திங்கள், 16 நவம்பர், 2015

ஒரு பெண்ணைக் கைது செய்வதற்கு முன்பு கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்!








இந்திய அரசியல் சாசனம் நாட்டுக் குடிமக்களுக்கு பல அடிப்படை உரிமைகளை அளித்துள்ளது. நாட்டுப் குடிமக்களுக்கு, அவர்கள் விருப்பப்படி, நாட்டு நலனுக்கு ஏற்ற முறையில், மக்களின் நன்மைகளை வலியுறுத்தும் வகையில் பல சுதந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த உரிமை, குடிமக்களோ அல்லது அயல்நாட்டுவாசிகளோ, குற்றம் செய்தால், அவர்களுக்கு மறுக்கப்படுகிறது.
சட்டம், ஒழுங்கை நிர்வகிக்கும் காவல்துறை, அவர்கள் கைது செய்ய உரிமை பெற்றுள்ளது. காவல்நிலையக் கட்டுப்பாட்டில் இருக்கும்போது, வன்முறை, சித்திரவதை நடக்க வாய்ப்பிருக்கிறது. அடிப்படை உரிமைகளின் அத்துமீறலுக்கு வழிவகுக்கிறது.
ஒரு குடிமகனைக் கைதுசெய்யும்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளைப் பற்றிய முதல் திருப்புமுனை தீர்வு D.K.Basu Vs. State Case என்ற வழக்கில் உச்சநீதிமன்றத்திலிருந்து வந்தது. இந்த வழக்கில், குற்றம் சுமத்தப்பட்டவரை கைது செய்து, காவலில் எடுத்து விசாரணை செய்ய, காவல்துறை மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளைக் குறித்து உச்சநீதிமன்றம் சில குறிப்பிட்ட வழிகாட்டுதல்களைஅறிவித்துள்ளது.
இதனால், போலீஸ் காவலில் குற்றம் சாட்டப்பட்டவர் இருக்கும்போது, சித்திரவதைக்கு ஆளாகாமல் தடுக்க முடியும். ஆனால், இந்தியாவில் பெண்கள் குற்றங்களுக்காகக் கைது செய்யப்படும்பொழுது பல சூழ்நிலைகளில் அவர்கள் காவல் நிலையத்தில் பல துன்பங்களுக்கு ஆளாக நேரிடுகிறது. பெண்கள் பல காவல் நிலையங்களில் பாலியல் கொடுமைகளைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், உச்சநீதிமன்றமும், அரசியல்வாதிகளும் சேர்ந்து பெண்களின் பாதுகாப்பிற்காக பல வழிகாட்டுதல்களை ஏற்படுத்தியுள்ளார்கள்.


பெண்களைக் கைது செய்யும்போது காவல்துறை மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்:-
1.    கைது செய்யப்பட்ட பெண்களை, ஆண் குற்றவாளிகளிடமிருந்து பிரிக்கப்பட்டு, தனி லாக்-_அப்பில் அடைக்கப்பட வேண்டும். தனியாக லாக்_அப் இல்லாவிட்டால், பெண்களை தனி அறைகளில் அடைக்க வேண்டும். மேலும், பெண்கள் கைது செய்யப்படும்போது, பெண் அதிகாரிகளின் மேற்பார்வையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2.    பெண்களை, சூரிய அஸ்தமனம் -_ சூரிய உதயம் இடையே அதாவது இருட்டியபிறகு, கைது செய்யக்கூடாது. ஆண் காவலர்களால் பெண்கள், பாலியல் தொல்லைகளுக்கு காவல் நிலையத்திலேயே ஆளாக்கப்பட்டதால், இந்த விதி உருவாக்கப்பட்டது.
3.    மூன்றாவதாக, பெண்களை, சிறுமிகளை காவல் நிலையத்திற்கோ, வேறு இடங்களுக்கோ விசாரணை செய்ய அழைக்கக்கூடாது. அவர்கள் வசித்துவரும் வீட்டில்தான் விசாரணை மேற்கொள்ள வேண்டும். விசாரணை செய்ய வேண்டிய நேரமும், முறையும் பெண்களுக்கு கூச்சத்தை, அவமானத்தை ஏற்படுத்தாத வகையில் இருக்க வேண்டும்.
4.    பெண் கைதிகளுக்கு, அல்லது வேறு பெண்களுக்கு மருத்துவ சோதனை செய்ய பெண் மருத்துவர்களையே அனுமதிக்க வேண்டும். பெண் அதிகாரிகள் மேற்பார்வையில் இந்த மருத்துவ பரிசோதனை கையாளப்பட வேண்டும். பெண் கைதிகள் குழந்தை பெற்றால், Prenatal and Postnatal Care  பராமரிப்பு அளிக்க வேண்டும்.
5.    பெண்கள் பேறுகாலத்தில் இருந்தால், அவர்களை கைது செய்வதைத் தவிர்க்க வேண்டும். கர்ப்பிணிப் பெண்கள் மட்டுமல்ல, கருவில் இருக்கும் சிசுவும் சேதமுற வாய்ப்புகள் இருப்பதால், இந்த முடிவை முடிந்த அளவிற்குத் தவிர்க்க வேண்டும். மேலும், கருத்தரித்த பெண்களை கட்டுப்படுத்தக் கூடாது.
ஓரளவு சுதந்திரம் அளிக்க வேண்டும். பெண்களையும், சிறுமிகளையும் பெண் காவலர்கள் அல்லது பெண் அதிகாரிகள் பாதுகாக்க வேண்டும். பெண் காவல் அதிகாரிகள் முன்னிலையிலேயே அவர்களிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
 -உண்மை இதழ்,1-15.6.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக