வெள்ளி, 18 ஜனவரி, 2019

பொது இடங்களை ஆக்கிரமிக்கும் அனைத்து மதக் கோயில்களையும் அகற்றுக! - சென்னை உயர்நீதிமன்றம்

நடைபாதைக் கோயில் பிரார்த்தனை கடவுளை சேருமா!   - உச்சநீதிமன்றம்


சென்னை, ஜன.6 பொது இடங்களை ஆக்கிரமித் துள்ள அனைத்து மதக் கோயில்களையும் அகற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. நடைபாதைக் கோயிலுக்குச் செய் யப்படும் பிரார்த்தனை கடவுளைப் போய் சேருமா என்று உச்சநீதிமன்றமும் கேள்வி எழுப்பியுள்ளது.  சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்ட மனுவில், தமிழகத்தில் உள்ள அரசு அலுவலக வளாகத்தில் வழிபாட்டு தலங்கள் இருக்கக்கூடாது என்று 1968ஆம் ஆண்டு தமிழக பொதுத்துறை (சட்டம் மற்றும் ஒழுங்கு) அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை வலியுறுத்தி 1994ஆம் ஆண்டு ஒரு சுற்றறிக்கையையும் வெளியிட்டது.

ஆனால், இந்த அரசாணை மற்றும் சுற்றறிக்கைக்கு எதிராக, கோவை வருவாய் கோட்டாட்சியரின் அலு வலகத்தில் சட்டவிரோதமாக பிள்ளையார் கோயில் கட்டப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது. அந்த கோயிலை அகற்றும்படி கோவை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது.

இம்மனுவின்மீதான விசாரணை நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் முன்பு கடந்த 4.1.2019 அன்று வந்தது. இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

பொதுச்சாலை, நீர்நிலைகள், அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து ஏராளமான கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. சில பேராசைக்காரர்கள், மாபியா கும்பல்கள் அரசு நிலங்களை அபகரிக்கவும், பணம் சம்பாதிக்கவும் பொது இடங்களில் கோயில்கள் கட்டுகின்றனர். அதனால், வாகன போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. எந்த ஒரு அனுமதியையும் பெறாமல் சிலர் சாலையோரம் கோயில்களைக் கட்டுகின்றனர்.

இதுபோன்ற செயலை இந்து சமய அறநிலையத் துறை ஒருபோதும் ஊக்குவிக்கக்கூடாது. அது மத உணர்வுகளை தவறாக பயன்படுத்துவதாகி விடும்.

தெய்வத்தின்மீதும் நடவடிக்கை தேவை

பொதுஇடங்களை ஆக்கிரமிக்கும் செயலை ஒருபோதும் அனுமதிக்கவோ, ஆதரிக்கவோ கூடாது. தெய்வமாக இருந்தாலும், பொது இடங்களை ஆக்கிர மிக்க அனுமதிக்க முடியாது. அவ்வாறு ஆக்கிரமித்தால், அந்த தெய்வத்தின் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக சட்டத்தை நீர்த்துப்போக செய்யக்கூடாது.

எனவே, பொதுசாலை, புறம்போக்கு நிலம், நீர்நிலைகள் உள்ளிட்ட இடங்களை ஆக்கிரமித்தும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக வும் உள்ள சட்டவிரோத கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும்.

நில அபகரிப்பாளர்கள், மாபியாக்கள் மூலமாக பொதுஇடங்களை ஆக்கிரமிக்க தெய்வமே வந்தாலும் கூட அனுமதிக்கக் கூடாது. இந்த வழக்கில் தமிழக உள்துறை செயலாளர், நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர், மாநில நெடுஞ்சாலைத்துறை முதன்மை செயலாளர், இந்து சமய அறநிலையத்துறை செயலா ளர், ஆணையர் ஆகியோரை எதிர்மனுதாரர்களாக சேர்க்கிறேன்.

இந்த அதிகாரிகள், தமிழகம் முழுவதும் பொது இடங்களையும், நீர்நிலைகளையும், பொது சாலை களையும் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் குறித்த புள்ளிவிவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யவேண்டும். இந்த வழக்கை 21ஆம் தேதிக்கு தள்ளிவைக்கிறேன். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

உச்சநீதிமன்றம்

டில்லியில் கரோல் பாக் பகுதியில் உள்ள பல ஆக்கிரமிப்புக்களை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது. அதில் பிரம்மாண்டமான அனுமன் சிலை உள்ள கோயிலும் ஒன்றாகும். இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து டில்லி உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. அவைகளை நீதிபதிகள் கீதாமிட்டல் மற்றும் ஹரிசங்கரின் அமர்வு விசாரித்து வருகிறது.

விசாரணையின் போது இந்த அமர்வு, "சட்ட விரோதமாக நடைபாதைகளில் கட்டப்பட்டுள்ள கோயில்களில் செய்யப்படும் பிரார்த்தனைகள் கட வுளைப் போய் சேருமா? அந்தக் கோயில்கள் புனிதத் தன்மை உள்ளதா?" என கேள்வி எழுப்பியது. மேலும் அதே பகுதியில் வாகனம் நிறுத்த சட்ட விரோதமாக அனுமதி அளித்த வடக்கு டில்லி மாநகராட்சிக்கும் தனது கண்டனத்தைத் தெரிவித்தது.

அது மட்டுமின்றி சட்டபூர்வமாக கட்டப்படாத எந்தக் கட்டடத்தையும் அது மத பிரார்த்தனை செய் யும் இடமாக இருந்தாலும் அனுமதி அளித்தது மாநகராட்சியின் தவறு எனவும் குறிப்பிட்டுள்ளது.

- விடுதலை நாளேடு, 6.1.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக