விடுதலை வாசகர்களே! திராவிடர் இயக்கமும், விடுதலையும், சமுதாய விழிப்புணர்வுக்கும், மறு மலர்ச்சிக்கும், ஆற்றிவரும் தொண்டு அளப்பரியது. இந்தியாவிலும், குறிப்பாக தமிழ்நாட்டிலும், இயற்றப் பட்ட சட்டங்கள் பெரும்பாலும், திராவிட இயக்கத்தின் அயராத பணியின் காரணமாகவே ஏற்படுத்தப் பட்டவை என்பதை திராவிட இயக்க வரலாற்றை அறிந்தவர்கள் அனைவரும் அறிவர்.
அத்தகைய சட்டங்களையும், சமூகத்திற்குத் தேவையான சட்டங்களையும் வாசகர்கள் எளிய முறையில் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற அறிவுரையை தமிழர் தலைவர் அவர்கள் வழங்கியதன் தொடர்பாக அறிவோம் சட்டம்'' என்ற தொடர் துவக்கப்படுகிறது.
கழகத் தோழர்கள் உள்ளிட்ட அனைத்து விடுதலை வாசகர்களும் புரிந்துகொள்ளும் வகையில் இத்தொடர் அமைய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெண்கள் பாதுகாப்புக்கான சட்டங்கள், சமுதாய சீர்திருத்தச் சட்டங்கள் போன்றவைகளை தொகுத்து வழங்க முனைந்துள்ளோம். வாசகர்கள் படித்துப் பயன் பெறுவார்கள்.
2. பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கான வழமுறைகள்
இதற்கான சட்ட விதிகள் தமிழ்நாடு நகர காவல் சட்டம் (1888) காவல் சட்டம் (1861) மற்றும் தமிழ்நாடு மாவட்ட காவல் சட்டம் (1859) ஆகிய சட்டங்களில் காணப்படுகின்றன. தமிழ்நாடு மாவட்ட காவல் சட்டம் அனைத்து மாவட்டங்களுக்கும் பொருந்தக் கூடியது. தமிழ்நாடு நகர காவல் சட்டம் சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், திருநெல்வேலி,
போன்ற பெருநகரங் களுக்கு மட்டுமே பொருந்தக்கூடியதாகும். அந்தப் பெருநகரங்களில் உள்ள காவல்துறை ஆணையர்களுக்கு கூட்டங்கள் ஊர்வலங்கள் ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கு படுத்துகின்ற அதிகாரம் பிரிவு 41 தமிழ்நாடு நகர காவல் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டிருக்கிறது என்றாலும், சில நிபந்தனைகள், கட்டுப்பாடுகளும் உண்டு.
ஆணையரின் உத்தரவுப்படி மேற்கண்ட அதிகாரத்தை தலைமைக் காவலர் தகுதிக்கு மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் பயன்படுத்தலாம். கூட்டங்கள், ஊர்வலங்கள். ஆர்ப்பாட்டங்களுக்கு பொது அமைதி, பாதுகாப்பு கருதி காவல்துறை ஆணையர் தடை விதிக்கலாம். அத்தகைய தடை அரசின் அனுமதியின்றி 15 நாட்களுக்கு மேல் நீடிக்கக்கூடாது.
அத்தகைய தடை நடைமுறையில் உள்ள காலத்தில் யாரேனும் கூட்டங்கள், ஊர்வலங்கள், நடத்த விரும் பினால் 5 நாட்களுக்கு முன்பாக ஆணையரிடம் விண்ணப்பம் தர வேண்டும். பொது அமைதி பொது பாதுகாப்பு ஆகியவற்றை உடனடியாக கட்டிக் காக்க வேண்டும் என்கிற அவசியம் இருந்தால் ஆணையர் அனுமதி மறுக்கலாம்.
ஆனால், அவ்வாறு அனுமதி மறுப்பதற்கு முன் விண்ணப்பதாரரையோ அல்லது அவரது வழக்கறிஞரையோ அழைத்து அனுமதி ஏன் மறுக்க கூடாது என்பதற்கான காரணங்களை கேட்டு அதன் பின் எழுத்து பூர்வமான அனுமதி மறுப்பு உததரவை பிறப்பிக்க வேண்டும்.
ஆணையரின் தடையாணை நடைமுறையில் இருந்தால் மட்டுமே கூட்டங்கள், ஊர்வலங்களுக்கு அனுமதி கேட்டு விண்ணப்பிக்கவேண்டும் என்பதும், தடையாணை இல்லாத காலங்களில் அது போனறு விண்ணப்பிக்கத் தேவையில்லை என்பது கவனிக்கப்பட வேண்டிய விசயமாகும்.
ஆனால் ஊர்வலங்கள் நடத்த விரும்பினால் 24 மணி நேரத்திற்கு முன் தலைமைக் காவலர் தகுதிக்கு மேற்பட்ட காவல்துறை அதிகாரியிடம் ஊர்வலப் பாதை, நேரம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு அறிவிப்பு கொடுக்கப்பட வேண்டும். அனுமதி கோர வேண்டியதில்லை. ஊர்வலம் தொடங்கும் பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்குத் தான் மேற்கூறிய அறிவிப்பு அனுப்ப வேண்டும்.
ஆணையர் அத்தகைய கூட்டங்கள், ஊர்வலங்கள் ஆகியவற்றை கண்காணித்து அறிக்கை தர காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடுவார். மேற்கூறிய வழிமுறைகளைப் பின்பற்றாமல், காவல்துறை விதிக்கும் நிபந்தனைகளை மீறினால் ஆயிரம் ரூபாய் வரை அபரா தமோ ஒருமாதம் வரை சிறைத் தண்டனையோ அல்லது இரண்டுமோ விதித்து தண்டனைக்குள்ளாக நேரிடும்.
மேற்கண்ட விதிகள் மதம், விளையாட்டு திருமணம், இறப்பு நிகழ்ச்சி அல்லது இல்ல நிகழ்ச்சிகளுக்குப் பொருந்தாது. சட்டபூர்வமான நிறுவனங்கள் அல்லது மாநில அரசால் விதிவிலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங் களுக்கும் மேற்கண்ட விதிகள் பொருந்தாது.
அதோடு மாநகரங்கள் தவிர பிற மாவட்டங்களில் உள்ள நகரங்கள், ஊர்களுக்கு மேற்கண்ட சட்டபபிரிவுகள் பொருந்தாது. தமிழ்நாடு மாவட்ட சட்டம், 1859 தான் பொருந்தும். மாவட்டங்களில் நடைபெறும் பொதுக் கூட்டங்கள். ஊர்வலங்கள் நடத்த மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளரிடம் முன் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை.
துணைக் கண்காணிப் பாளர் தகுதிக்கு குறையாத காவல்துறை அதிகாரி, பொது நலன்கருதி பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் போன்றவற்றில் கலந்துகொண்டு அறிக்கை தாக்கல் செய்ய ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட காவல்துறை அதிகாரிகளை அனுப்புவார்.
மதம், விளையாட்டு, திருமணம், இறப்பு நிகழ்ச்சி அல்லது இல்ல நிகழ்ச்சி களுக்கும், சட்டபூர்வமான நிறுவனங்கள் மற்றும் மாநில அரசால் விதிவிலக்கு பெற்ற நிறுவனங்கள் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கும் காவல்துறை அதிகாரிகளை அனுப்ப வேண்டியதில்லை.
கூடுதல் மாவட்ட நிர்வாக நடுவர் அல்லது சார்பு கோட்ட நிர்வாக நடுவர் கூட்டங்கள், ஊர்வலங்கள் கட்டுப்படுத்த முடியாதபடி இருந்தால் சட்டம் ஒழுஙகு கெடும் என்று கருத்துரை, வழங்கியிருந்தால் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் அல்லது அவருக்கு மேல் நிலை அதிகாரி கூடடங்கள் ஊர்வலங்கள் நடத்து வோருக்கு அறிவிப்பு அனுப்பி மேற்கண்ட நிகழ்ச்சி களுக்கு உரிமம் கோரி விண்ணப்பிக்க அறிவுறுத்தலாம். (காவல்துறை நிலையாணை 702 மற்றும் (மத்திய அரசு) காவல் சட்டம் 1861, பிரிவு 30)
இந்தச் சட்டங்கள் எல்லாம் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது 1859, 1861, 1858 ஆம் ஆண்டுகளில் ஆங்கிலேயர் ஆடசிபுரிந்து கொண்டிருந்த காலத்தில் ஏற்பட்டவை. நமது தேசம் 1947-இல் சுதந்திரம் அடைந்து, அரசியல் சட்டத்தில் கருத்துரிமை, பேச்சுரிமை,
எழுத்துரிமை போன்ற உரிமைகள் அடிப்படை உரிமை களாக அங்கீகரிக்கப்பட்ட பின்னரும் எவ்வித சிந்தனை யுமின்றி மேற்கண்ட காலனி ஆதிக்கச் சட்டங்களை பின்பற்றுவது கேவலத்திற்குரியது. இந்த விசயம்பற்றி உரத்த சிந்தனைகள் உருவாகவேண்டும்.
(தொடரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக