• Viduthalai
சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
சென்னை, ஜூலை 19 மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப் பட்டோருக்கு 69 சதவீதத்தை அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப் பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கக் கோரி திமுக, உள்ளிட்ட கட்சி களின் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக குழு அமைத்து ஆய்வு செய்து, 2021-2022 ஆம் கல்வியாண்டு முதல் அமல்படுத்த வேண் டும் என 2020 ஜூலையில் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் அமைக்கப்பட்ட குழு, தமிழ்நாட்டில் அமலில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கவேண்டும் என பரிந்துரை அளித்தும், உச்சநீதிமன் றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை காரணம் காட்டி, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி திமுக தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் வில்சன், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குக்கும், உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும், 2021-2022 ஆம் கல்வியாண்டில் இடஒதுக்கீடு உத் தரவு அமல்படுத்தப்படும் என ஒன்றிய அரசு உறுதியளித்தும், அதை அமல்படுத்த வில்லை எனவும், இது நீதிமன்ற அவமதிப்பு செயல் எனவும் வாதிட்டார்.
ஒன்றிய அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கர நாராயணன் மற்றும் ஒன்றிய அரசு வழக் குரைஞர் சந்திரசேகரன் ஆகியோர், மனுவில் 50 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு விட்டு, தற்போது 69 சதவீத இட ஒதுக்கீடு கோருவதாகவும், இடஒதுக்கீடு வழங்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர்
மேலும், எந்த நீதிமன்ற அவமதிப்பும் செய்யவில்லை எனவும், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனவும் ஒன்றிய அரசுத்தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, உயர்நீதிமன்ற உத்தர வின்படி, 69 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், தமிழ்நாட்டில் பின்பற்றப்படும் 69 சதவீத இட ஒதுக்கீட்டை 2021-2022 ஆம் கல்வியாண்டில் எப்படி அமல் படுத்தப்படும், இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து அடுத்த வாரம் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு, விசார ணையை ஜூலை 26 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.