புதன், 6 ஜனவரி, 2021

வாரிசு அடிப்படையில் பணி மகனுக்கு மட்டுமா?

உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

சண்டிகர்,டிச.20 திருமணமான மகளுக்கும் கருணை அடிப்படை யில் அரசு வேலை பெற உரிமை உண்டு என்று பஞ்சாப்-_அரியானா மாநில உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

பஞ்சாப் மாநில காவல்துறை யில் தலைமைக்காவலராக பணி புரிந் தவர் கஷ்மீர் சிங். இவர் கடந்த 2018ஆம் ஆண்டு பணியில் இருக் கும்போதே, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந் தார்.  அவருக்கு  அமர்ஜித் என்ற பெயரில் ஒரே ஒரு மகள் மட்டுமே இருந்தார். அவ ருக்கும் திருமணம் முடிந்து விட் டது. இருந்தாலும், அந்த பெண், தனது தந்தையின் வேலையை கருணை அடிப் படையில் தனக்கு ஒதுக்குமாறு மாநில அரசுக்கு வேண்டுகோள் வைத்தார். ஆனால், அதை மாநில அரசும், காவல்துறை நிர்வாகமும்  திருமணமானவர் என்பதால் கருணை அடிப்படையில் அவருக்கு வேலை வழங்க சட்டத் தில் இடம் இல்லை என்று கூறி மறுத்து விட்டன.

இதையடுத்து, அமர்ஜித், பஞ்சாப்-அரியானா உயர் நீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவில், “கஷ்மீர் சிங்கின் ஒரே மகள் நான். எனக்கு திருமணம் ஆனாலும் எனது கணவர், குழந் தைகளுடன் தாய்வழி வீட்டில் தான் இருக்கிறேன். எனக்கு வேறு எந்த வருமானமும் இல்லை. எனவே எனக்கு  கருணை அடிப் படையில் வேலை வழங்க உத்தர விட வேண் டும்” என அவர் கோரியிருந்தார்.

இந்த வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மசிஹ் விசாரித்தார். பல்வேறு கட்ட விசாரணைக்கு பிறகு பரபரப்பு தீர்ப்பை வழங்கி உள்ளார். தீர்ப்பில்,

பணியில் இருப்பவர் உயிரிழந் தால் அவரை நம்பி இருக்கும் குடும்பத்தினருக்கு உதவுவதற் காகத் தான் கருணை அடிப் படையில் வேலை வழங்க சட்டம் வகை செய்கிறது. மகனுக்கு திருமணம் ஆகியிருந்தாலும்கூட அவருக்கு பணி வழங்கப்படுகிறது. ஆனால், மகளுக்கு திருமணம் ஆனால் மட்டும் பணி மறுக்கப் படுவது என்பது,  அரசியல் சாச னம் வழங்கியுள்ள பாலின சமத் துவத்துக்கு எதிரானது.

திருமணமான மகளுக்கும் கருணை அடிப்படையில் அரசு வேலை பெற உரிமை உண்டு. எனவே, ஒரு மாதத்துக்குள் அமர் ஜித்துக்கு காவல் துறையில் வேலை வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

திருமணத்தில் மதப் பார்வையா?

முதன் முதலாக லவ் ஜிகாத் சட்டத்தின் கீழ் கைதான பெண்ணுக்குக் கட்டாய கருச்சிதைவு செய்யப்பட் டுள்ளதாகத் தகவல்கள் வெளி வந்துள்ளன.

இந்துப் பெண்ணும் இஸ்லாமிய ஆணும் திருமணம் செய்து கொள்வதை லவ் ஜிகாத் என அழைத்து அதற்கு எதிராக உத்தரப்பிரதேச பாஜக அரசு சட்டம் இயற்றி உள்ளது.   இந்தச் சட்டத்தின் கீழ் முதன் முதலாக ஒரு பெண் உத்தரப்பிரதேச மாநிலத்தில் கைது செய்யப் பட்டுள்ளார்.  சுமார் 22 வயதாகும் அந்தப் பெண்ணின் பெயர் முஸ்கன் ஜகான் என்பதாகும்.  அவர் மூன்று மாத கர்ப்பமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

அவருடன் கைது செய்யப்பட்ட 27 வயதான அவர் கணவர்  ரஷீத் எங்கு என அறிவிக்கப்படாமல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.    பிங்கி என்ற இந்துப் பெண்ணை வற்புறுத்தி இஸ்லாம் மதத்துக்கு வலுக்கட்டாயமாக மாற்றி திருமணம் செய்து கொண்டதாகக் குற்றம் சாட்டப் பட்டுள்ளது.  முஸ்கன் ஜகான் ஒரு அரசு இல்லத்தில் அடைத்து வைக்கப் பட்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் மொரதாபாத் நகரில் உள்ள அரசு இல்லத்தில் இருந்து தனது மாமியாரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட முஸ்கன் ஜகான் தனக்கு திடீரென ரத்தப் போக்கு ஏற்பட்டு கருச்சிதைவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.,  அவருக்கு அரசு இல்லத்து ஊழியர் ஒருவர் ஊசி போட்டு கட்டாய கருச்சிதைவு செய்யப்பட்டுள்ளதாக மாமியார் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

தனது மருமகள் இஸ்லாம் மதத்துக்கு மாறி ஒரு இஸ்லாமியரைத் திருமணம் செய்து கொண்டதால் இந்த கொடுமை இழைக்கப்பட்டுள்ளதாக மாமியார் தெரிவித் துள்ளார்.   இந்த மதச்சார்பான உலகு தனது பேரக் குழந்தை பிறக்கும் முன்பே அதற்குப் பிரியாவிடை கொடுத்து அனுப்பி விட்டதாகவும் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

நாடு எங்கே போய்க் கொண்டு இருக்கிறது? பா.ஜ.க. ஆட்சி பாசிச ஆட்சியே என்பதற்கு ஒவ்வொரு நாளும் நடக்கும் மதவாதப் போக்குடைய நிகழ்வுகள் பாசிசத்தின் பச்சையான பரிபாலனம் நாட்டில் நடந்து கொண்டு இருக்கிறது என்பதற்கான சாட்சியங்களும், அடையாளங்களுமாகும்.

18 வயதுக்கு மேற்பட்ட பெண்ணும் 21 வயது நிறைந்த ஓர் ஆணும் திருமணம் செய்துகொள்ள சட்டப்படியான உரிமை உண்டு. அதற்கு மாறாக மதவாதக் கண்ணோட்டத்தில் இந்தப் பிரச்சினையை அணுகுவது அசல் காட்டுமிராண்டித்தனமும், அத்துமீறலுமாகும். தக்க வயது வந்த ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொள்வது என்பது அவர்களின் தனிப்பட்ட உரிமை. இதில் மூன்றாவது மனிதன் குறுக்கிடுவது அநாகரிகம் என்பார் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்.

இங்கு ஓர் அரசாங்கமே குறுக்கிடுவது மிகவும் கீழ் இறக்கமாகும். இந்து மதம் எங்கே போய்க் கொண்டு இருக்கிறது? முதலில் இந்து மதத்தில் ஆண்டாண்டு காலமாக ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் வளர்ச்சிக்கும், உரிமைகளுக்குமான சட்டங்களை திட்டங்களை வகுக்கட்டும் பா.ஜ.க. ஆட்சி.

மக்கள் தொகையில் சரி பகுதியினரான இந்துப் பெண்களுக்கு 33 விழுக்காடு இடங்களை சட்ட மன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் கொண்டு வரட்டும்.

இதுதான், இந்துக்கள் என்று மார்தட்டுவோரின் கடமையாக இருக்க வேண்டுமே தவிர, தனிப்பட்ட உரிமை உடைய திருமண விடயத்தில் எல்லாம் தலையிடுவது பிற்போக்குத்தனமும், திசை திருப்பலுமே யாகும்.

செவ்வாய், 10 டிசம்பர், 2019

திருமணம் ஆகாத ஆணும், பெண்ணும் ஒரே அறையில் தங்குவது குற்றம் அல்ல - உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை, டிச.8 கோவை அவினாசி சாலையில், ஒரு கட்டிடத்தை குத்தகைக்கு எடுத்து அரியானா மாநிலத்தை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் தங்கும் விடுதி ஒன்றை நடத்தியது. இந்த விடுதியில் சட்டவிரோத செயல்கள் நடப்பதாக சமூக வலை தளங்களில் செய்திகள் பரவியது.

இதையடுத்து கடந்த ஜூன் 25-ஆம் தேதி கோவை (தெற்கு) வட்டாட்சியர், பீளமேடு காவல்துறை ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு சென்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது இந்த விடுதியில் தங்கியிருப்பவர் களின் முகவரி, பெயர் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்யும் பதிவேடு இல்லை. ஒரு அறையில் திருமணம் ஆகாத ஆணும், பெண்ணும் சட்டவிரோதமாக ஒன்றாக தங்கியிருந்தனர். அங்கு மதுபாட்டில்களும் இருந்தன. இவற்றை எல்லாம் பதிவு செய்த அதிகாரிகள், அந்த விடுதிக்கு உடனடியாக 'சீல்' வைத்து இழுத்து மூடினர்.

இதையடுத்து, சீலை அகற்ற அதிகாரி களுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அந்த விடுதியை நடத்தும் தனியார் நிறுவனம் வழக்கு தொடர்ந் தது. இந்த வழக்கை நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் விசாரித்தார். பின்னர் நீதிபதி பிறப்பித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-

சமூக வலைதளங்களில் பரவிய செய்தி களின் அடிப்படையில் மட்டுமே விடுதியில் சோதனை நடத்தி அதிகாரிகள் சீல் வைத்துள் ளனர். சீல் வைப்பதற்கு முன்பு விளக்க தாக்கீது கூட கொடுக்கவில்லை. அதிகாரிகளின் இந்த செயல் இயற்கை நியதிக்கு எதிரானது என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. அதே நேரம், மனுதாரர் திருமணம் ஆகாத இணை களை விடுதி அறையில் தங்க வைப்பது ஒழுக்கக் கேடனாது என்று சமூக வலைதளங் களில் தகவல் பரவியதால், அதிகாரிகள் இந்த அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

ஒரு அறையில் திருமணம் ஆகாத ஆணும், பெண்ணும் ஒன்றாக தங்க அனுமதித்தால் அது சட்டவிரோதமா? என்று இந்த உயர்நீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞரிடம் பதில் இல்லை. ஒரே அறையில் திருமணம் ஆகாத ஆணும், பெண்ணும் தங்கக்கூடாது என்று சட்டமோ, விதிகளோ இல்லை. அதுமட்டு மல்ல, திருமணம் செய்யாமலேயே ஒரு ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ்ந்து, குடும்பம் நடத்துவது சட்டப்படி குற்றம் இல்லை என்கிற போது, ஒரு அறையில் ஒன்றாக தங்கினார்கள் என்பது எப்படி குற்றமாகும்?. எனவே, ஒரு அறையில் ஆணும், பெண்ணும் தங்கினார்கள் என்பதற்காக ஒரு விடுதிக்கு சீல் வைப்பது என்பது சட்ட விரோதமாகும். மொத்தத்தில், மனுதாரர் விடுதி மீது அதிகாரிகள் எடுத்த ஒட்டுமொத்த நடவடிக்கையும் சட்டவிரோத மானது. சீல் வைப்பதற்கு முன்பு விடுதி நிர்வாகத்துக்கு சட்டப்படி விளக்கம் கேட்டு தாக்கீது வழங்கவில்லை. மேலும் விடுதி நடத் துவதற் கான படிவம் டி உரிமம் அந்த கட்ட டத்துக்கு இல்லை என்று அரசு தரப்பில் 3ஆ-வது குற்றச்சாட்டை கூறினாலும், அதுவெல் லாம் தீவிர குற்றச்சாட்டு இல்லை. அதுகுறித்து விளக்கம் கேட்டு, சரி செய்துகொள்ளக்கூடிய பிரச்சினைதான். எனவே, விடுதியில் திரு மணம் ஆகாத ஆணும், பெண்ணும் ஒன்றாக ஒரு அறையில் தங்கினார்கள் என்பதும், மது பாட்டில்கள் வைத்திருந்தனர் என்பதும் குற்றம் அல்ல. எனவே, விடுதி நிர்வாகம் மீது எடுக்கப் பட்ட நடவடிக்கைகளை ரத்து செய்கிறேன். இந்த உத்தரவு நகல் கிடைத்து 2 நாட்களுக்குள், விடுதிக்கு வைக்கப்பட்ட சீலை மாவட்ட ஆட்சியர் அகற்ற வேண்டும். இவ்வாறு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் தீர்ப்பில் கூறியுள்ளார்.

