வியாழன், 28 நவம்பர், 2024

 

நாடாளுமன்றம் செய்த சட்டத்திருத்தத்தை செல்லாது என கூற முடியாது மதச்சார்பின்மை – சோசலிசம் அரசமைப்புச் சட்டத்தின் அங்கமே!

விடுதலை நாளேடு
இந்தியா

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கருத்து

புதுடில்லி, நவ. 23 – “இந்தியாவில் ‘சோசலிசம்’ என்ற கருத்து அனை வருக்கும் சமமான வாய்ப்பை வழங்கும் ஒரு பொதுநல அரசைக் குறிக்கிறது, குடிமக்கள் மீதான சர்வாதிகாரக் கோட்பாடு அல்ல!” என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அமர்வு கூறியுள்ளது.
“நாடாளுமன்ற சட்டத்திருத்தம் மூலமே அரசமைப்புச் சட்ட முகப்புரையில் மதச்சார்பின்மை, சோசலிசம் ஆகிய வார்த்தைகள் இணைக்கப்பட்டுள்ள நிலையில், அதனைச் செல்லாது என கூற முடியாது.
மேலும், அரசமைப்புச் சட்டத்தைத் திருத்துவதற் கான அதிகாரம் பிரிவு 368 மூலம் முகப்புரைக்கும் நீட்டிக் கப்பட்டுள்ளது. முகப்புரையும் அரசமைப்புச் சட்டத்தின் ஒரு பகுதியே!” எனவும் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தெரி வித்துள்ளார்.

ஆர்.எஸ்.எஸ். பேர்வழிகள் வழக்கு
“இந்தியாவின் அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது அதில், இந்தியா ஒரு சோசலிச மற்றும் மதச்சார்பற்ற நாடு என்கிற வார்த்தைகள் இடம் பெற்றிருக்கவில்லை. ஆனால், இடையில் 42 ஆவது திருத்தத்தின் மூலம் இரண்டு வார்த்தை களும் 1976 ஆம் ஆண்டு சேர்க்கப்பட்டி ருக்கின்றன. எனவே, இவற்றை நீக்க வேண்டும்” என்று ஆர்எஸ்எஸ் சங்-பரிவாரப் பேர்வழிகளான சுப்பிரமணியசாமி, பல்ராம் சிங், வழக்குரைஞர் அஸ்வினி குமார் உபாத்யாய ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு நேற்று (22.11.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசமைப்புச் சட்டத்தின் 42 ஆவது திருத்த மானது, நெருக்கடி கால கட்டத்தின்போது மேற்கொள்ளப்பட்டது என்ப துடன், மதச்சார்பின்மை, சோச லிசம் ஆகிய வார்த்தைகளைச் சேர்த்தது மக்களை சில சித்தாந்தங்களைப் பின்பற்றும்படி கட்டாயப்படுத்துவதாக உள்ளது என்று வாதங்கள் வைக்கப்பட்டன.

ஒரு பொதுநல அரசு மற்றும் மக்களின் நலனுக்காக
நிற்க வேண்டும்
அதற்கு “இந்தியாவில் சோச லிசத்தை நாம் புரிந்து கொள்ளும் விதம், மற்ற நாடுகளிலிருந்து மிகவும் வித்தியாசமானது. நமது சூழலில் சோசலிசம் என்பது பொதுநல அரசு என்று பொருள்படும். அவ்வளவுதான். நன்றாகச் செழித்து வரும் தனியார் துறையை அது ஒருபோதும் தடுக்கவில்லை. சோசலிசம் என்ற சொல் வேறுபட்ட சூழலில் பயன்படுத்தப் படுகிறது, அதாவது அரசு ஒரு பொதுநல அரசு மற்றும் மக்களின் நலனுக்காக நிற்க வேண்டும் மற்றும் சமமான வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்பதையே குறிக்கிறது” என்று தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தெரிவித்தார்.

“மதச்சார்பின்மையைப் பொறுத்தவரையும் கூட, எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் ‘மதச்சார்பின்மை’ என்பது அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பின் ஒரு பகுதியாகவே இருக்கிறது” என்றும் சுட்டிக்காட்டினார். சட்டத்திருத்தம் செல்லாது என கூற முடியாது அத்து டன், “சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது நெருக்கடி நிலைக்காலத்திலா, என்றெல்லாம் பார்க்க முடி யாது. நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை யுடன் சட்டத்திருத்தம் நிறை வேற்றப்பட்டுள்ளது.
எனவே, நாடாளுமன்றம் நிறை வேற்றிய சட்டத்தை செல்லாது என்று கூற முடியாது” என்றும் தலைமை நீதிபதி குறிப்பிட்டார்.
இந்த வழக்கை, விரிவடைந்த அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை யையும் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா திட்டவட்டமாக மறுத்து விட்டார். மேலும் இந்த வழக்கில் நவம்பர் 25 அன்று தீர்ப்பு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக