ஞாயிறு, 23 ஜூன், 2024

குடியுரிமையும் அரசியல் உரிமையும் பற்றிய பன்னாட்டு உடன்படிக்கை


2023 அக்டோபர் 16-31, 2023 உண்மை Unmai
சென்ற இதழ் தொடர்ச்சி…
விதி 12
1. ஓர் அரசின் நில எல்லைக்குள் சட்டப்படி வாழும் எவருக்கும் அந்த நில எல்லைக்குள் எங்கு வேண்டுமானாலும் போக, வர உரிமை உண்டு. எங்கு வசிக்கவும் சுதந்திரம் உண்டு.
2. எவரும், தாயகம் உள்பட எந்த நாட்டை விட்டும் விருப்பம் போல் வெளியே போகலாம்.
3. அவ்வுரிமைக்குக் கீழ்க்கண்ட நிபந்தனைகளின்றி கட்டுப்பாடு கூடாது _ கட்டுப்பாடுகள், தேசிய பாதுகாப்பு, பொது அமைதி, பொது சுகாதாரம், பொது ஒழுக்கம் மற்றவர்களின் உரிமைகள், சுதந்திரங்கள் ஆகியவை பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்வதற்காக சட்டபூர்வமாக மட்டுமே விதிக்கப்படலாம். இந்த உடன்படிக்கையில் காணப்படும் பிற உரிமைகளுக்கு இசைவாக அவை அமைய வேண்டும்.
4. ஒருவர் தாயகத்துக்குள் நுழைவதை யாரும் சட்டவிரோதமாகத் தடுக்கக் கூடாது.
விதி 14
1. நீதிமன்றங்கள் முன்பும் தீர்ப்பாயங்கள் முன்பும் அனைவரும் சமம். ஒருவர்மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு பற்றியோ, அவரது உரிமைகள்- _ கடமைகள் பற்றிய வழக்கிலோ, நேர்மையான வெளிப்படையான விசாரணை என்பது அனைவருக்கும் உரியதாகும். அந்த விசாரணை சட்டப்படி உருவான சுயேச்சையான, பாரபட்சமற்ற நீதிமன்றத்தால் நடத்தப்பட வேண்டும்.
2. குற்றம் சாட்டப்படும் எவரும் சட்டபூர்வமாக அக்குற்றம் நிறுவப்படும் வரை நிரபராதி என்றே கருதப்பட உரிமையுள்ளவர் ஆவார்.
3. குற்றவியல் சட்டத்தின்கீழ் குற்றம் சுமத்தப்-பெற்ற ஒருவருக்கு வேறு யாருக்கும் சமமாக, கீழ்க்கண்ட குறைந்தபட்ச உத்தரவாதங்களுக்கு உரிமையுண்டு:-_
அ. அவர் மீதான குற்றச்சாட்டின் இயல்பு, அது சுமத்தப்படுவதன் காரணமும், அவருக்குப் புரிகிற மொழியில் விரிவாகவும் விரைவாகவும் தெரிவிக்கப்பட வேண்டும்.
ஆ. தனக்குப் பிடித்த வழக்குரைஞரைக் கலந்துகொள்ளவும், தனது வாதங்களைத் தொகுத்துக் கூற போதிய நேரமும் வாய்ப்பும் பெறவும் அனுமதிக்கப்பட வேண்டும்.
இ. விரைவான விசாரணை.
ஈ.  விசாரணை அவர் முன்னிலையில் நடக்க வேண்டும்; தானே நேராகவோ தான் விரும்பும் வழக்குரைஞர் மூலமோ அவர் வாதிக்கலாம்.
எ. யாரும் தனக்கே விரோதமாகச் சான்றளிக்-குமாறோ, குற்ற அங்கீகாரம் தருமாறோ கட்டாயப்படுத்தப்படக்கூடாது.
4. சிறுவர்களென்றால், அவரது வயது, அவரைச் சீரமைத்து புனர்வாழ்வளித்தலின் அவசியம் ஆகியவற்றையும் கவனத்தில் கொண்டே நடைமுறைகள் வகுக்கப்பட வேண்டும்.
விதி 16
சட்டத்தின்முன் ஒரு மனிதராக நடத்தப்படும் உரிமை எங்கும் எவருக்கும் உரியது.
விதி 17
1. எவரது தனிமையும், குடும்பமும், வீடும், கடிதங்களும் குறுக்கீடுகளுக்கு இடமாகக் கூடாது. எவரது பெருமையும் மரியாதையும் சட்டவிரோதப் பாதிப்புக்கு ஆளாகக் கூடாது.
2. அத்தகைய மீறல்களுக்கும் பாதிப்புகளுக்கும் எதிரான பாதுகாப்பு எல்லாருக்கும் உரிய உரிமையாகும்.
விதி 18
1. எல்லாருக்கும் சிந்தனை சுதந்திர உரிமையும், மத உரிமையும் மனச்சான்று உரிமையும் உண்டு; தான் விரும்பும் மதம் அல்லது தர்மத்தைத் தொடரவோ, ஏற்றுக்கொள்ளவோ உள்ள உரிமையும் தனியாகவோ பிறருடன் சேர்ந்தோ, தனியிடத்திலோ_ பொதுவிலோ, தனது நம்பிக்கையையோ மதத்தையோ கடைப்பிடித்தல், தொழுதல், வாழ்தல் கற்பித்தல் ஆகிய உரிமைகளும் அடங்கும்.
2. தனது மதம், நம்பிக்கை இவற்றில் ஒருவர் கொண்டுள்ள உறுதியை மாற்றிக்கொள்ள எவரும் கட்டாயப்படுத்தப்படலாகாது.
3. தன் மதம் பற்றியோ நம்பிக்கைகள் பற்றியும் பேசும் உரிமை , பொதுப் பாதுகாப்பு, ஒழுங்கு, சுகாதாரம், நியமங்கள் மற்றவர்களின் அடிப்படை உரிமைகள்_ சுதந்திரங்கள் ஆகியவை பாதிக்கப்படும் என்கிறபோது மட்டுமே, அதுவும் சட்டம் கூறுகிற வகையில் மட்டுமே கட்டுப்படுத்தப்படலாம்.
4. தத்தம் நம்பிக்கைகளுக்கேற்ற மதக் கல்வி, தார்மீகக் கல்வி தம் குழந்தைகளுக்குக் கிடைக்க உறுதியாக வழிசெய்துகொள்ள பெற்றோர் அல்லது காப்பாளருக்கு உள்ள உரிமையை மதிப்போமென்று இவ்வுடன்படிக்கையினை ஏற்கும் அரசுகள் உறுதியளிக்கின்றன.
விதி 19
1. ஒவ்வொருவரும் எதைப்பற்றியும், குறுக்கீடுகளின்றி தனக்கென்று கருத்துகள் கொண்டிருப்பதற்கு உரிமை உண்டு.
2. கருத்து வெளியிடும் உரிமையும் அனைவருக்கும் உண்டு. அதிலேயே எல்லாவிதச் செய்திகளையும் கருத்துகளையும் தேடிச் செல்லவும், பெறவும் பரப்பவும், எல்லை தொடர்பான தடைகளின்றி, பேச்சு, எழுத்து, கலைகள் உள்ளிட்ட விரும்பும் எந்த ஊடகத்தைப் பயன்படுத்திக் கொள்ளவும் உள்ள உரிமையும் அடங்கும்.
3. இதற்கு முந்தைய பத்தியில் கூறப்பெறும் உரிமைகளை அனுபவிப்பதில் சில குறிப்பான கடமைகள்_ பொறுப்புகள் ஆகியவையும் இருக்கின்றன. எனவே அவற்றுக்குச் சில கட்டுப்பாடுகள் உள்ளன. ஆனால், அக்கட்டுப்பாடுகள்
அ. மற்றவர்களின் உரிமைகளுக்கும் மரியாதைக்கும் தேவையானவையாகவும்,
ஆ. தேசிய பாதுகாப்பு, பொது அமைதி, பொது சுகாதாரம், தார்மீக ஒழுக்கம் ஆகியவற்றைப் பாதுகாக்கவும் தேவையான அளவு மட்டுமே அதுவும் சட்டத்தின் மூலமாக மட்டுமே விதிக்கப்படலாம்.
விதி 20
1. போர்ப் பிரச்சாரம் யாவும் சட்டப்படி தடுக்கப்படும்.
2. பாரபட்சம், பகை, வன்முறை ஆகியவற்றைத் தூண்டக் கூடியதாக அமையும் தேசிய வெறுப்பு. இனவெறுப்பு, மதவெறுப்பு ஆகியவற்றுக்கான ஆதரவுப் பிரச்சாரம் சட்டப்படி தடுக்கப்படும்.
விதி 21
அமைதியாகக் கூடிப் பேசும் உரிமை அங்கீகரிக்கப்படும். ஒரு ஜனநாயக சமுதாயத்தில் தேசியப் பாதுகாப்பு, பொதுமக்கள் பாதுகாப்பு, பொது அமைதி, பொதுச் சுகாதாரம், ஒழுக்கம் ஆகியவற்றின் பாதுகாப்பு மற்றவர்களின் உரிமைகள், சுதந்திரங்கள் ஆகியவற்றுக்கு இதமாக எவ்வளவு தேவையோ அந்த அளவு மட்டும் அதுவும் சட்டத்துக்கு இசைந்து இவ்வுரிமை கட்டுப்படுத்தப்படலாம்.
விதி 22
1. தனது நலன்களைப் பாதுகாத்துக் கொள்ள மற்றவர்களோடு சேர்ந்து தொழிற்சங்கம் உள்பட எவ்வித சங்கமும் அமைக்கும் உரிமை அனைவருக்குமுண்டு.
விதி 23
1. குடும்பமே இயல்பான, அடிப்படையான சமூக உறுப்பாகும். அதற்கு சமூகம், அரசு ஆகியவற்றின் பாதுகாப்புக்கான உரிமை உண்டு.
2. மண வயது வந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் மணம் புரியவும் குடும்பம் நிறுவவும் உள்ள உரிமை அங்கீகரிக்கப்படும்.
3. மணந்துகொள்வோரின் சுயேச்சையான முழுச் சம்மதமின்றி ஒரு திருமணமும் நடைபெற இயலாது.
4. இவ்வுடன்படிக்கையில் சேரும் அரசுகள் தம்பதிகளுக்குச் சமமான உரிமைகளும் கடமைகளும் திருமணம் செய்து கொள்வதிலும் மணவாழ்விலும் மணவிலக்குப் பெறுவதிலும் கிடைப்பதை உறுதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கும்.
விதி 24
1. இன, நிற, மத, பால், மொழி, தேசிய வம்சாவழி, சமூகவம்சாவழி காரணமான எவ்வித பேதமுமின்றி, ஒவ்வொரு குழந்தைக்கும் குழந்தை என்ற நிலையில் தேவைப்படும் பாதுகாப்பு உரிமைக்கான செயல்களைக் குடும்பம், சமூகம், அரசு ஆகியவற்றிடமிருந்து பெறும் உரிமை இருப்பது அங்கீகரிக்கப்படும்.
2. ஒவ்வொரு பிறப்பும் பதிவு செய்யப்படும். ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு பெயர் இருக்கும்.
3. ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தேசிய சார்புக்கான உரிமை உண்டு.
விதி 25
விதி2இல் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவித பேதமுமின்றியும், நியாயமற்ற எவ்வித நிபந்தனைகளுமின்றியும் ஒவ்வொரு குடிமகனுக்கும் கீழ்க்கண்ட உரிமைகளும் வாய்ப்புகளும் கிடைக்க வேண்டும்.
அ. பொது நிருவாகப் பணிகளில் நேரடியாகவோ, சுயேச்சையாகத் தேர்ந்தெடுத்த பிரதிநிதிமூலமோ _ பங்கெடுத்துக் கொள்ளுதல்;
ஆ. குறிப்பிட்ட காலப்படி நிகழும் மெய்யான தேர்தல்களில் நிற்கவும் வாக்களிக்கவும் அனைவருடைய சமஉரிமைகளுக்கும் அத்தேர்தல்கள் ரகசிய வாக்குப்பதிவு மூலம் நடைபெறும். அதில் வாக்காளருக்கு தன் விருப்பத்தைச் சுதந்திரமாக வெளியிட உத்தரவாதம் உண்டு.
இ. தன்நாட்டு அரசுப் பணிகளில், பொதுவாக சமமான உரிமைப்படி, சேரும் வாய்ப்பு.
விதி 26
சட்டத்தின்முன் அனைவரும் சமம்; எந்தப் பேதமுமின்றி சட்டத்தின் பாதுகாப்பு அனைவருக்கும் கிடைக்கும். அந்த வகையில் சட்டமே சகலவித பேதங்களையும் நிராகரிக்கும். இனம், நிறம், பால், மொழி, மதம், அரசியல் கருத்து, பிற கொள்கைகள், தேசிய வம்சாவழி, சமூக வம்சாவழி, சொத்து, பிறப்பு, அல்லது வேறு நிலை என்ற எந்த அடிப்படையில் பேதம் காட்டப்படுவதிலிருந்தும் எல்லாருக்கும் சமமான பாதுகாப்புக்குச் சட்டம் உத்தரவாதம் தரும்.
விதி 27
மதம், மொழி, கலாச்சாரம் என்பனவற்றில் எந்த அடிப்படையிலேனும் சிறுபான்மையோரையும் கொண்ட நாடுகளில், அவ்வகை சிறுபான்மையினருக்கும் தம்மைச் சார்ந்த மற்றவர்களுடன்கூட, தமது கலாச்சாரத்தை ரசிக்கவும், தமது மதத்தைக் கடைப்பிடிக்கவும் சார்ந்தொழுகவும், தம் மொழியைப் பயன்படுத்தவும் உள்ள உரிமை மறுக்கப்படாது.
பகுதி 4
விதி 40
1. இவ்வுடன்படிக்கையில் சேரும் அரசுகள் இதில் கூறப்பெறும் உரிமைகள் இடம்பெற தாம் எடுக்கும் நடவடிக்கைகள் பற்றியும், அவற்றை அனுபவிப்பதில் ஏற்படும் முன்னேற்றம் குறித்தும் அறிக்கைகள் அளிக்கவும் உத்தரவாதம் தருகின்றன. ♦

குடியுரிமையும் அரசியல் உரிமையும் பற்றிய பன்னாட்டு உடன்படிக்கை


விழிப்புணர்வு – 

2023 அக்டோபர் 1 - 15, 2023

அய்.நா. பொதுச்சபை 16.12.1966 அன்று ஏற்றுக்கொண்டதும், 23.12.1976 முதல் நடைமுறைக்கு வந்ததுமான குடிஉரிமையும் அரசியல் உரிமையும் பற்றிய பன்னாட்டு உடன்படிக்கையிலிருந்து சில பகுதிகள்.

முகப்புரை

இவ்வுடன்படிக்கையில் சேரும் நாடுகள்

  • – அய்.நா. மன்ற அமைப்புத்திட்டம் முரசறையும் தத்துவங்களுக்கு ஏற்ப உள்ளார்ந்த கவுரவம், மாற்றொணாதவையும் சமத்துவமானவையுமான மானிடக் குடும்பத்தின் சகல உறுப்பினர்களுக்கும் உரிய உரிமைகளை அங்கீகரிப்பதே உலகில் சுதந்திரம், சமாதானம், நீதி ஆகியவை தழைக்க அடிப்படை என்பதைக் கருதிப் பார்த்தும்,
    – இவ்வுரிமைகள் மானிடனின் உள்ளார்ந்த கவுரவத்திலிருந்து பிறப்பதை ஒப்புக்கொண்டும்,
    -மனித உரிமைகள் பற்றிய சர்வதேசியப் பிரகடனப்படி சுதந்திர மனிதர்கள் அச்சத்திலிருந்தும் தேவையிலிருந்தும் விடுபட வேண்டும் என்ற லட்சியம் ஒவ்வொரு மனிதனும் தனது பொருளாதார சமூக கலாச்சார உரிமைகளையும் அரசியல் உரிமை, குடிமகன் உரிமை ஆகியவற்றையும் அனுபவிக்கக்கூடிய சூழலை உருவாக்குவதன் மூலமே அடைய முடியுமென்பதையும் ஒப்புக்கொண்டும்,
    – அய்.நா. அமைப்புத் திட்டத்தின்கீழ் மனித உரிமைகளுக்கும் சுதந்திரங்களுக்கும் உலகு தழுவிய மரியாதையும் அமலாக்கமும் குடியுரிமையும் அரசியல் உரிமையும்… ஏற்படுத்த வேண்டியது அரசுகளின் கடப்பாடு என்பதைக் கருதிப் பார்த்தும் தனி மனிதனும் பிற தனி மனிதர்களுக்கும் தான் சார்ந்திருக்கும் சமூகத்துக்கும் கட்டுப்பட்டவன் என்கிற முறையில் இங்கு குறிப்பிடப்பெறும் உரிமைகளைப் பரப்பவும் அங்கீகாரத்துக்கு உதவவும் கடமைப்பட்டுள்ளான் என்பதை உணர்ந்தும் கீழ்க்கண்ட விதிகளுக்கு உடன்படுகின்றன.
    பகுதி 1 – விதி 1
    1. எல்லா மக்களுக்கும் சுயநிர்ணய உரிமை உண்டு. அவ்வுரிமையின்படி அவர்கள் விருப்பம் போல் தமது அரசியல் நிலையை நிர்ணயித்துக்கொண்டு தம் பொருளாதார, சமூக, கலாச்சார வளர்ச்சிக்கு உழைக்கின்றனர்.
    2. சர்வதேச சட்டத்தையும் பரஸ்பர நன்மை என்ற தத்துவத்தையும் அடிப்படையாகக் கொண்டு எழும் பன்னாட்டுப் பொருளாதாரக் கூட்டுறவினால் உருவாகும் கடமைகளுக்கு ஊறுவிளையாத வகையில் தமது இயற்கைச் செல்வங்களையும் பொருளாதார சக்திகளையும் தமது நன்மைக்கேற்ப ஏதும் செய்துகொள்ள எல்லா மக்களுக்கும் உரிமை உண்டு. தாம் பிழைத்திருப்பதற்கான பொருளாதார வழிவகைகள் எந்த மக்களிடமிருந்தும் பறிக்கப்படுவதென்ற பேச்சுக்கே இடம் கிடையாது.
    3. சுய ஆட்சி பெறாத பகுதிகள், அறங்காவலர் முறையில் ஆளப்படும் பகுதிகள் ஆகியவற்றுக்குப் பொறுப்பான அரசுகள் உள்பட இவ்வுடன்படிக்கையில் இணையும் அரசுகள் அனைத்தும் சுயநிர்ணய உரிமையை அனைவரும் அடைவதைப் பரப்பவும் அய்.நா. பிரகடன விதிகளுக்கு ஏற்ப அவற்றை மதிக்கவும் தம்மைக் கட்டுப்படுத்திக் கொள்கின்றன.பகுதி 2
  • விதி 21. தனது எல்லைக்குள்ளும் அதிகார எல்லைக் குள்ளும் உள்ள அனைவருக்கும் இனம், நிறம், பால், மொழி, மதம் அரசியல் கருத்து அல்லது வேறு வித கருத்துக்கள், தேசிய அல்லது சமூகத் தோற்றம், பிறப்பு, சொத்து அல்லது அதுபோன்ற கவுரவங்கள் என்ற எவ்வகை பேதமுமின்றி இவ்வுடன்படிக்கையில் அடையாளங் காட்டப்
    பெறும் அனைத்துரிமைகளும் உண்டென்பதை மதித்து அவற்றுக்கு உத்தரவாதம் அளிப்பதென்று இவ்வுடன்படிக்கையில் சேரும் அனைத்து அரசுகளும் வாக்குக் கொடுக்கின்றன.2. சட்டத்தின் மூலமோ வேறு வகையாகவோ ஏற்கனவே உறுதி செய்யப்பட்டிராவிட்டால், தத்தம் பகுதிகளில், தத்தம் அரசியலமைப்புக்கும், இவ்வுடன்படிக்கையின் விதிகளுக்கும் ஏற்ப, இந்த அரசுகள் தம் நாடுகளில் இவ்வுடன்படிக்கையில் காணப்பெறும் உரிமைகள் எளிதில் நடைமுறையில் கிடைக்க, சட்டமியற்றியோ வேறு வழியிலோ தேவையான நடவடிக்கைகள் எடுப்போமென்றும் உறுதியளிக்கின்றன.

    3. (அ) யாரைப் பொறுத்தேனும் இங்கு அங்கீகரிக்கப்படும். உரிமையோ சுதந்திரமோ மீறப்படுமானால், அந்த மீறல் அரசின் சார்பாக ஒருவரால் எடுக்கப்படும் நடவடிக்கையாயிருப்பினும்கூட, பாதிக்கப்பட்டவருக்கு பயனுள்ள நிவாரணம் கிடைக்கவும்.
    (ஆ) அப்படி பரிகாரம் தேடுகிறவர், அவருடைய உரிமையை நிர்ணயிக்க நீதிமன்றம், நிருவாகத்துறை, சட்டமன்றம் அல்லது அவ்வரசின் அமைப்பியல் உருவாக்கியுள்ள வேறு எந்த அமைப்பின் உதவியைப் பெறும் உரிமையையும், குறிப்பாக நீதித்துறையில் இதற்கான வழிவகைகளை உருவாக்கவும், ஆவன செய்யவும் இவ்வரசுகள் உறுதியேற்கின்றன.

  • விதி 3
    இவ்வுடன்படிக்கையில் அங்கீகரிக்கப்பெறும் குடிஉரிமை, அரசியல் உரிமை ஆகியவற்றை ஆண்களோடு பெண்களும் சரிநிகர்சமானமாக அனுபவிக்க வகைசெய்யவும் இவ்வரசுகள் உறுதியேற்கின்றன.
  • விதி 4
    1. தேசத்தின் உயிரையே பாதிக்குமளவிலான பொது நெருக்கடி நிலை நிலவி, அதிகாரபூர்வமாக அத்தகு அவசரநிலைப் பிரகடனம் செய்யப்பட்ட காலத்தில் இவ்வரசுகள் நிலைமையின் தீவிரம் எவ்வளவு தேவை என்று காட்டுகிறதோ அந்த அளவு மட்டுமே, இவ்வுடன்படிக்கையின்படி அவற்றின் கடமைகளாய் அமைகின்றவற்றுக்கு குடியுரிமையும் அரசியல் உரிமையும்…
    எதிரான நடவடிக்கைகளில் இறங்கலாம். அப்போதும்கூட சர்வதேசச் சட்டத்தின்கீழ் அவற்றுக்கு உள்ள கடமைகளை மீறாமலும் இனம், நிறம், பால், மொழி, மதம், எந்த சமூகத்தினன் என்பது போன்ற எந்தவிதமான பேதங்களும் காட்டப்படாமலும் அந்நடவடிக்கைகள் அமைய வேண்டும்.
  • பகுதி 3 – விதி 6
    1. உயிர்வாழும் உரிமை ஒவ்வொருவருக்கும் இயல்பாகவே உரியது. அதற்கு சட்டப்பாதுகாப்பு வேண்டும். யார் உயிரும் சட்டவிரோதமாகப் பறிக்கப்படலாகாது.
    2. மரணதண்டனை ஒழிக்கப்படாத நாடுகளில், மிகமிகக் கடுமையான குற்றங்களுக்கு மட்டுமே அது வழங்கப்பட வேண்டும். அதுவும் குற்றம் நடந்த காலத்திய சட்டத்தின் படியும், இவ்வுடன்படிக்கையின் விதிகளுக்கோ, இனக்கொலை பாதகத் தடுப்பும் தண்டனையும் பற்றிய கொள்கையின் விதிகளுக்கோ முரணாக அது அமைந்திடக்கூடாது.
    4. மரணதண்டனை விதிக்கப்பட்டவருக்கு மன்னிப்புக்கோரவும் தண்டனைக் குறைப்பு கோரவும் உரிமையுண்டு. எந்த வழக்கிலும் பொதுமன்னிப்பு அல்லது மன்னிப்பு அல்லது தண்டனைக் குறைப்பு வழங்கப்படலாம்.
    5. பதினெட்டு வயதுக்குக் குறைந்தவர்களுக்கும், கர்ப்பமாயிருப்போர்க்கும் மரணதண்டனை வழங்கப்படலாகாது.
  • விதி 7
    1. யாரும் சித்திரவதைக்கோ, கொடுமையாக அல்லது மனிதத் தன்மையின்றி அல்லது கண்ணிய
    மற்ற முறையில் நடத்தப்படலாகாது; யாரும் அவரது சுதந்திரமான ஒப்புதலின்றி மருத்துவ சோதனைகளிலோ அறிவியல் சோதனைகளிலோ ஈடுபடுத்தப்படக்கூடாது.
  • விதி 8
    1. யாரும் அடிமைப்படுத்தப்படக்கூடாது. அனைத்துவித அடிமை முறையும் அடிமை வணிகமும் ஒழிக்கப்படவேண்டும்.
    2. யாரும் கொத்தடிமைகள் வைத்துக்கொள்ளலாகாது.
    3. (அ) யாரையும் கட்டாயப் பணியாளராகவோ, நிர்பந்தப் பணியாளராகவோ வைத்திருத்தல் கூடாது.
  • விதி 9
    1. ஒவ்வொருவருக்கும் சுதந்திரத்துக்கும் உடல் பாதுகாப்புக்கும் உரிமை உண்டு. யாரும் சட்டவிரோதமாகக் கைது செய்யப்படவோ, சிறைவைக்கப்படவோ ஆகாது. சட்டம் விதித்துள்ள காரணங்கள் அன்றியோ, அது கூறும் முறைகளில் அல்லாமலோ யாருடைய சுதந்திரமும் பறிக்கப்படலாகாது.
    2. ஒருவர் கைது செய்யப்படும்போது, அவர் கைது செய்யப்படுவதற்கான காரணமும், அவர் செய்ததாகக் கருதப்படும் குற்றம் என்ன என்பதும், அவருக்குக் கூறப்பட வேண்டும்.
    3. குற்றச்சாட்டின்கீழ் ஒருவர் கைது செய்யப்பட்டாலோ, சிறைப்பிடிக்கப்பட்டாலோ குறித்த காலத்துக்குள் நடுவர் முன்னிலையிலோ அல்லது
    சட்டப்படி இதற்கான அதிகாரம் பெற்ற நீதித்துறையாளர் முன்போ அழைத்துச் செல்லப்பட வேண்டும்.
    நியாயமான காலவரையறைக்குள் விசாரிக்கப்பட வேண்டும் அல்லது விடுவிக்கப்பட வேண்டும்.
    4. கைது செய்யப்பட்டோ சிறை செய்யப்பட்டோ தன் உரிமையை இழக்கும் ஒருவர் நீதிமன்றத்துக்குத் தன் குறையை எடுத்துச் செல்ல உரிமை உண்டு. நீதிமன்றம் தாமதமின்றி அந்தக் கைது சட்டப்படி செல்லுமா என்று தீர்மானிக்க அது உதவும் தவறென்று தீர்மானித்தால் நீதிமன்றமே அவரை விடுவித்து ஆணையிடும்.
    5. அப்படி பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு கோரவும் உரிமை உண்டு.
  • விதி 10
    1. கைதாகும் எவரும் மனிதப் பண்போடும் மனிதப் பிறவிக்கே உரிய உள்ளார்ந்த மதிப்புக்கான மரியாதையோடும் நடத்தப்படவேண்டும்.
    2. (அ) விதிவிலக்கான சந்தர்ப்பங்கள் தவிர பொதுவாக எப்போதும் குற்றம் சாட்டப்பட்டவர்களும் தண்டிக்கப்பட்டவர்களும் தனித்தனியே தான் வைத்திருக்கப்பட வேண்டும். தண்டிக்கப்பட்டவரல்ல என்ற தகுதிக்கேற்ப அதற்குரியபடி வித்தியாசமான முறையிலேயே நடத்தப்பட வேண்டும்.
    ஆ. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குள், சிறுவர்களும் வயது வந்தவர்களும் தனித்தனியே வைக்கப்பட்டு, நடுவர் முன்பும் கூடியவரை தனிதனியாகவே அழைத்துச் செல்லப்படவேண்டும்.
    3. சிறைச்சாலை முறையானது கைதிகளைச் சீர்திருத்துவதையும் அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதையுமே நோக்கமாக வைத்து அவர்களை நடத்தவேண்டும். இளங்குற்றவாளிகளும் வயது வந்தவர்களும் தனித்தனியே வைக்கப்பட்டு, அவர்களுடைய வயதுக்கும் சட்ட அந்தஸ்துக்கும் ஏற்ப நடத்தப்படவேண்டும்.

சனி, 22 ஜூன், 2024

கல்வியும் மனித உரிமைகளும் பற்றிய தேசியக் கொள்கை


விழிப்புணர்வு – 

2023 கட்டுரைகள் செப்டம்பர் 1-15,2023 உண்மை Unmai

இந்திய நாடாளுமன்றத்தால் 1986இல் ஏற்றுக்கொள்ளப்பட்ட தேசியக் கல்விக் கொள்கையிலிருந்து சில பத்திகள் கீழே தரப்படுகின்றன. சில பகுதிகள் சமச்சீரின்மையை அகற்றுவதையும் சமமான கல்வி வாய்ப்புகளை அளிப்பதையும் வலியுறுத்துகின்றன. பிற பகுதிகள் மனித உரிமை பற்றி கல்வியில் முறைமைகள், உள்ளடக்கம் ஆகியவற்றின் சில அம்சங்களை வலியுறுத்துகின்றன.

தேசியக் கல்வி முறை

3.1 எந்தக் கோட்பாடுகளின் அடிப்படையில்தேசியக் கல்விமுறை உருவாக்கப்பட்டுள்ளதோ அவற்றை அரசமைப்புச்சட்டம் தன்னுள் கொண்டுள்ளது.

3.2 குறிப்பிட்ட நிலை வரை, ஜாதி, மதம், இடம், பால் ஆகியவை எதுவாயிருந்தாலும் மாணவர்களனைவரும் சமமான தரமுள்ள கல்விக்கு சம வாய்ப்புகள் பெற்றிருக்கிறார்கள் என்ற அடிப்படையில் தேசியக் கல்வி முறை நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. அதனை எய்துவதற்கு உரிய வகையில் நிதி வசதி செய்யப்பட்ட திட்டங்களை அரசு துவங்கும். 1986ஆம் ஆண்டு கொள்கை பரிந்துரைத்த பொதுப்பள்ளி முறைகளின் திசையில் பயனுள்ள நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

3.3 தேசியக் கல்வி முறை ஒரு பொதுவான கல்வியமைப்பை உருவகிக்கிறது. 10+2+3 அமைப்பு இப்போது நாடு முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. முதல் பத்தாண்டுகளின் உட்பகுப்பைப் பொறுத்தவரை அய்ந்தாண்டு ஆரம்பக் கல்வியைக் கொண்ட துவக்க அமைப்பு, மூன்றாண்டு உயர்துவக்கம், இரண்டாண்டு உயர் பள்ளிக் கல்வி என்பதை நோக்கி முயற்சி மேற்கொள்ளப்படும். நாடு முழுவதும் +2 நிலையும் பள்ளிக் கல்வியிலேயே ஒரு பகுதியாக ஏற்கப்படவும் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

3.4 ஒரு தேசிய பாடத்திட்ட அடிப்படையின் மீது தேசியக் கல்வி முறை நிர்மாணிக்கப்படும். அப்பாடத்திட்ட வரையறையில் ஓர் ஆதாரப் பொதுக்கூறும் நெளிவுசுழிவான பிற பாடங்களும் இருக்கும். இந்திய விடுதலைப் போராட்ட வரலாறும் தேசிய அடையாளத்தைப் பேணிக் காத்திடத் தேவைப்படுகிற அரசமைப்பு ரீதியான கடமைகள் முதலிய அம்சங்கள் பொது ஆதாரக் கூறில் அடங்கும். பாடப் பகுப்புகளைத் தாண்டிய இக்கூறுகள் இந்தியாவின் பொதுப் பண்பாட்டு மரபு, சமதர்மம் தத்துவம், ஜனநாயகம், சமயச் சார்பின்மை, பால் சமத்துவம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சமூகத் தடைகளைத் தகர்த்தல், சிறு குடும்பக் கொள்கை, அறிவியல் மனோநிலை ஆகியவற்றை வளர்ப்பவையாக வடிவமைக்கப்பெறும். எல்லா கல்வித் திட்டங்களும் முழுக்க முழுக்க மதச்சார்பற்ற மதிப்பீடுகளுடன் நடைமுறைப்படுத்தப்படும்.

3.5 எப்போதுமே இந்தியா உலக முற்றிலும் ஒரே குடும்பமே என்ற நம்பிக்கையுடன் நாடுகளுக்கிடையே புரிதலும் அமைதியும் நிலவ உழைத்து வந்துள்ளது. இந்த வளமான மரபுக்கேற்ப உலகளாவிய பார்வையைக் கல்வி வலுப்படுத்த வேண்டும். இளைய தலைமுறையை பன்னாட்டுக் கூட்டுறவுக்கும் சமாதான சக வாழ்வுக்கும் பக்குவப்படுத்த வேண்டும். இந்த அம்சத்தைப் புறக்கணிக்க முடியாது.

3.6 சமத்துவத்தை வளர்க்க கல்வி கிடைப்பதில் மட்டுமல்ல, அதில் வெற்றி பெறுவதிலும் சம வாய்ப்புகளை உருவாக்குவது அவசியமாகும். அத்துடன் பாடத்திட்ட மூலக்கூறுகள் வழியே மாந்தர்கள் அனைவர்க்குமிடையே உள்ளார்ந்த சமத்துவம் இருப்பதைப் புரிய வைக்க வேண்டும். சமூகச் சூழல் காரணமாகவும் பிறப்பு என்ற நம்மை மீறிய காரணியினாலும் அளிக்கப்படுகிற விருப்பு வெறுப்புகளையும் மனக்கோணல்களையும் அகற்றுவதை முக்கிய நோக்கமாக ஆக்க வேண்டும்.
சமத்துவத்துக்காகக் கல்வி வேறுபாடுகள்

4.1 வேறுபாடுகளை அகற்றுவதற்கும் இதுவரை சம இடம் மறுக்கப்பட்டு வந்தவர்களின் குறிப்பான தேவைகளைக் கவனிப்பதன் மூலம் கல்வி வாய்ப்புகள் சமமாக்கப்படுவதற்கும் புதிய கொள்கை சிறப்பான அழுத்தம் தரும்.

மகளிர் சமத்துவதற்கான கல்வி

4.2 மகளிர் நிலையில் அடிப்படை மாறுதலை ஏற்படுத்த கல்வி ஒரு சாதனமாகப் பயன்படுத்தப்படும். சேர்ந்துபோய் பெருகிவிட்ட கடந்த காலத்தில் ‘சமச்சீரின்மையை ஈடுகட்ட மகளிர்க்குச் சாதகமாக, தேர்ந்த சிந்தனையில் உருவான வசதியதிகரிப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும். மகளிர் கரங்களுக்கு வலுச்சேர்ப்பதில் தேசியக் கல்விக் கொள்கை ஒரு நேர்மறையான குறுக்கீட்டுப் பணியில் சிறப்பாகப் பங்களிக்கும். புனரமைக்கப்பட்ட பாடத்திட்டங்கள், பாடங்கள், ஆசிரியர்களையும் முடிவெடுப்பவர்களையும் நிருவாகிகளையும் நெறிப்படுத்தலும் பயிற்றுவித்தலும், கல்வி நிறுவனங்களையும் ஈடுபாடு காட்டச் செய்தல் ஆகிய வழிகளில் புதிய மதிப்பீடுகளின் வளர்ச்சிக்கு உதவும். இது ஒரு நம்பிக்கையின் செயல் வெளிப்பாடும் சமூகப் பொறியியல் நடவடிக்கையுமாகும். பல்துறைக் கல்விகளிலும் மகளிர் பற்றிய ஆய்வுகள் வளர்த்தெடுக்கப்படும். மகளிர் மேம்பாட்டை அதிகரிக்கக்கூடிய தீவிரத் திட்டங்களை மேற்கொள்ளுமாறு கல்வி நிலையங்கள் ஊக்குவிக்கப்படும்.

4.3 மகளிர் கல்லாமையை அகற்றவும் துவக்கக் கல்வி கிடைப்பதிலும், தக்க வைத்துக் கொள்வதிலும் குறுக்கிடும் தடைகளை அகற்றவும் தனி ஆதரவு சேவைகள், காலக்கெடு, பயனுள்ள தொடர் கண்காணிப்பு ஆகியவற்றை ஏற்பாடு செய்வதன் மூலம் உயர்ந்த பட்ச முன்னுரிமை தரப்படும். தொழிற்கல்வி, தொழில் நுட்பக் கல்வி, வேலை வாய்ப்புக் கல்வி ஆகியவற்றில் பல மட்டங்களிலும் மகளிர் பங்கு பெறுவதற்கு முதன்மை தரப்படும். தொழில் கல்வியிலும் வேலைக் கல்வியிலும் ‘இவைதான் இவர்களுக்கு’ என்ற வரையறுத்தல்களைத் தீவிரமாகக் களையவும், காலம் காலமாக மகளிர் இடம் பெறாத தொழில்களிலும், இப்போதுள்ள மற்றும் புதிதாய்த் தோன்றி வருகிற தொழில்நுட்பத் துறைகளிலும் மகளிர் பங்கு பெறுவதை வளர்க்கவும் வகை செய்யும் முறையில் பாகுபாடு காட்டாமை என்ற கொள்கை தீவிரமாகப் பின்பற்றப்படும்.

ஷெட்யூல்டு பிரிவினரின்

4.4 எல்லாப் பகுதிகளிலும் சிற்றூர் ஆண், சிற்றூர் பெண், நகர ஆண், நகர மகளிர் என்று இருக்கின்ற பரிமாணங்கள் நான்கிலும் கல்வி நிலைகள், கல்வி மட்டங்கள் அனைத்திலுமே ஷெட்யூல்டு பிரிவினரை மற்ற மக்களுடன் சமச்சீர் செய்வதே அவர்களது கல்வி மேம்பாட்டுப் பணியின் மய்யப்புள்ளி.

4.5 இதற்காக உருவாக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளில்

அ. தம் குழந்தைகளை 14 வயது வரை தொடர்ந்து பள்ளிக்கனுப்பும் வறிய குடும்பங்கட்கு ஊக்கப் பரிசுகள்.

ஆ. தோட்டித் தொழில், தோல் தொழில்கள் புரிவோரின் குழந்தை களுக்கு மெட்ரிகுலேஷனுக்கு முந்திய நிதியுதவிகளை முதல் வகுப்பிலிருந்தே வழங்குதல், வருமானம் எதுவாயிருந்தாலும் அத்தகைய குழந்தைகள் அனைவரையும் இத்திட்டத்தில் கொண்டுவருதல், அவர்கள் நலனைக் குறிவைத்து காலக்கெடு உள்ளனவாக திட்டங்களை மேற்கொள்ளுதல்.

இ. ஷெட்யூல்டு பிரிவைச் சார்ந்த குழந்தைகளின் பள்ளிச் சேர்க்கை, பள்ளியில் தொடர்தல், வெற்றிகரமாகப் படிப்பை முடித்தல் ஆகியவை எந்நிலையிலும் தாழ்வுறாது இடையறாத ஆணிவேர் மட்டத் திட்டங்களாலும் கண்காணிப்பினாலும் உறுதி செய்தல்.

ஈ. ஷெட்யூல்டு பிரிவிலிருந்து ஆசிரியர்கள் நியமனம்.

உ. படிப்படியாக ஷெட்யூல்டு பிரிவு மாணவர்களுக்கு மாவட்டத் தலைநகர்களில் விடுதி வசதிகள் ஏற்படுத்திக்கொடுத்தல்.

ஊ. ஷெட்யூல்டு பிரிவு மக்களும் முழுமையாகப் பயன்பெற வசதியாக இடங்களைத் தேர்ந்தெடுத்து பள்ளிக் கட்டடங்கள், பால்வாடிகள், முதியோர் கல்வி மய்யங்கள் ஆகியவற்றை அமைத்தல்.

எ. ஷெட்யூல்டு பிரிவினருக்கு வலுவான கல்வி வசதிகள் கிட்ட வழி செய்யும் வகையில் ஜவகர் வேலை வாய்ப்புத் திட்ட வளங்களைப் பயன்படுத்துதல்.
ஏ. கல்வியில் ஷெட்யூல்டு பிரிவினர் பங்கெடுப்பதை வளர்ப்பதற்காக புதுப்புது வழிகளைக் கண்டுபிடிப்பதில் இடைவிடாத புதுமை முயற்சிகள்.

பழங்குடியினரின் கல்வி

4.6 பழங்குடியினரை மற்றவர்களுடன் சரிநிகர் சமானமாக ஆக்கப் பின்வரும் அவசர நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

அ. பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளில் துவக்கப் பள்ளிகள் திறக்க
முன்னுரிமை அளிக்கப்படும். பொதுவாகக் கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியிலிருந்து மட்டுமின்றி, ஜவகர் வேலை வாய்ப்புத் திட்டம் பழங்குடியினர் நல்வாழ்வுத் திட்டம் போன்றவற்றின் நிதியிலிருந்தும், முன்னுரிமை தந்து, இப்பகுதிகளில் பள்ளிக் கட்டடங்கள் கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

ஆ. பழங்குடியினரின் சமூக பண்பாட்டியல் பின்னணிகள்: பல சமயங்களில் அவர்களின் சொந்த பேச்சு மொழிகள் உள்பட _ தனித் தன்மைகள் கொண்டவை. இது பாடங்களையும், கல்விக் கருவிகளையும் ஆரம்பக் கட்டத்தில் அவர்களின் பேச்சு மொழிகளில் வடிவமைத்து, பிறகு வட்டார மொழிக்கு மாற்றிக்கொள்ள வழிவகைகள் செய்ய வேண்டியதன் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டு கிறது.

இ. படித்த பிரகாசமான பழங்குடி இளைஞர்களுக்குத் தங்கள் பகுதிகளில் ஆசிரியப் பணியில் சேர ஊக்கமும் பயிற்சியும் அளிக்கப்படும்.

ஈ. ஆசிரமப் பள்ளிகள் உள்பட, வசிக்க வசதி கொண்ட பள்ளிகள் அதிக அளவில் நிறுவப்படும்.

உ. அவர்களது தனித் தேவைகளையும் வாழ்க்கை முறையையும் கவனத்தில் கொண்டு பழங்குடியினருக்கான ஊக்கப் பரிசுத் திட்டங்கள் வடிவமைக்கப்படும். உயர்கல்விக்கான உதவித்தொகைத் திட்டங்களில் தொழிற்கல்வி, தொழில் சார் கல்வி, தொழில் நுட்பக் கல்வி, ஆகியவற்றுக்கு அழுத்தம் தரப்படும். குறை நிவர்த்திக்கும் சிறப்பு வகுப்புகள், மற்ற திட்டங்கள்மூலம் சமூக –  மனவியல் தடைகளை உடைத்துக்கொண்டு அவர்கள் பலதுறைக் கல்வியிலும் தேர்ச்சி பெறுவதற்கு உதவப்படும்.

ஊ. அங்கன்வாடி, முறைசாராக் கல்வி மய்யங்கள், முதியோர் கல்வி மய்யங்கள் ஆகியவற்றில் பழங்குடியினர் பிரதானமாக வசிக்கும் பகுதிகளுக்கு முன்னுரிமை தரப்படும்.

எ. பழங்குடி மக்களின் வளமான பண்பாட்டு மரபுகளையும், அவர்களது ஏராளமான படைப்புத் திறன்களையும் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்வியின் எல்லா நிலைகளிலும் பாடங்கள் வடிவமைக்கப்படும்.

கல்வியில் பிற்படுத்தபட்ட பிற பிரிவினரும் பிற இடங்களும்

4.7 கல்வியில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அனைவருக்கும்- குறிப்பாக நாட்டுப்புறத்து மக்களுக்கு  உரிய வகையில் ஊக்கப் பரிசுகள் ஏற்படுத்தப்படும். மலையக  பாலைநில மாவட்டங்கள், தொலைதூரப் பகுதிகள், போக்குவரத்து வசதிக் குறைவான பகுதிகள், தீவுகள் ஆகிய பகுதிகளுக்கும் போதுமான நிறுவனக் கட்டுமானங்கள் ஏற்படுத்தப்படும்.

சிறுபான்மையினர்

4.8 சில சிறுபான்மை இனங்கள் கல்வியைப் பொறுத்தவரை வசதியற்றவைகளாகவோ_ பிற்படுத்தப்பட்டனவாகவோ உள்ளன. சமூக நீதியும் சமத்துவமும் பேணப்பட வேண்டுமென்ற வகையிலே இவ்வினங்களின் கல்வியில் இன்னும் அதிக கவனம் செலுத்தப்படும். தமது சொந்தக் கல்வி நிறுவனங்களை நிறுவிக் கொள்ளவும் நிருவகிக்கவும் தமது மொழிகளையும் பண்பாட்டையும் பாதுகாத்துக் கொள்ளவும், அரசமைப்புச் சட்டம் தந்துள்ள உறுதிகளும் இதிலடங்கும். அதேசமயம் பாடநூல் தயாரிப்பிலும் எல்லா பள்ளிச் செயல்பாடுகளிலும், பாகுபாடின்மை கடைப்பிடிக்கப்படும். அடிப்படையில் பாடக் கூறுகளுக்கிசைந்த முறையில் பொதுவான தேசிய இலக்குகளையும் இலட்சியங்களையும் போற்றும் அடிப்படை கொண்ட ஒருமைப்பாட்டை வளர்க்கவும். இயன்ற நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்படும்.

குறைபாடுடையோர் மனக் குறைபாடுடையோர், உடல் குறைபாடுள்ளோர் எல்லாரையும் சமூகத்தின் பிற உறுப்பினர்களுடன்
சம பங்காளிகளாக இணைப்பதும், அவர்களையும் இயல்பான வளர்ச்சிக்கு தயார் செய்வதும், வாழ்க்கையைத் துணிவோடும் தன்னம்பிக்கையோடும் எதிர்கொள்ளுமாறு செய்வதும் நோக்கமாக இருக்கவேண்டும். அதற்காக பின்வரும் செயல்பாடுகள் மேற்கொள்ளப்படும்.

அ. இயன்ற இடத்தில் எல்லாம் நடக்கும் குறைபாடோ பிற எளிய குறைபாடோ கொண்ட குழந்தைகளுக்கு மற்றவர்களுடன் சேர்த்தே கல்வியளிக்கப் படும்;

ஆ. தீவிரக் குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கு, முடிந்தவரை எல்லா மாவட்டத் தலைநகரங்களிலும் விடுதியுடன் கூடிய தனிப் பள்ளிகள் ஏற்படுத்தப்படும்.

இ. குறைபாடுடைய குழந்தைகளுக்குத் தொழிற்பயிற்சி தர போதுமான ஏற்பாடுகள் செய்யப்படும்.

ஈ. ஆசிரியர் பயிற்சித் திட்டங்கள், குறிப்பாக ஆரம்பப் பள்ளி ஆசிரியருக்கானவை. குறைபாடுள்ள குழந்தைகளின் சிரமங்களை எதிர்கொள்ளப் பயிற்றுவிப்பனவாகச் சீரமைக்கப்படும்.

உ. குறைபாடுள்ள குழந்தைகளின் கல்விக்கான தற்சார்பு நிறுவனங்களின் முயற்சிகள் இயன்ற வகையெல்லாம் ஊக்குவிக்கப்படும்.
வாழ்க்கை மதிப்பீட்டுக் கல்வி

8.4 அடிப்படை மதிப்பீடுகள் சீர்கேடுற்று வருதல் குறித்து வளர்ந்து வரும் கவலையும் சமூகத்தில் எதையெடுத்தாலும் குறை சொல்லும் தன்மை பெருகி வருவதும், சமூக தார்மிக மதிப்புகளை விதைப்பதில் கல்வியை ஒரு வலுவான கருவியாக்கும் வகையில் பாடங்களில் மறுமாற்றங்கள் செய்ய வேண்டிய தேவையை மய்யத்தின் கவனத்துக்கு கொண்டு வந்திருக்கின்றன.

8.5 பண்பாட்டு அடிப்படையில் பன்முகங் கொண்ட நமது சமுதாயத்தில் கல்வியானது காலமும் இடமும் கடந்த பொது அறங்களை வளர்க்க வேண்டும். நமது மக்களின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் மய்யமாகக் கொள்ள வேண்டும். மதவெறி, மூடநம்பிக்கை, வன்முறை, விதியை நோதல், கண்மூடிப்பழக்கங்கள் ஆகியவற்றை ஒழித்துக் கட்டுவதில் அத்தகைய மதிப்பீட்டுக் கல்வி பேருதவியாயிருக்கும்.

8.6 இந்த எதிர்மறைப் பணி தவிர, மதிப்பீட்டுக் கல்வி ஆழ்ந்ததோர் நேர்மறை உள்ளடக்கம் கொண்டதுமாகும். அந்த உள்ளடக்கம் நமது மரபுகளையும் தேசிய இலக்குகளையும் உலகளாவிய இலக்குகளையும், உலகு தழுவிய பார்வையையும் அடித்தளமாகக் கொண்டது கல்வி இந்த அம்சத்துக்கு முதல் மரியாதை தர வேண்டும். ♦


1985-90களில் குழந்தைகளைக் காப்பாற்ற சட்டம் இருக்கிறதா? – முனைவர் வா.நேரு



2023 ஆகஸ்ட் 16-31,2023 

18வயதிற்கு உட்பட்ட அனைவரையும் குழந்தைகள் என்று அய்க்கிய நாடு சபை வரையறை செய்திருக்கிறது. குழந்தைப் பருவம் என்பது மகிழ்ந்து, விளையாடும் பருவம்.எதையும் கேள்விகளால் கேட்டுக் கேட்டு விளக்கம் பெற விரும்பும் பருவம். நட்புக் குழந்தைகளோடு பேசிப் பேசி மகிழ விரும்பும் பருவம். ஆனால் உலகத்தில் இருக்கும் எல்லாக் குழந்தைகளுக்கும் ஒன்று போல வாய்ப்புகள் இல்லை. வசதிகள் இல்லை.வறுமையிலும் பிணியிலும் வாடும் பல கோடி

குழந்தைகளைக் கொண்ட உலகமாக நாம் வாழும் இந்த உலகம் இப்போது இருக்கிறது.
குழந்தைகளைக் காப்பாற்றுவதற்கான பல்வேறு சட்டங்கள் உலகில் உள்ளன. 18 வயதிற்கு முன் திருமணம் செய்வது குழந்தைத் திருமணம் என்ற வகையில் உலகின் பெரும்பாலான நாடுகளில் தடை செய்யப்பட்டிருக்கிறது. மீறி குழந்தைத் திருமணம் செய்பவர்கள் மீதும், நடத்தி வைப்பவர்கள் மீதும் சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன..

இந்தியாவில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவதை தொழிற்சாலை சட்டம், 1948 மூலம் ஒன்றிய அரசாங்கம் நடைமுறைப்படுத்தியது. குழந்தைகளை வேலைக்கு அமர்த்தக்கூடாது என்பதை நடைமுறைப்படுத்தவும் கண்காணிக்கவும் (குழந்தைத் தொழிலாளர் தடுப்பு மற்றும் முறைப்படுத்துதல்) திருத்தப்பட்ட சட்டம் 2016 அமல்படுத்தப்பட்டுள்ளது.அதன்படி 14 வயது நிரம்பாத குழந்தைகளை முழு அல்லது பகுதி நேர வேலையில் அமர்த்துவதை அந்தச் சட்டம் தடை செய்கிறது. 15-18 வயது இருக்கக் கூடிய வளரிளம் பருவத்தினர் அபாயகரமான தொழிலில் அமர்த்தப்படுவதைத் தடை செய்கிறது. மேலும் மற்ற பணியிடங்களில் வேலைக்கு அமர்த்தப்படும் போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளையும் இந்தச் சட்டம் வலியுறுத்துகிறது.

1952-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சுரங்க சட்டத்தின்படி, 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே சுரங்கத்திற்குள் வேலை செய்வதற்கு அனுமதிக்கப்படுகின்றனர்..

1966-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பீடி மற்றும் சுருட்டு தொழிலாளர் சட்டம், 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளைப் பீடி மற்றும் சுருட்டுத் தொழிலில் ஈடுபடுத்துவதைத் தடை செய்கிறது.

1976-ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட கொத்தடிமை முறை ஒழிப்புச் சட்டத்தின் மூலம் குழந்தை உழைப்பிற்கு முன்பணம் கொடுப்பவரைத் தண்டனைக்குட்படுத்த முடியும். மேலும் கொத்தடிமையாக வேலை செய்யும் குழந்தைகளை மீட்கவும் முடியும்.

2012-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின்படி(Protection of Children from Sexual Offences(POCSO) Act,2012), குற்றம் இழைக்கும் நபருக்குக் கடுமையான தண்டனைகள் வழங்க முடியும். குற்றம் இழைத்தவர் குழந்தையின் குடும்பத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் தண்டனை உண்டு என்று போக்சோ சட்டம் வரையறை செய்திருக்கிறது. இன்று நிறைய ஊடகங்களில், செய்தித்தாள்களில் பேசப்படும் சட்டமாக இந்தப் போக்சோ சட்டம் இருக்கிறது.

ஆனால் மத நம்பிக்கை அடிப்படையில் உடல் அளவில் காயப்படுத்தப்படும்,மனதளவில் ஊனப்படுத்தப்படும் குழந்தைகளைக் காப்பாற்றுவதற்கான சட்டம் உள்ளதா? என்று நினைக்கிறபோது வேதனைதான் மிஞ்சுகிறது.

கடந்த வாரம் நிகழ்ந்த ஒரு நிகழ்வு _செய்தித்தாளில் வந்த செய்தி: ”திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த அரும்பாக்கம் பகுதியில் வசிப்பவர் ராஜா.
ராஜாவின் மாமனார் ராஜேஷ் என்பவர் கடந்த ஜூலை 30-ஆம் தேதி(ஆடி மாதம் 1-ஆம் தேதி) காப்பு கட்டி விரதம் இருந்து வந்த நிலையில்,தனது வேண்டுதலை நிறைவேற்றும் வண்ணம் திரவுபதி அம்மனுக்கு ஆடி மாதம் பத்தாம் நாள் இரவில் தீக்குண்டம் இறங்க முடிவு செய்துள்ளார். அப்போது தனது பேத்தியான ஒரு வயது பெண் குழந்தை தர்ணிஜாவைத் தூக்கிக் கொண்டு தீக்குண்டத்தில் இறங்கியுள்ளார்.

அப்போது ராஜேஷ்,கால் இடறி தீக்குண்டத்தில் குழந்தையுடன் தவறி விழுந்தார். ராஜேக்கு கை, கால் முட்டி பகுதியில் தீக்காயம் ஏற்பட்டது. குழந்தை
தர்ணிஜாவுக்கு முதுகுப்பகுதியில் தீக்காயம் ஏற்பட்டது. அதுவும் குழந்தைக்கு 36 சதவிகித தீக்காயம் ஏற்பட்டுள்ளது’’ என்று அந்தச் செய்தி சொல்கிறது.

குழந்தைகளைப் பாலியல் ரீதியாக துன்புறுத்துவதைக் கண்டுபிடிக்க, குழந்தை-களுக்கு நல்ல தொடுதல் (Good touch), கெட்ட தொடுதல் (Bad touch) பற்றி கல்விக்கூடங்களில் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று கூறுகிறோம். விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கூறுகின்றோம்.மத அடிப்படையில் குடும்பத்தினர் தாங்கள் கொடுமைப்படுத்துகிறோம் என்று அறியாமலேயே குழந்தைகளைக் கொடுமைப்படுத்துவதைத் தடுப்பதற்கு எப்படி நாம் கல்விக்கூடங்களில் சொல்லிக் கொடுக்கப் போகிறோம்?

அறிவியல் சாதனங்கள் அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும். ஏன், எதற்கு, எப்படி என்னும் கேள்வியை எழுப்ப வேண்டும். மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஆனால் அறிவியல் சாதனங்களான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பெரும்பாலும் மூட நம்பிக்கையைப் பரப்பும் சாதனங்களாக இருக்கின்றன. தீக்குண்டத்தில் இறங்குதல் போன்ற நிகழ்ச்சிகளை (லைவ் டெலிகாஸ்ட்) நேரடி ஒளிபரப்புகளாக ஒளிபரப்புகிறார்கள்.சில ஆன்மிகப் பேச்சாளர்கள் பலர் கொடுக்கும் தொகைக்கு மேலேயே தங்கள் திறமையை எல்லாம் கொட்டி மூட நம்பிக்கைகளைப் பரப்புகிறார்கள்.

சிறு குழந்தைகளை விரதம் என்னும் பெயரில் நாள் முழுவதும் பட்டினி போட்டு ,மாலையைப் போடு என்று சொல்லி பள்ளிக்குப் போகவிடாமல் தடுத்து,விடுமுறை எடுக்கச்சொல்லி வழிபாட்டுத் தலங்களுக்கு அழைத்துச்செல்லும் நிகழ்வுகள் அதிகரிக்க ஆரம்பித்திருக்கின்றன. இது ஒரு வகையான நோய். இது பழைமைவாதத்தை நோக்கிச்செல்லும் செயல்பாடு.

கல்வியை, அமைதியைக் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும். பெண் குழந்தைகளுக்குக் கல்வியைக் கொடுக்காதே என்னும் குரல் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாடுகளில் பழைமைவாதிகளின் குரலாக இருக்கிறது. படிக்க விரும்பிய பெண் குழந்தை மலாலா பாகிஸ்தானில் மத பழைமைவாதிகளால் சுடப்பட்டு,காயம்பட்ட கொடுமையை நாம் அறிவோம்.

குழந்தைகள் பாதிக்கப்படுவதைத் தடுக்க பல்வேறு சட்டங்களை இயற்றும் அரசுகள் மதரீதியிலான கொடுமைகளைத் தடுக்கவும் சட்டங்கள் இயற்றவேண்டும்.
நம்பிக்கை என்று சொல்லி குழந்தைகளைத் துன்புறுத்தும்,காயப்படுத்தும் செயல்கள் நடப்பதற்கு அரசாங்கம் அனுமதிக்ககூடாது, அதனைத் தடுப்பதற்கு ஒரு பக்கம் அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் விழிப்புணர்வுக் கூட்டங்களை அரசாங்கமே நடத்திட வேண்டும்.
மறுபக்கம் சட்டப்படி தடுப்பதற்கான சட்டங்களை இயற்றிடவும் முன்வரவேண்டும். ♦


ஞாயிறு, 16 ஜூன், 2024

வியன்னா பிரகடனமும் நடவடிக்கைத் திட்டமும்-(சென்ற இதழ் தொடர்ச்சி…)


2024 கட்டுரைகள் ஜுன் 1-15 2024

19. சிறுபான்மையினர், உரிமைகளைப் பேணுவது-பாதுகாப்பது ஆகியவற்றின் முக்கியத்துவம், அப்படிப் பேணுவதும் பாதுகாப்பதும் அவர்கள் வாழும் நாடுகளின் சமூக – அரசியல் உறுதிப்பாட்டுக்குச் செய்யும் பங்களிப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, அத்தகைய சிறுபான்மையினர் சகலவித மனித உரிமைகளையும் அடிப்படை சுதந்திரங்களையும் எவ்விதப் பாகுபாடுமின்றியும் சட்டத்தின் முன் முழு சமத்துவ அடிப்படையிலும் முழுமையாகவும் பயனுள்ள வகையிலும் அனுபவிப்பதை உறுதிசெய்ய வேண்டிய கடப்பாடு அரசுகளுக்கு இருப்பதை இம்மாநாடு உறுதியிட்டுரைக்கிறது.

தம்முள்ளும், வெளியிலும், சுதந்திரமாகவும், குறுக்கீடோ, எந்த வகையான பாகுபாடுகள் இன்றியும் தமது சொந்தக் கலாச்சாரத்தை அனுபவிக்கவும், தமது மதத்தை நம்பவும், அதைக் கடைப்பிடிக்கவும், தமது மொழியைப் பயன்படுத்தவும், சிறுபான்மையினருக்கு உரிமை உண்டு.

20. சமூகத்தின் மேம்பாட்டுக்கும் பன்முக அமைப்புக்கும், ஆதிக் குடிகள் ஆற்றியுள்ள தனித்தன்மை கொண்ட பங்களிப்பையும் அவர்களின் உள்ளார்ந்த கண்ணியத்தையும் அங்கீகரிக்கும் இம்மாநாடு அவர்களது பொருளாதார, சமூக, கலாச்சார நலவாழ்வுக்கும் நிலைகுலைக்காத மேம்பாட்டின் பயன்களை அவர்களும் துய்ப்பதற்கும் உலக சமுதாயத்துக்குள்ள கடப்பாட்டினை மீண்டும் உறுதி செய்துரைக்கிறது. சமூகத்தின் சகலதுறை நடவடிக்கைகளிலும், குறிப்பாக அவர்கள் சம்பந்தப்பட்டவற்றில், அத்தகைய மக்கள் முழுமையாகவும், தடைகளின்றியும் பங்கெடுப்பதை இவ்வரசுகள் உறுதி செய்யவேண்டும். ஆதிக் குடிகளின் உரிமைகளைப் பேணுவது பாதுகாப்பது ஆகியவற்றின் முக்கியத்துவம், வாழும் நாடுகளின் சமூக-அரசியல் உறுதிப்பாட்டுக்குச் செய்யும் பங்களிப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, ஆதிக் குடிகளின் அனைத்து மனித உரிமைகள், அடிப்படைச் சுதந்திரங்கள் ஆகியவற்றுக்கான மதிப்பினை, பாகுபாடு ஏதுமின்றி சமத்துவ அடிப்படையில் உறுதி செய்யவும் அவர்களது தெள்ளத்தெளிவான தனி அடையாளங்கள், பண்பாடுகள், சமூக அமைப்பு ஆகியவற்றின் பன்மைப் பாங்கையும் மாண்பையும் மதிப்பதை உறுதி செய்யும் வகையில் சர்வதேசச் சட்டத்துக்கிணங்க உறுதியான நேர்மறை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

22. மாற்றுத் திறனாளர்கள் பாகுபடுத்தப்படாமல் எல்லா மனித உரிமைகளையும் அடிப்படைச் சுதந்திரங்களையும் சமமாக அனுபவிப்பதையும் சமூக வாழ்வின் எல்லா நடவடிக்கைகளிலும் அவர்களும் தீவிரமாகப் பங்கெடுப்பதையும் உறுதி செய்ய சிறப்புக் கவனம் செலுத்தப்படுவது தேவையாய் உள்ளது.

23. எல்லாருக்கும், எவ்விதப் பாகுபாடுமின்றி, துன்புறுத்தப்படுவதிலிருந்து தப்ப வேற்றுநாடுகளில் அடைக்கலம் கோரவும், அடைக்கலம் கிடைத்தால் அதை ஏற்றுக் கொள்ளவும் தன் தாயகம் திரும்புவதற்கும் உள்ள உரிமைகளை இம்மாநாடு மீண்டும் உறுதியிட்டுரைக்கிறது… மனிதர்களைப் புலம்பெயர்ந்து செல்லவைக்கும் பலவிதமான காரணங்களில், போர் உட்பட பல சமயங்களில் நிகழ்கிற கொடூரமான மனித உரிமை மீறல்களும் அடங்கும்.
இந்த மாநாடு, உலகு தழுவிய அளவில் ஏற்படுகிற அகதிகள் பிரச்சினைகளின் சிக்கலான அம்சங்களைக் கருதியும் அய்.நா. அமைப்புத் திட்டத்துக்கிணங்கவும் இதுபற்றிய பன்னாட்டு ஆவணங்கள், பன்னாட்டு வலுவான ஒற்றுமை ஆகியவற்றுக்கிணங்கவும், சுமைகளைப் பங்கிட்டுக் கொள்ளும் சீரிய உணர்வில் உலக சமுதாயம் இத்துறையில் ஒரு முழுமையான விரிவான அணுகுமுறையை உருவாக்க வேண்டும். சம்மந்தப்பட்ட நாடுகளின் ஒத்துழைப்பு கூட்டுறவு, இவற்றுடன் இதில் அக்கறையுள்ள நிறுவனங்களின் கூட்டுறவு ஒத்துழைப்பு ஆகியவையும் இதற்குத் தேவைப்படும். அகதிகள் பற்றிய அய்.நா. உயர் ஆணையர் முடிவுகளையும் மனதில் இருத்தி அந்த அணுகுமுறை தயாரிக்கப்பட வேண்டும் அய்.நா. அமைப்புத்திட்டத்துக் கிணங்கவும், மனித நேயச் சட்டத்தின் கோட்பாடுகளுக்கிணங்கவும், எல்லாவித இயற்கை நாசங்கள், மனித நடவடிக்கைகள் விளைவான நாசங்கள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மனித நேய உதவி கிட்ட வேண்டியதன் அவசியத்தையும் முக்கியத்தையும் இம்மாநாடு மேலும் அழுத்தமாகக் குறிப்பிடுகிறது.

24. வேலைக்காக நாடுவிட்டு நாடு போகும் புலம்பெயர் தொழிலாளர்கள் உட்பட தற்பாதுகாப்பு வலுவற்றவர்களாக ஆக்கப்பட்டுவிட்ட குழுக்களைச் சேர்ந்த மக்களின் மனித உரிமைகளைப் பேணுவதற்கும் பாதுகாப்பதற்கும் அதிமுக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும். அவர்களுக்கு எதிரான அனைத்து வகைப் பாகுபடுத்தல்களும் ஒழிக்கப்பட வேண்டும். நடைமுறையிலுள்ள மனித உரிமை ஆவணங்கள் அதற்கேற்ப வலுப்படுத்தப்பட்டு பயனுள்ள வகையில் செயல்படுத்தப்பட வேண்டும்….

25. இந்த மாநாடு தீவிர வறுமையும் சமூகப் புறக்கணிப்பும் மனித மாண்புக்கு அத்துமீறல் என்றும் தீவிர வறுமைபற்றியும் அதன் காரணங்கள் குறித்தும் அறிய அவசர நடவடிக்கைகள் தேவை என்றும், அதில் மேம்பாடு பற்றிய சிக்கல்கள் பற்றியும் அறியப்பட வேண்டுமென்றும் எடுத்துரைக்கிறது. இவற்றின் நோக்கம் அந்த ஏழை மனிதர்களின் மனித உரிமைகளையும் பேணுதலும் தீவிர வறுமைக்கும் சமூகப் புறக்கணிப்புக்கும் முற்றுப் புள்ளிவைப்பதும் சமூக முன்னேற்றத்தின் பலன்களை அவர்களும் சுவைக்கச் செய்வதுமாய் அமைய வேண்டும். அரசுகள் அத்தகையோரும் தாம்வாழும் சமுதாயத்தில் முடிவுகள் எடுக்கும் பொறுப்புகளில் பங்குபெற வகைசெய்து, மனித உரிமைகளைப் பேணி, தீவிர வறுமைக்கு எதிராகப் போர் தொடுக்க வேண்டும்.

28. ஒட்டுமொத்த மனித உரிமை மீறல்களை அதுவும் கூண்டோடு கைலாசமனுப்பும் இனக்கொலை, போர்க்காலக் கற்பழிப்புகள், ‘இனத்தையே சுத்தம் செய்தல்’, மந்தை மந்தையாய் மக்களைப் புலம்பெயர்ந்தோடும் அகதிகளாக்கல் போன்ற பாதகங்கள் கண்டு இம்மாநாடு மனம் பதறுகிறது. அத்தகைய அருவருப்பூட்டும் செயல்களை வன்மையாகக் கண்டிக்கும், அதே சமயம் அத்தகைய பாதகம் செய்யும் பாவியர் தண்டிக்கப்பட வேண்டும், அச்செயல்கள் உடனடியாக நிறுத்தப்படவேண்டுமென்றும் மீண்டும் அறைகூவல் விடுக்கிறது.

29. பன்னாட்டு மனித உரிமை ஆவணங்களும் சர்வதேச மனித நேயச் சட்டங்களும் விதித்துள்ள நிர்ணயிப்புகளை அலட்சியப்படுத்தி உலகின் எல்லாப் பகுதிகளிலும் தொடர்ந்து நடைபெறும் மனித உரிமை மீறல்கள் குறித்தும் பாதிக்கப்பட்டவர்களுக்குப் போதுமான, பலனுள்ள நிவாரணங்கள் கிட்டாமை குறித்தும் ஆழ்ந்த கவலையைத் தெரிவிக்கிறது…

30. உலகின் பல பாகங்களிலும் தொடர்ந்து ஒட்டுமொத்த மீறல்கள் திட்டமிட்டு நடத்தப்படுவது குறித்தும், அனைத்து மனித உரிமைகளும் முழுமையாக அனுபவிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில் சூழ்நிலைகள் உருவாக்கப்படுவது குறித்தும் இம்மாநாடு கண்டனமும் வெறுப்பும் தெரிவிக்கிறது. சித்திரவதை, மனிதத் தன்மையற்ற வகையில், கொடுமையாக அவமானகரமாக நடத்தப்படல், மனிதத் தன்மையற்ற, கொடுமையான அவமானகரமான தண்டனைகள், யதேச்சாதி காரமான-விசாரணையற்ற கொலைகள், ‘காணாமல்போதல்’ சட்டவிரோதமான கைதுகள், சகலவித இனவெறுப்பு, இனப் பாகுபாடு, நிறபேதம், வெளிநாட்டு ஆக்கிரமிப்பு, அந்நிய ஆதிக்கம், அந்நியர் வெறுப்பு, வறுமை, பசி, பொருளாதார-சமூக-கலாச்சார உரிமை மறுப்புகள், மத சகிப்பின்மை, பயங்கரவாதம், மாதர்களுக்கெதிரான பாகுபாடுகள், சட்டத்தின் ஆட்சியின்மை ஆகியவை இத்தகைய அத்து மீறல்களில் வரும்.

31. சர்வதேசச் சட்டத்துக்கும் அய்.நா. அமைப்புத் திட்டத்துக்கும் ஒத்துவராத, அரசுகளுக்கிடையான வணிக உறவுக்கு முட்டுக்கட்டையிடுகிறதும், மனித உரிமைகள் பற்றிய சர்வ தேசியப் பிரகடனமும், சர்வதேச மனித உரிமை ஆவணங்களும் முழங்கும் மனித உரிமைகள் (அனைவருக்கும்) கிட்டுவதைத் தடை செய்வது, குறிப்பாக, உணவு-உறையுள், மருத்துவ வசதி மற்றும் தேவையான சமூக வசதிகள் முதலிய சுகாதாரத்துக்கும் நல்வாழ்வுக்கும் போதுமான வாழ்க்கைத் தரம் எய்துவதற்கான உரிமையைப் பாதிக்கின்ற எந்தவித நடவடிக்கையையும் ஒருதலையாக எடுக்கலாகாதென்று இம்மாநாடு அரசுகளை வேண்டுகிறது. அரசியல் கட்டாயங்களுக்கு உணவை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தக்கூடாது என்றும் வலியுறுத்துகிறது.

32. மனித உரிமைப் பிரச்சினைகளை அணுகுவதில், நேரிய நோக்கும், உலகளாவிய பார்வையும், ‘சிலவற்றை கண்டு கொள்ளாமல் விடுகிற’ பாகுபாடின்மையும் முக்கியம் என்பதை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

33. சர்வதேச மனித உரிமைப் பிரகடனத்திலும், பொருளாதார- சமூக-கலாச்சார உரிமைகள் பற்றிய பன்னாட்டு உடன்படிக்கையிலும், இன்னும் பிற பல பன்னாட்டு ஆவணங்களிலும் கூறப்பட்டிருப்பதுபோல் மனித உரிமைகளையும் அடிப்படைச் சுதந்திரங்களையும் மதிப்பதை வலுப்படுத்துவதுதான் கல்வியின் நோக்கமாயிருப்பதற்கு உறுதியளிக்க அரசுகள் கடமைப்பட்டுள்ளன என்று இம்மாநாடு உறுதியாய்க் கூறுகிறது. மனித உரிமைக்கல்வியைக் கல்வித்திட்டத்தில் இணைப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் இம்மாநாடு அதனைச் செய்யுமாறு அரசுகளையும் வற்புறுத்துகிறது. நாடுகளுக்கிடையிலும் பல்வேறு மதங்களுக்கிடையிலும் இனங்களுக்கிடையிலும் புரிதலும் பொறுத்துக்கொள்ளுதலும், சமாதானமும் நட்புறவும் பரவ கல்வி உதவவேண்டும். இதற்கான அய்.நா. நடவடிக்கைகள் ஊக்குவிக்கப்பட வேண்டும். எனவே, மனித உரிமை பற்றிய கல்வியும், கொள்கை – நடைமுறை இரண்டு தளத்திலுமான இது பற்றிய தகவல்களைப் பரப்புதலும், இனம், பால், மொழி மதம் என்ற எந்த வேறுபாடுமின்றி மானிடர் யாவருக்கும் மனித உரிமைகள் பேணப்படுவதிலும் மதிக்கப்படுவதிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. தேசிய அளவிலும் சர்வதேசிய அளவிலும் கல்விக் கொள்கைகள் இவற்றைப் பிரதிபலிக்க வேண்டும். ஆனால் இந்நோக்கங்கள் உடனடியாக எய்தப்பட நிதிப் பற்றாக்குறையும் நிறுவன ரீதியான பற்றாக் குறைகளும் தடையாயிருக்கும் என்பதையும் இம்மாநாடு உணர்கிறது.

36. குறிப்பாக அதிகாரமுள்ள இடங்களில்இருப்பவருக்கு அறிவுரை கூறும் பொறுப்பு மூலமும் மனித உரிமை மீறல்களுக்கு நிவாரணமளிப்பதன்மூலமும் மனித உரிமை குறித்த தகவல் பரப்புதல் மூலமும், மனித உரிமைக்கல்விப் பணி மூலமும் தேசிய நிறுவனங்கள் மனித உரிமைகள் பேணப்படவும் பாதுகாப்புப் பெறவும் ஆற்றிவரும் ஆக்கப்பூர்வமான பணிகளின் முக்கியத்துவத்தை இம்மாநாடு மீண்டும் உறுதிபடக் குறிப்பிடுகிறது.
“தேசிய நிறுவனங்களின் அந்தஸ்து பற்றிய கோட்பாடுகளுக்கு உரிய மதிப்புக்கொடுத்து இம்மாநாடு தேசிய நிறுவனங்கள் நிறுவப்படுவதையும் வலுவூட்டப்படுவதையும் ஊக்குவிக்கிறது. தேசிய அளவில் தத்தம் தேவைகளுக்கேற்ப எது தேவையோ அத்தகைய கட்டுமானத்தை அத்தகைய நிறுவனங்களுக்கு ஏற்படுத்த அரசுகளுக்கு உரிமை இருப்பதையும் மாநாடு ஒப்புக்கொள்கிறது.


மகளிருக்கான அய்.நா. உடன்படிக்கை

விழிப்புணர்வு –  

2023 கட்டுரைகள் ஜூன் 16-30,2023

மகளிருக்கு எதிரான அனைத்து பாகுபா டுகளையும் ஒழிப்பதற்கான உடன்படிக்கை
அய்.நா. பொதுச்சபையால் 18.2.1979 அன்று ஏற்கப்பட்டு 3.9.1981 அன்று நடைமுறைக்கு வந்த இவ்வுடன்படிக்கையின் சில பகுதிகள் கீழே தரப்படுகின்றன.

இவ்வுடன்படிக்கையில் சேரும் அரசுகள்,-அய்.நா. அமைப்புத் திட்டம், அடிப்படை மனித உரிமைகளிலும், மனிதப் பிறவியின் மதிப்பிலும், மாண்பிலும், ஆணும் பெண்ணும் சமவுரிமை கொண்டவர்கள் என்பதிலும் நம்பிக்கையை உறுதி செய்வதைக் கவனத்தில் கொண்டும்.

-அய்.நா. சர்வதேசிய மனித உரிமைப் பிரகடனம் “பாகுபாடு காட்டுதல் அனுமதிக்கப் படக்கூடியதல்ல’’ என்ற தத்துவத்தை அழுத்திக் கூறுவதையும், மானிடர் யாவரும் சுதந்திரமாய்ப் பிறந்தவர்; உரிமைகளிலும் மதிப்பிலும் சமமானவர்கள் என்றும், பால் வேறுபாடு உள்பட எவ்விதப் பாகுபாடுமின்றி அப்பிரகடனத்தில் குறிக்கப்பெறும் உரிமைகளுக்கும் சுதந்தி ரங்களுக்கும் ஒவ்வொரு மனிதரும் பாத்தியப் பட்டவர் என்றும் முழங்குவதைக் கவனத்தில் கொண்டும், _பன்னாட்டு மனித உரிமைகள் உடன்படிக்கையில் இணைந்த நாடுகளுக்கு, எல்லா ஆடவரும் மகளிரும் பொருளாதார, சமூக, கலாச்சார, குடிமை பற்றிய, அரசியல் உரிமைகளையும் சமமாக அனுபவிக்க உரிமை கொண்டிருப்பதை உறுதி செய்யும் கடமை இருப்பதைக் கவனத்தில் கொண்டும்,

-அய்.நா.வின் கீழாகவும் சிறப்புத்துவம் பெற்ற அமைப்புகளின் கீழும் ஆண்-பெண் சமவுரிமையைப் பேணும் பன்னாட்டு உடன்படிக் கைகளையெல்லாம் கருத்தில் இருத்தியும்,அவை நிறைவேற்றியுள்ள தீர்மானங்கள், பிரகடனங்கள் பரிந்துரைகள் ஆகியவற்றைக் கவனத்தில் கொண்டும்,

-பெண்ணுக்கெதிரான பாகுபாடு என்பது உரிமைகள் சமத்துவம், மனித மாண்புக்குரிய மரியாதை ஆகிய தத்துவங்களை மீறுகிறது. தத்தம் நாட்டில் ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக அரசியல் பொருளாதார சமூக கலாச்சார வாழ்வில் பங்களிப்பதற்கு அது ஒரு தடை அது குடும்பம் சமூகம் இரண்டின் வளமும் பெருகுவதைத் தடுக்கிறது_ தனது நாட்டுக்கும், உலகுக்கும் சேவை செய்யும் வகையில் மகளிரின் சக்திகள் முழு வளர்ச்சி பெறுவதை மேலும் சிரமமாக்குகிறது என்பதையெல்லாம் நினைவுகூர்ந்தும்,

-வறுமைச் சூழலில் மகளிருக்கு உணவு, சுகாதாரம், கல்வி, பயிற்சி, பணிவாய்ப்பு மற்றும் பலதுறைத் தேவைகளும் ஆகக் குறைவாகவே கிடைப்பதில் கவலை கொண்டும்,

-நீதியும் நேர்மையும் அடிப்படையாய் அமைந்த புதிதான சர்வதேசப் பொருளாதார அமைப்பை நிறுவுவது ஆண்_ பெண் சமத்துவத்தைப் பேணி வளர்ப்பதில் கணிசமான பங்களிப்பு செய்யும் என்று தெளிந்தும்,

-நிறப் பாகுபாடு, அனைத்துவகை இனப் பாகுபாடுகள், குடியேற்ற ஆதிக்கம், புதிய குடியேற்ற முறை ஆதிக்கம், படையெடுப்பு அந்நியர் வந்து புகல் ஆதிக்கம் செலுத்துதல், உள்நாட்டு விவகாரங்களில் பிறர் தலையீடு ஆகியவற்றை ஒழிப்பது ஆடவரும் மகளிரும் நமது உரிமைகளை முழுதாக அனுபவிக்க அவசியத் தேவை என்பதை அடிக்கோடிட்டும்,

-சர்வதேச சமாதானமும் பாதுகாப்பும் வலுப்படுத்தப்படுதல், நாடுகளிடையிலான இறுக்கம் தளர்த்தப்படுதல், தம்முள் உள்ள பொருளாதார சமூக அமைப்பு வேறுபாடுகளைத் தாண்டி எல்லா நாடுகளிடையும் கூட்டுறவு, பொதுவான முழு ஆயுதக் குறைப்பு_ அதிலும் கடுமையான, சக்தி வாய்ந்த சர்வதேசக் கட்டுப்பாட்டின் கீழான அணுஆயுதக் கட்டுப்பாடு, நாடுகளுக்கிடையிலான உறவில் நியாயம், சமத்துவம், பரஸ்பர உதவி என்ற கோட்பாடுகள் பிரமாணமாகக் கொள்ளப்படுதல், அந்நியர் புகுந்த நாடுகள், காலனியாதிக்க அந்நியராதிக்க நாடுகள் ஆகியவற்றின் மக்களுக்கு சுயநிர்ணய உரிமையும் விடுபடும் உரிமையும் கைவசமாதல், தேசிய இறையாண்மையும் எல்லை ஒருமைப் பாடும் மதிக்கப்படுதல் ஆகியவை சமூக முன்னேற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் வகை செய்ய, அதன் விளைவாக ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானமாதல் நிறைவேறவும் உதவும் என்பதை உறுதி செய்தும்,

-ஒருநாட்டின் முழுமையும் நிறைவுமான வளர்ச்சிக்கும், உலக நன்மைக்கும், சமாதானத் துக்கும், ஆணுக்கு முற்றிலும் இணையாகப் பெண்ணும், அனைத்துத் தளங்களிலும் பங்களிப்பது தேவை என்று தெளிந்தும்,

-குடும்ப நன்மைக்கும் சமூக வளர்ச்சிக்கும் பெண் தந்திருக்கும் உன்னதப் பங்களிப்பு இன்னமும் முழுதாய் அங்கீகரிக்கப்படாததும் தாய்மையின் சமூக முக்கியத்துவம் குடும்பத்திலும் குழந்தை வளர்ப்பிலும் பெற்றோர் இருவரின் பங்கு ஆகியவற்றை நெஞ்சில் இருத்தியும்,

-குழந்தை பெறுவதில் பெண்ணின் பங்கு பணி பாகுபாட்டுக்கு அடித்தளம் வகுக்கக்கூடாது, மாறாக குழந்தையை வளர்க்கும் பொறுப்பில் ஆண், பெண் மொத்த சமூகமுமே ஒரு பங்கெடுத்துக்கொள்ள வேண்டியது தேவை என்று புரிந்துகொண்டும்,

-மகளிருக்கெதிரான பாகுபாடுகளை ஒழிப்பது பற்றிய பிரகடனத்தில் பொதிந்துள்ள தத்துவங் களை நடைமுறைப்படுத்தவும், அதற்காக, எல்லா வகையான, எந்த உருவிலுமான அத்தகைய பாகுபாடுகளையும் ஒழிக்கத் தேவைப்படுகின்ற நடவடிக்கைகளை எடுக்கவும் உறுதி பூண்டும்,

கீழ்க்கண்டவற்றில் ஒன்றுபட ஒப்புக்கொள்கின்றன.

பகுதி 1

விதி 1

இந்த உடன்படிக்கையைப் பொறுத்தமட்டில் ‘பெண்ணுக்கெதிரான பாகுபாடு’ என்பது அரசியல், பொருளாதார, சமூக, கலாச்சார, குடியியலிலான அல்லது வேறெந்த விதமான அடிப்படை சுதந்திரங்களையும், மனித உரிமைகளையும் திருமணமாகியிருந்தாலும் இல்லாவிட்டாலும் ஆண் – பெண் சமத்துவ அடிப்படையில் பெண் அனுபவிப்பதையோ, பயன்படுத்துவதையோ அங்கீகரிப்பதையோ, தடுக்கும் அல்லது மறுக்கும் நோக்கத்துடனோ அல்லது தடையையோ மறுதலிப்பையோ ஏற்படுத்தக்கூடியதாகவோ பால் அடிப்படையில் செய்யப்படும் வேறுபடுத்தல், புறமாக்குதல், கட்டுப்படுத்தல், அனைத்தினையும் குறிக்கும்.

விதி 2

இவ்வுடன்படிக்கையில் இணையும் அரசுகள் பெண்ணுக்கெதிரான பாகுபாட்டை ஒழிக்க ஒரு கொள்கையை தக்க வகைகளனைத்திலும் தாமதிக்காமல் பின்பற்ற ஒப்புக்கொண்டு, அந்தக் குறிக்கோளுக்காக,

அ. இதுவரை சேர்க்கப்படாதிருந்தால், தமது நாட்டு அரசியலமைப்புச் சட்டத்திலோ அல்லது தகுந்த பிறிதோர் சட்டத்திலோ, ஆண்_ பெண் சமத்துவ தத்துவத்தை பொறிக்கவும், சட்டத்தின்மூலமும் உரிய பிறவழிகளிலும் அதனை நடைமுறையில் கைவரப்பெறச் செய்யவும்.

ஆ. பெண்ணுக்கெதிரான பாகுபாடு அனைத்தையும் தடைசெய்து தக்க சட்ட நடவடிக்கைகளும் பிறநடவடிக்கைகளும், தேவைப்படும் இடங்களில் பாகுபாடு செய்வோர்க் கெதிரான தடைகளும் மேற்கொள்ளவும்.

இ. பால் சமத்துவ அடிப்படையில் பெண் களின் உரிமைகளுக்கு சட்டப் பாதுகாப்பை நிறுவவும் தகுதி பெற்ற தேசிய தீர்வாணையங்கள் மூலமும் பிற பொது அமைப்புகள் மூலமும் எவ்விதப் பாகுபாட்டுச் செயலிலிருந்தும் பயனுள்ள பாதுகாப்பை உறுதி செய்யவும்.

ஈ. மகளிர்க்கெதிரான பாகுபாடு காட்டும் எந்தச் செயல் எந்தப் பழக்கத்திலிருந்தும் விலகவும், பொது நிறுவனங்களும், ஆளும் அமைப்புகளும் இக்கடப்பாட்டுக்கேற்ப பணியாற்றுமென உறுதி செய்யவும்,

உ. எந்தத் தனியாரும், நிறுவனமும் அமைப்பும் மகளிர்க்கெதிராகப் பாகுபாடு செய்வதை ஒழிக்க பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்கவும்.

ஊ. இத்தகைய பாகுபாட்டுக்கு வகை செய்யும் பழக்கவழக்கங்கள், விதிகள், சட்டங்கள் ஆகியவற்றை மாற்றும்வண்ணம் சட்டத்திருத்தம் உட்பட பொருத்தமான நடவடிக்கைகள் அனைத்தையும் எடுக்கவும்.
எ. இத்தகைய பாகுபாட்டுக்கு வகை செய்யும் தண்டனை விதிகளை தேசிய சட்டங்களிலிருந்து அகற்றவும், உறுதியளிக்கின்றன.

விதி 3
இவ்வரசுகள் எல்லா தளங்களிலும், குறிப்பாக அரசியல், பொருளாதார, சமூக, கலாச்சாரத் துறைகளிலும் சட்டமியற்றல் உள்பட சகல தேவையான நடவடிக்கைகளும் எடுத்து ஆண்களோடு பெண்களும் சரிநிகர்சமானமாக மனித உரிமைகளையும் அடிப்படை சுதந்திரங்களையும் பயன்படுத்தவும் அனுபவிக்கவும் அவர்களுக்கு உறுதி கிடைக்கும் வகையில் அந்த நடவடிக்கைகள் அமையவும் உறுதி செய்யும்.

விதி 4

1. இவ்வரசுகள் தற்காலிகமாக ஆண்_ பெண் சமத்துவ நிலைமை நடைமுறையில் அமைவதை விரைவுபடுத்துவதற்காக எடுக்கும் சிறப்பு நடவடிக்கை எதுவும் இவ்வுடன்படிக்கையைப் பொறுத்தவரை ‘பாகுபாடு’ என்று வகைப்படுத்தப் படாது; ஆனால் அந்த நடவடிக்கைகள் எவ்விதத்திலும் சமத்துவமற்ற வெவ்வேறான தரநிர்ணங்களுக்கு வழிசெய்து சமவாய்ப்புகளும் சமமாக நடத்தப்படுதலும் என்ற நோக்கம் நிறைவேற்றப்பட்டபின் அந்த தற்காலிக நடவடிக்கைகள் நிறுத்தப்படும்.
2. இந்த உடன்படிக்கையில் காணும் நடவடிக்கைகள் உட்பட இவ்வரசுகள் தாய்மைப் பாதுகாப்புக்காக எடுக்கக்கூடிய சிறப்பு நடவடிக்கைகள் எதுவும் பாகுபாடு என்று கருதப்படாது.

விதி 5

ஆ. ஆண் தாழ்வென்றோ, பெண் தாழ் வென்றோ நம்புவதை அடிப்படையாகக் கொண்ட அல்லது ஆண் என்றால் இப்படித் தான் பெண் என்றால் அப்படித்தான் என்ற வரையறுப்புகளை நிலைப்படுத்துகிற விருப்பு வெறுப்புகள், மரபுகள், வழக்கங்கள் ஆகியவற்றை ஒழித்துக்கட்டுவதை நோக்கமாகக் கொண்டு சமூக கலாச்சார அமைப்புகளை மாற்றவும்;
ஆ. எல்லா வகையிலும் குழந்தைகள் நலன் தலையாய அம்சங்களில் ஒன்றென உணர்த்தும் வகையில், தாய்மை ஒரு சமூகக் கடமை என்பதை புரியவைப்பதாக, குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவது ஆண்_ பெண் இருபாலருக்கும் கடமை என்று உரைப்பதாகக் குடும்பக் கல்வி அமைவதை உறுதிப்படுத்தவும்; இவ்வரசுகள் உரிய நடவடிக்கைகள் அனைத்தையும் எடுக்கும்.

விதி 6

மகளிரை ஒடுக்கி நலம்பெறல், கூடாலொ ழுக்கத்தில் ஈடுபடுதல், விலைமாதர் ஆக்குதல் ஆகியவை எவ்வுருவில் அமைந்தாலும் அவற்றை ஒழிக்க சட்டமியற்றுதல் உட்பட சகலவித நடவடிக்கைகளையும் இவ்வரசுகள் எடுக்கும்.

பகுதி 2
விதி 7
அரசியலிலும் பொதுவாழ்விலும் பெண்களுக் கெதிரான பாகுபாடுகளை நீக்க பொருத்தமான அனைத்து நடவடிக்கைகளையும் அதிலும் குறிப்பாக பின்வரும் உரிமைகளை உறுதி செய்யக்கூடிய நடவடிக்கைகளையும் இவ்வரசுகளனைத்தும் மேற்கொள்ளும்:

அ. எல்லாக் கருத்துக் கணிப்புகளிலும், தேர்தல்களிலும் வாக்குரிமை, பொதுத்தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் அனைத்து பொறுப்பு களுக்கும் தேர்ந்தெடுக்கப்படும் தகுதி.

ஆ. அரசாங்கக் கொள்கைகளை நிர்ணயிப் பதிலும், நிறைவேற்றுவதிலும் பங்குபெறும் உரிமை; அரசாங்கத்தில் எல்லா நிலையிலும் பதவிகள் எதிலும் பொறுப்பேற்று அனைத்து வகை பொதுப்பணிகளும் ஆற்றவும் உரிமை.

இ. நாட்டின் அரசியலிலும் பொதுவாழ்விலும் பங்குபெறும் அரசாங்க சார்பில்லாத அமைப்பு களிலும் சங்கங்களிலும் பங்கெடுத்துக் கொள்ளும் உரிமை.

விதி 8

தத்தம் அரசாங்கத்தை பன்னாட்டு அமைப்புகளில் பிரதிநிதிப்படுத்தவும், பன்னாட்டு அமைப்புகளின் பணிகளில் பங்குபெறவும் ஆணுக்கிணையாக பாகுபாடேதுமின்றிப் பெண்கள் பணியாற்றுவதற்கு உறுதியளிக்கும் பொருத்தமான நடவடிக்கைகள் அனைத்தையும் இவ்வரசுகள் எடுக்கும்.

விதி 9

ஆண்களைப்போலவே பெண்களுக்கும் தேசியக் குடியுரிமை பெறவோ, மாற்றவோ, தக்கவைத்துக் கொள்ளவோ உரிமையளிக்கும். அந்நிய நாட்டவரை மணந்துகொள்வதோ, கணவர் தன் தேசியத்தை மாற்றிக்கொள்வதோ மனைவியின் தேசியத்தை மாற்றாது; மகளிருக்கு எதிரான பாகுபாடுகளை ஒழித்தல்…
மனைவியை நாடற்றவராக்காது; கணவரின் தேசியம் அவர்மீது திணிக்கப்படாது; என்ப வற்றை இவ்வரசுகள் உறுதிசெய்யும்.

பகுதி 3
விதி 10

கல்வித்துறையில் ஆணுக்குச் சமமாக உரிமைகளைப் பெறுவதை உறுதி செய்யும் வகையில் பாகுபாடுகளை ஒழிக்கும் எல்லாவித நடவடிக்கைகளையும் இவ்வரசுகள் மேற்கொள்ளும். அதிலும் குறிப்பாக…

அ. படிப்பு பற்றியும், கிராமங்களிலும் இருக்கக்கூடிய அனைத்துவகைக் கல்வி நிறுவனங்களிலும் பட்டம், பட்டயக் கல்வி பெறுதல் குறித்தும் வழிகாட்டும் உதவிகள் பெறுவதற்கும், பணிகள் பற்றிய வழிகாட்டுதலிலும் சமநிலை.

ஆ. அதே பாடத் திட்டம், அதே தேர்வுகள், ஒரே தகுதி பெற்ற ஆசிரியர்கள், பள்ளிகள், கருவிகள் ஆகியவற்றிலும் பாகுபாடின்மை;

இ. கல்வியில், எல்லா நிலைகளிலும் எல்லா வகைகளிலும் ஆண் என்றால் இப்படித்தான்-_ பெண் என்றால் அப்படித்தான் எனும் வகையான இறுகிப் போய்விட்ட கருதுகோள்களை விலக்கு வதற்காக ஆண்_ பெண் சேர்ந்து படிக்கும் பள்ளிகளை அதிகப்படுத்துதல், இன்னும் அது போன்ற இந்நோக்கத்துக்கேற்ற முறைகளைச் செயல்படுத்துதல் குறிப்பாக இதற்காக பாட நூல்களையும் பள்ளி நிகழ்ச்சிகளையும் மறுபரிசீலனை புரிதல், தக்க பயிற்றுமுறைகளை ஏற்படுத்தல்.

ஈ. பள்ளிச் சம்பள உதவி, மற்ற வகை கல்வி நிதியுதவிகளில் சமவாய்ப்பு,

உ. முதியோர் கல்வி உட்பட்ட பலவகை தொடர்கல்வி ஏற்பாடுகளில் சமவாய்ப்பு, குறிப்பாக ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் கல்வியில் உள்ள இடைவெளியை கூடிய அளவு விரைவாகத் தவிர்க்கக் கூடிய திட்டங்களில் வாய்ப்புகள்;

ஊ. மாணவியர் பாதியில் பள்ளியிலிருந்து நின்றுவிடுவதைக் குறைத்தல்; அத்தகைய மகளிர்க்கான நிகழ்ச்சித் திட்டங்களை உருவாக்குதல்.

எ. விளையாட்டு, உடல்நலக் கல்வி ஆகியவற்றில் சமவாய்ப்பு;

ஏ. குடும்பக் கட்டுப்பாடு பற்றிய செய்திகள் அது சார்ந்த கல்வி உட்பட குடும்பத்தின் நலம், நல்வாழ்வு ஆகியவை பற்றி அறிவுறுத்துகின்ற சிறப்பு வகைக் கல்வியைச் சார்ந்த விஷயங்கள் அவர்களை அடையச் செய்தல். அறிவுறுத்துகின்ற சிறப்புவகைக் கல்வியைச் சார்ந்த விஷயங்கள் அவர்களை அடையச் செய்தல்.

விதி 11

1. ஆணும்பெண்ணும் சமமே என்ற அடிப்படையில சமமான உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையில், இந்த அரசுகள் வேலைவாய்ப்புத் துறையில் பெண்களுக்கெதிரான பாகுபாட்டினை ஒழிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும். இந்த ‘சமமான உரிமைகள்’ என்பது குறிப்பாக_

அ. வேலைக்கான உரிமை அனைத்து மாந் தர்க்கும் மறுக்கவியலாத உரிமை என்பதையும்,

ஆ. வேலைவாய்ப்புகளில் சமத்துவம்; வேலைகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவதற்கான தகுதிகளும் ஒன்றேயாக அமைக்கப்பெறுதல் என்பதையும்,

இ. தனக்கான வேலையையோ தொழிலையோ தானே தெரிவு செய்துகொள்ள உரிமை, பதவி உயர்வு உரிமை, பணிப் பாதுகாப்பு, வேலையின் லாபங்கள், பணிமுறை நிபந்தனைகள், தொழில்முறைப் பயிற்சிகள், பெறுவதற்கான உரிமை, மறுபயிற்சி, தொழிலில் பணி செயல் பயிற்சி, உயர்நிலை பணிப் பயிற்சி, குறிப்பிட்ட கால இடைவெளியில் மீண்டும் மீண்டும் பயிற்சி பெறல் என்பனவற்றையும்,

ஈ. சமஊதியம், சமமான பிற சலுகைகள், சமமான ஊழியமெனில் கவுரமும் சமம் என்ற நிலை, வேலைத்தர நிர்ணயிப்பில் சமத்துவம் என்பவைகளையும்

உ. குறிப்பாக பணி ஓய்வுக் காலம், வேலை யில்லாக் காலம், உடல் ஊறு, நலமின்மை முதுமையாலோ முடியாமையாலோ பணி செய்ய இயலா உடல்நிலை எய்தியமை, சம்பள விடுப்பு ஆகியவை உள்ளிட்ட சமூகப் பாது காப்பு உரிமைகள் என்பனவற்றையும்,

ஊ. உடல்நலத்துக்கான பாதுகாப்பு உரிமை, பணிக்கள சூழலில் பாதுகாப்பு ஆகியவற்றையும் உள்ளடக்கியதாகும்.

2. திருமணம் காரணமாகவோ, மகப்பேறு காரணமாகவோ பாகுபாடு காட்டுவதைத் தடுக்கும் வகையிலும், மகளிரின் வேலைக்கான உரிமை பயனுள்ள முறையில் உறுதி செய்யப் படவும் இவ்வரசுகள் கீழ்க்கண்ட களங்களில் தகுந்த நடவடிக்கை எடுக்கும்.

அ. தாய்மைக் காலத்தை அல்லது தாய்மை விடுப்பைக் காரணமாக்கி வேலைநீக்கம் செய் வதைத் தடைசெய்தல், மணமான பெண்ணா மணமாகாதவரா என்ற பாகுபாடு பார்த்து பதவி நீக்கம் பற்றி தீர்மானித்தலைத் தடைசெய்வது.

ஆ. சம்பளத்துடன் அல்லது ஈடான சமூகச் சலுகைகளுடன் மகப்பேறு விடுமுறை அதிலும் பழைய பணி, அனுபவம் காரணமான முன்னிருப்பு, சமூகப் படிகளில் குறைவில்லாமல் கிடைக்கச் செய்தல்.

இ. குழந்தைகள் நல வசதிகளை ஒருங் கிணைந்த வகையில் முதன்மை தந்து நிறுவு வதும் உட்பட குடும்பப் பொறுப்பையும் கடமைப் பணிகளையும் இணைத்துச் செயல் படவும் பொதுவாழ்வில் பங்குபெறவும் தம்பதி கட்கு உதவும் படியான சமூகநல அமைப்புகளை ஏற்படுத்துதல்.

ஈ. கருவுற்றிருக்கும் காலத்தில் அவர்களுக்கு ஊறு செய்யக்கூடியதாக பணியின் இயல்பு இருந்தால் சிறப்புப் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்தல்.

3. அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி பற்றிய அறிதல்மூலம் அதற்கேற்ப இந்த விதியில் கூறப்பட்டவை தொடர்பாக முற்காப்பு சட்டங்களியற்றல், தேவைப்படின் அவற்றை மாற்றுதல், விலக்குதல், விரிவு செய்தல்.

விதி 12

1. ஆண் – பெண் சமத்துவ அடிப்படையில் குடும்பக் கட்டுப்பாடு உட்பட சுகாதார வசதிகள் எளிதில் அணுகும்படியானவையாக அமைவதை உறுதி செய்யும் வண்ணம், சுகாதார வசதிகளை பெண்களுக்கு எதிரான பாகுபாடு இல்லாதவையாக ஆக்குவதற்கான தக்க நடவடிக்கைகள் அனைத்தையும் இவ்வரசுகள் மேற்கொள்ளும்.

2. மேலே உள்ள முதல் பகுதியில் பாகு பாட்டுக்கெதிராகக் கூறப்பட்டிருப்பதும் தாய்மை, மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறல், குழந்தை பிறந்த பின்பும் வைத்தியம், பிற வசதிகளையும் இலவசமாக எங்கெங்கு தேவையோ அங்கு ஏற்படுத்தவும், கருவுற்ற காலத்தும், குழந்தை பிறந்த பின்பும் சத்துணவுக்கும் இவ்வரசுகள் உறுதி செய்யும்.

விதி 14

1. நாட்டுப்புற மகளிர்க்கென்றே குறிப் பாக உள்ள சிக்கல்கள், அவர்களுடைய குடும்பத்தின் பொருளாதார நிலையில் அவர்களது குறிப்பிடத்தக்க பங்களிப்பு ஆகியவற்றையும், அதிலும் பணத்தால் மதிப்பிட முடியாத துறைகளிலும் சேர்த்து, கணக்கில் எடுத்துக்கொண்டு இவ்வரசுகள் இவ்வுடன் படிக்கையின் விதிகளை நடை முறைப்படுத்துவதில் அவர்களும் பயனுறும் வகையில் தக்க நடவடிக்கைகளை எடுக்கும்.

2. ஆண்-பெண் சமத்துவ அடிப்படையில் கிராமிய மாதரும் கிராம வளர்ச்சியில் பங்குபெறவும் பலனடையவும் வகை செய்யும் வண்ணம் நாட்டுப்புறங்களிலும் பாபாட்டை அகற்ற இவ்வரசுகள் தக்க நடவடிக்கைகளை எடுக்கும். அவர்களுக்கு,

கீழ்க்கண்ட உரிமைகள் கிடைப்பதையும் உறுதி செய்யும்:

அ. எல்லா மட்டங்களிலும் வளர்ச்சிக்கான திட்டங்களைத் தீட்டுவதிலும் நடைமுறைப் படுத்துவதிலும் பங்கு.

ஆ. குடும்பக் கட்டுப்பாடு பற்றிய தகவல், அறிவுரை, உதவிகள், உள்பட போதுமான சுகாதார வசதிகள் எளிதாய்க் கிடைத்தல்.

இ. சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகளில் நேரடிப் பலன் பெறல்.

ஈ. தம் தொழில்நுட்ப அறிவைப் பெருக்கிக் கொள்வது உட்பட சமுதாய சேவை, விரிவாக் கப்பணிகள், அனைத்தின் நலன்களும் பெறுதல்; முறையான கல்வி, முறைசாராக் கல்வி இருவிதத்தாலும் சகலவித பயிற்சிகளும் கல்வியும்.

உ. வேலை, சுயவேலை ஆகியவை மூலம் பொருளாதார நிலையை தாமே தமக்குதவும் திட்டங்கள், கூட்டுறவு அமைப்புகள் ஆகியவற்றை (அரசுகளே) நிறுவுதல்.

ஊ. சமுதாய நடவடிக்கைகளில் பங்கேற்றல்.

எ. விவசாயக் கடன், நிதியுதவி, விற்பதற்கான ஏற்பாடுகள், உரிய தொழில்நுட்பம் நிலசீர்த்திருத்தம்_ விவசாய சீர்திருத்தம் ஆகியவற்றிலும் நில மறுபங்கீடு திட்டங்களிலும் (ஆணுக்கு) இணையாக நடத்தப்படல்.

ஏ. போதுமான வாழ்க்கைத்தர வசதிகளை அனுபவித்தல்_ குறிப்பாக உறைவிடம், சுகாதாரம், மின்சாரம், குடிநீர், போக்குவரத்து, தகவல் தொடர்பு ஆகிய களங்களில்

பகுதி 4
விதி 15

1. இவ்வரசுகள் சட்டத்தின்முன் பெண்ணுக்கு சம இடம் அளிக்கும்.
விதி 16
1. திருமணம் – குடும்ப உறவுகள் ஆகிய துறைகளில் சகல வகைகளிலும் பெண்ணுக்கெதிரான பாகுபாட்டை ஒழிக்கும் வகையில் இவ்வரசுகள் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கும். குறிப்பாக, ஆண்_ பெண் சமத்துவ அடிப்படையில் கீழ்க்கண்ட உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிக்கும்.

அ. திருமணம் செய்துகொள்வதில் ஆணுக்குள்ள உரிமை.

ஆ. தகுந்த துணையைத் தேர்ந்தெடுப்பதில் ஆணுக்குள்ள உரிமையும் சுயேச்சையான விருப்பமும், சம்மதமும் இருந்தால் மட்டுமே திருமணம் ஏற்கும் உரிமை.

இ. திருமணத்திலும், மணவிலக்கிலும் சம உரிமை_ சம பொறுப்பு.

ஈ. மணமாகி இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, மணவிலக்குப் பெற்றிருந்தாலும் சரி பெற்றோர் என்ற முறையிலும் தம் குழந்தைகள் தொடர்பாக பொறுப்பு சமத்துவமும், சமவுரிமையும் எது எப்படியாயினும் எப்போதும் குழந்தைகள் நலமே அனைத்திலும் மேலான குறிக்கோளாய் அமையும்.

உ. பொறுப்புடனும் சுதந்திரமாகவும் தனக்கு எத்தனை குழந்தைச் செல்வங்கள் வேண்டும்_ அவற்றிடையே வயது இடைவெளி எவ்வளவு என்பதையெல்லாம் தீர்மானிப்பதிலும் ஆணுக்குச் சமமான உரிமையும் இவ்வுரிமைகளைப் பயன்படுத்த வகைசெய்யும் முறையில் தகவல் கல்வி வழிமுறைகள் அவர்களுக்கு எளிதில் கிடைத்தல்.

ஊ. குழந்தைகளின் காப்பாளராதல், குழந்தைகளின் உடன்வைப்பு, அறங்காவல் நிலை, தத்தெடுத்தல் அல்லது தேசிய சட்டத்தில் இதுபோன்ற பிற ஏற்பாடுகள் இருந்தால் அவை, முதலியவற்றில் (ஆணுக்கு) இணையான அதே உரிமைகள் சம பொறுப்பும், எந்நிலையிலும் குழந்தைகளின் நலனே அனைத்திலும் உயர்ந்த முக்கியத்துவம் பெறும்.

எ. குடும்பப் பெயர் சூடுதல், தொழிலோ பணியோ தேர்ந்துகொள்ளுதல் உள்பட கணவருக்குள்ள அதே தனிநபர் உரிமைகள்.

ஏ. இலவசமாகவோ, செலவு செய்தோ சொத்துகளை அனுபவித்தல், விற்றல்-வாங்கல், உரிமையாளராய் இருத்தல், சொத்து சேர்த்தல், மேலாண்மை, நிருவாகம் அனைத்திலும் கணவன்- மனைவி இருவருக்கும் ஒரேவித உரிமை.

2. குழந்தை மணம், அதற்கான நிச்யதார்த்தம் ஆகியவற்றுக்கு சட்ட ஏற்பு கிடையாது. குறைந்த அளவு திருமண வயதைத் தீர்மானித்தும், திருமணங்கள் யாவும் அதற்கான பதிவகங்களில் பதிவு செய்யப்படுவதை கட்டாயமாக அறிவித்தும் இவ்வரசுகள் தேவையான தகுந்த சட்டங்களை இயற்றும்; பிற நடவடிக்கைகளும் எடுக்கும். ♦


கல்வியில் பாகுபாட்டுக்கெதிரான யுனெஸ்கோ உடன்படிக்கை

விழிப்புணர்வு – 

இவ்வுடன்படிக்கை யுனெஸ்கோ பொதுமாநாட்டில் 1960 டிசம்பர் 14 அன்று நிறைவேற்றப்பட்டதாகும்.

பாரிஸ் நகரில் 1960 நவம்பர் 14 முதல் டிசம்பர் 15 வரை நடந்த தனது பதினோராவது அமர்வில் அய்.நா. கல்வி – அறிவியல் கலாச்சாரக் கழகத்தின் (யுனெஸ்கோவின்) பொது மாநாடு.

மனித உரிமைகள் பற்றிய சர்வதேசியப் பிரகடனம் பாகுபடுத்தாமைக் கோட்பாட்டை உறுதி செய்வதையும் ஒவ்வொருவருக்கும் கற்கும் உரிமை உண்டென முழங்குவதையும் நினைவு கூர்ந்தும்,கல்வியில் பாகுபாடு காட்டுவது என்பது அப்பிரகடனத்தில் விளக்கப்படும் மனித உரிமைகளை மீறுவதாகும் என்பதைக் கருதியும்,யுனெஸ்கோ தனது அமைப்புச்சட்ட விதிகளின்படி, மனித உரிமைகள் மீது உலகோர் அனைவரும் மரியாதை காட்ட வைக்கவும், கல்வி வாய்ப்பில் சமத்துவம் வளர்க்கவும் உலக நாடுகளிடையே ஒத்துழைப்பு ஏற்படுத்துவது தனது நோக்கம் என்பதை எண்ணிப் பார்த்தும்,
அதன் விளைவாக, யுனெஸ்கோ, நாட்டுக்கு நாடு தேசியக் கல்வியமைப்பில் இருக்கும் வேறுபாடுகளை மதிக்கிறது.

அதே நேரத்தில், கல்வியில் எந்தவிதப் பாகுபாட்டினையும் தடைசெய்வது மட்டுமின்றி எல்லாருக்கும் கல்வித்துறையில் சம வாய்ப்புகளும் சமமாக நடத்தப்படுதலும் உருவாவதை வளர்ப்பதும் தனது கடமை என்பதை ஏற்றுக்கொண்டும்,இந்த அமர்வுக்கான நிகழ்ச்சி நிரலில் எண் 17.1.4இன் கீழ் விவாதப் பொருளாக கல்வித்துறைப் பாகுபாடுகளின் பல்வேறு அம்சங்கள் பற்றிய முன்மொழிவுகள் என்பது இடம் பெறுவதாலும்,கடந்த (அதாவது 10ஆவது) அமர்வில் இந்தப் பொருள் பற்றி ஒரு பன்னாட்டுடன்படிக்கை உருவாக்கப்பட வேண்டும் என்றும், உறுப்பு நாடுகளுக்குப் பரிந்துரை செய்யப்பட வேண்டும் என்றும் தீர்மானித்திருந்ததாலும்,

1960 டிசம்பர் 14ஆம் நாள் இவ்வுடன்படிக்கையை உருவாக்கி ஏற்கிறது.

விதி 1

1. இவ்வுடன்படிக்கையைப் பொறுத்தமட்டும், “பாகுபாடு’’ என்பது இனம், நிறம், பால், மொழி, மதம், அரசியல் அல்லது வேறு வகை சுயகருத்து, தேசிய வம்சாவழி, சமூகவழி, பொருளாதார நிலை, பிறப்பு ஆகிய எதை அடிப்படையாகக் கொண்டும் ஏற்படுத்தப்பட்டு, கல்வித்துறையில் சமமாக நடத்தப்படுவதை அழிக்கும் அல்லது பாதிக்கும் நோக்கத்திலோ, அவ்விளைவுகளை ஏற்படுத்தக்கூடியனவாகவோ உள்ள எல்லாவித பாகுபாடுகள், ஒதுக்கிவைப்புகள், குறுக்குதல்கள், முன்னுரிமைகள் ஆகியவற்றை உட்கொண்டதாகும். அதிலும் குறிப்பாக
அ. எந்த நிலையிலாயினும், எவ்வகைக் கல்வியிலும் எந்த ஒருவருக்கும் அல்லது ஒரு குழுவுக்கும் கல்வி கிடைக்காமல் செய்தல்;
ஆ. எந்தவொரு தனிமனிதருக்கோ/ குழுவுக்கோ, கல்வியைப் பொறுத்த வரையில் இந்தக் கல்வித்தரம் போதும் என்று வரையறை செய்தல்;
இ. விதி 2,ன் வாசங்கள் அனுமதிக்கிற வகையில் அல்லாது சிலருக்காகவேலீ ஒரு குழுவுக்காகவோ, குழுக்களுக்காகவோ, தனியாக
கல்வியமைப்புகளோ, கல்வி நிறுவனங்களோ உருவாக்குதல், பராமரித்தல்;
ஈ. மானிட மாண்புகளுக்கு ஒவ்வாத நிபந்தனைகளை எவர் மீதும் எக்குழுவின் மீதும் திணித்தல் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.

2. இவ்வுடன்படிக்கையைப் பொறுத்த மட்டில் “கல்வி’’ எனுஞ்சொல் கல்வியின் அனைத்து வகைகளையும், அனைத்து நிலைகளையும் குறிக்கிறது. கல்வி வாய்ப்பு, கல்வியின் தரம், எத்தகைய சூழ்நிலையில் அது தரப்படுகிறது என்பதையெல்லாமும் உள்ளடக்கியதாகும்.

விதி 2

கீழ்க்கண்ட நிலைமைகள், ஓர் அரசு அனுமதிக்கும் பட்சத்தில், இவ்வுடன் படிக்கையின் விதி 1இல் குறிப்பிடப்படும் பொருளில் “பாகுபாட்டை’’ உருவாக்குவதாகக் கொள்ளப்படமாட்டாது.
அ. ஆணுக்கும் பெண்ணுக்கும் தனித்தனிக் கல்வி முறையையோ, தனித்தனிப் பள்ளி-களையோ உருவாக்குதல், பராமரித்து வருதல் ‘பாகுபாடு’ அல்ல; ஆனால், இவை ஆணுக்கும் பெண்ணுக்கும் கல்வியை அணுக சம வாயப்பு அளிக்க வேண்டும்; ஒரே தரமும் தகுதியுமுள்ள ஆசிரியர்களே இருபாலாருக்கும் அமைய வேண்டும்; பள்ளித்தலங்களும், உபகரணங்களும் ஒரே தரத்தனவாயிருக்க வேண்டும்; எடுத்துக்கொள்ளப்படும் பாடங்களும் ஒன்றாக அல்லது இணையானவையாக இருக்க வேண்டும்.
ஆ. மதம் அல்லது மொழி காரணமாகத் தனியான கல்வி முறையோ, கல்விக்-கூடங்களோ, நிறுவுதல் _ நடத்துதல் “பாகுபாடு’’ அல்ல; ஆனால், அவை மாணவர்களுடைய பெற்றோர் அல்லது காப்பாளரின் விருப்பத்துக்கேற்ற ஒரு கல்வியை அளிப்பனவாயும், அத்தகைய முறையோ _ கல்விக்கூடமோ கட்டாய
மானதாக இருக்கக்கூடாது. அதில் சேரவோ சேராதிருக்கவோ உரிமை இருக்க வேண்டும். அங்கு அளிக்கப்படும் கல்வியும், குறிப்பாக அந்தந்த மட்டத்தில், உரிய அதிகார அமைப்புகளால் நிறுவப்பட்ட அல்லது அனுமதிக்கப்பட்ட தராதரங்களை நிறைவேற்றுவதாக இருக்கவேண்டும்.
இ. தனியார் கல்விக்கூடங்கள் நிறுவுதலும் நடத்துதலும் “பாகுபாடு’’ அல்ல; ஆனால், அந்தக் கூடங்களின் நோக்கம் எந்தக் குழுவையும் புறக்கணிப்பதாக இல்லாமல் பொதுத்துறை வழங்கும் கல்வி வசதிகளை அதிகப்படுத்துவதாக அமைய வேண்டும்; அந்தந்த மட்டத்தில் உரிய அதிகார அமைப்புகளால் நிறுவப்பட்டுள்ள அல்லது அனுமதிக்கப்பட்டுள்ள தராதரங்களுக்கு இணங்கிய கல்வியை அமைப்பதாயும் அப்படி நிறுவப்பட்டுள்ள/அனுமதிக்கப்பட்டுள்ள நோக்கங்களுக்கு இசைவாக இயங்கு-வனவாயும் இருக்க வேண்டும்.

விதி 3

இவ்வுடன்படிக்கையில் சேரும் அரசுகள் இந்த உடன்படிக்கையில் கூறப்படுகிற பாகுபாடு-களைத் தடுக்கவும், ஒழிக்கவுமான நோக்கத்தில்,

அ. கல்வியில் பாகுபாடு காட்டும் சட்டப்பகுதிகளை நிருவாக அறிக்கைகளையும் விலக்கவும், நிருவாக வழக்கங்களை நிறுத்தவும்,
ஆ. கல்விக்கூடங்களில் மாணவர்களைச் சேர்ப்பதில் பாகுபாடு இல்லை என்பதை தேவைப்பட்டால் சட்டங்களும் இயற்றி, உறுதி செய்யவும்,
இ. பள்ளிச் சம்பளம், கல்வித்தொகை, பிறவகை உதவிகள், வெளிநாடுகளில் பயிலத் தேவையான அனுமதிகளும் வசதிகளும் வழங்குதல் ஆகியவற்றில் தகுதி, தேவை இவற்றின் அடிப்படையில்லாமல் சார்ந்த தேசிய இனம் காரணமாக பொது அதிகாரிகளால் மாணவர்கள் நடத்தப்படுவதில் எந்த வித்தியாசத்தையும் அனுமதியாதிருக்கவும்,
ஈ. மாணவர்கள் ஒரு குறிப்பிட்ட குழுவினர் என்பதால் மட்டுமே பொது அதிகாரிகள் கல்விக்கூடங்களுக்கு வழங்கும் எவ்வித உதவியிலும், கட்டுப்பாடுகளோ, முன்னுரிமைகளோ காட்டப்படுவதை அனுமதியாதிருக்கவும்,
உ. தமது சொந்த நாட்டினருக்குத் தரப்படும்
அதே கல்வி வாய்ப்புகளை தமது மண்ணில் வாழும் அந்நிய நாட்டினருக்கும் அளிக்கவும் உறுதியெடுத்துக் கொள்கின்றன.

விதி 4

மேலும், இவ்வுடன்படிக்கையில் இணையும் நாடுகள் தமக்கென்று கீழ்க்கண்டவாறு ஒரே தேசியக் கொள்கையை உருவாக்கவும் வளர்க்கவும், நடைமுறைப்படுத்தவும் உறுதியெடுத்துக் கொள்கின்றன. அந்தக் கொள்கை, சூழ்நிலை-களுக்கும் தேசிய மரபுக்கும் இசைந்த வழிகளில்
கல்வித்துறையில் சமவாய்ப்புகள் தரப்படுவதையும் மாணவர்கள் சமமாக நடத்தப்படுவதையும் வளர்ப்பதாயிருக்கும். குறிப்பாக

அ. ஆரம்பக் கல்வியைக் கட்டாயமாக்கி, கட்டணமின்றி அளித்தல், எல்லாவிதமான இடைநிலைக் கல்வியும் பொதுவாக
அனைவருக்கும் கிடைக்கவும் கிட்டவும்செய்தல், அவரவர் தகுதிக்கேற்ப உயர்கல்வியும் அதேபோல் அனைவருக்கும் கிட்டச் செய்தல், சட்டம் விதிகளின்படி பள்ளிசெல்வதை ஒரு கடமையாக அனைவரும் செய்வதை உறுதிப்படுத்தல்.
ஆ. அரசுப் பள்ளிகள் அனைத்திலும், அந்தந்த நிலையில், கல்வித் தரங்கள் ஒரே மாதிரி இருத்தலையும், அளிக்கப்படும் கல்வியின் தரம் தொடர்பான நிலைமைகள் சமமாக இருத்தலையும் உறுதி செய்தல்.
இ. ஆரம்பக்கல்வி பெற்றிராதவர்களின் கல்வியையும் ஆரம்பக் கல்வியை முழுதாக முடிக்காதவர்களின் கல்வியையும் ஊக்குவித்தல், தக்க முறைகளில் தீவிரப்
படுத்தல், அவரவர் சக்திக்கேற்ப அவர்களின்
கல்வி தொடர்வதற்கு வழி செய்தல்;
ஈ. ‘ஆசிரியர் பயிற்சி’யில் பாகுபாடின்றி பார்த்துக்கொள்ளல்

விதி 5

1. பங்குபெறும் நாடுகள் கீழ்க்கண்டவற்றை ஒப்புக்கொள்கின்றன.

அ. மானிட ஆளுமையின் முழுமையான வளர்ச்சிக்கும், மனித உரிமைகள், அடிப்படை சுதந்திரங்கள் ஆகியவற்றுக்கான மரியாதையை வலுப்படுத்தவுமான திசையில் கல்வி அமைய வேண்டும். எல்லா நாடுகள், மதங்கள், இனங்கள் சார் மக்களிடையிலும் புரிதல், சகிப்புணர்வு, நட்புறவை கல்வி பேணவேண்டும், அமைதி நிலவுவதற்கான அய்.நா. நடவடிக்கைகளை அது வளர்க்க வேண்டும்.
ஆ. உரிய அதிகாரிகளால் நிறுவப்பட்ட / அனுமதிக்கப்பட்டுள்ள குறைந்தபட்சக் கல்வித்தர நிர்ணயிப்பை உடையனவாக இருக்கும் பட்சத்தில் பொது அதிகாரிகள்
நடத்தும் பள்ளிகள் அல்லது பிற பள்ளிகளையும் தமது குழந்தைகளுக்காக தேர்ந்தெடுக்கவும், அடுத்து தனது சட்டங்களை நடைமுறை செய்ய அரசு நடைமுறைகளுக்கு இணக்கமானதோர் வழியில் தத்தம் ஈடுபாடு சார்ந்த மத-தார்மீக கல்வி பெறுவதை உறுதி செய்துகொள்ளவும், பெற்றோருக்கோ உரிய இடங்களில் சட்டபூர்வமான காப்பாளருக்கோ உள்ள உரிமையை மதிப்பது அவசியம். எந்த ஒரு குழந்தையோ, குழுவோ தமது நம்பிக்கைகளுக்கு இசைவற்ற மதக்கல்வி பெறுமாறு கட்டாயப்படுத்தக்கூடாது.
இ. தங்களுக்கென்று பள்ளிகள் நடத்துவதற்கும், ஒவ்வொரு அரசும் கொண்டுள்ள கல்விக் கொள்கைக்குத்தக்கபடி தமது மொழியைப் பயன்படுத்துவதும் கற்பதும் உள்பட தத்தம் கல்விப் பணிகளை மேற்கொள்ள தேசிய சிறுபான்மையினருக்கு உள்ள உரிமை ஏற்கப்பட வேண்டியது அவசியம்; ஆனால்,

i. தேசிய இறையாண்மையை பாதிக்கக்கூடிய வகையிலோ, இத்தகைய இனத்தோர், முழுச்சமுதாயத்தின் நடவடிக்கைகளில் பங்குகொள்வதையோ, தேசிய சமுதாயம் முழுவதற்குமான மொழியையோ பண்பாட்டையோ புரிந்துகொள்ள முடியாமல் அவர்களைத் தடுக்கும் வகையிலோ இவ்வுரிமை நடைமுறைப்படுத்தப்படக் கூடாது.

ii.உரிய அதிகாரிகள் விதித்திருக்கிற அல்லது அனுமதித்துள்ள பொதுத் தராதரத்திலிருந்து இங்கு அளிக்கப்படும் கல்வி தாழ்ந்ததாயிருக்கக்கூடாது.

iii. அத்தகைய பள்ளிகளில் படிப்பது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது.

2. முந்தைய பத்தியில் கூறப்படும் கோட்பாடுகள் கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்ய தமக்குள்ள கடமையை செயல்படுத்த ஆவன செய்வதாக இவ்வுடன்படிக்கையில் சேர்ந்துள்ள நாடுகள் உறுதி கூறுகின்றன.

விதி 6

இவ்வுடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதில், கல்வியில் காட்டப்படும் பல்வேறு பாகுபாடுகளுக்கு எதிராகவும், கல்வியில் யுனெஸ்கோ பொது மாநாடு எதிர்காலத்தில், சமவாய்ப்பையும் சமமாக நடத்தப்படுவதையும் உறுதி செய்யும் பொருட்டும் செய்யும் பரிந்துரைகளுக்கு உயர்ந்த பட்ச கவனம் கொடுக்கும் என்றும் இதில் பங்கேற்கும் நாடுகள் உறுதியளிக்கின்றன.

விதி 7

யுனெஸ்கோ பொதுமாநாடு, இவ்வுடன்படிக்கையில் பங்குபெறும் அரசுகள் எந்த வடிவில் எந்தத் தேதியில் பருவாந்திர அறிக்கைகள் தரவேண்டும் என்று நிர்ணயிக்கிறதோ, அதன்படி அந்த அரசுகள் அதற்கு பருவாந்திர அறிக்கைகள் தரவேண்டும். அதில், இவ்வுடன்படிக்கையை நடைமுறைப்படுத்தும் வகையிலே அந்த அரசு சட்டமியற்றுவது, நிருவாக நடவடிக்கை உள்பட எடுத்த பல்வேறு வகை நடவடிக்கைகள் பற்றியும் விவரங்கள் தரப்படவேண்டும். நான்காம் விதியில் கூறப்படும் தேசியக் கொள்கையை நிர்ணயித்தது., வளர்ப்பது, அக்கொள்கையைச் செயல்படுத்துவதில் கண்ட வெற்றிகள் எதிர்கொண்ட தடைகள் ஆகியன பற்றியும் கூறிட வேண்டும்.

விதி 8

இவ்வுடன்படிக்கையில் சேருகிற நாடுகளில் இரண்டுக்குள்ளோ, இரண்டுக்கு மேலானநாடுகளுக்கிடையிலோ இந்த உடன்படிக்கையைச் செயலாற்றுவதிலோ அல்லது பொருள் கொள்வதிலோ தகராறு ஏற்பட்டால், பேசி தீர்த்துக் கொள்ளாதபோது, வேறு வகைகளில் தீர்த்துக் கொள்வதும் இயலாவிடில் அவர்களே வேண்டிக் கொண்டால் சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அனுப்பப்பட வேண்டும்.

விதி 9

இவ்வுடன்படிக்கையை ஏற்பதற்குநிபந்தனைகள், தயக்கங்கள் அனுமதிக்கப்படமாட்டா.

விதி 10

இரண்டு அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட நாடுகளிடையே உருவாகும் ஒப்பந்தங்களின் அடிப்படையில் தனிமனிதர்களோ குழுக்களோ அனுபவித்துவரும் உரிமைகள் இவ்வுடன்படிக்கைக்கு எழுத்திலும், உட்பொருளிலும் முரண்படாத வரையில் அவ்வுரிமைகளை இவ்வுடன்படிக்கை குறைக்காது.♦