- விடுதலை நாளேடு 8 12 19

வியாழன், 21 நவம்பர், 2019

பழைய தீர்ப்புக்குத் தடையில்லை சபரிமலைக்குப் பெண்கள் செல்லலாம்!

*7 பேர் கொண்ட அமர்வுக்கு மாற்றம்

* உச்சநீதிமன்றம் தீர்ப்பு

புதுடில்லி, நவ.14 சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவிக்கும் வழக்குகள் 7 பேர் கொண்ட அமர்வுக்கோ அல்லது அதைவிட பெரிய அமர்வுக்கோ மாற்ற உச்சநீதிமன்றம் பரிந் துரைத்துள்ளதோடு, பெண்களை அனுமதிக்க லாம் என்கிற உத்தரவே தொடரும் என்றும் அறிவித்துள்ளது.

2006 ஆம் ஆண்டு சபரிமலைக்கு அனைத்து வயதுடைய பெண்களும் செல்ல அனுமதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை, கடந்த 2017 ஆம் ஆண்டு 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு உச்சநீதிமன்றம் மாற்றி யது. இதனைத் தொடர்ந்து, 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, 10 முதல் 50 வயதிற்குட்பட்ட பெண் கள் சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குள், நுழைவதற்கான தடையை நீக்கியது. அத் தோடு, பக்தியை பாலின பாகு பாட்டிற்கு உட்படுத்த முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. பக்தியில் சமத்துவத்தை ஒடுக்கும் ஆணாதிக்க கருத்தை அனுமதிக்க முடியாது என்றும் நீதிமன்றம் கூறியது.

அய்ந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வில் இடம்பெற்றிருந்த ஒரே பெண் நீதிபதியான இந்து மல்கோத்ரா மட்டும், சபரிமலை பாரம்பரியம் காக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தார். நீதிபதிகள் நாரிமன், சந்திர சூட், கன்வில்கர் மற்றும் அப்போதைய தலைமை நீதிபதியான தீபக் மிஸ்ரா ஆகியோர் இந்து மல்கோத்ராவின் கருத்துக்கு நேர் மாறாக தீர்ப்புகளை அளித்தனர். உச்சநீதி மன்ற நீதிபதிகள் அளித்த இந்த தீர்ப்பின்மூலம் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் சபரிமலைக்குச் செல்லக் கூடாது என்று பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்ட நடைமுறை கேள்விக்குறியானது.

இதனைத் தொடர்ந்து அய்யப்ப பக்தர்கள் மத்தியில் இவ்விவகாரம் மிகப்பெரிய அளவில் வெடிக்கவே, தேவசம்போர்டு தரப்பில் தலைமை நம்பூதி கண்டரரு ராஜீவரரு சார் பில் மறுபரிசீலனை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அம்மனுவோடு மேலும் 64 மனுக்கள் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டன. இம்மனுக்கள் மீது விசா ரணை நடத்திய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத் திருந்தது.

இந்நிலையில் சபரிமலைக்கு அனைத்து வயதுடைய பெண்களும் செல்ல அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட வழக்கு தொடர்பான சீராய்வு மனுக்கள் மீது இன்று (14.11.2019) தீர்ப்பு  வழங்கப்பட்டது. அப்போது நீதிபதிகள் ரோஹின்டன் பாலி நாரிமன் மற்றும் டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் பெண் களை அனுமதிக்கலாம் என்று தீர்ப்பு வழங்க, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர் மற்றும் நீதிபதி இந்து மல்கோத்ரா ஆகியோர் பெண்கள் செல்ல தடை விதிப்பதாகவும் தீர்ப்புகளை வழங்கினர். தீர்ப்பில் ஒருமித்த கருத்து எட்டப்படாத காரணத்தால், 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு அல்லது அதைவிட பெரிய அமர்வுக்கு மாற்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், இந்து மல் கோத்ரா மற்றும் கன்வில்கர் ஆகியோர் பரிந்துரைத்துள்ளனர்.

மேலும், மறுபரிசீலனை மனுக்கள் நிலுவையில் இருப்பதால், பழைய நிலைப்படி பெண்களை அனுமதிக்கும் தீர்ப்பு தொடர்ந்து அமலில் இருக்கும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

- விடுதலை நாளேடு 14 11 19

புதன், 2 அக்டோபர், 2019

வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்குகளில் புகார் செய்தாலே கைது செய்யலாம் : உச்சநீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி, அக்.2 எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கு களில் புகார் செய்தாலே, புகாருக்கு ஆளானவரை எந்தவித விசாரணையும் இன்றி கைது செய்யலாம் என்ற நிலை இருந்து வந்தது. ஆனால் இந்த சட்ட பிரிவு தவறாக பயன்படுத்தப்படுவதாக கூறி, அதற்கு எதிராக உச்சநீதி மன்றத் தில் ஒரு வழக்கு தொடரப் பட்டது.

அந்த வழக்கை நீதிபதிகள் ஆதர்ஷ் கோயல், யு.யு. லலித் ஆகியோர் விசாரித்தனர். முடிவில், வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்குகளில் விசாரணை நடத்தி, உரிய அதிகாரியின் அனு மதியைப் பெற்றுத்தான் கைது நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அவர்கள் தீர்ப்பு அளித்தனர்.
ஆனால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 20-ஆம் தேதி வழங் கப்பட்ட இந்த தீர்ப்பானது, வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சி என கூறி, அதற்கு எதிராக பரவலாக போராட்டங்கள் நடைபெற்றன.
இதையடுத்து வன்கொடுமை தடுப்பு சட்டத்தை கடுமையாக்கி மத்திய அரசு சட்ட திருத்தம் கொண்டு வந்தது. இதன்படி, இந்த வழக்குகளில் புகாருக்கு ஆளான வர்கள், முன் பிணை பெற முடியாத நிலை உருவா னது. அத்துடன், 2 நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பை மறு ஆய்வு செய் யுமாறு மத்திய அரசு உச்சநீதிமன் றத்தில் மனு தாக்கல் செய்தது.
இந்த மறு ஆய்வு மனுவை நீதிபதிகள் அருண் மிஷ்ரா, எம்.ஆர். ஷா, பி.ஆர். கவாய் ஆகியோர் அமர்வு விசாரித்தது. இந்த அமர்வின் முன், மறு ஆய்வு மனு கடந்த 18-ஆம் தேதி விசா ரணைக்கு வந்தது. அப்போது 2 நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்பு குறித்து 3 நீதிபதிகள் அமர்வு கடு மையாக விமர்சித்தது.
இது தொடர்பாக நீதிபதிகள் குறிப்பிடுகையில், “இந்த தீர்ப்பு அரசியல் சாசனத்தின் நோக்கத் துக்கு எதிரானது. சட்டம் தவறாக பயன் படுத்தப்படுகிறது என்பதா லேயே அரசியல் சாசனத்துக்கு எதிராக ஒரு உத்தரவை பிறப்பிக்க முடியுமா?” என கேள்வி எழுப்பினர்.
அத்துடன் மத்திய அரசின் சார்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் கே.கே. வேணுகோ பாலிடம் நீதி பதிகள், “நாடு விடு தலை அடைந்து 70 ஆண்டுகளுக்கு மேலாகியும்கூட, எஸ்.சி., எஸ்.டி., மக்களை அரசால் பாதுகாக்க முடியவில்லை. அவர்கள் பாகுபாடு மற்றும் தீண்டாமைக்கு ஆளாக்கப் படுகிறார்கள்” என வேதனை வெளிப்படுத்தினர்.
கே.கே.வேணுகோபால்,2018_இ-ல் வழங்கிய தீர்ப்பு அரசியல் சாசனத்துக்கு உகந்ததாக இல்லை என்று கூறி வாதிட்டார். தொடர்ந்து அனைத்து தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.
இந்த நிலையில், 2018-இம் ஆண்டு மார்ச் மாதம் 20-ஆம் தேதியன்று 2 நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து, 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு நேற்று அதிரடியாக தீர்ப்பு அளித்தது.
உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு, வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்குகளில் இனி புகார் செய்தாலே, புகாருக்கு ஆளான வரை விசாரணையின்றி கைது செய்யலாம் என்ற நிலையை கொண்டு வந்துள்ளது.

-விடுதலை நாளேடு, 2.10.19

செவ்வாய், 24 செப்டம்பர், 2019

ஜாதி மறுப்பு, மத மறுப்பு திருமணங்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும்: உச்சநீதிமன்றம் கருத்து

புதுடில்லி, செப்.13 இந்து மதத் தைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட முசுலீம் இளைஞர் ஒரு நம் பிக்கையான கணவனாக, சிறந்த அன்பு செலுத்துவோ ராக இருந்திட வேண்டும். பெண்ணின் எதிர்காலத்தை மட்டுமே நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம். மத மறுப்பு அல்லது ஜாதி மறுப்பு திருமணங்களுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல என்று  வழக்கின் விசாரணையில் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள் ளது.

இப்ராகிம் சித்திக்கி என் பவர் பிறப்பால் இசுலாமிய மதத்தைச் சேர்ந்தவர். அவர் ஆரிய சமாஜ முறையைப் பின்பற்றுவோரின் குடும்பத்திலிருந்து ஒரு பெண்ணை விரும்பிய காரணத்தால், பெண்ணின் குடும்பத்தினர் கேட்டுக் கொண்டதற்கிணங்க இந்து மதத்துக்கு மாறினார். இருப்பினும் பெண்ணின் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் மதமாற்றத்தை ஒரு சர்ச் சையாகவே ஆக்கி வந்தனர்.  சத்தீஸ்கர் உயர்நீதிமன் றத்தில் பெண்ணின் குடும்பத் தின் சார்பில்  கடந்த ஆண் டில் தங்கள் மகளைக் காண வில்லை என்று வழக்கு தொடர்ந்தனர். அப்போது நீதிமன்றத்தில் அப்பெண் பெற்றோரிடமே செல்வதா கக் கூறினார். அதன்பின்னர் குடும்பத்தினருடன் அப் பெண் அனுப்பிவைக்கப்பட் டாள்.

பெண்ணை திருமணம் செய்துகொண்ட இளைஞர் உச்சநீதிமன்றத்தை அணுகி னார். உச்சநீதிமன்ற அமர் வின் தலைவர்,  தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பெண் அவள் பெற்றோருடனே இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

கடந்த ஆண்டில் பெண் பெற்றோரிடம் சென்றாலும், இப்ராகிம் மீண்டும் அப் பெண் தன்னுடன் சேர்ந்து வாழவேண்டும் என்று தன் னுடைய சட்டப் போராட் டத்தைத் தொடர்ந்தார்.

தான் விரும்பும் பெண் தன்னுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று இப்ராகிம் மீண்டும் இந்த ஆண்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணையின் போது, அப்பெண்ணும் தன் கணவனுடன் சேர்ந்து வாழப் போவதாக நீதிமன்றத்தில் கூறினாள். அதனைத் தொடர்ந்து அப்பெண்ணை இப்ராகிமுடன் செல்ல உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள் ளது.

அதன்பிறகும், பெண் ணின் தந்தை உச்சநீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தன்னுடைய மனுவில், மதம் மாறிய இப்ராகிம் மீண்டும் இசுலாம் மதத்துக்கே மாறிவிட்ட காரணத்தால், தன் மகளை திரும்பவும் தங்களுடன் அனுப்பி வைக்க வேண்டும் என்று குறிப்பிட் டிருந்தார்.

11.9.2019  அன்று நடை பெற்ற வழக்கு விசாரணையில், இப்ராகிம் மதமாற்றம் செய்துகொண்டார் என் றால், பெயர் மாற்றம் உள் ளிட்ட நடைமுறை ஆவணங் கள் குறித்து உறுதிமொழி ஆவணத்தை நீதிமன்றத்தில் அளிக்க வேண்டும் என்று   நீதிபதி அருண் மிஸ்ரா  தலைமையிலான உச்சநீதி மன்ற அமர்வு உத்தரவிட்டது.

மேலும், மத மறுப்பு திரு மணம், ஜாதி மறுப்பு திரு மணங்களுக்கு உச்சநீதிமன் றம் எதிரானதல்ல என்றும் குறிப்பிட்டுள்ளது.

திருமணத்தை எதிர்க்க வில்லை. அதே நேரத்தில் பெண்ணின் எதிர்காலம் பாதுகாக்கப்பட வேண்டும். சில நேரங்களில் இதுபோன்ற திருமணங்கள் தவறான நோக்கத்துடன் நடைபெறு கின்றன. அதனால் பெண் கள்தான் பாதிக்கப்படுகிறார் கள் என்று நீதிபதி அரண் மிஸ்ரா கூறினார். இவ்வழக்கின் விசாரணை 24.9.2019 அன்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

- விடுதலை நாளேடு, 13. 9 .19

சனி, 14 செப்டம்பர், 2019

மதம், ஜாதி அடையாளங்களை வாகனங்களில் வைத்திருந்தால் அபராதம்!



ஜெய்ப்பூர், செப். 7 ராஜஸ்தானில் வாகனங்களில் ஜாதி, மத அடை யாளங்களைக் குறிக்கும் வகையில் எழுதப்பட்டோ, அல்லது படமாக  ஒட்டியிருந்தால் அபராதம் வசூ லிக்க போக்குவரத்து காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

புதிய மோட்டார் வாகன சட்டப்படி, பல்வேறு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதிக அளவில் விபத்துகள் ஏற்படுவதால் அதனை கட்டுப்படுத்தவும், உயிரிழப் புகளை தடுக்கவும், பழைய சட்டத் தில் சில முக்கிய திருத்தத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கான திருத்த மசோதா, அண் மையில் நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது இரு அவை களிலும் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி, 2019 மோட்டார் வாகனச் சட்டத் திருத்தத்தில் ஓட் டுநர் உரிமம் புதுப்பித்தல் 3 ஆண்டு களில் இருந்து 5 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே போல், ஓட்டுநர் உரிமம் காலாவதி யாகிவிட்டால் ஒரு மாதத்திற்குள் புதுப்பிக்க வேண்டும் என்ற நடை முறை ஒரு ஆண்டாக உயர்த்தப்பட் டுள்ளது.

இதுமட்டுமல்லாமல், போக்கு வரத்து விதிகளை மீறும் நபருக்கு அபராதக் கட்டணம் முன்பு இருந் ததைவிட பன்மடங்கு அபராதம் விதிப்பது போன்றவை புதிய மோட் டார் வாகனச் சட்டத்திருத்தத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநில போக்குவரத்துத் துறையினர் வாகனங்களில் மத, சாதிய குறியீடுகள் பெயர்கள், படங்கள் இருந்தால் அந்த வாகனத்திற்கும் அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

அதன்படி, ராஜஸ்தான் மாநிலத் தில் வாகனங்களில் ஜாதி, மதம், அரசியல் சார்ந்த அடையாளங்களை ஸ்டிக்கர்களாக ஒட்டிக்கொள்ளும் நடைமுறை மக்கள் மத்தியில் உள் ளது. சிலர் அந்த அடையாளங்களைப் பயன்படுத்தி விதிமீறலில் ஈடு படுவதால் அவற்றை தடுக்க இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. இதைப்போன்ற அடை யாளங்கள் கொண்ட நம்பர் ப்ளேட் உள்ளிட்ட சில குறிப்பிட்ட இடங்களில் இருந்தால் வாகனங் களுக்கு 5 ஆயிரம் ரூபாய் வரையில் அபராதம் விதிக்கப்படும் என எச்ச ரித்துள்ளனர். மேலும் வன்முறை களை ஏற்படுத்தும் விதமாக வாசகம் எழுதியிருந்தால் வாகனம் பறிமுதல் செய்யப்படுவதாகவும் தெரிவிக் கப்பட்டுள்ளது. வாகனத்தில் பெயர், பதவி, படிப்பு போன்ற ஸ்டிக்கர் அல்லது எழுத்துகளுக்கு அபராதம் ஏதும் விதிக்கப்படாது என்றும் காவல்துறை விளக்கியுள்ளது. படங்கள் ஒட்டும் கலாச்சாரத்தை ஒழிப்பதற்கான முக்கியக் காரணமே அவை வாகன ஓட்டியின் பாது காப்பைக் கேள்விக்குறி ஆக்குவது தான் என்றும் கூறப்படுகிறது.

- விடுதலை நாளேடு, 7.8. 19