வியாழன், 6 ஜூன், 2024

பத்திரப்பதிவு செய்தால் மட்டும் சொத்து உங்களுடையது ஆகாது



Published June 5, 2024, விடுதலை நாளேடு

இந்தியாவில் நிலங்களை பதிவு செய்வது கட்டாயம். இந்தியப் பதிவுச் சட்டத்தில் 100 ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள சொத்தை எந்த விதத்தில் மாற்றினாலும், அது எழுத்துப் பூர்வமாகவும், சம்பந்தப்பட்ட துணைப் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றும் விதி உள்ளது.

அதனால் தான் வீடு, கடை, ப்ளாட் அல்லது பண்ணை என எது வாங்கினாலும் அது கட்டாயம் பதிவு செய்யப்படுகிறது. ஆனால், நிலத்தை பதிவு செய்தாலும், நீங்கள் அதன் உரிமையாளராகிவிட முடியாது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

பதிவு செய்வதன் மூலம் நீங்கள் உரிமை யாளராகிவிடுவீர்கள் என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் தவறான புரிதலில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். ஒரு நபர் ஒரு சொத்தை இரண்டு முறை விற்றதாக நாள்தோறும் இதுபோன்ற செய்திகள் வருவதற்கு இதுவே காரணம். அல்லது வாங்குபவரின் பெயரில் விற்கப்பட்ட சொத்தின் மேல் விற்பனையாளர் நிலத்தில் கடன் வாங்கியிருக்கலாம். நிலத்தை வாங்குபவர் பதிவை மட்டுமே செய்திருப்பதால் இது நிகழ்கிறது, அவர் தனது பெயரில் சொத்தை மாற்றி எழுதவில்லை. (இது சொத்து மாற்றம் என்று அழைக்கப்படுகிறது).

பதிவு செய்வதன் மூலம் நீங்கள் நிலத்தின் முழு உரிமை யாளராக மாட்டீர்கள் என்பதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். அந்த சொத்தின் முழு உரிமையும் உங்களுக்குக் கிடைக்காது. பதிவு என்பது உரிமையை மாற்றுவதற்கான ஒரு ஆவணம் மட்டுமே. பத்திரப்பதிவை முடித்த பிறகு, அந்த பதிவின் அடிப்படையில் நீங்கள் சொத்தை மாற்றினால் அது சொத்து மாற்றம் என்று அழைக்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசுப் பணிக்கான தேர்வில் தமிழில் 40 மதிப்பெண் கட்டாயம்; அரசாணையை எதிர்த்து வழக்கு உயர்நீதிமன்றம் மீண்டும் தள்ளுபடி

5-6

அரசாணையை எதிர்த்து வழக்கு உயர்நீதிமன்றம் மீண்டும் தள்ளுபடி

சென்னை, ஜூன் 6 டிஎன்பிஎஸ்சி நடத்தும் அரசுப் பணிகளுக்கான தேர்வில் தமிழ் மொழித்தாளில் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறுவது அவசியம் என்ற தமிழ்நாடு அரசின் அரசாணையை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியா ளர்கள் பணி நிபந்தனைச் சட்டத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட திருத்தத்தின்படி அரசுப் பணிகளுக்கு நடத்தப்படும் தமிழ் மொழித்தாளில் 40 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே பொது அறிவு மற்றும் திறனறிவு தேர்வுக்கான விடைத்தாள் மதிப்பீடு செய்யப்படும் என தமிழ்நாடு அரசு கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பரில் அரசாணை பிறப்பித்தது.

இந்த அரசாணையின் அடிப்படையில், தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள 6,244 குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பாணையை டிஎன்பிஎஸ்சி, கடந்த ஜனவரி யில் வெளியிட்டது. இந்த அறி விப்பாணையை எதிர்த்தும், தமிழ் மொழித்தாள் தேர்வில் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே பொது அறிவு,திறனறிவு தேர்வுத் தாள் மதிப்பீடுசெய்யப்படும் என்ற அரசாணையை எதிர்த்தும் நிதேஷ் உள்ளிட்ட 10 விண்ணப்பதாரர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.இந்த வழக்கு ஏற்கெனவே விடுமுறை கால அமர்வில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பாக விசாரணைக்கு வந்தபோது, விண்ணப்பதாரர்களுக்கான கல்வித் தகுதியை நிர்ணயிக்க அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது என்றும், குரூப் 4 பதவிகளை வகிப்பவர்கள், மக்களுடன் நேரடியாகதொடர்பு கொள்ள தமிழ் மொழியில் புலமை பெற்றிருப்பது அவசியம் என்றும், இதுதொடர்பான அரசின் கொள்கை முடிவில் தலையிடமுடியாது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் ஆர். மகாதேவன், முகமது ஷபீக் ஆகியோர்அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில், இந்த அரசாணைப்படி ஏற்கெனவே பல தேர்வுகள் நடத்தப்பட்டு விட்டது.அரசுப்பணிகளுக்கு தமிழ் மொழித்தாளில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம் என்ற அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது. எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரப்பட்டது. அதையடுத்து நீதிபதிகள் இந்த வழக்கை தள்ளு படி செய்தனர்.

சனி, 18 மே, 2024

மருத்துவக் காப்பீட்டுக்கான உச்ச வயது வரம்பு நீக்கம்



விடுதலை நாளேடு
Published April 30, 2024

புதுடில்லி,ஏப்.30- மருத்துவக் காப்பீடு (பாலிசி) எடுப்பதற்கான உச்ச வயது வரம்பு 65-அய் இந்திய காப்பீட்டு ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம் (அய்ஆர்டிஏஅய்) ரத்து செய்துள்ளது.
முந்தைய வழிகாட்டுதலின்படி, ஒருவர் 65 வயது வரை மட்டுமே புதிய மருத்துவ காப்பீட்டை (பாலிசி) எடுக்க முடியும். ஆனால், புதிய நடைமுறைபடி, வயது வித்தியாசமின்றி யார் வேண்டு மானாலும் புதிய மருத்துவக் காப் பீட்டை எடுத்துப் பலன் அடையலாம்.
மருத்துவக் காப்பீட்டுக்கான உச்ச வயது வரம்பு நீக்க நடைமுறை கடந்த ஏப்.1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது என்று அய்ஆர்டிஏஅய் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரிலையன்ஸ் பொது காப்பீட்டு நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரி ராகேஷ் கெயில் கூறிய தாவது:
“குறிப்பிட்ட வயதை தாண்டிய மூத்த குடிமக்கள் மருத்துவக் காப்பீடு பெறுவதில் இருந்த தடைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை மூலம், அதி களவில் பாதிப்புக்குள்ளாகும் முதிய வர்கள் வயது அடிப்படையிலான தடைகளின்றி முக்கிய சுகாதார சேவையை அணுகவும், நிதிப் பாதுகாப்பு அளிக்கவும் உதவும். இந்த மாற்றத்தால் காப்பீட்டு சந்தைகளில் நுகர்வோருக்கு மேம்பட்ட சலுகைகள் மற்றும் புதிய சேவைகள் கொண்டுவரப்படும்.” எனத் தெரிவித்துள்ளார்.
மணிப்பால் சிக்னா மருத்துவக் காப்பீட்டின் தலைமை நிர்வாக அதிகாரி பிரசுன் சிக்தர் கூறுகையில், “வயது வரம்பு ரத்து செய்யப்பட்டது மூத்த குடிமக்களுக்கு முழுமையான மன அமைதியை அளிக்கும். சமீபத்தில் நாங்கள் கொண்டு வந்த ‘ப்ரைம் சீனியர்’ திட்டம் மூலம் 91ஆவது நாள் முதல் ஏற்கெனவே இருக்கும் நோய்களுக்கு கவரேஜ் வழங்கி வருகிறோம்.
அதிகரிக்கும் முதியவர்களுக்கான தேவைகள் மற்றும் மருத்துவ பண வீக்கத்தை புரிந்து கொண்டு வரப்பட்ட முக்கிய மாற்றத்தின் மூலம் வயதான வர்களின் உடல்நலம் மற்றும் நல வாழ்வை பாதுகாப்பதில் எங்களின் ஆதரவை வழங்குவதற்கான வாய்ப்பாக கருதுகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

பாலிசி பஜார் மருத்துவக் காப்பீட்டு நிறுவனத்தின் வணிக தலைவர் சித் தார்த் சிங்கால் கூறுகையில், “வயது வரம்பு நீக்கப்பட்டாலும் காத்திருப்பு காலம் போன்ற கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகள் இருக்கும். புதிய பாலிசி பெறும் நபர்கள் அறை வாடகை, சிகிச்சை மீதான கட்டுப்பாடுகள், பிற கட்டண கவரேஜுகளை துல்லியமாக புரிந்து கொள்ள வேண்டும்.
வயதானவர்களின் தேவைகளுக்கு ஏற்ப புதுமைகளை காப்பீடு நிறுவனங் கள் மேம்படுத்தும் என்று அவர் தெரிவித்தார்.

காப்பீட்டு திட்டத்தை
எவ்வாறு தேர்வு செய்வது?
ஒரு திட்டத்தை தேர்வு செய்வதற்கு முன்பு காப்பீட்டு கட்டணத் தொகை, கவரேஜ் தொகை, காத்திருப்பு காலம், திட்டத்தில் பயன்பெறக் கூடிய நோய் கள் உள்ளிட்டவை தெளிவாக கவனிக்க வேண்டும்.
குறுகிய காத்திருப்பு காலங்கள் கொண்ட திட்டங்களை தேர்வு செய் வது மிக அவசியமான ஒன்று. அதிக கட்டணம் செலுத்துவதன் மூலம் காத் திருப்பு காலங்கள் குறைவாக இருக்கும் திட்டங்களும் நிறுவனங்களால் வடி வமைக்கப்பட்டிருக்கும். அதையும் கருத் தில் கொள்ள வேண்டும்.

நோ-கிளைம் போனஸ் போன்ற பல் வேறு அம்சங்கள் கொண்ட திட்டத்தை தேர்வு செய்ய வேண்டும். இறுதி செய் வதற்கு முன்னதாக இணையத்தில் பிற நிறுவனங்களின் திட்டத்துடன் ஒப் பிட்டு பார்க்க வேண்டும்.
கூடுதல் கவரேஜ் தேவைப்படும் போது டாப்-அப் செய்து கொள்ளும் வகையிலான திட்டங்களை கருத்தில் கொள்ள வேண்டும். முதியவர்கள் ஒரு ஆண்டுக்கான தொகையை முழுமை யாக செலுத்துவதில் சிரமம் இருப்பின், காலாண்டு அல்லது மாதாந்திர திட் டங்களை எடுத்துக் கொள்ளலாம்.
முதியவர்களுக்கான திட்டங்களில் நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தத்துக் கான சிகிச்சைகள், வீட்டுக்கே வந்து சிகிச்சை அளிக்கும் அம்சங்கள் மற்றும் நர்சிங் சேவைகள் போன்றவற்றை கருத் தில் கொள்ள வேண்டும்.

மதச்சார்பற்ற நடவடிக்கையை நோக்கி…‘மதமற்றவர்’ என தனக்கு சான்றளிக்க உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த பெண்



விடுதலை நாளேடு
Published April 30, 2024

அண்மையில் உச்சநீதிமன்றத்தில் தன்னை மதமற்றவர் என தெரிவிக்கக் கோரியும், அதன் அடிப்படையில் தனது பெற்றோரின் சொத்தில் தனக்குள்ள வாரிசு உரிமை வேண்டியும் நீதி வழங்கிடக் கோரி கேரளாவிலிருந்து ஒரு பெண் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அரசமைப்புச் சட்டம் தனக்கு வழங்கி யுள்ள அடிப்படை உரிமைகளுள் ஒன் றான மதத்தில் நம்பிக்கை கொள்வதற்கும், (அ) மதத்தின் மீது நம்பிக்கையற்று இருப்ப தற்குமான உரிமை மறுக்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு மூலம் வழக்கு தொடர்ந்துள்ளார்.

கேரள மாநிலம் ஆலப்புழை மாவட் டத்தில் வசித்து வரும் பி.எம்.ஷபியா, தான் ஒரு முஸ்லிம் குடும்பத்தில் பிறந் திருந்தாலும் அந்த மதத்தைப் பற்றிய நம்பிக்கை எதுவும் தனக்கு இல்லை என்பதால் மதச்சார்பற்ற சட்டங்கள்தான் (ஷரியத் சட்டம் அல்ல) தனக்குப் பொருந்த வேண்டும் என உரிமையினை வழக்கு தொடுத்து கோரியுள்ளார்.
மனுதாரர் சார்பாக வழக்காடிய வழக்குரைஞர் குறிப்பிட்டுள்ளதாவது: மதச்சார்பற்ற அடிப்படைக் கோட்பாடுகள் அனைத்து மதங்களையும் சமமான அளவில்தான் கருதுகின்றன. அதன்படி எந்த ஒரு தனி நபரும் மதத்தின் மீது நம்பிக்கை வைப்ப தற்கும் நம்பிக்கையற்று இருப்பதற்கும் முழு சுதந்திரம் உண்டு என ஏற்கெனவே உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்றம் தெரிவித்த கருத்தின் படி, மத நம்பிக்கையற்று இருப்பதால், ஒரு நபர் தனக்குள்ள வம்சாவளி சார்ந்த அல்லது இதர குடிமைச் சட்டங்களின் மூலம் கிடைக்கக்கூடிய வாரிசு உரிமை களில் தகுதியிழப்பு எழக்கூடாது என தெரிவித்துள்ளார்.

ஒரு மதத்தின் மீது நம்பிக்கையற்று இருப்பவர்களுக்கு நாட்டின் மதச்சார் பின்மை சட்ட வடிவங்களுள் ஒன்றான இந்திய வாரிசுரிமைச் சட்டம் 1925  (The Indian Succession Act) பொருந்தும்; உயில் மூலம் பெறப்படும் சொத்துரி மைக்கும், உயில் இல்லாமல் வாரிசு களுக்கான சொத்துரிமைக்கும் இந்த சட்டம் பொருந்தும் எனவும் மனுதாரரின் வழக்குரைஞர் வாதிட்டார்.
மனுதாரர் தனது வேண்டுதலில், இஸ்லாம் நமபிக்கையிலிருந்து தான் விலகி இருப்பதால் தனது சமுதாயத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் தனது பெற்றோர் வழி சொத் துக்கு தான் உரிமை கோர முடியாத நிலையில் உள்ளதாகத் தெரிவித்து உள்ளார்.

தான் முஸ்லிம் தனி நபர் சட்டத் தின்படி நடக்க வேண்டியவர் அல்லர் என்றும், தனது உறுதியேற்பின்படி, தனக்கு சான்றிதழ் அளிக்க வேண்டி உள்ளார். அப்படிப்பட்ட சான்றிதழ் வழங்கிட சட்டத்தில் இடமில்லை என்ப தால் சட்டத்தில் உள்ள இடைவெளியினை உச்சநீதிமன்றம்தான் தங்கள் அறிவார்ந்த சட்ட விளக்கங்களால் பூர்த்தி செய்து நீதி வழங்கிட வேண்டும்.
சட்டத்தில் உள்ள வெற்றிடத்தால் மனுதாரர் தனது பெற்றோர் வழி சொத்துக்களைப் பெற்றிட “மதமற்றவர்”, “ஜாதியற்றவர்” என சான்றிதழினை உரிய அதிகாரியிடம் பெற்றிட தடை எதுவும் இருக்கக் கூடாது.

நிறைவாக மனுதாரரின் வழக்குரை ஞர் தனது வாதுரையில், “இப்படிப்பட்ட நிலையிலுள்ள எனது மனுதாரருக்கு அரசமைப்புச் சட்டத்தின் கூறு 25 வழங் கியுள்ள மத நம்பிக்கை கொள்வதற்கும், மத நம்பிக்கையற்று இருப்பதற்கும் உள்ள அடிப்படை உரிமை நேரடியாக மறுக்கப்பட்டிருக்கிறது. எனவே நீதி வழங்கப்பட வேண்டும்” என தெரிவித்தார்.
வாதுரையை கேட்ட உச்சநீதிமன்றம், ஒன்றிய மற்றும் கேரள அரசுகளுக்கு தாக்கீது அனுப்பிட உத்தரவு பிறப்பித்து உள்ளது. வழக்கின் அடுத்த நடவடிக்கை யாக ஜூலை மாதத்திற்கு விரிவான விவா தத் திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தொகுப்பு: வீ.குமரேசன்

புதன், 13 மார்ச், 2024

முசுலிமாக மாறுபவருக்கும் 3.5 சதவீத இடஒதுக்கீடு அரசாணை வெளியீடு

 Published March 13, 2024, விடுதலை நாளேடு

சென்னை, மார்ச் 13- ஆதிதிராவிடர், பிற்படுத்தப் பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் இசுலாத்தை தழுவினால் அவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் முசுலிம்களுக்கு வழங்கப்பட்டுள்ள 3.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுவது இல்லை என்றும், இவர்களுக்கும் முசுலிம்களுக்கான 3.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா சட்டமன்றத்தில் பேசினார்.

இந்த கோரிக்கை பரிசீலிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, இசுலாத்தை தழுவும் ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் இசுலாத்தை தழுவினால் அவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் முஸ்லிம் களுக்கு வழங்கப்பட்டுள்ள 3.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அரசாணையில், ‘அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், ஜாதி சான்றிதழ் வழங்கும் அலுவலர்கள் இந்த அரசாணைப்படி செயல்பட உரிய அறிவுறுத் தல்களை வருவாய் நிர்வாக ஆணையர் வழங்க வேண்டும்’ என்றும் கூறப்பட்டுள்ளது.

வீடு கட்டும் முறைகளில் திருத்த சட்டம் கொண்டு வந்தது தமிழ்நாடு அரசு

Published March 13, 2024, விடுதலை நாளேடு

சென்னை, மார்ச் 13- தமிழ்நாட்டில் 750 சதுர மீட்டர் அல்லது 8 வீடுகள் வரை கட்டப்படும்போது அதற்கு பணி முடிப்பு சான்றிதழ் தேவையில்லை என்பதுடன் கட்ட டத்தின் உயரத்தை 12 மீட்டரில் இருந்து 14 மீட்டராக உயர்த்துவது தொடர்பாக ஒருங்கிணைந்த கட் டிட விதிகளில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட் டுள்ளது.
தமிழ்நாடு அரசின் ஒருங்கி ணைந்த கட்டட விதிகளின் அடிப் படையில் தற்போது கட்டிட அனுமதிகள் வழங்கப்பட்டு வரு கின்றன.

மேலும், கட்டி முடிக்கப் பட்ட கட்டடத்துக்கு பணி முடிப்பு சான்றிதழ் பெற்றால்தான் மின் சாரம், குடிநீர், கழிவுநீர் இணைப் புகளை பெற முடியும் என்ற நிலை உள்ளது.
இந்த விதிகளை திருத்த வேண் டும் என்று கட்டுமான நிறுவனங்கள் கோரிக்கை விடுத்து வந்தன. இது தவிர, அதிக உயரமில்லாத அடுக்கு மாடி குடியிருப்பின் உயரத்தை 12 மீட்டரில் இருந்து 14 மீட்டராக உயர்த்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக உரிய விதி களில் திருத்தம் செய்யப் படும் என்று வீட்டு வசதித்துறை அமைச் சர் சு.முத்துசாமி தெரிவித்தி ருந்தார்.
இந்நிலையில், தற்போது ஒருங் கிணைந்த கட்டிட விதிகளில் திருத் தம் செய்து அரசிதழில் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. இதன்படி, விதிகளில், ஏற்கெனவே 3 வீடுகள் அல்லது 750 சதுர மீட்டர் என்றி ருந்ததை, அதிகபட்சம் 8 வீடுகள் அல்லது 750 சதுர மீட்டர் என திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

எளிதாக குடிநீர் இணைப்பு: எனவே, அதிகபட்சம் 8 வீடுகள் அல்லது 750 சதுர மீட்டருக்குள் உள்ள கட்டடங்களுக்கு பணி முடிப்பு சான்றிதழ் பெற அவசியம் இல்லை. இதன் மூலம், எளிதாக மின்சாரம், குடிநீர், கழிவுநீர் இணைப்பு களை பெற இயலும்.அதே போல், அதிக உயரமில்லாத கட்டிடங்களை பொறுத்தவரை, அக்கட்டடத்தின் அதிகபட்ச உயரம் 12 மீட்டரில் இருந்து 14 மீட்டராக உயர்த்தப்பட் டுள்ளது. இதன் மூலம், அக்குடியிருப்புகளில் அமையும் வீடுகளில் தேவையான வசதிகளை மேற் கொள்ள இயலும்.

வெள்ளி, 8 மார்ச், 2024

ஓய்வுக்கு முந்தைய தீர்ப்புகள் – ஓய்வுக்குப் பிந்தைய நியமனங்கள் – குடந்தை கருணா

 


விடுதலை நாளேடு

கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக 2018-ஆம் ஆண்டு பொறுப்பேற்றவர் நீதிபதி அபிஜித் கங்கோ பாத்யாய் (வயது 62).

மே 2, 2018 அன்று கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி கங்கோ பாத்யாயா ஜூலை 30, 2020-இல் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் பதவியிலிருந்து ஓய்வுபெறுவதற்கு இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு அவர் தனது பதவி விலகல் கடிதத்தை அனுப்பினார்.
பதவி விலகல் கடிதத்தை அனுப்பியுள்ள நிலையில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: “நீதிபதி பதவியிலிருந்து நான் இன்று விலகி விட்டேன். வரும் 7-ஆம் தேதி பாரதிய ஜனதா கட்சியில் இணைய உள்ளேன். நான் பாஜகவில் இணைந்த பிறகு எந்த மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்து முடிவெடுக்கப்படும். போட்டியிடவில்லை என்றாலும் பாஜகவில் தொடர்வேன். திரிணமூல் காங்கிரஸ் போன்ற குற்றவாளிகள் நிறைந்த கட்சிக்கு எதிராக பாஜக மட்டுமே போராடுகிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் நான் சேர்ந் திருக்கலாம். ஆனால், எனக்கு ஸநாதன தர்மத்தின் மீது நம்பிக்கை உள்ளது. அக்கட்சிக்கு ஸநாதன தர்மத்தின் மீது நம்பிக்கை இல்லை. காங்கிரஸ் போன்ற குடும்பம் ஆளும்கட்சியில் சேர்வதில் எந்தப் பயனும்இல்லை என்று நான் அறிந்துகொண்டேன்.

2009-இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு நடந்ததுதான் 2024இல் திரிணமூல் காங்கிரஸுக்கு நடக்கப் போகிறது. மக்களுக்கான கட்சியாக பாஜக இருக்கிறது. பாஜகவின் கொள்கைகள் மீது நம்பிக்கை வைத்து அந்தக் கட்சியில் இணைய உள்ளேன்”. இவ்வாறு அவர் கூறினார்.

அரசியல் சாசனத்தின் பிரிவு 217(1)(a)-ன்படி அவ ரது பதவி விலகல் உடனடியாக ஏற்கப்பட்டுவிட்டது.
தனது நடவடிக்கைகள் மூலம் நீதிபதி கங்கோ பாத்யாயா, தொடர்ந்து சர்ச்சைக்கு உள்ளாகி வருகிறார். சென்ற ஆண்டு ஏ.பி.பி ஆனந்தாவுக்கு அளித்த நேர்காணலைக் கவனத்தில் கொண்டு, மாநிலத்தில் நடைபெற்று வரும் ஆசிரியர் நியமன ஊழல் வழக்கு விசாரணையைப் பற்றி விவாதித்தது குறித்து, “நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து பேட்டி கொடுப்பது நீதிபதியின் வேலையில்லை” என்று உச்சநீதிமன்றம் 2023இல் குட்டு வைத்துள்ளது.

நீதிபதிகளின் அறையிலிருந்து – நீதிபதிகள் நேராக அரசியல் அறைகளுக்குள் நுழைவது இந்தியா வில் தொடர்ச்சியான அம்சம் அல்ல. குறைந்தபட்சம் இதுவரை இல்லை. சில கவுரவமான விதிவிலக்குகள் உள்ளன, இதில் இரண்டு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆளுநர் பதவிக்கு நியமனம் ஆன ஒரு நீதிபதி, ஓய்வு பெற்றவுடன் நாடாளுமன்றத்தின் மேல் சபைக்கு பரிந்துரைக்கப்பட்ட ஒருவர். (அயோத்தியா வழக்கின் தீர்ப்பு அமர்வில் இருந்த நீதிபதி ரஞ்சன் கோகாய், மாநிலங்ளவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.)

அதிகாரத்துவத்தில் ஒரு குறிப்பிட்ட மட்டத்தில் உள்ளவர்கள், அரசாங்கப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, அவர்கள் வேறு இடத்தில் பதவிக்கு வருவதற்கு முன்பு, குறிப்பாக அவர்களின் முடிவுகள் சாத்தியமான முதலாளிகளின் நலனைப் பாதிக்கக் கூடிய நிறுவனங்களில் பணியாற்ற சிறிது காலம் காத்திருக்க வேண்டும் என்கிற விதி, நீதிபதிகளுக்கு பொருந்தாதா?
பதவியேற்ற சில மணி நேரங்களிலேயே, இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) மேனாள் தலைவர் நிருபேந்திர மிஸ்ராவை பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மைச் செயலாளராக நியமிப்பதை உறுதி செய்வதற்கான அவசரச் சட்டத்தை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு வெளியிட்டது.

‘தி இந்தியன் எக்ஸ்பிரஸில்’ முதன்முதலில் அறி விக்கப்பட்டபடி, மிஸ்ராவை பிரதமராக நியமித்தது TRAI சட்டம், 1997 இன் பிரிவு 5 (8) அய் மீறுவதாகும், இது (தலைவர் அல்லது வேறு எந்த உறுப்பினருக்கும்) ஓய்வுக்குப் பிந்தைய அரசாங்க வேலைகளைத் தடை செய்தது. உடனடியாக அவசர சட்டம், நாடாளு மன்றத்தில் வைத்து வேகமாக நிறைவேற்றப்பட்டது.
ஒன்றிய மேனாள் சட்ட அமைச்சர் ஒருவர், “ஓய்வுக்கு முந்தைய தீர்ப்புகள் ஓய்வுக்குப் பிந்தைய பணி நியமனங்களால் பாதிக்கப்படுகின்றன” என்று பதிவு செய்துள்ளார். ஆனால் நீதிபதிகள் ஓய்வுக்காக காத்திருக்காத காலகட்டத்தை நாம் தற்போது அடைந்துள்ளோம்.

இது போன்ற செயல்கள் ”இந்தியாவில் மட்டுமே நடக்கும், அதுவும் இந்தக் காலத்தில் மட்டுமே நடக்கும்.” என ‘டெக்கான் கிரானிக்கல்’ தலையங்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளது சரியே.