வெள்ளி, 28 ஏப்ரல், 2017

பிடிஆணை இல்லாமல் கைது செய்யலாமா?



பிடி ஆணை (Warrant) இல்லாமல் ஒருவரை கைது செய்ய முடியும். ரிமாண்ட் என்பதற்கு இரண்டு அர்த்தங்கள் உள்ளன. ஒன்று காவலில் வைப்பது, சிறைப்படுத்துவது. மற்றொன்று ஒரு வழக்கை உயர்நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம் அல்லது அதற்கு கீழுள்ள நீதிமன்றத்துக்குத் திருப்பி அனுப்பி, மறு விசாரணைக்கு உத்தரவிடுவது. வாரண்ட் என்றால் பிடி ஆணை. ஒருவரை கைது செய்ய நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுதான் வாரண்ட்.

குற்றமிழைத்தவர்களை விசாரித்துத் தண்டிக்க வேண்டிய அதிகாரம் நீதிமன்றத்துக்கு உண்டு. குற்றத்தைப் புலனாய்வு செய்யும் அதிகாரம் காவல்துறைக்கு வழங்கப்பட்டிருக்கிறது. காவல்துறை தன் புலனாய்வின் போது குற்றம் சாட்டப்பட்டவரை காவலில் வைத்து விசாரிக்க அவசியம் ஏற்படும் தருவாயில் அவரைக் கைது செய்யலாம். குற்றம் சாட்டப்பட்டவர் சாட்சியங்களைக் கலைத்துவிடக் கூடாது என்ற காரணத்தாலும் கைது செய்யப்படுவதுண்டு.

குற்றம் சாட்டப்பட்டவர் விசாரணை முடிந்து தண்டிக்கப்படும்வரை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். அவர் தப்பித்து ஓடிவிடக் கூடாது. அதற்காகவும் குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்படுவதுண்டு. எந்தக் குற்றமும் செய்யவில்லை என்றாலும், முன் எச்சரிக்கை காரணமாக ஒருவர் கைது செய்யப்படலாம். இருப்பினும் சுதந்திர நாட்டில் யாரை வேண்டுமானாலும், எதற்கு வேண்டுமானாலும் கைது செய்துவிட முடியாது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி இந்தியக் குடிமகன், இந்திய ஆளுமைக்கு உட்பட்ட பகுதிகளில் எங்கு வேண்டுமானாலும் சுற்றித் திரியலாம். இது அந்த குடிமகனின் அடிப்படை உரிமை. ஒருவரைக் கைது செய்தல் அவரது அடிப்படை உரிமைக்கு எதிரான செயலாகும். தகுந்த காரணம் இல்லாமல் ஒருவர் கைது செய்யப்படக் கூடாது.

காவல்துறையினரேகூட எல்லாவிதமான வழக்குகளிலும் வாரண்ட் இல்லாமல் கைது செய்ய முடியாது. Cognizable Offence அதாவது பிடி ஆணை தேவையில்லாக் குற்றம் நடைபெற்றால் ஒழிய காவல்துறையால் சம்பந்தப்பட்ட குற்றவாளியை வாரண்ட் இல்லாமல் கைது செய்ய முடியாது. இதுவே Non-Cognizable Offence அதாவது, காவல்துறை, அதிகார வரம்பு கொண்ட மாஜிஸ்ட்ரேட்டிடம் (Judicial Magistrate) சென்று வாரண்ட் பெற்ற பிறகே ஒருவரைக் கைது செய்ய முடியும்.

எவையெல்லாம் பிடி ஆணை தேவையில்லாக் குற்றம் அல்லது, பிடி ஆணை தேவைப்படுகின்ற குற்றம் என்று குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் (Criminal Procedure Code) முதல் அட்டவணையில் வரையறை செய்யப் பட்டிருக்கிறது. அந்த அட்டவணையில் இந்திய தண்டனைச் சட்டத்தின்படி என்ன குற்றங்களுக்கு, என்ன தண்டனை என்பதும் விதிக்கப் பட்டிருக்கிறது. பிடி ஆணை குற்றம் எது, பிடி ஆணை இல்லாக் குற்றம் எது, ஜாமீனில் விடக்கூடியக் குற்றம் எது, அல்லது ஜாமீனில் விடமுடியாதக் குற்றம் எது என்பதும் விவரிக்கப்பட்டிருக்கும்.

இந்திய தண்டனைச் சட்டம் மட்டுமல்லாமல் ஏனைய சட்டங்களிலும் பெரிய குற்றங்கள் அதாவது மூன்று ஆண்டுகளுக்கு அல்லது அதற்கும் மேலாக சிறைத் தண்டனை வழங்கப்படக்கூடிய குற்றங்கள் எல்லாம் Cognizable Offence  என்று  வரையறை செய்யப்பட்டிருக்கிறது. மூன்று ஆண்டுகளுக்குக் கீழ் தண்டனை கொண்ட குற்றங்கள் Non-Cognizable Offence என்று அழைக்கப்படுகிறது.

எடுத்துக்காட்டாக பொது அமைதிக்கு ஊறு விளைவிக்கும் குற்றத்திற்கு மூன்றாண்டுகளுக்கு குறைவாகத்தான் சிறைத் தண்டனை விதிக்கப்-பட்டிருக்கிறது. இருப்பினும் அந்தக் குற்றம் Cognizable குற்றமாகக் கருதப்படுகிறது. இதற்கு நேர்மாறாக இருதாரம் செய்து கொண்டவர்கள் (Adultery) போன்ற குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு அய்ந்தாண்டு களுக்கு மேலான சிறைத் தண்டனை வழங்கப்படும். ஆனால், இதுபோன்ற குற்றங்களை Non-Cognizable  குற்றம் என்று சட்டம் வரையறை செய்திருக்கிறது.

முக்கியமாக காவல் துறையினர்தான் குற்றவாளியைக் கைது செய்ய வேண்டும் என்பதில்லை. பொதுமக்களில் யாரேனும் ஒருவரோ அல்லது பலரோ சேர்ந்தும்கூட, குற்றம் நடந்த சமயத்தில் அல்லது குற்றம் நடக்கவிருக்கின்ற சமயத்தில் (காவலர்கள் யாரும் இல்லாத நிலையில்) குற்றவாளியைக் கைது செய்து அருகிலுள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்கலாம். எனவே, கைது என்பது ஒரு குற்றவாளியைச் சுதந்திர மாக நகர விடாமல் கட்டுப்படுத்தி வைத்திருப்பதேயாகும்.

குற்றவாளியைக் கைது செய்கிறேன் என்ற பேரில், குற்றவாளியின் உயிரை மாய்த்துவிடக் கூடாது. இவை பொது மக்களுக்கு மட்டும் அல்ல, காவல் துறைக்கும் உள்ள வரைமுறை. ஒரு குற்றவாளியைக் கைது செய்வதற்கு எவ்வளவு பலம் தேவைப்படுகிறதோ அவ்வளவு பலத்தைத்தான் பிரயோகிக்க வேண்டும். யாரேனும் ஒருவரைத் தகுந்த காரணமில்லாமல் பொது மக்கள் கைது செய்து வைத்திருந்தால், முறையின்றி சிறை வைத்ததற்காக அவர்களுக்குத் தண்டனை வழங்கப்படும்.

காவல்துறையினர் வாரண்ட்டை நிறை வேற்றும்போது, குற்றம் சாட்டப் பட்டவரோ அல்லது பொதுமக்களோ காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வாரண்டை நிறைவேற்றவிடாமல் காவல் துறையினருக்கு இடையூறு செய்தால் அதுவும் குற்றமாகக் கருதப்படும்.

 -உண்மை,1-15.1.17


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக