ஞாயிறு, 16 ஜூன், 2024

குடியுரிமையும் அரசியல் உரிமையும் பற்றிய பன்னாட்டு உடன்படிக்கை


2023 அக்டோபர் 1 - 15, 2023

அய்.நா. பொதுச்சபை 16.12.1966 அன்று ஏற்றுக்கொண்டதும், 23.12.1976 முதல் நடைமுறைக்கு வந்ததுமான குடிஉரிமையும் அரசியல் உரிமையும் பற்றிய பன்னாட்டு உடன்படிக்கையிலிருந்து சில பகுதிகள்.

முகப்புரை

இவ்வுடன்படிக்கையில் சேரும் நாடுகள்

  • – அய்.நா. மன்ற அமைப்புத்திட்டம் முரசறையும் தத்துவங்களுக்கு ஏற்ப உள்ளார்ந்த கவுரவம், மாற்றொணாதவையும் சமத்துவமானவையுமான மானிடக் குடும்பத்தின் சகல உறுப்பினர்களுக்கும் உரிய உரிமைகளை அங்கீகரிப்பதே உலகில் சுதந்திரம், சமாதானம், நீதி ஆகியவை தழைக்க அடிப்படை என்பதைக் கருதிப் பார்த்தும்,
    – இவ்வுரிமைகள் மானிடனின் உள்ளார்ந்த கவுரவத்திலிருந்து பிறப்பதை ஒப்புக்கொண்டும்,
    -மனித உரிமைகள் பற்றிய சர்வதேசியப் பிரகடனப்படி சுதந்திர மனிதர்கள் அச்சத்திலிருந்தும் தேவையிலிருந்தும் விடுபட வேண்டும் என்ற லட்சியம் ஒவ்வொரு மனிதனும் தனது பொருளாதார சமூக கலாச்சார உரிமைகளையும் அரசியல் உரிமை, குடிமகன் உரிமை ஆகியவற்றையும் அனுபவிக்கக்கூடிய சூழலை உருவாக்குவதன் மூலமே அடைய முடியுமென்பதையும் ஒப்புக்கொண்டும்,
    – அய்.நா. அமைப்புத் திட்டத்தின்கீழ் மனித உரிமைகளுக்கும் சுதந்திரங்களுக்கும் உலகு தழுவிய மரியாதையும் அமலாக்கமும் குடியுரிமையும் அரசியல் உரிமையும்… ஏற்படுத்த வேண்டியது அரசுகளின் கடப்பாடு என்பதைக் கருதிப் பார்த்தும் தனி மனிதனும் பிற தனி மனிதர்களுக்கும் தான் சார்ந்திருக்கும் சமூகத்துக்கும் கட்டுப்பட்டவன் என்கிற முறையில் இங்கு குறிப்பிடப்பெறும் உரிமைகளைப் பரப்பவும் அங்கீகாரத்துக்கு உதவவும் கடமைப்பட்டுள்ளான் என்பதை உணர்ந்தும் கீழ்க்கண்ட விதிகளுக்கு உடன்படுகின்றன.
    பகுதி 1 – விதி 1
    1. எல்லா மக்களுக்கும் சுயநிர்ணய உரிமை உண்டு. அவ்வுரிமையின்படி அவர்கள் விருப்பம் போல் தமது அரசியல் நிலையை நிர்ணயித்துக்கொண்டு தம் பொருளாதார, சமூக, கலாச்சார வளர்ச்சிக்கு உழைக்கின்றனர்.
    2. சர்வதேச சட்டத்தையும் பரஸ்பர நன்மை என்ற தத்துவத்தையும் அடிப்படையாகக் கொண்டு எழும் பன்னாட்டுப் பொருளாதாரக் கூட்டுறவினால் உருவாகும் கடமைகளுக்கு ஊறுவிளையாத வகையில் தமது இயற்கைச் செல்வங்களையும் பொருளாதார சக்திகளையும் தமது நன்மைக்கேற்ப ஏதும் செய்துகொள்ள எல்லா மக்களுக்கும் உரிமை உண்டு. தாம் பிழைத்திருப்பதற்கான பொருளாதார வழிவகைகள் எந்த மக்களிடமிருந்தும் பறிக்கப்படுவதென்ற பேச்சுக்கே இடம் கிடையாது.
    3. சுய ஆட்சி பெறாத பகுதிகள், அறங்காவலர் முறையில் ஆளப்படும் பகுதிகள் ஆகியவற்றுக்குப் பொறுப்பான அரசுகள் உள்பட இவ்வுடன்படிக்கையில் இணையும் அரசுகள் அனைத்தும் சுயநிர்ணய உரிமையை அனைவரும் அடைவதைப் பரப்பவும் அய்.நா. பிரகடன விதிகளுக்கு ஏற்ப அவற்றை மதிக்கவும் தம்மைக் கட்டுப்படுத்திக் கொள்கின்றன.பகுதி 2
  • விதி 21. தனது எல்லைக்குள்ளும் அதிகார எல்லைக் குள்ளும் உள்ள அனைவருக்கும் இனம், நிறம், பால், மொழி, மதம் அரசியல் கருத்து அல்லது வேறு வித கருத்துக்கள், தேசிய அல்லது சமூகத் தோற்றம், பிறப்பு, சொத்து அல்லது அதுபோன்ற கவுரவங்கள் என்ற எவ்வகை பேதமுமின்றி இவ்வுடன்படிக்கையில் அடையாளங் காட்டப்
    பெறும் அனைத்துரிமைகளும் உண்டென்பதை மதித்து அவற்றுக்கு உத்தரவாதம் அளிப்பதென்று இவ்வுடன்படிக்கையில் சேரும் அனைத்து அரசுகளும் வாக்குக் கொடுக்கின்றன.2. சட்டத்தின் மூலமோ வேறு வகையாகவோ ஏற்கனவே உறுதி செய்யப்பட்டிராவிட்டால், தத்தம் பகுதிகளில், தத்தம் அரசியலமைப்புக்கும், இவ்வுடன்படிக்கையின் விதிகளுக்கும் ஏற்ப, இந்த அரசுகள் தம் நாடுகளில் இவ்வுடன்படிக்கையில் காணப்பெறும் உரிமைகள் எளிதில் நடைமுறையில் கிடைக்க, சட்டமியற்றியோ வேறு வழியிலோ தேவையான நடவடிக்கைகள் எடுப்போமென்றும் உறுதியளிக்கின்றன.

    3. (அ) யாரைப் பொறுத்தேனும் இங்கு அங்கீகரிக்கப்படும். உரிமையோ சுதந்திரமோ மீறப்படுமானால், அந்த மீறல் அரசின் சார்பாக ஒருவரால் எடுக்கப்படும் நடவடிக்கையாயிருப்பினும்கூட, பாதிக்கப்பட்டவருக்கு பயனுள்ள நிவாரணம் கிடைக்கவும்.
    (ஆ) அப்படி பரிகாரம் தேடுகிறவர், அவருடைய உரிமையை நிர்ணயிக்க நீதிமன்றம், நிருவாகத்துறை, சட்டமன்றம் அல்லது அவ்வரசின் அமைப்பியல் உருவாக்கியுள்ள வேறு எந்த அமைப்பின் உதவியைப் பெறும் உரிமையையும், குறிப்பாக நீதித்துறையில் இதற்கான வழிவகைகளை உருவாக்கவும், ஆவன செய்யவும் இவ்வரசுகள் உறுதியேற்கின்றன.

  • விதி 3
    இவ்வுடன்படிக்கையில் அங்கீகரிக்கப்பெறும் குடிஉரிமை, அரசியல் உரிமை ஆகியவற்றை ஆண்களோடு பெண்களும் சரிநிகர்சமானமாக அனுபவிக்க வகைசெய்யவும் இவ்வரசுகள் உறுதியேற்கின்றன.
  • விதி 4
    1. தேசத்தின் உயிரையே பாதிக்குமளவிலான பொது நெருக்கடி நிலை நிலவி, அதிகாரபூர்வமாக அத்தகு அவசரநிலைப் பிரகடனம் செய்யப்பட்ட காலத்தில் இவ்வரசுகள் நிலைமையின் தீவிரம் எவ்வளவு தேவை என்று காட்டுகிறதோ அந்த அளவு மட்டுமே, இவ்வுடன்படிக்கையின்படி அவற்றின் கடமைகளாய் அமைகின்றவற்றுக்கு குடியுரிமையும் அரசியல் உரிமையும்…
    எதிரான நடவடிக்கைகளில் இறங்கலாம். அப்போதும்கூட சர்வதேசச் சட்டத்தின்கீழ் அவற்றுக்கு உள்ள கடமைகளை மீறாமலும் இனம், நிறம், பால், மொழி, மதம், எந்த சமூகத்தினன் என்பது போன்ற எந்தவிதமான பேதங்களும் காட்டப்படாமலும் அந்நடவடிக்கைகள் அமைய வேண்டும்.
  • பகுதி 3 – விதி 6
    1. உயிர்வாழும் உரிமை ஒவ்வொருவருக்கும் இயல்பாகவே உரியது. அதற்கு சட்டப்பாதுகாப்பு வேண்டும். யார் உயிரும் சட்டவிரோதமாகப் பறிக்கப்படலாகாது.
    2. மரணதண்டனை ஒழிக்கப்படாத நாடுகளில், மிகமிகக் கடுமையான குற்றங்களுக்கு மட்டுமே அது வழங்கப்பட வேண்டும். அதுவும் குற்றம் நடந்த காலத்திய சட்டத்தின் படியும், இவ்வுடன்படிக்கையின் விதிகளுக்கோ, இனக்கொலை பாதகத் தடுப்பும் தண்டனையும் பற்றிய கொள்கையின் விதிகளுக்கோ முரணாக அது அமைந்திடக்கூடாது.
    4. மரணதண்டனை விதிக்கப்பட்டவருக்கு மன்னிப்புக்கோரவும் தண்டனைக் குறைப்பு கோரவும் உரிமையுண்டு. எந்த வழக்கிலும் பொதுமன்னிப்பு அல்லது மன்னிப்பு அல்லது தண்டனைக் குறைப்பு வழங்கப்படலாம்.
    5. பதினெட்டு வயதுக்குக் குறைந்தவர்களுக்கும், கர்ப்பமாயிருப்போர்க்கும் மரணதண்டனை வழங்கப்படலாகாது.
  • விதி 7
    1. யாரும் சித்திரவதைக்கோ, கொடுமையாக அல்லது மனிதத் தன்மையின்றி அல்லது கண்ணிய
    மற்ற முறையில் நடத்தப்படலாகாது; யாரும் அவரது சுதந்திரமான ஒப்புதலின்றி மருத்துவ சோதனைகளிலோ அறிவியல் சோதனைகளிலோ ஈடுபடுத்தப்படக்கூடாது.
  • விதி 8
    1. யாரும் அடிமைப்படுத்தப்படக்கூடாது. அனைத்துவித அடிமை முறையும் அடிமை வணிகமும் ஒழிக்கப்படவேண்டும்.
    2. யாரும் கொத்தடிமைகள் வைத்துக்கொள்ளலாகாது.
    3. (அ) யாரையும் கட்டாயப் பணியாளராகவோ, நிர்பந்தப் பணியாளராகவோ வைத்திருத்தல் கூடாது.
  • விதி 9
    1. ஒவ்வொருவருக்கும் சுதந்திரத்துக்கும் உடல் பாதுகாப்புக்கும் உரிமை உண்டு. யாரும் சட்டவிரோதமாகக் கைது செய்யப்படவோ, சிறைவைக்கப்படவோ ஆகாது. சட்டம் விதித்துள்ள காரணங்கள் அன்றியோ, அது கூறும் முறைகளில் அல்லாமலோ யாருடைய சுதந்திரமும் பறிக்கப்படலாகாது.
    2. ஒருவர் கைது செய்யப்படும்போது, அவர் கைது செய்யப்படுவதற்கான காரணமும், அவர் செய்ததாகக் கருதப்படும் குற்றம் என்ன என்பதும், அவருக்குக் கூறப்பட வேண்டும்.
    3. குற்றச்சாட்டின்கீழ் ஒருவர் கைது செய்யப்பட்டாலோ, சிறைப்பிடிக்கப்பட்டாலோ குறித்த காலத்துக்குள் நடுவர் முன்னிலையிலோ அல்லது
    சட்டப்படி இதற்கான அதிகாரம் பெற்ற நீதித்துறையாளர் முன்போ அழைத்துச் செல்லப்பட வேண்டும்.
    நியாயமான காலவரையறைக்குள் விசாரிக்கப்பட வேண்டும் அல்லது விடுவிக்கப்பட வேண்டும்.
    4. கைது செய்யப்பட்டோ சிறை செய்யப்பட்டோ தன் உரிமையை இழக்கும் ஒருவர் நீதிமன்றத்துக்குத் தன் குறையை எடுத்துச் செல்ல உரிமை உண்டு. நீதிமன்றம் தாமதமின்றி அந்தக் கைது சட்டப்படி செல்லுமா என்று தீர்மானிக்க அது உதவும் தவறென்று தீர்மானித்தால் நீதிமன்றமே அவரை விடுவித்து ஆணையிடும்.
    5. அப்படி பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு கோரவும் உரிமை உண்டு.
  • விதி 10
    1. கைதாகும் எவரும் மனிதப் பண்போடும் மனிதப் பிறவிக்கே உரிய உள்ளார்ந்த மதிப்புக்கான மரியாதையோடும் நடத்தப்படவேண்டும்.
    2. (அ) விதிவிலக்கான சந்தர்ப்பங்கள் தவிர பொதுவாக எப்போதும் குற்றம் சாட்டப்பட்டவர்களும் தண்டிக்கப்பட்டவர்களும் தனித்தனியே தான் வைத்திருக்கப்பட வேண்டும். தண்டிக்கப்பட்டவரல்ல என்ற தகுதிக்கேற்ப அதற்குரியபடி வித்தியாசமான முறையிலேயே நடத்தப்பட வேண்டும்.
    ஆ. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குள், சிறுவர்களும் வயது வந்தவர்களும் தனித்தனியே வைக்கப்பட்டு, நடுவர் முன்பும் கூடியவரை தனிதனியாகவே அழைத்துச் செல்லப்படவேண்டும்.
    3. சிறைச்சாலை முறையானது கைதிகளைச் சீர்திருத்துவதையும் அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதையுமே நோக்கமாக வைத்து அவர்களை நடத்தவேண்டும். இளங்குற்றவாளிகளும் வயது வந்தவர்களும் தனித்தனியே வைக்கப்பட்டு, அவர்களுடைய வயதுக்கும் சட்ட அந்தஸ்துக்கும் ஏற்ப நடத்தப்படவேண்டும்.

 

மனித உரிமைகள் பற்றிய சர்வதேசிய பிரகடனம்

விழிப்புணர்வு – 

2023 கட்டுரைகள் மற்றவர்கள் மே-16-31,2023

மஞ்சை வசந்தன்

அய்.நா. பொதுச் சபை 10.12.1948 அன்று மனித உரிமைகள் பற்றிய சர்வ தேசியப் பிரகடனத்தை நிறைவேற்றி வெளியிட்டது. அதில் விவரிக்கப்பட்டுள்ள மனித உரிமைகள் பட்டியல் ‘எல்லா நாடுகளுக்கும், எல்லா மாந்தருக்கும் சாதிக்கப்பட வேண்டிய பொதுத் தரத்தை விளக்குகிறது. இதன் உலகளாவிய சரித்திரப் புகழ் காரணமாக டிசம்பர் 10ஆம் நாள் உலக மனித உரிமைகள் நாளாக ஆண்டுதோறும் அனுசரிக்கப்பட்டுவருகிறது. முழு வடிவில் பிரகடனம் இங்கு தரப்பட்டுள்ளது.

முகப்புரை

உலகில் சுதந்திரம், நியாயம் சமாதானம் ஆகியவற்றுக்கு அடிப்படை மனிதக் குடும்பத்தின் உறுப்பினர் அனைவருக்கும் சுயம்புவான மதிப்பு, அவர்களின் சமமான மாற்றவொண்ணாத உரிமைகள் ஆகியவற்றுக்கு உள்ள அங்கீகாரமேயாகும் என்பதாலும், மனித உரிமைகளுக்கான அவமதிப்பும் அவமரியாதையும் காட்டுமிராண்டி நடவடிக்கைகளில் கொண்டுபோய் விட்டுள்ளன: அத்தகு நடவடிக்கைகள் மனிதகுலத்தின் மனசாட்சியைச் சிதைத்துள்ளன; பொதுவான மக்களின் உச்சமான ஆசை என்று “இவ்வையத்து மாந்தருக்கெல்லாம் பேச்சுரிமையும், நம்பிக்கை உரிமையும் , அச்சம் தேவை இரண்டிலிருந்தும் விடுதலையும் கிடைக்கக்கூடிய புதியதோர் உலகம் உருவாக்க வேண்டும் என்று பிரகடனம் செய்யப்பட்டுள்ளது என்பதாலும்,
அடக்குமுறையையும் சர்வாதிகாரத்தையும் எதிர்க்க புரட்சிக்கு கடைசி வழியாகக்கூட. மனிதன் போகக்கூடாதென்றால் சட்டத்தின்மூலம் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதாகும்.
நாடுகளுக்கிடையே நட்புறவைப் பேணிக் காப்பது அத்தியாவசியம் என்பதாலும் அய்க்கிய நாடுகளைச் சேர்ந்த மக்கள் தமது பிரகடனத்தில் அடிப்படை மனித உரிமைகளிலும் மனிதப் பிறவியின் மதிப்பு_ மரியாதை ஆகியவற்றிலும் ஆண், பெண் அனைவரது சமவுரிமையிலும் தமது நம்பிக்கையை மறு அங்கீகாரம் செய்து, பரவலான சுதந்திரத்தில் சமூக முன்னேற்றத்தையும் இன்னும் மேலான வாழ்க்கைத்தர நிர்ணயிப்பையும் வளர்த்தெடுக்க உறுதி பூண்டுள்ளனர் என்பதாலும்,
உறுப்பு நாடுகள் அய்.நா. உதவியுடன் மனித உரிமைகள், அடிப்படை சுதந்திரங்கள் ஆகியவற்றுக்கு உலக மரியாதையையும், ஏற்பினையும் பேணிக் காப்பதைச் சாதிக்க தம்மை அர்ப்பணித்துக் கொண்டுள்ளன என்பதாலும்,
அந்த அர்ப்பணிப்பில் முழுதாக வெற்றிபெற இந்த உரிமைகளையும், சுதந்திரங்களையும் ஒரேவிதமாகப் புரிந்துகொள்வது அனைத்திலும் அத்தியாவசியம் என்பதாலும், இப்போது

அய்.நா. பொதுச் சபை

எல்லா நாடுகளும், இவ்வையத்து மாந்தருக்-கெல்லாம் சாதிக்க வேண்டிய பொதுவான தரமாக இந்த ‘சர்வதேசிய மனித உரிமைப் பிரகடனத்தை’ பிரகடனப்படுத்துகிறது. ஒவ்வொரு மனிதனும், சமூகத்தின் ஒவ்வொரு அங்கமும், எப்போதும் இதனையே மனதிலிருத்தி கல்விமூலமும் பயிற்றுவித்தல் மூலமும் முற்போக்கு நடவடிக்கைகளால் இந்த உரிமைகளையும் சுதந்திரங்களையும் மதிக்கக் கற்பிக்க வேண்டும். இப்பணி தேசிய அளவிலும், உலகளாவியும் நடக்க வேண்டும்; இந்த உரிமைகளும் சுதந்திரங்களும் பயனுள்ள முறையில் உலகம் முழுவதும் ஏற்கப்படவும், அனுசரிக்கப்படவும் வேண்டும், இது உறுப்பு நாடுகளிலும் அவர்களது கட்டுப்பாட்டில் உள்ள பகுதி மக்களிடையேயும் நடந்தாக வேண்டும் என்பதே இப்படிப் பிரகடனப்படுத்துவதன் குறிக்கோளாகும்.

விதி 1 :

அனைத்து மனிதரும் சுதந்திரமாயும் சம உரிமை, சமமதிப்போடும் பிறக்கின்றனர். அவர்கள் மனசாட்சியும் பகுத்தறிவும் கொண்டு விளங்குகிறார்கள். ஒருவரோடொருவர் சகோதர உணர்வுடன் பழக வேண்டும்.

விதி 2:

இனம், நிறம், பால், மொழி, மதம், அரசியல் அல்லது வேறு ஏதாவது கருத்துகள், தேசியம், சமூகம், சொத்து, பிறப்பு கவுரவம் என்ற எவ்வித வேறுபாடு இன்றி உலக மாந்தர் அனைவரும் இந்தப் பிரகடனத்தில் கூறப்பட்டுள்ள உரிமைகளுக்கும் சுதந்திரத்திற்கும் பாத்தியப்-பட்டவர்கள். மேலும், ஒருவர் சார்ந்துள்ள நாடு அல்லது பிரதேசத்தின் அரசியல், அதிகார எல்லை, உலக நாடுகளிடையே அதன் மதிப்பு போன்றவை கருதிகூட _ அது சுதந்திர நாடோ, பாதுகாக்கப்படும் பகுதியோ, சுயாட்சியற்றதோ, எவ்விதத்திலேனும் முழு இறையாண்மையற்றதோ எப்படியாயினும் அவருக்கு எவ்வித பேதமும் காட்டப்படலாகாது.

விதி 3 :

ஒவ்வொருவருக்கும் வாழும் உரிமை. சுதந்திரம், தனக்கான பாதுகாப்பு ஆகிய உரிமைகள் உண்டு.

விதி 4 :

அடிமையென்றோ, கூலிக்காரன் என்றோ எவருமில்லை; சகலவித அடிமை முறைகளும், அடிமை வணிகமும் தடுக்கப்படுகின்றன.

விதி 5 :

யாரையும் சித்திரவதைக்கோ, கொடுமையான மனித நேயமற்ற தாழ்மை செய்யும் நடத்து
முறைகளுக்கோ தண்டனைக்கோ ஆட்படுத்தக்கூடாது.

விதி 6 :

சட்டத்தின்முன் ஒரு மனிதனாக நடத்தப்படும் உரிமை எங்கும் எவருக்கும் உண்டு.

விதி 7 :

சட்டத்தின்முன் அனைவரும் சமம்; எந்தப் பாகுபாடுமின்றி சட்டத்தின் பாதுகாப்பும் எல்லாருக்கும் சமமாக உரியது. இந்த ஆவணத்தின் எப்பகுதியை மீறியாவது இழைக்கப்படும் பாகுபாடுகளுக்கும், அத்தகைய பாகுபாடுகளைத் தூண்டிவிடும் எச்செயலுக்கும் எதிராக சமமான பாதுகாப்பும் எல்லா மனிதருக்கும் உரியதாகும்.

விதி 8 :

அரசியல் சட்டத்திலோ பிற சட்டத்திலோ தரப்பட்டிருக்கும் அடிப்படை உரிமைகளின் மீறலாக அமையும் எச்செயலுக்கும் எதிராக, தக்க அதிகாரம் படைத்த அந்த(ந்த) தேச நீதியமைப்புகளில் சரியான பரிகாரம் பெறும் உரிமை அனைவருக்கும் உண்டு.

விதி 9 :

சட்டவிரோதமாக யாரும் அடைத்து வைக்கப்படவோ, கைது செய்யப்படவோ, நாடு கடத்தப்படவோ முடியாது.

விதி 10 :

தம் கடமைகள் உரிமைகள் குறித்தோ, சாட்டப்பட்ட குற்றச்சாட்டு பற்றியோ, நடுநிலையான சுயேச்சையான நீதிமன்றங்களில் நேரிய, வெளிப்படையான விசாரணை பெற எல்லாருக்கும் முழுமையான சம உரிமை உண்டு.

விதி 11 :

1. குற்றம் சாட்டப்பட்ட எவருக்கும், விசாரணைப்படி குற்றம் நிரூபிக்கப்படாதவரை நிரபராதி என்றுதான் கொள்ளப்பட வேண்டும் என்ற உரிமை உண்டு. அதுவும், விசாரணை சட்டபூர்வமானதாகவும், வெளிப்படையாகவும் அமையவேண்டும். அதிலும் அவருக்கு, தனது நிலையை எடுத்துக் கூறி தற்காத்துக் கொள்ளத் தேவையான அனைத்து உறுதிகளும் செய்து தரப்பட்டிருந்திருக்கவும் வேண்டும்.
2. ஒரு செயலைச் செய்தபோதோ அல்லது செய்யவேண்டியதைச் செய்யாமல் விட்டபோதோ அந்தக் காலகட்டத்து சட்டப்படியோ சர்வதேச சட்டப்படியோ அது குற்றமல்லவெனில், ஒருவர் அதற்காகக் குற்றவாளி என்று தீர்மானிக்கப்படக்கூடாது. அதேபோல் தவறு செய்திருந்தாலும் தவறு செய்யப்பட்ட காலகட்டத்தில் அதற்கு விதிக்கப்பட்டிருந்த தண்டனையைவிட பெரிய தண்டனை அவருக்கு வழங்கப்படக்கூடாது.

