வெள்ளி, 14 ஏப்ரல், 2023

கடவுளும் ஆக்கிரமிப்புக் குற்றவாளியே! உயர்நீதிமன்றத்தின் வளையாத – வரவேற்கத்தக்க தீர்ப்பு!

 

தலையங்கம் : கடவுளும் ஆக்கிரமிப்புக் குற்றவாளியே!

ஏப்ரல் 1-15,2022

உயர்நீதிமன்றத்தின் வளையாத – வரவேற்கத்தக்க தீர்ப்பு!

‘பொது இடத்தை கடவுளே ஆக்கிரமித்தாலும், அதை அகற்ற உத்தரவிடப்படும்’ என, சென்னை உயர்நீதிமன்றம் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.

நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், பலபட்டரை மாரியம்மன் கோவில் உள்ளது.

சாலையை ஆக்கிரமித்து கோவில் சார்பில் கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும், அதனால், தங்கள் இடத்துக்குச் செல்லும் பாதை தடுக்கப்படுவதாகவும், நாமக்கல் முன்சிஃப் நீதிமன் றத்தில், பாப்பாயி என்பவர் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கில், பாப்பாயிக்குச் சாதகமாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில், கோவில் நிருவாக அதிகாரி மேல் முறையீடு செய்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்க டேஷ் பிறப்பித்த உத்தரவு:

கோவில் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்பை, நாமக்கல் நகராட்சி அதிகாரி ஆதரித்துள்ளார். கடவுளுக்குப் பயப்படுவது என்பதை, இந்த வழக்கைக் கையாண்ட அதிகாரி தவறாகப் புரிந்துகொண்டுள்ளார்.

பொதுச் சாலையை, நெடுஞ்சாலையைப் பயன்படுத்த, பொது மக்களுக்கு உரிமை உள்ளது. சாலையின் அருகில் உள்ள சொத்தின் உரிமையாளருக்கும், அந்தச் சாலையை அணுக உரிமை உள்ளது.

எனவே, பொதுச்சாலையை யார் ஆக்கிரமித்தாலும், அது கோவில் என்றாலும்கூட, அந்த சட்ட விரோதச் செயலைத் தடுக்க வேண்டும்.

சாலையில் கட்டுமானம் எழுப்பி, அந்தச் சாலையை பொது மக்கள் பயன்படுத்துவதைத் தடுத்தால், உடனடியாக அதை அகற்றவேண்டும்.

கோவில் பெயரில் அல்லது ஒரு சிலையை வைத்து, பொது இடத்தை ஆக்கிரமித்துக் கொள்ளலாம் என்பது, தனிப்பட்ட சிலரின் மனப்பான்மையாக உள்ளது. யார், எந்தப் பெயரில் ஆக்கிரமிப்பு செய்கின்றனர் என்பதை, நீதிமன்றங்கள் பார்ப்பதில்லை.

கடவுளே,பொது இடத்தை ஆக்கிரமிப்புச் செய்தாலும், அந்த ஆக்கிரமிப்பை அகற்ற, நீதிமன்றங்கள் உத்தரவிடும்.

ஏனென்றால், பொதுநலன், சட்ட விதிகள் பாதுகாக்கப்பட வேண்டும். கடவுள் பெயரில் ஆக்கிரமிப்பு செய்து, கோவில் கட்டி, நீதிமன்றங் களை ஏமாற்ற முடியாது.

நமக்குப் போதிய எண்ணிக்கையில் கோவில்கள் உள்ளன; பொது இடத்தை ஆக்கிரமித்து, புதிதாகக் கோவில்கள் கட்டும்படி, எந்தக் கடவுளும் கூறவில்லை.

இந்த வழக்கைப் பொறுத்தவரை, நீதிமன்ற உத்தரவு இருந்தும், கோவில் தரப்பில் கட்டுமானம் தொடரப்பட்டுள்ளது.

புகைப்படங்களைப் பார்க்கும்போது, சாலையை அணுக முடியாத வகையில் தடுக்கப்பட்டது தெரிகிறது. கோவிலின் நடவடிக்கை கண்டிக்கத் தக்கது. நாமக்கல் நீதிமன்ற உத்தரவில் குறுக்கிட, எந்த முகாந்திரமும் இல்லை. மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது.

இரண்டு மாதங்களில் கட்டுமானம் முழு வதையும் அகற்றவேண்டும். தவறினால், நகராட்சி அகற்றவேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு

இப்படி ஓர் அருமையான தீர்ப்பை வழங்கியுள்ள சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மாண்பமை ஜஸ்டீஸ் ஆனந்த் வெங்கடேஷ் அவர்களை _ அவரது துணிவும், தெளிவுமிக்க இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புக்காக பலதரப்பினரும் __ பாதிக்கப்பட்டோர் தவிர _ பாராட்டியே தீருவர்; தீரவேண்டும்.

அரசமைப்புச் சட்டமும், அதனையொட்டி உள்ள நடைமுறைப்படுத்தப்படும் சட்ட நியதிகளும் இன்னார், இனியர் என்ற விருப்பு வெறுப்புக்கு இடமின்றி செயலாக்கப்பட வேண்டும்.

மாண்பமை நீதிபதிகள் பதவிப் பிரமாணம் எடுக்கும்போது, விருப்பு, வெறுப்பு, அச்சம், சலுகை என்ற எந்தக் கண்ணோட்டத்திற்கும் இடம்தராமல் எமது கடமையை ஆற்றுவோம் என்று எடுக்கும் உறுதி மொழிக்கேற்ப இத்தீர்ப்பு உண்மையாய் அமைந்துள்ளது என்பதால், இது ஓர் எடுத்துக்காட்டான தீர்ப்பு ஆகும்!

