செவ்வாய், 1 டிசம்பர், 2015

பொதுநல வழக்கு

பொதுநலவழக்கு, நாட்டுக் குடிமக்கள் ஒரு நீதிமன்றத்தில் தாக்கல் செய்கின்ற வழக்கைக் குறிப்பிடுகிறது. பொதுமக்களின் அமைதியான மகிழ்வான வாழ்க்கைக்கு இடையூறு விளைவிக்கும் மாசு (Air Polution. Water Contamination, Noise Polution) பயங்கரவாதம் (Terrorism) சாலை பாதுகாப்பு. கட்டிட அமைப்பினால் ஏற்படும். அபாயங்கள் என்ற பல பிரச்னைகளுக்குத் தீர்வு காண ஒருவரால் / பலரால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் வழக்குதான் பொதுநல வழக்கு.
பொதுநல வழக்கு தொடர்பான விளக்கம் சட்ட விதிகளிலோ அல்லது ஷரத்துக்களிலோ பதிவு செய்யப்படவில்லை. நாட்டுப் பிரஜைகளின் எண்ணங்களின் பிரதிபலிப்பாக இது உருவகப்படுத்தப் பட்டிருக்கிறது. நீதிமான்கள், நாட்டுக் குடிமக்களின் வாழ்க்கை வசதிகளுக்காக எடுத்தாளுகிற கருத்தாக்கங்கள்தான் பொதுநல வழக்குகளின் அஸ்திவாரங்கள், பொதுமக்களின் நலமான, வளமான வாழ்க்கையை உறுதி செய்யும் அறிவு ஜீவிகளுடைய சிந்தனைகளின் ஆளுமையே பொதுநல வழக்கின் ஆணி வேர். மனித வாழ்க்கையை மேம்படுத்தும் பகுதிகள் பல இருந்தாலும், அவை சில குறிப்பிட்ட பின்னணிகளில் தாக்கல் செய்யப்படுகின்றன. ஏழைகளுடைய அடிப்படை மனித உரிமைகளில் அத்துமீறல்.
அரசு முன்வைக்கும் திட்ட கொள்கைகளின் உள்நோக்கம் அல்லது நடைமுறை. நகர்மன்ற அதிகாரிகள் அவர்களுடைய பணிகளை உரிய முறையில் செய்வதற்கான செயல்திட்டம்.
மத உரிமைகளின் மேல் தொடுக்கப்படும் ஏவுகணைகள் ஜீவாதார உரிமைகளின் மீது ஏவப்படும் வன்முறைகள் - என்ற பல பொதுவானப் பிரச்சினைகளே பொதுநல வழக்குகளின் அடிப்படை அம்சங்கள். பொதுநல வழக்குகளை எப்பொழுது தாக்கல் செய்வது? பெரும்பான்மையான பொதுமக்கள் பாதிப்பிற்கு உள்ளாகும்போது, பொதுநல வழக்கு தொடரலாம். ஒரு தனிமனிதர், அரசின் நடவடிக்கையால் பாதிக்கப்பட்டால், அதன் அடிப்படையில் பொதுநல வழக்கு தொடர முடியாது. கீழ்க்கண்ட பிரச்னைகளில் பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யலாம்.
1) ஒரு தொழிற்சாலையின் நடவடிக்கைகள், காற்றை மாசுபடுத்தினால், அது பொதுமக்களின் உயிரையே பறித்து விடும். இதைத் தடுக்க.
2) ஒரு தெருவில் மின்விளக்குகள் இல்லாமல் அதனால் பாதசாரிகளும், வாகன ஒட்டிகளும் இடையூறுகளை சந்திக்க வாய்ப்பிருக்கிறது, இதைச் சீர் செய்ய.
3) ஒரு விடுதியில் இரவு கேளிக்கையின் போது உச்ச ஸ்தாயியில் இசையை ஒலிபரப்பி மக்களுக்கு தொல்லை கொடுப்பதைத் தடுக்க.
4) கட்டிட நிறுவனம் அதன் வர்த்தக நிழல் தரும் மரங்களை வெட்டிச் சாய்த்தால் அங்கு சுற்றுப்புறச்சூழல் பாதிப்பைத் தடுக்க.
5) மாநில அரசின் அதீத வரிக்கொள்கையால் ஏழை மக்களின் பொருளாதாரச் சமன்பாடு சீர்குலைவதைத் தடுக்க,
இவற்றைத் தவிர,
காவல்துறை சிறைத்துறை அதிகாரிகள், கைதிகள் தொடர்பான தீர்வுகளை எடுக்கும்போது மனித உரிமைகளை மீறல், குழந்தைத் தொழில், கொத்தடிமைத்தனம் _- என்ற சமூகச் சாபக்கேடுகளை ஒழிப்பதற்கு.
உழைக்கும் மகளிர் அவர்களுடைய பணியிடங்களில் மேலதிகாரிகளின் பாலியல் தொல்லைகளுக்கு ஆட்படுவதைத் தடுக்க.அரசியலில் அதிகாரத்தில் உயர் பதவியில் இருப்பவர்கள் தங்கள் பதவிகளைத் தவறான முறைகளில் பயன்படுத்தி, ஊழலில் ஈடுபடுவது வேறு சில சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் பங்கு கொள்வது _- இவற்றைத் தடுத்து நிறுத்த.சாலைகள், சாக்கடைகளை ஒழுங்கான வழிகளில் பராமரித்து, பொதுமக்களின் உடல்நலம் பாதிக்கப் படாதவாறு, நிர்வாகப் பொறுப்புகளை அதிகாரிகள் நிறைவேற்றிட பொதுநல வழக்கு தொடரலாம்.
பொதுநல வழக்கை யார் தாக்கல் செய்யவேண்டும்: ஆரம்ப காலத்தில், ஒருவருடைய வாழ்க்கை பிறருடன் சேர்ந்து பாதிக்கப்பட்டிருந்தால், அவருடைய அடிப்படை ஜீவாதார உரிமைகள் மறுக்கப்பட்டிருந்தால், அவர் பொதுநல வழக்கைத் தொடர வாய்ப்பிருந்தது. ஆனால், இப்பொழுது, நிலமை மாறியிருக்கிறது. இன்று, சமூக அமைதிகளில் நாட்டம் கொண்ட, சமுதாய நன்மைகளில் அக்கறை உள்ள எந்தவொரு பிரஜையும் பொதுநல வழக்குகளைத் தாக்கல் செய்யலாம். பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே பொதுநல வழக்குத் தாக்கல் செய்யவேண்டும் என்ற வழிமுறை தற்போது கடைப்பிடிக்கப் படுவதில்லை. நேரடியாகப் பாதிக்கப்படாத பாமர மக்களும், இந்த வழக்கைத் தாக்கல் செய்யமுடியும். எடுத்துக்காட்டாக, ஒரு மாநிலத்தில் வசிக்கும் ஒருவர், மற்றொரு மாநிலத்தில் உழைக்கும் தொழிலாளர்கள் கொத்தடிமைத் தனத்தில் சிக்கி வேதனைப்படுவதைத் தடுப்பதற்காக PIL தாக்கல் செய்யலாம். தமிழ்நாட்டில் சிவகாசியில் பட்டாசுத் தொழிற்சாலைகளில் குழந்தைத் தொழிலாளர்கள் துன்புறுத்துவதைத் தடுக்க ஒருவர் உச்சநீதிமன்றத்தில் PIL தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வேறு ஒரு வழக்குரைஞர் தண்டனை காலத்தைவிட கூடுதலாக சிறையில் வாடிக் கொண்டிருந்தவர்கள் 80 பேரை (இவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்படாமல் வழக்கு விசாரணை முடிவின்றி நீண்டு கொண்டிருந்தது, இவர்களுக்கு வழங்கப்படக் கூடிய தண்டனைக் காலத்தைவிடக் கூடுதலான காலம் இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்கள்) விடுதலை செய்வதற்காக பொதுநல வழக்கு தொடர்ந்தார். பொதுநலவழக்குகள் யார் வேண்டு-மானாலும், தாக்கல் செய்யலாம் என்றிருந்தாலும், நீதிமன்றம் சகல வழக்குகளையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் என்று கருதமுடியாது. ஒவ்வொரு வழக்கின் தனித் தன்மைகளையும் ஆய்வு செய்து இந்த வழக்கு சமூக நலன்களைப் பாதிக்குமா என்பதை உறுதிசெய்து, அதன் பிறகுதான் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
யாரை எதிர்த்து பொதுநல வழக்குத் தொடரலாம்?
பொதுநல வழக்குகள், மத்திய மாநில அரசிற்கு எதிராகவும், நகர்மன்ற நிர்வாகத்திற்கு எதிராகவும் மட்டுமே தொடரமுடியும். தனிப்பட்டநாட்டுக் குடிமகனுக்கு எதிராக பொதுநல வழக்கு தாக்கல் செய்ய முடியாது. ஆனால் Private Party ஒரு பிரதிவாதியாக (Respondent) வழக்கில் ஈடுபடமுடியும். எடுத்துக்காட்டாக டில்லியின் அருகிலுள்ள ஒரு தனியார் தொழிற்சாலையிலிருந்து தினமும் வெளியேறும் ரசாயனக் கலவை கலந்த காற்று அருகிலுள்ள பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று கருதும் சூழ்நிலையில், அந்த நிறுவனம் இந்த வழக்கில் ஒரு பிரதிவாதியாக மாறுகிறது. இந்த வழக்கில் முதல் பிரதிவாதி புதுடில்லி அரசு மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம். தனியார் நிறுவனம் இரண்டாம் பிரதிவாதியாகிறது. ஆனால், அந்த நிறுவனத்தின் மேல் நேரடியாக வழக்குத் தொடுக்க முடியாது.
நீதிமன்றத்தில் ஒரு Writ Petition தாக்கல் செய்யப்படும் முறையிலேயே பொதுநல வழக்கும் தாக்கல் செய்யப்படும்.
உயர்நீதிமன்றத்தில்: உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யும் போது அந்த புகாரின் இரண்டு நகல்கள் தாக்கல் செய்யப்படவேண்டும். புகாரின் இன்னொரு நகல் சம்பந்தப்பட்ட அத்தாட்சி, புகார் மனு மீதுபதிவு செய்யப்படவேண்டும்.
உச்சநீதிமன்றத்தில்: உச்சநீதிமன்றத்தில் றிமிலி தாக்கல் செய்யப்படும்பொழுது புகாரின் ஐந்து நகல்கள் வழங்கப் படவேண்டும். நோட்டீஸ் வழங்கப்படும் பொழுதுதான். பிரதிவாதிக்கு நகல் அனுப்பப்பட வேண்டும்.
(தொடரும்)-உண்மை,16-31.10.15
நீதிமன்றக் கட்டணங்கள்: ஒவ்வொரு பிரதிவாதிக் காகவும், ரூ.50 நீதிமன்றக் கட்டணம் செலுத்த வேண்டும்.
வழிமுறை: பொதுநலவழக்குகளில் மேற்கொள்ளப்படும் வழக்கு விசாரணை, இதர வழக்குகளைப் போலவே நடைபெறும். ஆனால், வழக்கு விசாரணை நடுவே நீதிபதி, குற்றச்சாட்டுக்களை ஊர்ஜிதப்படுத்த (காற்று மாசு, குடிநீர் கெடுதல், மரங்களை வெட்டுதல், சாக்கடைப் பிரச்னை, கொசுத் தொல்லை, ஆற்றுநீரில் ரசாயனக் கலவை) என்ற பல புகார்களை நிருபிக்க ஒரு ஆய்வு அதிகாரியை நியமிக்க விரும்பினால் அவருக்கு அதற்கான அதிகாரம் உண்டு.
எதிர்மனுதாரரின் பதில்களைத் தாக்கல் செய்தபிறகு அதற்கான பதில்களை வாதி எடுத்துவைத்த பிறகு, இறுதி விசாரணை தொடங்குகிறது. நீதிபதி தன் இறுதித் தீர்ப்பை வழங்குகிறார்.
தலைமை நீதிபதிக்கு சில உண்மைகளைத் தெரிவித்து எழுதப்பட்ட கடிதத்தை பொது நலவழக்காகக் கருத முடியுமா? 1990களின் ஆரம்பத்தில், நீதிபதிகள் உண்மைகள் குறிக்கப்பட்ட தபால்அட்டைத் தகவல்களை பொதுநல வழக்குகளாகக் கையாண்டிருக்கின்றனர்.
இவற்றில் மாதிரிக்கு ஒரு சில:
ஹிமாசலப்பிரதேசத்தில் இமயமலை அடிவாரத்தில் உள்ள முசூரி என்ற நகரின் அருகில் சட்டவிரோதமாக இயங்கிய ஒரு சுண்ணாம்புக்கல் எடுக்கும் தொழிலால், அந்தப் பகுதியின் சுற்றுச்சார்பு பாதிக்கப்படுவதாக நீதிபதிக்கு அனுப்பப்பட்ட ஒரு கடிதம் பொதுநலவழக்காக எடுத்துக் கொள்ளப்-பட்டது. உள்நோக்கத்துடன் வழக்குத் தொடரக்கூடாது:
கடந்த காலங்களில் ஒரு சிலர் பொதுநலவழக்கு என்ற அறிவாயுதத்தை தவறான உள்நோக்கத்துடன் துஷ்பிரயோகம் செய்தனர். இதனால், உச்சநீதிமன்றம் பிரச்சினைகளைப் பற்றிய சரியான தகவல்களையும், உண்மையான செய்திகளையும் தருமாறு பொதுநலவழக்கு ஆர்வலர்களிடம் கேட்கிறது. இதன் அடிப்படையில், சட்ட அம்சங்-களை நன்கு ஆய்ந்து, எதிர்தரப்பு பிரதிவாதிகளை விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு அழைக்கிறது. பொதுநல-வழக்குத் தொடர்வதற்கான விதிமுறைகள், சட்டதிட்டங்கள் எதுவும் இல்லாத நிலையிலும், நீதிமன்றம் ஒரு கடிதத்தை பொதுநலவழக்காக விசாரணைக்கு எடுக்க-முடியும். அனைத்து உண்மையான தகவல்-களையும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடவேண்டும். அவற்றின் இயல்புகளை அலசி ஆராய்ந்து மிகவும் அவசரமான நிலை என்று நீதிமன்றம் தீர்மானித்தால், அந்தப் பொதுநல வழக்கு தீர்விற்காக எடுத்துக்கொள்ளப்படும்.
இடைக்கால நிவாரணங்கள்
இறுதி முடிவு தீர்மானம் செய்யப்படுவது வரையிலும், பொதுமக்களின் நலன் கருதி, நீதிமன்றம் இடைக்கால நிவாரணம் வழங்க முடியும்,
ஒரு குழுவை நியமனம் செய்வது நீதிமன்றம், இந்தப் பிரச்சினைப் பற்றி ஆய்வு நடத்தி, அதன் அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு ஒரு கமிட்டியை அல்லது ஆணையரை  நியமனம் செய்யலாம்.
ஒரு ரிட் மனுவை பொதுநலவழக்காக கையாள முடியுமா?
ஆம், பாதிக்கப்பட்டவரால் தாக்கல் செய்யப்படுகின்ற ரிட் மனுவை ஒரு குழுவின் சார்பாகவோ அல்லது ஒரு குழுவோடு சேர்ந்தோ தாக்கல் செய்யப்படுகின்ற ரிட் மனுவை, பொதுநல வழக்காகக் கையாள முடியும்.  ஒரு பிரச்சினை பொதுஜனங்களை பாதிக்கும் பட்சத்தில் (ஒரு தனிமனிதனை அல்ல) ரிட் மனுவை பொதுநலக் வழக்காகக் கையாள முடியும்
உயர்நீதிமன்றத்திலும் உச்சநீதிமன்றத்திலும் பொதுநலவழக்கு: உயர்நீதிமன்றம், உச்சநீதி-மன்றம் _- இரண்டிற்கும் பொதுநலவழக்கை கையாளும் அதிகாரம் உண்டு.
-உண்மை,1-15.11.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக