செவ்வாய், 31 ஜனவரி, 2017

கணவர் இறந்தபின் மனைவி மறுமணம் செய்தாலும் இழப்பீடு பெற உரிமை உண்டு நீதிமன்றம் தீர்ப்பு

செப். 12_- விபத்தில் கணவர் மரண மடைந்த பிறகு விதவையான மனைவி மறுமணம் செய்தாலும் அவருக்கு தனது கணவருக்கான நஷ்டஈடு பெற உரிமை உள்ளது என்று கூறிய சிறு வழக்குகள் நீதிமன்றம் அந்த பெண்ணுக்கு ரூ. 7.37 லட்சம் நஷ்டஈடு வழங்குமாறு காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தர விட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்தவர் பாலாஜி (28). இவரது மனைவி பிரியா (26). பாலாஜி செல்போன் கடை நடத்தி வந்துள்ளார். கடந்த 2011 ஜூன் 1ஆம் தேதி பாலாஜி தனது நண்பர்களுடன் திருச்சியிலிருந்து காரில் வந்துள்ளார். உளுந்தூர்பேட்டையை அடுத்த பஞ்ச வல்லி குப்பம் அருகே வந்தபோது எதிரே வந்த லாரி கார் மீது மோதியது.

இதில், பாலாஜியும் அவருடன் காரில் வந்த வசந்த ராஜா, ரவிச்சந்திரன், ஓட்டுநர் செந்தில் ஆகியோரும் படுகாயமடைந்தனர். சிகிச்சைக்காக அவர்கள் அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு பாலாஜி சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.

இதையடுத்து, பாலாஜியின் இறப்புக்கு நஷ்டஈடாக ரூ. 20 லட்சத்தை தனியார் காப்பீட்டு நிறுவனமான இப்கோ டோக்கியோ பொதுக்காப்பீட்டு நிறுவனம் வழங்க உத்தரவிடக்கோரி பிரியா, பாலாஜியின் தந்தை ராஜேந்திரன், தாய் கஸ்தூரி ஆகியோர் சென்னை சிறு வழக்குகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் தனர். இதற்கிடையே பிரியா மறுமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், இந்த வழக்கு சிறு வழக்குகள் நீதிமன்ற தலைமை நீதிபதி கோகுல்தாஸ் முன்னி லையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, காப்பீட்டு நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் பிரியா மறுமணம் செய்து உள்ளார். எனவே, அவர் நஷ்டஈடு கோர முடியாது என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அளித்த தீர்ப்பு வருமாறு: விதவைகள் மறுமணத்தை நாம் எப்போதும் ஊக்கப்படுத்த வேண்டும். ஏற்கெனவே, உயர் நீதிமன்றத்தில் இது போன்ற 3 வழக்குகளில் தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. விதவைகள் மறுமணம் என்பது சமூகத்தில் அவர்கள் மீது ஏற்படும் களங்கத்தை போக்கும். அவர்களுக்கு சமூக பாதுகாப்பையும் ஏற்படுத்தும்.

பாலாஜி இறந்தபோது பிரியா அவரது மனைவியாக இருந்துள்ளார். பாலாஜி இறந்தாலும், அவர் மறுமணம் செய்து கொண்டா லும் அவர் மீதுள்ள பற்று அவருக்கு குறையவில்லை என்பதை அவர் இந்த வழக்கை தொடர்ந்ததிலிருந்து தெரியவந்துள்ளது. எனவே, அவருக்கு நஷ்டஈடு வழங்கப்படவில்லை என்றால் அவருக்கு அநீதி விளைவித்ததாக அர்த்தமாகிவிடும். இதை உயர்நீதிமன்ற தீர்ப்புகள் தெளிவாக குறிப்பிட்டுள்ளன.

எனவே, கணவர் இறந்தபின் மறுமணம் செய்தாலும் மனைவிக்கு கணவனின் மரணத்துக்கான இழப்பீடு பெற உரிமை உள்ளது. இந்த வழக்கில் பிரியா மற்றும் பாலாஜியின் பெற்றோருக்கு இப்கோ டோக்கியோ பொது காப்பீட்டு நிறுவனம் மொத்தம் ரூ. 7 லட்சத்து 37 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும். இந்த தொகை பிரியா உள்ளிட்ட 3 பேருக்கும் சரிசமமாக பிரித்து தரப் பட வேண்டும்.

-இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை,12.9.!4

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக