மனித உரிமைகளைப் பேணுவதிலும் பாதுகாப்பதிலும் அழுத்தம் தரும் முக்கியமான தேசிய சட்டங்கள் சிலவற்றின் பட்டியல்
1. இந்திய அரசமைப்புச் சட்டம் (முகப்புரை, பாகம் III, IV IVA அத்துடன் பிரிவு 226, 300, 325_326)
2. மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், 1993 மனித உரிமைகள் இன்னும் திறமாகப் பாதுகாக்கப்படுவதற்காக இச்சட்டம் தேசிய மனித உரிமைகள் ஆணையம், மாநில மனித உரிமை நீதிமன்றங்கள் ஆகியவற்றை ஏற்படுத்த வகை செய்கிறது.
3. ஷெட்யூல்டு பிரிவினர், பழங்குடிமக்கள் (SC, ST) ஆகியோருக்கான தேசிய ஆணையம்
ஷெட்யூல்டு பிரிவினர், பழங்குடியினர் ஆகியோரின் உரிமைகள் இன்னும் திறமாகப் பாதுகாக்கப்படுவதற்காக இந்த தேசிய ஆணையம் அமைக்கப்பட வேண்டுமென்று அரசமைப்புச் சட்டத்தின் 338ஆம் பிரிவு கோருகிறது.
4. சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையச் சட்டம், 1992 சிறுபான்மையினர் உரிமைகளை திறமாகப் பாதுகாப்பதற்காக ஒரு சிறுபான்மையினர் தேசிய ஆணையம் நிறுவுவதற்காக இயற்றப்பட்ட சட்டம்.
5. பிற்படுத்தப்பட்டோருக்கான தேசிய ஆணையச் சட்டம், 1993
ஷெட்யூல்டு பிரிவினரையும், பழங்குடியினரையும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காக ஒரு தேசிய ஆணையம் நிறுவவும், இது தொடர்பான, இதனால் எழுகிற விஷயங்கள் பற்றி வழிவகை செய்யவும் இயற்றப்பட்ட சட்டம்.
6. மகளிர்க்கான தேசிய ஆணையச் சட்டம், 1990
மகளிர் உரிமைகளை இன்னும் திறமாகப் பாதுகாப்பதற்காக ஒரு தேசிய மகளிர் ஆணையம் நிறுவுவதற்கான சட்டம்.
7. குடிமை உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், 1955
அரசமைப்புச் சட்டம் பதினேழாம் பிரிவின்படி தீண்டாமை ஒழிக்கப்படுகிறது. அதை எந்த வழியில் கடைப்பிடிப்பதும் தடை செய்யப்படுகிறது. இந்தச் சட்டத்தின் மூலம் தீண்டாமையிலிருந்து எழும் எவ்வித இயலாமையையும் நடைமுறைப்படுத்துவது இதன் பிரிவுகளின்கீழ் தண்டிக்கப்படக்கூடிய குற்றமாக ஆக்கப்பட்டுள்ளது.
8. ஷெட்யூல்டு பிரிவினர், பழங்குடியினருக்கும் எதிராக அக்கிரமங்கள் இழைக்கப்படுவதைத் தடுக்கவும், அத்தகைய குற்றங்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை அமைக்கவும், அவற்றுக்கு இரையாவோருக்கு உதவியும் மறுவாழ்வும் தருவதற்கும் வகை செய்யும் சட்டம்.
9. மனிதர்களைத் துப்புரவாளராக நியமித்தல், உலர் கழிப்பகம் கட்டுதல் (தடைசெயல்) சட்டம், 1993
அரசமைப்புச் சட்ட முகப்புரையில் முழக்கப்படும் நோக்கங்களில் தனிமனிதனின் கவுரவத்துக்கு உறுதியளிக்கும் சகோதரத்துவமும் ஒன்று. 47ஆம் பிரிவு மக்களின் வாழ்க்கைத் தரத்தை அரசு உயர்த்த வேண்டும் என்றும் அவர்கள் சுகாதாரத்தை வளர்க்க வேண்டும் என்றும் கோருகிறது. அந்த நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக இந்தச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. மனிதத் தோட்டியர் நியமனம், உலர் கழிப்பகங்களைக் கட்டுவது, தொடர்ந்து பயன்படுத்துவது ஆகியவற்றைத் தடை செய்யவும், நீர்வசதிக் கழிப்பகங்களைக் கட்டுவதையும் நிர்வகிப்பதையும் நெறிப்படுத்தவும் இது வகை செய்கிறது.
10. நெறிகெட்ட வியாபார(தடை) சட்டம், 1956
மனிதர்களை வைத்து நெறிகெட்ட வணிகம் நடத்துவதை அரசமைப்புச் சட்ட 23ஆம் பிரிவு தடைசெய்கிறது. 1950 மே 9 அன்று இந்தியா மாதர்களையும் பெண்களையும் கொண்டு நெறிகெட்ட வணிகம் செய்வதை ஒழிப்பதற்கான பன்னாட்டு உடன்படிக்கையில் கையெழுத்திட்டது. அதனை நடைமுறைப்படுத்துவதே இந்தச் சட்டம்.
11. மகளிரை அநாகரிகமாக பிரதிநிதிப்படுத்துதல் (தடை செயல்) சட்டம், 1986
விளம்பரங்கள் மூலமும், வெளியீடுகளிலும், எழுத்திலும், படத்திலும் உருவங்களிலும் இன்னும் வேறு எவ்வழியிலும் மகளிரை அநாகரிகமாக பிரதிநிதிப்படுத்துவதைத் தடை செய்வதற்கான சட்டம்.
12. வரதட்சணை தடைச் சட்டம், 1961
வரதட்சணை தருவதும் பெறுவதுமான தீய பழக்கத்தைத் தடை செய்யும் சட்டம்.
13. உடன்கட்டை ஏறுதல் (தடைச்) சட்டம், 1987.
கைம்பெண்களையோ மாதர்களையோ உயிருடன் எரித்தல், புதைத்தல், சதி என்பது மனித இயற்கையிலான உணர்ச்சிகளுக்கு எதிரானதாகும். அது உள்ளார்ந்த கடமை என்று இந்திய மதம் எதிலும் எங்கும் கூறப்படவில்லை. உடன்கட்டை ஏறுதலையும் அதனைப் போற்றி வணங்குவதையும் வலுவான முறையில் தடுக்கும் சட்டம்.
14. பேறுகால நற்பலன்கள் சட்டம், 1961
தாய்மைக் கால நற்பலன்கள் முதலியவற்றுக்கு வழிவகை செய்யும் சில நிறுவனங்களில் குழந்தை பிறப்புக்கு முன்பும் பின்பும் குறிப்பிட்ட காலத்துக்கு மகளிர் பணிமுறைகளை நெறிப்படுத்தும் சட்டம்.
15. குழந்தைத் திருமணத் தடைச் சட்டம், 1929
குழந்தைத் திருமணத்தை அதாவது மணம்புரியும் இருவரில் ஒருவராவது குறிப்பிட்ட வயதுக்குக் கீழே இருக்கும் திருமணத்தை தடுக்கும் நோக்கில் இச்சட்டம் இயற்றப்பட்டது.
16. குழந்தைகள் (உழைப்பு அடமானமாக்கும்) சட்டம், 1933
குழந்தைகளின் உழைப்பை அடமானமாக்கு
வதையும், உழைப்பு அடகு வைக்கப்பட்ட குழந்தைகளை வேலைக்கமர்த்துவதையும் தடை செய்யும் சட்டம்.
17. அநாதை இல்லங்களும் தர்ம இல்லங்களும் (மேற்பார்வை கட்டுப்பாடு) சட்டம், 1960
அநாதை இல்லங்கள், புறக்கணிக்கப்பட்ட மாதர்க்கும் மழலையர்க்குமான காப்பகங்கள் மற்றும் அதுபோன்ற மனைகளின் மேற்பார்வைக்கும் கட்டுப்பாட்டுக்கும் அத்தகைய நிறுவனங்களில் நிகழ்த்தப்படும் குற்ற நடவடிக்கைகளைத் தண்டிக்கவும் வகைசெய்யும் சட்டம்.
18. குழந்தைகள் சட்டம், 1960
நேரடி மத்திய ஆட்சிப் பகுதிகளில் இளங்குற்றவாளிகளை விசாரித்தல், குழந்தைகளின் மீதான அக்கறை, பாதுகாப்பு, பராமரிப்பு, நல்வாழ்வுப் பயிற்சி, கல்வி மறுவாழ்வு ஆகியவற்றுக்கும் வழிசெய்யும் சட்டம்.
19. குழந்தைத் தொழிலாளர் (தடைசெயலும் நெறிசெயலும்) சட்டம் 1986
குறிப்பிட்ட வேலைகளிலும், தொழில்முறைப் பணிகளிலும் குழந்தைகளைப் பணியமர்த்துவதை இச்சட்டம் தடை செய்கிறது. அத்தகைய வேலைகள்_ பணிகள் என்ற பட்டியலில் ஒரு தொழிலை எப்படி சேர்ப்பது என்ற நடைமுறையை வரைகிறது. தடுக்கப்படாத வேலைகளில் பணியமர்த்தப்படும் குழந்தைகளின் பணிச்சூழல்களை நெறிப்படுத்துகிறது.
20. இளங்குற்றவாளிகள் நீதி சட்டம், 1986
புறக்கணிக்கப்பட்ட குழந்தைகள், இளங்குற்றவாளிகள் ஆகியோரின்மீது அக்கறை, பாதுகாப்பு, அவர்களை நடத்தும் விதம், அவர்கள் மேம்பாடு, புனர்வாழ்வு இளங்குற்றவாளிகள் நீதிமன்றங்கள் பற்றிய தனி அணுகுமுறை ஆகியவை பற்றிப் பேசும் சட்டம்.
21. இளைஞர்களுக்கு ஊறு விளைவிக்கும் வெளியீடுகள்) சட்டம், 1956
படங்களுடனோ படங்களின்றியோ குற்றம், வன்முறை, கொடுமைகள், பயங்கரமான அல்லது மனதைப் புரட்டும் நிகழ்ச்சிகள் கொண்ட கதைகளடங்கிய வெளியீடுகள் இளம்வயதினரைக் கெடுக்கும் அத்தகைய செயல்களைச் செய்யுமாறு உற்சாகப்படுத்தத் தூண்டவும் கூடும். இளம்வயதினருக்கு தீங்கிழைக்கக்கூடிய வெளியீடுகளைப் பரப்புவதைத் தடை செய்ய இச்சட்டம் முனைகிறது.
22. ஜாதி தழுவிய இயலாமையை அகற்றும் சட்டம், 1950
இச்சட்டம் வெவ்வேறு இனங்களைச் சார்ந்தவர்களுக்கிடையேயான வழக்குகளில், அவர்களது மதச் சட்டங்கள் புகுந்து மற்றபடி அவர்களுக்கு கிடைத்திருக்க வேண்டிய சொத்தை அடைய முடியாமல் செய்வதைத் தடுக்கிறது.
23. மனநலச் சட்டம், 1987
இச்சட்டம் பைத்தியமென்று தீர்மானிப்பது எப்படி என்பதை நெறிப்படுத்துகிறது. மனநோயாளிகளை ஏற்பது, அவர்கள் மீதான அக்கறை, சிகிச்சை ஆகியவை பற்றியதாகும்.
24. கொத்தடிமை முறை (ஒழிப்பு) சட்டம், 1976
அரசமைப்புச்சட்ட 23ஆம் விதி ‘பெகர்’ மற்றும் அது போன்ற மற்றவகை கட்டாய வேலை வாங்குதலை தடை செய்கிறது. அந்த வகையுரையின் எந்த மீறலும் சட்டப்படி தண்டிக்கப்படக்கூடிய குற்றமாகும் எனவும் கூறுகிறது. சமூகத்தின் நலிந்த பிரிவினரை உடல்ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் சுரண்டுவதைத் தடுப்பதற்காக கொத்தடிமை முறையை ஒழிக்கவும் வகை செய்கிறது.
மற்றும் சில முக்கியச் சட்டங்கள்:
1. குழந்தை பிறப்பதற்கு முந்தைய மருத்துவ சோதனை தொழில் நுட்பங்கள் (நெறிப்படுத்தல், தவறாகப் பயன்படுத்துவதைத் தடுத்தல்) சட்டம் 1994
2. மருத்துவபூர்வமான கருச்சிதைவுச் சட்டம், 1971
3. மனித உறுப்புகள் மாற்றுச் சிகிச்சை சட்டம்,
4. தெற்காசிய வட்டாரக் கூட்டுறவு சங்க (சார்க்) உடன்படிக்கை (பயங்கரவாதத்தை அடக்கும்) சட்டம், 1993
5. சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம், 1986
6. பீடி, சுருட்டு தொழிலாளர் (வேலை) சட்டம், 1966
7. பீடித்தொழிலாளர் நல நிதிச்
சட்டம், 1976
8. தொழிற்சங்கச் சட்டம், 1926
9. தொழில் தகராறுகள் சட்டம், 1947
10. தொழிலாளர்களுக்கான இழப்பீடுச் சட்டம், 1923
11. தொழிலாளர் வேலைகள் நிலையாணைகள் சட்டம், 1946
12. தொழிற்சாலைகள் சட்டம், 1948
13. ஊழியர் அரசுக் காப்பீடு சட்டம், 1948
14. குறைந்தபட்ச சம்பளச் சட்டம், 1948
15. ஊழியர் சேமநல நிதிகள், பல்வகை வகையுரைகள் சட்டம், 1952
16. பயிற்சி பெறுவோர் சட்டம், 1961
17. சம ஊதியச் சட்டம், 1976
18. சம்பளப் பட்டுவாடா சட்டம், 1936
19. வார விடுமுறைகள் சட்டம், 1942 ♦
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக