செவ்வாய், 5 மார்ச், 2024

கல்வி, வேலைவாய்ப்பில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உரிய இட ஒதுக்கீடு! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!


ஞாயிறு, 3 மார்ச், 2024

கணவனை இழந்த பெண்ணுக்கு தந்தையின் வாரிசு வேலையை வழங்க வேண்டும் : நீதிபதிகள் உத்தரவு


திருமணமான பெண்ணுக்கு வாரிசு வேலை பெற தகுதி இல்லை என்ற உத்தரவு ரத்து உயர்நீதிமன்றம் தீர்ப்பு




Published March 20, 2023, விடுதலை நாளேடு

சென்னை,மார்ச் 20- -‘திருமணமான மகள் வாரிசு வேலை பெற தகுதியானவர் இல்லை’  என்ற தனி நீதிபதியின் உத்த ரவை ரத்து செய்து உயர்நீதிமன்ற டிவிசன் பெஞ்ச் தீர்ப்பு அளித்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சரஸ்வதி. இவரது தாயார், சத்துணவு திட்டத்தின் கீழ் சமையல்காரராக வேலை செய்தார். கடந்த 2014ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி அவர் இறந்தார். இதையடுத்து, கருணை அடிப்படையில் வாரிசு வேலை கேட்டு சரஸ்வதி அதே ஆண்டு ஜூன் 5ஆம் தேதி மனு கொடுத்தார். அந்த மனு பரிசீலிக்கப்படாததால், மீண்டும் 2017ஆம் ஆண்டு ஆகஸ்டு 7ஆம் தேதி மனு கொடுத்தார். இந்த மனுவை மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அதிகாரி நிராக ரித்தார். வாரிசு வேலை கேட்டு 3 ஆண்டுக்குள் விண்ணப் பிக்கவில்லை என்று காரணமும் கூறியிருந்தார்.

இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் சரஸ்வதி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அந்த தீர்ப்பில், மனுதாரர் திருமணஆம் ஆனவர் என்பதால், அவர் வாரிசு வேலை பெற தகுதியானவர் கிடையாது என்றும் கூறப்பட்டு இருந்தது. இதை எதிர்த்து சரஸ்வதி மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனு உயர்நீதி மன்றம் நீதிபதிகள் ஆர்.சுப்பிர மணியன், கே.கோவிந்தராஜன் திலகவதி ஆகி யோர் விசாரித்தனர். அப்போது மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர் அகிலேஷ் ஆஜராகி, கருணை அடிப் படையில் திருமணமான பெண்கள் வாரிசு வேலை பெற தகுதியில்லை என்று கருநாடகா மாநில அரசு கொண்டு வந்த சட்டத்தை செல்லாது என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அந்த தீர்ப்புக்கு எதிராக தனி நீதிபதி தீர்ப்பு அளித்துள்ளார்.

மேலும் சத்துணவு உதவியாளர் மற்றும் சமையல்காரர் பதவிக்கு பெண்கள் மட்டுமே தகுதியானவர்கள் என்ற நிலை யில், தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.

அரசு தரப்பில் சிறப்பு அரசு பிளீடர் ஜி.நன்மாறன் ஆஜராகி, திருமணமான மகள் வாரிசு வேலை பெற தகுதியானவர் என்று வைத்துக் கொண்டாலும், விதி களின்படி வேலை கேட்டு 3 ஆண்டுக ளுக்குள் அவர் விண்ணப்பிக்க வில்லை என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், திருமணமான பெண்கள் வாரிசு வேலை கோர முடியாது என்று கருநாடகா அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய் துள்ளது. அந்த தீர்ப்பின்படி, மனுதாரர் திருமணமானவர் என்பதால், அவர் வாரிசு வேலை கேட்க முடியாது என்ற தனி நீதிபதி தீர்ப்பை ஏற்க முடியாது. தனி நீதிபதி தீர்ப்பை ரத்து செய்கிறோம். மனுதாரருக்கு 4 மாதத்துக்குள் வேலை வழங்க வேண்டும் என்று கூறினர்.


வியாழன், 22 பிப்ரவரி, 2024

அத்தை, மாமன் – மகன், மகளுக்கு இடையே திருமணம் செய்து கொள்ளக் கூடாது உத்தராகண்டில் பொது சிவில் சட்டம் அமல்

 



டேராடூன், பிப். 11- இந்தியா சுதந்திரம் அடைந் தது முதலே விவாதிக் கப்பட்டு வரும் சட்டம், பொது சிவில் சட்ட மாகும். இந்த சட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பும், ஒரு தரப் பினரின் ஆதரவும் நிலவி வருகிறது. இந்தியாவில் வசிக்கும் சிறுபான்மையினர், பொது சிவில் சட்டத்தை தங்களது உரிமைகளைப் பறிக்கும் ஒன்றா கவே கருதுகிறார்கள். இந்த பொது சிவில் சட்டத்தை திருமணம், விவா கரத்து, சொத்துரிமை, குழந்தைக ளைத் தத்தெடுப்பது உள்ளிட்ட பல்வேறு தனி நபர் உரிமைகள் தொடர் பாக அந்த நபர்களின் மதத்திற்கு ஏற்ப இயற்றப்பட்டிருக்கிறது.

இதனிடையே, உத்த ராகண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, மீண்டும் மாநில முதலமைச்சராகப் பொறுப்பேற்ற போது மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அமல்படுத் தப்படும் என்று உறுதி அளித்தார். இதனைத் தொடர்ந்து, 2 ஆண்டுக ளுக்கு முன் உத்தராகண்ட் மாநி லத்தில் நடைபெற்ற முதல் அமைச் சரவைக் கூட்டத்தில், பொது சிவில் சட்டத்தை அமல் படுத்த தீர் மானிக்கப் பட்டது.

அதன் அடிப்படை யில், பொது சிவில் சட்ட மசோதாவை தயாரிக்க உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற மேனாள் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையிலான 5 பேர் கொண்டு குழு ஒன்று நியமிக்கப்பட் டது. இந்த குழுவினர், பல்வேறு ஆய்வுப் பணி களை மேற்கொண்டு, பொது சிவில் சட்டத்தை அமல் படுத்துவதற்கான வரைவு மசோதாவை தயார் செய்து முதலமைச் சரிடம் அறிக்கையாகத் தாக்கல் செய்தனர். இந்த வரைவு மசோதா வுக்கு மாநில அமைச்சரவை கடந்த 4 ஆம் தேதி ஒப்புதல் வழங்கியது.
இதனையடுத்து, இந்த மசோ தாவை நிறைவேற் றுவதற்காக கடந்த 5 ஆம் தேதி உத்தராகண்ட் சிறப்பு சட்டமன்றக் கூட் டம் கூடியது. இதை யடுத்து, பொது சிவில் சட்ட மசோதாவை உத்த ராகண்ட் சட்டசபையில் முதலமைச் சர் புஷ்கர் சிங் தாமி 6-.2.-2024 அன்று தாக்கல் செய்தார்.
இந்த சட்டத்தை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் நடை பெற்று வரும் நிலையில், உத்தரா கண்ட் சட்ட சபை வளாகப் பகுதி யில் 144 தடை உத்தரவு பிறப் பிக் கப்பட்டும், வளா கத்தை சுற்றி பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டும் இந்த பொது சிவில் சட்ட மசோதா தாக்கல் செய் யப் பட்டது. மேலும், மசோதா மீது உத்தராகண்ட் சட்டசபையில் விவாதம் நடைபெற்று வந்தது.

3 நாள் விவாதத்துக்குப் பின் கடும் எதிர்ப்பையும் மீறி ஆளும் பா.ஜ.க அரசு உத்தராகண்ட் மாநி லத்தில் பொது சிவில் சட்ட மசோதா 7-2-2024 அன்று நிறை வேற்றியது. இதன் மூலம், நாட்டின் முதல் மாநிலமாக உத்தர காண்டில் பொது சிவில் சட்டம் நிறை வேற்றப் பட்டுள்ளது.
இந்த சட்டத்தின்படி, பலதார திருமணத்துக்கு உத்தராகண்ட் மாநிலத் தில் தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும், மறு மணம், விவாகரத்து குறித்து பொது விதிகளை அமல்படுத்தியுள்ளது. திருமணங்களை போன்று, லிவ்-இன் உற வில் இருக்க விரும்புவோர், மாநில அரசிடம் பதிவு செய்து கொள்வது கட் டாயமாக்கப்பட்டு உள் ளது. அப்படி பதிவு செய்யத் தவறுவோர் மீது சட்டப்படி நட வடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, திருமணம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ள உறவுகள் என்ற பிரிவில், தந்தை சகோதரியின் மகன்/மகள் (அத்தை மகன்/மகள்) மற்றும் தாய் சகோ தரரின் மகன்/மகள் (தாய்மாமன் மகன்/மகள்) என்ற உறவு முறை யும் இடம்பெற்றுள்ளது.
இந்த உறவு முறையில் திருமணம் செய்வோர் மீது கடும் சட்ட நடவ டிக்கை மேற் கொள்ளப் படும் என்று தெரிவிக் கப்பட்டுள்ளது.

ஞாயிறு, 11 பிப்ரவரி, 2024

நரிக்குறவர், குருவிக்காரர் சமுதாய மக்களுக்கு பழங்குடியினர் ஜாதி சான்றிதழ் – தமிழ்நாடு அரசு ஆணை



விடுதலை நாளேடு,
Published May 29, 2023

சென்னை,மே 29 – தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:-

ஒன்றிய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம், நரிக்குறவன், குருவிக் காரன் சமுதாயத்தை தமிழ் நாட் டில் 37-ஆவது இனமாக பழங் குடியினர் பட்டியலில் இணைத்து அறிவிக்கை வெளியிட்டது. 

அதைத் தொடர்ந்து, நரிக் குறவன், குருவிக்காரன் சமுதாயத் தினர், அனைத்து அரசமைப்பு, பாதுகாப்பு மற்றும் நலத் திட்டங் களைப் பெற தகுதியுடைய ஏதுவாக தமிழ்நாடு அரசால் ஆணை வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், பழங்குடியினர் மக்களுக்கு ஜாதிச் சான்றிதழ் வழங்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ள வருவாய் கோட்டாட்சியர்கள், சார் ஆட்சியர்கள் ஆகியோருக்கு நரிக்குறவன், குருவிக் காரன் சமுதாய மக்களுக்கு பழங்குடியினர் ஜாதிச் சான்றிதழ் வழங்குவதற்கு ஏதுவான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படு கின்றன.

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவிலிருந்து பழங்குடியினர் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ள நரிக் குறவன், குருவிக்காரன் சமுதாய மக்களுக்கு பழங்குடியினர் ஜாதிச் சான்றிதழை வழிகாட்டு நெறி முறைகளை பின்பற்றி வழங்க வேண்டும்.

ஏற்கெனவே மிகவும் பிற்படுத் தப்பட்டோர் ஜாதிச் சான்றிதழை மின்வடிவிலான முறையில் பெற் றுள்ள நரிக்குறவன், குருவிக்காரன் சமுதாய மக்களுக்கு, புதிய மின் வடிவிலான ஜாதிச் சான்றிதழ் வழங்கு வதற்கான நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும். அட்டை வடிவி லான, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஜாதிச் சான்றிதழ் வைத்துள்ளவர்களின் ஜாதிச் சான்றிதழை ரத்து செய்து, பழங்குடியினர் ஜாதிச் சான்றிதழ் வழங்குவது தொடர்பாக புதிய இணைய தொகுப்பை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

-இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

புதன், 10 ஜனவரி, 2024

மதவாத சக்திகளுக்குச் சரியான பாடம்! பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகளை குஜராத் அரசு முன்கூட்டியே விடுவித்தது செல்லாது : விடுவிக்கப்பட்ட 11 பேரும் இரண்டு வாரங்களுக்குள் சிறைக்குத் திரும்ப வேண்டும்


4-17

புதுடில்லி, ஜன.9- பில்கிஸ் பானு கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட விவகாரத்தில் 11 குற்றவாளிகளை முன் விடுதலை செய்த குஜராத் மாநில அரசின் உத்தரவை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், இரண்டு வாரத்தில் குற்றவாளிகள் அனைவரும் சிறையில் சரணடைய வேண்டும் என்று அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.
கடந்த 2002 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நடந்த கோத்ரா ரயில் எரிப்பு நிகழ்வினைத் தொடர்ந்து அம்மாநிலம் முழுவதும் பெரும் கலவரம் வெடித்தது. முஸ்லிம்கள் தாக்கப்பட்டனர். தாக்குதலில் ஆயிரத்திற் கும் மேற்பட்ட அப்பாவிகள் கொல்லப்பட்டனர்.

அப்போது நடந்த வன்முறையில் அய்ந்து மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதுடன், அவருடைய கண்ணின் முன்பாகவே அவருடைய மூன்று வயது மகள் உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கொடூரமாக கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கும் கடந்த 2008 ஆம் ஆண்டு சிபிஅய் சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்தது. இதனையே மும்பை உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது. இந்நிலையில், குற்றவாளிகள் 11 பேரையும் கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி சிறை நன்னடத்தையை அடிப் படையாக் கொண்டு குஜராத் அரசு தண்டனைக் காலம் முடிவடைதற்கு முன்பே விடுதலை செய்து அறிவித்தது.
இதைத்தொடர்ந்து கோத்ரா வன்முறையின் போது கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பில்கிஸ் பானு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில்,‘‘கடந்த 2002 ஆம் ஆண்டு கோத்ரா கலவரத்தின் போது தன்னைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, தனது குடும்ப உறுப் பினர்களைக் கொன்ற 11 குற்றவாளிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டதை ஏற்க முடியாது. அவர் களுக்கான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரம் இருந்தும் சிறை நன்னடத்தை எனக் கூறி குஜராத் அரசு அவர்களை விடுவித்துள்ளது.
குறிப்பாக சம்பவம் நடந்தது குஜராத் என்றாலும் விசாரணை நடத்தி தண்டனை வழங்கியது மகாராட்டிரா மாநிலத்தில் உள்ள நீதிமன்றம்தான். அதனால் குற்றவாளிகள் விடுதலை குறித்து மகாராஷ்டிரா அரசுதான் முடிவு செய்யலாமே தவிர, குஜராத் அரசு எந்த முடிவும் எடுக்க முடியாது. அதனால் குற்றவாளி களின் அனைவரது விடுதலையையும் ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தார். இதேப்போன்று பல பொதுநல மனுக்களும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து வழக்கை விரிவாக விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த அக்டோபர் 12 ஆம் தேதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தது.

இந்த நிலையில் மேற்கண்ட வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் நேற்று (8.1.2024) வழங்கிய தீர்ப்பில், ‘‘இந்த விவகாரத்தில் பில்கிஸ் பானுவின், குற்றவாளிகளுக்கு எதிரான ரிட் மனு விசாரணைக்கு உகந்ததாகும். மேலும் பில்கிஸ் பானு வழக்கு விசாரணை மகாராட்டிரா மாநிலத்தில் நடைபெற்றதால் 11 பேரை விடுவிப்பது குறித்து அந்த மாநில அரசுதான் முடிவெடுக்க வேண் டும். பில்கிஸ் பானு விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு நிவாரணங்களை வழங்க குஜராத் அரசுக்கு அதிகாரம் கிடையாது. அதனால் குற்றவாளிகளை விடுவித்த குஜராத் மாநில அரசின் முடிவு செல்லாது என்பதால் அதனை ரத்து செய்கிறோம். குறிப்பாக பாதிக்கப்பட்ட வர்களின் உரிமைகள் என்பது மிகவும் முக்கியமாகும். மேலும் பெண்களின் மரியாதையும் முக்கியம் வாய்ந்த ஒன்றாகும். அவர்கள் மரியாதைக்கு உரியவர்கள் ஆவார்கள்.
இதில் தன்னிச்சையான உத்தரவுகளை விரைவில் சரி செய்து, பொதுமக்களின் நம்பிக்கையின் அடித் தளத்தை தக்கவைத்துக் கொள்வது இந்த நீதிமன்றத்தின் கடமையாகும். குறிப்பாக தண்டனை என்பது பழிவாங்குவதற்காக கிடையாது. அது சீர்திருத்தங்களை மேற்கொள்வதாகும். குறிப்பாக இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் பல உண்மைகளை மறைத்தும், பொய்யான தகவல்களை தெரிவித்தும் குஜராத் அரசே முன்கூட்டி விடுதலை செய்யலாம் என்ற ஆணையை பெற்றுள்ளனர். அது செல்லாது அதனால் கோத்ரா வன்முறையின் போது பில்கிஸ் பானுவை கூட்டு பாலியல் வன்முறை செய்த 11 முக்கிய குற்றவாளிகளின் விடுதலையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்கிறது. அவர்கள் அனைவரும் அடுத்த இரண்டு வாரத்திற்குள் சிறையில் சரணடைய வேண்டும் என தீர்ப்பளித்தனர்.

சட்டத்தின் ஆட்சியில் இரக்கத்திற்கு இடம் கிடையாது

பில்கிஸ் பானு வழக்கின் தீர்ப்பில் பிளாட்டோ உள்ளிட்ட தத்துவஞானிகளின் கோட்பாடுகளை நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதில்,‘‘தண்டனை என்பது சீர்திருத்தத்திற்காகத் தானே தவிர பழிவாங்குவதற்காக கிடையாது. ஒரு குற்றவாளியை குணப்படுத்த முடிந்தால் அவர் விடுவிக்கப்பட வேண்டும் என்பது மருத்துவத் துறையின் குணப்படுத்தும் கோட்பாட்டை நீதித்துறையுடன் சேர்த்து இணைக்கிறது. ஆனால் அதேவேளையில் பாதிக்கப்பட்டவர்களின் உரிமை என்பதும் மிக முக்கியம். பெண்கள் மரியாதை பெறுவதற்கு உரியவர்கள்.
ஆனால் அதே பெண்களுக்கு எதிராக இவ்வளவு கொடூரமான குற்றத்தை செய்தவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டுமா என்ற மிகப்பெரிய கேள்வி எழுகிறது. இவை அனைத்தையும் தான் இந்த வழக்கின் சாரம்சமாக நாங்கள் கையாண்டிருக்கிறோம். அதன்படி பார்த்தால் பில்கிஸ் பானு தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்தது. ஜனநாயக நாட்டைப் பொறுத்தவரை சட்டத்தின் ஆட்சிதான் நிலைநாட்டப்பட வேண்டும். இங்கு அனுதாபத்திற்கும், இரக்கத்திற்கும் எந்த இடமும் கிடையாது. சட்டத்தின் ஆட்சி இல்லாமல் நீதிமன்றங்களால் நீதியை நிலை நாட்டவே முடியாது. இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

குஜராத் அரசுக்கு கண்டனம்

நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், பில்கிஸ் பானு விவகாரத்தில் முடிவு எடுக்கும் அதிகாரம் மகாராட்டிரா மாநில அரசுக்குதான் உள்ளது என்று உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு குஜராத் அரசு சரியாக வாதிட்டுள்ளது. ஆனால், பொய்யான தகவல்களை கூறி முன்கூட்டி விடுதலை குறித்து குஜராத் அரசு முடிவெடுக்கலாம் என்று குற்றவாளிகள் உச்ச நீதிமன்றத்தில் ஆணை பெற்ற பிறகு குஜராத் தனது நிலையை மாற்றிக் கொண் டுள்ளது. குற்றவாளிகளுடன் இணைந்து அவர்களுக்கு உடந்தையாக குஜராத் அரசு செயல்பட்டுள்ளது. மகாராட்டிரா மாநில அரசுக்கு உள்ள அதிகாரத்தை குஜராத் அரசு பறித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர்.

 

மாலை போட்டு வரவேற்கப்பட்ட பில்கிஸ் பானு வழக்கின் கொடூர பி.ஜே.பி. குற்றவாளிகள்!

கர்ப்பிணிப் பெண் என்றும் பாராமல் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து மூன்று வயது குழந்தை உள்பட 14 பேரை துடிக்க துடிக்கக் கொலை செய்த குற்றவாளிகள் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த நிலையில், அவர்களைச் சிறையில் இருந்து முன் கூட்டியே விடுவித்த குஜராத் மாநில அரசின் தவறான முடிவை நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு – உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததை அடுத்து, குற்றவாளிகள் அனைவரும் மீண்டும் சிறைக்குச் செல்கின்றனர்.

5-15-300x200
சிறையிலிருந்து வெளிவந்தவர் களுக்கு குஜராத் மாநில பா.ஜ.க. பிர முகர்கள் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தியது நினைவில் இருக்கலாம்.
அதே போல் வாழ்நாள் சிறைத் தண்டனை பெற்ற குற்றவாளிகள் சிறையில் சில நாட்களே இருந்தனர். பெரும்பாலான நாட்கள் பிணையில் வெளியே சுற்றிக்கொண்டுதான் இருந்தனர்.
பாபர் மசூதியை இடித்த பா.ஜ.க.வினர், ஒன்றிய அமைச்சர்கள் ஆகவில்லையா?
இதெல்லாம் பா.ஜ.க., சங் பரிவார்க் கூட்டத்தில் சாதாரணம்தானே!

திருமணமான மகன் இறந்துவிட்டால் சொத்தில் தாய்க்கு பங்கு இல்லை


இந்திய வாரிசுரிமை சட்டத்தின்படி, திருமணமான மகன் இறந்துவிட்டால், அவரது சொத்தில் தாய் பங்கு கேட்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பவுலின் இருதய மேரி. இவருக்கு மோசஸ் என்ற மகன் இருந்தார். இவருக்கு கடந்த 2004-ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த அக்னஸ் என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்தத் தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது.
இந்த நிலையில், மோசஸ் கடந்த 2012-ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் இறந்துவிட்டார்.
இதில் அவர் இறப்பதற்கு முன் அவருடைய சொத்தில் உயில் எதுவும் எழுதி வைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், அக்னஸ்க்கும் – பவுலின் இருதய மேரிக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், தன்னுடைய மகனின் சொத்தில் தனக்கும் பங்கு வேண்டும் என்று பவுலின் இருதய மேரி நாகப்பட்டினம் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அப்போது, அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மோசஸின் சொத்தில் அவரது தாய்க்கும் பங்கு உண்டு என்று உத்தரவிட்டு தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து மோசஸின் மனைவி அக்னஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவியாக நியமிக்கப்பட்ட வழக்குரைஞர் பி.எஸ்.மித்ரா நேஷா, ‘கணவர் இறந்தால், அவருடைய மனைவி மற்றும் குழந்தைகளுக்கே சொத்தில் பங்கு உள்ளது. ஒருவேளை மனைவியோ அல்லது குழந்தைகளோ இல்லை என்றால் அவருடைய தந்தை தான் சொத்தின் வாரிசுதாரர் ஆவார். இதில் இறந்துபோன நபரின் தந்தையும் இல்லை என்றால்தான் தாய் மற்றும் சகோதர, சகோதரிகள் வாரிசுகள் ஆவார்கள். எனவே, மோசஸுக்கு மனைவி, குழந்தை உள்ள நிலையில் அவருடைய சொத்தில் யாரும் பங்கு கேட்க முடியாது’ எனத் தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள், திருமணமான மகன் இறந்த நிலையில் அவருடைய சொத்தில் தாய் பங்கு கேட்பதற்கான வழியே இல்லை. இந்திய வாரிசுரிமை சட்டத்தின்படி, சொத்தில் தாய் பங்கு கேட்க முடியாது என்பதை இந்த நீதிமன்றம் தெளிவுபடுத்த விரும்புகிறது.
எனவே, சொத்தில் தாய்க்கும் பங்கு உண்டு என்ற நாகப்பட்டினம் மாவட்ட நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்கிறோம்”என்று தீர்ப்பளித்தனர்.
நன்றி: ‘தினமணி’ – 19.11.2023