• Viduthalai
சென்னை,ஏப்.11- மாநில அரசுகளின் உரிமையினை நிலைநாட்டும்பொருட்டு மத்திய பல்கலைக்கழகங்களில் பல்வேறு படிப்புகளில் சேர்வதற்காக நடத்தவிருக்கும் பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வினை ரத்து செய்திட ஒன்றிய அரசினை இப்பேரவை வலியுறுத்துகிறது என சட்டப்பேரவையில் இன்று (11.4.2022) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தீர்மானத்தை முன்மொழிந்து பேசியதாவது,
சட்டப்பேரவையில் இன்று (11.4.2022) கேள்வி நேரம் முடிந்தவுடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கீழ்க்கண்ட அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார்.
அதில், ஒன்றிய அரசின்கீழ் இயங்கும் பல்கலைக்கழக மான்யக் குழு, 2022-2023ஆம் கல்வி ஆண்டு முதல் அம்மான்யக் குழுவின் நிதியுதவியுடன் இயங்கும் அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் இளங்கலை உள்ளிட்ட பல்வேறு படிப்புகளுக்கான சேர்க்கைகள் தேசிய தேர்வு முகமை(National Testing Agency-NDA) நடத்தும் பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (Common University Entrance Examination-CUET) மூலம் மட்டுமே நடைபெறும் என்று அறிவித்துள்ளது. 12ஆம் வகுப்பு தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களை கணக்கில் கொள்ளாமல் பொதுப் பல்கலைக்கழக நுழைவுத்தேர்வில் (CUET) மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே சேர்க்கை நடைபெறும் எனவும், மாநில பல்கலைக் கழகங்கள், தனியார் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் விரும்பினால் மாணவர்கள் சேர்க்கையை நடத்திக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.
சமமான வாய்ப்பினை வழங்கிடாது
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு (NCERT) பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட எந்த ஒரு நுழைவுத் தேர்வும் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநில பாடத்திட்டங்களில் படித்த மாணவர்கள் அனைவருக்கும் சமமான வாய்ப்பினை வழங்கிடாது என்று இப்பேரவை கருதுகிறது.
பெரும்பாலான மாநிலங்களில் மொத்த மாணவர்களில் 80 விழுக்காட்டிற்கும் அதிகமான மாணவர்கள் மாநிலப் பாடத் திட்டங்களில் பயின்று வருபவர்கள். இவர்கள் பெரும் பாலும், விளிம்பு நிலைப் பிரிவினரைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
எனவே, NCERT பாடத்திட்ட அடிப்படையிலான நுழைவுத் தேர்வு மத்தியப் பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கு தகுதியான பெரும்பான்மையினருக்கு பாதகமான நிலையை ஏற்படுத்துவதோடு, இந்தச் சூழ்நிலை நம் நாட்டிலுள்ள பல்வேறு மத்திய பல்கலைக்கழகங்கள், மற்றும் அவற்றின் இணைப்புக் கல்லூரிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கையை வெகுவாகக் குறைக்கும் என்றும் இப்பேரவை கருதுகிறது.
பயிற்சி மய்யங்களை சார்ந்து இருக்கும்
இந்நுழைவுத் தேர்வும், நீட் தேர்வைப் போன்றே நாடு முழுவதும் உள்ள பல்வேறு பள்ளி கல்வி முறைகளை ஓரங்கட்டி பள்ளிகளில் நீண்ட கால கற்றல் முறைகளை வெகுவாக குறைத்து மதிப்பிட வழிவகுப்பதோடு மாணவர்கள் தங்களது நுழைவுத் தேர்வு மதிப்பெண்களை அதிகரிக்க பயிற்சி மய்யங்களை சார்ந்து இருக்கும் ஒரு சூழலை ஏற்படுத்தி விடும் என்பதில் அய்யமில்லை.
மேலும், மாணவர்களுக்கான பயிற்சி மய்யங்கள் புற்றீசல் போன்று வளர மட்டுமே இது சாதகமாக அமையும் என்று தமிழ்நாட்டு மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது.
மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்படுவார்கள்
இவ்வாறு ஒரு நுழைவுத்தேர்வினை செயல்முறைக்குக் கொண்டு வருவதால் பள்ளிக்கல்வியோடு பயிற்சி மய்யங் களையும் நாடும் இளைய மாணவர் சமுதாயத்தினர் பெரு மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்படுவார்கள்.
எனவே, மாநில அரசுகளின் உரிமையினை நிலைநாட்டும் பொருட்டு மத்திய பல்கலைக்கழகங்களில் பல்வேறு படிப்பு களில் சேர்வதற்காக நடத்தவிருக்கும் பொதுப்பல்கலைக்கழக நுழைவுத் தேர்வினை ரத்து செய்திட ஒன்றிய அரசினை இப்பேரவை வலியுறுத்துகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்த அரசினர் தனித்தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார்.
தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றம்
மத்திய பல்கலைக் கழகங்களில் பல்வேறு படிப்புகளில் சேர்வதற்காக நடத்தவிருக்கும் பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வினை ரத்து செய்திட ஒன்றிய அரசினை கேட்டுக்கொள்ளும் முதலமைச்சர் கொண்டு வந்த இந்த அரசினர் தீர்மானத்தை வரவேற்று, தி.வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி), ஈ.ஆர்.ஈசுவரன் (கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி), சதன் திருமலைக்குமார் (மதிமுக), சின்னதுரை (சி.பி.எம்.), இராமச்சந்திரன் (சி.பி.அய்.), சிந்தனைச் செல்வன் (வி.சி.க.), கோ.க.மணி (பா.ம.க.), செல்வப்பெருந்தகை (காங் கிரசு), கே.பி.அன்பழகன் (அதிமுக) ஆகியோர் முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரித்து வரவேற்றுப்பேசினர்.
நயினார் நாகேந்திரன் தலைமையில் பாஜக உறுப்பினர்கள் இத்தீர்மானத்தை எதிர்த்து வெளிநடப்புசெய்தனர்.
இதையடுத்து, இந்த தீர்மானத்தை உறுப்பினர்கள் ஒரு மனதாக நிறைவேற்றித் தரவேண்டும் என முதலமைச்சர் கேட்டுக்கொண்டார். இதைத் தொடர்ந்து பேரவைத் தலைவர் மு.அப்பாவு அவர்கள், பேரவையின் குரல் வாக்கெடுப்புக்கு தீர்மா னம் விடப்பட்டு ஒரு மனதாக நிறைவேறியதாக அறிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக