செவ்வாய், 28 பிப்ரவரி, 2023

‘கருத்தரிக்கவோ, கருவைக் கலைக்கவோ பெண்ணுக்கு உரிமை உண்டு'


கொச்சி, நவ.6 கருத்தரிக்கவோ, கருவைக் கலைக்கவோ பெண்ணுக்கு உரிமை உண்டு என்று கேரள உயர்நீதி மன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

 கேரள உயர்நீதிமன்றத்தில் 23 வயதான எம்.பி.ஏ. மாணவி ஒருவர் ஒரு வழக்கு தொடுத்திருந்தார். அந்த வழக்கில் அவர் தனது சக மாணவர் ஒருவருடன் மனம் ஒருமித்து, பாலுறவு வைத்துக்கொண்டதாகவும், அத னால் தான் கர்ப்பம் தரித்து இருப்பது 'அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்' பரிசோதனையில் தெரிய வந்துள்ளதாகவும் கூறி, தனது 26 வார கால கர்ப்பத்தை கலைக்க அனுமதி கோரி இருந்தார். 

இந்த வழக்கை நீதிபதி வி.ஜி. அருண் விசாரித்தார். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவியின் உடல் நிலையை மருத்துவர்கள் குழு சோதித்து, அந்தக் குழுவின் அறிக்கையை நீதிமன்றம் பெற்றது. 

அதில், பாதிக்கப்பட்டுள்ள மாணவி மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதாகவும், கர்ப்பத்தைத் தொடர்வது அவரது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த மாணவி கர்ப் பத்தை கலைத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது. 

இதுகுறித்த தீர்ப்பில், ஒரு பெண் கர்ப்பம் தரிக்கவும் அல்லது கர்ப்பத்தை தவிர்க்கவும் உள்ள உரிமைக்கு எந்தத் தடையும் இல்லை என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார். 

அரசமைப்புச் சட்டப் பிரிவு

இது குறித்து பெண்களுக்கு அரசமைப்புச் சட்டப் பிரிவு 21 உரிமை வழங்கி உள்ளதாகவும் தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

அந்த மாணவி தனது கர்ப்பத்தை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அல்லது அதற்கான வசதி களைக் கொண்ட பிற மருத்துவமனைகளிலோ கருக் கலைப்பு செய்து கொள்ளவும் அனுமதி அளிக்கப் பட்டுள்ளது.


வியாழன், 22 செப்டம்பர், 2022

அரசுக் கோயில் அர்ச்சகர் நியமனத்திற்காக வயது வரம்பு தளர்வு! அர்ச்சக மாணவர் சங்கத்தின் நீண்ட நாள் கோரிக்கை வெற்றி

சனி, 2 ஜூலை, 2022

300 சட்ட நூல்கள்: தமிழாக்கம் செய்து சாதனை

மதம் மாறுவது யாருக்குமுள்ள உரிமை - தடை செய்ய முடியாது! -டில்லி உயர்நீதிமன்றம்


புதுடில்லி, ஜூன் 4 மதம் மாறு வது யாருக்குமுள்ள உரிமை - தடை செய்ய முடியாது என்று டில்லி உயர்நீதிமன்றம் தீர்ப் பளித்துள்ளது.

கட்டாயப்படுத்தப்படாத பட்சத்தில் மதம் மாறுவதற்கு சட்டப்படி தடை யில்லை என்று டில்லி உயர்நீதிமன்றம் தெரிவித் துள்ளது. 

பாஜகவைச் சேர்ந்த வழக் குரைஞர் அஸ்வினி குமார் பணம் மற்றும் பரிசு பொருட்கள் உள்ளிட்டவற்றை அளித்து மதம் மாற்றுவது அடிப்படை உரி மைகளுக்கு எதிரானது என்று அறிவிக்கக் கோரி தாக்கல் செய்த பொதுநல மனுவை டில்லி உயர்நீதிமன்றம் நீதிபதி கள் விசாரித்தனர். 

அப்போது மனுவை பரி சீலித்த நீதிபதிகள் பெருமளவில் கட்டாய மதமாற்றம் நடப்பதாக மனுவில் கூறப்பட்டிருப்பதற் கான தரவுகள் எங்கே என்று கேட்டதுடன், பாதிக்கப்பட்ட வர்கள் யாரேனும் வழக்குத் தொடர்ந்துள்ளனரா என்றும் கேள்வி எழுப்பினர். 

மேலும் சமூக வலைதளங் களில் கூறப்பட்டுள்ளவற்றை ஆதாரமாகக் கொள்ள முடியாது என்றும், கட்டாயப்படுத்தப்படாத பட்சத்தில் மதம் மாறுவதற்கு சட்டப்படி தடையில்லை என் றும், ஒருவர் தான் விரும்பும் எந்தவொரு மதத்தையும் பின் பற்ற அரசமைப்புச் சட்டத்தில் உரிளமை அளிக்கப்பட்டுள்ளது என்ற கருத்தை தெரிவித்து, இந்த வழக்கு தொடர்பான விரி வான விசாரணையை ஜூலை 25 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து எந்தவித அறிவிக்கையையும் பிறப்பிக்காமல் உத்தரவிட்டுள் ளனர்.

வெள்ளி, 20 மே, 2022

'பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வினை ரத்து செய்திடுக;' ஒன்றிய அரசினை வலியுறுத்தி முதலமைச்சர் முன்மொழிந்த தீர்மானம்: சட்டப்பேரவையில் ஒரு மனதாக நிறைவேற்றம்

 

சென்னை,ஏப்.11- மாநில அரசுகளின் உரிமையினை நிலைநாட்டும்பொருட்டு மத்திய பல்கலைக்கழகங்களில் பல்வேறு படிப்புகளில் சேர்வதற்காக நடத்தவிருக்கும் பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வினை ரத்து செய்திட ஒன்றிய அரசினை இப்பேரவை வலியுறுத்துகிறது என சட்டப்பேரவையில் இன்று (11.4.2022) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தீர்மானத்தை முன்மொழிந்து பேசியதாவது,

சட்டப்பேரவையில் இன்று (11.4.2022) கேள்வி நேரம் முடிந்தவுடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கீழ்க்கண்ட அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார்.

அதில், ஒன்றிய அரசின்கீழ் இயங்கும் பல்கலைக்கழக மான்யக் குழு, 2022-2023ஆம்  கல்வி ஆண்டு முதல் அம்மான்யக் குழுவின் நிதியுதவியுடன் இயங்கும் அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் இளங்கலை உள்ளிட்ட பல்வேறு படிப்புகளுக்கான சேர்க்கைகள் தேசிய தேர்வு முகமை(National Testing Agency-NDA) நடத்தும் பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (Common University Entrance Examination-CUET)   மூலம் மட்டுமே நடைபெறும் என்று அறிவித்துள்ளது. 12ஆம் வகுப்பு தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களை கணக்கில் கொள்ளாமல் பொதுப் பல்கலைக்கழக நுழைவுத்தேர்வில்   (CUET) மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே சேர்க்கை நடைபெறும் எனவும், மாநில பல்கலைக் கழகங்கள், தனியார் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் விரும்பினால் மாணவர்கள் சேர்க்கையை நடத்திக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.

சமமான வாய்ப்பினை வழங்கிடாது

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு  (NCERT) பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட எந்த ஒரு நுழைவுத் தேர்வும் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநில பாடத்திட்டங்களில் படித்த மாணவர்கள் அனைவருக்கும் சமமான வாய்ப்பினை வழங்கிடாது என்று இப்பேரவை கருதுகிறது.

பெரும்பாலான மாநிலங்களில் மொத்த மாணவர்களில் 80 விழுக்காட்டிற்கும் அதிகமான மாணவர்கள் மாநிலப் பாடத் திட்டங்களில் பயின்று வருபவர்கள். இவர்கள் பெரும் பாலும், விளிம்பு நிலைப் பிரிவினரைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

எனவே, NCERT  பாடத்திட்ட அடிப்படையிலான நுழைவுத் தேர்வு மத்தியப் பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கு தகுதியான பெரும்பான்மையினருக்கு பாதகமான நிலையை ஏற்படுத்துவதோடு, இந்தச் சூழ்நிலை நம் நாட்டிலுள்ள பல்வேறு மத்திய பல்கலைக்கழகங்கள், மற்றும் அவற்றின் இணைப்புக் கல்லூரிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கையை வெகுவாகக் குறைக்கும் என்றும் இப்பேரவை கருதுகிறது.

பயிற்சி மய்யங்களை சார்ந்து இருக்கும்

இந்நுழைவுத் தேர்வும், நீட் தேர்வைப் போன்றே நாடு முழுவதும் உள்ள பல்வேறு பள்ளி கல்வி முறைகளை ஓரங்கட்டி பள்ளிகளில் நீண்ட கால கற்றல் முறைகளை வெகுவாக குறைத்து மதிப்பிட வழிவகுப்பதோடு மாணவர்கள் தங்களது நுழைவுத் தேர்வு மதிப்பெண்களை அதிகரிக்க பயிற்சி மய்யங்களை சார்ந்து இருக்கும் ஒரு சூழலை ஏற்படுத்தி விடும் என்பதில் அய்யமில்லை.

மேலும், மாணவர்களுக்கான பயிற்சி மய்யங்கள் புற்றீசல் போன்று வளர மட்டுமே இது சாதகமாக அமையும் என்று தமிழ்நாட்டு மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது.

மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்படுவார்கள்

இவ்வாறு ஒரு நுழைவுத்தேர்வினை செயல்முறைக்குக் கொண்டு வருவதால் பள்ளிக்கல்வியோடு பயிற்சி மய்யங் களையும் நாடும் இளைய மாணவர் சமுதாயத்தினர் பெரு மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்படுவார்கள்.

எனவே, மாநில அரசுகளின் உரிமையினை நிலைநாட்டும் பொருட்டு மத்திய பல்கலைக்கழகங்களில் பல்வேறு படிப்பு களில் சேர்வதற்காக நடத்தவிருக்கும் பொதுப்பல்கலைக்கழக நுழைவுத் தேர்வினை ரத்து செய்திட ஒன்றிய அரசினை இப்பேரவை வலியுறுத்துகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்த அரசினர் தனித்தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார்.

தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றம்

மத்திய பல்கலைக் கழகங்களில் பல்வேறு படிப்புகளில் சேர்வதற்காக நடத்தவிருக்கும் பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வினை ரத்து செய்திட ஒன்றிய அரசினை கேட்டுக்கொள்ளும் முதலமைச்சர் கொண்டு வந்த இந்த அரசினர் தீர்மானத்தை வரவேற்று, தி.வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி), ஈ.ஆர்.ஈசுவரன் (கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி), சதன் திருமலைக்குமார் (மதிமுக), சின்னதுரை (சி.பி.எம்.), இராமச்சந்திரன் (சி.பி.அய்.), சிந்தனைச் செல்வன் (வி.சி.க.), கோ.க.மணி (பா.ம.க.), செல்வப்பெருந்தகை (காங் கிரசு),  கே.பி.அன்பழகன் (அதிமுக) ஆகியோர் முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரித்து வரவேற்றுப்பேசினர்.

நயினார் நாகேந்திரன் தலைமையில் பாஜக உறுப்பினர்கள் இத்தீர்மானத்தை எதிர்த்து வெளிநடப்புசெய்தனர்.

இதையடுத்து, இந்த தீர்மானத்தை உறுப்பினர்கள் ஒரு மனதாக நிறைவேற்றித் தரவேண்டும் என முதலமைச்சர் கேட்டுக்கொண்டார். இதைத் தொடர்ந்து பேரவைத் தலைவர் மு.அப்பாவு அவர்கள், பேரவையின் குரல் வாக்கெடுப்புக்கு தீர்மா னம் விடப்பட்டு ஒரு மனதாக நிறைவேறியதாக அறிவித்தார்.

அரசு மருத்துவர்களுக்கு மேற்படிப்பில் 50% இட ஒதுக்கீடு 30% ஊக்க மதிப்பெண் வழங்க தடையில்லை சென்னை உயர்நீதிமன்றம்

 

 சென்னை, ஜன.20 கிராமப்புறங்களில் பணிபுரியும் அரசு மருத்துவர்களுக்கு மேற்படிப்பில் 50% இட ஒதுக்கீடு, 30% ஊக்க மதிப்பெண் வழங்க தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

கிராமப்புறங்களில் பணிபுரியும் அரசு மருத்துவர்களுக்கு முதுகலை மருத்துவப் படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு மற்றும் 30 சதவீதம் ஊக்கத்தொகை மதிப்பெண் வழங்கப்படும் என அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு சாரா மருத்துவர்கள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

அரசு மருத்துவர்களுக்கு மேற்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு, ஊக்க மதிப்பெண் வழங்குவதால் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படித்தவர்களின் வாய்ப்பு பறிக்கப்படுவதாக அவர்கள் தங்கள் மனுவில் கூறியிருந்தனர். இரண்டில் ஏதாவது ஒன்றை மட்டும் அரசு மருத்துவர்களுக்கு வழங்க வேண்டும் என்றும்  கூறியிருந் தனர்.  இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. விசார்ணை முடிவடைந்த நிலையில்  நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.  அப்போது, கிராமப்புறங்களில் பணிபுரியும் அரசு மருத்துவர்களுக்கு மேற்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு, 30 சதவீத ஊக்க மதிப்பெண் வழங்க தடையில்லை என்றும் 50% இட ஒதுக்கீடு, ஊக்க மதிப்பெண் வழங்குவதால் தனியார் மருத்துவ கல்லூரியில் படித்தவர்களின் வாய்ப்பு பறிக்கப்படுவதாக  கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 

மேலும் அரசு மருத்துவர்கள் பொதுப்பிரிவு சேர்க்கையிலும் பங்கேற்கலாம் என நீதிபதி தெரிவித்தார்.

உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு: உயர் நீதிமன்றம் உத்தரவு!

 

சென்னை, ஜன.13 சட்டப்பூர்வ தடையில்லாத பட்சத்தில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது

அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 50 சதவீத இட ஒதுக்கீடு, கடந்த 2017ஆம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்டது

உச்ச நீதிமன்ற உத்தரவு கடந்த ஆண்டு மட்டுமே பொருந்தும் என்பதால் இந்த கல்வி ஆண்டில் இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட வேண்டும். சிறப்பு நிபுணத்துவ மருத்துவ படிப்பு களில் அரசு மருத்துவர் களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடுக்கு சட்டப் பூர்வ தடையில்லாத பட்சத்தில் இந்த கல்வி ஆண்டு அமல்படுத்தலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள் ளது. சிறப்பு நிபுணத்துவ மருத்துவப் மேற் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு வழங் கப்பட்டு வந்த 50 சதவீத இட ஒதுக்கீடு, கடந்த 2017ஆம் ஆண்டு முதல் நிறுத்தப் பட்டது. 2021-- 2022ஆம் கல்வியாண்டில் அரசு மருத்துவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படாததை எதிர்த்து சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் அரசு மருத்துவரான டாக்டர் டி.சுரேஷ் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில், 2020 --2021ஆம் ஆண்டு இட ஒதுக்கீடு வழங்காததை எதிர்த்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில், 2020--2021 ஆம் கல்வி யாண்டு செயல்படுத்த முடியாது என்று தெரிவிக்கப் பட்டதாகவும், அதை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்ற உத்தரவு கடந்த ஆண்டு மட்டுமே பொருந்தும் என்பதால் இந்த கல்வி ஆண்டில் இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தண்டபாணி, இந்த கல்வி ஆண்டில் அரசு மருத்துவர்களுக்கு சிறப்பு மருத்துவப் படிப்புகளில் 50 சதவீத இட ஒதுக்கீட்டை, எந்த ஒரு சட்ட தடையும் இல்லாத பட்சத்தில் செயல்படுத்தலாம் என்று உத்தரவிட்டுள்ளார்.