டில்லி நீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி, ஜூலை 1- 'மனைவியை பிரிந்து வாழும் கணவர், மனைவி மற்றும் குழந்தையின் பராமரிப்புக்காக, பணம் தருவது அவசியம்' என, டில்லி கூடுதல் செசன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
டில்லியை சேர்ந்த நபர் மீது, அவரது மனைவி அளித்த புகாரின் படி, குடும்ப வன்முறை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், தனக்கும், தன் மகனுக்குமான பராமரிப்பு செலவுக்காக, பிரதி மாதம், ஒரு குறிப்பிட்ட தொகையை பெற்றுத் தரும் படி, அந்த பெண், கீழ் நீதிமன்றத்தில் முறையிட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அந்த பெண்ணுக்கு, ஒவ்வொரு மாதமும், 15 ஆயிரம் ரூபாய் அளிக்க, கணவருக்கு உத்தரவிட்டது. கீழ் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து, அந்த நபர், கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த, நீதிபதி சஞ்ஜீவ் குமார், அவரது கோரிக்கையை நிராகரித்தார்.
நீதிபதி அளித்த தீர்ப்பில் கூறியதாவது: மனைவி மற்றும் குழந்தைகளை பராமரிப்பது, கணவரின் கடமை. இந்த வழக்கில், சம்பந்தப்பட்ட நபர், மாதம், 40 ஆயிரம் ரூபாய் வருமானம் ஈட்டுகிறார். அவரது மனைவி எந்த வேலைக்கும் செல்லவில்லை. எனவே, அவரது பராமரிப்புக்காக, மாதம், 10 ஆயிரம் ரூபாயும், குழந்தையின் பராமரிப்புக்கு, மாதம், 5,000 ரூபாயும், கணவன் தரப்பிலிருந்து வழங்கப்பட வேண்டும். இந்த வழக்கில், கீழ் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சரியே. இவ்வாறு அவர் தீர்ப்பளித்தார்.
- விடுதலை நாளேடு, 1.7.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக