ஞாயிறு, 2 மார்ச், 2025

இந்து பரிபாலன சட்ட மசோதா – நீதிக்கட்சி ஆட்சியில் நடைமுறைக்கு வந்தது [27.1.1925]

Published January 27, 2025,விடுதலை நாளேடு

 இந்து பரிபாலன சட்ட மசோதா – நீதிக்கட்சி ஆட்சியில் நடைமுறைக்கு வந்தது [27.1.1925]

தமிழ்நாட்டில் உள்ள கோவில்களுக்கு பல்லாயிரம் ஏக்கர் நிலங்களும், சொத்துகளும் இருந்து வந்துள்ளன. இவை அனைத்தும் தனி நபர்கள் மற்றும் கோவில் அர்ச்சகர் பெயரில் உள்ளவர்கள் ஊழல் செய்து பல முறைகேடான செயல்களில் ஈடுபட்டுவந்தனர். மத நம்பிக்கை என்ற பெயரில் மன்னர்கள் இதை தட்டிக் கேட்பதில்லை.
கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவை ஆட்சி செய்த காலத்தில் முதல் முதலாக கோவில்களில் மோசடிகள் நடப்பதாக துணிச்சலுடன், ஊழல் தொடர்பாக பொதுமக்கள் ஏராளமாக புகார்களைக் கொடுக்கத் துவங்கினர்.

இந்நிலையில் 1817-இல் முதல்முறையாக மதராஸ் நிலக்கொடைகள் மற்றும் வாரிசு இன்மையால் அரசுப் பொருட்கள் ஒழுங்குறுத்தும் சட்டம் என்ற பெயரில் ஒரு சட்டம் உருவாக்கப்பட்டது. இந்த சட்டமானது திருக்கோயில்களுக்கு வழங்கப் படும் நிதியுதவி முதலான அறக்கொடைகள் முறையாக பயன்படுத்தப்படுகின்றனவா என்பதையும், தனிப்பட்டவர் நலன்களுக்காகப் பயன்படுத்தப் படுகின்றனவா என்பதையும் கண்காணிக்க வழிவகை செய்தது. இந்த அதிகாரம் அப்போதிருந்த வருவாய் வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அதில் தொடங்கி ஆயிரக்கணக்கான திருக்கோயில்கள் அரசின் நேரடி நிர்வாகத்தின்கீழ் கொண்டுவரப்பட்டன.

1858-இல் இந்தியாவின் நிர்வாகம் கிழக்கிந்திய கம்பெனியிடம் இருந்து பிரிட்டிஷ் அரசுக்கு நேரடியாக சென்றது. இதனால் குறிப்பிட்டச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அரசின் அனைத்து துறைகளின் எல்லா பதவிகளையும் ஆக்கிரமித்தனர். லண்டன் நியமித்த ஆளுநர்கள் இங்கே பொம்மை போல் உட்கார்ந்திருக்க, பார்ப்பனக் கூட்டம் விருப்பம் போல் கோயில்களும், அவற்றின் சொத்துகளும் யார் வசம் இருந்தனவோ, அவர்கள் தங்கு தடையின்றி மீண்டும் அவற்றை அனுபவிக்கத் தொடங்கினார்கள்.

புகார்கள் பெரிய அளவில் வந்தாலும்கூட, மனுதர்மம் மற்றும் சாஸ்திர சாம்பிரதாயங்களை காட்டியதாலும், கோவில் விவகாரங்களில் நடக்கும் மோசடிகளுக்கு என்று சரியான விதிமுறைகள் இல்லாததாலும் பிரிட்டிஷ் அரசும் ஒன்றும் செய்யமுடியாமல் நின்றுவிட்டது .அதேநேரம், கோயில்களின் உள்ளே இருக்கும் விலை மதிப்பு மிக்க தங்க நகைகள், விக்கிரகங்கள் உள்ளிட்டவை தவறாகக் கையாளப்படுவதாகவும்,சொத்துகள் ஆக்கிரமிக்கப்படுவதாகவும் பொதுமக்கள் புகார் கொடுப்பது மட்டும் தொடர்ந்துகொண்டே இருந்தது.

1920-இல் பனகல் அரசர் முதலமைச்சராகப் பொறுப்பேற்று, அப்போது மதராஸ் மாகாணத்தில் இருந்த அனைத்து திருக்கோயில்களையும் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முயற்சித்தார். இதற்காக 1922-இல் இந்து பரிபாலன சட்டத்தை முன்மொழிந்தார். 27.01.1925 இல் இதே நாளில் இந்து பரிபாலன சட்ட மசோதாவை அறிமுகப்படுத்தினார். அப்போதைய வைஸ்ராய் இர்வினிடம் எடுத்துச் சொல்லி இந்த சட்டத்துக்கான ஒப்புதலைப் பெற்றார். இறுதியில் 1927- இல் ‘இந்து சமய அறநிலைய வாரியம்’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இதன்படி திருக்கோயில்களின் நிர்வாகத்தை கட்டுப்படுத்தும் அதிகாரம் வாரியத்திடம் வழங்கப்பட்டது. அதைப்போலவே நிர்வாகம் சரிவர நடைபெறாத கோயிகளுக்கு அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரமும் வாரியத்துக்கு வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இந்து சமய அறநிலைய வாரியத்தினை சீர்படுத்தும் பொருட்டு 1940-ஆம் ஆண்டில் ஒரு சிறப்பு அலுவலரை நியமனம் செய்தது.

இந்து சமயம் மற்றும் அறநிறுவனங்களை வாரியத்திற்கு பதிலாக அரசே நிருவகிக்கலாம் என்ற சிறப்பு அலுவலரின் பரிந்துரையில் இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் வாரியத்தினை ஒரு அரசு நிர்வாகமாக மாற்றி அமைத்தால் பயனுள்ளதாகும் என ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் 1942-ஆம் ஆண்டில் நியமனம் செய்யப்பட்ட அலுவல் சாரா குழு பரிந்துரை செய்தது. இதனை ஏற்று இந்து சமய அறக்கொடைகள் சட்டம் 1951 இயற்றப்பட்டு பல்வேறு சட்டத் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. இந்து சமய அறநிறுவனங்களின் நிர்வாகத்தினை அரசு ஏற்றது. இந்த சட்டத்தில் விரிவான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, 1959-ஆம் ஆண்டின் தமிழ்நாடு இந்து சமய அறக்கொடைகள் சட்டம், 22 – ஜனவரி 1960, 1-ஆம் தேதியன்று அமலுக்கு வந்தது. இதன்படி, இந்து சமய திருக்கோயில்களை நிர்வகிப்பதற்கான தனியான அரசுத்துறை ஒன்று உருவாக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக