ஞாயிறு, 29 மே, 2016

வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறும் பெண்ணுக்கும் பேறு கால விடுப்பு

வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறும்  பெண்ணுக்கும் பேறு கால விடுப்பு பெற உரிமை உண்டு: மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
மும்பை, பிப்.2- வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கு, அக்குழந்தையைப் பராமரிக்க 6 மாதங்களுக்கு பேறு கால விடுப்பு பெற உரிமை உண்டு என்று மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மகாராஷ்டிர மாநிலத்தில், ரயில்வே துறையில் பணிபுரியும் பெண், குழந்தை பெறுவதற்காக ஒரு வாடகைத் தாயுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தார். இந்நிலையில், அந்த வாடகைத் தாய்க்கு தற்போது 33 வார கால மகப்பேறு நிறைவடைந்துள்ளது.
பிரசவ காலம் நெருங்குவதால், அக்குழந்தையை பராமரிக்கும் பொருட்டு தனக்கு மகப்பேறு விடுப்பு வழங்குமாறு ரயில்வே உயரதிகாரிகளிடம் விண்ணப்பித்திருந்தார். அப்போது, வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறும் பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு அளிப்பதற்கு ரயில்வே துறை விதிமுறைகளில் இடம்பெறவில்லை என்று கூறி அந்தப் பெண்ணின் விண்ணப்பத்தை அதிகாரிகள் நிராகரித்தனர்.
இதனால் விரக்தியடைந்த அந்தப் பெண் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.
அந்த வழக்கானது நீதிபதிகள் அனூப் மேத்தா மற்றும் ஜி.எஸ்.குல்கர்னி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த வெள்ளிக்கிழமை (ஜன.29) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரத்துக்கு இடைக்கால தீர்வாக, மனுதாரருக்கு மகப்பேறு கால விடுப்பாக 180 நாள்கள் (6 மாதம்) வழங்க வேண்டும் என்று ரயில்வே துறைக்கு உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கை அடுத்த மாதம் (மார்ச்) 11 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக தெரிவித்தனர்.
சிறார் நீதி திருத்தச் சட்டத்தை எதிர்த்து வழக்கு
புதுடில்லி, பிப்.2- மத்திய அரசின் சிறார் நீதி திருத்தச் சட்டத்தை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில், சிறார் நீதி திருத்த சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியது. இதன்மூலம், பாலியல் வன்முறை, கொலை போன்ற கொடிய குற்றங்களில் ஈடுபடும் 16 வயது நிரம்பிய மற்றும் அதற்கு மேற்பட்ட சிறார்களுக்கு, பிறர் மீது எடுக்கப்படுவதைப் போலவே நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யப்பட்டது. இந்தச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தனது ஒப்புதலை அளித்ததைத் தொடர்ந்து, அது அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில், இந்த திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் பிரமுகரும், சமூக ஆர்வலருமான தாசீன் பூனாவாலா என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “சிறார் நீதி திருத்தச் சட்டமானது, நியாயமற்றது, அவசர கதியில் கொண்டு வரப்பட்டது. அரசமைப்புச் சட்டத்தின் 14 ஆவது பிரிவுக்கு எதிரானது’’என்று கூறப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் இந்த மனு விரைவில் விசார ணைக்கு எடுத்துக் கொள்ளப்படலாம்  எனத் தெரிகிறது.
டில்லியில் மருத்துவ மாணவி நிர்பயா என்பவர் ஓடும் பேருந்தில் கூட்டுப் பாலியல் வன்முறை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நபர்களில் ஒருவரின் வயது குறைவாக இருந்ததால், அவரை சிறார் கூர்நோக்கு இல்லத்தில் 3 ஆண்டுகளுக்கு கண்காணிப்பில் வைக்க உத்தரவிடப்பட்டது. இவ்வாறு குறைந்தபட்ச தண்டனை மட்டும் விதிக்கப்பட்டதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதையடுத்து, பாலியல் வன்முறை, கொலை போன்ற கொடிய குற்றங்களில் ஈடுபடும் 16 வயது நிரம்பிய சிறார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில், சிறார் நீதிச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது.
-விடுதலை,2.2.16

.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக