வெள்ளி, 28 ஏப்ரல், 2017

வயது, ஆண், பெண் பேதமின்றி குடும்ப வன்முறைச் சட்டத்தின்கீழ் யார் மீதும் வழக்குப் பதிவு செய்யலாம் உச்சநீதிமன்றம் ஆணையிட்டது

பெண்களைக் குடும்ப வன்முறைகளில் இருந்து பாதுகாப்பதற்காக குடும்ப வன்முறைச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் மராட்டிய மாநிலத்தில் குடும்ப வன்முறைச் சட்டத்தின்கீழ் தொடுக்கப்பட்ட ஒரு வழக்கில் இருந்து 2 சிறுமிகள், ஒரு பெண், ஒரு சிறுவன் என 4 பேரை மும்பை உயர்நீதிமன்றம் விடுவித்து தீர்ப்பு அளித்தது. அந்தத் தீர்ப்பில், அவர்கள் குடும்ப வன்முறைச் சட்டத்தின்கீழ் வருகிற (அடல்ட் மேல்) வயது வந்த ஆண் என்ற வரையறைக்குள் வரவில்லை என்பதால் விடுவிக்கப்படுவதாகக் கூறப்பட்டிருந்தது. இந்தத் தீர்ப்பினால் பாதிக்கப்பட்ட பெண், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் குரியன் ஜோசப், ஆர்.எப்.நாரிமன் ஆகியோரைக் கொண்ட அமர்வு விசாரித்தது. விசாரணை முடிவில் குடும்ப வன்முறையில் இருந்து பெண்களைக் காக்கும் சட்டத்தின் பிரிவு 2 (கியூ)வில் இருந்து, (அடல்ட் மேல்) வயது வந்த ஆண் என்ற வார்த்தைகளை நீக்கி உத்தரவிட்டனர். இதன் காரணமாக இனி ஆண், பெண் என்ற பாலின பேதங்களோ, வயது வந்தவர், வயதுக்கு வராதவர் என்ற வயது பேதங்களோ இன்றி யார் மீதும் குடும்ப வன்முறைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வழி பிறந்துள்ளது.

இது தொடர்பாக நீதிபதிகள் வழங்கியுள்ள தீர்ப்பின் முக்கிய சாராம்சம் வருமாறு: குறிப்பிட்ட சட்டப்பிரிவில் (அடல்ட் மேல் பெர்சன்) வயது வந்த ஆண் என்ற வார்த்தை இடம் பெற்றிருப்பது, எந்த விதமான குடும்ப வன்முறையில் இருந்தும் பெண்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படை நோக்கத்துக்கு முரணாக அமைந்துள்ளது. எனவே, அடல்ட் மேல் பெர்சன் என்றிருப்பதில் அடல்ட் மேல் என்ற 2 வார்த்தைகளை நீக்குகிறோம். இந்த வார்த்தைகள் பாரபட்சம் காட்டுவதாக அமைந்துள்ளன. இதனால் எந்த நோக்கத்துக்காக இந்தச் சட்டம் இயற்றப் பட்டதோ அதுவே பாதிப்புக்குள்ளாகிறது. எனவே, இந்த வழக்கில் மும்பை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை ரத்து செய்கிறோம். அடல்ட் மேல் என்ற வார்த்தைகள் இந்திய அரசியல் சாசனத்தின் பிரிவு 14உடன் ஒத்துப் போகவில்லை என்பதால் குடும்ப வன்முறை சட்டத்தின் பிரிவு 2(கியூ)வில் இருந்து நீக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி உள்ளனர்.

- பத்திரிகைச் செய்தி

 -உண்மை,1-15.1.17


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக