வெள்ளி, 8 மார்ச், 2024

ஓய்வுக்கு முந்தைய தீர்ப்புகள் – ஓய்வுக்குப் பிந்தைய நியமனங்கள் – குடந்தை கருணா

 


விடுதலை நாளேடு

கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக 2018-ஆம் ஆண்டு பொறுப்பேற்றவர் நீதிபதி அபிஜித் கங்கோ பாத்யாய் (வயது 62).

மே 2, 2018 அன்று கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி கங்கோ பாத்யாயா ஜூலை 30, 2020-இல் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் பதவியிலிருந்து ஓய்வுபெறுவதற்கு இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு அவர் தனது பதவி விலகல் கடிதத்தை அனுப்பினார்.
பதவி விலகல் கடிதத்தை அனுப்பியுள்ள நிலையில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: “நீதிபதி பதவியிலிருந்து நான் இன்று விலகி விட்டேன். வரும் 7-ஆம் தேதி பாரதிய ஜனதா கட்சியில் இணைய உள்ளேன். நான் பாஜகவில் இணைந்த பிறகு எந்த மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்து முடிவெடுக்கப்படும். போட்டியிடவில்லை என்றாலும் பாஜகவில் தொடர்வேன். திரிணமூல் காங்கிரஸ் போன்ற குற்றவாளிகள் நிறைந்த கட்சிக்கு எதிராக பாஜக மட்டுமே போராடுகிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் நான் சேர்ந் திருக்கலாம். ஆனால், எனக்கு ஸநாதன தர்மத்தின் மீது நம்பிக்கை உள்ளது. அக்கட்சிக்கு ஸநாதன தர்மத்தின் மீது நம்பிக்கை இல்லை. காங்கிரஸ் போன்ற குடும்பம் ஆளும்கட்சியில் சேர்வதில் எந்தப் பயனும்இல்லை என்று நான் அறிந்துகொண்டேன்.

2009-இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு நடந்ததுதான் 2024இல் திரிணமூல் காங்கிரஸுக்கு நடக்கப் போகிறது. மக்களுக்கான கட்சியாக பாஜக இருக்கிறது. பாஜகவின் கொள்கைகள் மீது நம்பிக்கை வைத்து அந்தக் கட்சியில் இணைய உள்ளேன்”. இவ்வாறு அவர் கூறினார்.

அரசியல் சாசனத்தின் பிரிவு 217(1)(a)-ன்படி அவ ரது பதவி விலகல் உடனடியாக ஏற்கப்பட்டுவிட்டது.
தனது நடவடிக்கைகள் மூலம் நீதிபதி கங்கோ பாத்யாயா, தொடர்ந்து சர்ச்சைக்கு உள்ளாகி வருகிறார். சென்ற ஆண்டு ஏ.பி.பி ஆனந்தாவுக்கு அளித்த நேர்காணலைக் கவனத்தில் கொண்டு, மாநிலத்தில் நடைபெற்று வரும் ஆசிரியர் நியமன ஊழல் வழக்கு விசாரணையைப் பற்றி விவாதித்தது குறித்து, “நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து பேட்டி கொடுப்பது நீதிபதியின் வேலையில்லை” என்று உச்சநீதிமன்றம் 2023இல் குட்டு வைத்துள்ளது.

நீதிபதிகளின் அறையிலிருந்து – நீதிபதிகள் நேராக அரசியல் அறைகளுக்குள் நுழைவது இந்தியா வில் தொடர்ச்சியான அம்சம் அல்ல. குறைந்தபட்சம் இதுவரை இல்லை. சில கவுரவமான விதிவிலக்குகள் உள்ளன, இதில் இரண்டு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆளுநர் பதவிக்கு நியமனம் ஆன ஒரு நீதிபதி, ஓய்வு பெற்றவுடன் நாடாளுமன்றத்தின் மேல் சபைக்கு பரிந்துரைக்கப்பட்ட ஒருவர். (அயோத்தியா வழக்கின் தீர்ப்பு அமர்வில் இருந்த நீதிபதி ரஞ்சன் கோகாய், மாநிலங்ளவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.)

அதிகாரத்துவத்தில் ஒரு குறிப்பிட்ட மட்டத்தில் உள்ளவர்கள், அரசாங்கப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, அவர்கள் வேறு இடத்தில் பதவிக்கு வருவதற்கு முன்பு, குறிப்பாக அவர்களின் முடிவுகள் சாத்தியமான முதலாளிகளின் நலனைப் பாதிக்கக் கூடிய நிறுவனங்களில் பணியாற்ற சிறிது காலம் காத்திருக்க வேண்டும் என்கிற விதி, நீதிபதிகளுக்கு பொருந்தாதா?
பதவியேற்ற சில மணி நேரங்களிலேயே, இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) மேனாள் தலைவர் நிருபேந்திர மிஸ்ராவை பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மைச் செயலாளராக நியமிப்பதை உறுதி செய்வதற்கான அவசரச் சட்டத்தை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு வெளியிட்டது.

‘தி இந்தியன் எக்ஸ்பிரஸில்’ முதன்முதலில் அறி விக்கப்பட்டபடி, மிஸ்ராவை பிரதமராக நியமித்தது TRAI சட்டம், 1997 இன் பிரிவு 5 (8) அய் மீறுவதாகும், இது (தலைவர் அல்லது வேறு எந்த உறுப்பினருக்கும்) ஓய்வுக்குப் பிந்தைய அரசாங்க வேலைகளைத் தடை செய்தது. உடனடியாக அவசர சட்டம், நாடாளு மன்றத்தில் வைத்து வேகமாக நிறைவேற்றப்பட்டது.
ஒன்றிய மேனாள் சட்ட அமைச்சர் ஒருவர், “ஓய்வுக்கு முந்தைய தீர்ப்புகள் ஓய்வுக்குப் பிந்தைய பணி நியமனங்களால் பாதிக்கப்படுகின்றன” என்று பதிவு செய்துள்ளார். ஆனால் நீதிபதிகள் ஓய்வுக்காக காத்திருக்காத காலகட்டத்தை நாம் தற்போது அடைந்துள்ளோம்.

இது போன்ற செயல்கள் ”இந்தியாவில் மட்டுமே நடக்கும், அதுவும் இந்தக் காலத்தில் மட்டுமே நடக்கும்.” என ‘டெக்கான் கிரானிக்கல்’ தலையங்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளது சரியே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக