புதுடில்லி, ஜூலை 8_ பிறப்பு சான்றிதழ்களில் தந்தையின் பெயரை சேர்ப்பதை கட்டாயமாக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பான ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் மாநில அரசுகளுக்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது: திருமண உறவைத் தாண்டியும் சிலர் குழந்தை பெற்றெடுக்கின்றனர். அல்லது சில பெண்கள் தாங்கள் மட்டுமே குழந்தையை வளர்க்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர். ஒரு தாய் இல்லாமல் குழந்தை பிறக்க முடியாது.
அதனால் தாயின் அடையாளம் கண்டிப்பாக தெரியும். சில நேரங்களில் தந்தையின் அடையாளம் தெரியாமல் போகலாம். அல்லது அவருடைய பெயரை சேர்க்க தாய் விரும்பாமல் இருக்கலாம். இதுபோன்ற காரணங்களால் ஒரு குழந்தையின் பிறப்பு சான்றிதழில் தந்தையின் பெயர் குறிப்பிடப்பட வேண்டும் என்பதை கட்டாயமாக்கக் கூடாது. சட்டங்கள் மிகவும் வலுவானவை, அடிப்படையானவை. அதே நேரத்தில் மாறிவரும் காலசூழலுக்கு ஏற்ப சட்டங்களிலும் மாற்றம் தேவை. நாட்டில் பிறக்கும் ஒவ்வொருவரின் பிறப்பும் பதிவு செய்யப்பட வேண்டும். எந்தக் காரணம் கொண்டும் பிறப்பை பதிவு செய்யாமல் இருக்கக் கூடாது.
இதை அனைத்து மாநிலங்களும் உறுதி செய்ய வேண்டும். குழந்தையின் பிறப்பு சான்றிதழில் தந்தையின் பெயரை குறிப்பிட வேண்டும் என்று கட்டாயப்படுத்தக் கூடாது. அது அக்குழந்தையின் தாயின் விருப்பமாகவே இருக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குழந்தையின் பாதுகாவலர் விவகாரம் - தந்தையின் ஒப்புதல் தேவையில்லை
புதுடில்லி, ஜூலை 6 திருமணமாகாத தாய்க்குப் பிறந்த குழந்தையின் பாதுகாவலர் விஷயத்தில், தந்தையின் அனுமதியைப் பெற வேண்டிய அவசியமில்லை என்று உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. திருமணமாகாத அரசு பெண் ஊழியர் ஒருவர், தனது குழந்தையின் பாதுகாவலராக இருப்பது குறித்து தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்ற நீதிபதி விக்ரம்ஜித் சென் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.
குழந்தையின் பாதுகாவலராக, தாய் இருப்பதற்கு, தந்தையின் அனுமதி பெற வேண்டும் என்ற நடை முறையை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதனை விசாரித்த நீதிபதி, திருமணமாகாத பெண்ணுக்குப் பிறகும் குழந்தையின் பாதுகாவலர் விஷயத்தில், தந்தையின் அனுமதியைப் பெற வேண்டிய அவசியம் இல்லை. இதற்கு மாறாக, கீழ்நீதிமன்றமோ, உயர் நீதிமன்றங்களோ, இதுபோன்ற தீர்ப்பை குழந்தையின் நலனைக் கருத்தில் கொள்ளாமல் அறிவித்திருந்தால், அவற்றை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
உண்மை,1-15.10.15
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக