புதன், 1 மே, 2019

ஜாதி மறுப்பு திருமணத்தில் பிறந்த குழந்தைக்கு தாயின் ஜாதியை பயன்படுத்தலாம் மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

மும்பை, ஏப்.23 ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதிக்கு பிறந்த குழந்தைக்கு, தாயாரின் ஜாதியை பயன்படுத்தலாம் என்ற பரபரப்பான தீர்ப்பை மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் பிரிவு வழங்கி இருக்கிறது.
மகாராட்டிராவை சேர்ந்த அஞ்சால் பட்வாய்க் (19) என்ற எம்பிபிஎஸ் மாணவி, தனது தந்தையின் ஜாதிக்கு பதிலாக தாயாரின் ஜாதி பெயரை பயன்படுத்த அனுமதிக் கோரி மாவட்ட ஜாதி சரிபார்ப்பு கமிட்டியிடம் விண்ணப்பித்து இருந் தார். ஆனால், தந்தையின் ஜாதியை வைத்தே மாணவியின் ஜாதியை முடிவு செய்ய முடியும் என்று கமிட்டி கூறியது. இதை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் அஞ்சால் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு நீதிபதிகள் சுனில் சுக்ரே, புஷ்பா கனேடிவாலா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதை விசா ரித்து நீதிபதிகள் நேற்றுமுன்தினம் அளித்த, வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பில், இந்தியாவில் ஆணாதிக்க சமுக அமைப்பு முறை உள்ளது. இப்போது நிலைமை மாறி வருகிறது. நமது அரசமைப்புச் சட்டம் கூட சமத்துவம், நீதி மற்றும் சகோதரத்துவம் அடிப்படையில்தான் உள்ளது. ஆண் மற்றும் பெண்ணை நாம் சமமாகவே பாவிக்கிறோம். எனவே, ஜாதி மறுப்பு திருமண தம்பதிக்கு பிறந்த குழந் தைகள், தனது தாயாரின் ஜாதியை பயன்படுத்தலாம் என்று தெரிவித்தனர்.
மாணவி அஞ்சாலும், அவருடைய தாயார் பாரதியும் நாக்பூரில் உள்ள காஞ்சிபேத் பகுதியில் வசித்து வரு கிறார்கள். பாரதி இதர பிற்படுத்தப் பட்டோர் பிரிவை சேர்ந்தவர். அவர் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஒரு வரை திருமணம் செய்தார். ஆனால், அஞ்சால் ஒரு வயது குழந்தையாக இருக்கும்போது தந்தை அந்த குடும் பத்தை அனாதையாக விட்டுச் சென் றார். இந்த நாள் வரையில் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. பாரதி பல்வேறு வேலைகளை செய்து கஷ் டப்பட்டு தனது மகளை வளர்த்து ஆளாக்கினார். அஞ்சாலுக்கு மெரிட் அடிப்படையில் எம்பிபிஎஸ் சீட் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 - விடுதலை நாளேடு, 23.4.19

செவ்வாய், 5 மார்ச், 2019

மனைவிக்கு சொத்து பரிசளித்தால் இனி முத்திரை கட்டணம் இல்லை

ஜெய்ப்பூர், மார்ச் 3 ராஜஸ்தான் மாநிலத்தில், 'கணவன், தன் மனைவிக்கு பரிசாக அளிக்கும், அசையா சொத்து மீதான பதிவுக்கு முத்திரை கட்டணம் வசூலிப்பதில்லை' என, அம் மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து ராஜஸ்தான் மாநில அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஒருவர் பெயரில் இருந்து, அவரது தந்தை, தாய், மகன், சகோதரி, மருமகள், பேரன் மற்றும் பேத்தி பெயருக்கு மாற்றப்படும் அசையா சொத்து பதிவுக்கு, 2.5 சதவீதம் முத்திரைக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

அதேபோல், மனைவி அல்லது மகளுக்கு, அசையா சொத்து களை பரிசாக வழங்கும்போது, அதன் பதிவுக்கு, சொத்தின் சந்தை மதிப்பில், ஒரு சதவீதம் அல்லது அதிகபட்சமாக, ஒரு லட்சம் ரூபாய்வரை, முத்திரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இந்நிலையில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், கணவன், தன் மனைவிக்கு பரிசாக அளிக்கும் அசையா சொத்தின் மீதான பதிவுக்கு, முத்திரைக் கட்டணம் வசூலிப்பதில்லை என, முடிவு எடுக்கப் பட்டுள்ளது. இவ்வாறு  அதில் கூறப்பட்டுள்ளது.

- விடுதலை நாளேடு, 3.3.19

திங்கள், 18 பிப்ரவரி, 2019

கணவன் - மனைவி பிரிய 6 மாதம் காத்திருக்க தேவையில்லை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

கணவன் - மனைவி இருவரும் நண்பர்களாக பிரிய 6 மாதங்கள் காத்திருக்க தேவையில்லை 'என்று உச்ச நீதிமன்றம் தீர்ப் பளித்துள்ளது. குஜராத் மாநிலம் ஆனந்த் என்ற பகுதியைச் சேர்ந்த ஆகாங்ஷா உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அவருக்கும் அவரது கணவர் அனுபம் மாத்தூருக்கும் இடையே விவாகரத்து வழக்கு ஆனந்த் தலைமை நீதித்துறை நடுவர் முன்பாக நிலுவையில் இருந்தது. இந்நிலையில், புதுடில்லி துவாரகா நீதிமன்றத்தில் தொடரப் பட்ட இன்னொரு மனுவை ஆனந்த் நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று ஆகாங்ஷா கூறியிருந்தார். இந்த மனுவின் ஒரு பகுதியாக தனக்கும் தன் கணவருக்கும் இடையே சுமுகமாக பிரிவது குறித்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

இதை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குரியன் ஜோசப், சஞ்சய் கிஷன் கவுல் அடங்கிய அமர்வு அளித்துள்ள தீர்ப்பில் கூறியிருப்பதாவது: இந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு நிலுவையில் உள்ளபோதே, கணவன் மனைவி இருவருக்கும் இடையே சுமூக பிரிவு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து இருவரும் இணைந்து மனு தாக்கல் செய்துள்ளனர். இருவரும் நன்கு படித்தவர்கள். இருவரிடமும் நாங்கள் விரிவான ஆலோசனை நடத்தினோம்.

அவர்கள் இருவரும் நண்பர்களாக பிரிவது என்று நல்ல சுயசிந்தனையுடன் முடிவு எடுத்துள்ளதை அறிகிறோம். இந்நிலையில், இந்து திருமணச் சட்டம், பிரிவு 13(பி)-யின் படி அவர்கள் விவாகரத்திற்காக 6 மாதங்கள் காத்திருப்பது தேவையற்றது. எனவே, இந்த காத்திருப்பு காலம் தள்ளுபடி செய்யப் படுகிறது. அவர்கள் திருமணம் ரத்து செய்யப்படுகிறது. இருவரும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், ரூ.12 லட்சத்து 50 ஆயிரத்தை ஆகாங்ஷா பெற்றுக் கொண்டார். இருவர் மீதும் உள்ள துவாரகா நீதிமன்ற வழக்கு மற்றும் ஆனந்த் நீதிமன்ற வழக்குகள் ரத்து செய்யப்படு கின்றன.

இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.கோயல், யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த ஆண்டு விவாகரத்து தொடர்பான ஒரு வழக்கில், 6 மாத காத்திருப்பு தேவையில்லை என்று நீதிமன்றம் கருதினால், அதிலிருந்து விலக்கு அளிக்கலாம் என்று உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவின் அடிப்படையில் தற்போது புதிய தீர்ப்பு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

- நன்றி: சட்டக்கதிர், ஜனவரி 2019
- விடுதலை ஞாயிறு மலர், 16.2.19

புதன், 6 பிப்ரவரி, 2019

சபாஷ் சரியான தீர்ப்பு: தேர்வுகளில் தவறான விடைகளுக்காக மதிப்பெண்களைக் குறைக்கக்கூடாது: நீதிபதி ஆர்.மகாதேவன் அதிரடி உத்தரவு கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி வாதிட்ட வழக்கில் வெற்றி

சென்னை, பிப்.4 கலக்கல் கிராமத்தைச் சேர்ந்த சிவலிங்கம் மகன் நெல்சன் பிரபாகரன் கடந்த 2013ஆம் ஆண்டில் பொறியியல் பட்டப் படிப்புக்காக அய்.அய்.டி.யில்  நடைபெற்ற நுழைவுத் தேர்வில் தேர்வெழுதினார். முதன்மைத் தேர்வில் 50 மதிப்பெண் கள் பெற்றால் தேர்ச்சி என்கிற நிலையில், மாணவன் நெல்சன் பிரபாகரன் 47 மட் டுமே பெற்றதாக குறிப்பிட்டு, முதன் மைத் தேர்வில் பங்குபெற்ற நிலையில், அட்வான்ஸ்டு தேர்வில் அவரைத் தேர்வு செய்யவில்லை. அவர் முதன்மைத் தேர்வில் எடுத்த மதிப்பெண்களே அதற்குக் காரணமாகக் கூறப்பட்டது.

அதுகுறித்து நெல்சன் பிரபாகரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவ்வழக்கில் தான் எழுதிய எழுத்துத் தேர்வின் விடைத்தாளை அளிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

நீதிபதிகே.கே.சசீதரன்30.5.2013 தேதியிட்ட உத்தரவில் தேர்வெழுதுவ தற்கு  மாணவன் நெல்சன் பிரபாகரனுக்கு  அனுமதி அளிக்கவில்லை.

2013ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கின் இறுதி விசாரணை 2018இல் நீதிமன்றத்தில்வந்தது.அப்போது,மாண வர்நெல்சன்பிரபாகரனின்விடைத் தாள்கள் நீதிமன்றத்தில் அளிக்கப்பட் டன. அதன்படி, அம்மாணவன் சரியான விடைகளை எழுதி பெற்ற மதிப்பெண்கள் 72 என்றும், தவறான பதில்களுக்காக நெகட்டிவ் மதிப்பெண்கள் என்று தவறாக அளிக்கப்பட்ட பதில்களுக்கு குறைக்கப்பட்ட மதிப்பெண்களின் எண் ணிக்கை  25 என்றும் தெரிவிக்கப்பட்டது.

வழக்கில் வாதிட்ட வழக்குரைஞர் அ.அருள்மொழி நெகட்டிவ்  மதிப் பெண்கள் முறை சட்டப்படி கிடையாது  என்றும், இங்கிலாந்து, ஜெர்மனி, கனடா, ஆஸ்திரேலியா, ரஷ்யா உள் ளிட்ட வளர்ந்த நாடுகளிலெல்லாம் இதுபோன்று நெகட்டிவ் மதிப்பெண் முறை பின்பற்றப்படுவதற்கான ஆதா ரங்கள் கிடையாது என்றும், இளம் மாணவர்களைஅடக்குமுறைக்குஉள் ளாக்கும்வகையில் இதுபோன்ற நெகட் டிவ்மதிப்பெண்முறை மிகவும்கொடுங் கோன்மையுடன் உள்ளது என்று குறிப் பிட்டார்.

சிபிஎஸ்இ தரப்பில் வழக்குரைஞர் ஜி.நாகராஜன் வழக்கில் நெகட்டிவ் மதிப் பெண் முறையை ஆதரித்து வாதிட்டார்.

நீதிபதி ஆர்.மகாதேவன் தீர்ப்பில் கூறுகையில், சிபிஎஸ்இ அல்லது தேர்வு நடத்துகின்ற எந்த அமைப்பாக இருந்தாலும் நெகட்டிவ் மதிப்பெண் முறையைப் பின்பற்றக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்தார்.

- விடுதலை நாளேடு, 4.2.19

செவ்வாய், 5 பிப்ரவரி, 2019

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பதில் அளிக்க தாமதித்தால் அபராதம் மாநில தகவல் ஆணையர்கள் தகவல்

வேலூர், பிப்.1  தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மனுதாரர் கோரும் கேள்விக்கு பதில் அளிக்க தாமதிக்கும்,  தவறான தகவல்கள் அளிக்கும் பொது தகவல் அலுவலர்களுக்கு அதிகபட்சம் நாளொன்றுக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்க சட்டத்தில் வழிவகை உள்ளதாக மாநில தகவல் ஆணையர்கள் ஆர்.பிரதாப் குமார், எஸ்.டி.தமிழ்குமார், எஸ்.முத்துராஜ் ஆகியோர் தெரிவித்தனர்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அனைத்து அரசுத் துறைகளிலும், சார்நிலை அலுவலகங்களிலும் தகவல்கள் அளிக்கும் பொது தகவல் அலுவலர்களுக்கு இந்த சட்டம் தொடர்பான விழிப்புணர்வுக் கூட்டம் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், மாநில தகவல் ஆணையர்கள் ஆர்.பிரதாப்குமார், எஸ்.டி.தமிழ்குமார், எஸ்.முத்துராஜ் ஆகியோர் தலைமை வகித்து பேசியது: இந்திய ஜனநாயக நாட்டில் அனைவரும் பல்வேறு அரசு துறைகளில் தேவைப்படும் பதில்களைப் பெற்று பிரச்சினைகளுக்கு தீர்வு காண தகவல் அறியும் உரிமை சட்டம் வழிவகை செய்கிறது. தகவல் அறியும் உரிமை சட் டத்தில் மனுதாரர் கோரும் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட அரசு பொது தகவல் அலு வலர்கள் காலம் தாழ்த்தாமலும், ஒளிவு மறைவின்றியும் பதில் வழங்க வேண்டும். மனுதாரருக்கு பதில்களை வழங்குவதில் அலைக்களிப்பு செய்யக் கூடாது.

மேலும், மனுதாரருக்கு பொது தகவல் அலுவலர்களின் பதில்கள் அதிக பக்கங்கள் கொண்டதாக இருந்தாலும், அத்தனை பக்கங்களையும் கட்டாயமாக வழங்க வேண்டும். பொது தகவல் அலுவலர்கள் தன்னிடம் தகவல் இல்லை என்றால் தகவல் இருக்கும் அதிகார அமைப்புக்கு மனு பெற்ற 5 நாள்களுக்குள்  அனுப்பி வைக்க வேண்டும்.

தகவல்களை தவறானதாகவும், காலம் தாழ்த்துவதும் இருக்கும்பட்சத்தில் பொது தகவல் அலுவலருக்கு அதிகபட்சம் நாளொன்றுக்கு ரூ. 25 ஆயிரம் வரை அபராதம் விதிக்க சட்டத்தில் விதி உள்ளது.  எனவே, பொது தகவல் அலுவ லர்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான நேரத்திலும், உண்மையான தகவல்களை யும் மனுதாரருக்கு வழங்க வேண்டும் என்றனர்.
-  விடுதலை நாளேடு, 1.2.19

வியாழன், 31 ஜனவரி, 2019

பெற்றோர் வசதியாக இருந்தாலும் கணவரிடம் ‘வாழ்வூதியம்’ பெற பெண்ணுக்கு உரிமை உண்டு

உயர்நீதிமன்றம் உத்தரவு


மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் தொழில் அதிபரான கணவரை பிரிந்து வாழ்கிறார். இந்த நிலையில், பிரிந்த கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் கேட்டு மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனு மீதான விசாரணையின் போது கணவரின் தரப்பில், பெண் பிரெஞ்சு ஆசிரியராக பணியாற்றி மாதம் ரூ.30 ஆயிரம் சம்பாதிப்பதாகவும், மேலும் பெண்ணின் பெற்றோர் பணக்காரர்கள். சொந்த வீடு உள்ளது. அதிகளவு நகைகள் உள்ளது. எனவே பெண்ணிற்கு ஜீவனாம்சம் வழங்க முடியாது என வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மகேஷ் சோனக், பெண்ணிற்கு மாதம் ரூ.75 ஆயிரம் ஜீவனாம்சமாக வழங்குமாறு அவரது பிரிந்த கணவருக்கு உத்தரவிட்டார். மேலும் இந்த உத்தரவு குறித்து நீதிபதி கூறியதாவது:- பெண்ணின் பெற்றோர் பணக்காரர்களாக உள்ளனர் என்பதற்காக கணவர் அவருக்கு ஜீவனாம்சம் கொடுக்க முடியாது என கூறமுடியாது. பெற்றோர் வசதியாக இருந்தாலும் பிரிந்து சென்ற கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் பெற பெண்ணுக்கு உரிமை உண்டு. இவ்வாறு அவர் கூறினார்.

- சட்டக்கதிர், ஜனவரி 2019

-  விடுதலை ஞாயிறு மலர், 26.1.19

தவறுகளை சுட்டிக்காட்டும் பத்திரிகை மீது காழ்ப்புணர்ச்சி கூடாது



உயர்நீதிமன்றம் ஆணை


பொது வாழ்க்கைக்கு வந்த பிறகு தவறுகளை சுட்டிக்காட்டும் பத்திரி கையின் மீது காழ்ப் புணர்ச்சி கொள் ளக் கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

தமிழக அமைச்சரவையில் இருந்து செங்கோட்டையன் கடந்த 2012ஆம் ஆண்டு நீக்கப்பட்டார்.

இதுகுறித்து இந்தியா டுடே பத்திரிகை 2012ஆம் ஆண்டு ஆகஸ்டு 8ஆம் தேதி செய்தி வெளியிட்டது. அதில், சசிகலாவின் தூண்டுதலின் பேரில் செங்கோட் டையனை அமைச்சர் பதவியில் இருந்து ஜெயலலிதா நீக்கியதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த செய்தியால் சமுதாயத்தில் உள்ள தன் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுவிட்டதாக கூறி அந்த பத்திரிகை ஆசிரியர் உள்ளிட்டோர் மீது ஜெயலலிதா அவதூறு வழக்கை சென்னை மாவட்ட முதன்மை கீழமை நீதிமன்றத்தில் தொடர்ந்தார். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அந்த பத்திரிகை சார்பில் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை நீதிபதி பி.என்.பிரகாஷ் விசாரித்தார். பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:- பத்திரிகையில் வெளியான செய்தியினால் தன்னுடைய நற்பெயருக்கு எந்த வகையில் களங்கம் ஏற்பட்டது என்பது தெளிவாக இல்லை. எனவே, பத்திரிகை மீது ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்கிறேன். இந்திய ஜனநாயகத்தின் 4 தூண்களில் ஒன்றான பத்திரிகையின் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால், நாட்டின் ஜனநாயகம் மோசமான நிலைக்கு தள்ளப்படும். பத்திரிகையின் குரல் நெரிக்கப்பட்டால், இந்தியா சர்வாதிகார நாடாக மாறிவிடும். நாட்டின் விடுதலைக்காக போராடியவர்கள், அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் ஆகியோரது உழைப்பு வீணாகிவிடும். சில நேரங்களில் பத்திரிகைகளில் தவறுகள் நேரலாம். அதேநேரம் ஜனநாயகத்தில் பத்திரிகையின் பங்கை மறுக்க முடியாது. ஒருவர் பொதுவாழ்க்கைக்கு வந்தபிறகு தவறுகளை பத்திரிகைகள் சுட்டிக்காட்டும்போது அதன் மீது காழ்ப்புணர்ச்சி கொள்ளக்கூடாது.  இது போன்ற கருத்துகளுக்காக அவதூறு வழக்குகள் தொடரப் படுவதை தடுக்காவிட்டால், இந்த நீதி மன்றம் அரசமைப்பின் நோக்கத்தை நிறைவேற்ற தவறிவிட்டதாகி விடும். பத்திரிகைகளுக்கு சமூகத்தில் நடைபெறும் அரசியல் நிகழ்வுகள், பொதுமக்களுக்கான பயன்பாடுகள் ஆகியவற்றை வெளிக்கொண்டு வரவேண்டிய கடமைகள் உள்ளது. இந்த மனு ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

தகவல்: ச.நல்லசிவன், திருநெல்வேலி

- ‘சட்டக்கதிர்’, ஜனவரி 2019
-  விடுதலை ஞாயிறு மலர், 26.1.19