கடவுளைக் காட்டி நாட்டில் எத்தனையோ சமூகக் கொடுமைகள் அன்றாட நிகழ்வாக நடந்து கொண்டுள்ளன.

திராவிடர் கழகமும், ‘விடுதலை’ நாளேடும் கடுமையாகக் கண்டித்தது!

தியாகராயர் நகரில் சுமார் 50 ஆண்டுகளுக்குமுன் பேருந்து நிலையம் அருகில் இரவோடு இரவாக ஒரு பிள்ளையார் சிலையைக் கொண்டு வந்து நட்டு வைத்துவிட்டு, அது திடீரென்று பூமியைப் பிளந்து, தானே அங்கே வந்தது என்று கூறி, பூஜை, புனஸ்காரம், உண்டியல் வசூல், பாமர பக்தர்கள் திரண்ட நிலை, எல்லாம் சில நாள்களில் வந்து, ஒரு பிள்ளையார் கோவிலே பேருந்து நிலையத்தை ஆக்கிரமித்துக் கட்டு மளவுக்குத் திட்டமிட்டு, தனி நபர் வணிக நிலையம்போல ஆகி, பக்தர்கள் படையெடுப்பு நாளும் பெருகியது!

திராவிடர் கழகமும், தந்தை பெரியாரும், ‘விடுதலை’ நாளேடும் கடுமையாகக் கண்டித்தது.

இந்த லட்சணத்தில் இந்தப் பிள்ளையார் சிலைபற்றி, காஞ்சி சங்கராச்சாரியார் _ மறைந்த சந்திரசேகரேந்திர சரசுவதி _ ‘அது சுயம்பு; தானே கிளம்பும்’ என்று ஒரு வியாக்யானமும் சொன்னார்.

தந்தை பெரியார் அங்கே சென்று கூட்டம் போட அறிவித்தார்.

நட்டு வைத்த பிள்ளையார் என்ற  குட்டு வெளிப்பட்டது!

நல்வாய்ப்பாக அப்போது முதலமைச்சராகக் கலைஞர் அவர்கள் இருந்தார்; உடனே அதுபற்றி காவல் துறை விசாரணையை நுண்ணறிவுப் பிரிவின் மூலம் முடுக்கிவிட்டார்; அந்த உண்டியலை இந்து அறநிலையத் துறையுடன் இணைத்து வருவாய் தனியார் கொள்ளையாவதைத் தடுத்தார். தியாகராயர் நகர் திடீர் பிள்ளையாரை அப்புறப்படுத்தினார்; காரணம், செல்வராஜ் என்ற தலைமைக் காவலர் ஒருவர் 88 ரூபாய் கொடுத்து வாங்கி வந்து இரவோடு இரவாக நட்ட தகவல் கிடைத்துவிட்டது! (அப்போதைய ‘குமுதம்’ வார ஏட்டிலும் இச்செய்தி வெளிவந்துள்ளது).

இப்படி பலவிடங்களில் தனியார் ஆக்கிரமித்து, அதில் பாதுகாப்பிற்காக ஒரு கோவிலைக் கட்டி, மற்ற பகுதிகளை ஆக்கிரமிப்புகளுக்குப் பாதுகாப்பாக ஆக்குவது வழமை!

நியாயங்கள் காயங்கள் ஆகாமல்  தடுக்கப்பட  முடியும்!

இதுபற்றி மிகத் தெளிவாகக் கூறி, பொது வெளியை _ சாலைகளை தனியார் ஆக்ரமித்து, அனுபவிக்க _ பக்திப் போர்வை _ கடவுளைக் கருவியாக்கி, அப்பாவி மக்களைச் சுரண்டி, அறியாமை இருளில் தள்ளி, பக்தி வேஷ பகல் கொள்ளை முதலீடாக ஆக்காமல் தடுத்த முற்போக்கான துணிவுமிக்க தீர்ப்பு தந்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மாண்பமை ஜஸ்டீஸ் ஆனந்த் வெங்கடேஷ் அவர்கள், ‘கடவுளே நேரில் வந்தாலும், அவர் சட்டப்படி குற்றவாளி _ ஆக்கிரமிப்பாளர் என்றுதான் சட்டம் தயங்காமல் கூறும்’ என்று எழுதியுள்ளது, அவரது அறிவு நாணயத்தையும், துணிவையும், சட்டத்தை ஓர்ந்து கண்ணோடாது தேர்ந்து நடத்தும் பாங்கினையும் உலகிற்குப் பறைசாற்றுவதால், இத்தகைய நீதிபதிகளின் எண்ணிக்கை பெருகினால்தான், நியாயங்கள் காயங்கள் ஆகாமல் தடுக்கப்பட முடியும்.

தமிழ்நாட்டில் 77,450 கோவில்கள் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருக்கின்றன. அவற்றை உடனடியாக அகற்றவேண்டும் என்று உச்சநீதிமன்றம் 14.9.2010 அன்று தீர்ப்பு வழங்கியது.

சம்பந்தப்பட்ட மாநில அரசின் தலைமைச் செயலாளர் நேரில் வந்து உச்சநீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கவேண்டும் என்று ஆணையிட்டு 12 ஆண்டுகள் ஆன பிறகும், ஆக்கிரமிக்கப்பட்ட கோவில்கள் அகற்றப்படாதது நீதிமன்ற அவமதிப்பு அல்லவா?

– கி.வீரமணி,

ஆசிரியர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக