்டுத் தொழிலில் ஈடுபடுத்துவதைத் தடை செய்கிறது.
1976-ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட கொத்தடிமை முறை ஒழிப்புச் சட்டத்தின் மூலம் குழந்தை உழைப்பிற்கு முன்பணம் கொடுப்பவரைத் தண்டனைக்குட்படுத்த முடியும். மேலும் கொத்தடிமையாக வேலை செய்யும் குழந்தைகளை மீட்கவும் முடியும்.
2012-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின்படி(Protection of Children from Sexual Offences(POCSO) Act,2012), குற்றம் இழைக்கும் நபருக்குக் கடுமையான தண்டனைகள் வழங்க முடியும். குற்றம் இழைத்தவர் குழந்தையின் குடும்பத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் தண்டனை உண்டு என்று போக்சோ சட்டம் வரையறை செய்திருக்கிறது. இன்று நிறைய ஊடகங்களில், செய்தித்தாள்களில் பேசப்படும் சட்டமாக இந்தப் போக்சோ சட்டம் இருக்கிறது.
ஆனால் மத நம்பிக்கை அடிப்படையில் உடல் அளவில் காயப்படுத்தப்படும்,மனதளவில் ஊனப்படுத்தப்படும் குழந்தைகளைக் காப்பாற்றுவதற்கான சட்டம் உள்ளதா? என்று நினைக்கிறபோது வேதனைதான் மிஞ்சுகிறது.
கடந்த வாரம் நிகழ்ந்த ஒரு நிகழ்வு _செய்தித்தாளில் வந்த செய்தி: ”திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த அரும்பாக்கம் பகுதியில் வசிப்பவர் ராஜா.
ராஜாவின் மாமனார் ராஜேஷ் என்பவர் கடந்த ஜூலை 30-ஆம் தேதி(ஆடி மாதம் 1-ஆம் தேதி) காப்பு கட்டி விரதம் இருந்து வந்த நிலையில்,தனது வேண்டுதலை நிறைவேற்றும் வண்ணம் திரவுபதி அம்மனுக்கு ஆடி மாதம் பத்தாம் நாள் இரவில் தீக்குண்டம் இறங்க முடிவு செய்துள்ளார். அப்போது தனது பேத்தியான ஒரு வயது பெண் குழந்தை தர்ணிஜாவைத் தூக்கிக் கொண்டு தீக்குண்டத்தில் இறங்கியுள்ளார்.
அப்போது ராஜேஷ்,கால் இடறி தீக்குண்டத்தில் குழந்தையுடன் தவறி விழுந்தார். ராஜேக்கு கை, கால் முட்டி பகுதியில் தீக்காயம் ஏற்பட்டது. குழந்தை
தர்ணிஜாவுக்கு முதுகுப்பகுதியில் தீக்காயம் ஏற்பட்டது. அதுவும் குழந்தைக்கு 36 சதவிகித தீக்காயம் ஏற்பட்டுள்ளது’’ என்று அந்தச் செய்தி சொல்கிறது.
குழந்தைகளைப் பாலியல் ரீதியாக துன்புறுத்துவதைக் கண்டுபிடிக்க, குழந்தை-களுக்கு நல்ல தொடுதல் (Good touch), கெட்ட தொடுதல் (Bad touch) பற்றி கல்விக்கூடங்களில் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று கூறுகிறோம். விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கூறுகின்றோம்.மத அடிப்படையில் குடும்பத்தினர் தாங்கள் கொடுமைப்படுத்துகிறோம் என்று அறியாமலேயே குழந்தைகளைக் கொடுமைப்படுத்துவதைத் தடுப்பதற்கு எப்படி நாம் கல்விக்கூடங்களில் சொல்லிக் கொடுக்கப் போகிறோம்?
அறிவியல் சாதனங்கள் அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும். ஏன், எதற்கு, எப்படி என்னும் கேள்வியை எழுப்ப வேண்டும். மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஆனால் அறிவியல் சாதனங்களான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பெரும்பாலும் மூட நம்பிக்கையைப் பரப்பும் சாதனங்களாக இருக்கின்றன. தீக்குண்டத்தில் இறங்குதல் போன்ற நிகழ்ச்சிகளை (லைவ் டெலிகாஸ்ட்) நேரடி ஒளிபரப்புகளாக ஒளிபரப்புகிறார்கள்.சில ஆன்மிகப் பேச்சாளர்கள் பலர் கொடுக்கும் தொகைக்கு மேலேயே தங்கள் திறமையை எல்லாம் கொட்டி மூட நம்பிக்கைகளைப் பரப்புகிறார்கள்.
சிறு குழந்தைகளை விரதம் என்னும் பெயரில் நாள் முழுவதும் பட்டினி போட்டு ,மாலையைப் போடு என்று சொல்லி பள்ளிக்குப் போகவிடாமல் தடுத்து,விடுமுறை எடுக்கச்சொல்லி வழிபாட்டுத் தலங்களுக்கு அழைத்துச்செல்லும் நிகழ்வுகள் அதிகரிக்க ஆரம்பித்திருக்கின்றன. இது ஒரு வகையான நோய். இது பழைமைவாதத்தை நோக்கிச்செல்லும் செயல்பாடு.
கல்வியை, அமைதியைக் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும். பெண் குழந்தைகளுக்குக் கல்வியைக் கொடுக்காதே என்னும் குரல் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாடுகளில் பழைமைவாதிகளின் குரலாக இருக்கிறது. படிக்க விரும்பிய பெண் குழந்தை மலாலா பாகிஸ்தானில் மத பழைமைவாதிகளால் சுடப்பட்டு,காயம்பட்ட கொடுமையை நாம் அறிவோம்.
குழந்தைகள் பாதிக்கப்படுவதைத் தடுக்க பல்வேறு சட்டங்களை இயற்றும் அரசுகள் மதரீதியிலான கொடுமைகளைத் தடுக்கவும் சட்டங்கள் இயற்றவேண்டும்.
நம்பிக்கை என்று சொல்லி குழந்தைகளைத் துன்புறுத்தும்,காயப்படுத்தும் செயல்கள் நடப்பதற்கு அரசாங்கம் அனுமதிக்ககூடாது, அதனைத் தடுப்பதற்கு ஒரு பக்கம் அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் விழிப்புணர்வுக் கூட்டங்களை அரசாங்கமே நடத்திட வேண்டும்.
மறுபக்கம் சட்டப்படி தடுப்பதற்கான சட்டங்களை இயற்றிடவும் முன்வரவேண்டும். ♦
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக