புதன், 10 ஜனவரி, 2024

மதவாத சக்திகளுக்குச் சரியான பாடம்! பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகளை குஜராத் அரசு முன்கூட்டியே விடுவித்தது செல்லாது : விடுவிக்கப்பட்ட 11 பேரும் இரண்டு வாரங்களுக்குள் சிறைக்குத் திரும்ப வேண்டும்


4-17

புதுடில்லி, ஜன.9- பில்கிஸ் பானு கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட விவகாரத்தில் 11 குற்றவாளிகளை முன் விடுதலை செய்த குஜராத் மாநில அரசின் உத்தரவை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், இரண்டு வாரத்தில் குற்றவாளிகள் அனைவரும் சிறையில் சரணடைய வேண்டும் என்று அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.
கடந்த 2002 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நடந்த கோத்ரா ரயில் எரிப்பு நிகழ்வினைத் தொடர்ந்து அம்மாநிலம் முழுவதும் பெரும் கலவரம் வெடித்தது. முஸ்லிம்கள் தாக்கப்பட்டனர். தாக்குதலில் ஆயிரத்திற் கும் மேற்பட்ட அப்பாவிகள் கொல்லப்பட்டனர்.

அப்போது நடந்த வன்முறையில் அய்ந்து மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதுடன், அவருடைய கண்ணின் முன்பாகவே அவருடைய மூன்று வயது மகள் உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கொடூரமாக கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கும் கடந்த 2008 ஆம் ஆண்டு சிபிஅய் சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்தது. இதனையே மும்பை உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது. இந்நிலையில், குற்றவாளிகள் 11 பேரையும் கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி சிறை நன்னடத்தையை அடிப் படையாக் கொண்டு குஜராத் அரசு தண்டனைக் காலம் முடிவடைதற்கு முன்பே விடுதலை செய்து அறிவித்தது.
இதைத்தொடர்ந்து கோத்ரா வன்முறையின் போது கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பில்கிஸ் பானு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில்,‘‘கடந்த 2002 ஆம் ஆண்டு கோத்ரா கலவரத்தின் போது தன்னைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, தனது குடும்ப உறுப் பினர்களைக் கொன்ற 11 குற்றவாளிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டதை ஏற்க முடியாது. அவர் களுக்கான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரம் இருந்தும் சிறை நன்னடத்தை எனக் கூறி குஜராத் அரசு அவர்களை விடுவித்துள்ளது.
குறிப்பாக சம்பவம் நடந்தது குஜராத் என்றாலும் விசாரணை நடத்தி தண்டனை வழங்கியது மகாராட்டிரா மாநிலத்தில் உள்ள நீதிமன்றம்தான். அதனால் குற்றவாளிகள் விடுதலை குறித்து மகாராஷ்டிரா அரசுதான் முடிவு செய்யலாமே தவிர, குஜராத் அரசு எந்த முடிவும் எடுக்க முடியாது. அதனால் குற்றவாளி களின் அனைவரது விடுதலையையும் ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தார். இதேப்போன்று பல பொதுநல மனுக்களும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து வழக்கை விரிவாக விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த அக்டோபர் 12 ஆம் தேதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தது.

இந்த நிலையில் மேற்கண்ட வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் நேற்று (8.1.2024) வழங்கிய தீர்ப்பில், ‘‘இந்த விவகாரத்தில் பில்கிஸ் பானுவின், குற்றவாளிகளுக்கு எதிரான ரிட் மனு விசாரணைக்கு உகந்ததாகும். மேலும் பில்கிஸ் பானு வழக்கு விசாரணை மகாராட்டிரா மாநிலத்தில் நடைபெற்றதால் 11 பேரை விடுவிப்பது குறித்து அந்த மாநில அரசுதான் முடிவெடுக்க வேண் டும். பில்கிஸ் பானு விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு நிவாரணங்களை வழங்க குஜராத் அரசுக்கு அதிகாரம் கிடையாது. அதனால் குற்றவாளிகளை விடுவித்த குஜராத் மாநில அரசின் முடிவு செல்லாது என்பதால் அதனை ரத்து செய்கிறோம். குறிப்பாக பாதிக்கப்பட்ட வர்களின் உரிமைகள் என்பது மிகவும் முக்கியமாகும். மேலும் பெண்களின் மரியாதையும் முக்கியம் வாய்ந்த ஒன்றாகும். அவர்கள் மரியாதைக்கு உரியவர்கள் ஆவார்கள்.
இதில் தன்னிச்சையான உத்தரவுகளை விரைவில் சரி செய்து, பொதுமக்களின் நம்பிக்கையின் அடித் தளத்தை தக்கவைத்துக் கொள்வது இந்த நீதிமன்றத்தின் கடமையாகும். குறிப்பாக தண்டனை என்பது பழிவாங்குவதற்காக கிடையாது. அது சீர்திருத்தங்களை மேற்கொள்வதாகும். குறிப்பாக இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் பல உண்மைகளை மறைத்தும், பொய்யான தகவல்களை தெரிவித்தும் குஜராத் அரசே முன்கூட்டி விடுதலை செய்யலாம் என்ற ஆணையை பெற்றுள்ளனர். அது செல்லாது அதனால் கோத்ரா வன்முறையின் போது பில்கிஸ் பானுவை கூட்டு பாலியல் வன்முறை செய்த 11 முக்கிய குற்றவாளிகளின் விடுதலையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்கிறது. அவர்கள் அனைவரும் அடுத்த இரண்டு வாரத்திற்குள் சிறையில் சரணடைய வேண்டும் என தீர்ப்பளித்தனர்.

சட்டத்தின் ஆட்சியில் இரக்கத்திற்கு இடம் கிடையாது

பில்கிஸ் பானு வழக்கின் தீர்ப்பில் பிளாட்டோ உள்ளிட்ட தத்துவஞானிகளின் கோட்பாடுகளை நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதில்,‘‘தண்டனை என்பது சீர்திருத்தத்திற்காகத் தானே தவிர பழிவாங்குவதற்காக கிடையாது. ஒரு குற்றவாளியை குணப்படுத்த முடிந்தால் அவர் விடுவிக்கப்பட வேண்டும் என்பது மருத்துவத் துறையின் குணப்படுத்தும் கோட்பாட்டை நீதித்துறையுடன் சேர்த்து இணைக்கிறது. ஆனால் அதேவேளையில் பாதிக்கப்பட்டவர்களின் உரிமை என்பதும் மிக முக்கியம். பெண்கள் மரியாதை பெறுவதற்கு உரியவர்கள்.
ஆனால் அதே பெண்களுக்கு எதிராக இவ்வளவு கொடூரமான குற்றத்தை செய்தவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டுமா என்ற மிகப்பெரிய கேள்வி எழுகிறது. இவை அனைத்தையும் தான் இந்த வழக்கின் சாரம்சமாக நாங்கள் கையாண்டிருக்கிறோம். அதன்படி பார்த்தால் பில்கிஸ் பானு தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்தது. ஜனநாயக நாட்டைப் பொறுத்தவரை சட்டத்தின் ஆட்சிதான் நிலைநாட்டப்பட வேண்டும். இங்கு அனுதாபத்திற்கும், இரக்கத்திற்கும் எந்த இடமும் கிடையாது. சட்டத்தின் ஆட்சி இல்லாமல் நீதிமன்றங்களால் நீதியை நிலை நாட்டவே முடியாது. இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

குஜராத் அரசுக்கு கண்டனம்

நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், பில்கிஸ் பானு விவகாரத்தில் முடிவு எடுக்கும் அதிகாரம் மகாராட்டிரா மாநில அரசுக்குதான் உள்ளது என்று உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு குஜராத் அரசு சரியாக வாதிட்டுள்ளது. ஆனால், பொய்யான தகவல்களை கூறி முன்கூட்டி விடுதலை குறித்து குஜராத் அரசு முடிவெடுக்கலாம் என்று குற்றவாளிகள் உச்ச நீதிமன்றத்தில் ஆணை பெற்ற பிறகு குஜராத் தனது நிலையை மாற்றிக் கொண் டுள்ளது. குற்றவாளிகளுடன் இணைந்து அவர்களுக்கு உடந்தையாக குஜராத் அரசு செயல்பட்டுள்ளது. மகாராட்டிரா மாநில அரசுக்கு உள்ள அதிகாரத்தை குஜராத் அரசு பறித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர்.

 

மாலை போட்டு வரவேற்கப்பட்ட பில்கிஸ் பானு வழக்கின் கொடூர பி.ஜே.பி. குற்றவாளிகள்!

கர்ப்பிணிப் பெண் என்றும் பாராமல் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து மூன்று வயது குழந்தை உள்பட 14 பேரை துடிக்க துடிக்கக் கொலை செய்த குற்றவாளிகள் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த நிலையில், அவர்களைச் சிறையில் இருந்து முன் கூட்டியே விடுவித்த குஜராத் மாநில அரசின் தவறான முடிவை நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு – உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததை அடுத்து, குற்றவாளிகள் அனைவரும் மீண்டும் சிறைக்குச் செல்கின்றனர்.

5-15-300x200
சிறையிலிருந்து வெளிவந்தவர் களுக்கு குஜராத் மாநில பா.ஜ.க. பிர முகர்கள் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தியது நினைவில் இருக்கலாம்.
அதே போல் வாழ்நாள் சிறைத் தண்டனை பெற்ற குற்றவாளிகள் சிறையில் சில நாட்களே இருந்தனர். பெரும்பாலான நாட்கள் பிணையில் வெளியே சுற்றிக்கொண்டுதான் இருந்தனர்.
பாபர் மசூதியை இடித்த பா.ஜ.க.வினர், ஒன்றிய அமைச்சர்கள் ஆகவில்லையா?
இதெல்லாம் பா.ஜ.க., சங் பரிவார்க் கூட்டத்தில் சாதாரணம்தானே!

திருமணமான மகன் இறந்துவிட்டால் சொத்தில் தாய்க்கு பங்கு இல்லை


இந்திய வாரிசுரிமை சட்டத்தின்படி, திருமணமான மகன் இறந்துவிட்டால், அவரது சொத்தில் தாய் பங்கு கேட்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பவுலின் இருதய மேரி. இவருக்கு மோசஸ் என்ற மகன் இருந்தார். இவருக்கு கடந்த 2004-ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த அக்னஸ் என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்தத் தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது.
இந்த நிலையில், மோசஸ் கடந்த 2012-ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் இறந்துவிட்டார்.
இதில் அவர் இறப்பதற்கு முன் அவருடைய சொத்தில் உயில் எதுவும் எழுதி வைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், அக்னஸ்க்கும் – பவுலின் இருதய மேரிக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், தன்னுடைய மகனின் சொத்தில் தனக்கும் பங்கு வேண்டும் என்று பவுலின் இருதய மேரி நாகப்பட்டினம் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அப்போது, அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மோசஸின் சொத்தில் அவரது தாய்க்கும் பங்கு உண்டு என்று உத்தரவிட்டு தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து மோசஸின் மனைவி அக்னஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவியாக நியமிக்கப்பட்ட வழக்குரைஞர் பி.எஸ்.மித்ரா நேஷா, ‘கணவர் இறந்தால், அவருடைய மனைவி மற்றும் குழந்தைகளுக்கே சொத்தில் பங்கு உள்ளது. ஒருவேளை மனைவியோ அல்லது குழந்தைகளோ இல்லை என்றால் அவருடைய தந்தை தான் சொத்தின் வாரிசுதாரர் ஆவார். இதில் இறந்துபோன நபரின் தந்தையும் இல்லை என்றால்தான் தாய் மற்றும் சகோதர, சகோதரிகள் வாரிசுகள் ஆவார்கள். எனவே, மோசஸுக்கு மனைவி, குழந்தை உள்ள நிலையில் அவருடைய சொத்தில் யாரும் பங்கு கேட்க முடியாது’ எனத் தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள், திருமணமான மகன் இறந்த நிலையில் அவருடைய சொத்தில் தாய் பங்கு கேட்பதற்கான வழியே இல்லை. இந்திய வாரிசுரிமை சட்டத்தின்படி, சொத்தில் தாய் பங்கு கேட்க முடியாது என்பதை இந்த நீதிமன்றம் தெளிவுபடுத்த விரும்புகிறது.
எனவே, சொத்தில் தாய்க்கும் பங்கு உண்டு என்ற நாகப்பட்டினம் மாவட்ட நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்கிறோம்”என்று தீர்ப்பளித்தனர்.
நன்றி: ‘தினமணி’ – 19.11.2023

செவ்வாய், 7 நவம்பர், 2023

ஜாதி, இனம், நிறம், பிறப்பிடம், கலாச்சார அடையாளம் அடிப்படையில் எந்தப் பாகுபாடும் காட்டக் கூடாது (பதவி உயர்வு வழக்கு ஆணை)



  

உயர் நீதிமன்றம் உத்தரவு

29

மதுரை, நவ. 4- நெல்லை யைச் சேர்ந்த காவலர் ஹாஜாஷெரீப், உயர் நீதி மன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், "நான் தமிழ்நாட்டில் கடந்த 2007-2008 ஆண்டில் நடைபெற்ற இரண்டாம் நிலை காவலர் பணித் தேர்வில் வெற்றி பெற் றேன். என்னுடன் தேர் வானவர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்கிய நிலையில், நான் மனித நீதி பாசறை என்ற அமைப்பின் உறுப்பின ராக இருப்பதால் எனக் குப் பணி நியமன ஆணை வழங்க மறுத்துவிட்டனர். பணி நியமனம் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். எனக்கு பணி வழங்க நீதிமன்றம் உத்தரவிட் டது. அதன்பிறகும் பணி வழங்காததால் மீண்டும் வழக்கு தொடர்ந்தேன். அந்த வழக்கிலும் எனக் குப் பணி வழங்க உத்தர விட்டதால் 2013இல் மணிமுத்தாறு பட்டாலி யன் காவலராக நியமிக் கப்பட்டேன். 

பின்னர் எனக்கு 2007-2008 ஆண்டில் தேர்வானவர்களுடன் சேர்த்து பணி மூப்பு மற்றும் பதவி உயர்வு கோரி மனு அளித்தேன். என் கோரிக்கையை நிராகரித்து கமாண்டர் உத்தரவிட்டார். அவரது உத்தரவை ரத்து செய்து எனக்கு பணி மூப்பு, பதவி உயர்வு, பணப்பலன் வழங்க உத்தரவிட வேண் டும்" என்று கூறப்பட்டி ருந்தது.

இம்மனுவை நீதிபதி பட்டு தேவானந்த் விசா ரித்தார். அரசு வழக்குரை ஞர் வாதிடுகையில், "பணி மூப்பு என்பது நிரந்தர பணியில் சேர்ந்த நாளை கணக்கிட்டு தான் வழங் கப்படும். முன்தேதியிட்டு பணி மூப்பு கோர முடியாது" என்றார். 

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், "இந்த வழக்கில் அதிகாரி கள் சிறுபான்மையினரை சமூக விரோதிகளாக சித் தரித்து அவர்களின் உரி மைகள் மற்றும் வளர்ச் சியை தடுக்கும் உள்நோக் கத்துடன் செயல்படுவ தாக மனுதாரர் வழக்கு ரைஞர் கூறியதை புறக் கணிக்க முடியாது. மனு தாரரை போன்றவர்க ளின் வேதனையை போக் குவது நீதிமன்றத்தின் கடமை. மனிதர்களாக பிறக்கும் யாவருக்கும் தான் எந்த வாழ்க்கைப் பாதையில் பயணிக்க வேண்டும் என்பதை தீர் மானிக்கும் உரிமை உண்டு. பெற்றோர்கள், பிறக்கும் இடம், இனம், நிறம், மொழி, ஜாதியை தேர்வு செய்து பிறக்க முடியாது. 

இங்கு உயர்ந்தவர், தாழ்ந்தவர் யாரும் இல்லை. அனைவருக்கும் சமவாய்ப்புகள் வழங்கப் பட வேண்டும். விருப்பு, வெறுப்பு இல்லாமல் திறனை வெளிக்கொண்டு வருவதற்கான வாய்ப்பு களை வழங்க வேண்டும். அப்படி செய்தால் தான் அனைவருக்கும் சமூகத் திற்காக பணிபுரியும் வாய்ப்புகள் கிடைக்கும். ஜாதி, இனம், நிறம், பிறக்கும் இடம், கலாச்சார அடையாளங்கள் அடிப்படையில் எந்த பாகுபாடும் காட்டக் கூடாது. நாட்டின் நல னுக்கு எதிரானவர்கள், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்ப வர்கள் என மோசமான நடத்தை கொண்டவர் களை மட்டுமே தடுக்க வேண்டும். அப்படி எந்த தடையும் இல்லாத நிலை யில் ஒருவருக்கு பணி மற்றும் பதவி உயர்வு வழங்குவதை தடுக்கக் கூடாது. 

பொறுப்பான குடி மகன்களாக இருப்பவர்க ளுக்கு தடை விதிக்காமல், தேசப்பணியில் தங்களின் பங்களிப்பை நிரூபிக்க போதுமான வாய்ப்புகள் வழங்க வேண்டும். இந்த 21ஆவது நூற்றாண்டில் அனைவரின் அணுகு முறையில் மாற்றம் வர வேண்டும். குறிப்பாக ஒன்றிய, மாநில அரசு அதிகாரிகளின் அணுகு முறையில் மாற்றம் வர வேண்டும். இல்லாவிட் டால் மனுதாரர்களை போன்றவர்கள் பாதிக்கப் படுவர்.

மனுதாரர் 5 ஆண்டு தாமதமாக பணியில் சேர்ந்ததற்கு மனுதாரர் காரணம் அல்ல. அதி காரிகள் தான் காரணம். எனவே, மனுதாரருக்கு 2007-2008 ஆண்டிலி ருந்து பணி மூப்பு வழங்க மறுத்து பிறப்பித்த உத்த ரவு ரத்து செய்யப்படுகி றது. 

மனுதாரருக்கு 2007--2008 ஆண்டில் பணியில் சேர்ந்தவர்களுடன் பணிமூப்பு வழங்க வேண்டும். பணி மூப்பை 4 வாரத்தில் நிர்ணயம் செய்ய வேண்டும்" என்று உத்தரவில் கூறப்பட்டுள் ளது.

புதன், 25 அக்டோபர், 2023

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

  

புதுடில்லி,  ஆக.22 கோயில்களில் ஆகமம் மற்றும் பூஜை முறைகளில் தேர்ச்சி பெற்றவர்களில்  எந்த ஜாதியைச் சேர்ந்தவரை வேண்டுமானாலும் அர்ச்சகராக நியமனம் செய்யலாம் என்று  சென்னை உயர்நீதிமன்றம் 26.06.2023 அன்று  உத்தரவிட்டது.  

இந்த உத்தரவிற்குத் தடைகோரி சேலம் சுகவனேஸ்வரர் கோவில் சுப்பிரமணிய குருக்கள்  தொடர்ந்த வழக்கை இன்று   (22.8.2023) தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு தொடரும்  என்றும்,  ஆகமங்களைப் பயின்ற யார் வேண்டுமா னாலும்  அர்ச்சகர் ஆகலாம்  என்றும்  அதிரடியாக உத்தரவிட்டுள்ளது .

சென்னை உயர்நீதிமன்ற (மதுரை கிளை) தீர்ப்பை ரத்து செய்து உச்சநீதிமன்றம் அதிரடி - சுயமரியாதைத் திருமணங்களுக்குப் பொது அறிவிப்பு தேவையில்லை!

 

 4

புதுடில்லி, ஆக. 30 - "இந்துத் திருமணச் சட்டம் 1955-இன் படி, வழக்குரைஞர்களின் அலுவலகத் தில் செய்யப்படும் திருமணங்கள் செல்லாது" என்ற சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் 28.8.2023 அன்று ரத்து செய்தது.

வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் நபரின் அடிப்படை உரிமையை நிலைநிறுத்தும் வகையில், இந்த தீர்ப்பை வழங்கியிருக்கும் நீதிபதிகள் எஸ்.ரவீந்திர பட், ரவிந்த் குமார் அடங் கிய உச்ச நீதிமன்ற அமர்வு, “சுயமரியாதைத் திருமணத்திற்கு பொது அறிவிப்பு தேவை என்ற அனுமானத்தின் அடிப்படையிலான சென்னை உயர்நீதிமன்றத்தின் பார்வை குறுகியது” என்றும் குறிப்பிட்டுள்ளது.

இந்துத் திருமணச் சட்டத்தில், தமிழ்நாடு அரசு கொண்டுவந்த சட்டத்திருத்தம் மூலம் உட்பொதிக்கப்பட்ட பிரிவு 7A-, சுயமரியாதைத் திருமண முறையை அடிப்படையாகக் கொண் டது. இந்த பிரிவின்படி, இரண்டு இந்துக்கள் சடங்குகளைப் பின்பற்றாமல் அல்லது ஒரு மதத் தலைவரால் நிச்சயிக்கப்படாமல், தங்கள் நண்பர் கள் அல்லது உறவினர்கள் அல்லது பிற நபர்கள் முன்னிலையில் திருமணத்தை அறிவித்து, திருமணம் செய்து கொள்ளலாம். இது அய்ம்ப தாண்டுகளுக்கும் மேலாக நடைமுறையிலும் உள்ளது.

ஆனால், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அண்மையில் வழங்கிய ஒரு தீர்ப்பு, இந்த நடைமுறைக்கு எதிராக அமைந்தது.

"வழக்குரைஞர்கள் செய்துவைக்கும் திரு மணங்கள் செல்லாது; என்றும் சுயமரியாதைத் திருமணம் (சுயமரியாதைத் திருமணம்) இரகசி யமாக நடத்தப்பட முடியாது" என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அமர்வு, கடந்த 2014-ஆம் ஆண்டு தீர்ப்பு ஒன்றை வழங்கியிருந்தது. இந்தத் தீர்ப்பைப் பின்பற்றியே, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை யும் கடந்த 2023 மே 5 அன்று தீர்ப்பு வழங்கியது.

இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் இளவரசன். இவர் 2023 ஏப்ரலில் திருப்பூரில், வழக்குரைஞர்கள் முன்னிலையில் தனது தோழியை சுயமரியாதை திருமணம் செய்து கொண்டார். ஆனால், மணப்பெண்ணின் பெற் றோர் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, “வழக்கு ரைஞர்கள் முன், அவர்களின் அலுவலகத்தில் நடந்த திருமணம் செல்லாது" என்று தீர்ப்பு வழங்கியது.

மேலும், "மனுதாரருக்கு சுயமரியாதை திரு மணம் நடந்ததாக சான்றளித்த வழக்குரைஞர்க ளிடம் பார் கவுன்சில் மூலமாக விளக்கம் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும்; "இது போன்ற திருமணம் ஏதாவது நடந்ததாக சான் றிதழ் வழங்கியிருந்தால் அவர்களுக்கும் நோட் டீஸ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் தீர்ப்பை எதிர்த்து, இளவரசன் உச்ச நீதிமன்றத்தில், மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் எஸ். ரவீந்திர பட் மற்றும் அரவிந்த் குமார் அடங்கிய அமர்வு விசாரித்து திங்களன்று தீர்ப்பு வழங்கியது.

அதில், இந்துத் திருமணச் சட்டத்தின் பிரிவு 7கி-இன் (தமிழ்நாட்டில் பொருந்தும்) படி, சுயமரி யாதை மற்றும் சீர்திருத்த திருமணங்களுக்கு சிறப்பு வழிவகை செய்யப்பட்டு உள்ளது. நாக லிங்கம் எதிர் சிவகாமி வழக்கிலும் (2001) "7 ஷிசிசி 487' மூலம் பிரிவு 7கி' உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது; எனவே, இதன் அடிப்படை யிலான சுயமரியாதைத் திருமணத்திற்கு பொது அறிவிப்பு தேவையில்லை, என்று முக்கியமான உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது. "ஒவ்வொரு திருமணத்திற்கும் பொது நிச்சய தார்த்தம் அல்லது பொது அறிவிப்பு தேவை என்ற சென்னை உயர் நீதிமன்றம் பார்வை, அனுமானத்தின் அடிப்படையில் அமைந்ததாக வும்; திருமணம் செய்து கொள்ள விரும்பும் தம்பதிகள், குடும்ப எதிர்ப்பு அல்லது தங்களின் பாதுகாப்பு குறித்த பயம் போன்ற பல்வேறு காரணங்களால் பொது அறிவிப்பை வெளியிடுவதைத் தவிர்க்கலாம்; அதையும் மீறி, இது போன்ற சந்தர்ப்பங்களில், பொது அறிவிப்பைச் செயல் படுத்துவது உயிர்களை ஆபத்தில் ஆழ்த்தலாம்.

வயது வந்த இருவர்- சுயமாக விருப்பப்பட்டு முடிவெடுக்கும்போது, அவர்களுக்கு குடும்பத்தி லிருந்து கொடுக்கப்படும் பிற அழுத்தங்களைக் கற்பனை செய்வது கடினம் அல்ல. அதனை நீதிமன்றங்கள் பார்க்காமல் விடுவது, அரசியல மைப்பின் 21-ஆவது பிரிவு வழங்கும்-வாழ்க் கைத் துணையை தேர்ந்தெடுக்கும் அடிப்படை உரிமையை மீறுவதாகிவிடும்" என்றும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், "வழக்குரைஞர்கள் பல திறன்களைக் கொண்டுள்ளனர். அவர்கள் நீதிமன்றத்தின் அதி காரிகளாக, ஆலோசகராக, வழக்குரைஞராகச் செயல்படும்போது, திருமணங்களை முன்வந்து நடத்திவைக்கக் கூடாது. அதேநேரம் அவர்கள் தனிப்பட்ட முறையில் நண்பர்கள், உறவினர்கள், சாட்சிகள் என்ற அடிப்படையில் திருமணங்களில் பங்கு வகிக்க உரிமை உண்டு" என்றும் உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவையும் ரத்து செய்துள்ளது.

வழக்குரைஞர்களும் சுயமரியாதைத் திருமணத்தை நடத்தி வைக்கலாம்'' -உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது!

 

 

நூறு ஆண்டுகளுக்கு முன்னர் பெரியார் சொன்னார் - உச்சநீதிமன்றம் இன்று வரவேற்றுத் தீர்ப்பளிக்கிறது!

பெரியார் கொள்கை ஒரு ''விஞ்ஞானம்'' - இறுதியில் அதுதான் வெல்லும்!

1

சுயமரியாதைத் திருமணங்களை வழக்குரை ஞர்கள் நடத்தி வைக்கலாம் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பினை வரவேற்கிறோம்.  தந்தை பெரியார் நூறு ஆண்டுகளுக்கு முன் சுயமரியாதைத் திரு மணத்தை அறிமுகப்படுத்தினார் -  இடையில் கூடத் தடை ஏற்பட்டாலும், நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் உச்சநீதிமன்றம் அதனை அங்கீகரிக்கிறது; காரணம், பெரியார் ஒரு விஞ்ஞானம் - அதுவே இறுதியில் வெல்லும் என்று  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

‘‘நாட்டில் நடைபெறும் சுயமரியாதைத் திருமணங் களுக்குப் பொது அறிவிப்புத் தேவையில்லை.''

‘‘இந்து திருமணச் சட்டம் 1955-இன்படி, வழக்குரைஞர் களின் அலுவலகத்தில் செய்யப்படும் திருமணங்கள் செல்லாது  (சில மாதங்களுக்குமுன் வந்த சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு). தற்போது வழக்குரைஞர்கள் அலுவலகத்திலும் சுயமரியாதைத் திருமணத்தை நடத்திக் கொள்ளலாம்'' என்று மிக அருமையான, முற் போக்கான, மனித சமத்துவம், மனிதநேயத்துடன் கூடிய தீர்ப்பினை உச்சநீதிமன்றம் வழங்கியிருப்பது மிகவும் பாராட்டி வரவேற்கத்தக்கதாகும்.

தந்தை பெரியாரால் உருவாக்கப்பட்ட சுயமரியாதைத் திருமணம்!

தந்தை பெரியார் என்ற பகுத்தறிவுப் பகலவன் உருவாக்கிய வாழ்க்கை இணையேற்பு விழா - எளிய முறையில் இரண்டு சாட்சியங்களோடு நடத்திக் கொள்ள லாம். ஆண் - பெண் சமத்துவம், சம உரிமை, சமவாய்ப்பு, நட்பாளர்களாக வாழ்விணையர்கள், ஜாதி, மதச், சடங்குகளுக்கு இடமில்லாத ஒருவித அன்பும், புரிதலும் மிக்க எளிய மணமுறைதான் அமைதிப் புரட்சி பூத்துக் குலுங்கிக் காய்த்துக் கனிந்த சுயமரியாதைத் திருமண முறை.

இந்தத் திருமண முறை செல்லாது என்று 1953 இல் சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் (உயர்ஜாதிப் பார்ப்பனர்கள்) தந்தை பெரியாரே சாட்சியம் கூறிய வாழ்க்கை ஒப்பந்த நிகழ்ச்சியை - பல ஆண்டுகளுக்குப் பிறகு செல்லாது என்று தீர்ப்பு வழங்கினர். (தெய்வானை ஆச்சி க்ஷிs சிதம்பரம் வழக்கு).

அத்தீர்ப்பை சற்றும் பொருட்படுத்தாமலேயே பல்லாயிரக்கணக்கானத் திருமணங்கள் - சுயமரியாதைத் திருமணங்களாகத் தொடர்ந்து நடந்தே வந்தன!

1967 இல் சுயமரியாதைத் திருமணத்துக்கு 

சட்ட வடிவம் கொடுத்தார் அறிஞர் அண்ணா

1967 இல் பதவியேற்ற அறிஞர் அண்ணா தலைமை யிலான அமைச்சரவை சுயமரியாதைத் திருமணம் சட்டப்படி செல்லும் (இந்துத் திருமணச் சட்டத் திருத்தம் 7Aஎன்ற புதிய பிரிவு இணைப்புமூலம்) என ஒருமனதாக சட்டமன்றத்தில் புதிய சட்டம் நிறைவேற்றி, அதற்குப் பின்னோக்கிய கால அதிகாரத்தையும் (with retrospective effect) அளித்து தந்தை பெரியார் மகிழ, அவருக்கே காணிக்கையாக்கி, அறிஞர் அண்ணாவின் தி.மு.க. அரசு செய்து புதிய வரலாறு படைத்தது!

அதன்பின்னர், சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருவர் அத்திருத்தம் செல்லாது என்று மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்குப் போட்டார்; அதனையும் இரு நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்து, சுயமரியாதைத் திருமணம் செல்லுபடியாகும் என்ற சட்டத் திருத்தத்தை ஏற்றே அருமையான தீர்ப்பினை வழங்கினர்!

இந்தியாவிலேயே எங்கும் இல்லாத புதுமை, புரட்சி, பொதுக்கூட்ட மேடைகளில்கூட எளிய முறையில் இத்திருமணம் நடைபெற்றது - சிக்கனமும், எளிமையும் கலந்த முறையில். இப்போது 70 ஆண்டுகளில் என்னே வெற்றியின் விரிவு - வெளிச்சம்!

வழக்குரைஞர்களும் சுயமரியாதைத் திருமணத்தை நடத்தலாம் என்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது!

2

திருப்பூரில் 2023 இல் வழக்குரைஞர்கள் முன்னிலை யில் நடைபெற்ற சுயமரியாதைத் திருமணம் செல்லாது என்று தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை -உச்சநீதிமன்ற மேல்முறையீட்டில், ‘‘வழக்குரைஞர்கள் அலுவலகத்தில் நடைபெற்ற திருமணம் செல்லும்; சுயமரியாதைத் திருமணத்தை எங்கும், எவர் முன் னிலையிலும் நடத்திக் கொள்ளலாம்'' என்ற மிக முற் போக்கான தீர்ப்பை மாண்பமை நீதிபதிகள் ரவீந்திர பட், அரவிந்த் குமார் ஆகியோர் மிக அருமையாக அர சமைப்புச் சட்ட 21 ஆவது பிரிவின்படி சிறப்பான தீர்ப்புத் தந்துள்ளனர்.

‘‘வயது வந்த இருவர், சுயமாக விருப்பப்பட்டு முடிவெடுக்கும்போது, அவர்களுக்குக் குடும்பத்தி லிருந்து கொடுக்கப்படும் பிற அழுத்தங்களைக் கற்பனை செய்வது, கடினம் அல்ல; அதனை நீதிமன்றங்கள் பரிசீலிக்காமல் விடுவது, அரசமைப்புச் சட்டத்தின் 21 ஆவது பிரிவு வழங்கும் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் அடிப்படை உரிமையை மீறுவதாகும்'' என்று இந்த நீதிபதிகள் பழைமையின் - சனாதனத்தின் மண்டையில் ஓங்கி நீதியைத் தட்டி தட்டித் தந்துள்ளனர்!

பெரியார் அன்று சொன்னார் - 

உச்சநீதிமன்றம் இன்று சொல்லுகிறது!

இதை சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பே தந்தை பெரியார், அவருக்கே உரிய பாணியில், ‘‘வயது வந்த ஒரு ஆணும் - பெண்ணும் ஒருவரை ஒருவர் விரும்பி முடிவு செய்யும்போது, அதில் மூன்றாவது நபர் குறுக்கிடுவது அதிகப்பிரசங்கித்தனம் - ஆணவம் கலந்த அகம்பாவ எஜமானத்தனம்'' என்று கூறி, சுயமரியாதைச் சூடு போட்டார்!

இன்று உச்சநீதிமன்றம் சட்டப்பூர்வமாக இதனைக் கூறும் அளவுக்கு பெரியார் கொள்கை வெற்றி பெற்று தகத்தகாய ஒளிவீச்சுடன் உலா வருகிறது!

‘‘எனது கொள்கை ஒருபோதும் தோல்வி அடையாது; வேண்டுமானால், வெற்றிகள் காலதாமதம் ஆகலாம்'' என்றார் தந்தை பெரியார்.

அது எவ்வளவு சரியான முன்னோட்ட முத்தான பிரகடனம் பார்த்தீர்களா? அதுபோலவே,

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் - நிறைவேற்றம்!

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் பிரச்சினை 55 ஆண்டுகளான நிலையில், உச்சநீதிமன்றத்தின் அண்மைக்கால இரண்டு தீர்ப்புகள் - கடந்த வாரத்தில் தொடர்ந்து, ‘‘ஜாதி அடிப்படையில் அர்ச்சகர் நியமனம் செல்லாது'', ‘‘அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்கள் - தகுதியுடன் நியமனம் செய்யப்படுவது தொடருவதற்கு எத்தடையும் இல்லை'' என்று கூறி, சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர் களது ‘திராவிட மாடல்' ஆட்சியில், அரை நூற்றாண்டாக சட்டப் போராட்டத்திலிருந்த ஜாதி - தீண்டாமை ஒழிப் புக்கான இந்த  அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்கள் நியமன வெற்றி!

பெரியார் கொள்கை ஒரு விஞ்ஞானம் - 

அதுவே இறுதியில் வெல்லும்!

தந்தை பெரியாரின் வெற்றி!

திராவிட இயக்கத்தின் வெற்றி!

நூற்றாண்டு விழா நாயகர் கலைஞரின்

முழு வெற்றியாக இப்போது ஜொலிக்கிறதே!

‘காரிருளால் சூரியன்தான் மறைவதுண்டோ?

பேரெதிர்ப்பால் பெருங்கொள்கை (திராவிடம்) தோற்பதுண்டோ?'

சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு! - புரிகிறதா?

இதனை ஊர் அறிகிறது!

உலகம் அறிந்து மகிழ்கிறது, வரவேற்கிறது!

எனவேதான், சனாதனம் அலறுகிறது;

ஆரியம் பதறுகிறது!

பெரியார் - திராவிடர் கொள்கை என்றும் வெல்லும்!

காரணம், இது ஒரு ‘‘விஞ்ஞானம் - மெய்ஞானம்!''

உண்மை அறிவு - அனுபவம் கலந்த வெற்றி!

அறிவியல் - உண்மை அறிவும் சொத்து!

புரிந்துகொள்வீர்! பகிர்ந்து கொள்வீர்!!


கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
30.8.2023

வெள்ளி, 29 செப்டம்பர், 2023

குறைந்த அளவு ஓய்ஊதியம் அமல்!

வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்களுக்கு குறைந்த அளவு ஓய்ஊதியம் அமல்!
-விடுதலை நாளேடு, 30.9.14