வியாழன், 28 நவம்பர், 2024

திருமணம் ஆகாதவர்களும் இனி தத்தெடுக்கலாம் : ஒன்றிய அரசின் பெண்கள் நல மேம்பாட்டு அமைச்சகத்தின் புதிய வழிகாட்டுதல்!

விடுதலை நாளேடு

 திருமணம் ஆகாதோர், இணையரை இழந்தவர், விவாகரத்து செய்தவர், சட்டப்படி பிரிந்து வாழ்பவர் உள்ளிட்டோரும் இனி குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கலாம் என்று ஒன்றிய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகம் புதிய வழிகாட்டுதல் வெளியிட்டுள்ளது.

முன்னதாக ‘2016 மாதிரி குழந்தை வளர்ப்பு’ வழிகாட்டுதலின்படி திருமணம் முடித்த குழந்தையில்லா இணையர்கள் மட்டுமே தத்தெடுக்க முடியும். இந்த விதிகளை திருத்தி திருமணம் ஆகாத தனிநபர்களும் தத்தெடுக்க புதிய வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி 35 வயதிலிருந்து 60 வயதுக்கு இடைப்பட்டவர்கள் ஆதரவற்ற இல்லங்களில் வளர்ந்து வரும் 6 வயது நிரம்பிய குழந்தை களை தத்தெடுக்கலாம். முதல் 2 ஆண்டுகள் குழந்தை பராமரிப்புக்கு பிறகு தத்தெடுத்து வளர்க்க அனுமதி அளிக்கப்படும்.

அதேநேரம் ஆண், பெண் என இரு பாலர் குழந்தைகளையும் தத்தெடுத்து வளர்க்கும் உரிமை திருமணம் ஆகாத பெண்களுக்கு மட்டுமே அளிக்கப்படுகிறது. ஆணாக இருக்கும்பட்சத்தில் ஆண் குழந்தையை மட்டுமே தத்தெடுக்க அனுமதிக்கப்படுவர். மேலும் பெற்ற குழந்தைகள் இருப்பினும் இணையர் தத்தெடுக்க புதிய சட்டத்தில் இடம் உள்ளது. அதேநேரத்தில் குறைந்த பட்சம் இரண்டாண்டுகள் சுமுக இல்லற வாழ்க்கையை சம்பந்தப்பட்ட இணையர் வாழ்ந்து வருவதற்கான சாட்சி கட்டாய மாக்கப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகம் கொண்டுவந்திருக்கும் இந்த திருத்தப்பட்ட 2024 மாதிரி குழந்தை வளர்ப்பு வழிகாட்டுதல் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.
இந்த தளத்தில் குழந்தைகளை தத்தெடுக்க விரும்பும் பெற்றோர் மற்றும் தனிநபர்கள் தங்களது ஆவணங்களை பதிவேற்றலாம். அவற்றை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பார்வையிடுவர்.
தத்தெடுப்பு விதிகள் தற்போது தளர்த்தப்பட்டிருப்பதால் கூடுதல் எண்ணிக் கையிலான ஆதரவற்ற குழந்தைகளுக்கு அன்பும் அரவணைப்பும் கொண்ட பெற்றோர் கிடைக்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

நன்றி: சட்டக் கதிர், செப்டம்பர் 2024

நாடாளுமன்றம் செய்த சட்டத்திருத்தத்தை செல்லாது என கூற முடியாது மதச்சார்பின்மை – சோசலிசம் அரசமைப்புச் சட்டத்தின் அங்கமே!

 


விடுதலை நாளேடு
இந்தியா

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கருத்து

புதுடில்லி, நவ. 23 – “இந்தியாவில் ‘சோசலிசம்’ என்ற கருத்து அனை வருக்கும் சமமான வாய்ப்பை வழங்கும் ஒரு பொதுநல அரசைக் குறிக்கிறது, குடிமக்கள் மீதான சர்வாதிகாரக் கோட்பாடு அல்ல!” என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அமர்வு கூறியுள்ளது.
“நாடாளுமன்ற சட்டத்திருத்தம் மூலமே அரசமைப்புச் சட்ட முகப்புரையில் மதச்சார்பின்மை, சோசலிசம் ஆகிய வார்த்தைகள் இணைக்கப்பட்டுள்ள நிலையில், அதனைச் செல்லாது என கூற முடியாது.
மேலும், அரசமைப்புச் சட்டத்தைத் திருத்துவதற் கான அதிகாரம் பிரிவு 368 மூலம் முகப்புரைக்கும் நீட்டிக் கப்பட்டுள்ளது. முகப்புரையும் அரசமைப்புச் சட்டத்தின் ஒரு பகுதியே!” எனவும் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தெரி வித்துள்ளார்.

ஆர்.எஸ்.எஸ். பேர்வழிகள் வழக்கு
“இந்தியாவின் அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது அதில், இந்தியா ஒரு சோசலிச மற்றும் மதச்சார்பற்ற நாடு என்கிற வார்த்தைகள் இடம் பெற்றிருக்கவில்லை. ஆனால், இடையில் 42 ஆவது திருத்தத்தின் மூலம் இரண்டு வார்த்தை களும் 1976 ஆம் ஆண்டு சேர்க்கப்பட்டி ருக்கின்றன. எனவே, இவற்றை நீக்க வேண்டும்” என்று ஆர்எஸ்எஸ் சங்-பரிவாரப் பேர்வழிகளான சுப்பிரமணியசாமி, பல்ராம் சிங், வழக்குரைஞர் அஸ்வினி குமார் உபாத்யாய ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு நேற்று (22.11.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசமைப்புச் சட்டத்தின் 42 ஆவது திருத்த மானது, நெருக்கடி கால கட்டத்தின்போது மேற்கொள்ளப்பட்டது என்ப துடன், மதச்சார்பின்மை, சோச லிசம் ஆகிய வார்த்தைகளைச் சேர்த்தது மக்களை சில சித்தாந்தங்களைப் பின்பற்றும்படி கட்டாயப்படுத்துவதாக உள்ளது என்று வாதங்கள் வைக்கப்பட்டன.

ஒரு பொதுநல அரசு மற்றும் மக்களின் நலனுக்காக
நிற்க வேண்டும்
அதற்கு “இந்தியாவில் சோச லிசத்தை நாம் புரிந்து கொள்ளும் விதம், மற்ற நாடுகளிலிருந்து மிகவும் வித்தியாசமானது. நமது சூழலில் சோசலிசம் என்பது பொதுநல அரசு என்று பொருள்படும். அவ்வளவுதான். நன்றாகச் செழித்து வரும் தனியார் துறையை அது ஒருபோதும் தடுக்கவில்லை. சோசலிசம் என்ற சொல் வேறுபட்ட சூழலில் பயன்படுத்தப் படுகிறது, அதாவது அரசு ஒரு பொதுநல அரசு மற்றும் மக்களின் நலனுக்காக நிற்க வேண்டும் மற்றும் சமமான வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்பதையே குறிக்கிறது” என்று தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தெரிவித்தார்.

“மதச்சார்பின்மையைப் பொறுத்தவரையும் கூட, எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் ‘மதச்சார்பின்மை’ என்பது அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பின் ஒரு பகுதியாகவே இருக்கிறது” என்றும் சுட்டிக்காட்டினார். சட்டத்திருத்தம் செல்லாது என கூற முடியாது அத்து டன், “சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது நெருக்கடி நிலைக்காலத்திலா, என்றெல்லாம் பார்க்க முடி யாது. நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை யுடன் சட்டத்திருத்தம் நிறை வேற்றப்பட்டுள்ளது.
எனவே, நாடாளுமன்றம் நிறை வேற்றிய சட்டத்தை செல்லாது என்று கூற முடியாது” என்றும் தலைமை நீதிபதி குறிப்பிட்டார்.
இந்த வழக்கை, விரிவடைந்த அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை யையும் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா திட்டவட்டமாக மறுத்து விட்டார். மேலும் இந்த வழக்கில் நவம்பர் 25 அன்று தீர்ப்பு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

ஞாயிறு, 10 நவம்பர், 2024

சென்னையில் வீடுகளுக்கு முன் ‘நோ பார்க்கிங்’ போர்டு வைத்தால் நடவடிக்கை: போலீஸ் எச்சரிக்கை

  இ.ராமகிருஷ்ணன்

Last Updated : 24 Sep, 2024 04:38 PM, இந்து தமிழ் திசை

சென்னையில் வீடுகளுக்கு முன் ‘நோ பார்க்கிங்’ போர்டு வைத்தால் நடவடிக்கை: போலீஸ் எச்சரிக்கை

கோப்புப்படம்

சென்னை: வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படும் என்பதால், வீடுகளுக்கு முன் ‘நோ பார்க்கிங்’ போர்டு வைக்கக் கூடாது. அதை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை போக்குவரத்து போலீஸார் எச்சரித்துள்ளனர்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் அண்மையில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், “சென்னையின் பல்வேறு முக்கிய பகுதிகளில் வசிக்கும் குடியிருப்புவாசிகள் தங்களின் வீடுகள் முன்பாக எந்தவொரு அனுமதியும் பெறாமல் ‘நோ பார்க்கிங்’ போர்டுகளை வைத்துள்ளனர். இதன்மூலம் தங்களது வீடுகளின் முன்பாக உள்ள பொது சாலைகளில் வாகனங்களை நிறுத்தக்கூடாது என தடுத்து அவ்வப்போது தகராறு செய்கின்றனர்.சில இடங்களில் வீடுகளின் முன்பாக ‘நோ பார்க்கிங்’ அறிவிப்பு பலகையுடன் பூந்தொட்டிகளை வைத்தும், மண் பைகளை வைத்தும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு செய்கின்றனர். சென்னையில் வாகனங்களை நிறுத்த முறையான வாகன நிறுத்துமிடங்கள் இல்லாததால், வாகன ஓட்டிகள் வேறு வழியின்றி தங்களது வாகனங்களை நெரிசல் மிகுந்த பகுதிகளில் நிறுத்திச் செல்ல நேரிடுகிறது.

எனவே, வீடுகளின் முன்பாக அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள ‘நோ பார்க்கிங்’ என்ற அறிவிப்பு பலகைகளையும், பூந்தொட்டிகளையும் அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்,” என கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சென்னையில் ‘நோ பார்க்கிங்’ போர்டுகளை அகற்ற என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என போக்குவரத்து காவல்துறை மற்றும் மாநகராட்சியிடம் கேள்வி எழுப்பியது.

இந்நிலையில், சென்னை போக்குவரத்து போலீஸார் இன்று உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளனர். அதில், “முன் அனுமதியின்றி, ‘நோ பார்க்கிங்’ பலகைகள், தடுப்புகள் அல்லது இதுபோன்ற தடைகளை பொதுச் சாலைகளில் வைக்க எந்தவொரு தனிநபருக்கோ, குடியிருப்பு சங்கங்களுக்கோ அல்லது வணிக நிறுவனங்களுக்கோ அனுமதி இல்லை. சாலையோரம் மற்றும் பொது இடங்களில் தனியார் வாகன நிறுத்தம் அல்லது பிற நோக்கங்களுக்காக அனுமதியின்றி ஆக்கிரமிப்பது சட்டவிரோதமானது.

எனவே, அனுமதியின்றி பலகைகள் அல்லது பொருட்களை வைத்து, பொதுச் சாலைகளுக்கு இடையூறாக செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, அங்கீகரிக்கப்படாத இடங்களில் ‘நோ பார்க்கிங்’ பலகைகள், தடுப்புகள் மற்றும் பிற இடையூறுகளை வைத்த தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும். வாகன நிறுத்தம் தொடர்பான பலகைகளை வைப்பதற்கு முன், சம்பந்தப்பட்ட போக்குவரத்து அதிகாரிகளிடம் இருந்து உரிய அனுமதிகளைப் பெற வேண்டும்,” என குறிப்பிட்டுள்ளனர்.