விதி 12 :

ஒருவரது குடும்பம், தனி வாழ்வு, வீடு, கடிதம் எதிலும் சட்டம் அனுமதிக்காத அத்துமீறல் கூடாது. அவரது புகழ், மரியாதை முதலியவற்றுக்கும் ஊறுவிளைவிக்கக் கூடாது. அத்தகைய அத்துமீறல்கள், தாக்குதல்கள் ஆகியவற்றுக்கு எதிராக சட்டத்தின் பாதுகாப்
பைப் பெறும் உரிமை அனைவருக்கும் உண்டு.

விதி 13 :

1. தமது நாட்டில் எங்கு வேண்டுமாயினும் சுதந்திரமாக நடமாடும் உரிமையும், வசிக்கும் உரிமையும் எவருக்கும் உண்டு.
2. எவரும் எந்த நாட்டையும் விட்டு தாயகம் விட்டுக்கூட போகலாம்; தாயகம் திரும்பலாம்.

விதி 14 :

1. வேட்டையாடப்படுவதிலிருந்து தப்ப எந்த வெளிநாட்டிலும் புகல்தேடி சரணடையும் உரிமையும் அனைவருக்கும் உண்டு.
2. ஆனால், அரசியல் சாராத குற்றமிழைத்த-வர்களுக்கும், அய்.நா.வின் நோக்கங்களுக்கோ தத்துவங்களுக்கோ முரணாகச் செயல்பட்ட-வர்களுக்கும் இவ்வுரிமை கிடையாது.

விதி 15 :

1. அனைவருக்கும் ஒரு தேசியம் கோரும் உரிமை உண்டு.
2. சட்டவிரோதமாக எவரது தேசியமும் பறிமுதல் செய்ய முடியாது. ஒருவர் தம் தேசியத்தை மாற்றிக்கொள்ளும் உரிமையும் தடை செய்யப்பட முடியாதது.

விதி 16 :

1. வயது வந்த ஆண் பெண் அனைவருக்கும், இனம், மதம், தேசம் என்ற பேதமின்றி மணம் புரியவும் குடும்பம் நடத்தவும் உரிமை உண்டு. திருமண உரிமையும், மணவிலக்கு உரிமையும் எல்லாருக்கும் பொதுவே.
2. திருமணம் என்பது சம்பந்தப்பட்டவரின் சுதந்திரமான முழு ஒப்புதல் கொண்டே நடக்க இயலும்.
3. குடும்பம் என்பது சமூகத்தின் இயற்கையான, அடிப்படையான குழு அடிப்படை அதற்கு சமூகப் பாதுகாப்பும் சட்டப் பாதுகாப்பும் உறுதியளிக்கப்படும்.

விதி 17 :

1. ஒவ்வொருவருக்கும் தனியாகவோ யாருடன் கூட்டாகவோ சொத்துக்கள் வைத்துக் கொள்ள உரிமை உண்டு.
2. யாருடைய சொத்தும் சட்டப்படியாக அன்றி பறிமுதல் செய்யப்பட முடியாது.

விதி 18 :

எல்லாருக்கும் கருத்துச் சுதந்திர உரிமையும், மத உரிமையும், மனச்சான்று உரிமையும் உண்டு. இதில் தன் மதத்தையோ, நம்பிக்கையோ மாற்றிக்கொள்ளுதல், தனியாகவோ பிறருடன் இணைந்தோ தனியிடத்திலோ பொதுவிலோ, தனது நம்பிக்கையையோ, மதத்தையோ கடைப்பிடித்தல், கற்பித்தல், அதற்கேற்ப தொழுகைபுரிதல், வாழ்தல் என்ற உரிமைகளும் வரும்.

விதி 19 :

அனைவருக்கும் கருத்துரிமையும் அதை வெளியிடும் உரிமையும் உண்டு. குறுக்கீடு இன்றி தன் கருத்துகளைக் கொண்டிருப்பதற்கும் செய்திகளைத் தேடிச் செல்லவும், பெறவும், பரப்பவும், எல்லை பற்றிய தடைகளின்றி எந்த ஊடகம் வழியே செய்திகளைப் பெறவும், கொடுக்கவும் உள்ள உரிமையும் இதிலடங்கும்.

விதி 20 :

1. அமைதியாகக் கூடவும், மன்றங்கள் அமைத்துக்கொள்ளவும் யாவருக்கும் உரிமை உண்டு.
2. ஒரு குறிப்பிட்ட சங்கத்தில் சேருமாறு யாரையும் கட்டாயப்படுத்த முடியாது.

விதி 21 :

1. தன் நாட்டில் ஆட்சியில் நேரடியாகவோ முகவர்கள் வழியாகவோ பங்குபெறும் உரிமை யாவருக்கும் பொது.
2. தன் நாட்டின் அரசு சேவைகளைப் பெறுவதில் எல்லாருக்கும் சம உரிமை உண்டு.
3. மக்களின் விருப்பமே அரசு அதிகாரத்தின் அடிப்படை ஆகும். அந்த விருப்பம் குறித்த காலத்திற்கு ஒருமுறை நடைபெறும் மெய்யான தேர்தல்மூலம் தெரிவிக்கப்படும். தேர்தல்களில் அனைவருக்கும் வாக்குரிமை உண்டு. ஆளுக்கு ஒரு வாக்குதான். அதுவும் ரகசிய வாக்குமூலம் அல்லது அதற்கிணையான சுதந்திர தேர்வுமுறை மூலம் நடைபெறும்.

விதி 22 :

சமூகத்தின் உறுப்பு என்ற முறையில் ஒவ்வொருவருக்கும் சமூகப் பாதுகாப்புரிமை உண்டு. தேசிய முயற்சியும் பன்னாட்டுக் கூட்டுறவும் கொண்டு அந்தந்த அரசின் வசதிக்கும் அமைப்புக்கும் ஏற்ப ஒவ்வொருவரும் தனது மரியாதைக்கு அத்தியாவசியமானதும் தன் ஆளுமையை சுதந்திரமாக வளர்த்துக்கொள்ள இன்றியமையாததுமான பொருளாதார, சமூக, கலாச்சார உரிமைகளை அனுபவிக்கவும் உரிமை உண்டு.

விதி 23 :

1. ஒவ்வொருவருக்கும் வேலைவாய்ப்பு உரிமை, வேலையைத் தேர்ந்துகொள்ளும் உரிமையும் நியாயமான ஆரோக்கியமான வேலைச் சூழலுக்கான உரிமையும் வேலையின்மையிலிருந்து பாதுகாப்புக்கான உரிமையும் உண்டு.
2. ஒத்த வேலைக்கு ஒத்த ஊதியம் பெற எவ்வித பேதமுமின்றி எல்லாருக்கும் உரிமை.
3. வேலை செய்யும் ஒவ்வொருவருக்கும் நியாயமான நல்லூதிய உரிமை உண்டு. அது அவர் தனக்கும் குடும்பத்துக்கும் மனித மரியாதைக்கு ஏற்ற நலவாழ்வுக்கு வழிவகுப்பதாய் இருக்க வேண்டும். தேவைப்பட்டால் பிறவகை சமூகப் பாதுகாப்பு முறைகளால் அது ஈடு செய்யப்படவேண்டும்.
4. தம் நலன்களைப் பாதுகாத்துக்கொள்ள தொழிற்சங்கம் அமைக்கவோ இருக்கும் அமைப்பில் சேரவோ ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு.

விதி 24 :

ஒவ்வொருவருக்கும் ஓய்வுக்கும் பொழுதுபோக்குக்கும் உரிமை உண்டு. இதில் வேலைநேரம் பற்றிய நியாயமான வரம்புகளும் சம்பளவிடுப்பு பற்றி உரிமையும் சேரும்.

விதி 25 :

1. உணவு, உடை, உறையுள், மருத்துவ வசதி, சமூக வசதிகள் முதலான நலமும் நல்வாழ்வும், தனக்கும் குடும்பத்தினருக்கும் பெறும் வகையிலான வாழ்க்கைத்தரம் என்பதும் அனைவருக்கும் உரிய உரிமை ஆகும். இதில் வேலையின்மை நோய் இயலாமை, முதுமை, கைம்மை முதலான தன் சக்திக்கு அப்பாற்பட்ட காரணங்களால் ஜீவனமே சிரமமாகும் நேரங்களுக்கான பாதுகாப்பும் அடங்கும்.
2. தாய்மையும் குழந்தைமையும் சிறப்புக் கவனிப்புக்கும் உதவிக்கும் உரியவை. மணவாழ்வில் பிறந்தாலும், திருமணம் இல்லாத பெற்றோருக்குப் பிறந்திருந்தாலும் எல்லா குழந்தைகளுக்கும் ஒரே சமூகப் பாதுகாப்பு உண்டு.

விதி 26 :

1. எல்லாருக்கும் கல்வியுரிமை உண்டு. குறைந்தது ஆரம்பக் கல்வி, அடிப்படைக் கல்வி, இலவசமாக இருக்கவேண்டும். ஆரம்பக் கல்வி கட்டாயமாக இருக்கவேண்டும். பொதுவாக தொழிற்கல்விக்கும், தொழில்நுட்பக் கல்விக்கும் ஏற்பாடுகள் வேண்டும். உயர்கல்வி தகுதி அடிப்படையில் எல்லாருக்கும் கிடைக்க வகை செய்ய வேண்டும்.
2. மனித ஆளுமையின் முழு வளர்ச்சிக்கானதாகவும் மனித உரிமைகள் அடிப்படை சுதந்திரங்கள் ஆகியவற்றின் மதிப்பை வலுப்படுத்துவதாயும் கல்வியின் நோக்கம் அமைய வேண்டும். நாடுகளிடையிலும், இனங்களிடையிலும், மதங்களிடையிலும் புரிந்துகொள்ளுதல், சகிப்பு, நட்புறவு ஆகியவற்றை அந்தக் கல்வி பேணி வளர்க்க வேண்டும். அமைதிக்கான அய்.நா. நடவடிக்கைகளுக்கு அது உதவியாக அமையவேண்டும்.
3. தங்கள் குழந்தைகள் எத்தகைய கல்வி பெற வேண்டும் என்று தீர்மானிப்பதில் பெற்றோருக்கு முன்னுரிமை உண்டு.

விதி 27 :

1. சமூகத்தின் கலாச்சார வாழ்வில் சுமுகமாகப் பங்கேற்கவும், கலைகளை அனுபவிக்கவும், அறிவியல் மேன்மைகளில் பங்கு பெற்றுப் பயனடையவும் அனைவருக்கும் உரிமை உண்டு.
2. ஒவ்வொருவருக்கும் தன் முயற்சியால் விளைந்த அறிவியல்/கலைத்துறை, இலக்கிய சாதனைக்கான பொருளாதார நலன்கள் தார்மிக நலன்களுக்கான பாதுகாப்புரிமையும் உண்டு.

விதி 28 :

இப்பிரகடனத்தில் இடம்பெறும் உரிமைகளையும் சுதந்திரங்களையும் அனுபவிக்க வகை செய்யும் வண்ணம் சமூகத்திலும் சர்வதேச அளவிலும் ஓர் அமைப்பு ரீதியான உரிமை அனைவருக்கும் உண்டு.

விதி 29 :

1. ஒவ்வொருவருக்கும் சமுதாயக் கடமைகள் உண்டு. அவற்றின் மூலம்தான் ஒரு மனிதரின் ஆளுமை யதேச்சையான முழு வளர்ச்சி பெறமுடியும்.
2. தன் உரிமைகளையும் சுதந்திரங்களையும் அனுபவிப்பதில் ஒருவருக்கு ஏற்படுத்தப்-படக்கூடிய கட்டுப்பாடுகளுக்கும் சில விதிகள் உண்டு. மற்றவர்களும் தமக்குரிய அத்தகைய உரிமைகளை அனுபவிப்பதற்கு வகை செய்யும் முறையிலேயே, அவற்றுக்கான மரியாதையும் அங்கீகாரமும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்கு மட்டுமே_ அதுவும் அறநெறிகள் பொது அமைதி, ஜனநாயக சமூகத்தின் பொது நன்மை ஆகியவற்றுக்காகவும் மட்டுமே கட்டுப்பாடுகள் அனுமதிக்கப்படும்.
3. அய்.நா.வின் நோக்கங்களுக¢கும் தத்துவங்-களுக்கும் முரண்படும் வகையில் இவ்வுரிமைகளும் சுதந்திரங்களும் பயன்படுத்தப்படமாட்டா.

விதி 30

இப்பிரகடனத்தில் கூறப்படும் எதுவும் இங்கு கூறப்பெற்ற எந்த உரிமையையும் எந்த சுதந்திரத்தையும் அழிக்கக்கூடியதான எந்த நடவடிக்கையில் ஈடுபடவும். எதைச் செய்யவும் எந்த அரசுக்கும் எந்த மக்கள் குழுவுக்கும் எவ்வித உரிமையும் அளிப்பதாக எவ்வகையிலும் பொருள்கொள்ளப்படக்கூடாது.

தரவு : ‘‘மனித உரிமைகள்’’ நூல்.

செவ்வாய், 11 ஜூன், 2024

குழந்தைகளைத் தத்தெடுப்பது எப்படி?


கட்டுரை: 

உண்மை இதழ்

வி.சி.வில்வம்

மனித வாழ்வில் குழந்தையின்மை என்பது பெரிய குறையாகப் பார்க்கப்படுகிறது. அதுவும் சம்பந்தப்பட்ட தம்பதியினரைக் குற்றவாளியாகக் கருதும் கொடுமையும் நிகழ்கிறது. திருமணமான ஒரே ஆண்டிற்குள் குழந்தை பிறக்காவிட்டால், ‘ஏன்? என்னாச்சு?’ என்கிற கேள்விகள் அல்லது தொந்தரவு அவர்களைச் சித்ரவதை செய்கின்றது.
குழந்தையின்மைக்குப் பல காரணங்கள் உண்டு. அவற்றையெல்லாம் இன்றைக்கு அறிவியல் வென்றெடுத்துள்ளது. அதையும் மீறி சிலருக்கு வாய்ப்பில்லாமல் போகிறது.
இன்னமும் திருமணம் ஆகவில்லையா? என்பதும், ஆன பிறகு குழந்தை இல்லையா? என்கிற கேள்விகளும் இங்கே அநாகரிகமாக உலாவி வருகிறது. இவையெல்லாம் நல்ல சமூகத்தை உருவாக்கப் பயன்படாது. அதேநேரம் குழந்தையின்மை என்பதை முற்போக்குச் சிந்தனை கொண்டு எதிர்கொள்ள வேண்டும்!

பெற்றால்தான் பிள்ளையா?
திருமணமே கட்டாயம் அல்ல; திருமணம் செய்த பின் குழந்தை பெற வேண்டும் என்பது
கட்டாயம் அல்ல என்று கூறியவர் பெரியார். குழந்தை வளர்ப்பில் ஆசையிருந்தால் குழந்தை
யைத் தத்தெடுத்துக் கொள்ளலாம் என்றார். சொன்னது மட்டுமல்ல, ஏராளமான ஆதரவற்ற குழந்தைகளை வளர்த்து, உயர்நிலைக்குக் கொண்டு வர ஒரு நிறுவனத்தையே திருச்சியில் நிறுவியவர் பெரியார். குழந்தை இல்லாதவர்கள் இதை ஆழ மனதில் கொள்ள வேண்டும்.

பரமேசுவரன் என்ற முன்னோடி
ஆழிப்பேரலையை (சுனாமி) நாம் இன்னமும் மறந்திருக்க முடியாது. அந்நிகழ்வில் நாகப்பட்டினம் பரமேசுவரன் என்பவரது 3 குழந்தைகளும் அடித்துச் செல்லப்பட்டன. குழந்
தைகள் இல்லாத வாழ்வை அவரால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. அதேநேரம் அவர் சோர்ந்துவிடவில்லை. அதே ஆழிப்பேரலையால் பெற்றோர்களை இழந்த 18 குழந்தைகளைத் (ஒன்றல்ல, இரண்டல்ல – 18 குழந்தைகள்) தத்
தெடுத்து “குழந்தைகளின் உலகத்தையே” உரு
வாக்கி விட்டார். கவலைகள் என்பது இயல்பு.
அவற்றை முன்னெடுத்துச் செல்வதே பகுத்தறிவு!

குழந்தைகளைத்
தத்தெடுப்பது எப்படி?
தங்களுக்குக் குழந்தைகள் இருக்
கும் பொழுதே, மற்றுமொரு குழந்தை
யைத் தத்தெடுத்து வளர்க்கும் உயரிய மனிதர்களும் இங்கு இருக்கிறார்கள். தத்தெடுப்பு என்பது ஒருபுறம் மகிழ்ச்சியானது என்றாலும் அவற்றுள் மனிதநேயம், சமூகப்பற்று, ஜாதி மறுப்பு, தனித்துவம், உயரிய குணாதிசயம் எனப் பல சிறப்புகள் அடங்கியுள்ளன.
இதுபோன்ற செயல்களின் தொடர்புக்கு “குழந்தைகள் தத்
தெடுத்தல் சார்ந்த ஒருங்கிணைப்பு மய்யம்” என்கிற அரசு சார்பு நிறுவனம் இங்கே இயங்குகின்றது. தமிழ் நாட்டில் 19, பாண்டிச்சேரியில் 2 என மொத்தம் 21 நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. மிகுந்த வரவேற்போடு நம்மை அணுகும் இந்நிறுவன சமூக ஊழியர்கள், நமக்கான அனைத்துச் செயல்களையும் சட்டப்படி செய்து தருகின்றனர்.
நாம் முதலில் அவர்களைத் தொடர்பு கொள்ளும் போது, நம்மைப் பற்றி அவர்கள் விசாரிப்பர். நமக்கான தேவை என்ன? நம் பொருளியல் நிலை என்ன? எந்தக் குழந்தை வேண்டும்? எத்தனை மாதக் குழந்தை வேண்டும்? தம்பதியினர் இருவருக்கும் உடன்பாடுதானா? உங்கள் குடும்பத்தவர்களின் நிலை என்ன? என ஒன்றுவிடாமல் விசாரணை செய்து, பிறகுதான் நமக்கு விண்ணப்பம் கொடுப்பார்கள். அந்த விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து அதனுடன் இரத்த உறவுள்ள இருவரின் ஆதரவுக் கடிதம், நண்பர்கள் வட்டாரத்தில் இருவரின் கடிதமும் இணைக்கப்பட வேண்டும்.
மேலும் திருமணப் பதிவுச் சான்றிதழ், இருப்பிடச் சான்று, வயதுச் சான்று, வருமானச் சான்றும் இணைத்தல் வேண்டும். இவைகளைப் பெற்றுக் கொள்ளும் அந்தக் குழந்தைகள் மய்யம், ஒன்றிரண்டு மாதங்கள் கழித்து நேரிடையாக நம்மிடம் வருவர். குடும்பத்தின் சூழ்நிலை மற்றும் அவர்களின் ஆதரவு நிலை என்ன? கொடுக்கப்பட்ட ஆவணங்களின் படி சரியாக இருக்கிறதா? அவர்களின் வருமானத்தில் குழந்தையை வளர்க்க முடியுமா? என ஆய்வு செய்வர். அதன்பிறகே விண்ணப்பத்தை அங்கீகரிப்பர். அதன் நகலை 21 கிளை நிறுவனங்களுக்கும் அனுப்பி வைப்பர். வாய்ப்பான நேரத்தில் நமக்கான குழந்தையை அவர்கள் பெற்றுத் தருவர்.

சட்டச் சிக்கல் ஏதேனும் நிகழுமா?
வாய்ப்பு இல்லை! ஏனெனில் இது அரசு சார்பு நிறுவனம். மேலும் நீதிமன்றத்தின் மூலமாக இந்நிகழ்வுகள் சட்டபூர்வமாகப் பதிவு செய்யப்படுகின்றன. இங்கே வரக்கூடிய குழந்தைகள் எங்கிருந்து வருகின்றன? எப்படிக் கிடைக்கின்றன? என்ற கேள்விகளோடு அக்குழந்தைகள் ஒருங்கிணைப்பு மய்யத்தின் ஊழியர் சரோஜினி அவர்களைத் தொடர்பு கொண்ட போது, “இந்த மய்யத்திற்கு வரக்கூடிய குழந்தைகளை இரண்டு விதமாகப் பிரிக்கிறோம்.
ஒன்று, ஒப்புவிக்கப்பட்ட குழந்தைகள். இந்த அடிப்படையில் வருபவர்கள் ஏற்கெனவே பெண் குழந்தைகள் இருந்து, அடுத்ததும் பெண் குழந்தையாக இருந்தால் பெற்றோர்களே ஒப்படைத்துச் செல்வர். அதேபோன்று தவறான உறவினால் உருவான குழந்தைகள், விபத்துகளில் பெற்றோரை இழந்த குழந்தைகள் இவ்வகைப்படுவர். இரண்டாம் வகையில் ஆதரவற்ற மற்றும் கைவிடப்பட்ட தொட்டில் குழந்தைகள் அடங்குவர். இதில் முதல் வகைக் குழந்தைகளின் பெற்றோர்களிடம் அனைத்துச் சான்றுகளும் பெறப்பட்டு, இரண்டு மாதங்கள் கழித்து அரசு காப்பகக் குழந்தையாக சட்டப்படி மாறிவிடும்.
இரண்டாம் வகைக் குழந்தைகளின் உறவுகளைப் பெறுவதற்கு அனைத்து முயற்சி
களும் செய்யப்படும். கண்டுபிடிக்க முடியாத நிலையில், நீதிமன்ற நடவடிக்கைகளின் மூலம் அக்குழந்தைகளும் அரசுக் குழந்தைகளாக மாறிவிடும். அதன்பிறகு பெற்றோர்கள் வந்தாலும் குழந்தைகளுக்கும்,அவர்களுக்குமான உறவு சட்டப்படி நின்றுவிடும். அக்குழந்தை எங்கு வளர்கிறது என்கிற செய்திகள் கூட யாருக்கும் தெரியாது. எனவே முறைப்படியான, சட்ட பூர்வமான வகையில் இந்த அரசு அமைப்பு செயல்பட்டு வருகிறது”, என விளக்கம் அளித்தார்.

தத்தெடுக்கும் நடைமுறைகள்:
நம்முடைய விண்ணப்பத்திற்கு ஏற்ற குழந்தைகள் வரும் பொழுது நமக்குத் தகவல் தருவர். ஒன்றும், அதற்கு மேலும் குழந்தைகள் இருந்தால் நாமே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். குழந்தையைப் பெற்றுக் கொண்டதற்குப் பிறகு பெற்றோர்களுக்கும், ஒருங்கிணைப்பு மய்யத்திற்குமான ஆவணங்கள் தயார் செய்யப்படும். குழந்தைக்கு ஏதேனும் நோய் இருக்கிறதா என்பது உள்பட அனைத்துப் பரிசோதனைகளும் செய்யப்படும். பின் குழந்தையின் பராமரிப்பு தொடர்பாக மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நாம் தகவல் அனுப்ப வேண்டும். அக்குழந்தையின் 18 வயது வரை குழந்தைகள் ஒருங்கிணைப்பு மய்யம் கண்காணிக்கும்.
எனவே, குழந்தைகள் தத்தெடுப்பு என்பது எளிதானது. நம் மனமும் அதற்கேற்ப இலகுவாக வேண்டும். தயக்கங்களைத் தகர்த்தெறிந்துவிட்டு, கவலைகளைக் காணாத தூரம் திருப்பி அனுப்பிவிட்டு, சமூகப் புரட்சியாம் இப்பணியை நாம் செய்தாக வேண்டும். சுயநலமும், பொது நலமும் அடங்கியது இந்நிகழ்வு. அதுநேரம் அம்மழலைச் செல்வம் நம் மடியில் தவழும்! மனிதநேயம் தழைக்கும்!

சனி, 8 ஜூன், 2024

திருமணம் ஆகாத பெண்ணின் கருக்கலைப்பு உரிமை, நீதிமன்ற தீர்ப்பு


தலையங்கம் : பெரியாரின் முன்னோக்கும் உச்சநீதிமன்றத் தீர்ப்பும்!

2022 அக்டோபர் 16-30 2022 தலையங்கம்

மகளிர் உரிமைப் பாதுகாப்புக் கண்ணோட்டத்தில் கடந்த 29.9.2022 அன்று உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகளைக் கொண்ட அமர்வு கொடுத்த ஒரு தீர்ப்பு, சிறந்த அமைதிப் புரட்சிக்கு அடிகோலும் ஓர் அரிய தீர்ப்பாகும்.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் டாக்டர் ஜஸ்டிஸ் D.Y. சந்திரசூட், ஜஸ்டிஸ் A.S.போப்பண்ணா, நி.ஙி.பர்தீவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு அது!
திருமணம் ஆகாத பெண்கள் கருவுற்றாலும்கூட அந்தக் கருவை குறிப்பிட்ட கால அளவு -_ கரு வளர்ச்சி அடைந்தாலும், சட்டப்படி பெண்கள் தங்கள் குழந்தை பிறப்பை விரும்பாது கருவைக் கலைக்க விரும்பினால் அப்படிச் செய்துகொள்ள அவர்களுக்கு முழு உரிமை சட்டப்படி உண்டு என்ற புரட்சிகரமான தீர்ப்பை வழங்கியுள்ளனர்! இது பாராட்டுக்குரியதாகும்.

ஏற்கெனவே, திருமணம் என்ற ஒன்றைச் செய்து-கொள்ள விரும்பாமல், இருவரும் இணைந்து வாழும் _ ‘இணைந்து வாழ்தல்’ (Living together) என்பதற்கு உரிமை உண்டு என்ற முந்தைய உச்சநீதிமன்றத் தீர்ப்பும் பெண்ணுரிமையைக் காக்கும் புரட்சிகரமான தீர்ப்பாகும்!
அப்படிக் கூடிவாழும் இணையருக்கு குழந்தை கருத்தரித்த நிலையில், அது தேவையில்லை என்று அந்தத் தாய் கருதுவாரேயானால், அப்படிச் செய்ய அவருக்கு உரிமை தராவிட்டால் அது, திருமணம் செய்துகொண்டு வாழும் இணையருக்கு கருத்தரித்த நிலையில், அக்குழந்தை தேவையில்லை என்று முடிவு செய்து கருக் கலைப்பு செய்து கொள்ள சட்டப்படி உரிமை இருக்கும்போது, திருமணம் என்ற ஒரு சடங்கு இருப்பவர்களுக்கு மட்டும்தான் பொருந்தும் என்பது ஒரு வகையில் பாரபட்சம் _ வேற்றுமைப்படுத்தல் (Discrimination) சட்டப்படி என்று நீதிபதிகள் மிகவும் தெளிவாக இந்தப் புதிய தீர்ப்பில் பொருத்தமாக _ எவரும் மறுக்க முடியாத _ பேதமில்லாது சீர்மையுடன் சட்டம் இருக்க வேண்டும் என்பதால் திருமணமாகாமல் இணைந்து வாழும் இவர்களில் மகளிர் விரும்பும்போது ஏன் மறுக்க வேண்டும்? என்ற நெற்றியடிக் கேள்வியை நீதிபதிகளின் தீர்ப்பு எழுப்புகிறது!
மதங்களின் மூடநம்பிக்கை _ ஆண்டவன் கொடுக்கிறான்; மனிதன் அந்தக் கருவைக் கலைக்கலாமா என்று பத்தாம் பசலித்தன நம்பிக்கை அடிப்படையிலான கேள்வி, கருக்கலைப்புச் சட்டம் முன்பு நம் நாட்டில் வந்தபோது கேட்கப்பட்டது.

இன்றும் வளர்ந்த நாடுகள் என்று தங்களைப் பீற்றிக் கொள்ளும் அமெரிக்கா, ஸ்காட்லாந்து போன்ற நாடுகளில் கிறித்துவம் மற்ற மதவாதிகள் _ குறிப்பாக கத்தோலிக்க நர்சுகள்கூட கருக்கலைப்பு செய்ய மறுத்து ஸ்காட்லாந்தில் ஒரு பரபரப்பான வழக்காக பல ஆண்டுகளுக்கு முன்பே வந்தது!
மக்கள் தொகைப் பெருக்கக் கட்டுப்பாடு _ குடும்பக் கட்டுப்பாடு _ கர்ப்ப ஆட்சி என்பதைத் தந்தை பெரியார்தான் சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பே எழுதியும் பேசியும் நம் நாட்டு மக்களுக்குப் புரியச் செய்ததை ஏற்று, மக்கள் தொகைக் கட்டுப்பாட்டிலும் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது!
ஆண்டவன் கொடுத்த பிள்ளை, கடவுள் தந்த சொத்தல்லவா என்றெல்லாம் கூறியது பகுத்தறிவுக்கு விரோதமானது.

டெஸ்ட் டியூப் பேபி _ சோதனைக் குழாய் மூலம் குழந்தை பெறுதல், ‘வாடகைத்தாய்’ இப்படி நடைமுறை மாற்றங்கள் என்று மாறுதல் வெகுவேகமாக வந்துவிட்ட பிறகு, ஏன் இனியும் பழமைக் குட்டையில் ஊறவேண்டும், சனாதனத்தில் விழுந்து புரள வேண்டும்? என்ற கேள்விக்குச் சரியான விடைதான் உச்சநீதிமன்றத்தின் முற்போக்குத் தீர்ப்பாகும்!
தந்தை பெரியாரின் சேலம் மாநாட்டுத் தீர்மானங்களின் பல்வேறு செயலாக்க வடிவமும், அதனை சட்டப்படி ஏற்கும் உச்சநீதிமன்றத் தீர்ப்பும், காலத்தை வென்றவர் பகுத்தறிவுப் பகலவன் என்பதற்கு சிறப்பான எடுத்துக்காட்டு அல்லவா?
பெரியார் ஒரு சமூக விஞ்ஞானி! அந்த விஞ்ஞானியின் விவேகத்தை எவராலும் புறந்தள்ளிவிட முடியாது. வெல்வது பெரியாரே! என்பது இப்போது புரிகிறதல்லவா?

– கி.வீரமணி
ஆசிரியர்


வெள்ளி, 7 ஜூன், 2024

ஆக்கிரமிப்புக் கோயில், வழிபாட்டு இடமா? அருமையான தீர்ப்பு!


தலையங்கம் : 

2022 அக்டோபர் 01-15 2022 தலையங்கம்

சென்னை உயர்நீதிமன்றத்தில் 23.9.2022 அன்று மாண்பமை நீதிபதிகள் ஜஸ்டிஸ் எஸ்.வைத்தியநாதன், ஜஸ்டிஸ் டி.வி.தமிழ்ச்செல்வி ஆகியோர் அடங்கிய அமர்வு ஓர் அருமையான தீர்ப்பினை வழங்கியிருக்கிறது!
சென்னை பெருநகர மாநகராட்சிக்குட்பட்ட நொச்சிக்குப்பம் பகுதியில், பொதுவழித் தடத்தை மறித்து ஆக்கிரமிப்பாகக் கட்டப்பட்டிருக்கும் கோயில் ஒன்றை இடித்துத் தள்ளிட மேலும் இரண்டு மாத அவகாசத்தைக் கொடுத்துள்ளனர்!

ஏற்கெனவே இந்த வழக்கினை விசாரித்து ஓர் அமர்வு _ அதில் ஜஸ்டிஸ் தமிழ்ச்செல்வி அவர்களும் இடம் பெற்ற அமர்வு _ அஞ்சலை அம்மாள் என்பவர் தனது வழித்தடத்தை மறைத்து, கட்டப்பட்டுள்ளதாகக் கூறும் கோயிலை வேறு இடத்திற்கு மாற்றிட _ ஆணை பிறப்பித்தும் அவ்வாணைகள் செயல்படுத்தப்படாமல் அப்படியே ‘கிணற்றில் போட்ட கல்லாக’ கிடந்த நிலையில் சென்னை மாநகராட்சி, காவல்துறை, ஆணையர்கள் மீது அவதூறு வழக்கும் தொடுக்கப்பட்ட இந்த ரிட் மனுவின் மீது தீர்ப்புக் கூறப்பட்டது.
மிக அருமையான கருத்தினை நீதிபதிகள் தமது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
“எந்தக் கடவுளும் யார் வீட்டுக் கதவையும் தட்டி, பொதுச் சொத்தினை ஆக்கிரமித்து எங்களுக்குக் கோயில் கட்டித் தாருங்கள்’’ என்று கோயிலையோ, சர்ச்சையோ, மசூதியையோ கட்டித் தர வேண்டுகோள் விடுக்கவில்லை!
முன்பு கடவுளைக் கும்பிடச் சொல்வோருக்கு மன அமைதி விரும்பிச் சென்ற இடங்களாக இருந்த கோயில்கள் இப்போது _ அண்மைக் காலத்தில் _ பேதங்களை நிலைநாட்டும் இடங்களாகவும், தங்களது அதிகாரங்களைக் காட்டும் மய்யங்களாகவுமே
(கோயில்கள்) பயன்படும் நிலை உள்ளது!

அதைவிட, தற்போது வழிபாட்டு இடங்கள், பிரச்சாரத்திற்கு உரியவைகளாகவும், சட்டம், ஒழுங்கு பிரச்சினைகளுக்கு ஊற்றுக் கண்ணாகவும் அமைக்க, வன்முறை, பயங்கரவாதம் இவைகளை ஏற்படுத்தி விலைமதிப்பற்ற மனித உயிர்களைப் பலி கொள்வதாகவும் சொத்துகளை நாசப்படுத்தவுமான சூழ்நிலையே பெரிதும் நிலவுகிறது.
வழிபாட்டு இடங்கள், சிலரின் சொந்த விருப்பு வெறுப்புகளைத் தீர்த்துக்கொள்ளும் இடங்களாகவும் சட்ட விரோதச் செயல்களின் கூடாரமாகவும் இருக்கும் நிலையே காணப்-படுகிறது.
பல இடங்களில் பொது இட ஆக்கிரமிப்புகளை மறைப்பதற்கு (கோயில்கள் போன்ற) வழிபாட்டு இடங்கள் பெரிதும் பயன்படுத்தப்பட்டன. அதனை மூடி மறைக்கும் உபாயமாகவும் பயன்படுத்ப்படுகின்றன _ ஆக்கிரமிப்பாளர்களால். இதனால்தான் முன்பு இதே நீதிமன்றம் ஒரு வாரத்திற்குள் அந்த ஆக்கிரமிப்புக் கோயிலை இடிக்கச் சொல்லி ஆணை பிறப்பித்தும் அதனை அதிகாரிகள் செயல்படுத்தத் தவறினர்.
இப்போது நாங்கள் இரண்டு மாதத் தவணை தருகிறோம்; அதற்குள் இடித்து அப்புறப்-படுத்த வேண்டும் என்று திட்டவட்டமான ஆணையை தீர்ப்பின் மூலம் வழங்கியுள்ளதை மிகவும் பாராட்டி வரவேற்கிறோம்.

ஏற்கெனவே உச்சநீதிமன்றம் தமிழ்-நாட்டில்தான் அதிகமான ஆக்கிரமித்த நடைபாதைக் கோயில்கள் 36,000க்கும் மேல் உள்ளன என்று கூறி அகற்றிட தலைமைச் செயலாளருக்கு ஆணை பிறப்பித்தும், முந்தைய ஆட்சியில் அதை அகற்றும் பணி நடைபெறவே இல்லை என்பது சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.
ஆகம விதிகள் பற்றி ஆலாய்ப் பறக்கும் சனாதன வக்காலத்து வீரர்கள், கோயில் பாதுகாப்புக் குழு என்கிற போர்வையில் திடீர் அவதாரம் எடுத்த பெரிய மனிதர்கள் கூறட்டும் இதுபோன்ற கோயில்களும் அவற்றில் நடைபெறும் பூஜைகளும் ஆகம விதிகளின்படிதான் நடைபெறுகின்றனவா?

ஆகம விதிகள்படியா இவை கட்டப்-பட்டன? (அப்படிக் கட்டப்பட்டதாக வாதத்திற்காகச் சொல்லப்பட்டாலும் சட்டம் ஏற்கக் கூடியதா?) அல்ல என்னும்போது அவர்கள் அல்லவா முதலில் இத்தகைய நடைபாதை ஆக்கிரமிப்புப் கோயில்கள் மற்றும் வழிபாட்டு நிலையங்கள் பற்றிக் குரல் எழுப்பி ‘இயக்கம்’ நடத்த முன்வரவேண்டும்?
எப்படி இருந்தாலும் அருமையான கருத்துகளை சட்டபூர்வமாக எடுத்து வைத்து நீதிபதிகள் தீர்ப்பு _ ஆணைக்காக பாராட்டக் கடமைப்பட்டுள்ளோம்.
மற்ற தனிநபர் ஆக்கிரமிப்புகளைப் பற்றி அதிகம் பேசுவோர், ஓங்கிக் குரல் எழுப்ப இதில் ஏன் மவுனசாமியார்களாக உள்ளனர் என்பதே நமது நியாயமான கேள்வியாகும்.

– கி.வீரமணி
ஆசிரியர்

வியாழன், 6 ஜூன், 2024

பத்திரப்பதிவு செய்தால் மட்டும் சொத்து உங்களுடையது ஆகாது



Published June 5, 2024, விடுதலை நாளேடு

இந்தியாவில் நிலங்களை பதிவு செய்வது கட்டாயம். இந்தியப் பதிவுச் சட்டத்தில் 100 ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள சொத்தை எந்த விதத்தில் மாற்றினாலும், அது எழுத்துப் பூர்வமாகவும், சம்பந்தப்பட்ட துணைப் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றும் விதி உள்ளது.

அதனால் தான் வீடு, கடை, ப்ளாட் அல்லது பண்ணை என எது வாங்கினாலும் அது கட்டாயம் பதிவு செய்யப்படுகிறது. ஆனால், நிலத்தை பதிவு செய்தாலும், நீங்கள் அதன் உரிமையாளராகிவிட முடியாது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

பதிவு செய்வதன் மூலம் நீங்கள் உரிமை யாளராகிவிடுவீர்கள் என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் தவறான புரிதலில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். ஒரு நபர் ஒரு சொத்தை இரண்டு முறை விற்றதாக நாள்தோறும் இதுபோன்ற செய்திகள் வருவதற்கு இதுவே காரணம். அல்லது வாங்குபவரின் பெயரில் விற்கப்பட்ட சொத்தின் மேல் விற்பனையாளர் நிலத்தில் கடன் வாங்கியிருக்கலாம். நிலத்தை வாங்குபவர் பதிவை மட்டுமே செய்திருப்பதால் இது நிகழ்கிறது, அவர் தனது பெயரில் சொத்தை மாற்றி எழுதவில்லை. (இது சொத்து மாற்றம் என்று அழைக்கப்படுகிறது).

பதிவு செய்வதன் மூலம் நீங்கள் நிலத்தின் முழு உரிமை யாளராக மாட்டீர்கள் என்பதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். அந்த சொத்தின் முழு உரிமையும் உங்களுக்குக் கிடைக்காது. பதிவு என்பது உரிமையை மாற்றுவதற்கான ஒரு ஆவணம் மட்டுமே. பத்திரப்பதிவை முடித்த பிறகு, அந்த பதிவின் அடிப்படையில் நீங்கள் சொத்தை மாற்றினால் அது சொத்து மாற்றம் என்று அழைக்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசுப் பணிக்கான தேர்வில் தமிழில் 40 மதிப்பெண் கட்டாயம்; அரசாணையை எதிர்த்து வழக்கு உயர்நீதிமன்றம் மீண்டும் தள்ளுபடி

5-6

அரசாணையை எதிர்த்து வழக்கு உயர்நீதிமன்றம் மீண்டும் தள்ளுபடி

சென்னை, ஜூன் 6 டிஎன்பிஎஸ்சி நடத்தும் அரசுப் பணிகளுக்கான தேர்வில் தமிழ் மொழித்தாளில் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறுவது அவசியம் என்ற தமிழ்நாடு அரசின் அரசாணையை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியா ளர்கள் பணி நிபந்தனைச் சட்டத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட திருத்தத்தின்படி அரசுப் பணிகளுக்கு நடத்தப்படும் தமிழ் மொழித்தாளில் 40 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே பொது அறிவு மற்றும் திறனறிவு தேர்வுக்கான விடைத்தாள் மதிப்பீடு செய்யப்படும் என தமிழ்நாடு அரசு கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பரில் அரசாணை பிறப்பித்தது.

இந்த அரசாணையின் அடிப்படையில், தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள 6,244 குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பாணையை டிஎன்பிஎஸ்சி, கடந்த ஜனவரி யில் வெளியிட்டது. இந்த அறி விப்பாணையை எதிர்த்தும், தமிழ் மொழித்தாள் தேர்வில் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே பொது அறிவு,திறனறிவு தேர்வுத் தாள் மதிப்பீடுசெய்யப்படும் என்ற அரசாணையை எதிர்த்தும் நிதேஷ் உள்ளிட்ட 10 விண்ணப்பதாரர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.இந்த வழக்கு ஏற்கெனவே விடுமுறை கால அமர்வில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பாக விசாரணைக்கு வந்தபோது, விண்ணப்பதாரர்களுக்கான கல்வித் தகுதியை நிர்ணயிக்க அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது என்றும், குரூப் 4 பதவிகளை வகிப்பவர்கள், மக்களுடன் நேரடியாகதொடர்பு கொள்ள தமிழ் மொழியில் புலமை பெற்றிருப்பது அவசியம் என்றும், இதுதொடர்பான அரசின் கொள்கை முடிவில் தலையிடமுடியாது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் ஆர். மகாதேவன், முகமது ஷபீக் ஆகியோர்அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில், இந்த அரசாணைப்படி ஏற்கெனவே பல தேர்வுகள் நடத்தப்பட்டு விட்டது.அரசுப்பணிகளுக்கு தமிழ் மொழித்தாளில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம் என்ற அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது. எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரப்பட்டது. அதையடுத்து நீதிபதிகள் இந்த வழக்கை தள்ளு படி செய்தனர்.